30.6.09

வாமனன்...


இன்று காலை தினகரன் நாளிதழில் கண்ட விளம்பரம்....
நான் மேலே ஒரு வரி எழுதினால், பதிவர் சுரேஷ் கண்ணன் திரைப்பட விளம்பரத்தை எப்படி ரசிக்க வேண்டுமென்று ஒரு பக்கத்திற்கு வகுப்பெடுப்பார்.... :-)

18.6.09

‘ஈழ’த்தமிழர்களுக்கு உண்டு, இந்தியாவில் உயர்கல்வி!

இலங்கையிலிருந்து சுமதி இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பொழுது, அவளது வயது எட்டு. இலங்கையில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு பயந்து, அவளது பாட்டிதான் முதலில் ‘வாழ்ந்தது போதும்’ என்று சுமதியை அழைத்து கொண்டு அவளது பூர்வீக ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார்.

பின்னர் சுமதியின் தாயும், தந்தையும் இலங்கையின் ஞாபகங்களை மட்டுமே சுமந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து விட்டனர்.

வரும் பொழுது அவர்கள் அனைவரும் இலங்கை குடிமக்கள் (citizens). அவர்களிடம் இருந்த கடவுச் சீட்டினை (Passport) வைத்து அப்படித்தான் முடிவு செய்ய வேண்டியிருந்தது.

1920ம் ஆண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து, இலங்கைக்குச் சென்று குடியேறிய சுமதியின் தாத்தா, இலங்கை சுதந்திரம் பெற்றதும் அதன் குடியுரிமையைப் பெற்றார். சுமதியின் பெற்றோர்கள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்.

-oOo-

இந்திய குடிமக்கள் இல்லை எனினும், சுமதியின் பெற்றோர்களுக்கு இங்கு குடியேறவோ, தங்களுக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டவோ, முக்கியமாக சுமதிக்கு நல்லதொரு பள்ளியில் தனது கல்வியை தொடரவோ ஏதும் பிரச்னை இல்லை.

பொறியியற் கல்லூரியில் சேரும் பொழுது தேவைப்பட்ட பிறப்பிட சான்றிதழ் (Nativity Certificate) கூட சுமதி புதுக்கோட்டையில் சுமார் 12 ஆண்டுகளாக வசித்து வந்த சூழலில் தாசில்தார் வழங்கியிருந்தார்.

-oOo-

பொறியியற் கல்லூரியில், முதல் செமஸ்டர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுதுதான் சுமதி மேலும் தனது கல்வியை தொடர முடியாது என்ற செய்தி வந்தது. சுமதியின் பள்ளி ஆவணங்களில் அவளது மதமாக ‘சிறீலங்கன் கிறிஸ்டியன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காரணமாக வைத்து தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை (Department of Technical Education) சுமதி வெளிநாட்டினைச் சேர்ந்தவர் (Foreign National) என்பதால் அவர் பொறியியற் கல்லூரியில் சேர தகுதியில்லாதவர் (ineligible) என்று கூறி அவரது சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

கல்வியை தொடர அனுமதி வேண்டி, சுமதி நீதிமன்றங்களின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறார்.

தொழில்நுட்ப கல்வித் துறையோ, ‘மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பிலேயே ‘Foreign National’ஆக இருப்பவர்கள் சேரத்தகுதியில்லாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே’ என்று கூறுகிறது.

சுமதிக்கு இந்தியாவில் உயர்கல்வி மறுக்கப்படுவது சரிதானா? என்ற எனது சிறிய ஆய்வில் கிடைத்த பதில் ‘அவ்வளவு தூரம் இந்திய சட்டங்கள் இரக்கமற்றுப் போகவில்லை’ என்பதுதான்.

சுமதியைப் போன்று மேலும் பலர், அச்சத்தில் இருக்கலாம் என்பதால், சுமதியின் வழக்கு நிலுவையில் உள்ள பொழுதே இதனை இங்கு பதிந்து வைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

-oOo-

1950ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் பண்பட்ட தன்மையில், உலகின் எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்திற்கும் குறைந்தல்ல என்பதற்கு சாட்சியாக அதன் பிரிவு 14 மற்றும் 21ஐ குறிப்பிடலாம்.

பிரிவு 14 அரசு இந்திய எல்லைக்குள் அனைவரையும் சட்டத்தின் முன் சமமாக நடத்த வேண்டும் என்றும், சட்டம் அளிக்கும் பாதுகாப்பினை அனைவருக்கும் சமமாக அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

பிரிவு 21 எந்த ஒரு மனிதனுடைய உயிரும், தனிப்பட்ட சுதந்திரமும் சட்டம் ஏற்ப்படுத்தியுள்ள நடைமுறையை கைக் கொள்ளாமல் பறிக்கப்பட முடியாது என்று கூறுகிறது.

இவை இரண்டும் அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் பல்வேறு அடிப்படை உரிமைகளில் முக்கியமானவை. இந்த உரிமைகளில் அடங்கியுள்ள உயரிய கோட்பாடுகளால் மட்டும் இந்த முக்கியத்துவம் ஏற்ப்படவில்லை.

மாறாக, சில அடிப்படை உரிமைகள் இந்த குடிமகன்களுக்கு மட்டுமே உரியதாகும். இந்த இரு உரிமைகள் மற்றும் பிரிவு 20, 22ல் கூறப்பட்ட உரிமைகள் மட்டும் ‘அனைவருக்கும்’ உரியதாகும். அதாவது, இந்திய குடிமகனாக இல்லாத (non-citizen) இல்லாத ஒருவருக்கும் இந்த உரிமைகளை மறுக்க முடியாது.

குடியுரிமை பெற்றிருந்தாலும், சிலருக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிபராகும் தகுதி கிடையாது. பாக்கிஸ்தானில் முஸ்லீம் அல்லாத ஒருவர் அதிபராக முடியாது. 1962 வரை சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடையாது. சமீபகாலம் வரை தென்னாப்ரிகாவின் பூர்வ குடிகளுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடையாது. இந்த நிலையில் நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் மேற்கண்ட உரிமைகள், நாம் பெருமை கொள்ளத்தக்கவை!

எனவே சுமதி வெளிநாட்டினர் என்பதால், தனக்கு கல்வி மறுக்கப்படுவது, அரசியலமைப்புச் சட்டம் தனக்கு உறுதிப்படுத்தும் சம உரிமையை பாதிப்பதாகும் என்று இந்திய குடிமகளாக இல்லையெனினும், நமது நீதிமன்றங்கள அணுக முடியும்.

ஆனால், சம உரிமையினை பாதிக்கும் வண்ணம் அரசு சட்டமியற்ற இயலும். அவ்வகையான பாகுபாடு ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருப்பின் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும். உதாரணமாக, மருந்து தயாரிப்பதற்கு வரி (excise tax) கிடையாது. ஆனால் சிகரெட்டிற்கு உண்டு என்றால் அதை ஏற்றுக் கொள்ளத்தக்க பாகுபாடு (reasonable classification) என்று நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும்.

எனவே, இந்திய குடிமகன் அல்லாதவர் இந்தியாவில் கல்வி பயில இயலாது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதனை இந்தவிதமான அடிப்படையில் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும். ஏனெனில் தகுதியுள்ள இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் உயர்கல்வியளிக்க நமது பொருளாதாரம் இடம் கொடுக்காத சூழ்நிலையில் இந்திய குடிமகன் அல்லாதவருக்கு பாகுபாடு காட்டும் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவினை பாதிக்காது என்றே நீதிமன்றங்கள் கருதும்.

எனவே இந்திய குடிமகன் அல்லாதவருக்கு உயர்கல்வியினை மறுக்கும் ஏதாவது சட்டம் உள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது.

-oOo-

வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act’1946) என்ற சட்டத்தின் பிரிவு 2(a) ‘வெளிநாட்டினர் என்பது இந்திய குடிமகன் அல்லாதவரை குறிக்கும்’ என்று விளக்கமளிப்பதை வைத்து இந்திய குடிமகன்கள் அல்லாதவரின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி இயற்றப்பட்டுள்ள ஒரு சட்டம் என்பதை அறியலாம்.

இதன் பிரிவு 3(2)(e)(vii) குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவதை தடைசெய்து மத்திய அரசானது உத்தரவு பிறப்பிக்கலாம் என்று அனுமதியளிக்கிறது.

ஆனால் மத்திய அரசு இதுவரை ‘வெளிநாட்டினருக்கு இங்கு பொறியியல் கல்வி பயில தடை’ என்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவில்லை.

இந்தியா முழுவது பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அமைப்பான ‘தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கழக’மும் (AICTE) அவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக தெரியவில்லை.

மாறாக தொழில்நுட்ப கல்விக் கழகம் 21.01.04 அன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் நடைமுறைப்படுத்திய விதிமுறைகளின்படி (Regulations) வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign Nationals), இந்திய வம்சாவழியினர் (Person of Indian Origin) மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு தொழிநுட்ப கல்லூரிகளில் தனியே இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது.

கவனிக்கவும். இந்த விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படுவது இட ஒதுக்கீடு. எனவே பொது ஒதுக்கீட்டில் வெளிநாட்டினர் இடம் பெறுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனவே இந்திய குடிமகன்களாக இல்லாதிருப்பவர்கள் தகுதியிருப்பின் மற்ற இந்திய குடிமகன்களோடு இந்தியாவில் உயர்கல்வி பெற தடை ஏதும் மத்திய அரசோ அல்லது அதன் அமைப்பான தொழில்நுட்ப கல்விக்கழகமோ விதிக்காத வகையில், சுமதி இங்குள்ள பொறியியற் கல்லூரிகளில் இடம் பெற உரிமை உண்டு.

இந்திய அரசு 1983ம் ஆண்டு, சுகாதார அமைச்சம் அனுமதியளித்தால் (clearance) மட்டுமே மருத்துவ கல்லூரிய்களில் வெளிநாட்டினரை சேர்க்க முடியும் என்று உத்தரவிட்டது. கீர்த்தி தேசுமனாகர் எதிர் யூனியன் ஆப் இந்தியா ((1991) 1 SCC 104) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கல்லூரியில் சேருவதற்கு முன்பு அவ்விதமான தடையின்மைச் சான்றிதழை சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பெற்றுக் கொடுத்து, தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ள வெளிநாட்டினர் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

சுமதியின் வழக்கிலோ, தமிழக தொழிநுட்பக் கல்வித் துறை (DTE) தனது அறிவிப்பில் (Prospectus) வெளிநாட்டினைச் சேர்ந்தவருக்கு (Foreign national) பொறியியற் கல்லூரில் இடம் வேண்ட தகுதியில்லை என்று கூறியுள்ளது. அது ஏற்றுக் கொள்ளத்தக்கதான வாதமா என்பதையும் அடுத்து ஆராய வேண்டியுள்ளது.

-oOo-

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் (Seventh Schedule) மூன்று முக்கியமான பட்டியல்கள் (Lists) உண்டு. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 246ன் படி முதலாவது பட்டியலில் (Union List) குறிப்பிடப்படும் விடயங்களைப் பற்றி மத்திய அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். உதாரணமாக வருமான வரி. இரண்டாவது பட்டியலில் (State List) கூறப்படும் விடயங்களில் மாநில அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். உதாரணமாக விற்பனை வரி. மூன்றாவது பட்டியலில் (Concurrent List) கூறப்படும் விடயங்களைக் குறித்து இரு அரசுகளும் சட்டம் இயற்ற முடியும். உதாரணமாக கல்வி.

வெளிநாட்டினர் பற்றிய சட்டமியற்றும் அதிகாரம் முதலாவது பட்டியலில் 17வது இலக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளதால், வெளிநாட்டினரை பாதிக்கும் சட்டம் எதுவும் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

மாநில அரசுக்கு சட்டமியற்றும் அதிகாரமே இல்லை என்ற பொழுதில், மாநில அரசின் அங்கமான தொழிற்நுட்ப கல்வித் துறைக்கு (DTE) வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign National) தமிழக தொழிற்நுட்பக் கல்லூரிகளில் இடம் கோர தகுதியற்றவர்கள் என்று கூறும் அதிகாரம் கிடையாது.

எனவே, பொறியியற் கல்லூரி சேர்க்கை கையேட்டில் (Prospectus) கூறப்பட்டுள்ள நிபந்தனை செல்லுபடியாகாது. அந்த நிபந்தனையை காட்டி சுமதிக்கு இடம் மறுக்க முடியாது.

இந்த கருத்திற்கு ஆதரவாக நமது உயர்நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளை சுட்டிக் காட்ட முடியும். முதலாவது செவந்திநாத பண்டாரசன்னதி எதிர் தமிழ்நாடு அரசு ((2006) 1 MLJ 134) என்ற வழக்கில் தமிழக அரசு, இந்து சமய அறநிலைய சட்டத்தில் (Hindu Religious and Charitable Endowment Act) “இந்து சமய நிறுவனங்களில் இந்திய குடிமகன் அல்லாதவர் அறங்காவலராக (Trustee) இருக்க முடியாது” என்று ஏற்ப்படுத்திய சட்டத்திருத்தம் செல்லுமா என்று ஆராயப்பட்டது. நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் கூறப்பட்டிருப்பதால், சமய நிறுவனங்களை பாதிக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கும் இருந்தாலும், மேற்கண்ட சட்ட திருத்தமானது அடிப்படையில் வெளிநாட்டினரின் உரிமை சம்பந்தப்பட்டதாக இருப்பதால், மாநில அரசுக்கு இவ்விதமான சட்ட திருத்தம் கொண்டு வர அதிகாரம் இல்லை’ என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பின் 16 பத்தியில் நீதிபதி கூறும் ஒரு கருத்து கவனிக்கத்தகுந்தது. “This can be elucidated further by posing a question as to whether a State can bar the admission of a foreigner into an educational institution or a professional institution, in view of the fact that education falls under Entries 25 and 26 of the Concurrent List”

அடுத்த தீர்ப்பு நீதிபதி கற்பகவிநாயகம் ரவிக்குமார் எதிர் சுரேஷ் குமார் (2002 (3) CTC 616) என்ற வழக்கில் கூறியது. போதிய பணமின்றி காசோலை கொடுத்த குற்றத்திற்காக காசோலைகள் குறித்தான சட்டத்தின் (Negotiable Instruments Act) கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபர், தமிழக அரசு அளித்த தண்டனை தள்ளுபடியினால் (remission) விடுதலை செய்யப்பட்டார். அது முறையானதா என்று விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் தண்டனை தள்ளுபடி அளிக்க அதிகாரம் இருந்தாலும், குற்றவாளிக்கு தண்டனையானது காசோலைகள் குறித்தான சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. காசோலைகள் குறித்தான சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளபடியால், மாநில அரசு அந்தச் சட்டத்தின் கீழ் அளித்த தண்டனையில் தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேற்கண்ட இரு தீர்ப்புகளிலிருந்து, வெளிநாட்டினருக்கு இங்கு கல்வி பயில தடை என்று சட்டமியற்ற/ உத்தரவிட தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகும். எனவே தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை, மத்திய அரசோ அல்லது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமோ ஏதும் கூறாத நிலையில், தன்னிச்சையாக இவ்வாறு ஒரு தடையை விதிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் இல்லை.

இந்தக் கருத்தினை ஒட்டியே சனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த ஒரு வழக்கிலும், சென்னை உயர்நீதிமன்றம் 21.11.03 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது. அந்த வழக்கில் (WP No.26463 / 2003) இலங்கையிலிருந்து இங்கு குடிபெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளித்து இடம் கொடுக்க உத்தரவிட வேண்டுமென்று கோரப்பட்டது. அகதிகளைப் பொறுத்து அவ்வாறு உத்தரவிட மத்திய அரசிற்குதான் அதிகாரம் உண்டு என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது.

-oOo-

அடுத்து வெளிநாட்டினருக்கு இங்கு உயர்கல்வியினை மறுக்க, மத்திய அரசிற்கு அதிகாரம் இருப்பினும், அவ்வாறான ஒரு தடையினை உருவாக்குவது தார்மீக ரீதியில் முறையான ஒரு செயலாக இருக்காது. ஏனெனில் ‘கல்வியில் பாகுபாட்டிற்கு எதிரான அறிக்கை’ (Convention against Discrimination in Education) என்று பாரீசுவில் 14.02.60 அன்று நடைபெற்ற யுனெஸ்கோ (UNESCO) கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அந்த அறிக்கையின் Article 3(e) கூறுவதாவது:
“In order to eliminate and prevent discrimination within the meaning of this Convention, the states Parties thereto undertake:

(e) To give foreign nationals resident within their territory the same access to education as that given to their own nationals”


வெளிநாட்டினருக்கும், இந்தியருக்கு இணையாக கல்வியில் வாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கும் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்ட இந்தியா எவ்வாறு வெளிநாட்டினருக்கு உயர்கல்வியில் தடை விதிக்க முடியும்?

-oOo-

அடுத்தது, தமிழக தொழிற்நுட்ப கல்வித்துறை வெளிநாட்டினருக்கு (Foreign Nationals) இங்கு கல்வி பயில தடை என்று கூறியுள்ளது முறையானது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், சுமதியை அந்தத் தடை பாதிக்குமா என்று ஆராய்ந்தால், பாதிக்காது என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

முதலில் சுமதியை வெளிநாட்டினர் என்பதற்கு ஆதாரமாக அவளது பள்ளி ஏடுகளில் அவள் ஒரு ‘சிறீலங்கன் கிறிஸ்டியன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆதாரமாக கூறப்படுகிறது. ஒருவர் தன்னை சிறீலங்கன் கிறிஸ்டியன் என்று கூறிக்கொள்வதால் அவரை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. இந்தியாவில் சிரியன் கிறிஸ்டியன் என்பவர்கள் இருக்கின்றனர். அதற்காக கள் சிரியா நாட்டினை சேர்ந்தவர்கள் இல்லை. கத்தோலிக்கர்கள் தங்களை ரோமன் கத்தோலிக்கர் என்றுதான் அழைத்துக் கொள்கின்றனர்.

இலங்கை கடவுச்சீட்டுடன் இந்தியாவிற்கு வந்த சுமதி இலங்கை குடிமகள்தானே? அவ்வாறு என்றால் அவர் வெளிநாட்டினர்தானே? என்ற கேள்வி எழலாம்.

கடவுச்சீட்டு என்பது ஒருவரின் குடியுரிமையை யூகிக்கும் ஒரு ஆவணமே தவிர அதை வைத்து மட்டுமே அவரது குடியுரிமையை முற்றாக தீர்மானிக்க முடியாது என்றாலும், நமது வாதத்திற்காக சுமதி இந்திய குடிமகள் இல்லை என்று வைத்துக் கொள்ளலாம்.

குடியுரிமையை வைத்து மட்டுமே ஒருவரின் தேசியத்தை தீர்மானிக்க முடியாது என்பதுதான் இதற்கு பதிலாக இருக்க முடியும். ஏனெனில் பலர் நினைப்பது போல, பலமுறை சட்டம் இயற்றுபவர்களாலும், ஏன் நீதிமன்றங்களாலும் ஒன்றுக்கொன்று இணையாக பயன்படுத்தப்பட்டாலும் Citizenship மற்றும் Nationality என்ற பதங்கள் வெவ்வேறானவை.

இந்த இரு பதத்திற்கும் உள்ள வேற்றுமையை உணராமல், சுமதியின் வழக்கில் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் எழுப்பப்படும் கேள்வி, சுமதி இலங்கை குடிமகளாக இருக்கும் பட்சத்தில் அவள் வெளிநாட்டினர்தானே என்பதுதான்.

அதற்கு பதில் தொழிற்நுட்ப கல்வித்துறை உயர்கல்வியை தடுத்தது Foreign Citizensக்கு அல்ல மாறாக Foreign Nationalsக்கு. எனவே குடியுரிமை என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல!


இதற்கு ஆதாரமாக நமது உச்ச நீதிமன்றம் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிட் எதிர் வர்த்தக வரி அலுவலர் (AIR 1963 SC 1811) என்ற வழக்கில் கூறியுள்ள தீர்ப்பில் கூறப்படும் சில கருத்துரைகளை (observations) எடுத்துக் கூறலாம். ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் தீர்மானிக்கப்பட்ட இந்த வழக்கில், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் பிளவுபட்டாலும் (divided) இந்த கருத்தினைப் பற்றி ஏதும் வேற்றுமை இல்லை. இந்த தீர்ப்பின் பல்வேறு இடங்களில் citizenship என்பதும் nationality என்பதும் வேறு வேறு என்று எடுத்துக் கூறும் நீதிபதிகள் அதன் 18வது பத்தியில்,

‘Hence all citizens are nationals of a particular state but all nationals may not be citizens of the State. In other words citizens are those persons who have full political rights as distinguished from nationals who may not enjoy full political rights and are still domiciled in that country’
என்று கூறுவதை வைத்து சுமதியின் வழக்கில் சுமதி இந்திய குடிமகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை மட்டும் வைத்து அவள் இந்திய தேசிய இனத்தை சேர்ந்தவர் இல்லை என்று கூற முடியாது என்று வாதிட வழி இருக்கிறது.

எது எவ்வாறாக இருப்பினும், வெளிநாட்டு தேசிய இனத்தை (Foreign National) சேர்ந்தவரா? இல்லையா? என்பது, பொருண்மை சார்ந்த ஒரு கேள்வி (Question of fact). அதனை சுமதியின் கடவுச்சீட்டினை மட்டுமே வைத்து கணிக்க இயலாது என்பதையும் பார்த்தோம். எனவே, அவ்வாறான நிலையில் முதலில் சுமதி, தான் இந்திய தேசிய இனத்தை சேர்ந்தவர் என்று நிரூபிக்கும் வண்ணம் அவளுக்கு தகுந்த வாய்ப்பளித்து, அதற்குப் பின்னரே அரசு, சுமதி இங்கு உயர்கல்வி பெற தகுதி உள்ளவரா? இல்லையா? என்று தீர்மானிக்க இயலும்.

மாறாக, எவ்வித அறிவிப்பும் இன்றி, எவ்விதமான விசாரணையும் நடத்தப்படாமல், திடுமென ஒரு நாள், ‘உனக்கு தொழிற்கல்வி பயில தகுதியில்லை’ என்று கூறுவது சட்டத்திற்க் புறம்பானதாகும்.

-oOo-

தேசிய இனம் என்பது வேறு, குடியுரிமை என்பது வேறு என்பதற்கு பல்வேறு அரசியல் விஞ்ஞான (Political Science) விளக்கங்கள் இருப்பினும், மேலே கூறியபடி ஒரு விசாரணையானது நடத்தப்பட்டால், சுமதியால் தான் ‘foreign national’ இல்லை என்று நிரூபிக்க முடியுமா என்றால், அரசியல் விஞ்ஞானப்படி எப்படியோ ஆனால், தமிழக தொழிற்கல்வித் துறையினை கட்டுப்படுத்தும் வண்ணம் சுமதியால் எளிதாக நிரூபிக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நாம் மேலே பார்த்தபடி, தொழிற்கல்வியினை முழுவதுமாக கட்டுப்படுத்துவது தொழிற்கல்விக்கான அகில இந்திய குழுமம் (AICTE) என்ற அமைப்பு.

அதன் ‘The All India Council for Technical Education (for Admission under Foreign Nationals/ Persons of Indian Origin category/ quota in AICTE approved institutions) Regulations 2000 என்ற விதிமுறைகளில் Foreign National என்பதற்கான விளக்கம் இவ்வாறு கூறுகிறது
“3.12 Foreign National in this context means an individual having citizenship of a foreign country (citizens of all countries other than India) and not having the status of NRI and/or Persons of Indian Origin (PIO)”

இந்த விளக்கத்தின் மூலம் ஒருவர் வெளிநாட்டு குடிமகனாக இருப்பினும், இந்திய வம்சாவழியினராயிருப்பின் foreign citizen என்று கருதப்படமாட்டார் என்று அறியலாம்.

அதே விதிமுறைகளில் இந்திய வம்சாவழியினர் (PIO) என்பதற்கான விளக்கமாவது:
“3.11 Persons of Indian Origin in this context means a person having foreign citizenship without NRI status, but who holds a Foreign Passport at the time of sending application, consideration for admission and during the period of study and he or anyone of his parents or anyone his grandparents is (or was) citizen of India.

சுமதியின் தாத்தா/ பாட்டி முன்னொரு காலத்தில் இந்திய குடிமகனாக இருந்திருக்கும் பட்சத்தில் சுமதி இந்திய வம்சாவழி என்று கோர முடியும்.

ஏஐடிசியின் விதிமுறைகள் தமிழக தொழிற்கல்வித்துறையினை கட்டுப்படுத்தும்.

ஆக, சுமதி எல்லாவகையிலும் தனது வழக்கில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது.

-oOo-

தமிழக அரசின் தொழிற்கல்வித்துறை சுமதியின் துர்பாக்கியமான நிலையை கருதியாவது, இப்படிப்பட்ட ஒரு உத்தரவினை பிறப்பிக்காமல் இருந்திருக்கலாம்.

சற்றும் சிந்திக்காமலும், எவ்வித விளக்கத்தினை பெறாமலும் கூறப்பட்ட ஒரு உத்தரவின் மூலம், இன்று ஒரு அப்பாவிச் சிறுமியின் எதிர்காலமே கேள்விக்குறியாக நிற்கிறது!

மதுரை
17.06.09

3.5.09

சு.சுவாமியின் வெற்றி!

ஸ்ரீதரன் : இதுவரை உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீங்கள் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்துள்ளீர்கள்?

சுசுவாமி : எண்ணிலடங்காதது (I have lost count). ஆனால் அவையனைத்திலும் நான் வென்று விட்டேன். அவையனைத்தும் பொதுநல வழக்குகள்
. சுப்பிரமணியன் சுவாமி, சிபி (sify) இணையதள அரட்டையில்...

-oOo-

ஆமாம் வென்றுதான் விட்டார்...

22/12/03 தேதியிட்ட ஏசியன் டிரிபியூன் (Asian Tribune) இதழில் வெளிவந்த ‘சுவாமி, சிறீலங்கா தமிழ் அகதிகளுக்காக மற்றொரு வழக்கினை வென்றெடுத்துள்ளார் (Swamy wins another legal battle for Sri Lankan Tamil Refugees)’ என்ற தலைப்புச் செய்தியின்படி, வென்றுதான் விட்டார்.

அட! இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக அப்படியென்ன சட்ட சிக்கலை தீர்த்து விட்டார் என்ற ஆர்வம் ஏற்படாமல், வெறுமே செய்தியை மட்டும் படித்தால் சுவாமி தனது எண்ணிலடங்கா பொதுநல வழக்கு வெற்றிகளில், இந்த ‘வெற்றி’யையும் சேர்த்துக் கொள்வது நியாயமாகத்தான் இருக்கும்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பது, அதே செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் தீர்ப்பினையும் படித்தால்தான் புரியும்.

வழக்கம் போலவே இந்த முறையும் சுவாமி தன்னை ஒரு ‘நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாகவும், ராஜதந்திரியாகவும் (statesman)’ மதராசு நீதிமன்றம் முன்பு அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘2003-04ம் ஆண்டிலும் அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் (கல்லூரிகள்) தமிழகத்திலுள்ள சிறீலங்கா தமிழ் அகதி மாணவர்களுக்காக தனியே இடங்களை உருவாக்கி, அவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்’ என்ற பரிகாரம் வேண்டி, பேராணை மனு எண் 26463/03 என்ற வழக்கினை தாக்கல் செய்கிறார்.

அதாவது தமிழக அரசு தானாகவே 1996ம் ஆண்டு முதல் கல்லூரிகளில், அவைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாக இடங்களை உருவாக்கி அவற்றை சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கி வந்ததாகவும், 2003ம் ஆண்டிலிருந்து அந்த ஒதுக்கீடு (reservation) நிறுத்தப்பட்டதால் அதனை தொடர வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வழக்கு.

எந்த ஒரு சட்டரீதியிலான அல்லது நிர்வாக ரீதியிலான ஆய்வினையும் மேற்கொள்ளாமல், வெறுமே இந்துவிற்கு எழுதும் ஆசிரியருக்கான கடிதம் பாணியில் அமைந்த சுவாமியின் மற்றொரு பேராணை மனு!

முக்கியமாக, அரசியலமைப்புச் சட்டப்படி இம்மாதிரியான விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்ற சிறிய கவனம் கூட இன்றி, மாநில அரசு மீது வழக்கினை தாக்கல் செய்த அலட்சியம் குறிப்பிடத்தக்கது. பின்னர், நிதிமன்றம் இந்த தவறினை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தனியே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசாங்கம் பேராணை மனுவில் எட்டாவது எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

சரி, மத்திய அரசினை எதிர்மனுதாரராக சேர்த்த பின்னர் என்ன நடந்தது?

பெரிய வாதப் பிரதிவாதம் எல்லாம் இல்லை. ‘இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஏற்கனவே கூறியபடி மத்திய அரசிடம் உள்ளது. மாநில அரசு விரும்பினால், கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசினை வேண்டிக் கொள்ளலாம்’ என்பதுதான் உத்தரவு.

பல சமயங்களில், வழக்கு தள்ளுபடி என்று கூறினால் வழக்காடிகள் வருத்தப்படுவார்களே என்பதால், அவர்கள் மீது மனமிரங்கும் நீதிமன்றம் தள்ளுபடி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், இவ்வாறு சட்டப்புத்தங்களில் ஏற்கனவே உள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கினை முடித்து வைக்கும்.

ஆனால் தற்பொழுது இந்த வகையான உத்தரவுகளை ‘வெற்றி’ என்று வழக்குரைஞர்களை அணுகும் படிக்காத பாமரர்களே ஏற்றுக் கொள்வதில்லை. ஏசியன் டிரிபியூன் தனது வாசகர்களின் தரம் பற்றி கொண்டிருக்கும் மதிப்பீடு வியப்பளிக்கிறது!

-oOo-

சரி, தீர்ப்புக்கு பின்னர் என்னதான் நடந்தது. ஒன்றும் நடக்கவில்லை.

சுவாமிக்கு இந்த விடயத்தில் உண்மையான ஆர்வம் இருந்திருந்தால், மத்திய மாநில அதிகார மையங்களில் தனக்குள்ள வலிமையை (influence) பயன்படுத்தி, அது கூட வேண்டாம் தமிழக முதல்வரை பொதுவில் வேண்டுவதன் மூலம் எளிதில் இதனை முடித்திருக்கலாம்.

அரசின் கொள்கை முடிவுகளில், நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை என்றாலும் கூட அவருக்கு வேண்டியது, நீதிமன்றம் என்ற பொது மேடை, அதைப் பயன்படுத்த ஒரு வழக்கு, ஒன்றுக்கும் உதவாத தீர்ப்பு என்றாலும் ‘சுவாமிக்கு வெற்றி’ என்ற பத்திரிக்கைச் செய்தி...

செய்தி உண்மைதான்....சுவாமிக்கு வெற்றிதானே!

மதுரை
03.05.09

6.4.09

கேவலமான நடத்தையுள்ள ஒரு பெண்!




சரசுவதி பாய், கணவனால் கைவிடப்பட்ட பின்னர் அமோல் சிங் என்பவருடன் மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். ஆனாலும் அமோல் சிங்கின் எதிரியான ராஜு சேத் என்பவரிடம் கூட்டுக் குத்தகைக்கு நிலம் விவசாயம் செய்து வந்ததால், அமோல் சிங் அவரிடம் சண்டையிட்டு வந்தார்.

சம்பவம் நடந்த 17.03.92 அன்று இரவு 8.00 மணிக்கு சரசுவதியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசித்தவர்கள் பலர் அவரது வீட்டை நோக்கி ஓடினர். அவர்களில் சிலர், சரசுவதியின் வீட்டிலிருந்து கோபால் ஓடி வருவதைப் பார்த்தனர்.

வீட்டினுள் சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி!

அங்கு சரசுவதிபாய், தீக்காயங்களோடு விழுந்து கிடந்தார். ‘கோபாலும், அமோல் சிங்கும் தன் மீது கெரோசின் ஊற்றி தீ வைத்ததாக’ விசாரித்தவர்களிடம் சரசுவதி கூறினார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த உதவி ஆய்வாளர், சரசுவதியின் மரண வாக்குமூலத்தை மற்ற சாட்சிகளின் முன்னிலையில் பதிவு செய்தார். நிலம் விவசாயத்துக்கு எடுத்த பிரச்னையில் அமோல்சிங்கும், கோபாலும் தன் மீது தீ வைத்து கொளுத்தியதாக சரசுவதி கூறினார்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரசுவதியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்த, மருத்துவர் சரசுவதியின் மரண வாக்குமூலத்தை (Dying Declaration) பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவலருக்கு கூறவே, தாசில்தார் (Executive Magistrate) அதிகாலை 4.30 மணிக்கு பதிவு செய்தார். பின்னர் காலை 9.10 மணிக்கு சரசுவதி இறந்து போக, வழக்கு கொலை வழக்காக மாறியது.

இறக்கும் பொழுது சரசுவதி மூன்று மாத கர்ப்பிணி!


-oOo-


எதிரிகள் (Accuseds) இருவரும் கைது செய்யப்பட்டனர். அமோல் சிங்கின் உடலில் தீக்காயங்கள், மருத்துவரால் கண்டறியப்பட்டது. அமர்வு நீதிமன்றம் (Sessions Court) அனைத்து சாட்சிகளையும் விசாரித்த பின்னர் எதிரிகள் குற்றம் புரிந்ததாக கூறி தண்டனையளித்தது. உயர்நீதிமன்றமும் (High Court) அந்த தீர்ப்பினை உறுதி செய்தது.

வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.

உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட வாதம், ‘சரசுவதி அளித்த இரு மரண வாக்குமூலங்களும் முரண்படுகின்றன’ என்பதுதான். ஏற்கனவே இந்த வாதம் உயர்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டு இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடுகள் பெரிய அளவிலில்லை (insignificant) என்பதால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறில்லை என்று கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் ‘இரு மரண வாக்குமூலங்கள் வேறுபட்டால், வழக்கின் மற்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவற்றை நீதிமன்றம் ஆராய வேண்டும்’ என்ற சட்ட கருத்தினை வலியுறுத்தி சரசுவதியின் வழக்கில் இரு மரண வாக்குமூலங்களிலும் கொலைக்கான காரணங்கள் மாறுபடுவதாகவும், எவ்வாறு சரசுவதியின் மீது கெரோசின் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்ட முறையிலும், வித்தியாசங்கள் இருப்பதாகவும் அவ்வகையான வித்தியாசங்கள், சரசுவதியின் வழக்கில் முக்கிய காரணிகள் என்று கூறி எதிரிகளை விடுதலை செய்துள்ளது.

பிற சந்தர்ப்ப சாட்சிகளைப் (circumstantial evidence) பற்றி அதிகம் ஆராயாமல், இந்த ஒரே காரணத்திற்காக இரு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த முறையில் சில விமர்சனங்கள் இருப்பினும், முழுமையான வழக்கின் விபரங்கள் இல்லாத நிலையில் அவ்வாறான விமர்சனம் பொறுப்பான ஒன்றாக இருக்காது.


-oOo-

ஆனால் பிரச்னை என்னவென்றால், தீர்ப்பின் முதலாவது பத்தியை படித்ததுமே, முடிவு எப்படியிருக்கும் என்று என்னையறியாமலேயே யூகிக்க முடிந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் மற்றொரு வலைத்தளத்தில், நீதிபதிகள் தங்களது தீர்ப்பினை ஆரம்பிப்பதை வைத்தே, எவ்வாறு அதன் போக்கை கணிக்க முடிகிறது என்பதைப் பற்றி அலசியிருந்தனர்.

தீர்ப்பை நீதிபதி பசாயத் இவ்வாறு ஆரம்பிக்கிறார், ‘நீதி விசாரணையில் விவரிக்கப்பட்ட அரசுத் தரப்பு வழக்கானது : இறந்து போன சரசுவதி பாய் தகாத நடத்தையுள்ள ஒரு பெண். தனது கணவனால் கைவிடப்பட்ட பின்னர், அமோல் சிங் என்பவருடன் தகாத உறவு கொண்டு, அவருக்கு ஆசை நாயகியானார்’ (Prosecution version as unfolded during trial is as follows: Saraswati Bai-deceased was a woman of questionable character)


-oOo-


எனக்குப் புரியாதது, ‘இறந்தவர் அரசின் பார்வையில் நடத்தை கெட்டவராகவே இருக்கட்டும், வழக்கின் சாரத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்’ என்பதுதான். குற்றம் நடைபெற்றது, சுயமாக ஒரு பெண்மணி விவசாயம் செய்ய விழைந்ததின் காரணமாகவே தவிர, அவரது நடத்தை கெட்டுப் போனதால் அல்ல.

அரசுத் தரப்பும் அதை வலியுறுத்தியிருக்க வேண்டாம். நீதிபதியும் அதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டாம். துரதிஷ்டம் பிடித்த சரசுவதிக்கு செய்யப்பட்ட ‘இறுதி’ மரியாதையாகவாவது அது இருந்திருக்கும்.


-oOo-


சரி, வருண்காந்தி வழக்கு ஒருவேளை உச்ச நீதிமன்றம் சென்றால், தீர்ப்பு எப்படி ஆரம்பிக்கும். ‘The detenue is the great grand son of a man of questionable character’ என்றா?


மதுரை
060309

20.3.09

அமெரிக்காவைப் பார்...

நடந்து முடிந்த வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி 19/03/09 தேதியிட்ட ‘இந்து’வில் அதன் அமெரிக்க வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அதாவது அமெரிக்காவில், ஒரு வழக்காடி தன்னுடைய வழக்கினை தானே நடத்தக்கூடிய உரிமை உள்ளதாம். வழக்குரைஞர் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாட்டிலும் வழக்காடிகள் தங்களுடைய வழக்கினை தாங்களே நடத்தும் உரிமையினைப் பெற்றுள்ளார்களாம்.

இந்த கடிதத்தை பிரசுரித்ததன் மூலம், ‘இந்து’ பத்திரிக்கை ஒரு இந்திய வழக்காடிக்கு தனது வழக்கினை தானே வாதிடும் உரிமை இல்லை என்பது போன்ற தோற்றத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது. வாசகரும் சரி, இந்துவும் சரி அறியாத ஒரு விடயம் நமது நாட்டில் நிலவும் சட்டங்கள் நாகரீகத்திலும் மனித உரிமையைப் பேணுவதிலும், அமெரிக்க நாட்டிலுள்ள எந்த ஒரு சட்டத்திற்கு குறைவான ஒன்றல்ல. இங்கும் ஒரு வழக்காடிதான், தன்னுடைய வழக்கினை நடத்தும் முதல் உரிமை உள்ளவர். வேண்டுமானால் அவர் ஒரு வழக்குரை நியமித்துக் கொள்ளலாம். எனவே இந்த ஒரு சாதாராண உரிமைக்கு கூட அமெரிக்காவை தேடி ஓட வேண்டியதில்லை...

பல சமயங்களில், இங்கும் வழக்காடிகள் தங்களுடைய வழக்குகளை தாங்களே நடத்துவதுண்டு. ஒரு வழக்குரைஞருக்கு கிடைக்கும் உரிமையை விட சற்று மேலான உரிமை, ‘Party in Person’ என்று அழைக்கப்படும் அவர்களுக்கு உண்டு. வழக்கினை வாதிடுகையில், தனது வழக்கின் சாரத்தை விட்டு வெளியே சஞ்சரிக்கும் வழக்குரைஞர், நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்படுவார். ஆனால், வழக்காடி வாதிடுகையில், அவ்வித கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட முடியாது. எவ்வளவு தர்மசங்கடம் என்றாலும், நீதிபதி அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். இல்லை, கதவுக்கு வெளியே சென்று ‘எனக்கு இங்கே நீதியில்லை. எனது வழக்கினை பேச எனக்கு உரிமை இல்லையா?’ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள்.

அது மட்டுமில்லாமல், சட்ட ரீதியிலும் சில உரிமைகள் உண்டு. உரிமையியல் வழக்கில், கூறப்படும் தீர்ப்பில் அந்த தீர்ப்பினை எதிர்த்து எங்கு எவ்வளவு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று கூற வேண்டியதில்லை. நாமே, சட்டப்புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், வழக்காடி தானே வழக்கினை நடத்துகையில் தீர்ப்பில் அவற்றை குறிப்பிட்டாக வேண்டும். (Order 20 Rule 5A CPC)

சட்டமும், குடிமகன்கள் அனைவரும் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறது. சட்டம் இவ்வாறு கூறுகிறது என்பது எனக்குத் தெரியாது என்று வாதிட்டு யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.

சுப்பிரமணிய சுவாமி, கே.எம்.விசயன் ஆகியோர் தங்களது வழக்குகளை தாங்களே நடத்திய சில முக்கியமானவர்கள்.

ஆனால், எதற்கு பேராணை மனு (Writ), எதற்கு உரிமையியல் வழக்கு (Civil Suit), எதற்கு மனு (Original Petition), எதற்கு நுகர்வோர் மனு (Consumer Complaint) என்ற விடயங்களை மெத்தப் படித்தவர்களே அறிந்து கொள்ள நேரம் செலவழிக்க விரும்பாத நமது நாட்டில், சாதாரண பொது மக்கள் தங்களது வழக்கினை தாங்களே நடத்தினார்கள் என்ற பத்திரிக்கைச் செய்திகளில், விக்கிரமாதித்யன் கதைகளை விட சற்று அதிக அளவில் உண்மையிருக்கலாம், அவ்வளவுதான்.

-oOo-

சட்ட சம்பந்தமான விடயங்களில் தாங்கள் ஆர்வமுடையவராக இருப்பின் கீழ்கண்ட சரியா, தவறா என்பதை யூகிக்கவும். பின்னர் ஒரு வழக்குரைஞரை தொடர்பு கொண்டு தங்களது சட்ட அறிவினை சரி பார்த்துக் கொள்ளலாம். எனது மற்ற பதிவுகளிலும், பதில்கள் இருக்கலாம்.

(எச்சரிக்கை: advocacy is an art of impossibility என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான். எனவே சரியா, தவறா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை)

(1) உங்களது வீட்டினை 3 வருடங்கள் கழித்து கண்டிப்பாக காலி செய்து தர வேண்டுமென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வாடகைக்கு விடுகிறீர்கள். 3 வருடம் கழித்து வாடகைதாரர் ஒப்பந்தப்படி காலி செய்தாக வேண்டும்.

(2) உங்களது வங்கிக் கணக்கில் (Bank Deposit) தங்களது மனைவி பெயரை மட்டும் நாமினி (nominee) என காட்டியுள்ளீர்கள். உங்களது மரணத்துக்குப் பின்னர் உங்களது மகனுக்கும் உங்களது மனைவியோடு இந்து மத சட்டப்படி வாரிசுதாரர் என்ற வகையில் டிபாசிட் பணத்தில் உரிமை உண்டு.

(3) அதுவே காப்பீட்டு தொகைக்காக கொடுக்கப்படும் நாமினியாக இருந்தாலும் அதே உரிமை உண்டு

(4) உங்களது நிறுவனம், 3 வருடங்களுக்குள் வேலையை விட்டு செல்வதாயிருந்தால், 1 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்ற உறுதியினை பெற்று உங்களை வேலைக்கு அமர்த்துகிறது. அதற்கு ஆதரவாக (security) உங்களது சான்றிதழ்களை நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளீர்கள். ஒரு வருட காலத்தில் வேலையை ராசினாமா செய்து சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் 1லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ்கள் கிடைக்கும்.

(5) உயில் பத்திரத்தில் முத்திரைக் கட்டணம் (stamp duty) செலுத்த தேவையில்லை.

(6) உங்கள் நண்பருக்கு கடன் உறுதிச் சீட்டு (promissory note) மூலம் கடன் கொடுத்துள்ளீர்கள். மூன்று வருடம் காலம் முடியும் முன், கடனை திருப்பிச் செலுத்த மேலும் ஒரு வருட காலம் அவகாசம் வேண்டுகிறார். நீங்கள் கொடுக்க நினைத்தாலும், மற்றொரு நண்பர் 3 வருட காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் என்கிறார்.

மேற்கண்ட விடயங்களில் தங்களது புரிதல்களையும், இந்த விடயம் சார்ந்த பிரச்னைகள் எழும் பொழுது, ஒரு வழக்குரைஞரின் ஆலோசனை பெறாமல் தங்களால் செயல்பட முடியுமா என்பதையும் சற்று சிந்தியுங்கள். பின்னர் உங்களுடைய இடத்தில் ஒரு சாமான்ய குடிமகனை வைத்து பாருங்கள்.

-oOo-

இந்துவில் நான் மேலே குறிப்பிட்ட கடிதத்தினை எழுதிய வாசகர், சம்பந்தப்பட்ட வழக்காடிகள் plead செய்ததாக குறிப்பிடுகிறார். ப்ளீடு என்ற வார்த்தையினை உரிமையியல் சட்டப்படி எழுத்து பூர்வமாக முதலில் தாக்கல் செய்யப்படும் வழக்கினை குறிக்கவே பயன்படுத்துவோம். பொதுவாக, நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் பொழுது ‘ப்ளீடிங்’ முதலியவற்றை வழக்குரைஞர்களே பார்த்துக் கொள்வார்கள். வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அலுவலகத்தில் அதன் ஆய்வினை (scrutiny) முடித்து அதற்கு எண் வாங்கி நீதிமன்றம் முன்பும் கொண்டு வருவார்கள். பின்னர் வழக்காடியை உள்ளே அனுப்பி, வழக்கினை விசாரணைக்கு அனுமதிக்க (admit) வேண்டி இடைக்கால தடை உத்தரவும் (interim injunction, stay, direction etc.,) கோர வைப்பார்கள். அவ்வளவுதான்.

மற்றபடி வழக்காடிகளை இறுதி விசாரணைக்கு எல்லாம் அனுப்புவதில்லை.

வழக்குரைஞர்களின் போராட்டம் என்பது, நீதிமன்ற புறக்கணிப்புதான். வேலை நிறுத்தமல்ல. இதனால்தான், வழக்குரைஞர்கள் தங்களுடைய போராட்டத்தினை நாட்கணக்கில் தாங்க (sustain) முடிகிறது.

தொழிலாளர் போராட்டத்திற்கும், வழக்குரைஞர்களின் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது புரியாமல், இந்து வாசகர்கள் அனைத்து வகைகளிலும் ஆதங்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கடிதம் எழுதித் தள்ளி விட்டார்கள்.

-oOo-

மேற்கண்ட கடிதம் எழுதிய ரெக்சு அருள் (Rex Arul) அமெரிக்காவில் பொறியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழார்வம் மிக்கவர். திருக்குறளில் மரண தண்டனை பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி வாசித்துள்ளார். என்னை பெயர் சொல்லி அழைக்க தயங்கி uncle என்று கூப்பிடுவார். உறவில் எனக்கு சகலை :-)

மதுரை
20.03.09

3.3.09

தீர்ப்புகள் விமர்சிக்கப்படலாம், முழுவதும் படித்த பின்னர்...




கடந்த மாதம், தில்லி உயர்நீதிமன்றம் ‘பாலியல் பலாத்கார’ வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனைக் காலத்தை 5 1/2 ஆண்டுகளாக குறைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டுமென்று மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனுச்செய்யும் அளவிற்கு இந்த தீர்ப்பின் சாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு, வழக்கம் போலவே இதனைப் பற்றிய செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள்தான் காரணம்.

‘குற்றவாளி இ.ஆ.ப (IAS) தேர்வில் தேர்ச்சி பெற்றதால், பலாத்கார வழக்கின் குற்றவாளியின் தண்டனையை 5 1/2 ஆண்டுக் காலமாக தில்லி உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது’ என்ற வகையிலே பத்திரிக்கை தலைப்புகள், ஏன் செய்தியே வெளியிடப்பட்டது.

நேற்று ‘இந்து’வில் கூட அதிர்ச்சி (shocking) ஏற்ப்படுத்தக்கூடியதாக உள்ளது என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி அலைகள் யாவும், ஒரு குற்ற வழக்கில் தண்டனையளிக்க நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தினை (jurisdiction & discretion) சரிவர ஆராயமல் ஒரு தீர்ப்பினை புரிந்து கொள்ள முயல்வதால் ஏற்ப்படுவது.

வழக்கில் பாதிக்கப்பட்டவர் 21 வயது நிரம்பிய பெண். குற்றவாளி 29 வயது நிரம்பிய ஆண். தன்னிடம் பாடம் படிக்க வந்த பெண்ணை தனது ‘ஆசை வார்த்தைகளால்’ மயக்கி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இடையில் தனக்கு ஏதோ காரியம் ஆக வேண்டுமென்று வேறு ஒரு ஒருவரின் ஆசைக்கும் இணங்கச் சொல்லியிருக்கிறார். பின்னர் தான் வாக்களித்தபடி அந்தப் பெண்ணை திருமணம் செய்யாதலால், விரிவாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அந்தப் பெண் தற்கொலை செய்திருக்கிறார். கீழமை நீதிமன்றம் தற்கொலைக்கு தூண்டுதல், மற்றும் பாலியல் பலாத்காரம் என்ற இரு குற்றங்களுக்காக, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்தது.

உயர்நீதிமன்றம் வழக்கின் முழு விபரத்தை அறிந்து குற்றவாளி பாதிக்கப்பட்டவருக்கு ஏற்ப்பட்ட மன உளைச்சலை ஏற்ப்படுத்தியதைத் தவிர தற்கொலையினை நேரடியாக தூண்டவில்லை என்று கூறி தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்துள்ளது. பின்னர் நடந்து ‘பாலியல் பலாத்காரம்’ என்ற பிரிவில் ஆராய்ந்து சற்றுத் தயக்கத்துடனே குற்றவாளி என்று தீர்மானித்துள்ளது.

தீர்ப்பில் இருந்து பார்க்கையில், பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதமே (suicide note) இந்த வழக்கின் முக்கிய ஆவணமாக உள்ளது. என்னுடைய பார்வையில் அந்தப் பெண் தெள்ளத் தெளிவாக சிந்தித்து, குற்றவாளியை தப்பிக்கவே முடியாத வகையில் சிறைக்குள் தள்ள வேண்டுமென்ற முடிவோடு எழுதியுள்ளது போலத் தெரிகிறது. மற்றொரு நபரின் ஆசைக்கும் இணங்க வற்புறுத்தியதாக கூறியது மட்டும் அந்தக் கடிதத்தில் இல்லையெனில், காதலித்து ஏமாற்றியது என்ற வகையோடு இந்த தவறு நின்றிருக்கும். ஆயினும், இவ்வளவு தெளிவாக மற்ற விடயங்களை எழுதிய அந்தப் பெண், யார் அந்த மூன்றாவது நபர் என்ற விடயத்தை எழுதாமல் விட்டது, அதன் உண்மைத் தன்மையை பற்றிய சந்தேகத்தினை எழுப்புகிறது.

கடிதத்தில் ‘I had to attend to that person and make him happy’ என்று இருப்பினும் வற்புறுத்தப்பட்டார் என்ற அளவிலேயே அரசின் வாதமும் அமைந்தது.

ஆயினும் நீதிபதிகள், குற்றவாளிக்கு முதலிலிருந்தே அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்ற அடிப்படையில் நடந்தது பாலியல் பலாத்காரம் என்று தீர்மானித்துள்ளார்கள். இதுவும் எவ்வளவு தூரம் இதச பிரிவு 375ன் கீழ் வருகிறது என்று தெரியவில்லை.

மேற்கண்ட விடயங்கள், இரு தரப்பினரின் வயது போன்றவற்றை ஆராய்ந்த நீதிபதிகள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை என்பது மிக அதிகம் என்று தீர்மானித்து, அவர் அது வரை சிறையில் கழித்த 5 1/2 ஆண்டுகளை மட்டும் போதுமானது என்று அவரை விடுதலை செய்துள்ளனர்.

நீதிபதிகள் பாலியல் பலாத்காரத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஆயினும், குற்றவாளிக்கு சிறையில் அளிக்கப்படும் தண்டனைக் குறைப்பு (remission) போன்றவற்றை அனுசரித்தே 5 1/2 ஆண்டுகள் என்று கூறுகின்றனர்.

தீர்ப்பினை முடிக்கும் முன்னர், சிறையிலும் தண்டிக்கப்பட்டவர் நல்ல முறையில் நடந்து கொண்டார் என்பதை எடுத்துக் காட்டவே அவர் இஆப தேர்விலும் தேறியுள்ளார் என்று போகிற போக்கில் குறிப்பிடுகிறார்கள்...அவ்வளவுதான், அந்த ஒற்றை வரி ‘ஏதோ இஆப தேர்வில் தேறினால் தண்டனைக் குறைப்பு, அதுவும் வன்புணர்வு குற்றவாளிக்கா?’ என்று கண்டனத்தை ஏற்ப்படுத்தி விட்டது.

தண்டனை எவ்வளவு என்பதை கணிதம் (mathematical precision) மூலம் கூற முடியாது. வழக்கு விசாரணையில் நீதிபதியும் முன் வைக்கப்படும் பல்வேறு காரணிகளை ஆய்ந்து, அவை நீதிபதியிடம் ஏற்ப்படுத்தும் தாக்கத்தினைப் பொறுத்து அமைவது. அவையனைத்தையும், தெளிவாக தீர்ப்பில் கூற முடியும் என்பதும் இயலாதது. எனவே இவ்விதமான ஒற்றைப் பரிமாண விமர்சனங்கள், நீதிபதிகளை தட்டையான தீர்ப்பினைக் கூறும் இயந்திரங்களாக மாற்றி விடக்கூடும்!

நீதிபரிபாலனம் என்பது மூளை மட்டும் சார்ந்த விடயமல்ல...இதயத்திற்கும் கொஞ்சம் பங்கு உண்டு!

மதுரை
03.03.09


நேற்று இந்துவில் வெளிவந்த கடிதத்திற்கு நான் எழுதிய எதிர்வினை...



It is unfair on the part of the press to criticize the Delhi High Court, for its judgment, reducing the sentence of Ashok Rai, convicted for the offence of rape. It seems no one, including your reader who expressed shock in his letter published on 02.02.09 bothers to read the judgment before pouring vitriol on the Learned Judges, who only after weighing the entire circumstances of the case, in their wisdom thought fit to release the convict after 5 ½ years of incarceration. The much maligned observation on the ‘convict qualifying for IAS’ is made only as a passing reference at the end of Judgment to bolster the point that the convict had shown good conduct while in jail. It is another matter whether he is fit or legally entitled to work as a civil servant or not.

Instead, what weighed most in the mind of the Learned Judges was that what had happened between the victim and the culprit was not technically rape but a consensual sex, obtained on a false promise of marriage. The culprit was aged 29 and the victim 21 and had she exhibited a little more strong will, she could have succeeded in bringing the culprit into book, without losing her life. The way in which the suicide note was written, creates a suspicion in my mind that the victim, in a fit of rage and spirit of revenge has laid a well thought out plan to send the cheater for a long period behind the bars. Well, 5 ½ years is not a small period but still the Learned Judges could have stuck to the minimum period of 7 years and leaving the remission period to the concerned authorities.

In any case, it is not correct that convict’s qualifying for IAS was not cited by the Delhi High Court as the only reason for reducing the sentence.

3.2.09

கொஞ்சம் இரக்கம் மட்டும் போதும்!

சில வருடங்களுக்கு முன்னர், சில பயங்கரவாதிகள் இந்திய விமானமொன்றினை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் சென்றனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட சுமார் நூறு பயணிகளின் உயிரினைக் காக்க, அவர்களின் உறவினர்கள் தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். “48 மணி நேரம்தான், பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறவில்லையெனில், அவர்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இந்திய அரசு கூறவில்லை.

சில வாரங்களுக்கு முன்னர், சில கொள்ளைக்காரர்கள் கப்பல் ஒன்றில் இந்திய மாலுமிகள் சிலரை பயணக்கைதிகளாக பிடித்தனர். “48 மணி நேரம்தான். அதற்குள் மாலுமிகள் வெளியேறவில்லையெனில் அவர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை” என்று நமது கடற்படை கூறவில்லை.

ஏன், சில மாதங்களுக்கு முன்னர் காசாவிலிருந்து ராக்கெட்டுகளை அனுப்பும் ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்று இஸ்ரயீல் காசாவின் மீது தாக்குதல் தொடுத்தது. ஹமாஸ் தீவிரவாதிகளோடு காசாவாசிகளும் பாதிக்கப்பட, தனது குடிமக்கள் இல்லையெனினும், “காசாவாசிகள் வெளியேறவில்லையெனில் அவர்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இஸ்ரயீல் கூறவில்லை.

ஆனால், இலங்கையில் மட்டும் ஏன் தனது ‘சொந்த குடிமக்களை’ப் பார்த்து, ராணுவ மந்திரி “அவர்களது உயிருக்கு உத்திரவாதமில்லை” என்று கூற முடிகிறது?


***

சொந்த குடிமக்கள் நிலையே, இந்தியர் பாடு இன்னும் மோசமாக இருப்பதில் வியப்பில்லைதான். உலகில் பிற எத்தனையோ நாடுகள் மிகச்சிறிய கடல்பறப்பினை தங்களிடையே கொண்டுள்ளன...ஆனால் வேறு எங்கு இந்த அளவிற்கு மீனவர்கள் மற்ற நாட்டு கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்?

அதுவும் ஒரு வல்லரசு நாட்டின் குடிமக்களான மீனவர்கள்!


***

Insensitivity - அது இலங்கை ராணுவ மந்திரியின் வார்த்தைகளில் மட்டும் இல்லை. லட்சக்கணக்கான குடிமக்களை பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து, அவர்களின் உயிரினை கேள்விக்குறியதாக்கியிருக்கும் சூழ்நிலையில் எந்த நாடு ‘கிரிக்கெட்’ விளையாடி கொண்டாடிக்கொண்டிருக்க முடியும்?


***

Insensitivity - அது சில இந்தியர்களின் நடவடிக்கைகளிலும் இல்லை. சென்னையின் ஒரு பகுதி, பத்திரிக்கையாளன் ஒருவனின் மரணத்தில் கொந்தளித்துக் கிடக்க மதுரை முழுவது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்ட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள்.

இரவு சாலை வழியே நடந்து சென்றவனின் காதில், கணீரென்ற குரலில் நாகூர் ஹனீபாவின் பாடல்
‘இலங்கையில் துயருரும்
தமிழனைக் காத்திட
...............................
சின்னத்திலே
ஓட்டுப் போடுங்க மொத்தத்திலே’


நான் எளிதில் கலங்குவதில்லை......
ஆனாலும் இந்த insensitive வரிகள்!

மதுரை
040209

16.1.09

அழிப்பது ‘புலி’களின் குணமே!

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு (National Federation of Indian Women) என்ற சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப் பேராண்மை மனுவினை (Writ Petition) தாக்கல் செய்தது. அதாவது தணிக்கை குழுவினரால் (Censor Board) தடை செய்யப்பட்ட திரைப்படக் காட்சிகளையும், பாடல்களையும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பேருந்துகளில் ஓளி/ஒலிபரப்புவதை தடுக்க போதிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டும் மனு.


பொதுவாக எனக்கு இது போன்ற மனுக்களில் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. நானும் வழக்குரைஞர் நண்பர் ஒருவருக்காக முன்பு 'அரசு அனுமதித்த நபர்கள் தவிர மற்றவர்கள் தங்களது வாகனங்களில் சிவப்பு விளக்கினை பயன்படுத்துவதை உடனடியாக தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்' என்று ஒரு மனு தாக்கல் செய்து அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் ஏதும் பலன் இல்லை!


‘இன்னார்’ சிவப்பு விளக்கினை பயன்படுத்துவதாக கூறி ஒரு அவமதிப்பு மனு (Contempt Petition) போடலாமா? என்றால், வழக்கு தாக்கல் செய்த நண்பர் ‘ஏன், நான் ஒழுங்காக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா’ என்கிறார்.



***


சமீபத்தில் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குரைஞர்களின் கருத்துகளை கேட்டபின்னர், ‘படக்காட்சி என்றால் சரி, படக்காட்சியோடு இணையாத பாடல் (Audio without any accompanying visual display) மட்டுமென்றால் அந்தப் பாடல் காட்சி தணிக்கைத் துறையினரால் தடை செய்யப்பட்டிருந்தாலும் திரைப்பட சட்டத்தின் (Cinematograph Act) எந்த ஒரு பிரிவினையும் மீறியதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.


ஆனாலும் குத்துப்பாட்டு போடுபவர்கள் ஒரேடியாக மகிழ்ந்து விட வேண்டாம். வெறும் பாடல் என்றாலும், பாடல் வரிகள் அநாகரீகமாக (obscene) இருக்கும் பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.


இந்திய தண்டனைச் சட்டத்தின் 294ம் பிரிவு மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும்(annoy) வண்ணம் அநாகரீகமான பாடல்களைப் (obscene songs) பாடினால் மூன்று மாத தண்டனைக்கேதுவான குற்றம் என்று கூறுகிறது. இந்தப் பிரிவின் மற்றொரு பகுதி அநாகரீக செயல் (obcene act) புரிந்தாலும் குற்றம் என்று கூறுவதால், அநாகரீக பாடல்களை ஒலிபரப்புவதும் குற்றமே!


‘அப்சீன்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு பொருத்தமான தமிழ் வார்த்தை எனக்குத் தோன்றவில்லை. தமிழறிஞர்களைக் கேட்டால், முதலில் அப்சீன் என்றால் என்னவென்று வரையறு என்பார்கள்.


***


அநாகரீக பாடல் கூடாது. இந்தப் பாடலைப் பாடலாமா?

இதோ வருகுது யுத்தம்
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்


பகைவனுக்கருள்வது பிழை
வா

பகைவனை அழிப்பது முறை
ம்ம்ம்...பொறுப்பது புழுக்களின் குணம்
அழிப்பது புலிகளின் குணமே!

எட்டிப்போ
இதோ வருகுது புலி
யுத்தத்தால் அடாவடி ஒழியுது
மனோபலம் வருகுது மொத்தத்தில்


பாடாவிட்டாலும் நேற்று கேட்டேன், ஏதோவொரு பண்பலை வானொலியில்!

விக்ரம் படத்தில், இளையராசா இசையமைப்பில், கமல்காசன் பாடிய இந்தப் பாடலுக்கு படம் வெளிவந்த காலகட்டத்தில் சில எதிர்ப்புகள் இருந்ததாக படித்த ஞாபகம். தற்பொழுது இல்லை போலும்.



நமது பேச்சுரிமை அதிகரித்திருப்பதற்காக நாம் மகிழலாம்!


மதுரை
160109









கண்ணுக்கு விருந்து...

13.1.09

வலைபதியும் நீதிபதிகள்!

கிழக்கு பதிப்பகம், பத்ரி நாராயணனை ஒருமுறை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள பொருளாதார பேராசிரியர் ஒருவரும், நீதிபதி ஒருவரும் இணைந்து சட்டம், அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களைக் குறித்து விவாதிக்கும் ‘பெக்கர் போஸ்னர் வலைப்பதிவு’ (Becker-Posner-blog) என்ற பதிவினை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இது போல இந்தியாவிலுள்ள நீதிபதிகளும் பதிவு எழுத முன் வருவார்களா?’ என்று வினவினார்.

‘இந்திய நிலையில் அப்படியொரு சாத்தியக்கூறு இல்லை’ என்றேன்.

ஆனால் இன்று தற்செயலாக வலையினை மேய்கையில், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் கண்ணன் அவர்கள் கடந்த இருவருடங்களாக வலையில் எழுதி வரும் Justice Kannan, being non-judgmental என்ற பதிவு கண்ணில் பட்டது.


***

நீதிபதி கண்ணன், தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் மிக முக்கியமானதும், பழமையானதுமான சட்ட சஞ்சிகையான Madras Law Journalல் ஆசிரியராக, நீதிபதியாக பதவியேற்கும் முன்பு வரை பணியாற்றியவர்.

சட்ட சஞ்சிகை (Law Journal) என்பது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தொகுத்து வெளியிடப்படும் பத்திரிக்கை. வாரசஞ்சிகைகளும் உண்டு, மாத சஞ்சிகைகளும் உண்டு. இவைகளை வாங்கி தொடர்ந்து படிப்பதன் மூலம், வழக்குரைஞர்கள் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவற்றை தங்களது வழக்குகளில் பயன்படுத்துவார்கள்.
இவ்வாறான சட்ட பத்திரிக்கைகளின் தொகுப்பே, நாம் வழக்குரைஞர்களின் அலுவலகங்களில் காண்பது.

நீதிபதி கண்ணன், வழக்காடுவதோடு, எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டுபவர். பல்வேறு சட்டம் சம்பந்தமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

பல ஆண்டுகளாக நீதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சமீபத்தில்தான் அந்த வாய்ப்பு இவரை தேடி வந்தது. தமிழகத்தில் இவர் பதவியேற்றாலும், சில மாதங்களிலேயெ பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.


***


மணற்கேணி தினத்தந்தி என்றால், நீதிபதி கண்ணனின் வலைப்பதிவு ஹிந்து படிப்பது போல இருக்கும். தீவிரமாக சட்டம் பற்றி அறிந்து கொள்ள அந்த வலைப்பதிவினை நாடலாம். இந்தியாவில் சட்டம் பற்றி விவாதிக்கும் மற்றொரு வலைப்பதிவினை எனக்கு பத்ரிதான் அறிமுகப்படுத்தினார். ஏற்கானவே நான் இங்கு சுட்டிக்காட்டியுள்ள Law and other Things.


***

நீதிபதி கண்ணன், அவர் நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பிருந்தே பதிவு எழுதி வருகிறார். நீதிபதிகள், அதுவும் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிவு எழுதுவது சாத்தியமான ஒன்றா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. முக்கியமாக நீதிபதி பாஸ்னர் கண்ணனைப் போல பேராண்மை (writ) மனுக்களை விசாரிக்கவல்ல நீதிபதியல்ல என்றே நினைக்கிறேன்.

பேராண்மை மனுக்களை விசாரிக்கவல்ல நீதிபதிகள், சமூகத்தை பாதிக்கும் பல விடயங்களில், தங்களை சொந்த கருத்துகளை அனைவரும் அறியும் வண்ணம் இவ்வாறு வெளிப்படுத்துவது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு கூட முக்கியமான விடயங்களில் ஹிந்துவில் கட்டுரை எழுதுகிறார்.

நீதிபதிகள், பொதுக்கூட்ட மேடைகளில் தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துகையில், கட்டுரை எழுதுவதும் வலைப்பதிவதும் சாத்தியமான ஒன்றுதான்.

உண்மையில், நீதிபதிகள் தங்களது சொந்தக் கருத்துகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவதை விட தங்களது சொந்த வலைப்பதிவில் வெளிப்படுத்துவது சரியான ஒரு செயலாகவே இருக்க முடியும்.

ஆனால், வலைப்பதிகையில் பதிபவர், தனது பதிவினை ஒட்டி எழும் விவாதத்திலிருந்து விலகியிருப்பது சாத்தியமில்லை. முக்கியமாக எதிர்வினைகளை அனுமதிக்கையில், சில தர்மசங்கடமான நிலைகளுக்கு வலைப்பதிபவரை இட்டுச் செல்லலாம்.

எனினும், இந்தியாவில் வலைப்பதியும் முதல் நீதிபதி கண்ணனானகத்தான் இருக்க முடியும். இந்த அவரது முயற்சி வரவேற்க்கத்தகுந்ததுதான்.


***

எதிர்காலத்தில் நானும் நீதிபதியாகக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், என்னால் இந்த பதிவினை தொடர முடியுமா என்று நான் சிந்திப்பதுண்டு. நீதிபதி கண்ணன் நம்பிக்கை தருகிறார். ஆயினும், சந்தேகம் இருக்கிறது.

நீதிபதி ஒருவேளை இதன் சட்டச்சிக்கல்களைப் பற்றி எழுதலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆயினும் குடிமக்களாகிய உங்களுக்கும் எனக்கும் உள்ள பேச்சுரிமை, அதை நமக்கு உறுதிப்படுத்தும் நீதிபதிகளுக்கு இல்லை, பாவம்!

மதுரை
120109





KODAIKANAL, FOUR YEARS AGO...

9.1.09

ஆடு மேய்க்கும் பயங்கரவாதியும், ‘ஐயா’ வீடும்!

ஆடு மேய்ப்பது ஒரு குற்றம் என்றால், அதைத் தவிர வேறு ஏதும் குற்றச் செயலில் ஈடுபடாதவர்கள்தாம், அவர்கள் இருவரும்...

அவர்களது கிராம எல்லைக்குள், கம்பீரமாக ஓங்கியுயர்ந்து புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடத்தினைப் பார்த்து, மற்ற கிராமவாசிகளைப் போல பெருமைப்பட்டவர்கள்தாம் அவர்கள்.

‘இது நம் கட்டிடம்’ ‘நம்மைப் போன்ற மக்களுக்கானது’ என்று மக்களாட்சித் தத்துவம் அவர்களை நினைக்க வைத்திருந்தது.

அதனால்தான், தங்களது ஆடுகளுக்காக, கட்டிடத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மதில்சுவர் மீது ஏறி தழைகளை ஒடிப்பதும் ஒரு தவறென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.


***

அவர்களது துரதிஷ்டம், அந்தக் கட்டிடத்தில் பெருமைமிகு பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கண்களில், ஏதோ உள்ளேயே கட்டப்பட்டிருந்த தனது வீட்டில் திருட வந்தவர்களாகப் பட்டனர். அல்லது நாடு முழுவதும் எழுப்பி விடப்பட்டிருக்கும், பய உணர்ச்சியில் (fear psychosis) தன்னை தாக்க வந்தவர்களாகவும் நினைத்திருக்கலாம்.

‘விடாதே, பிடி அவர்களை’ என்றாராம், தனது காவலர்களிடம்.

இருவரில் ஒருவர் சுதாரிப்புடன் ஓட, மற்றவர் தான் என்ன செய்துவிட்டோம் என்று ஓடவில்லை.

தனது காவலரிடம் ஓடியவரை ‘அவனை சுடு’ என்று உத்தரவிட்டதாகவும், காவலர் தயங்கி மறுத்ததாகவும் தகவல்.

***

பிடிபட்டவரை, அருகிலிருந்த காவல் நிலைய அதிகாரி, மூன்று நாட்கள் தனது காவலிலேயே வைத்திருந்தாராம். கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது, முக்கியமான சட்டம்.

காவல் அதிகாரி இரக்கமானவர். பிடிபட்டவரின் உறவினர்களை, ‘ஐயாவைப் பார்த்து இரக்கம் காட்டச் சொல்லுங்கள். அவர் சொன்னால், வழக்கு ஏதும் இல்லாமல் விட்டு விடுகிறேன்’ என்று சொல்லித்தான் மூன்று நாட்கள் வைத்திருந்தாராம்.

ஆண்களாகப் போனால் ‘ஐயா’ கோபப்படுவார் என்பதால், பெண்களெல்லாம் கிளம்பி ஐயாவைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றாலும், ஐயாவை பார்க்க முடியவில்லையாம்.

வேறு வழியில்லாமல், காவல் அதிகாரி, ‘ஐயா வீட்டில் மரச்சாமான்களை திருட சுவரேறிக் குதிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்து’ நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார். ‘ஐயா வீட்டிலேயேவா’ என்று ஜாமீன் தாக்கல் செய்ய ஆளில்லை. தாக்கல் செய்தவரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே தயக்கத்தில் வாபஸ் வாங்கி விட்டாராம்.

***

ஏறக்குறைய ஒரு மாத நீதிமன்ற காவலுக்குப் பிறகு தற்பொழுது பிணை மனு (bail application) தாக்கல் செய்யப்பட்டு, கிடைத்து விட்டது!

நீதிபதி, ‘ஐயா வீடென்றால் பிணை கொடுக்கக் கூடாது என்றா இருக்கிறது?’ என்று வியந்தாராம்!

எனக்கும் வியப்பு, ‘அரசுக் கட்டிடத்தினை பயங்கரவாத தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பது’ என்று குழை ஒடிக்க வந்த பயங்கரவாதியை முன்னிருந்தி, தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருவதால்...

மதுரை
09.01.09






MUMBAI - PUNE HIGHWAY, DURING MONSOON...