10.5.07

புகழின் சங்கடங்கள் aka புகழ் தரும் புனிதம்-II

நான் பழகிய பல சீனியர் வழக்கறிஞர்களிலேயே சுவராசியமான மனிதர் யாரென்று கேட்டால் அவரைத்தான் சொல்ல வேண்டும். அவரது அலுவலகத்தில் சட்டம், வழக்குகள் பற்றி விவாதித்ததை விட மற்ற பல பொது விஷயங்களை விவாதித்ததுதான் அதிகம். ஒரு காலத்தில் மிக்க செல்வாக்குடன் தொழிலில் கோலோச்சிய அவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு ஏறக்குறைய கட்சிக்காரர்கள் அனைவரையும் இழந்து, அலுவலகத்திலேயே பெரும்பான்மையான நேரங்களில் அடைபட்டுக் கிடந்தது எங்கள் விவாதங்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

ஷேக்ஸ்பியரையும் சாமர்சாட் மாஹமையும் மற்றும் பல ஆங்கில கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டுவார். புகழ்ந்து பேசுவார். ஒரு முறை பொறுக்க முடியாமல் நான், 'நீங்கள் தமிழில் யாரையும் படித்ததில்லை. அதனால்தான் ஆங்கில இலக்கியத்தை இப்படிப் பாராட்டுகிறீர்கள்' என்றேன். முகத்தில் ஒரு சின்ன அதிர்ச்சி. சமாளித்துக் கொண்டு, 'போடா முட்டாள்! இருக்கவே இருக்க முடியாது' என்று மேசையில் எப்போதும் போலவே நீளமான தனது ஆள்காட்டி விரலால் தட்டியபடி தலையை ஒரு குலுக்கு குலுக்கியபடி மறுத்தார்.

இரண்டு நாட்களில் ஜெயகாந்தனின் 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்ற புத்தகத்தோடு அலுவலகம் சென்றேன். 'இதைக் கொஞ்சம் படியுங்கள்' என்று அவர் கைகளில் அந்தப் புத்தகத்தை திணித்து விட்டு நீதிமன்றம் சென்று விட்டேன். மத்தியானமாக அவரது அலுவலகம் பக்கம் வந்தால், மனிதர் நான் வந்தது கூட தெரியாமல் புத்தகத்தின் மீது தலையை கவிழ்த்து படித்துக் கொண்டிருந்தார். லேசாக தொண்டையை செருமியபடி, 'என்ன எப்படி இருக்குது?' என்று கேட்டேன். என்னை கொஞ்சம், ஏதாவது நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சியினை பார்ப்பது போன்ற ஒரு வெறித்த பார்வையில் பார்த்தவர், 'எப்படி எழுதியிருக்காண்டா? அப்படியே சினிமாவா பாக்கற மாதிரி இருக்கு' என்றார் ஒரே வாக்கியத்தில்.

'இன்னும் இருக்கு பொறுங்க' என்றேன்.

சாயங்காலத்துக்கெல்லாம் முடித்து விட்டு இன்னும் ஏதாவது இருக்கா என்பது போல பார்த்தார். பேசாமல் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டேன். அடுத்த நாள், கி.ராஜநாராயன் 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற புத்தகத்தை கொடுத்தேன். 'என்ன! அவன் எழுதுன புத்தகத்தை தா' என்றார் கண்களில் எரிச்சலுடன். 'இதப் படிங்க சொல்றன்' என்றேன்.

அன்று மாலை பார்த்தேன் மறுபடியும் அவரை. 'அட! இவன் அவனுக்கும் மேலடா' என்றார். 'நான்தான் சொன்னேன்ல்லா' என்பது போல அவரைப் பார்த்தேன். அவரே தொடர்ந்தார், 'அந்த நாடார் எப்படி கருவாட்டையும், பழைய சோறையும் வச்சு சாப்பிடுறார்னு...அப்படியே எழுதியிருக்காண்டா' அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. இது வரையும் இல்லாத அவரின் புதிய பரிமாணத்தைப் பார்த்ததாக உணர்ந்தேன். ஏனோ எனக்கு, 'அவர் தனது எப்போதோ இறந்து போன அம்மாவை மீண்டும் ஒரு சிறுவனாக நினைவுக்கு கொண்டு வந்து விட்டாதாக' தோன்றியது.

இதுவே போதும். அவரிடம் பின்னர் ஆங்கில இலக்கியம் தமிழ் இலக்கியம் என்றெல்லாம் வாதிட தைரியம் இல்லை எனக்கு. ஏனெனில் நான் கொடுத்த இரண்டும் புனைக்கதை வகையல்ல. அவை அவரை வெகுவாக கவர்ந்தது ஆச்சர்யமில்லை. ஆனாலும் அந்த சீனியர் வழக்கறிஞரை தெரிந்த யாரும் இந்த அவரது சொற்கள் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய வெற்றி என்று ஒத்துக் கொள்வர்.

அவர் திரைப்படங்களை பார்க்கும் வழக்கம் உண்டு என்பதை அவர் பேசியதிலிருந்து நான் அறிந்திருந்தாலும், நான் அவருடன் பழகிய பல வருடங்களில் அவர் திரைப்படம் எதுவும் பார்க்க விரும்பியதேயில்லை. கேட்டால், 'போலாம்தான். பக்கத்திலே தமிழன் உட்கார்ந்திருப்பானே...தமிழன்' என்பார் ஒரு கேவலமான தொனியில். அவர் பழைய காலத்தில் வாழ்ந்து வந்தார். செம்மீனை 'இட் ஈஸ் நாட் அன் எண்டர்டெயின்மெண்ட் பட் அன் எக்ஸ்பீரியன்ஸ்' என்பார். எம்.எஸ்.சுப்புல்ட்சுமியின் சாரீரத்தை மட்டுமல்லாமல் சரீரத்தினையும் 'என்னா அழகு' என்று வியப்பார். 'விஸ்கியும், இரவும் பின்னணியில் சௌடையாவின் வயலினும் இருந்து விட்டால் போதும். அதைவிட சொர்க்கம் எதுவும் இருக்கப் போவதில்லை' என்றிருக்கிறார்.

***

அவர் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் நான் அவரிடம் பழகிய பல வருடங்களில் இல்லாதிருந்தாலும் அந்த ஊரிலுள்ள திரைப்பட வியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் அவருக்கு அதிக தொடர்பு இருந்தது, அவர்களுக்கான வக்கீல் என்ற முறையில். ஊரே வியக்க வழக்கு நடத்திய காலமெல்லாம் கடந்து விட்டிருந்தாலும் அவரின் பல ரசமான குணங்களுக்காக பழைய கட்சிக்காரர்களின் நட்பும் மரியாதையும் மிஞ்சியிருந்தது. அதனால் சிலர் மரியாதை நிமித்தமாகவும் சிலபல விஷயங்களுக்காகவும் அலுவலகம் வருவதுண்டு. இதன் பலனெல்லாம் எனக்குத்தான். அதுவும் புதுப்பட வெளியீட்டின் போது நல்ல பலனிருக்கும். 'டிக்கட் வாங்கித் தாடா' என்று பல நண்பர்கள் தேடி வருவர். ஆனாலும் காசு கொடுக்காமலெல்லாம் டிக்கட் எடுப்பதில்லை. ஒன்றிரண்டு அரங்குகளில் எங்கள் வண்டிகளைப் பார்த்தாலே நிர்வாகி ஓடி வருவார் வண்டி பாதுகாப்பாளனிடம் ,'அவர்களிடம் காசு வாங்காதே' என்று. ஆனாலும் நாங்கள் அதனைக் கூட ஏற்பதில்லை. ஆனாலும் வேறு ஒரு சடங்கு உண்டு. அதனை மறுக்க முடியாது.


***

மற்ற இடங்களைப் பற்றி தெரியாது. ஆனால் தென்மாவட்டத்து திரையரங்குகளில் மேல்வகுப்பு இருக்கைகளுக்கு செல்பவர்கள் ஒரு விஷயத்தை, சற்றே எரிச்சலுடன் கவனித்திருக்கலாம். படம் ஆரம்பித்து சில மணித்துளிகளில் தேநீர் அல்லது காப்பி அரங்கு நிர்வாகியால், அவரது தனிப்பட்ட விருந்தினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தேநீர் உபசரிப்பினை படம் ஆரம்பிப்பதற்கு முன்னரோ அல்லது இடைவேளையின் போதோ கடைபிடிக்கலாம். ஆனால் படம் நடக்கும் போது இடையில் கவனிப்பதுதான் திரைஅரங்குகளுக்கு விருந்தினர்களாய் போகிறவர்களுக்கு அரங்க நிர்வாகத்தால் அளிக்கப்ப்டும் உச்சகட்ட மரியாதை. இந்தப் பழக்கம் எப்படி ஆரம்பித்தது என்பது தெரியாது. என்னுடைய சந்தேகப் பார்வை வழக்கம் போல 'அரசு அலுவலர்கள்' மீதுதான்.

முன்பெல்லாம், திரையரங்குகளில் 'இலவச அனுமதிச் சீட்டு' என்று ஒன்று உண்டு. அதன் பெரும்பான்மையான பயனாளிகள் அரசு அலுவலர்கள். இந்த அரசு அலுவலர்களுக்கு தாழ்வு மனப்பான்மையோ என்னவோ சில வேடிக்கையான பழக்கங்கள் உண்டு. அரசு ஜீப்பில் பார்த்திருக்கிறீர்களா? அதில் பயணம் செய்வதிலேயே பெரிய அதிகாரி, அவர் எவ்வளவு வயதானவராக உடல் முடியாதவராக இருந்தாலும் சரி, ஓட்டுநருக்கு இந்தப் பக்கம் உள்ள கதவருகில்தான் அமர்ந்திருப்பார். அப்போதைய ஜீப்புகளில் கதவு வேறு கிடையாது. பின் பக்கத்தில் பாதுகாப்பாக உட்கார்ந்து பயணம் செய்த பெரிய அதிகாரியை நான் பார்த்ததேயில்லை. ஜீப் இருக்கையில் அவர் முதுகு படும் இடத்தில் மட்டும் ஒரு வண்ண மயமான டர்க்கி டவல் இருக்கும்.

இப்படிப்பட்ட அரசு அலுவலர்கள் பொது இடங்களில் கூட தங்களது தனித்தன்மையை விட்டு விடுவார்களா என்ன? எனவே திரையரங்குகளில் படம் நடந்து கொண்டிருக்கும் போதே தேநீரை வியோகிக்கும் இந்த வீம்பான பழக்கத்தினை, மற்ற வாடிக்கையாளர்களின் வெறுப்பையும் மீறி 'இலவச அனுமதிச்சீட்டின்' உபயத்தில் படம் பார்க்கும் அரசு அலுவலர்களின் பெரிய ஈகோவை திருப்திப்படுத்த வேண்டி திரையரங்க நிர்வாகிகள் ஆரம்பித்து வைத்திருக்கலாம். எங்களுக்கும் இப்படிப்பட்ட மரியாதைகள் நடைபெறும். இதனைப் பற்றி இவ்வளவு மோசமாக சொன்னாலும், அதை அனுபவிப்பதில் ஒரு ரகசியமான சுகம் இருக்கும். அதுவும் இந்த கேபிள் டிவி காலங்களுக்கு முன்னர் திரையரங்குகள் கோலோச்சிய காலத்தில் திரையரங்கு நிர்வாகத்தால் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்படுவதென்பது ஒரு கர்வம் கொள்ளத்தக்க விஷயம்தான். ஆனாலும் சில சமயம் இப்படிப்பட்ட கர்வம் மிகுந்த கௌரவங்களே நமக்கு எமனாக அமைந்து விடுவதுமுண்டு.

***


நான் சொன்ன அந்த சீனியர் வழக்கறிஞர் சினிமா பார்ப்பதில்லை என்றாலும், பேச்சு வாக்கில் ஒரு நாள் வேறு ஒரு ஆசையை வெளியிட்டார்.

"அது என்னடா 'புளு பிலிம்'. எல்லாரும் பேசிக்கிறாங்களே! அதுல அப்படி என்ன விசேஷம்?"

அவரை நன்கு அறிந்திருந்த எனக்கு அவரது அந்தக் கேள்வி அதிர்ச்சி அளிக்கவில்லை.

"நீங்க பார்த்ததேயில்லையா?" அப்பாவியாகக் கேட்டேன்.

அவர் பதில் சொல்வதற்கு முன்னர் நானே தொடர்ந்தேன், ஆனால் ஆங்கிலத்தில் “நீங்கள் நினைப்பது போல அல்ல 'புளு பிலிம்'. அது உங்கள் கற்பனைக்கெல்லாம் மிஞ்சி இருக்கும். நீங்கள் அதைப் பார்க்க நேரிட்டால் மிகவும் அதிர்ச்சி அடைவீர்கள்"

இதை நான் சொன்ன நேரத்தில் அவருக்கு பேரன் பேத்தி எடுத்திருந்த வயது. எனக்கோ ஒரு பெண்ணை முத்தமிட்ட அனுபவம் கூட இல்லை. நாம் மதிக்கும் பெரியவர்களும் நம்மைப் போலவே காதலுணர்வு கொண்டவர்கள் என்பதனை அறிந்திருந்தாத இளம் பருவம் எனக்கு. மேலும் 'புளு பிலிம்' அனுபவங்கள், 'பாலியல் உறவு என்பது இதுதான்' என்று ஏதேதோ கற்பனை மட்டுமே செய்து வைத்திருந்த என்னை, அதிர்ச்சி அடைய வைத்திருந்ததும் உண்மை.

"ஆங்! ஆனால் அந்த மாதிரிப் படங்களெல்லாம் உங்களை மாதிரி இளைஞர்களுக்கு இல்லை. அது உங்கள் மணவாழ்க்கையைப் பாதிக்கும். அவை என்னை மாதிரி நபர்களுக்குத்தான். எங்களுக்கு வேறு எதுவும் மிச்சம் இல்லை" அவர் தனது கருத்தை ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்.

அட்ரா சக்கை. இப்படி ஒரு சப்பைக் கட்டு இருக்கா!

'எப்படியோ நம்ம ஆளுக்கு இப்படி ஒரு ஆசை. இது தெரியாமல் போச்சே! என்ன செய்வது'. ஒரு சின்ன பொறி தட்டியது.

"ஆமா! நம்ம 'ராஜாராணி' தியேட்டரிலதான் ராத்திரி படம் போடுறாங்களே. ஏறக்குறைய 'புளுபிலிம்'தான். ரொம்ப மோசமாவும் இருக்காது"

ராஜாராணி தியேட்டர் எங்கள் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் ஒரு திரையரங்கம். அதில் மாதத்தில் பாதி நாட்கள் கொஞ்சம் ரசபாசமான ஆங்கிலப் படங்கள்தான். அதுவும் ராத்திரி ஆட்டமென்றால் காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். முக்கியமாக அதன் நிர்வாகி அடிக்கடி எங்கள் அலுவலகத்துக்கு வந்து பேசிவிட்டு போவார்.

"அப்படியா! அப்படிப்பட்ட சினிமாவா போடுறான் அங்க?" ஒரு கேலிப் புன்னகை தவழக் கேட்டார்.

"பின்ன நம்ம ஊரிலேயே ராஜாராணிதான் இதுக்கு பேமஸ்" எடுத்துக் கொடுத்தேன்.

"அந்தப் பய வரட்டும் கேட்கிறேன்" உரையாடலை முடித்து வைத்தார் அத்துடன்.


***


அடுத்த வாரமே அந்த திரையரங்கு நிர்வாகி அலுவலகம் வந்தார். வந்த சிறிது நேரத்திலேயே சீனியர் ஒரு நமட்டுச் சிரிப்பு முகத்தில் தவழ ஆரம்பித்தார், "என்ன! உங்க தியேட்டரில என்னென்னமோ படமெல்லாம் போடுறீங்களாம். சொல்லிக்கிறாங்க"

வந்தவர் உடனே புரிந்து கொண்டார். ஆனாலும், "அப்படியொண்ணும் இல்லை அண்ணாச்சி. ஏதோ இங்கிலீசு படம் போடுறோம். நீங்கதான் வரவே மாட்டீங்கறீங்க"

"போடாப் போ! அங்கெல்லாம் எப்படி நானாவது, வர்ததாவது..."

"என்ன அண்ணாச்சி! அப்படி உங்களை வரச்சொல்லுவனா. அப்படியே ஒரு நா தியேட்டருக்கு வர்ற மாதிரி வந்துட்டு படத்தையும் பாத்திட்டு போய்டலாமே. ஆபீஸருந்து வீட்டுக்கு போற வழியில ஒரு எட்டு அங்கிட்டும் வந்திட்டுப் போலாமே"

இதைக் கேட்டுக் கொண்டிருந்த, எங்கள் அலுவலகத்துக்கு விடுமுறை நாட்களில் வரும் சீனியரின் நண்பரான ஒரு நீதிபதிக்கு முகமெல்லாம் மலர்ந்து போனது.

சீனியரோ முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்தார், "இல்ல. அதெல்லாம் சரிப்படாது. எவனாவது அங்க பாத்தான்னா நல்லாருக்காது"

எங்களூர் அப்படிப் பெரிய ஊரில்லை. யாரையும் அங்கு கொஞ்ச பேருக்காவது தெரியும். அதுவும் பல வருடங்கள் வக்கீலாக காலத்தை ஒட்டிய அந்த சீனியர் வழக்கறிஞரைப் பற்றி சொல்ல வேண்டாம்.

வந்தவருக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது, "என்ன அண்ணாச்சி இப்படி சொல்றீங்க. என்னைக்குன்னு சொல்லுங்க. காரை அனுப்புறன். நேரே ஆபீஸூக்குள்ள வந்துருங்க. படம் ஆரம்பிச்ச பின்ன யாரும் பாக்காம பாத்துட்டு வந்துரலாம். என்ன சொல்றீங்க"

சீனியர் ஒன்றும் சொல்லவில்லை.

"நீங்க என்ன சொல்றது. நா உங்களை கூட்டிட்டுப் போறன் நாளைக்கு"

"வே! என்ன போலாமா?" என்றார் சீனியர் நீதிபதியிடம்.

" தம்பி இவ்வளவு சொல்றாரு. போயிட்டு வருவமே"


***


அடுத்த நாள் சொல்லி வைத்த மாதிரி நீதிபதி அலுவலகம் வந்து விட்டார். வேலை முடிய காத்திருந்தோம். சரியாக பத்து மணிக்கெல்லாம் ஃபோன், "அண்ணாச்சி கார் வருது. வந்துருங்க" சீனியர் பதில் பேசுவதற்குள் அந்தப்பக்கத்தில் ஃபோன் வைக்கப்பட்டு விட்டது.

"வே! என்ன போலாமா?" மீண்டும் அதே தொனியில் கேட்டார்.

நீதிபதியிடம் இருந்து ஒரு நமட்டுச் சிரிப்புதான் பதிலாக வந்தது.

"சரி போவம். கொஞ்ச நேரம் பாப்பம். இல்லாட்டா வந்துருவம். ஏல! என்ன நீயும் வாரயா?" என்று என்னைப் பார்த்தார்.

"எனக்கொண்ணும் இல்லை. நா வீட்டுக்கு போறன்" எந்தவித உணர்வும் இல்லாமல் சொன்னேன். உண்மையில் எனக்கு பெரிய ஆர்வம் எல்லாம் இல்லை.

"இல்ல வா! ஏதாவதொண்ணுக்கு நீ வேணும்"

***


நான் முன்னான் ஏற, சீனியரும் நீதிபதியும் பின்னிருக்கையில் அமர கார் நேராக திரையரங்குக்குச் சென்றது. ஏற்கனவே டிக்கட் எல்லாம் முடிய தியேட்டரில் அவ்வளவு கூட்டமில்லை. தியேட்டர் வாசலில் ன்ற நிர்வாகி, வேகமாக எங்களை அவரது அலுவலகம் எந்தவித பரபரப்பும் இல்லாமல் அழைத்துச் சென்று விட்டார். சீனியரும் நீதிபதியும் சாதாரணமாக யாரும் கவனிக்காமலேயே உள்ளே சென்று விட்டார்கள்.

திரைப்படத்துக்கு முன்னால் உள்ள சிலைடு, விளம்பரப் படங்கள் போன்ற சாமாச்சாரங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருந்தது தெரிந்தது. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

"எல்லாம் உள்ளே போனப்புறம் போனாப் போதும்" என்றார் சீனியர்

"படத்துல முதல்ல ஒண்ணும் இல்ல. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு லைட்டெல்லாம் அணச்சப்றம் அமைதியா உள்ள போய் உக்காந்துக்கங்க. யாருக்கும் தெரியாது" என்றார் நிர்வாகி.

"வாங்க. நேரா பாக்ஸுக்கு போயிரலாம்" பத்து நிமிடம் கழித்து நிர்வாகி எழுந்தார்

'பாக்ஸ்' என்பது எங்களூர் தியேட்டர்களில் புரெஜக்டர் அறைக்கு இரண்டு பக்கமும் அரங்குக்கு மேலாக கண்ணாடியெல்லாம் வைத்து குளிர் சாதன வசதி செய்திருப்பார்கள். ஒரு 'பாக்ஸில்' அதிகமாக பத்து முதல் இருபது நாற்காலிகள் இருக்கும்.

உள்ளே நல்ல இருட்டு. திரையிலும் ஏதோ இருட்டுக் காட்சியாதலால் கொஞ்சமும் வெளிச்சம் இல்லை. 'டார்ச்' அடித்து கடைசி இருக்கையில் அமரச் சொல்லி விட்டு, 'இருங்க வந்துர்றன்' என்று நிர்வாகி போய்விட்டார்.

அந்த வரிசை கடைசியில் சிலர் அமர்ந்திருக்க காலியாக இருந்த இருக்கையில் முதலில் நீதிபதி அமர, அடுத்து சீனியர் பின்னர் நான் என்று தட்டுத்தடுமாறி அமர்ந்து கொண்டோ ம். எனக்கு அடுத்து இந்தப்பக்கம் இரண்டு பேர். இருட்டில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.


முதலில் திரையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. யாராரோ வந்தார்கள். யாராரோ போனார்கள். பெரும்பாலும் இருட்டிலேயே நகர்ந்து கொண்டிருந்தது. நாங்களும் யாரும் எங்களுக்குள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

கொஞ்ச நேரம் கழிந்தது. இன்னும் திரையில் இருட்டுத்தான். சத்தமும் அதிகம் இல்லை. அங்கிருந்த யாரும் வசனத்திற்காக கவலைப்படுகிறவர்களும் இல்லை. திடீரென 'பாக்ஸில்' இருட்டின் அமைதியைக் தெளிவாக கிழித்து ஒரு வயோதிகக் குரல்,

"அய்யா! வக்கீல் தொரராசும் அவரோட சூனியரும் எங்கய்யா இருக்கீக"

"யாரடா அவன்?" என்று சீனியர் என்னிடம் உறும நான் திரும்பினால் இருக்கையோர நடைபாதையில் ஒரு கிழவர் வட்ட வட்டமாக கம்பிகளாலான ஒரு தூக்கில் காப்பி டம்பளர்களுடன் தடுமாறிக் கொண்டு இருந்தார்.

"இங்க வாய்யா" சீறிய என்னருகே வந்தபடியே, "அய்யா காப்பி கொடுத்தனுப்பியிருக்காக"

"சரி சரி. கொடு" வேகமாக டம்பளர்களை எடுத்து சீனியரிடமும் நீதிபதியிடமும் கொடுத்தேன்.

"இதுக்கு அந்த .........மகன் நான் வந்துருக்கேன்னு சிலைடு போட்டிருக்கலாம்" சீனியர் என்னிடம் முணுமுணுத்தார்.

இடைவேளைக்கு முன்னரே கிளம்பி விட்டோம். படம் பிடிக்கவில்லை.

யாராவது கட்சிக்காரர் வந்து, "சார் இந்தாங்க டீ" என்று நீட்டிவிடுவானோ என்ற பயத்தினாலும் இருந்திருக்கலாம்.

மும்பை
2004


புகழ் தரும் புனிதம்-I

7 comments:

சிறில் அலெக்ஸ் said...

தைரியமா இப்டி போடுறீங்களே. நல்லாயிருக்குது. வாழ்த்துக்கள்.

- யெஸ்.பாலபாரதி said...

பலூன் மாமா... ஓடிவந்து இதப்படிங்க..!

ஸ்ஸ்ஸ் அப்பாடா.. இப்பத்தான் மூச்சு வந்தது. :)))

மணியன் said...

இயல்பான நடையில் மெல்லிய நகைப்புடன் அருமையாக நினைவுகளை மீண்டிருக்கிறீர்கள்.
நான் அரசு அதிகாரியாக இருந்த காலகட்டங்களில் நீங்கள் குறிப்பிட்ட சங்கடங்களை அனுபவித்தவன் என்ற முறையில் மிகவும் இரசித்தேன் :)

Sridhar V said...

///பலூன் மாமா... ஓடிவந்து இதப்படிங்க..!
//

அய்ய... நீங்க பாத்ததா பதிவு போட்டது வேற... கல்வெட்டு சொன்னமாதிரி அது கொஞ்சம் சட்ட சிக்கலான சமாச்சாரம்தான்.

இது வெறும் 'பிட்' சமாச்சாரம். மிஞ்சிப் போனா அந்த ஆப்பரேட்டர 'உள்ள' வச்சிட்டு ஜாமீன்ல விட்டுடுவங்க. சில சமயம் தியேட்டருக்கு சீல் வப்பாங்க. அவ்வளவுதான்.

ஓ... இது வக்கீல் பதிவோ... இங்ங்ன வந்து நான் என் மேதாவிலாசத்த என்னன்னு காட்ட :-)

சினேகிதி said...

ஆஹா....புகழால இப்பிடியெல்லாம் சங்கடம் இருக்கா :-)

murali said...

பிரபு அண்ணா,
மிகவும் ரசித்துப் படித்தேன். தேனீர் நுழைந்த நேரத்தில்
வாய்விட்டு சிரித்தேன்.நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Unknown said...

தல பாலா எதுக்கு நம்மள கூப்பிட்டாருன்னு தெரியல ...

**

பிட் படங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம்.வீட்டுல அக்கா மற்றும் மச்சான் அனைவருக்கும் சொல்லிட்டு பிட்டு படம் பாத்துட்டு வந்தோம் நானும் என் நண்பனும். அது ஒரு பெரிய கொடுமை :-((

ஆம்பூரில் இருக்கும் நண்பனின் அக்கா குடும்பத்தினரைப் பார்க்க நாங்கள் சென்று இருந்தோம்.கல்லூரியில் விடுமுறையாதலால் ஊருக்கு போகும் வழியில் அப்படியே இவர்களையும் பார்த்துவிட்டு செல்வதாக திட்டம். அப்போது தலைவரின் "அண்ணாமலை" படம் அந்த ஊரில் உள்ள ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டு இருந்தது. அக்காவிடம் விசாரித்ததில் அவர்கள் அந்தப்படம் 4 காட்சிகளாக ஓடுவதாகச் சொன்னார். அப்போது மணி 10 தான் ஆகியிருந்தது.சரி 11:00 மணி (காலை) காட்சி பார்த்துவிட்டால் நல்லது என்று நானும் என் நண்பனும் திரையரங்கை நோக்கி நடையைக் கட்டினோம். வழியில் எதிர்ப்பட்ட அக்காவின் கணவர் (மச்சான்) எங்களைப் பார்த்தவுடன் அவரின் இரு சக்கர வாகனத்தி நிறுத்திவிட்டு எங்களை எடுத்துப் போகச் சொன்னார். அதெல்லாம் வேண்டாம் என்று நாங்கள் நடந்தே சென்றோம்.

திரையரங்கில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அதுவும் திரையரங்க வளாகத்தில் மருந்துக்குகூட பெண்கள் இல்லை.என்னடா தலைவன் படத்துக்கு வந்த சோதனை என்றவாறே கவுண்டரில் டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

படம் போட ஆரம்பித்தவுடன் புரிந்து விட்டது தவறான காட்சிக்கு வந்து விட்டோம் என்று. :-)) சம்பந்தமில்லாமல் படங்களும் சீன்களும் பிட்டுகளும் வந்து போய்க் கொண்டு இருந்தது. படம் முடிந்தவுடன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டே திரையரங்கை விட்டு வெளியில் வந்தால் ஒரே மக்கள் கூட்டம். ஆண்,பெண் ,குழந்தைகள் என்று அடுத்த 3 மணிக்காட்சியாக "அண்ணாமலை"யைப் பார்க்க அவ்வளவு கூட்டம்.
தெரிந்தவர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று வேக வேகமாக வெளியில் வந்துவிட்டோம்.

விசாரித்ததில் தெரிந்தது...

அண்ணாமலை வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு மட்டுமே 4 காட்சிகளாம். நாங்கள் போனது புதன் கிழமை.சில குறிப்பிட்ட தினங்கள் மட்டும் அந்த திரையரங்கில் பொதுவான அறிவிப்பு இல்லாமல் (போஸ்டர் வகையறா) இப்படி பிட் படங்கள் போடப்படுமாம். அது ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசிய சமாச்சாரம்.
**
சரி அண்ணாமலை எப்படிப் பார்ப்பது? மறுபடியும் அக்காவிடம் என்ன சொல்வது போன்ற குழப்பங்கள்...

வீட்டிற்கு உடனே செல்லாமல் அப்படியே அடுத்த காட்சியான "அண்ணாமலை" க்கு டிக்கெட் வாங்கி மறுபடியும் திரையரங்கில் நுழைந்துவிட்டோம்.

எங்களின் அண்ணாமலை அனுபவம் இப்படி பிட் படத்துடன் நடந்தேறியது.

வீட்டிற்கு வந்து அக்காவிடம், 11 மணிக்காட்சி இன்று இல்லை எனவே பொறுத்து இருந்து 3 மணிக்காட்சி பார்த்து வந்தோம் என்று சொல்லி சமாளித்தோம்.

சரி இந்த விசயம் எப்படி பாலாவுக்கு தெரிந்தது ? :-))

**
பிரபு,
நகைச்சுகலந்த நடையில் நல்ல பதிவு!