29.3.08

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி III

தனது கட்டுரையில் வெங்கட் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மொழிகளில் கிடைக்கிறதா? என்று ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

பல சட்டங்களின் தமிழ் வடிவம் கிடைக்கும் என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழலாம். உதாரணமாக சட்ட பிரிவுகளில் காணப்படும் 'shall', 'may', 'as' போன்ற வார்த்தைகளின் நுணுக்கமான அர்த்தம் பற்றிக் கூட பல சமயங்களில் விவாதம் நடைபெறுவதுண்டு. மொழி பெயர்ப்புக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் இவ்வாறு
நுணுக்கமாக ஆராய்கையில் குழப்பத்தை விளைவிக்கும். எனவே தமிழ் மொழிபெயர்ப்பு வெறுமே படிப்பு உபயோகத்திற்கே பயன்படும். ஆங்கில வடிவம் மட்டுமே செயல் வடிவம் பெறும். தமிழிலேயே சட்டமியற்றப்பட்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, சட்ட வரைவுக்குழு டாக்டர்.ராஜேந்திர பிரசாதை அதனை ஹிந்தி மொழியாக்கம் செய்து வெளியிட அனுமதியளித்தது.

அதன்படி ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள் 1950ம் வருடம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியாக்கம் இரண்டிலும் கையெழுத்திட்டனர். மொழியாக்கத்தைப் படித்த நேரு, 'தான் அதில் ஒரு வார்த்தையை கூட புரிந்து கொள்ள முடியவில்லை' என்று கடிதம் எழுதினார்.

பின்னர் ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையில்....ஹிந்தி வடிவம் இறுதியாக 1988ம் வருடம் முழுமை பெற்று அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்திய பிரிவு ஆர்டிகிள் 394Aன் படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஹிந்தி தவிர்த்த மற்ற மொழிகளுக்கு இந்த உரிமையில்லை.

பொதுவாக சட்டங்கள், நீதிமன்ற முறைகள் தமிழிலோ அல்லது ஹிந்தியிலோ ஏற்படுத்தப்படுவதோ கடினமான காரியம். ஆனால் இயலாத காரியமல்ல. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும், முன்னேற்றமும் தேவை.

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் லத்தீனே படித்தவர்களின் மொழியாக இருந்து பின்னர் ப்ரெஞ்சு அந்த இடத்துக்கு வந்தது. மெல்ல மெல்ல பின்னர் ஜெர்மன், ரஷிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க பல வருடங்கள் பிடித்தது.

-oOo-

இறுதியாக, நீதிமன்றங்கள் எவ்வாறு இந்த மொழிப் பிரச்னையில் வேறுபட்ட நிலையினை எடுத்து நீதிபதிகளும் ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்று உணர வைக்கிறது என்பதற்கு உதாரணமான வழக்குகள் இரண்டினைப் பார்க்கலாம்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற ‘தியாகி’களுக்கான ஓய்வூதிய (pension) திட்டம் ஒன்றினை அறிவித்தது.
உடனடியாக சுதந்திரப் போராட்ட ‘தியாகி’யான திரு.தளவாய் அவர்கள் இந்த ஓய்வூதிய திட்டம் 'ஹிந்தியை மேம்படுத்தி பரப்புமாறு மைய அரசினை வேண்டும்' அரசியலமைப்புச் சட்டத்தின் 351ம் பிரிவை பாதிக்கிறது என்ற வாதத்துடன் ஒரு நீதிப்பேராண்மை மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை நீதிமன்ற நீதிபதிகள், 'நிதிப் பகிர்வு சட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு இவ்விதமான திட்டத்திற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இருக்கிறது' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தளவாய் உச்ச நீதிமன்றம் சென்றார்.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, 'இவ்விதமான ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி தமிழக அரசின் திட்டத்தினை செல்லாது என அறிவித்தனர்.

நீதிபதிகள் முக்கியமாக தீர்ப்பில் கூறிய வாசகங்கள் கவனிக்கத்தக்கது. 'தமிழக அரசின் இந்த திட்டம் பிளவுபடுத்தும் பிரிவினைவாத சக்தியினை உள்ளடக்கியது. ஏதாவது மாநிலம் ஹிந்திக்கு அல்லது வேறு மொழிக்கு எதிரான உணர்வுகளை தூண்டி விட முயன்றால் அத்தகைய முயற்சியானது மக்கள் விரோத, தேச விரோத செயல்கள். அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்' (AIR 1976 SC 1559)

எனவே தமிழக அரசின் திட்டம் செல்லாக் காசாகியது!


-oOo-

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தில்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் வேறுபட்ட கோணங்களில் மொழிப் பிரச்னையை அணுகியது மற்றொரு வழக்கிலும் நேர்ந்தது.

1960ம் ஆண்டு கையெழுத்தான குடியரசுத் தலைவரின் உத்தரவினைத் தொடர்ந்து பல மைய அரசுத் துறைகள் தமது பணியாளர்களுக்கு கட்டாய ஹிந்தி பயிற்சி அளிக்கும் அறிவிப்பினை வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றை எதிர்த்து அப்போது நாடாளுமன்றத் தலைவராக இருந்த முரசொலி மாறனும் தபால் துறையில் வேலை பார்த்த ஒரு உதவி மேலாளரும் தனித் தனியே ரிட் மனுக்களை தொடர்ந்தார்கள். முரசொலி மாறனின் ரிட் மனு அவர் அந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுபவர் அல்ல என்ற காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் தபால் துறை உதவி மேலாளரின் ரிட் மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவுகள் அரசு மொழிகள் சட்டத்தின் பிரிவுக்கு மாறாக இருப்பதாக கூறி அவற்றை செல்லாது என அறிவித்தது. பிரச்னை உச்ச நீதிமன்றம் சென்றது.

தளவாய் வழக்கினை விசாரித்த அதே நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சு, குடியரசுத் தலைவரின் உத்தரவும், அரசுத் துறை நிறுவனங்களின் அறிவிப்புகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணமாகவே உள்ளன. அவை அரசு மொழிகள் சட்டத்தின் பிரிவுகளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக அவற்றிற்கு இசைந்தே உள்ளது' என்று கூறினர்.

மேலும், 'கட்டாய பயிற்சியானது வேலை நேரத்தின் பகுதியாகவே வழங்கப்படுகிறது. எனவே கட்டாயமாக அதில் கலந்து கொள்வது அவர்களது கடமை. இவற்றில் தேற வேண்டிய அவசியமில்லை. தேறாதலால் ஏதும் பாதிப்பில்லை. தேறிய்வர்களூக்கு ஊக்கத் தொகை (incentive like prizes and increase in pay) வழங்கப்படுவதால் மட்டுமே சமநிலை பாதிக்கப்படுகிறது என்பதல்ல' என்று கூறி மைய அரசு அலுவலக பணியாளர்களுக்கான கட்டாய ஹிந்தி பயிற்சியும் அதில் தேறுவதால் கிடைக்கும் ஊக்கத் தொகைகளும் சட்டத்திற்கு உட்பட்டதே என்று தீர்ப்பளித்தனர். (AIR 1977 SC 231)

இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி மட்டுமே.... ஆட்சி மொழி மட்டுமல்ல. அரசுப் பணிக்கான மொழியாகவும் அதனை முழுவதும் மாற்றும் வண்ணம் இந்திய மக்களாகிய நாம் செயல்பட நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் இந்தியர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துகிறது.

இனி உங்களது கருத்துகளை எதிர்நோக்கி...

மும்பை
26.12.03




OLD LIGHT HOUSE, RABBIT ISLAND, THOOTHUKUDI

4 comments:

PRABHU RAJADURAI said...

'சட்டங்கள் தாய்மொழியிலேயே இருப்பது சிறந்ததா? அவ்விதமான முயற்சி வெற்றி பெறக்கூடியதா? ஒரே வழக்கில் பல சட்டங்களை பற்றி ஆராய வேண்டியிருப்பதால் சில சட்டங்களை மட்டும் தமிழில் இயற்றி மற்றவற்றை ஆங்கிலத்திலேயே இயற்றுவது சாத்தியமா?'
http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post.html

Unknown said...

பிரபு,

//ஏதாவது மாநிலம் ஹிந்திக்கு அல்லது வேறு மொழிக்கு எதிரான உணர்வுகளை தூண்டி விட முயன்றால் அத்தகைய முயற்சியானது மக்கள் விரோத, தேச விரோத செயல்கள். அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்'//

இது மாநிலங்கள் மட்டும் செய்தால் குற்றம். மத்திய அரசு செய்தால் குற்றமில்லையா? முரணாக இல்லை?

Om said...

hindhi ethirpu patri:
http://vetri-vel.blogspot.com/

UN, hindhi ethirthu oru petition:
http://www.petitiononline.com/19652007/petition.html

Anonymous said...

"நம்ம மொழியவே.. ஆமாண்டா உங்க மொழி செம்மொழி தான்னு.. மொழி தெரியாத யார் யாரோ அறிவிக்க வேண்டிய வெக்கக்கேட்டில இருக்கறோம்... இன்னும் சட்டமெல்லாம் தமிழ்-லயே இயற்றணும்னு எப்படி ஆசைப்படுறது.. ஒரு வேள அடுத்த தேர்தல ஒட்டி எதாவது அறிவிப்பு வரும்.. பாக்கலாம்.." btw.. அது rabbit island இல்லீங்க.. அது.. Hare Island..