31.10.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 3


நீதிபதிகள், தங்கள் முன் வைக்கப்படும் வழக்குரைஞர்களின் வாதங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே வழக்குகளை, முக்கியமாக பொது நலன் சார்ந்த வழக்குகளை தீர்ப்பது இல்லை என்பது, ஏதாவதொரு பிரச்னையில் பல்வேறு காலகட்டங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகளை உன்னிப்பாக கவனித்தால் புரியும். உதாரணமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்னையில் 1972, 1996, 2002 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளை ஆராய்ந்தால் எப்படி கால ஓட்டத்திற்கு ஏற்ப நீதிபதிகளும் தங்களது கருத்துகளை வடிவமைத்துக் கொள்கின்றனர் என்பதை உணரலாம். (அர்ச்சகர் பிரச்னையின் பயணம் என்ற தலைப்பில் இந்த மூன்று தீர்ப்புகளை பற்றி எழுதியுள்ளேன்) கவனிக்க வேண்டியது இந்த மூன்று தீர்ப்புகளுக்கும் அடிப்படையான அரசியலமைப்பு சட்டபிரிவுகளில் ஏதும் மாற்றமில்லை. மாறியது நீதிபதிகளின் மனப்போக்கு, அதாவது பொது மக்களின் மனப்போக்கு!

எனவே, இட ஒதுக்கீடு பிரச்னையிலும் நீதிபதிகள் நீதிமன்றத்தில் வைக்கப்படும் வாதங்களையும் தாண்டி தாங்களறியாமலேயே, பொதுக்கருத்துகளாலும் தங்களை வசப்படுத்திக் கொள்வது எதிர்பார்த்ததுதான். நீதிபதி திரு.ரத்னவேல் பாண்டியன் அவர்கள் மண்டல் கமிஷன் வழக்கு என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற வழக்கில் (Indra Sawhney Vs Union of India AIR 1993 SC 477) ‘இட ஒதுக்கீடு 100% அளவிற்கு இருக்க இயலாது எனினும் அதிகபட்சம் 50%தான் என்ற கட்டுப்பாடும் விதிக்க இயலாது என்றும் ‘க்ரீமி லேயர்’ என்ற பெயரில் நீதிமன்றம் சமூக கொள்கை முடிவில் தலையிடுதல் கூடாது என்றும்’ தனியே தீர்ப்பு எழுதியதற்கு அவர், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகிய தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணமாயிருக்குமா என்று ஒரு கேள்வியினை எழுப்பினால், இல்லை என்று ஆணித்தரமாக மறுப்பது கடினமான காரியம்.

அதே வழக்கில் இட ஒதுக்கீட்டில் அதிகபட்சம் 50%தான் என்று உச்ச நீதிமன்றம் வரையறுத்ததை அதற்கான வாத பிரதிவாதங்களுக்குட்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது என்று கூற முடியுமென்றாலும், கிரீமி லேயரைப் பற்றி அவ்வாறு கூற முடியாதென்பது எனது எண்ணம். எனெனில் அரசியலமைப்புச் சட்டத்திலுமின்றி, அதனை வடிவமைத்தவர்களின் விவாதத்திலும் அப்படி ஒரு பதமே இடம் பெறவில்லை. அப்படியிருப்பினும் அந்த வழக்கில் தேவையற்ற ஒரு கேள்வியினை உச்ச நீதிமன்றம் எழுப்பி தீர்வு காண முயன்றது, கிரீமி லேயர் குறித்து பொதுவில் விவாதிக்கப்பட்டு வந்ததன் தாக்கம்தான் அன்றி வேறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

மண்டல் கமிஷன் வழக்கானது விபிசிங் தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் 27% பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று 13.08.90 தேதியிட்ட குறிப்பாணையினை (Office Memorandum) எதிர்த்து தொடரப்பட்ட வழக்காகும். நரசிம்ஹராவ் தலைமையிலான அரசு 25.09.91 தேதியிட்ட பிறிதொரு குறிப்பாணை மூலம் இரு மாறுதல்களை விபி சிங் அரசு ஆணையில் கொண்ர்ந்தது. முதலாவது திருத்தம், ‘27% ஒதுக்கீட்டில் பிற்ப்படுத்தப்பட்டவர்களிலும் ‘poorer section’களுக்கு முன்னுரிமை (preference) அளிக்கப்படும். தகுந்த நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலியிடங்கள் மற்ற பிற்ப்படுத்தப்பட்டவர்களால் நிரப்பப்படும்’ என்பது. இரண்டாவது, ‘மற்ற ஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்பதாகும். வழக்கானது இக்குறிப்பாணைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடானது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பாவிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை உரிமையினை பாதிக்கிறது எனற வாதத்தினை முன் வைத்து. ஆக, நீதிமன்றத்தின் முன் தாங்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டவர்கள் எந்த ஒரு இட ஒதுக்கீட்டில் இடமே பெறாதவர்கள். அவர்களது வாதம் இட ஒதுக்கீடு யார் யாருக்கு என்பதை விட இட ஒதுக்கீடே தவறு என்பதுதான்.

வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று கூறி நரசிம்ஹராவ் அரசு கொணர்ந்த 10% இடஒதுக்கிட்டீனை செல்லாது என்று கூறியது. அடுத்த மாறுதலான பிற்ப்படுத்தப்பட்டவர்களிடையே poorer section என்பதை பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஏழைகள் என்று அர்த்தம் கொள்ளமுடியாது என்று கூறி சமூக ரீதியில் மேலும் பின் தங்கிய வகுப்பினர் என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும் என்றும் கூறியது. அதாவது பிற்ப்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர் என்று பிரிக்கிறோமே, அதனை. மேலும் முன்னுரிமை (preference) என்ற பதத்தினையும் அப்படியே அர்த்தம் கொள்ள முடியாது என்று கூறியது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் அனைத்து ஒதுக்கீடும் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு போய் பிற பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏதும் கிடைக்காது. எனவே இரு வகுப்பினருக்கும் எந்த விகிதத்தில் பகிர்ந்தளிப்பது என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்த்தது. நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த திருத்தத்தின் அர்த்தம் படிப்பவர்களுக்கு தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தாலும் ‘poorer section’ மற்றும் ‘preference’ ஆகிய வார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் அவ்வாறாக புதிய அர்த்தத்தினை அளிக்கவில்லையெனில் அந்த திருத்தத்தினையும் செல்லாது என்று தள்ளுபடி செய்ய வேண்டியிருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை.

***
to be continued...

29.10.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 2

பொதுக்கருத்து தங்களது தீர்ப்பினை வழிநடத்தி விடக்கூடாது என்பதற்கு சில நீதிபதிகள் செய்தித்தாள்களை படிப்பதை கூட நீதிபதிகளாக இருந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்தனராம். சமுதாய நிகழ்வுகள் மீது தன்னுடைய தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு ஒரு முற்றும் துறந்த முனிவரின் (heretic) மனநிலையில் வாழ்ந்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால், உலகம் சுருங்கி வரும் விஞ்ஞான யுகத்தில் இவ்வாறான வாழ்க்கை சாத்தியமல்ல. எனவே நீதிபதிகள் முற்றிலும் சார்பற்ற நிலை கொண்டவர்களாக இருத்தல் என்பது இயலாத ஒன்று. இயற்பியல் விதிகளின் படியே முழுமையான ஒரு நிலை (absolute state) என்பது சாத்தியமல்லாதிருக்கும் பொழுது, ஒர் கட்டுக்குள் அடக்க முடியாத (unpredictable) மனித மனங்களை ஆராயும் நீதி பரிபாலனம் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும் என்றில்லாமல் அதன் பயணம் அவ்வாறான நிலையினை நோக்கியதாக இருத்தல் வேண்டும் என்ற அளவோடு நமது எதிர்பார்ப்புகள் திருப்தியுற வேண்டும்.

ஆனால் அந்த பயணத்தை வழிநடத்துவதற்கு பொதுக்கருத்துகள் பயன்படுகையில், பொதுக்கருத்தின் பல்வேறு வகையான வெளிப்பாடுகள் தேவையான ஒன்றுதான். நீதிமன்றங்கள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வழக்குகளில் தீர்ப்பு கூறுகின்றன. மிக அரிதான தீர்ப்புகளைத் தவிர மற்றவை இவ்வாறு விவாதத்திற்கு உள்ளாவதில்லை. ஏன், ஜெயலலிதா டான்ஸி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பொழுது கூட நீதிபதிகள் எதேச்சையாக அறிவுறுத்திய ஒரு வரியினைத் தவிர தீர்ப்பினை அனைவரும் அறுத்து கூறு போட முயலவில்லை. அந்த தீர்ப்பினைக் குறித்து எழுதலாம் என்று அதனை முழுவதும் படித்த நான், சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளிக்கும் குற்றவியல் முறைகளின்படி (criminal jurisprudence) முறையான தீர்ப்புதான் என உணர்ந்தேன். ஊடகங்களால் மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட அந்த ‘மனச்சாட்சி’ கருத்து கூட நிலத்தினை வாங்கியதில் உள்ள வரம்பு மீறலை கருத்தில் கொண்டு நிலைத்தினை திருப்பிக் கொடுப்பதினைப் பற்றியதே தவிர குற்றம் என்பதனை பொறுத்ததல்ல. நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் தங்கள் முன் வைக்கப்படும் பொருட்களையும் தாண்டி வெளியில் நடப்பதையும் நீதிபதிகள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ கவனத்தில் கொள்கையில் விவாதங்களும் ஆர்ப்பாட்டங்களும் அவசியமான ஒன்றுதான்.

உதாரணமாக, டெல்லியில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நாளிதழ் செய்தியினை ஒரு பொது நல வழக்கின் மனுவாக ஏற்றுக் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை (summons) அனுப்புகிறது. புதிதாக உருவாகியுள்ள சட்டவியலில் இது முறையான ஒன்றுதான். ஏனெனில் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் மறுக்கப்படுவது அவர்கள் ‘வாழ்வதற்கான உரிமை’ (right to life) என்ற அடிப்படை உரிமையினை மீறியதாகும் என்று நீதிமன்றங்கள் கருதுகின்றன. பின்னர் அரசு எந்த எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகையில், அரசுப் பணியினை (executive functions) நீதிமன்றம் மறைமுகமாக கையிலெடுக்கிறது. அவ்வாறான நிலையில் அந்த தீர்ப்பின் மீதான விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எழுவதை தேவையில்லை என்று கூற முடியுமா?

ஏனெனில் அரசியல்வாதிகளைப் போலன்றி பிரச்னையின் அனைத்து பரிமாணங்களையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ளுதல் இயலாது. ஒருவேளை பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது நோய் பரவ காரணம் என்று கூறப்பட்டு, பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். டெல்லியிலுள்ள குடிசைவாசிகள், கழிப்பிடமே இல்லாத பொழுது நாங்கள் எங்கே செல்லுவோம் என்று ஆர்ப்பாட்டம்தான் நடத்த இயலும். செய்தித்தாளின் செய்தியினைப் போல ஆர்ப்பாட்டமும் நீதிமன்றத்திற்கு ஒரு செய்திதான்.

மீண்டும் கூறுவதனானால், அப்சல் வழக்கில் கூட அவர் குற்றம் செய்யாதவர் என்று தீர்ப்பெழுத வேண்டும் என்று கூறுவது சரியானதாயிருக்காது. யார் யாரோ நகர்த்திய காய்களில், வேறு வழியின்றி பங்கு கொண்ட பகடைக்காயாக அவர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதன் காரணமாக மரண தண்டனை அளித்திருக்க வேண்டுமா என்பது ஒரு விவாதம். தீர்ப்பில் மரண தண்டனைக்கான காரணங்களை நீதிபதிகள் அடுக்கியதில் பொதுக்கருத்தினை கருத்தில் கொண்டதில் இவ்வகையான விவாதம் எழுவது இயல்பே! அடுத்த விவாதம் மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது குறித்து. இதற்கு பதில் கூற வேண்டியது அரசாங்கமே தவிர நீதிமன்றங்கள் இல்லை.

***
to be continued...

28.10.06

அப்சலும், க்ரீமி லேயரும்...1

உச்ச நீதிமன்றத்திற்கு இது போறாத காலம் போல... பின்னர் இப்படியா, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து அதன் மூன்று தீர்ப்புகள் நாடு தழுவிய அளவில் விவாதத்தினை ஏற்ப்படுத்தும்? சமீப காலங்களில் நீதிமன்ற தீர்ப்பானது இவ்விதம் மக்களிடையே விவாதத்திற்குள்ளாவது பெருகி வருகிறது. மக்களுக்கு நீதி மன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையினை குலைக்கும் வண்ணம் மோசமான விளைவுகளுக்கு இவ்விதமான விவாதங்கள் இட்டுச் செல்லலாம் என்று கூறப்பட்டாலும், இது ஒரு நல்ல சமிக்கையே என நான் கருதுகிறேன்.

‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற மிரட்டல் ஒரு காகிதப்புலியே என்பதை புரிந்து கொண்ட நீதிபதிகளும் கண்டிப்பினை தளர்த்தி தங்களது ‘அகன்ற தோள்களுக்குள் எவ்வித விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கும் இடம் உண்டு’ என்று இறங்கி வந்துள்ளனர். இதுவும் நீதித்துறைக்கு ஒரு நல்ல வளர்ச்சியே!

எனவே நீதிமன்ற தீர்ப்பினை குறித்து அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், விமர்சனங்களை வைப்பது நீதி பரிபாலன முறையின் முன்னேற்றத்திற்குதான் வழிகோலுமே தவிர வீழ்ச்சிக்கல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் பல குறைபாடுகளை மீறியும், மக்களுக்கு நமது நாட்டில் நம்பிக்கையளிக்கும் வெகு சில அரசு துறைகளில் நீதித்துறையும் ஒன்று. மோசடித்தனமான பழிகூறுதல்கள் (malafide or frivolous allegations) கேட்பவர்களாலேயே நிராகரிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.

உதாரணமாக அப்சல் வழக்கினை எடுத்துக் கொண்டால், அப்சலை குற்றவாளி என்றது தவறு என்ற விமர்சனம் ஏதும் வைக்கப்படவில்லை. அவ்வாறான விமர்சனங்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்களுக்கே இயலும். அவற்றின் பலன் ஒரு சட்ட மாணவருக்காகத்தானேயொழிய (academic interest) வேறில்லை. விவாதங்கள் அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்தே!

இங்கு நாம் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நீதிபதி தனிப்பட்ட வகையில் மரண தண்டனையினை எதிர்ப்பவராக இருக்கலாம். ஆனால், சட்டம் மரண தண்டனை அளிக்கக் கூறும் ஒரு வழக்கில் அவர் மரண தண்டனையினை அளித்தலே சரியான தீர்ப்பாக இருக்க முடியும். மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது பாராளுமன்றத்தின் பணி. அவற்றில் நீதிபதி தனது சொந்தக் கருத்தினை நுழைத்தல், நீதித்துறையின் சமநிலையினை (consistency) பாதிக்கும் என்பது எனது தாழ்மையான எண்ணப்பாடு.

சொந்தக் கருத்து என்பது பொதுக்கருத்தினை உள்வாங்கி உருவாக்கப்படும் உணர்வு! பொதுக்கருத்து (Public Opinion) என்பதனை மக்களாட்சியின் ஒரு தூணாகவே அரசியல் வல்லுஞர்கள் கருதுகிறார்கள். பொதுவாக பொதுக்கருத்து என்பது பத்திரிக்கைகளில் ‘ஆசிரியருக்கு கடிதம்’ கூறப்படும் கருத்துகளின் தொகுப்பு என்பதாகவே ஒரு தோற்றம் எடுத்து வைக்கப்படுகிறது. அதாவது படித்த நடுத்தர வர்க்க மக்களின் பொதுவான எண்ணப்பாடு. ஆனால் இதையும் கடந்து மக்கள் சமுத்திரத்தின் ஆழத்தில் யாரும் அறியாமலேயே பொதுவான கருத்து பல சமயங்களில் உருப்பெறுகிறது. இது வெளித்தெரிவதில்லை. ஆனால் பல அரசாங்கள் வீழ்ந்ததற்கும், எழுந்ததற்கும் இவ்வகையான பொதுக்கருத்துகளே காரணமாக இருந்துள்ளன. அவசரநிலைக்குப் பிறகு இந்திரா காந்தி தோற்றதற்கும், எண்பதில் எம்ஜிஆர் ஜெயித்ததற்கும், இந்தியா ஒளிர்ந்ததற்கு பிறகும் வாஜ்பாய் வீட்டுக்கு போனதற்கும் வெளித்தெரியா பொதுக்கருத்தே காரணம்.

ஆக, ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் கருத்துகளையும் மீறி யாரும் உணராமலேயே சமுதாயத்தின் ஆழத்தில் உருப்பெரும் கருத்தும் இருக்கலாம். நீதிபதிகள் ‘படித்த நடுத்தர வர்க்கத்தை’ (educated middle class) சேர்ந்தவர்கள். எனவே ‘நடுத்தர வர்க்கத்து கருத்தோடு’ இசைவான அவர்களும் கொண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இவ்வாறான நிலையில் தங்களது சொந்தக் கருத்தினை பொதுக்கருத்து என்று அவர்கள் நம்புவதே தவறான ஒரு முடிவு. அதனை அடிப்படையாக வைத்து வழக்கினை தீர்க்க நினைத்தால், அது சரியான நீதிபரிபாலன முறையாக இருக்காது.

அப்சல் வழக்கில், ‘அப்சலுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குவது மூலமே சமுதாயத்தின் ஒருங்கிணைந்த மனவோட்டத்தினை திருப்திப்படுத்த இயலும்’ என்று நீதிபதிகள் கூறியது தீர்ப்பினை விமர்சிக்க விரும்பும் எவரும் அடிக்கக்கூடிய ‘weak link’. தீர்ப்பானது சட்ட வினாக்களுக்கு உட்பட்டு அமைந்திர்ந்தால், அதில் தவறிருந்தாலும் சட்ட புத்தகங்களில் மட்டுமே விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்திருக்கும். அப்சலுக்கு மரணதண்டனை கூடாது என்ற ஆர்ப்பாட்டங்களும் அரசினை நோக்கிய குரலாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் மரண தண்டனையின தளர்த்துவது அரசுக்கு இயலக்கூடிய காரியம். ஆனால், நீதிபதிகள் பொதுக்கருத்தினை தங்களது தீர்ப்புக்கு துணையாக அழைத்துள்ளதால், சட்ட வல்லுஞர்களையும் தாண்டி பொது மக்களும் தங்களது விமர்சனத்தினை எடுத்து வைக்க முன் வருவது இயற்கையே!

அறிக்கை, ஆர்ப்பாட்டம், கண்டனம், பொதுக்கூட்டம் போன்றவை பொதுக்கருத்தினை உருவாக்கும் கருவிகள். பல்வேறு வகையான பொதுக்கருத்தினை உருவாக்க இயலும் பல்வேறு மக்கள் குழுக்களைப் போலவே, மரண தண்டனை எதிர்ப்பு என்ற பொதுக்கருத்தும் உருவாக்கப்பட இவ்வகையான சாதனங்கள் கூடாது என்று கூறுதல் இயலாது.

இந்திய மக்கள் தொகை 100 கோடி! இதில் எத்தனை நபர்களுடைய எண்ணப்பாட்டினை நீதிபதிகள் தங்களது ‘collective conscience’ கருத்திற்கு கணக்கில் எடுத்துக் கொண்டனர்? அல்லது மக்களுடைய ஒருங்கிணைந்த கருத்து அப்சலுக்கு மரணதண்டனை அளிக்க விரும்புகிறது என்பதற்கு நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியம் என்ன? நீதிமன்றத்திற்கு வெளியில் நடப்பதை தங்கள் கருத்தில் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள முயலுகையில், வெவ்வேறு எண்ணம் கொண்ட மக்கள் குழுக்கள் தங்களது கருத்தினை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று ஆர்ப்பாட்டம். அவ்வளவே!

***

to be continued...

27.10.06

விண்டோஸும் நானும்...

"விண்டோஸ்" என்றால் என்ன? அது மற்ற மென்பொருட்களினும் எப்படி வேறுபடுகிறது என்று தாங்கள் உணர்ந்த அனுபவத்தைக் விவரிக்கவும்?" இப்படி ஒரு கேள்வியை கேட்டது க்ருபா ஷங்கர், சில வருடங்களுக்கு முன்னர் மரத்தடி குழுமத்தில். அதற்கு என்னுடைய பதில்...

'விண்டோஸை மறைக்கப் போடப்படும் ஸ்கிரீன்தான் மென்பொருள். விண்டோஸ் கடினப்பொருளாக இருக்க வேண்டும்' என்று எழுதும் அளவிற்கு நான் அறிவிலி இல்லையெனினும் எனது கம்பியூட்டர் அனுபவங்களை கேட்டால் அதற்கு கிட்டத்தில் வருவேன் போல. மூன்று வருடங்களுக்கு முன்னர் கணணி ஒரு கனவாகவே இருந்து..பின்னர் ஏதோ விளையாட்டுக் கருவி என்று வாங்கியது. அதற்கு முன்னர் வலையத்தைப் பற்றிய யூகங்கள் எல்லாமே பெரிய கதையாக எழுதலாம். எனினும், கணணியை வாங்கப் போன இடத்தில் நான் முழிப்பதை வைத்தே அந்தப் பெண், 'உங்களுக்கு இது தெரியும்தானே இதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது தெரியும்தானே' என்று பல முறை கேட்டார்கள். அவர்களிடம், விண்டோஸ் மென்பொருளோடு தரப்படும் விளக்கப் புத்தகத்தை காண்பித்தவாறு, 'நான் இதை முழுவதும் படிக்கும் வரை இதை தொடப்போவதில்லை. ஒவ்வொன்றாக படித்தே இயக்குவேன்' என்று சவால் விட்டேன். (பல நாட்கள் கழித்துதான் தெரிந்தது, மும்பையிலேயே 3500 ரூபாய்க்கு ஒரிஜினல் விண்டோஸ்98 வாங்கிய முட்டாள் நான் மட்டும்தான் என்பது). அவள் கேட்டதில் தவறில்லை. ஏனெனில், 'என்ன சாப்ட் வேர் லோட் பண்ண வேண்டும்' என்று கேட்ட பொழுது என்ன சொல்வது என்று குழம்பி, வெட்கம் பார்க்காமல், கம்பியூட்டர் விற்கும் போது என்னென்ன செய்வீங்களோ அதெல்லாம் செய்யுங்க' என்றேன். ஆனை வாங்கியவன் அங்குசம் வாங்க யோசிப்பது போல விற்பனையாளரிடமே லஜ்ஜையின்றி, 'ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கேன். ஏதாவது சிடி இருக்கா?' என்றேன். அவரும் மிகவும் பெருந்தன்மையாக, 'இந்தாங்க ஒரு கலைக்களஞ்சியம்' வச்சுருக்கேன்' என்றார். மிகவும் சந்தோஷமாகி விட்டது.

கணணி வீட்டுக்கு வந்ததும் எல்லாம் மாறிவிட்டது. பொறியாளர்கள் ஒவ்வொன்றாக லோடு செய்யும் போது கலர் கலராக படங்கள் தோன்றுவதும்...இசை வருவதும் நான், மனைவி, மகள் பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களை எவ்வளவு சீக்கிரம் துரத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துரத்தியாகி விட்டது.

ஆசையாய் அந்த கலைக்களஞ்சியத்தை பிரித்து உள்ளே அனுப்பினால்...ஒன்றும் வரவில்லை. எங்கெங்கோ உள்ள ஐகான்களை அமுக்கி, பலனில்லை. எப்படியோ மை கம்பியூட்டரில் திறந்து அங்குள்ள சிடி படத்தை அமுக்கி...சிடியில் உள்ள போலடரையெல்லாம் ஒவ்வொன்றாக திறந்து பார்க்கிறேன். மூச்சுக் காற்று என் முதுகில் புஸ் புஸ் என எனது மனைவியும் மகளும் பின்னே... ஒவ்வொரு பைலாக திறக்க ஏதோ சில செய்திகள்...சில மேப்கள் அதுவும் பகுதி பகுதியாக. சுமார் ஒரு மணி நேரம் அதிலேயே கழிந்தது. அவ்வளவுதானா என்றிருந்தது.... 'சரி, இது ·பிரீ சிடியில்லையா? இவ்வளவுதான் இருக்கும்' என்று ஒரு சமாதானத்தோடு அன்று கழிந்தது. எனது பதில் மீது எனது மனைவிக்கும் நம்பிக்கை இல்லை. எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ளாத ஒரு மெளனம் நிலவியது. பல நாட்கள் என் மனைவி அருகில் இல்லாத போது நான் அந்த சிடியை உள்ளே போட்டு முயற்சி செய்வதும் அவர்கள் அருகே வந்தவுடன் வேறு எதையோ நோண்டுவதுமாக கழிந்தது. இப்படியாக இருக்கும் போதுதான் ஒரு முறை என் நண்பன், 'அட அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்' என்றான். இந்த ஒரு வார்த்தை போதாதா...ஏதோ இன்ஸ்டால்...அதன் பின்னர் ஒரு நாள் எப்படியோ ஏதையோ பிடித்து அமுக்கினால்...இன்ஸ்ட்ரகஷன் தானாக வர வர...ஆஹா! என்ன ஒரு அருமையான என்சைக்ளோபீடியா! படங்கள் என்ன? வீடியோக்கள் என்ன? ஆனால் அன்றும் மனைவி என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நாந்தான் அசடு போல வழிந்தேன். பின்னர்தான் ஆட்டோரன் எல்லாம் நான் அறிந்தது. பின்னர் அறிந்த மற்றொன்று, அந்த சிடி டிவி சாரி மானிட்டரோடு கொடுக்கப்பட்ட இலவச சிடி என்று!

அடுத்து ஒரு நாள் விண்டோஸ் வரவில்லை. விற்பனையாளரைப் பிடித்து டோஸ் மேல் டோஸாக விட்டுக் கொண்டிருந்தேன். அவர் வருகிறேன் வருகிறேன் என்றார். இரண்டு நாள் ஆயிற்று. இதற்குள் பலமுறை ஸ்டார்ட் செய்திருப்பேன். மற்ற விஷயமென்றால் கோபத்தில் உதைத்திருப்பேன். 50000 ரூபாயாயிற்றே! எரிச்சலில் பிளாப்பி டிரைவில் இருந்த பிளாப்பியை தூக்கி கடாசினேன். ஒரு தட்டு ....அட...இதோ விண்டோஸ்! இரண்டாவது பாடம்.

பின்னர் விண்டோஸ் என்னைப் படுத்தியதை விட அதை நான் போட்டு படுத்தியதுதான் அதிகம். முதலில் எனது பெயரில் ஒரு போல்டர்....அந்த போல்டரை திறந்தவுடன் எனது பெயரை பெரிதாக பார்த்தவுடன் என்ன ஒரு மகிழ்ச்சி...அட நம்ம பெயரெல்லாம், திரையில் வருகிறதே என்று. சினிமாத் திரையில் டைரக்ஷன் என்று என் பெயர் வந்த மாதிரி ஒரு மகிழ்ச்சி! அடுத்த ஒரு வருடத்தில் எனது கணணியில் பைல்கள் மற்றும் போல்டர்கள் பெயர் மாற்ற்ம்...இட மாற்றாம் செய்தது போல வேறு யாருடைய கணணியிலும் செய்திருக்க முடியாது. போதாதற்கு நான்கு பார்ட்டிஷன்கள் வேறு. இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே என்று...பாவம் இந்த விண்டோஸ். இப்போது எனது டெஸ்க் டாப்பில் புதிய பெயர்களில் சீராக நான் போல்டர்களையும் ஷார்ட் கட்களையும் அடுக்கியிருப்பது போல யாருடைய கணணியிடமும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.

மைக்ரோசாப்ட் வோர்ட் எல்லாம் விண்டோஸ்தான் என்று வெகு நாட்களாக நினைத்து வந்தேன். அது என்ன? சன் டிவிதான் கேபிள் டிவின்னு பலர் இங்க நினைப்பது மாதிரி விண்டோஸ்தான் கம்பியூட்டர்னும் நினைத்து வந்தேன். குழுமத்தில் மற்றவர்களின் உரையாடலைக் கவனித்ததால், என்னையறியாமலேயே நான் கற்ற பாடம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சாப்ட் வேர்...அதாவது அதனால் நேரடி பயனில்லை. பிற உபயோகமான மென்பொருட்கள் இயங்க அது ஒரு தளமாக இருக்கிறது. அதாவது வணிகப் பாடத்தில் மத்திய வங்கி (நம்ம ரிசர்வ் வங்கி) போலவும் சட்டப்பாடத்தில் அரசியலமைப்புச் சட்டம் போலவும்...சரிதானே

ஆனாலும் நேற்று சாலையில் நடக்கையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இது....சரி மற்ற மென்பொருட்களை ஏற்றுவதற்கு விண்டோஸ் உதவி செய்கிறது. அப்படியாயின் முதன்முதலில் விண்டோஸை எப்படி கம்பியூட்டரில் ஏற்றுகிறார்கள். மென்பொருளே இல்லாதிருக்கையில் கம்பியூட்டரை ஆன் செய்தால் என்ன வரும்....கிருபா அடுத்தமுறை சென்னை வரும்போது மென்பொருள் இல்லாத ஒரு கம்பியூட்டரை ஆன் செய்து காட்டவும்....புண்ணியமாகப் போகும்.
மும்பை

( பின்னர் சென்னை சென்ற பொழுது, இந்த வேண்டுகோளை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு க்ருபா எனக்கு மென்பொருள் இல்லாத கம்பியூட்டரை போட்டு காண்பிக்கிறேன்னு நின்னான்...இப்ப கலியாணம் ஆயிடுச்சு அதானால நின்னார். நேரம் வாய்க்கவில்லை)

20.10.06

வி.பி.சிங்கின் துரோகம்...

கடந்த பத்து நாட்களாக நானும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கு குறித்து யாராவது பதிவிடுவார்கள் எதிர்பார்த்தபடியே இருந்தேன். யாரும் எழுதுவதாக தெரியவில்லை. வலைப்பதிவாளர்கள் இந்த வழக்கு குறித்து அறிந்து கொண்டிருக்கவில்லை என்றே அனுமானிக்கிறேன். ஏனெனில் செய்தித்தாள்களிலும் இந்த வழக்கு பற்றிய செய்தி காணப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தது மட்டுமே காரணமாயிருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் பத்துப் பைசா பெறாத பல வழக்கு குறித்த செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன...

வழக்கு திருச்சி பெல் நிறுவனத்தில் தச்சர், பெயிண்டர், வெல்டர், டர்னர் போன்ற திறமை தேவைப்படும் வேலையிடங்களில் ஆள் நிரப்புவது சம்பந்தமாக, அதுவும் கைக்கொள்ளப்பட்ட இட ஓதுக்கீடு குறித்து. காலியிடமான 250 பதவிகளில் 48 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 68 இடங்கள் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது சரிதான். ஆனால் பிறழ்சினை ‘தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங்களில்தான் போட்டியிட முடியும்’ என்று பெல் நிறுவனம் கூறுவதில் ஆரம்பித்தது. காரணம் தாழ்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களை விட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டனராம். எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட 116 இடங்கள் தவிர பிற இடங்களில் தாழ்த்தப்பட்டவர் அல்லது பிற்ப்படுத்தப்பட்டவர் அல்லாத மற்றவர்கள் மட்டுமே தேர்வுக்காக அழைக்கப்பட்டனர். இன்னும் என்னன்னவோ விளங்காத தேர்வு முறைகளை பெல் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

வழக்கு நடைபெறுகையில், பெல் நிறுவனத்தின் வாதமாக அவர்களது சீனியர் வழக்குரைஞர் கூறிய வாதங்களும், பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில் (affidavit) இருந்து வாசிக்கப்பட்ட சில வரிகளும் அவர்களது நோக்கம் என்ன என்பதை ஓரளவுக்கு தெளிவாக்கியது.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தாழ்த்தப்பட்டவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் பொது ஒதுக்கீட்டின் கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிகமாக இருந்தது” கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில்.

விட்டால், மொத்த இடத்தின் 73% இடங்களை தாழ்த்தப்பட்டவர்களே பிடித்து விடுவார்கள்” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.

தாழ்த்தப்பட்டவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு, வயது தளர்த்துதல் போன்ற பிற சலுகைகளைப் பெறுகின்றனர். இந்த சலுகைகளைப் பெறும் வண்ணம் விண்ணப்பித்து விட்டு அவர்கள் பொது ஒதுக்கீட்டில் வர முடியாது” பிரமாண பத்திரத்தில்.

பிற மாநிலங்களில் இவ்வாறுதான் நடக்கிறது. அலகாபத்தில் இது போன்றதொரு வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிரான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம், இடைக்கால தடைக்கு தடை வழங்கி உள்ளது” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.

நான் ஏதும் கூற விரும்பவில்லை. முதலில் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். பின்னர் பெல் தனது சீனியர் வழக்குரைஞரை அழைத்து வந்து காலியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால் உற்பத்தி பாதிக்கும் என்று வாதிட்டது. எனவே தேர்வு செய்யப்பட்டவர்களை ‘வழக்கின் முடிவிற்கேற்ப’ பணியில் சேர அனுமதிக்குமாறு தடை உத்தரவினை தளர்த்தியது. நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. அசட்டுத்தனமான வாதங்களை கேட்டுக் கொண்டிருக்க வேண்டாமென்ற வெறுப்பில் வாதம் முடியும் வரை அந்த நீதிமன்றம் பக்கம் செல்லவில்லை. தீபாவளிக்கு பிறகு தீர்ப்பு வரும். பெல்லுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்று நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்கள் கூற கேட்டேன்...

சரி, பத்திரிக்கைகள்தான் எழுதுவதில்லை. நாமாவது கூறலாமே என்ற நினைப்பில் இங்கு எழுதுகிறேன். ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது’ என்பது இதுதானோ?

16.10.06

பெயரில் என்ன இருக்கு?

எவ்வளவோ இருக்கு. சில வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் எழுதிய ‘கோணல் பக்கங்களின்’ தொகுப்பினன எனது சகோதரர் மின்னஞ்சலில் அனுப்பிய போது, எல்லாவற்றையும் விட, 'என்ன அழகான பெயர்' என்று தங்கை சந்திரமதியின் பெயரை சாருநிவேதிதா வியந்திருந்த விதமே என்னை முதலில் ஈர்த்தது. ஷாரன் என்ற என்னுடைய மகளை, ஜாலியான நேரங்களில் நான் 'சாருமதி' என்று அழைப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதனையும் மீறி ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய ரொம்ப நாள் ஆதங்கத்தை இந்தப் பெயர் தீர்த்து வைத்திருக்கிறது.

எனது ஆறாவது வகுப்பு முதல் நாள். வீட்டிலிருந்து வெகுதூரம் உள்ள ஹைஸ்கூல். அப்போது ஹையர் செகண்டரி கிடையாது. ஹிஸ்டரி வாத்தியார் (மன்னிக்கவும். ஆசிரியரை எங்கள் பக்கத்தில், அப்படிச் சொல்லித்தான் பழக்கம்) ஒவ்வொருவராக எழுந்து பெயரைச் சொல்லச் சொன்னார். எனது முறை வந்தது.

பிரபு ராஜ துரை'

வாத்தியார் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்.

'பிரபு....ராஜா....துரை. எல்லாம் ஒண்ணுதானே! எந்த முட்டாள் உனக்கு இப்படி பேர் வச்சது. உன் அப்பா பேர் என்ன?'

'காந்திராஜ் சார்' மெல்ல வந்தது வார்த்தை.

'ஆங்...காந்திராஜா...யாரு அந்த கண்ணாடி காந்திராஜா?'

என் அப்பா கண்ணாடி அணிந்திருப்பாராயினும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

'சரி உக்காரு' வாத்தியார் அடுத்த மாணவனுக்கு தாவினார்.

வீட்டுக்கு போனதும், அப்பாவிடம் வாத்தியார் சொன்னதைச் சொன்னேன்.

'அவன் பேர் என்ன?'

‘ஜோசப்’

'ஜோசப்பா!' என்று ஒரு முறை யோசித்தவர், 'அந்த முண்டக் கண்ணனா...அவண்ட்ட போயி முண்டக்கண்ண ஜோசப்னு சொன்னேன்னு சொல்லு'.

'அட்ரா சக்கை! வாத்தியார் நம்ம அப்பாவுக்கு ஃப்ரண்டா!' அடுத்த நாள் கிளாஸ”க்கு போனதும் மற்ற மாணவர்களிடம் பெருமையாக சொல்லிக் கொண்டேன். ஆனால் வாத்தியாருக்கு 'தண்ணிவண்டி ஜோசப்பு'னு ஏற்கனவே ஒரு பட்டப் பெயர் இருந்ததால், முண்டக்கண்ணன் என்கிற பட்டப் பெயர் என்னுடைய தயவால் ஏற்படவில்லை.

நம்ம ஊர் பள்ளிக்கூடத்து வாத்தியார்களின் பட்டப் பெயர்கள் மற்றும் மூலங்களை ஆராய்ந்தால், அதனை வைத்தே ஒரு தனி அத்தியாயம் எழுதி விடலாம்.

சரி அதற்கும் சந்திரமதிக்கும் என்ன சம்பந்தம்? ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டு இருந்தேன். என்னுடைய அப்பாவுக்கு கம்பெனி குடுக்கக் கூடிய இன்னொரு அப்பாவை. சந்திரா என்றாலும் மதி என்றாலும் ஒன்றுதானே. ஆனால் மதி என்கிற பெயர்தான் எனக்கு ரொம்பப் பிடிப்பதாக சொல்லி விட்டேன். மதி புத்திசாலித் தனத்தையும் குறிப்பதால். இப்படிப் பெயர் வைத்த புத்திசாலியினையும் ஒரு நாள் சந்திக்க ஆசை. என்னுடைய தந்தையினைப் போல சுவராசியமான நபராக இருப்பார் என்று அனுமானிக்கிறேன். என் அம்மாவின் பெயரும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஞானசவுந்திரி பொன்னம்மாள்! என்னுடைய பெயரைப் பற்றிக் கேட்டதற்கு 'பெயரிலாவது எல்லாம் இருக்கட்டும்' என்று வைத்ததாக சொன்னார்கள்.

மும்பைக்கு வந்தால் வேறொரு பிரச்னை. இங்கு எல்லாம் 'சர்நேம்'தான் (sur-name). அப்ளிக்கேஷன் எழுதினாலும் சரி, ஸ்கூல் அட்மிஷன் என்றாலும் சரி. எல்லாவிடத்திலும் சர்நேம் கேட்டு குடைந்து எடுத்து விடுவார்கள். எனவே G.R.Prabhu என்று சொல்லி பிரச்னையினை சமாளித்து வருகிறேன். பிரபு, மஹாராஷ்டிர பிராமண சர்நேம். எனது மகளுடைய முழுப் பெயர் ஷாரன் பொதிகை. அவர்களுடைய பள்ளியிலிருந்து வரும் கடிதங்கள் எல்லாம் Mr & Mrs.Pothigai என்று விலாசமிட்டு வரும். நானும் கண்டு கொள்வதில்லை. பெரிய வேடிக்கை என்னவென்றால் கூட வேலை பார்ப்பவர்கள் எல்லாரையும் நமக்கு சர்நேம்மை வைத்துத்தான் தெரியும். ஷெட்டி வீட்டுக்கு ஃபோன் செய்து, 'ஷெட்டி இருக்கிறாரா என்றால்' அங்கு பெரியக் குழப்பம் வெடிக்கும். எல்லோருமே அங்கு ஷெட்டிதானே என்று எனது சிற்றறிவுக்கு எட்டுவதற்கு ரொம்பக் காலம் பிடித்தது. மற்றொரு பெரிய பிரச்னை. ராஜதுரை என்ற என்னுடைய பெயரைஅங்கிலத்தில் வாசிப்பதற்க்குள் இங்கிருப்பவர்கள் படும் அவஸ்தை. ஆர்னால்ட் ஷ்வார்ட்ஸ்நெகர் என்ற பெயரைக் கூட எளிதில் படித்து விடுவார்கள் போல.

ஷ்வார்ட்ஸ்நெக்ர் என்றதும் ஞாபகம் வருகிறது. 'பிரீடேடர்' படத்துக்குப் பின்னர் எங்கள் தூத்துக்குடியினைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட அவர் பிரச்சித்தம். ஒரு முறை அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்த போது, சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரில் புதிதாக ஒரு நடிகரின் பெயரினைப் பார்த்தேன். 'ஆர்னால்டு சிவநேசன்'. எனக்கு அது யாரென்று புரிந்து கொள்வதற்க்கு கொஞ்ச நேரம் ஆனது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் குமுதத்தில் நம்ம ஆள், நேபாள நடிகை மனீஷா கொய்ராலாவை எப்படிச் சொல்வாரென்று போட்டிருந்தார்கள். 'மனுச கொரில்லா'!!!

திருநெல்வேலி பக்கம் வந்தீர்கள் என்றால் தெருவுக்கு ஒரு சுப்பிரமணியினைப் பார்க்கலாம். என் அம்மாவின் அலுவலகத்தில் ஏகப்பட்ட சுப்பிரமணிகள். ஆனாலும் பெயர்க்குழப்பம் இல்லை. முதலில் ஸ்டோர்ஸில் இருந்தவர் ஸ்டோர் சுப்பிரமணி. பின்னர் அவர் வேறு வேறு துறைகளுக்கு மாற்றப் பட்டாலும் ஸ்டோர்ஸ் என்ற பெயர் மட்டும் தங்கி விட்டது. கறுப்பாயிருந்தவர் கறுத்த சுப்பிரமணியம். கீச்சுக் குரலில் பேசுபவர் கீச்சுமூச்சு சுப்பிரமணி. மணிக்கொருதரம் பாத்ரூம் போய் தலை சீவி, பவுடர் போட்டுக் கொள்பவர் பவுடர் சுப்பிரமணி. சந்தோஷமான விஷயம். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பெயர்களை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டனர். ஒருவரைப் பற்றி தெரியாது. ஏனென்றால் அவர் இவர்களுக்கெல்லாம் ஆபீசர்.

பெயர்களைப் பற்றிய இத்தனை பெரிய ஆராய்ச்சி, சந்திரமதி பின்னர் சொன்ன ஒரு சிறிய இன்பர்மேஷனில் ஆரம்பித்தது. அதாவது 'கனடா' என்ற பெயர் அமெரிக்க பூர்வாங்க குடிகளின் வார்த்தையிலிருந்து உருவானதாம். நல்லது அது போல 'அமெரிக்கா' என்ற பெயரும், பெரும்பாலோர் நினைப்பது போல ஐரோப்பிய மூலம் அல்ல. அமெரிக்கோ வெஸ்புகி புதிய கண்டத்தில் கால் வைப்பதற்கு முன்னரே அதற்கு அமெரிக்கா என்ற பெயர் இருந்தது, இந்த உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப் பட்டதற்கு வழக்கம் போல வெள்ளையர் சதிதான் காரணம். தன்னுடைய பெயரினை ஒத்து இருந்த கண்டத்தின் பெயருக்கு, தன்னுடைய பெயராலாயே அப்படியாயிற்று என்று அவரும் அடித்துச் சொல்லி விட்டார். சரி, அப்படியானால் எப்படித்தான் அந்தப் பெயர் வந்தது? அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னர் நம்ம தமிழ்த்திரு நாட்டில் பிறந்த முருகன் என்ற ஒரு சிறுவனும் அவனது செல்ல அக்காவான சந்தனமாரி என்ற மாரியும்தான் காரணம் என்று சொன்னால் ஆச்சர்யப் படுவீர்கள். அது ஒரு சிறிய கதை.

ரொம்ப வருஷம் முன்பு, இந்த முருகனின் குடும்பமும் பஞ்சம் பிழைக்க படகேறிச் சென்றது. கடலிலும் நிலத்திலுமாக வெகு நாட்கள் பயணம். இப்படியாக ஒரு முறை கடலில் சென்று கொண்டிருக்கையில், கப்பல் ஒரு பெரிய புயலில் மாட்டிக் கொண்டு கடலில் மூழ்கி விட்டது. முருகனும் அவன் குடும்பத்தினரும் ஒரு சிறிய படகில். ஆனால், மாரியை காணோம். முருகனுக்கு அவனது அக்காவை இழந்தது பெரிய வருத்தம். ஒரே அழுகை. பின்னர் யாரிடமும் அவன் பேசவே இல்லை. சரியான உணவும், தண்ணீரும் இன்றி பல நாட்கள் பயணப் பட்ட பின்னர், ஒரு நாள் நிலம் கண்ணில் பட்டது. பெரிய மகிழ்ச்சி. நிலத்தினை நெருங்க, நெருங்க அங்கே கரையில் விநோத உடையந்த சிலர் இவர்களைப் பார்த்து கையசைத்தவாறு நின்றனர். அதிசயம்!!! அவர்கள் நடுவே மாரி. முருகன்தான் முதலில் பார்த்தான். இத்தனை நாள் சோகத்தில் பேசாமல் இருந்தவன் தன்னையும் மறந்து கத்தினான், 'ஆ...மாரியக்கா! ஆ...மாரியக்கா!! ஆ...மாரியக்கா!!!' படகு கரையினைத் தொடுவதற்கு முன்னதாகவே தண்ணீரில் குதித்து ஓடினான்.

கரையில் நின்றவர்களுக்கு இந்த விநோதமான மரியாதை பிடித்து விட்டது. அவர்களும் பதிலுக்கு கத்தினர், 'ஆ மெரியக்கா, ஆ மெரியக்கா'

அன்று முதல் வேற்று மனிதர்கள் யார் கடலில் இருந்து வந்தாலும் இவ்வாறு வரவேற்பது அவர்களது கலாச்சாரமாகி விட்டது. அதுவே அவர்களது நிலத்தின் பெயரும் ஆயிற்று. ஐரோப்பியர் ஆதிக்கத்தில் அமெரிக்காவில் ஒழிந்து போன பல கலாச்சாரச் சின்னங்களில் இந்தப் பழக்கமும் ஒன்று. ஆனால் பெயர் மட்டும் தங்கிவிட்டது...

(கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சந்திரமதி எனப்படும் மதி கந்தசாமிக்கு எனது முந்தைய முந்தைய பதிவினால் 'அந்த நால் ஞாபகம்' வந்ததால் இந்தப் பதிவு!)

12.10.06

மகிழ்ச்சி!

(மரண தண்டனையினைப் பற்றிய எனது பதிவினைப் படித்த நண்பர் ஒருவர் என்னை தீவிரவாதி என்றதாக தமிழினி முத்துவின் பதிவில் படித்தேன்...நண்பரின் தீவிரத்தை குறைப்பதற்காக, நான் இணையத்தில் முதன் முதலில் எழுதியது)


“மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களில் ஒளிந்திருக்கிறது. இவ்விஷயங்களைக் கண்டு கொள்பவர்கள் மகிழ்ச்சியினையும் தேடிக்கொள்கிறார்கள்” என்று சில நாட்களுக்கு முன்பு படித்தேன். வலையக நண்பர்கள் பல பெயர்களில் குழுக்களை அமைத்துக் கொண்டு தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் சிறிய பல தகவல்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணமாக கூறலாம்.

இவ்விதமான சிறிய ஆனால் சுவராசியமான தகவல்களை தொகுத்து எழுதும் பிரபல எழுத்தாளரான சாருநிவேதிதா 'பிரட் உப்புமா' என்ற ஒன்றை எப்படிச் செய்வது என்று கூறி அது எவ்வாறாக கொத்துப் புரோட்டா போல இருக்கும் என்று சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வலைப்பக்கத்தில் சிலாகித்து எழுதியிருந்தார். அந்த எழுத்தாளர் லேசாக சொல்லிவிட்டுப் போன பைசா பெறாத சாதாரண ஒரு விஷயம், அதனைப் படிக்கையில் ஒரு ஐந்து வருடம் என்னை பின்னோக்கி இழுத்துச் சென்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு மனைவி மகளை சென்னையிலேயே விட்டுவிட்டு, மும்பைக்கு வேலை காரணமாக தனியாக வந்தேன். ஹோட்டல் சாப்பாடு வெறுத்துப்போன நேரங்களில் நானே கண்டுபிடித்து 'யுரேகா' என்று கொண்டாடி பின்னர் அடிக்கடி எனது மனைவியிடம் பெருமையடித்துக் கொண்ட ஒரு 'ரெசிப்பி'க்கு வேறு ஒரு சொந்தக்காரரும் இருக்கிறார் என்று அந்த எழுத்தாளரின் கட்டுரையை படித்த பின்னர்தான் புரிந்தது.

சிலர் சமைத்துப் பறிமாறுவது அழகு. என் மனைவி உட்பட. ஆனால் சிலர் சாப்பிடுவதே அழகு. அப்படி எனக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் உண்டு. நான் அடிக்கடி அவரிடம் சொல்லியிருக்கிறேன், 'நான் மட்டும் பொண்ணாயிருந்தால், நீ சாப்பிடும் அழகுக்கே உன்னை கல்யாணம் பண்ணுவேண்டா' என்று. அப்படி ஒரு சாப்பாட்டு ரசனையாளர். மும்பைக்கு நான் வந்த ஒரே மாதத்தில் என்னையும், மும்பையினையும் பார்க்க வந்தவர், எனது 'பிரட் உப்புமா'வை சாப்பிட்டுப் பார்த்து விட்டு கொடுத்த சான்றிதழ்தான் 'கொத்துப் புரோட்டா மாதிரி இருக்குடா' என்பது. அதையே அந்த எழுத்தாளரும் ஐந்து வருடம் கழித்து எழுதி, நான் படிக்கையில் அட! என்று ஒரு சின்ன மகிழ்ச்சி. மும்பை நெரிசலில் ஒரு பத்து நிமிடம் மகிழ்ச்சியாக கழிந்ததாக அந்த எழுத்தாளருக்கு எழுதினேன்.

முதன் முதலாக மனதில் தைரியம் கொண்டு ஒரு எழுத்தாளருக்கு எழுத நேர்ந்ததற்கு வேறு இரண்டு காரணங்களும் இருந்தன. இப்போதும் அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. நான் கதைகள் படிப்பதை விட்டு வெகுகாலமாகி இப்போதுதான் இணையத்தில் வெளியிடப்படும் கதைகளை படித்து வருகிறேன். இலக்கியம் பற்றி அதிக பரிச்சயமோ அல்லது தெளிவான மதிப்பீடுகளோ எனக்கு இல்லை. ஆனால் ஒரு சிறிய சந்தேகம். அதாவது உங்களுக்கு இந்த காக்கா-பாட்டி-வடை-நரி கதை தெரிந்திருக்கும். இதனது வீச்சுக்கும், வசீகரத்துக்கும் சவால் விடக்கூடிய வேறு ஒரு கதை உண்டா? என்பது ஒரு கேள்வி.
எனக்குத் தெரிந்து இந்தக் கதை தெரியாமல் வளர்ந்த யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. என்னுடைய மகள் ஒரு ஐம்பது தடவையாவது இந்தக்கதையை என் மூலம் கேட்டிருப்பாள். ஆனால் என் சந்தேகம் இதுதான். இதுவும் ஒரு ஈசாப் கதைதானா? அல்லது தமிழகக் கதையா? இதனது மூலம் என்ன? எனது வலையகத்தில் சிலரைக் கேட்டேன். ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து வந்த கடிதங்கள் 'அங்கு இது அறியப்படவில்லை' என்று சொன்னது. நியுஸிலந்து நாட்டின் ஒரு கடிதம் 'இது ஈசாப் கதைதான்' என்றது. மற்றொன்று 'கேள்விப்பட்டிருக்கவில்லை' என்றது. இரானிலிருந்து ‘ஆ'மாம், இது ஒரு புகழ் பெற்ற கதை. எங்கள் புத்தகத்தில் உள்ளது' என்றார். ஈழத்துத் தங்கை சந்திரமதி 'இதுதான் நான் கேட்ட முதல் கதையா என்று அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன்' என்றார். இன்னமும் ஒரு தெளிவான பதில் கிடைக்கவில்லை என்பதால் இதைப் படிக்கும் யாரும் எனக்கு உதவலாம்.

உங்களுக்கு மூன்று அல்லது நான்கு வயதில் குழந்தையிருந்தால், சற்று நேரமுமிருந்தால், டெலிவிஷன் பார்க்காத ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்தில் இதைச் செய்து பாருங்கள். உங்கள் குழந்தை காக்காவாகவும், உங்கள் மனைவி/கண்வர் பாட்டியாகவும், நீங்கள், அட நீங்கள் யாராயிருந்தால் என்ன, நரியாகவும் மாறி ஒரு சின்ன 'skit' நாடகம் நடித்துப் பாருங்களேன். அந்த நாளில் முடிவில், அது ஒரு மகிழ்ச்சியான நாள் என்று குறித்து வைத்துக் கொள்வீர்கள். அந்த நாள் என்ன! இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தற்போது எட்டு வயது நிரம்பிய எனது மகளிடம், அவள் எப்படி தனது சிறு கைகளை குவித்து நீட்டி, "பாட்டி பாட்டி எனக்கு வடை பசிச்சு வருது பாட்டி. ஒரு தொப்பை குடு பாட்டி" என்று வசனத்தை மாற்றி சொன்னாள் என்று சொல்லிச் சிரிக்கையில் வீட்டில் சில நிமிடங்கள் சந்தோஷ அலை பரவியது.

அடுத்து, இது ஒரு சந்தேகம் இல்லை. ஆனாலும் இதைப் படிக்கும் நண்பர்களும் இவ்வித அனுபவம் இருக்கும். நமது தமிழ் சினிமாக்களில் கதாநாயகியின் காதலைப் பெறுவதற்கு கதாநாயகன் படும் பாடு பெறும் பாடு. ஒரு படத்தில் பெரிய கட்டிடத்தில் இருந்து குதிக்கிறான். இப்படியெல்லாமா செய்வார்கள், முட்டாள்கள் என்று கேலியாகச் சிரிப்பதுண்டு. 'அட, நன்றாகப் படித்து பெரிய வேலைக்குப் போனால், அவங்கப்பன் 'அக்காளைக் கட்டிக்கிறயா இல்லை தங்கச்சியக் கட்டிக்கிறயா' என்று கேட்க மாட்டானா' என்று கிண்டலும் அடித்ததுண்டு. ஆனால் இந்த காதல் படுத்தும் பாடு!


ரொம்பக்காலம் முன்பு, எப்போது எப்போது என்பதெல்லாம் தேவையில்லை, பைக்கில் நண்பரோடு போய்கொண்டிருந்தேன். அந்த பஸ்-டாண்டை கடந்த போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எந்தப் பெண் என்பதும் இப்போது முக்கியமல்ல. ஒரு நிமிட நேரம்தான். கடந்து போயாகி விட்டது. நண்பரை அவரது வீட்டில் விட்டு விட்டு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த பஸ்-டாண்டை கடந்த போது, கண்கள் என்னையறியாமல், இல்லை அறிந்தேதான் அந்தப் பெண்ணை தேடியது. அறிவு அப்போதே சொன்னது, 'முட்டாள் இரண்டு மணி நேரமாகவா டவுண் பஸ்ஸ¤க்கு நிற்ப்பார்கள்' என்று. ஆனால் காதல் கொண்ட மனம் கேட்கவில்லை. நினைத்துப் பார்க்கையில் இப்போதும் ஒரு சின்ன மகிழ்ச்சி!


மும்பை


(நக்கீரன், ரோசாவசந்த், உங்களது கேள்விகளுக்கு சிறு பதில் எனது முந்தைய பதிவில்...)

11.10.06

தண்டனை, பாலாவின் கேள்விகள்!


‘மணற்கேணி’ சட்டத்தினைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் வறட்டுப் பதிவாக உணரப்பட்டுவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்க முயன்றாலும், பாலா எனது முந்தைய பதிவில் எதிர்வினையாக வைத்த சில கேள்விகளுக்கு வெறும் பதில்களை மட்டுமே எழுதுவதில் எனக்கு விருப்பமில்லையெனினும், நேரமின்மை எனக்கு எதிராக சதி செய்கிறது.

1. இரட்டை ஆயுள் தண்டனை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினாலும், 14 * 2 ==> 28 வருடங்கள் என்று கணக்கிடாமல், ஒரே சமயத்தில் இரண்டு தண்டைனையையும் அனுபவிப்பார். நன்னடத்தை வாங்கி, காந்தி ஜெயந்தி இன்ன பிற கணக்கிடல்களைக் கருத்தில் கொண்டால் எவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்து விடலாம்?

முன்பே ஒரு முறை இணையத்தில் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும் வரைதான். பலர் நினைப்பது போல 14 ஆண்டுகள் அல்ல! எனது கட்டுரையில் கூறியபடி நீதிமன்றம் தண்டனை அளித்த பின்னர் அரசிற்கு அதனை குறைக்க அல்லது ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றம் மரணதண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கையில் ஆயுள் தண்டனையினை குறைக்க அல்லது ரத்து செய்ய வேண்டுமெனில், குற்றவாளி குறைந்தபட்சம் 14 ஆண்டுகளாவது சிறையில் கழித்திருக்க வேண்டும். எனவே ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகளுக்கு முன்னதாக விடுதலையாக முடியாது. பதினான்கு ஆண்டுகள் கழித்து அரசு ரத்து செய்யவில்லையெனில் சாகும் வரை சிறையிலேயே வாட வேண்டியதுதான். எனவே இரு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் ஒருவர் ஒரு ஆயுள் தண்டனையினை அனுபவித்தாலே போதுமானது.

2. அவ்வாறு வெளியில் அனுப்பப்படுபவர், 'தப்பை உணர்ந்து திருந்தியிருக்கிறாரா?', 'செய்த குற்றத்தை உணர்ந்திருக்கிறாரா?', 'இன்னும் கொலைவெறி/ஆத்திரம் கொண்டிருக்கிறாரா?' என்பதெல்லாம் மெய்ப்பிக்கப்பட்டுதான் விடுதலை ஆகிறாரா?

இவ்வாறாக தண்டனை குறைப்பிற்காக மனு செய்கையில், அரசு தண்டனை வழங்கிய நீதிமன்றத்தின் ஆலோசனையினை கேட்கலாம். மற்றபடி நீங்கள் கூறியபடி மெய்ப்பிக்கப்படுவது கஷ்டம்...ஆனால், நன்னடத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.


3. விடுதலையான பிறகு முன்னாள் கைதியின் வாழ்க்கை கண்காணிக்கப்படுகிறதா? அவருக்கு அரசு எவ்விதம் உதவுகிறது? வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள, வேலை தேடிக் கொள்ள என்று ஆலோசகரின் அருகாமை கிடைக்கிறதா?

கண்காணிக்கப்படலாம். ஏனெனில் தண்டனைக் குறைப்பின் பொழுது வேண்டிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. மீறினால் தண்டனைக் குறைப்பை ரத்து செய்து மீண்டும் குறைக்கப்பட்ட காலத்தை சிறையில் கழிக்க வைக்கும் உரிமை அரசுக்கு உண்டு.


4. குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்போது சிறையில் கழித்த காலம், தீர்ப்பு வழங்கியபின் கொடுக்கப்படும் தண்டனைக் காலத்தில் இருந்து கழிக்கப் படுமா? அதாவது, சஞ்சய் தத்திற்கு சிறைவாசம் விதிக்கப்பட்டால், ஏற்கனவே ஜெயிலில் இருந்த மாதங்கள் கணக்கில் கொள்ளப்படுமா?

கண்டிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். இதனை set off என்று அழைக்கிறார்கள்.

கேள்விகளுக்கு நன்றி பாலா!

6.10.06

முகமது அப்சல், மரணத்தின் விளிம்பில்...



தமிழ் இணைய உலகின் பிரபலங்களுள் ஒருவர் என்று நான் கருதும் ரோசா வசந்த், இவ்வாறு ‘அப்சல் மரண தண்டனை பற்றி’ நான் என்ன நினைக்கிறேன் என்பதனை எழுத வேண்டுவார் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை, அதுவும் நான் அதிகம் கவனம் செலுத்தாத, தெரிந்து கொள்ளாத முகமது அப்சலுக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து!

மரண தண்டனை பற்றி சில சமயங்களில் நான் இணையத்தில் எழுதியிருந்தாலும், அது தேவையான ஒன்றா இல்லையா என்ற ஆய்வினை மேற்கொண்டதேயில்லை. ஏனெனில், ஏற்கனவே இதற்காகவே ஏற்ப்படுத்தப்பட்டுள்ள இயக்கங்கள் பல உண்டு. போதுமான அளவிற்கு வாத பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன. நான் அறிந்தவரை மரண தண்டனையினால் குற்றங்கள் குறையப்போவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவித்தாலும், பழி வாங்கும் ஆதிமனித பண்பு எனது ஆழ்மனதிலும் குடி கொண்டிருக்கலாம் என்பதால், ஒரு தெளிந்த முடிவிற்கு என்னால் வர முடிந்ததில்லை. எனவே இது குறித்து நான் படிப்பதுமில்லை. சிந்திப்பதுமில்லை!

பொதுவாக ஏதாவது இணையத்தில் சற்று ஆய்ந்து, சிந்தித்து பொறுப்புணர்வுடன் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் எனது நேரமின்மை காரணமாக எவ்வித ஆய்வினையும் மேற்கொள்ளாமல் எனக்குத் தெரிந்த வரை சிலவற்றை இங்கு கூற முயல்கிறேன்.

தண்டனைகள் மூன்று காரணங்களுக்காக வழங்கப்படுகின்றன. பழிவாங்குவதற்காகவும், தண்டிப்பதற்காகவும் (retributive and punitive), தடுப்பதற்காகவும், எச்சரிப்பதற்காகவும் (preventive and deterrent) மற்றும் திருத்துவதற்காக (reformative). முதலாவது நோக்கம் ஒழிந்து போய் இரண்டாவது பின்னர் மூன்றாவது நோக்கம் வலுப்பட வேண்டும் என்பதே நாகரீகத்தின் வளர்ச்சியாக இருக்க இயலும். ஏனெனில் மூன்றாவது நிலையின் முதிர்ச்சியடைந்த நிலையில் குற்றமானது, கொடுஞ்செயலாக பார்க்கப்படாமல் மன நோயின் வெளிப்பாடாக கருதப்படும் நிலை வரலாம். தற்போதய மனநிலையில் நம்மால் இதனை ஆதரிக்க இயலாது. ஆனால் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், ‘அது என்ன உடனடியாக கொன்று விடுவது...கொலையாளி தனது தண்டனையினை அணுஅணுவாக அனுபவிப்பதை பார்த்தால்தான் நிம்மதி’ என்று கழுவேற்றிக் கொண்டிருந்தார்கள். இன்று ஒருவன் எவ்வளவு பெரிய கொலையாளியாக இருப்பினும், அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என்று யாரும் வேண்டுகோள் வைப்பதில்லை. மனதில் அவ்வாறு சில சில சமயம் எண்ணங்கள் தோன்றினாலும், நாகரீகமடைந்த சட்டங்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை.

முதலாவது நோக்கமான பழிவாங்குதல் மற்றும் தண்டனைக்குமிடையில் சிறு வேற்றுமை உண்டு. நமது முறைகள் பழி வாங்குதலை விட்டு தண்டனையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவே நான் எண்ணி வந்தேன். ஆனால், அப்சலுக்கான தண்டனை குறித்து இணையம் முதலான ஊடகங்களில் கருத்தாக எடுத்தாளப்பட்ட ‘தாக்குதலில் இறந்த பதினொரு நபர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்ற கேள்வியில் ஆதி நோக்கமான பழிவாங்குதலே மிகுந்திருப்பதை உணர்ந்தேன். இன்று திரு.ரவி ஸ்ரீனிவாஸ் தயவில் என்னை ஆச்சரியப்பட வைத்தது, உச்சநீதிமன்ற நீதிபதிளும் தண்டனைக்கான தங்களது தீர்ப்பில் பழிவாங்கும் நோக்கத்தினையும் முன்னிலைப்படுத்தியிருந்த வரிகள்!

குற்றவியல் வழக்கில் இரு தீர்ப்புகள் உண்டு. முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்பதாகும். அவ்வாறு குற்றவாளி என்று தீர்ப்பான பின்னர் அவருக்கான தண்டனை என்ன? என்று கூறுவது அடுத்த கட்ட தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஏதும் குறை காண இயலாது. ஏனெனில் அப்சல் மீதான வழக்கு மதில் மேல் பூனை வழக்கு (border line case). அப்சல் தாக்குதலில் நேரிடையாக பங்கு கொள்ளவில்லையெனினும், சதி திட்டத்தில் ஈடுபட்டு வேண்டிய உதவிகள் செய்தார் என்பதே குற்றச்சாடு. வழக்கினை நிரூபிக்க அவருக்கு எதிராக சந்தர்ப்ப சாட்சிகளே (circumstantial evidence) உள்ளன! முக்கியமாக கைது செய்யப்பட்டதும், குற்றத்தினை ஒத்துக் கொண்டு அவர் அளித்த வாக்குமூலம் (confession). பொதுவாக காவலர்களிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது எனினும் ‘பொடா’ சட்டத்தின்படி செல்லும். மேலும் நீதிமன்றம் இந்த வாக்குமூலத்தினை அவர் திரும்பப்பெற ஏழு மாத காலம் எடுத்துக் கொண்டார் என்பதை கவனத்தில் கொண்டது. இரண்டாவது அவர் தாக்குதலில் நேரிடையாக ஈடுபட்டு இறந்து போன ஐவரின் உடலினை அடையாளம் காட்டியது மற்றும் அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மூலமாக அந்த ஐவர் தாக்குதலுக்கு முன்னர் பதுங்கியிருந்த இடங்களை கண்டுபிடித்தது. இந்த ஆதாரங்களை ஜோடிக்க காவலர்களுக்கு இயலும் எனினும், அவருக்கும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் இருந்த தொடர்பானது இருவருக்கும் இடையே அடிக்கடி நடந்த செல்பேசி உரையாடல்கள் மூலமும், அவரது செல்பேசியை கொலையாளிகளில் ஒருவர் உபயோகப்படுத்தி வந்ததும் அப்சலுக்கு எதிரான வலுவான கூறுகள். இந்திய நாட்டின் மீதான் போர் தொடுத்தது உட்பட அனைத்து குற்றங்களுக்காகவும் முகமது அப்சல் குற்றவாளி என்று தீர்க்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் சட்டரீதியில் தவறான செயல் அல்ல!

ஆனால் தண்டனைக்கான் காரணங்களை முன் வைக்கும் உச்சநீதிமன்றம் முதலாவதாக கூறுவதான, ‘குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதின் மூலமே சமுதாயத்தின் பொதுவான மனநிலையினை திருப்திப்படுத்த இயலும் (the collective conscience of the society will only be satisfied if the capital punishment is awarded to the offender)’ என்பது அபாயகரமான ஒரு போக்கு என்பது எனது பணிவான கருத்து. இரண்டாவதாக கூறும் ‘சதியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதே, நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் (The challenge to the unity, integrity and sovereignty of India by these acts of terrorists and conspirators, can only be compensated by giving the maximum punishment)’ என்பதும் தகுந்த காரணமில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் இறுதியில் அளித்துள்ள ‘ஏற்கனவே சரணடைந்துள்ள ஒரு போராளி மீண்டும் நாட்டுக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபடுவதினால், சமுதாயத்தினை சீர்குலைக்கும் ஒரு சக்தியாக கருதி அவர் வாழ்வு முடிக்கப்படவேண்டும்’ என்ற காரணமே சரியானதாக இருக்க இயலும் என எண்ணுகிறேன். எனெனில் முதலிரண்டு காரணங்களிலும் பழிவாங்குதலே வெளிப்படுகிறது. மூன்றாவது காரணமே தடுத்தல் மற்றும் எச்சரித்தல் வகையில் வருகிறது. திருத்துதலுக்கு மரண தண்டனையில் வாய்ப்பில்லை!

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில்? என்று கேட்பவர்கள் நமது நாட்டின் சட்டமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு எந்த தனிமனிதனுக்கு எதிரான குற்ற செயலானது சமுதாயத்திற்கு எதிரானது என்று கருதப்படுகிறது. எனவே குற்றவாளியின் மீது வழக்கு தொடர்ந்து தகுந்த தண்டனையினை பெற்றுத் தருவது அரசின் வேலை. அரசு அவ்வாறு வழக்கு தொடர்கையில் பாதிக்கப்பட்டவர்களின் பங்கு அதில் மிக மிக குறைவு. நீதிமன்றம் தண்டனை அளித்த பின்னர் அதனை குறைக்க, ரத்து செய்யக் கூட அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதுவே நாகரீகமான முறையாக இருக்கக் கூடும் என்பது எனது கருத்து. ஏனெனில், ஆயிரக்கணக்கானோர் துரதிஷ்டமான முறையில் தினமும் இறக்கிறார்கள். இறந்தவருக்கு உயிர் கொடுக்க யாரிடமும் சக்தியில்லை. ஆனால், பிறர் அல்லது அரசின் மெத்தன போக்கினால் உயிரிழக்க நேரிடுகையில் போதுமான பண உதவியே தகுந்த நஷ்ட ஈடாக இருக்க இயலுமே தவிர குற்றவாளியின் உயிரினை எடுப்பதினால் வரும் மனநிம்மதிக்கு வழிவகுப்பது தகுந்த நாகரீகமாகாது. இல்லையெனில், ‘என் மகனை கொன்றவனை நானே கழுத்தை நெறித்து கொன்றால்தான் எனக்கு மன நிம்மதி’ என்றால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். மோட்டர் வாகன விபத்துகளில் இறந்த பிள்ளைகளின் பெற்றோர்களை கேட்டுப்பாருங்கள்...’அவனை கிழே போட்டு நான் மோட்டாரை அவன் மீது ஏற்றினால்தான் நிம்மதி’ என்பார்கள். எனவே இறந்தவர்களின் உயிரினை தண்டனைக்காக கணக்கிலெடுப்பது தகுந்த நாகரீகமாகாது என்ற எனது கருத்தானது இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளப்படவில்லையெனினும், வருங்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றே நினைக்கிறேன்!

பொதுவாக குற்றம் ஐயமின்றி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளி என்று தீர்க்க முடியும். ஆயினும், சில சமயங்களில் மனதிற்குள் சின்னதாக ஒரு ஐயப்பாடு இருக்க வாய்ப்புண்டு. அவ்விதமான நிலைகளில் மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பழிவாங்குதல் மற்றும் தண்டனை அல்லாமல் தடுத்தல் அல்லது எச்சரித்தல் போன்ற காரணங்களுக்காவே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். இல்லை, அனைவரையும் போட்டுத் தள்ள வேண்டுமென்றால், வருமான வரி ஏய்ப்பு, பத்திர பதிவில் சொத்து மதிப்பினை குறைத்துக் காட்டி முத்திரைக் கட்டண ஏய்ப்பு போன்ற வெள்ளை காலர் குற்றங்களுக்கும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். வரி கட்டுபவர்கள் ஒழுங்காக அதை கட்டி அரசிடம் போதுமான பணமிருந்திருந்தால், எல்லையில் பாதுகாப்பினை பலப்படுத்தியிருக்கலாம். அப்சல் அந்தப்பக்கம் உள்ள காஷ்மீரத்துக்கு ஓடிச்சென்று பயிற்சி எடுத்து பின்னர் திரும்புவதை தடுத்திருக்கலாம் அல்லது தில்லியில் கொசு மருந்தாவது கூட கொஞ்சம் அடித்திருக்கலாம்...ஆக வெள்ளை காலர் குற்றங்களாலும் மரணங்கள் நிகழ்கின்றன, ஏன் பின்னர் பாகுபாடு?

மதுரை
06.10.06



பி.கு: அப்சல் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தது. பாராளுமன்ற தாக்குதல் நாட்டிற்கு எதிரான போரா? என்றும் ஒரு வாதம் நடைபெற்றது. அது போர்தான் எனவும் அதற்காக தனியே அவருக்கு யுள்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வாதாடிய ராம் ஜேத்மலானி ஒரு போடு போட்டார்...’அப்படியென்றால் அப்சலும் மற்றவர்களும் போர் கைதிகளாக கருதப்பட்டு, சாதாரண நீதிமன்றங்களில் அவர்களின் வழக்கு நடைபெற்றிருக்கக்கூடாது’ என்று. இது எப்படி இருக்கு?

இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளில் குற்றவாளிகள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் எங்கு கிடைக்கும். அதில் ஒரு வேதனையான உண்மையிருக்கலாம் என்பது எனது அனுமானம்.

5.10.06

ஸ்ரீவைணவம் - குறுந்தகட்டில்...

எனது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஆசானும், சீனியர் வழக்குரைஞருமான திரு.ஆர்.வேதாந்தம் வைணவத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். வைணவத்தை எதிர்கால இளைஞர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீவைணவம் என்ற குறுந்தகட்டினை தயாரித்து கொடுத்துள்ளார். மிகக்கடுமையான உழைப்பில் இந்த சிடியானது தயாரிக்கப்பட்டுள்ளது.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தகட்டின் முதல் பகுதியில் வைணவம் பற்றிய அறிமுகம், பிராத்தனை, இந்து தத்துவங்கள் முதலிய விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் ஸ்ரீவைணவத்தின் முக்கியமான தன்மைகளை விளக்கியிருக்கிறார் தொகுப்பாளர். பின்னர் திருவாராதனம், விஷ்ணுசகஸ்ரநாமா பெருமாள் ஸ்வாமி, ராமாநுஜரும் ஸ்ரீபாஷ்யமும், ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள், வேதாந்த தேசிகர் மற்றும் அவர் எழுதிய நூலின் விபரம், தயாசகம், தசாவதார ஸ்தோத்ரம் முதலிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியில் ஆண்டாளின் திவ்ய மகாத்மியம், திருப்பதி திருமலை பற்றிய விபரம், நவ திருப்பதிகள் பற்றிய விபரங்கள், ஸ்ரீரங்கம், உப்பிலியப்பன், காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம், 108 திவ்ய தேசங்கள் போன்ற திருத்தலங்கள் பற்றிய குறிப்புகள் படங்களோடு சிறப்பாக வழங்கப்பட்டிருகின்றன.

எளிமையான ஆங்கிலத்தில் மிக அழகாக அனைத்து விபரங்களையும் சுருக்கமாக தொகுத்து இந்த குறுந்தகட்டில் அவர் தந்திருக்கிறார். மிக அழகாக உலகத்தின் தமிழ் தெரியாத மக்களும் வைணவத்தையும், இந்து தத்துவத்தையும் புரிந்து கொள்கின்ற வகையிலே மிக கடுமையான உறுதி, முயற்சி, உழைப்பு, நம்பிக்கையோடு இந்த குறுந்தகட்டினை வெளியிட்டிருக்கும் ஆர்.வேதாந்தம் அவர்கள் பாராட்டுக்கு உரியவர். இந்த குறுந்தகட்டின் விலையினை அவர் தெரிவிக்கவில்லையெனினும் குறைந்தது ரூ.50 கொடுத்தாவது இதனை பெற்றுக்கொள்ளலாம்.

குறுந்தகட்டினை பெற அவரை நேரிலேயேயும், தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

SHRI R. VEDANTHAM
No.230, AVVAI SHANMUGAM SALAI
(ADJACENT TO AIADMK OFFICE & HEMA MALINI HALL)
ROYAPETTAI, CHENNAI - 600 014
PHONE : 28130287
E-MAIL :
vedantraghu@dataone.in
எனி இண்டியன், கிழக்கு பதிப்பகம் இன்னும் வேறு இணைய விற்பனை மையங்கள் இந்த குறுந்தகட்டினை பற்றிய அறிமுகத்தினை மற்றவர்களுக்கு அளிக்க முன் வந்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

2.10.06

விஷம் கக்கிய பாம்பு!

முன்னுரை

கடன் வாங்குவதற்கு பழமையான, அதே சமயம் எளிமையான வழி பிராமிசரி நோட்டு (promissory note). புரோ நோட்டு என்பது கடனை திருப்பிச் செலுத்துவதாக உறுதி கூறி எழுதிக் கொடுக்கப் படும் ஒரு ஆவணம். நிறுவன பங்குகளைப் போல பிராமிசரி நோட்டில் எளிதில் மாற்ற வல்ல பல வசதிகள். மேலும் மேலும் பிராமிசரி நோட்டினை வைத்து தொடரப்படும் வழக்குகளில் வாதிக்குச் சாதகமான சில அனுகூலங்கள் உண்டு. பொதுவாக பிராமிசரி நோட்டு வழக்குகள் எளிதில் முடிந்து விடும்...அந்த கையெழுத்தே மோசடி என்று பிரதிவாதி வழக்காடாத பட்சத்தில். அப்படி ஒரு பிராமிசரி நோட்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. எதிர் வழக்காட வந்தவர், திறமையான அதே சமயம் தைரியம் மிகுந்த ஒரு வக்கீல். பொதுவாக புரோ நோட்டு வழக்குகளில் நீதிபதிக்கு அதிக வேலையில்லை. தீர்ப்பது எளிது...

நீதிபதி கேட்டார் பிரதிவாதி வக்கீலிடம், 'என்ன...வழக்கை எதிர் நடத்தப் போகிறீர்களா?'

'ஆமாம், யுவர் ஹானர்'

'புரோ நோட்டு கேஸு என்ன டிபன்ஸ் (defense)' அசுவராசியமாக நீதிபதி. அவருக்குத் தெரியும் கட்சிக்காரனிடம் பீஸ் கறப்பதற்கென்றே வம்படியாக சிலர் வழக்கு நடத்துவர் என்று.

'நான் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன், யுவர் ஹானர்' உடன் வந்தது பதில்.

'என்ன! ம்ம்ம்...என்ன சாட்சி' பொதுவாக ஒரு பத்திரதின் பெயரில் கடன் பெற்றவர்கள் எழுத்து பூர்வமாகவே அதனை திருப்பிச் செலுத்துவர். ஆனால் அப்படி பணம் செலுத்தியதற்க்கான குறிப்பு எதுவும் அந்த புரோ நோட்டில் காணப்படவில்லை.

'ஒரல் (oral) யுவர் ஹானர்' ஒரல் என்பது வாய்மொழிச் சாட்சி.

'ஓ! ஓரலாஆஆ....' நீதிபதி கேலியாக இழுத்தார்.

சற்றும் தயங்காமல் அந்த வக்கீல், முகத்தை மிகவும் žரியஸாக வைத்துக் கொண்டு, குரலை உயர்த்திய படி, 'In the Sessions Courts, Your Honour, they are sending people to gallows on the evidence, which is ORRRAAALLL......'

"கிரிமினல் நீதிமன்றங்களில் குற்றவாளிகளை வெறும் வாய்மொழிச் சாட்சியின் அடிப்படையில் தூக்கு மேடைக்கே அனுப்புகிறார்கள். பிசாத்து, பிராமிசரி நோட்டுக்கு அதனை நம்பக் கூடாதா?' என்பதுதான் அதன் அர்த்தம் என்றாலும்...இறுதியில் அவர், அந்த நீதிபதி கேலியாக 'ஒரலாஆஆ' என்று சொன்னதற்கு இணையாக தானும் அப்படியே திருப்பியடித்ததுதான் வேடிக்கை.

நீதிபதிக்கு முகம் சுண்டிப் போனது. பேசாமல் வழக்கை ஆரம்பிக்க உத்தரவிட்டார்.

வக்கீலின் பதில் அந்த சந்தர்ப்பத்தில் சரியான வாதம் என்றாலும்...சட்டத்தின் படி அதில் பல ஓட்டைகள் இருக்கிறது. உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஒரு வழக்கினை நிரூபிக்க சாட்சிகள் அவசியம். வாய்மொழிச் சாட்சிகள் மற்றும் ஆவணச்சாட்சிகள் (Oral Evidence and Documentary Evidence). 'வாய்மொழிச் சாட்சி (மனிதர்கள்) பொய் பகரலாம் ஆனால் ஆவணங்கள் பொய் கூற இயலாது' என்பது சட்டக் கருத்து. எனவேதான் உலகம் முழுவதும் உள்ள சட்டங்கள், ஆவணச் சாட்சி இருப்பின் அதனை எதிர்த்து வாய்மொழிச்சாட்சியினை அனுமதிப்பதில்லை.

ஆனால் பொதுவாக குற்றவியல் வழக்குகளில் வாய்மொழிச் சாட்சியே பிரதானம். எப்படி கொலை நடந்தது என்று எந்த ஆவணத்தினை வைத்து நிரூபிப்பது. எனவே மனிதர்களின் வாய் வார்த்தையினை வைத்துதான் வழக்கு நிற்க முடியும். அதே காரணத்திற்காகத்தான் குற்றவியல் வழக்குகளில் சாட்சிகளின் குறுக்கு விசாரணை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சாட்சி கூறுவது உண்மையல்ல என்று எடுத்துரைக்க, குற்றம் சாட்டப் பட்டவரிடம் உள்ள ஒரே ஆயுதம் குறுக்கு விசாரணைதான். உரிமையியல் (civil) வழக்குகளில் அப்படியல்ல. ஆவணத்தை வைத்து வழக்கு உண்மையா? பொய்யா? என்பது விளங்கி விடும்.

ஆக சில நபர்களின் வாய் வார்த்தைகளில்...ஒரு குற்றவாளியினை தூக்கு மேடைக்கு அனுப்பமுடியும். நான் இவ்வளவு விளக்கமாக சொல்லிக் கொண்டு போவது, எங்கனம் ஒரு கிரிமினல் வழக்கில் பல ஆவண சாட்சிகள் செய்ய முடியாத ஒரு காரியத்தை, சிலரின் வாய் வார்த்தைகள் சாதித்தது என்பதை சொல்வதற்காகத்தான்.

சட்டக் கருத்தெல்லாம் இந்த வழக்கில் முக்கியமில்லை. அதைவிட முக்கியம் இந்த வழக்கு எப்படி அமெரிக்க மக்கள் நீதியினை நிலை நாட்ட உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதற்கும், எவ்வாறு அங்கு சாதாரண மக்கள் தங்கள் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், நியாயத்திற்காக சில தியாகங்களை செய்ய முன் வருகிறார்கள் என்பதற்கும் ஒரு முக்கிய உதாரணம்.

அதையெல்லாம் மீறி....இதன் பின்ணயில் உள்ள வேதனைகளும்......எவ்வாறு அமெரிக்க நாடு ஒரு அருவருக்கத்தக்க நிலையிலிருந்து, தன்னையும் தனது அமைப்புகளையும் மீட்டெடுத்துக் கொண்டது என்பதனையும் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மெட்கார் இவர்ஸ் (Medgar Evers), பைரான்-டீ-ல-பெக்வித் (Byron de la Beckwith) என்ற பெயர்களை கேள்விப்பட்டிருந்தால்...இந்த வழக்கினைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதனை அறியா ஒரு சிலரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.

ஒரு கொலை

மெட்கர் இவர்ஸ், தான் மரித்த 1963 ம் ஆண்டு, முப்பத்தியேழே வயது நிரம்பிய இளைஞர். அழகான மனைவி மைரில்லே (Myrile Evers) மற்றும் மூன்று சிறு குழந்தைகள். இவர்ஸ் வியட்நாமில் அமெரிக்க அரசுக்காக போரிட்டவர். பின்னர் சட்டக் கல்லூரியில் இடம் மறுக்கப்படவே, காப்பீட்டுப் பத்திர விற்பனையாளர். மிசிசிபியில் உள்ள ஜாக்ஸன் நகரில் அமைதியான இடத்தில் வீடு. வேறு என்ன குறை இருக்கப் போகிறது ஒரு மனிதனுக்கு......ஆனால் இவர்சுக்கு இருந்தது. 'மற்றவர்கள் போல தானும் ஒரு டிபார்ட்மெண்டல் கடையில் பொருட்கள் வாங்கவேண்டும்', 'மற்றவர்கள் போல தானும், தான் விரும்பும் ஒரு உணவு விடுதிக்கு தனது குடும்பத்துடன் செல்ல வேண்டும்', 'தனது பிள்ளைகளும் நல்ல பள்ளிக் கூடத்தில் சேர வேண்டும்', 'தன்னையும் மற்றவர்கள் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும்' என்ற சின்னச் சின்ன குறைகள்தான். மொத்தத்தில் தானும் தன்னைப் போன்ற கறுப்பின மக்களும் மனிதர்களாக மதிக்கப் படவேண்டும் என்ற ஒரே ஒரு குறைதான் அவருக்கு இருந்தது.

இவர்ஸால் மற்றவர்கள் போல இந்த குறைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. 1954ம் ஆண்டு, அமெரிக்க உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் இனவாத பாகுபாடு கூடாது என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் இனவாத போக்கில் எவ்வித பெரிய மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. இவர்ஸ், 'கறுப்பின மக்கள் முன்னேற்றத்துக்கான தேசிய அமைப்பு' என்ற அமைப்பில் தீவீரமாக ஈடுபட்டு அதன் காரியதரிசியாக பயாற்றி வந்தார். அதன் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டமைக்காக அவருக்கு பல கொலை மிரட்டல்கள். வெள்ளை இனவாத பயங்கரவாத அமைப்பான கூ க்ளஸ் க்ளான் (ku klux klan KKK) அவரைக் கட்டம் கட்டியிருந்தது. அதனை அவரும் அறிந்தே இருந்தார். எனவேதான், விளையாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டிய வயதில் அவரது குழந்தைகளுக்கு... வெடிச்சத்தம் கேட்டால் எப்படி உடனே தரையோடு படுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பயிற்ச்சிக்கும் ஒரு நாள் அவசியம் ஏற்பட்டது.

துரதிஷ்டமான அன்று இரவும் இவர்ஸ் வீடு திரும்ப வெகு நேரமாகி விட்டது. வழக்கம் போல அப்பா வருகைக்காக காத்திருந்த குழந்தைகள், அவரது கார் சத்தம் கேட்டதுமே, 'அப்பா வந்து விட்டார்' என்று துள்ளிக் குதித்தன. சில நொடிகள்தான்....அந்த இருளைக் கிழித்த வெடிச்சத்ததில் அதிர்ந்த மூத்த இரண்டு குழந்தைகளும் அடுத்து உடனடியாக, தங்கள் குட்டித் தம்பினை சேர்த்து தரையில் படுத்துக் கொண்டனர். மைரில்லே கதவை நோக்கி ஓடினார். அங்கே ரத்த வடிய கீழே விழுந்து கிடந்தார் இவார்ஸ். ஒரு கையில் சாவிக் கொத்து. மறு கையில் 'jim crow must go' என்ற வாசகம் எழுதப்பட்ட டி-சார்ட். 'அப்பா எழுந்திரு, அப்பா எழுந்திரு' என்ற குழந்தைகளின் அலறலில் மற்றவர்கள் வர, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார் இவர்ஸ். அவரது குடும்ப மருத்துவர், பிர்ட்டோன் அவரருகே குனிந்து, 'உங்களை சுட்டது யாரென தெரியுமா?' என்று வினவியதற்கு, 'டாக்டர்...ஓஓ..டாக்டர்' என்ற பதிலோடு இவார்ஸின் உயிர் பிரிந்து விட்டது.

ஒரு விசாரணை

இவர்சின் கொலையினைத் தொடர்ந்து நடந்த போலீஸ் விசாரணை, அப்பழுக்கில்லாதது என்பதை சொல்ல வேண்டும். இவர்சுக்கு தனிப்பட்ட வகையில் யாரும் எதிரிகள் இல்லை. எதிரி(கள்) க்ளானை சேர்ந்த அல்லது சேராத வெள்ளை இனவாதி(கள்). அதனை உறுதிப்படுத்தும் விதமாக, லீ சுவல்லி என்பவர், கொலை நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக, தான் பேருந்து நிறுத்தத்தில் ன்று கொண்டிருந்த போது, ஒரு வெள்ளையர் அவரை அணுகி, 'அந்த 'நீக்ரோ' எவர்ஸ் எங்கே வசிக்கிறான்?' என்று கேட்டதாக சொன்னார். 'நீக்ரோ' என்ற வார்த்தை ஸ்பானிய மொழியில் கறுப்பு என்று பொருள் பட்டாலும், பின்னர் அது அமெரிக்காவுக்கு அடிமைகளாக பிடித்து வரப்பட்ட ஆப்ரிக்கர்களின் சந்ததியினரைக் குறிக்கும், கேலி பொதிந்த ஒரு வார்த்தையாக உருமாறி விட்டது.

எவர்ஸ் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஜோ'ஸ் டிரைவ் என்ற மோட்டலின் சிப்பந்தி, கொலை நடந்த நேரத்தில், சவுக்கு போன்ற நீண்ட ஏரியல் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்து வேகமாக புறப்பட்டுப் போனதாக சொன்னார்.

விரைவில், போலீஸ் ஒரு கொலை வழக்குக்கு முக்கிய தடயமான ஆயுதம், அதாவது இந்த வழக்கில் துப்பாக்கியினை, எவர்ஸ் வீட்டுக்கு அருகில் இருந்த புதரில் இருந்து கண்டெடுத்தனர். அது ஒரு தொலைநோக்கி பொருத்தப்பட்ட 1917 மாடல், .03-06 எட்ஃபீல்ட் ரக ரைபிள். துப்பாக்கியினை விட போலீஸ”க்கு மகிழ்ச்சி தந்தது அதில் இருந்த கைரேகை. மேலும், எவர்ஸ் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாவும், கண்டெடுக்கப் பட்ட துப்பாக்கிக்கு பொருத்தமானது என்று வெடிப்பொருள் அறிக்கையும் (Ballastic Report) உறுதிப் படுத்தியது.

துப்பாக்கி பற்றிய விபரங்கள் வெளியானதுமே, தார்ன் மெக்கின்டையர் (Thorn McIntyre) என்பவர் போலீஸை தொடர்பு கொண்டு தான் அந்த துப்பாக்கியினை, பைரன் டி ல பெக்வித் (Byron De La Beckwith) என்பவருக்கு சில காலம் முன்பு விற்றதாக கூறினார். பெக்வித் யாரென்று தெரிந்ததும், போலீஸ் தங்களது விசாரணை ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதை உணர்ந்தனர். ஆம், பெக்வித் தான் ஒரு இனவாதி என்பதை சொல்லிக் கொள்வதில் சற்றும் தயங்காத கூ க்ளக்ஸ் க்ளானை சேர்ந்தவர். அவரிடம் சவுக்கு போன்ற நீண்ட ஏரியல் கொண்ட ஒரு வெள்ளை ற கார் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியில் இருந்தது....அவரது கைரேகை!

எவர்ஸ் கொலை செய்யப் பட்டதினை கண்ணுற்ற நேரடி சாட்சி (Eye Witness) யாரும் இல்லையெனினும், சந்தர்ப்பவாத சாட்சிகள் (Circumstantial Evidence) பெக்வித்துக்கு எதிராக வலுவாக இருந்ததாக, போலீஸ் நம்பினர். போலீஸ’ன் நம்பிக்கை சரியானது என்பது குற்றவியல் நடைமுறை அறிந்த அனைவரும் ஒத்துக் கொள்ளக்கூடியது. பெக்வித்துக்கு எதிரான மற்றொரு ஆவணம், அவரது வீட்டினைச் சோதனையிடுகையில் கிடைத்த ஒரு விளம்பர புத்தகம். அதில் .03-06 தோட்டாக்களின் சக்தி மற்றும் அதன் குணாதிசயங்களைப் பற்றிய விபரங்கள் பெக்வித்தால் வட்டமிடப்பட்டு இருந்தது.

பெக்வித் விரைவில் கைது செய்யப்பட்டு, எவர்சைக் கொன்ற குற்றத்திற்காக வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். பெக்வித்தோ எதற்கும் அசரவில்லை. தினமும் நீதிமன்றத்திற்கு புன்னகை மிஞ்சிய முகத்தோடும், கேலியோடும் வருவதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி தருவதுமாக....எதனைப் பற்றியும் கவலைப் பட்டதாக தெரியவில்லை.

திடீரென இரண்டு போலீஸ்காரர்கள், பெக்வித்தை கொலை நடந்த சமயத்தில் சம்பவ இடத்திலிருந்து 150 மைல் தூரத்திலுள்ள இடத்தில் பார்த்ததாக சாட்சி சொன்னார்கள். இதனை 'அலிபி' என்பார்கள். இதுவரை இந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் அந்த போலீஸார் திடீரென சொன்னதால், அவர்களது நம்பகத்தன்மை கேள்விக் குறியானது என்றாலும்.....வழக்கின் முடிவில் ஜூரர்கள் எவ்வித முடிவும் எடுக்க முடியாமல் வழக்கு தள்ளிப் போடப் பட்டது. இறுதியில் ஜூரர்கள் எடுத்த முடிவு......இது வரை நீதியினை எதிர்பார்த்து காத்திருந்த மைரில்லேயின் தலையில் இடியாக இறங்கியது. ஆமாம், வழக்கு மெய்ப்பிக்கப் படவில்லை என, 'பெக்வித் குற்றமற்றவர்' என்ற முடிவிற்கு ஜூரர்கள் வந்தனர்.

மைரில்லேயினையும், மற்றும் சிலரையும் தவிர எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், குறிப்பாக அரசு. ஏனெனில் இவ்வழக்கில் பெக்வித் தண்டிக்கப்படும் வேளையில் அதிக பிரச்னை ஏற்படும் என அரசு நம்பியது.

எல்லா நம்பிக்கைகளையும் இழந்த மைரில்லே, ஜாக்ஸன் நகரை விட்டே கிளம்பி வெகுதூரத்திலுள்ள கலிஃபோர்னியோ நகரத்தில் சென்று தனது மூன்று குழந்தைகளுடன் குடியேறிவிட்டார். அவர் தன்னுடன் சுமந்து சென்றது...அவரது கணவருடைய நினைவுகளையும்.....இனி தன் சொந்தக்காலில் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உறுதியும். அவற்றோடு ஒரு வைராக்கியத்தையும் அவர் சுமந்து சென்றார்.

விரைவிலேயே... ஜாக்ஸன் நகரமும், மிசிசிபி மாகாணமும் எவர்ஸையும் அவரது கொலையினையும் மறந்து போனது.......ஆனால் காலம் எவர்ஸை மறக்கவில்லை. அது எவர்ஸை மீண்டும் உயிர் பெற்று எழ வைத்தது.....சுமார் 26 வருடங்கள் கழித்து...


ஒரு செய்தி

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஒன்பதாம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி, ஜாக்ஸன் நகரில் வெளியாகும் 'க்ளேரியான் லெட்ஜர்' (Clarion Ledger) என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி, அமெரிக்க சட்டவியலில் முக்கியமான ஒரு மைல்கல்லுக்கு அடிப்படையாக விளங்கப் போகிறது என்பதை யாரும் முதலில் அறிந்திருக்கவில்லை.

"State Checked Possible Jurors in Evers Slaying"

என்ற தலைப்பில் ஜெரி மிட்சல் என்ற நிருபர் எழுதியிருந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஜாக்ஸன் நகர மக்கள் கவனத்தை கவர்ந்தது. அந்த தலைப்பின் அர்த்தம், 'எவர்ஸ் கொலை வழக்கில் அரசு, போதுமான ஜுரர்களை பெக்வித்துக்கு சாதகமாக சரிகட்டியிருந்தது'.

இந்த விஷயம் வழக்கு நடந்த 1964-ம் ஆண்டே அரசல் புரசலாக ஜாக்ஸன் மக்கள் அறிந்திருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், மாகாண ஆளுஞர் நீதிமன்ற வளாகத்திலேயே குற்றம் சாட்டப்பட்டிருந்த பெக்வித்தை வாஞ்சையாக கட்டியணைத்தார் என்ற செய்தி அப்போதே வெளியானது. மேலும் மிசிசிபி அரசு, பெக்வித்துக்கு எதிரான தீர்ப்பினை அஞ்சியது.

முன்னதாக, அரசு 1950-ம் வருடம் இறையாண்மைக் குழுமம் (Sovereignty Commission) என்ற அமைப்பினை இனவாத பிரிவினையினை மேம்படுத்தும் பொருட்டு ஏற்படுத்தியிருந்தது. எவர்ஸ் வழக்கில் அந்த குழுமம், பெக்வித் விடுதலைக்கு வேண்டி, சாதகமான ஜூரர்களை நியமிப்பதில் மற்றும் சரிகட்டுவதில் முழுதாக ஈடுபடுத்தப்பட்டு அதன் காரணமாகவே பெக்வித் விடுதலை செய்யப்பட்டார் என்ற ஆராச்சியினைத்தான் மிட்செல் கட்டுரையாக வடித்திருந்தார். வழக்கின் அனைத்து ஜூரர்களும் வெள்ளையின ஆண்கள். மிட்சல் அதில் கூறினாரா என்று தெரியாது, பல போலீஸ் மற்றும் நீதிபதிகள் கூட குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக செயல்பட்டனர் என்று நான் படித்தேன்.

ஆனாலும், கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க சமுதாயம் அதன் கண்ணோட்டம் மற்றும் இனவாதத்துக்கு எதிரான குரல்களில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இறையாண்மைக் குழுமம் என்ற பெயரில், அரசு நிறுவனமே இனவாதத்தினை போற்றுவதெல்லாம் பழங்கனவாகியிருந்தது. எனவே மிட்சலின் இந்த கட்டுரை ஜாக்ஸன் மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இரண்டொரு நாளில், கலிஃபோர்னியோவில் குடியேறிவிட்ட மைரில்லேவின் பேட்டியுடன் மிட்சல் தனது அடுத்த கட்டுரையினை எழுதியிருந்தார். மைரில்லே, எவர்ஸ’ன் கொலையாலும் தனக்கு கிடைக்காத நீதியினாலும் மனம் சோர்ந்து விடவில்லை. தானும் தனது பிள்ளைகளும் நல்ல கல்வியினைப் பெற்று சமூக முன்னேற்றமடைவதுதான், எவர்ஸுக்கு தான் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலி என்பதை அறிந்திருந்தார். தனது தொடர்ந்த கல்வியின் பயனாக லாஸ் ஏஞ்சல் நகரின் பொதுப் பணித்துறையின் ஆணையர் என்ற பதவியில் இருந்தார். அவரது மகன்களும் மகளும் கூட நல்ல நிலமையில் இருந்தார்கள். ஆனாலும் எவர்ஸின் கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற வைராக்கியம் அவரை விட்டுப் போகவில்லை. அந்த வைராக்கியத்தின் காரணமாகவே, இருபத்தைந்து வருடங்களாக அவர் ஒரு ஆவணத்தினை கட்டிக் காத்து வந்தார். அது, எவர்ஸ் கொலைவழக்கின் அனைத்து விபரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள். அந்த பேட்டியில் மைரில்லே எவர்ஸ் கொலை வழக்கு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கிடையில், ஜாக்ஸன் நகர அட்டார்னிக்கும் அவரது உதவி அட்டார்னியான பாபி டிலாஃப்டருக்கும் (Bobby DeLaughter) மிட்சலின் கட்டுரை பெரிய பிரச்னையாகி விட்டது. " எவர்ஸ் கொலை மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்" எனவும்.... " கூடவே கூடாது, அது பல பழைய புண்களைக் கிளறும் ஒரு செயல்" என்றும் அநேக குரல்கள், தொலைபேசி வேண்டுதல்கள். ஒரு சட்ட வல்லுஞரின் பார்வையில் 25 வருடங்களுக்கு பின்னர் மறுவிசாரணை என்பது ஒரு கேலிக்கூத்து. மேலும் ஒரே குற்றத்திற்காக ஒரு நபர் இரண்டு முறை விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடாது. எது எப்படியாயினும் குறைந்த பட்சம் புதிய சாட்சிகளாவது வேண்டும்.

ஆனால், சட்டச் சிக்கல்கள் மக்களுக்கு புரிய வேண்டுமே. பாபியும் அவரது மேலதிகரியான நகர அட்டார்னி எட்டும் (Ed) இனவாதிகள் என்று பொறுமையிழந்த சிலர் குற்றம் சாட்டினர். பாபிக்கு மக்களை திருப்திப்படுத்த வேண்டியாவது எவர்ஸ் விசாரணை மறுவிசாரணை செய்யப் படவேண்டியது அவசியம் என்று பட்டது. எட், 'உன்பாடு. எதுவும் செய்துகொள்' என்று சொல்லி விட்டார்.

இந்த வழக்கை தான் கையிலெடுப்பதே, வழக்கறிஞர்கள் வட்டத்தில் தன்னை நோக்கி கேலிக்கணைகளை செலுத்தும் என்பதை பாபி அறிந்திருந்தாலும், அவர் பிரச்னை அதுவல்ல. எங்கு விசாரணையினை ஆரம்பிப்பது என்று அவருக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.

வழக்கில் பங்கெடுத்த ஜூரர்களின் பெயர்களைத் தவிர எவர்ஸ் வழக்கினைப் பற்றிய வேறு எந்த விபரமும் அவரிடம் இல்லை. ஜூரர்களில் சிலரை விசாரணை செய்ததில் அவருக்கு எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. வழக்கு சம்பந்தமாக சிலருக்கு அவர் விசாரணைக்காக கடிதம் எழுதியிருந்தார். அவற்றில் ஒருவர் மைரில்லே. மைரில்லே தனது அலுவலகத்துக்கு வருவார் என்று பாபி எதிர்பார்க்கவே இல்லை. வந்தது பெரிய ஆச்சர்யம். மைரில்லேவிடம், பாபி எவர்ஸ் வழக்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆவணச் சாட்சி, அதாவது துப்பாக்கி, புகைப்படங்கள், தோட்டா போன்ற எதுவும் தன்னிடம் இல்லையென்றும், முக்கியமாக சாட்சிகளை எங்கு சென்று தேடுவது என்றும் மெல்லக் கூறினார். ஆனால் அந்த சந்திப்பின் முடிவில் மைரில்லேவின் உறுதி பாபியை முற்றிலும் மாற்றியிருந்தது. 'விசாரணையின் எந்தவொரு புதிய முன்னேற்றத்தினையும் தனக்குத் தெரிவிக்குமாறு' வேண்டி மைரில்லே பாபியின் கைகளை தன் கைகளால் மெல்ல அழுத்தி விடை பெற்றுக்கொண்டார்.

ஒரு புலன் விசாரணை

மைரில்லே பாபியை சந்தித்த பின் நடந்த காரியங்கள்தான், அமெரிக்க குற்றவியல் வரலாற்றிலேயே ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் அடங்கிய ஒரு புலன் விசாரணை.

மிட்செல்லின் கட்டுரை வெளிவந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. டிசம்பர் ஐந்தாம் தேதி, ஜாக்ஸன் காவல்துறை புகைப்பட நிபுணர் தனது அலுவலக அலமாரிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவர் கண்ணில் பட்டது ஒரு போட்டோ. அது 1963-ம் வருடம் எவர்ஸ் கொலை நடந்த பின் எடுக்கப்பட்ட, கொலை நடந்த இடமான அவரது வீடு, மற்றும் வழக்கோடு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள். உடனடியாக அவர் தொடர்பு கொண்டது பாபி. விரைந்து வந்தார் பாபி. புகைப்படத்தை பார்த்த பாபியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனாலும் இது ஒரு சிறிய ஆரம்பம்தான் என்பதும் அவருக்கும் தெரிந்திருந்தது.

வழக்குக்கு அடுத்த முக்கிய தேவை...துப்பாக்கி. நீதிமன்ற அலுவலரை விசாரித்ததில், அந்த நாட்களில் வழக்கு முடிந்தவுடன் முக்கியமான பொருட்களை நீதிபதிகள் தங்களுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுவர் என்ற செய்தி கிடைத்தது. உடனடியாக எவர்ஸ் வழக்கை விசாரித்த நீதிபதியின் பேரனை அணுகினார். அதனால் பயன் எதுவும் இல்லை.

சோர்ந்து போன பாபிக்கு கிறிஸ்மஸுக்கு பிறகு திடீரென தோன்றியது, 'அவரது மாமனார் வீட்டில் சில துப்பாக்கிகளை பார்த்ததான' ஞாபகம். அவர் மாமனார் ஒரு நீதிபதி. பாபி உடனடியாக அங்கு விரைந்தார். உயிருடன் இருந்த அவரது மாமியாரோ, தனது கணவரின் பொருட்கள் வீட்டின் மேலே மாடியில் இருப்பதாக கூறினார். அங்கிருந்த ஒரு பழைய பெட்டியில் சில துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்றை பார்த்த மாத்திரத்திலேயே பாபிக்கு தெரிந்து போனது...அதுதான் அந்த துப்பாக்கி என்று.....அதில் ஒட்டப்பட்டிருந்த துண்டுச்சீட்டில்....OML 6/12/63 என்று எழுதியிருந்தது. OML எவர்ஸ் வழக்கை விசாரித்த டிடக்டிவ் ஒ.எம்.லூக். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட எவர்ஸ் வழக்கின் துப்பாக்கி என்பதை பாபி முழுவதுமாக உண்ர்ந்த போது....தனது மயிர்க்கால்கள் குத்திட்டதாக பின்னர் கூறியுள்ளார்.

இதுவும் போதாது என்பது பாபிக்குத் தெரியும். இதற்கிடையில் தற்போது எழுபது வயதினைக் கடந்திருந்த பெக்வித் தன் பொருட்டு நடந்து கொண்டிருக்கும் கூத்தினை கிண்டல் செய்து கொடுத்த பேட்டி டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்து பாபிக்கு மேலும் கடுப்பேற்றியது.

இந்த வழக்கின் அடுத்த அதுவும் முக்கியமான முன்னேற்றத்துக்கு நன்றி சொல்ல வேண்டியது கூ-க்ள்க்ஸ்-க்ளானுக்கு. 1964ம் வருடம் கொல்லப்பட்ட வேறு சில கறுப்பினத்தவரைப் பற்றிய 'Mississippi Burning' என்ற திரைப்படம் ஓரியன் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. அதில் க்ளான் பற்றிய தகவல்கள் தவறானது என்று க்ளான் ஓரியன் நிறுவனம் மீது ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஒரியனுக்காக வழக்காடிய வக்கீல் ஜேக் ஏப்ளஸ், பாபியின் நண்பர். க்ளான் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜேக் படித்துக் கொண்டிருந்த பல புத்தகங்களில் ஒன்று "Klandestine"

டெல்மர் டென்னிஸ் (Delmer Dennis) முதலில் ஒரு பாதிரியார். பின்னர் க்ளான் உறுப்பினர். கடைசியில் மனது மாறி எஃப்.பி.ஐ ஆள்காட்டியாக மாறி ஒரு வழக்கில் க்ளான் உறுப்பினர்களுக்கு எதிரான முக்கிய சாட்சியாக மாற்றப்பட்டார். அவரைப் பற்றியதுதான் அந்த புத்தகம். அதில் ஒரு பக்கத்தைப் படித்ததும் ஜேக்குக்கு ஞாபகம் வந்த நபர் பாபி. உடனடியாக பாபிக்கு போன் செய்து, அந்த பக்கத்தை படித்தார்...

அந்தப் பக்கத்தில் டெல்மர் ஒரு க்ளான் கூட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் பெக்வித் கலந்து கொண்டு பேசியது, "நமது மனைவியர் குழந்தை பெறுவதற்க்காக எவ்வளவு சிரமப்படுகிறார்களோ...அந்த நீக்ரோவைக் கொன்றதில் அதை விட அதிகமாக, என் மனதில் வலி எதுவும் இல்லை"

முதல் முறை நடந்த விசாரணையில் இல்லாத, முதல் சாட்சி! அப்படித்தான் பாபி நினைத்திருக்க வேண்டும். ஆனால் டென்னிஸை எப்படித் தேடுவது. அவர் க்ளான் தீவிரவாதிகளுக்கு பயந்து எங்கோ மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி பாபி யோசித்துக் கொண்டிருந்த போது, மிட்செல்லிடம் இருந்து தொலைபேசி அழைப்பு, 'என்ன, வழக்கில் எதாவது முன்னேற்றமுண்டா?'. பாபி அவரிடம் டென்னிஸ் பற்றி சொன்னார்.

'அப்படியா? இதோ, டென்னிஸின் தொலைபேசி எண் தருகிறேன். எழுதிக் கொள்ளுங்கள்' பாபி தன்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டார்.

டென்னிஸ் இருந்தது செவியர்வில்லெ என்ற பகுதியில். அங்கு போவதற்கு நாள் குறித்துக் கொண்ட பின், பாபிக்குத் தோன்றியது, பெக்வித்தைப் பார்த்தால் என்ன? என்று. பெக்வித் போனில் சிரித்ததாக கூறுகிறார். வழக்கின் இரண்டு தரப்பு கருத்தையும் கேட்க வேண்டி, அவரைப் பார்க்க முடியுமா? என்று கேட்டதற்கு பெக்வித்தின் பதில், "தாங்கள் ஒரு காக்கேசிய வெள்ளை இனத்தவரைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் என்னைக் காண வரலாம். உங்களுடன் வருபவர்களும் அப்படியே" பின்னர் பெக்வித் தான் சொல்லும் இடத்துக்கு தனியாக வருவதனால் பாபியினை சந்திப்பதாக சொல்ல அந்த சந்திப்பு நிகழவேயில்லை.

டென்னிஸ், தனது வீட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ள காட்டின் உட்புறம், ரகசியமாக பாபியை சந்தித்தார். புத்தகத்தில் எழுதப்பட்ட விஷ்யங்கள் உண்மைதான் என்றார். தன்னை ஃஎப்.பி.ஐ வேறு கொலைகளுக்கான சாட்சியாக தயார்படுத்தி வந்ததால், எவர்ஸ் வழக்கில் தான் யாரென்று காட்டிக்கொள்ளும் வண்ணம் போலீஸிடம் தெரிவிக்க முடியவில்லை என்றார். ஆனால், தற்போது பாபியின் அழைப்பில் நீதிமன்றம் வர தயங்கினார்.

"நான் 25 வருடங்கள் கஷ்டப்பட்டு விட்டேன். அவன் கிழவனாக இருக்கலாம். ஆனால் மிகவும் பயங்கரமான கிழவன்'. சரி, கோர்ட் மூலம் சம்மன் அனுப்பிவிட்டால் போகிறது என்று பாபி நினைத்தார்.

பாபிக்கு மற்றொரு பெரிய பிரச்னை, எவர்ஸ் வழக்கு ஆவணங்கள். அவை நீதிமன்றத்தில் இல்லை. பழைய ஆவணங்களை அழித்து விட்டார்கள். 'எவர்ஸ் வழக்கு' என்ற ஒரு வழக்கு நடைபெற்றதற்கான சட்டபூர்வமான ஆவணங்கள் இருந்தாலொழிய எந்த வழக்கின் மறு விசாரணைக்காக நீதிமன்றத்தினை அணுக முடியும். ஒருநாள் மிட்செல் பாபியிடம் ஒரு பார்சலைத் தந்தார். திறந்து பார்த்தால் மிசிசிபி அரசு எதிர் பைரன் டி ல பெக்வித் என்ற 1964-ம் ஆண்டு வழக்கின் முழு விபரங்களின் நகல்.

'அசல், எவர்ஸ’ன் மனைவி மைரில்லேவிடம் உள்ளது. அதனை யாரிடமும் கொடுக்க அவருக்கு பயம்'

'இதுவே போதும்...வழக்கு நடைபெறும் போதுதான் அசல் தேவைப்படும்' பாபி. பின்னர் மைரில்லே அசலையும் பாபியிடம், முழு நம்பிக்கை கொண்டு தந்து விட்டார். எந்த சக்தி மைரில்லேவை, அந்த ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவியது?

பின்னர், பெக்வித்துக்கு அலிபியாக நின்ற காவலர்களை பாபி சந்தித்தார். பெக்வித் வழக்கறிஞர்களால் சரிகட்டப்பட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இவர்களை குறுக்கு விசாரணை செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

இந்த விசாரணைகளைப் பற்றிய பத்திரிக்கை செய்திகள், பாபியை மிகவும் பாதித்தன. அவருக்கும் மற்றவர்களுக்கும் அநேக மிரட்டல்கள் வேறு. பலர், ஏன் அநாவசியமாக இதனை கிளறி அரசு பணம் வீணாக்கப்படுகிறது என்று ஆதங்கப்பட்டனர். ஒருமுறை, தனது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் தனது பெற்றோர் வீட்டில் தங்க வேண்டி வந்தது. விரைவில் மேலும் ஆச்சர்யங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கழ்ந்தன.

1990 செப்டம்பரில் பாபிக்கு ஒரு தொலைபேசி. அழைத்தவர் தன்னை பெக்கி மார்கன் என்று சொல்லிக் கொண்டார். பல வருடங்களுக்கு முன்னர் பெக்வித் அவரது தெருவில் வசித்தவர். ஒருமுறை சிறைக்கு தனது கணவரின் தம்பியை பார்க்க சென்ற மார்கனின் காரில் பெக்வித்தும் தொத்திக் கொண்டாராம். பின்னர் தான் சிறைக்கு வந்த விஷயத்தை யாரிடமும் மார்கன் சொல்லக்கூடாது என்ற மிரட்டலில், ' நான் அந்த நீக்ரோவைக் கொன்றேன். ஆனால் யாராலும் அதனை நிரூபிக்க முடியவில்லை. எனவே, நீங்களும் வாயை மூடிக் கொள்வது நலம்' என்றாராம். மற்றுமொரு புதிய சாட்சி. துள்ளிக் குதித்தார் பாபி.

விரைவில் மற்றுமொரு தொலைபேசி, மேரி ஆன் ஆடம்ஸ் என்பவரிடம் இருந்து. அவர் ஒருமுறை தனது நண்பருடன் உணவகத்தில் இருந்த போது, அவரது நண்பருக்குத் தெரிந்த சிலர் அங்கு வந்து, அவர்களுடன் வந்த ஒரு நபரைக் காட்டி, 'இது யார் தெரிகிறதா? இவர்தான் அந்த எவர்ஸ் என்ற விலங்கைக் கொன்றவர்' என்றவுடன் அந்த நபரும் அதனை ஆமோதிக்கும் வண்ணம் தலை ஆட்டினாராம். அவர்தான் பெக்வித். பின்னர் ஆடம்ஸ், 'ஒரு கொலைகாரனுடன் நான் கைகுலுக்க முடியாது' என்று மறுக்க அவருக்கும் பெக்வித்துக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

பாபிக்கு தனது அதிஷ்டத்தினை நம்ப முடியவில்லை. எப்படி இந்த சாதாரண மனிதர்கள், தங்கள் உயிரையும் பற்றிக் கவலைப்படாமல் வலிய, நீதிக்கு துணை நிற்க முன் வருகிறார்கள். இந்தியர்கள் இவர்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் இத்துடன் முடியவில்லை சாட்சிகள். பெக்வித் மீதான இரண்டாவது நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பித்த பின்னர், இவ்வாறாக முன்வந்த மற்றொரு சாட்சி மிக முக்கியமானது.

மார்க் ரெய்லி 1979-ல் ஒரு சிறை அலுவலர். அந்த சிறையில் வேறு ஒரு குற்றத்திற்காக பெக்வித் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ரெய்லிக்கும் பெக்வித்துக்கும், அப்பா-மகன் போன்ற உறவு ஏற்பட்டு பெக்வித் அவரிடம் தனது கொள்கைகளை சொல்லிக் கொண்டு இருப்பாராம்.

'கறுப்பர்கள், வெள்ளையர்களுக்கு அடிமைத்தனம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள். அவர்கள் அதனை மீறிச் செல்லும் போது அவர்களை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை'.

ஒருமுறை பெக்வித் சிறை மருத்துவமனையில் அடைக்கப்பட்டிருந்த போது அவருக்கு பணிவிடை செய்வதற்கு வந்த கறுப்பின செவிலியரை பார்த்து பெக்வித், வேறு வெள்ளை செவிலியரை அனுப்பச் சொன்னாராம். அதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பெக்விக் கோபத்தில் கத்தினாராம், ' அவ்வளவு பெரிய ஆள்னு நினைத்துக் கொண்டிருந்த அந்த நீக்ரோவை, தீர்த்துக் கட்டிய எனக்கு...நீயெல்லாம் எம்மாத்திரம்' இதனை கேட்டுக் கொண்டிருந்த ரெய்லியோடு சேர்த்து பெக்வித்துக்கு எதிரான புதிய வாய்மொழிச் சாட்சிகள் நான்கு. முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த நால்வருமே பெக்வித்துக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமான வெள்ளையர்கள். இவர்களது மனச்சாட்சிக்கு இவர்கள் அடிபணிந்தது என்னை ஒரு இந்தியனின் கண்ணோட்டத்தில் ஆச்சர்யப்பட வைக்கிறது. ஆச்சர்யங்கள் இன்னும் முடியவில்லை...


மறு விசாரணை


1990, டிசம்பரில் பெக்வித் மீது மறுபடியும் கொலைக்குற்றசாட்டுகள் புனையும் பொருட்டு க்ராண்ட் ஜூரர்களை கிடைத்த ஆதாரங்களின் பெயரில் பாபி அணுகினார். அவர்கள் அனுமதியின் பேரில்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஜூரர்களின் அறையிலிருந்து வெளியே வந்த பாபியின் முகத்திலிருந்த பெரிய புன்னகையிலிருந்தே....முடிவை, இதற்காக நீதிமன்றம் வந்திருந்த மைரில்லே தெரிந்து கொண்டார். பாபியை கட்டி அணைத்து விசும்பினார், 'நாம் வெகு தூரம் வந்து விட்டோம்'.

பாபி நினைத்தார்,'அமாம்..ஆனால் நாம் வெகு தூரம் இன்னும் போக வேண்டி உள்ளது'.

மூன்று நாட்களில் பெக்வித் எவர்ஸ் கொலை வழக்கின் விசாரணைக் கைதியாக சிறைக்கு அனுப்பப்பட்டார். பெக்வித்தின் மனைவி தன்னுடைய விடுமுறைக் காலத்தை பாபி கெடுத்து விட்டதாக கூறி, அதற்காக அவர் தண்டிக்கப்படுவார் என்று மிரட்டினார்.

ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ள வந்த புகழ் பெற்ற டாக்டர்.மைக்கேல் பேடன் என்ற தடயவியல் நிபுணரை பாபியும் எட்டும் சந்தித்து, எவர்ஸ் வழக்கு பற்றிக் கூறினர். பேடன், ' உயர் சக்தி வாய்ந்த ரைபிள் தோட்டா, எலும்பில் பட்டிருக்கும் வேளையில் அதில் நட்சத்திர வடிவிலான ஒரு துளையிருக்கும்' என்றார். பாபி, மைரில்லே அனுமதியுடன் மறு பிரேத பரிசோதனை செய்துவிடலாம் என்று தீர்மானித்தார். தந்தையின் முகமே அறியாத எவர்ஸின் கடைசி மகன் எவர்ஸின் உடலைப் பார்க்க விரும்பினார். உடல் பார்க்கத் தகுந்த நிலையில் இருக்கும் பட்சத்தில் அனுமதிப்பதாக பாபி கூறினார்.

அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது எவர்ஸின் பெட்டியில். பெட்டியில் எவர்ஸின் உடல், நேற்றுத்தான் மரித்தது போல எவ்வித அப்பழுக்கும் இன்றி புத்தம் புதிதாக இருந்தது. அருகில் ஹோட்ட்லில் தங்கியிருந்த எவர்ஸின் கடைசி மகன் வரவழைக்கப்பட்டார். உடல் புகைப்படம் மற்றும் எக்ஸ்ரே படம் எடுக்கப்பட்டது, எலும்பில் உள்ள நட்சத்திர துளைக்காக...

எவர்ஸின் உடலைப்பற்றி பாபி கேட்டதற்கு மைக்கேல் பேடன், 'உடல் சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்டது (embalm) மற்றும் பெட்டி நாலு மீட்டர் ஆழத்தில், ஈரப்பதமின்றி வைக்கப்பட்டதால் இருக்கலாம்' என்றார்.

தனியே பாபியிடம் பேடன், 'நான் விஞ்ஞானி. இது விஞ்ஞான விளக்கம். அதற்கு மேலே நான் சொல்லக்கூடியதெல்லாம்....நீங்கள் கடவுளை நம்புபவரா? அப்படியெனில் உங்களால் விஞ்ஞானமற்ற விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியும்'. ஆரம்பமுதலே....பல ஆச்சர்யங்களை இந்த வழக்கில் பார்த்துவிட்ட பாபியால் பேடனில் விளக்கத்தை ஆமோதிக்க முடிந்தது.

என்ஸ்ரே முடிவு நட்சத்திர துளையை உறுதி படுத்தியது.

நீதியின் வெற்றி

ஒருவழியாக, வழக்கு விசாரணை 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்தது. முதல் சாட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் மைரில்லே. தனது கணவர், அவரது கொள்கைகள் மற்றும் கொலை பற்றி அவர் அளித்த சாட்சியே ஜூரர்களை அவர் பக்கம் ஈர்த்தது. பின்னர் புதிய சாட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக, பெக்வித் எவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களிடம் எவர்ஸ் கொலையை ஒத்துக் கொண்டதாக கூறினர். ஆனாலும் பெக்வித் அதீத நம்பிக்கையுடன், அரசுத்தரப்பை தினமும் கேலி செய்து கொண்டிருந்தார்.

பிப்ரவரி மாதம் நான்காம் தேதி பாபி தனது வாதத்தை தொடங்கினார்.

'பெக்வித்தின் துப்பாக்கி, அதில் பொருத்தப்பட்டிருந்த தொலைநோக்கி, அவரது கைரேகை, அவரது கார் எல்லாம் அவருக்கு எதிராக இருந்தாலும் இதையெல்லாம் மீறி அவருக்கு எதிரான பெரிய சாட்சி அவரது வாய்.........ஆவணங்கள் அதிகம் அவருக்கு எதிராக இருக்கிறது ஆனால் இதையெல்லாம் மீறி அவர் தனது வாய் மூலம் கக்கிய விஷம்...அதை நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அவர் கக்கிய விஷம் இன்று அவருக்கு பாதகமாக வந்துள்ளது......'

அடுத்த நாள் தீர்ப்பு. ஜூரர்கள் வழக்கத்தை விட அதிகமான நேரம் எடுத்துக் கொண்டனர். அனைவர் முகத்திலும் தவிப்பு. இறுதியில் நீதிபதி ஹ’ல்ப்ர்ன் பெக்வித்தை குற்றவாளி என்று அறிவித்து....தண்டனைக்காக எழுந்து நிற்க சொன்னபோது நீதிமன்றமே அதிர்ந்தது......நீதிமன்றத்துக்கு வெளியே அதை விட அதிக ஆரவாரம்.

பெக்வித்தின் முகத்தில் முதல் முறையாக கேலிப் புன்னகை மறைந்து போனது. மைரில்லே பாபியை கட்டிக் கொண்டார். அவர் முகத்தில் 25 வருடங்களுக்கு முன் தொலைந்து போன ஒரு மலர்ச்சி வந்து புதிதாக ஒட்டிக் கொண்டது போல இருந்தது.....


பின் குறிப்பு:-

மிசிசிபி உச்ச நீதிமன்றம் 1997 ம் வருடம், ஜாக்ஸன் நகர நீதிமன்றம் பெக்வித்துக்கு அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. எவர்ஸ் வழக்கு அறுபதுகளில் ஊற்றி மூடப்பட்ட வேறு சில கறுப்பினத்தவரின் மீதான் குற்ற வழக்குகளை உயிர் பெற்று எழ செய்து....இறுதியில் மிசிசிபி நீதித்துறை தனது கேவலமான வரலாற்றுக்கு பரிகாரம் தேடிக் கொண்டது.

பாபி எவர்ஸ் வழக்கு எப்படி தனது சொந்த வாழ்க்கையினை பாதித்தது என்றும் மற்ற பல விபரங்களையும் 'Never Too Late" என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் சுருக்கத்தினன ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்து அதனையும் சுருக்கி மொழிபெயர்த்துள்ளேன். இந்த வழக்கின் காரணமாக மனைவியே வெறுத்துப் போய் அவரையும் அவரது குழந்தைகளையும் பிரிந்து விட, பாபி அவரைப் புரிந்து கொண்ட புதிய மனைவி தேடிக் கொண்டார். தற்போது அவர் ஒரு நீதிபதி.

எவர்ஸ் வழக்கு 'The Ghosts of Mississipi' என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது. மைரில்லேவாக நடித்தது... வேறு யாராக இருக்கும்? ஊஃபி கோல்ட்பெர்க்!

1.10.06

வைகோ விடுதலையும் தாராள எண்ணங்களும்...II



ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது? ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை தரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்?

பொருளாதாரத்தின் முக்கியமான கோட்பாடான 'Doctrine of Diminshing Retrun' என்பது சட்டத்திற்கும் பொருந்துகிறது.

சட்டமானது மக்களின் அடிப்படி சிந்தனைகளுக்கு (common sense) மாறாக அதிகதிகமாக திரும்புகையிலும் மற்றும் மக்களின் சுதந்திரமான எண்ணங்களிலிருந்து அவர்களை விலக்கி வைக்க மேலும் மேலும் முயலுகையிலும் சட்டத்திற்கு கீழ்ப்படிதலின் அளவும் குறைந்து கொண்டே போக வாய்ப்பு இருக்கிறது.


இந்திய தண்டனைச் சட்டத்தின் 125 மற்றும் 126ம் பிரிவினைப் பற்றி கூறினேன். அந்தப் பிரிவுகள் இயற்றப்படுகையில் இலங்கை, பர்மா போன்றவை நம்முடன் அமைதியைப் பேணும் வேறு நாடுகள் ஆயினும் அனைத்து நாடுகளின் குடிகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குடிகளாகளே. எனவே, வேறு நாட்டில் அழிம்பினை (Depredation) ஏற்படுத்தும் செயல்கள் இங்கும் குற்றமாக்கப்பட்டன.

தற்பொழுது முழுவதும் சுதந்திரமடைந்த நாடுகளாக இவை இயங்குகையில், இவ்விதமான பிரிவுகள் மக்களின் பொதுக்கருத்துக்கு இசைந்து வருவதில்லை.

கண்ணப்பனோ, வைகோவோ நான் 25 முறை கொலை செய்தேன் என்று கூற தைரியம் கொள்ள முடியாது. ஆனால் பயங்கரவாத இயக்கமாக பொடா சட்டத்தின் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஆதரிப்பதாக பெருமை கொள்கின்றனர் என்றால், சட்டம் மக்களுடைய பொதுவான எண்ணத்தினை பிரதிபலிப்பதாக இல்லை என்றே கூற வேண்டும்.

பெரும்பான்மை எண்ணம் என்று கூட இல்லை, கணிசமான மக்கள் கூட்டம் இவ்வகையான சட்டங்களால் தங்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதாக எண்ணினாலே போதுமானது.

வைகோ தவறு செய்தாரா இல்லையா என்பதை விட இவ்விதமான சட்டங்கள் தாராள எண்ணங்களுக்கு (libertarian) எதிரானவை என்று 'எண்ணங்கள்' பத்ரி சேஷாத்ரி கூறுவது மிகவும் கவனிக்கத் தக்கது. ஏனெனில் ஒருவர் தனது மனதில் கொள்ளும் கருத்தினை வெளிப்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.


உதாரணமாக, பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் பொடா சட்டத்தில் பட்டியலிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஹமாஸ் இயக்கம் பாலஸ்தீன விடுதலைக்கு மட்டுமல்லாது, சமுதாய பணியிலும் தன்னை அதிகமாக ஈடுபடுத்துகிறது. உண்மையில் பாலஸ்தீன மக்களின் ஆதரவை ஹமாஸ் பெறுவதே அதன் சமூக பணிகளின் காரணமாகத்தான். ஹமாஸை பற்றி நான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில் அதன் சிறப்பான சமூக பணிகளை எடுத்துக் காட்டினாலே போதும் அதைக் கூட குற்றமென கூறலாம்.

தமிழீழத்தைப் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுதுகையில் 'விடுதலைப்புலிகள் அங்கு சிறப்பான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்' என்று எழுதினால் அதையும் 'சப்போர்ட்' என்ற ஆங்கில வார்த்தைக்குள் அடக்கிவிடலாம்தான். ஏனெனில் பொடா சட்டத்தின்படி ஒரு இயக்கத்தின் பயங்கரவாத செயல்களை அல்ல, ஒரு இயக்கத்தை ஆதரித்தாலே அது குற்றம் என அரசு நம்மை நம்ப வைக்கிறது.


அடுத்து, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரையாளரான தாமஸ் ஃப்ரீட்மேன் இந்திய இஸ்லாமியர்களை மற்ற நாட்டு முக்கியமாக சவூதி அரேபிய இஸ்லாமியர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறார். ஏன் இந்திய முஸ்லீம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அல்கொய்தா போன்ற அமைப்புகளில் இல்லை என்பதற்கு அவர் கூறும் காரணம் நம் நாட்டில் நிலவும் மக்களாட்சி மற்றும் சுதந்திரமான பத்திரிக்கை அமைப்புகள்.

குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனாலும் இந்தியா முழுமைக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் நடுநிலமை வகிக்கும் இந்துக்கள் ஆகியோர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய முடிகிறது. சிறந்த நாடகாசிரியரான விஜய் டெண்டூல்கர் உணர்ச்சி வெள்ளத்தில் ஒருகணம் தடுமாறி 'என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தால் முதலில் போய் நரேந்திர மோடியை போய் சுடுவேன்' என்று கூறுவது கூட முடிகிறது.

இவ்விதமாக மனதின் எண்ணங்களை சுதந்திரமான வகையில் வெளிப்படுத்த இயலுகையில் பயங்கரவாத எண்ணங்கள் உண்மையில் குறைந்துதான் போகும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், டெண்டூல்கரே தனது வார்த்தைகளுக்கு பின்னர் வருந்தியிருப்பார். அவரது ஆதங்கத்தை கண்ணுற்ற பாதிக்கப்பட்டவர்களில் சிலர், 'இந்த வார்த்தையே போதும்' என்றும் நினைக்கலாம்.

ஆனால் ஆட்சியாளர்கள், எதிலுமே உடனடி பலனை எதிர்பார்க்கும் காவல்துறையினரின் ஆலோசனையின் பெயரில், தீவிரவாத எண்ணங்களை ஒரேடியாக மறுப்பதன் மூலம் இல்லாமல் போகச் செய்யலாம் என்று நம்புகிறார்கள். கவலையை போதையில் மறைக்க முயற்சிப்பது போன்ற செயல்தான் இது.

அல்-கொய்தாவையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயங்கரவாதிகள், யாரையும் வெடி வைத்து பிளப்பார்கள் என்ற கருத்துதான் ஊடகங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அல்கொய்தா யார்? எதற்குத் தோன்றியது? அவர்களது இறுதியான நோக்கம் என்ன? அதில் நியாயம் ஏதும் இருக்கிறதா? நடைமுறை சாத்தியமா? என்பதைப் பற்றிய எந்த ஒரு செய்தியையும், விவாதத்தையும் நான் காணவில்லை.

ஒருவரின் உடல் உபாதைகளை வைத்தே அவருக்கு இருப்பது குணப்படுத்த முடியாத புற்றுநோய்தான் என்று ஒரு மருத்துவர் முடிவுக்கு வருவது எவ்வளவு தவறான செயலோ அந்த அளவுக்கு தவறான ஒரு செயல் இது.

ஒரு பக்கத்து உண்மைகள் முழுவதுமாக மக்களுக்கு மறுக்கப்படுகையில், அந்த நியாயங்களைப் பொறுத்து ஒரு பொதுகருத்து ஏற்படப் போவதில்லை. அவ்விதமான பொதுக்கருத்துகள் ஏற்படாத நிலையில், அந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் எந்த அரசுக்கும் வரப் போவதில்லை. பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

இறுதியாக, இவ்விதமான மாற்றுக் கருத்துகள், எண்ணங்கள் அனுமதிக்கப்படாமல் போகையில் நிலமை மேலும் மோசமாக போவதற்கு நமது நாட்டில் நடந்த ஒரு உதாரணத்தையும் கூற முடியும்.

அவசர காலத்தின் பொழுது ஊடகங்கள் அரசின் குரலை மட்டுமே பிரதிபலித்தன. ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு ஊடகங்களின் பெயரில் நம்பிக்கையே இல்லாமல் வெறும் வதந்திகளையே உண்மையென நம்ப ஆரம்பித்தனர். அரசு அட்டூழியங்கள் புரிந்தாலும், அந்த அட்டூழியங்கள் ஒன்றுக்கு பத்தாக மக்கள் நம்பத் தொடங்கினர். இறுதியில் மக்களுக்கு அரசின் மீது இருந்த ஒட்டு மொத்த நம்பிக்கையும் போய்...அரசினையே தூக்கி எறிந்தனர்.


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது. ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ் காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது. மக்கள் எவ்விதமான எண்ணப்பாட்டை கொள்ள வேண்டும் என்று தீர்மானித்த கம்யூனிச நாடுகளின் நிலை நாம் அறிந்ததுதானே!


சட்டத்தினை பற்றி எழுந்துள்ள பயத்தினால், பட்டியலில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு இயக்கத்தையும் பற்றிய நேர்மையான ஒரு விவாதம் நடத்தப்பட போவதில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல. இணையப் பதிவுகளையே பார்த்தால், ஈழப் பிரச்னையைப் பற்றிய எந்த ஒரு விவாதத்திலும் பங்கு கொள்பவர்கள் 'நான் விடுதலைப் புலி ஆதரவாளன் இல்லை' என்ற ஒரு மறுப்பினை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். யாருமே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இல்லை என்றால் எப்படி அந்த இயக்கத்தால் தமிழீழப்பகுதியில் ஆட்சி செய்ய முடிகிறது. பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இல்லாமல் அதனால் இன்று இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் ஒட்டு மொத்த மக்கள் கூட்டத்தை நாம் எப்படி அப்படியே பெருக்கித் தள்ள முடியும்?

இவ்வாறாக ஒரேடியாக மாற்றுக் கருத்தினை மறுக்க முயன்றால் படிப்படியாக மக்களுக்கும் அரசு வலியுறுத்தும் கருத்தின் மீது உள்ள நம்பிக்கை எவ்வித விவாதத்திற்கும் உட்படாமலேயே, அது நியாயமாக இருப்பினும் மறைந்து போகுமென்பதுதான் வரலாறு நமக்கு கற்பித்த பாடம்.

ஒருவேளை இதை கருத்தில் கொண்டே பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவளிப்பதை குற்றமாக கருதாமல் பொடா சட்டத்தினை எழுதியிருக்கலாம்.

ஆனால், அரசு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குடிமக்களுக்கு இதனை தெளிவுபடுத்தியதாக தெரியவில்லை. ஊடகங்களிலும் செய்தி இல்லை. எனவேதான் ஆதரிப்பதே குற்றம் என்று அரசு கருதி அதனை செயல்படுத்த நினைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இது சரியான வழியல்ல...

மும்பை
21/04/04