31.3.08

‘ஞாநி’களும் மேற்போக்காக மேய்தலும்...

திருமணத்தை ரத்து செய்வதற்கான உரிமை குரான் விதிகளின்படி இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டு என்று அறிவித்து அதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருப்பதற்காக அனைந்திந்திய முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு இ.வா.பூச்செண்டு” - எழுத்தாளர் ஞாநி!

‘ஞாநிகளுக்கு எதற்கு அறிவு? என்ற எனது பதிவினை தொடர்ந்து, தனது கருத்துகளை ‘செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்’ என்று தனது வலைப்பதிவில் எழுதிய வெங்கட் “அது பின்நவீனத்துவமோ, மரபு மாற்றமோ, சூடேற்றமோ, சூடான் அரசியல் விவகாரமோ இவர்கள் பல சமயங்களில் மேம்போக்காக மேய்ந்துவிட்டு அடுத்தவாரமே தங்கள் மேதமையை அச்சிலேற்றிவிடுவார்கள்” என்று எழுதியதற்கு ஒரு உதாரணம்தான் மேலே காணும் பூச்செண்டு!

முதலில் ஞாநி குறிப்பிடுவது முஸ்லீம் சட்ட வாரியம் அல்ல. மாறாக முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியம். அடுத்து மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது விதிமுறைகள் அல்ல. மாறாக, இஸ்லாமியர்களின் திருமண ஒப்பந்தமான நிக்காநாமாவின் வடிவம் (model form).

இஸ்லாமிய சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) என்பது 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு. ‘அனைத்திந்திய’ ‘வாரியம்’ என்ற வார்த்தைகள் அதன் பெயரில் இருந்தாலு அரசு சார்ந்த ஒரு அமைப்பல்ல. மாறாக பொது சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு எதிரான ஒரு அமைப்பு (pressure group).

2005ம் ஆண்டு நிக்காநாமா இவ்வாறு இருக்கலாம் என்று ஒரு வடிவத்தினை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த அமைப்பின் தீர்மானங்கள் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னைகளை போக்குவதாக இல்லை என்று சில இஸ்லாமியப் பெண்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பெண்கள் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board). இரு அமைப்புகளையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சீந்துவதில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் இந்த பெண்கள் அமைப்பு தனது நிக்காநாமாவை வெளியிட்டது. உடனே, மற்ற நிறுவனத்திடம் இருந்து, தேவையற்றது (irrelevant) என்ற கண்டனம் வந்து விட்டது!

ஆனால் ‘ஞாநி’ நடப்பது என்ன ஏது என்று புரியாமலேயே கண்டனம் தெரிவித்த அமைப்பிற்கு பூச்செண்டைக் கொடுத்துவிட்டார்.

-oOo-

நான் மேலே கூறும் விபரங்கள் அனைத்தும், சிறிது நேரம் செலவழித்து இணையத்தில் தேடினாலேயே கிடைக்கும். எழுதும் விஷயத்தில் சிறு ஆராய்ச்சி கூட செய்ய விரும்பாதவர்கள்தான் இன்றைய தமிழ் பத்தி எழுத்தாளர்கள்.

சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் துருக்கி இந்தியாவை விட மிகவும் ஏழை நாடு என்று குறிப்பிடுகிறார். பின்னர் ஒரு முறை வெறுமே துருக்கியை ஏழை நாடு என்று தனது மற்றொரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டதையும் வாசிக்க நேர்ந்தது.

இந்தியாவிற்கு எதிரான துருக்கியின் பொருளாதார வலிமையினை சுமார் பத்து விநாடி நேரத்தில் இணையத்தில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், யார் எம்மை கேள்வி கேட்பது என்ற தைரியம்தானே இவ்வாறு இவர்களை எழுத வைக்கிறது.

சுசூகியும், யமாஹாவும் வரும் வரை இந்திய பஜாஜும், ராஜ்தூத்தும் இப்படித்தான் ‘வாகனம் என்றால் இரு சக்கரத்தில் சென்றால் போதும்’ என்ற வகையில் நடந்து கொண்டன. தற்பொழுது அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

-oOo-

எழுத்தாளர் சுஜாதா கூட இதற்கு விதிவிலக்கல்ல... ‘சுஜாதா வீட்டு லாண்டிரிக்கணக்கை கூட வெளியிடுவார்கள்’ என்று வைக்கப்பட்ட ஒரு விமர்சனத்தை கிண்டல் செய்யும் நோக்கோடு, சாவி இதழ் ஒருமுறை தனது பக்கங்களில் ஒன்றினை ‘லாண்டிரிக் கணக்கு’ ஒன்றினை வெளியிட்டது. யாரையோ நக்கல் செய்கிறோம் என்ற பெயரில், மறைந்த சா.விஸ்வநாதன் காசு கொடுத்து, தனது பத்திரிக்கை வாங்கியவர்களை அவமானப்படுத்தினார்.

அந்நியனுக்காக சுஜாதா செய்த ‘ஆராய்ச்சி’யினை இங்கு குறிப்பிட்டுள்ளேன்!

-oOo-

இறுதியாக தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது குறித்து விவாதங்கள் நடைபெற்ற காலத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ‘தீராநதி’ யில் எழுதிய கட்டுரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைப் பற்றி கூறுவதைப் பார்க்கலாம்

இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. தமிழ் மொழி செம்மொழி என்று கிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி, நவீன இந்திய மொழி என்று அதற்குக் கிடைத்து வரும் உரிமைகளும் சலுகைகளும் பாதிக்கப் படமாட்டா என்பது என்ன நிச்சியம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது காது என்று, மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா?

எழுத்தாளரின் கட்டுரை ‘ராயர் காபி கிளப்’ என்ற வலைக்குழுமத்தில் விவாதப் பொருளாகிய பொழுது நான் எழுதியது

தேர்ந்த எழுத்தாளரான கட்டுரையாசிரியர், இந்தக் கருத்துக்காக எந்த ஆராய்வின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் என்பது புரியவில்லை. அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் கண்ட மொழிகள் முதலில் நவீன இந்திய மொழிகள் என்று கூறப்படவில்லை. மேலும் அந்த அட்டவணையில் 14வது மொழி சமஸ்கிருதம். நான்காவது மொழி ஹிந்தி! அரசியலமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் பல சிறப்பு இடங்கள் ஹிந்திக்கும் சில சிறப்பு இடங்கள் சமஸ்கிருதத்திற்கும் உள்ளன. ஹிந்திக்கு அட்டவணைத்தகுதியும் ஆட்சி மொழித் தகுதியுமாக இரு தகுதிகள் இருக்கையில் தலையிடாத மனித வள மேம்பாட்டுத் துறை தமிழைக் கண்டதும் தலையிடுமோ?

அடுத்து அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஒரு மொழி இடம் பெறுவதால் அதற்கு ரூபாய் நோட்டில் இடம் பெறுவதை தவிர வேறு பெரிய உரிமையும், சலுகையும் இருப்பதாக நான் அறியேன். இல்லாத உரிமையும், சலுகையும் எவ்வாறு பாதிக்கப்படும் என ஆசிரியர் கூறுகிறார்? அரசியல் அமைப்புச் சட்டத்தில்இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் கூறப்படாத நிலையில் இந்த அட்டவணையில் குறிப்பிடாத மொழிகள் கூட தங்கள் வளர்ச்சிக்கான தொகையினை வேண்டிப் பெறலாம்.
இந்த எட்டாவது அட்டவணையே ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற அட்டவணை என்று முன்பு 'இந்திய ஆட்சி மொழி' என்ற கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தேன். என்னிடம் தற்பொழுது இல்லை. இராயர் கிட்டங்கியில்
எங்காவது புதைந்து கொண்டிருக்கலாம்.

தமிழ் செம்மொழி என்று அறிவிப்பதால் நன்மை ஏதாவது இருக்கிறதோ இல்லையோ தீமை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கட்டுரையாசிரியர் தனது கட்டுரையில் ஏதாவது தீமையை சுட்டிக்காட்டும் எண்ணத்துடன் பொதுவாக எழுதியது போல இருக்கிறது மேற்கண்ட வாசகம்


இன்று வரை எனது கருத்திற்கு யாரிடமிருந்தும் பதிலில்லை. எனது கருத்து தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், தகுந்த ஆய்வினன மேற்கொண்ட பின்னரே நான் எனது கருத்தினை எழுத துணிந்தேன். ஆனால், இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஏதும் ஆய்வினை புரியாமலேயே, தனது கருத்தினை எழுதினார் என்றே இன்றளவும் நம்புகிறேன்.

மதுரை
31.03.08


THERMAL POWER STATION, THOOTHUKUDI

8 comments:

Badri said...

சென்ற பதிவு, இந்தப் பதிவு இரண்டிலுமே நீங்கள் சில முக்கியமான விஷயங்களைத் தொட்டுள்ளீர்கள். தமிழ் ஊடகங்களில் பத்தி எழுதுபவர்கள் (1) குறைந்தபட்ச ஆராய்ச்சிகளைக் கூடச் செய்வதில்லை. (2) தவறாக எழுதுவதைப் பற்றி கவலை/வெட்கப்படுவதில்லை. (3) இதழ்களும் தகவல்களை சரியா, தவறா என்று கவனிப்பதில்லை. (4) தமிழ்ச் சொல் பிரயோகங்களைக்கூடச் சரியாகச் செய்வதில்லை.

வலைப்பதிவுகளால் இந்த நிலையை மாற்றமுடியும். இரண்டு நாள்களுக்குமுன் டாக்டர் புரூனோ மஸ்கரணாஸிடம் பேசும்போது இதைத்தான் தெரிவித்தேன். மேலும் பல துறை வல்லுநர்கள் இணையப் பக்கங்களை ஆரம்பித்து எழுத எழுத, அச்சு ஊடகப் பத்தி எழுத்தாளர்கள், மேலும் கவனமாக எழுத ஆரம்பிப்பார்கள். அல்லது வேலையை இழந்துவிடுவார்கள்.

இன்று தமிழ் வலைப்பதிவுகளில், எனக்குத் தெரிந்து, புரூனோ சேர்த்து, இரண்டு மருத்துவர்கள் எழுதுகிறார்கள். ஒரு வழக்கறிஞர் மட்டுமே. பல ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் இருந்தாலும் எழுதுவது குறைவு. பொருளாதார அறிஞர்கள் கண்ணுக்குத் தென்படுவதில்லை. வங்கித்துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவர் ஒருவர் மட்டுமே எனக்குத் தெரிந்து உள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யாரும் எழுதுவதாகத் தெரியவில்லை. சமூக விஞ்ஞானிகள், மொழியியல் வல்லுநர்கள், தொண்டார்வலர்கள், கல்வியியல் அறிஞர்கள் என்று பலர் எழுதுவதில்லை.

மொத்தத்தில், கும்மி/மொக்கை தாண்டி துறைசார்ந்த விஷயங்களில் திறன்வாய்ந்த, விஷயம் அறிந்த, அனுபவம் மிகுந்த பலர் எழுதுவதில்லை.

எனவே இந்த நிலை மாறும்வரையில், தமிழ் அச்சு ஊடகங்களில் எந்த முன்னேற்றமும் இருக்காது. தாங்கள் செய்துகொண்டிருப்பது சரியானதே என்றே அவர்கள் கருதுவார்கள்.

Anonymous said...

"இரு அமைப்புகளையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சீந்துவதில்லை"

இது உங்களுடைய சறுக்கல்.சமரசம்
என்ற இஸ்லாமிய இதழ் இணையத்தில்
கிடைக்கிறது.படித்துப் பார்க்கவும்.
AIMPLB குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் பெரும்பாலான இஸ்லாமிய இயக்கங்கள் அதன் நிலைப்பாட்டினை பல சமயங்களில் ஆதரிக்கின்றன.ஏன் என்பதை யூகிப்பது கடினமல்ல.

அமர பாரதி said...

நல்ல அலசல் ராஜதுரை அவர்களே. சில சமயங்களில் இந்த மாதிரி அபத்தத்தை படிக்கும் போது மகா எரிச்சலாக இருக்கும். ஞாநியின் எழுத்துக்களை விட சமீபத்தில் வந்த அமெரிக்க மாப்பிள்ளை சம்பந்தமான இரு வழக்குகளை பற்றி விகடனும் குமுதமும் வெளியிட்டுள்ள கட்டுரைகளில் வந்த கருத்துக்களில் பாதி கூட உண்மையில்லை. இன்னும் சம்பந்தப்பட்ட பத்தி எழுத்தாளர்களே முன்னுக்குப்பின் முரனாக எழுதும் அபத்தமும் இருக்கிறது.

Anonymous said...

//இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஏதும் ஆய்வினை புரியாமலேயே, தனது கருத்தினை எழுதினார் என்றே இன்றளவும் நம்புகிறேன்//

Quite possible. Thank you for your rebuttal. I will not be surprised if it is yet another attempt of Indira Parthasarathy to take a dig at Karunanidhi.

இராம.கி said...

அன்பிற்குரிய பிரபு ராஜதுரை,

அவியல் ஆக்கியே பழக்கப் பட்டவர்கள், உருப்படியாக வெந்தணம் (=வெஞ்சணம்) /கறி செய்வார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? கால காலமாய்த் தமிழ் மிடையங்களில் (media) இப்படித்தான் இருக்கிறது. இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூச் சக்கரை, கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ......." என்ற இரு சொலவடைகளும் தான் நினைவிற்கு வருகின்றன.

நல்ல தமிழில் எழுதுவதற்கு, நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ள வேண்டும். (குறைந்தது ஒரு தமிழ் அகரமுதலியையாவது வைத்துக் கொண்டு, அதை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் புரட்டிப் பார்க்க வேண்டும்.) வெறுமே ஒரு 3000 சொற்களை வைத்துக் கொண்டு, அவற்றை மாற்றி மாற்றிப் போட்டு, முன்னொட்டு, பின்னொட்டு, விகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் நல்ல தமிழ்நடை வந்துவிடாது என்பது என் தாழ்மையான முன்னிகை (comment). இப்படிச் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ளாததால் தான், குண்டுசட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டு, "எனக்குத் தெரியாத தமிழா?" என்று வெற்று முழக்கம் செய்யும், ஞானி, மதன் போன்றோர் தம்மை ஒரு அறிஞர் போலக் காட்டிக் கொண்டு, அதைச் சொல்லும் போதெல்லாம் தமிங்கிலத்திற்குள் வந்தே நிலை கொள்ளுகிறார்கள். (ஆனால் ஆங்கிலம் என்று வந்தால் தங்கள் வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு, குட்டிக் கரணம் அடித்தாவது புதுச்சொற்களைத் தெரிந்து கொண்டு, "The Hindu" வை அசத்திக் காட்டாமல் இருப்பார்களோ?)

தமிழ் வலைப்பதிவுகளிலும் பலர் தமிங்கிலத்தோடு நின்று போகிறார்கள். முயன்றால் மாறலாம். சங்கு ஊதிக் கொண்டே இருப்போம்; கேட்கிறவர்களுக்குக் கேட்கட்டும்.

அன்புடன்,
இராம.கி.

Badri said...

பிரபு: நீங்கள் இந்த வலைப்பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அப்படி இல்லாவிட்டால் இதனை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

http://lawandotherthings.blogspot.com/

இதைப்போன்றதொரு வலைப்பதிவைத் தமிழில் நிச்சயமாகச் செய்யமுடியும். உங்களது வழக்கறிஞர் நண்பர்களுக்கு இந்தத் தளத்தைக் காண்பித்து ஆளுக்கு வாரத்துக்கு 1 மணிநேரம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமுடியுமா என்று விசாரித்துப் பாருங்களேன்?

Anonymous said...

”இதைப்போன்றதொரு வலைப்பதிவைத் தமிழில் நிச்சயமாகச் செய்யமுடியும். உங்களது வழக்கறிஞர் நண்பர்களுக்கு இந்தத் தளத்தைக் காண்பித்து ஆளுக்கு வாரத்துக்கு 1 மணிநேரம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமுடியுமா என்று விசாரித்துப் பாருங்களேன்?”

அந்தப் பதிவில் எழுதுபவர்கள்,
பின்னூட்டம் இடுபவர்கள் அனைவரும்
வழக்கறிஞர்கள் அல்ல.உ-ம் அதில் அடிக்கடி எழுதும் வெங்கடேசன் frontline இதழின் பத்திரிகையாளர்.
தமிழில் அது போன்ற பதிவிற்குத்
தேவை உண்டு.

Anonymous said...

great blog...will bookmark it:-) sorry for commenting it in english...will comment it tamil soon..