16.3.08

பெண்கள் தத்து எடுக்க இயலாதா?

‘திருமணம் நிலுவையில் இருக்கையில் இந்துப் பெண்கள் தத்து எடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்’ (Hindu woman can’t adopt child when marriage holds)

இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினைப் பற்றி, 18.01.08 அன்று இந்து நாளிதழில் வெளிவந்த செய்தியின் தலைப்பு. இந்த தலைப்பானது, ஏதோ இந்து சட்டத்தில், தத்து எடுப்பது குறித்து ஆண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு இல்லை என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்குகிறது.

ஆனால் அப்படி ஏதும் இல்லை என்பதுதான் உண்மை!

இந்து தத்துச் சட்டப்படி (Hindu Adoptions and Maintenance Act) திருமண உறவிலிருக்கும் ஆண், தனது மனைவியில் அனுமதியின்றி தத்து எடுக்க முடியாது. ஏனெனில், தத்து எடுத்த பின்னர் மனைவியும், தத்து தாய் (Adoptive Mother) என்ற சட்ட தகுதிக்கு உள்ளாவார் என்பதால் மனைவியின் அனுமதி கட்டாயம் தேவை. சுருக்கமாக, கணவன் மனைவி இருவரும் இசைந்தாலே தத்து எடுப்பது சாத்தியம்.

இப்படி ஆணுக்கு ஒரு கட்டாயம் இருக்கையில், பெண்ணிற்கு தனியாக தத்து எடுக்கும் உரிமையளித்து சட்டப்பிரிவு ஏதும் தேவையில்லையே!

***

உச்ச நீதிமன்றத்தின் முன் வந்த வழக்கில் அந்தப் பெண்ணில் கணவர் பலவருடங்களாக எங்கு சென்று என்னவானார் என்று தெரியவில்லை. திருமணமும் விவாகரத்து பெறப்படவில்லை. இவ்வாறான நிலையில் திருமணம் உறவு தொடருவதாகத்தான் கருதப்படும். எனவே அந்தப் பெண் தன்னிச்சையாக தத்து எடுத்ததாக, அவரது தத்து புத்திரனால் கூறப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டது.

பெண் பிரிந்து போய், விவாகரத்து பெறும் முன்னர் ஆணால் தன்னிச்சையாக தத்து எடுக்கப்பட்டிருந்தாலும், அதனையும் செல்லாது என்று இந்த தீர்ப்பினை வைத்தே கூற இயலும்.
இந்துவின் தலைப்பு, படிப்பவர்களை தவறான புரிதல்களுக்கு (misleading) இட்டுச் செல்லக்கூடும் என்றே நினைக்கிறேன்.

மதுரை
160308
EXPRESSIONS OF NATURE & CULTURE, ALAGAR KOIL, MADURAI

5 comments:

பாச மலர் said...

மிகவும் உபயோகமான தகவல்..

இன்னும் ஒரு விஷயம் தெளிவு பெற விரும்புகிறேன்..ஆண் குழந்தை/குழந்தைகள் இருக்கும் தம்பதியர் அவர்களை விட வயதில் சிறிய பெண்குழந்தையைத் தத்து எடுப்பதைச் சட்டம் தடுக்கிறது என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன்..இது உண்மையா?

செந்தில் said...

திருமணமாகத ஆண்கள் தத்து எடுக்க இயலுமா?

பிரபு ராஜதுரை said...

"ஆண் குழந்தை/குழந்தைகள் இருக்கும் தம்பதியர் அவர்களை விட வயதில் சிறிய பெண்குழந்தையைத் தத்து எடுப்பதைச் சட்டம் தடுக்கிறது என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன்..இது உண்மையா?"


அப்படி ஏதும் கட்டுப்பாடு இல்லை என்பதுதான் நான் அறிந்தது. சட்டத்தில் அவ்வாறு இல்லை!

"திருமணமாகத ஆண்கள் தத்து எடுக்க இயலுமா?"

இயலும், அவர் மைனராக, மனநோய் உள்ளவராக இல்லாத வரை

யாத்திரீகன் said...

>>>> இயலும், அவர் மைனராக, மனநோய் உள்ளவராக இல்லாத வரை
<<<<<

ohh is it ?!?! these tamil movies are very misleading even in such stuffs..

பாச மலர் said...

உங்கள் விளக்கத்துக்கு நன்றி பிரபு ராஜதுரை சார்.