ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது? ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை தரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்?
பொருளாதாரத்தின் முக்கியமான கோட்பாடான 'Doctrine of Diminshing Retrun' என்பது சட்டத்திற்கும் பொருந்துகிறது.
சட்டமானது மக்களின் அடிப்படி சிந்தனைகளுக்கு (common sense) மாறாக அதிகதிகமாக திரும்புகையிலும் மற்றும் மக்களின் சுதந்திரமான எண்ணங்களிலிருந்து அவர்களை விலக்கி வைக்க மேலும் மேலும் முயலுகையிலும் சட்டத்திற்கு கீழ்ப்படிதலின் அளவும் குறைந்து கொண்டே போக வாய்ப்பு இருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 125 மற்றும் 126ம் பிரிவினைப் பற்றி கூறினேன். அந்தப் பிரிவுகள் இயற்றப்படுகையில் இலங்கை, பர்மா போன்றவை நம்முடன் அமைதியைப் பேணும் வேறு நாடுகள் ஆயினும் அனைத்து நாடுகளின் குடிகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குடிகளாகளே. எனவே, வேறு நாட்டில் அழிம்பினை (Depredation) ஏற்படுத்தும் செயல்கள் இங்கும் குற்றமாக்கப்பட்டன.
தற்பொழுது முழுவதும் சுதந்திரமடைந்த நாடுகளாக இவை இயங்குகையில், இவ்விதமான பிரிவுகள் மக்களின் பொதுக்கருத்துக்கு இசைந்து வருவதில்லை.
கண்ணப்பனோ, வைகோவோ நான் 25 முறை கொலை செய்தேன் என்று கூற தைரியம் கொள்ள முடியாது. ஆனால் பயங்கரவாத இயக்கமாக பொடா சட்டத்தின் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஆதரிப்பதாக பெருமை கொள்கின்றனர் என்றால், சட்டம் மக்களுடைய பொதுவான எண்ணத்தினை பிரதிபலிப்பதாக இல்லை என்றே கூற வேண்டும்.
பெரும்பான்மை எண்ணம் என்று கூட இல்லை, கணிசமான மக்கள் கூட்டம் இவ்வகையான சட்டங்களால் தங்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதாக எண்ணினாலே போதுமானது.
வைகோ தவறு செய்தாரா இல்லையா என்பதை விட இவ்விதமான சட்டங்கள் தாராள எண்ணங்களுக்கு (libertarian) எதிரானவை என்று 'எண்ணங்கள்' பத்ரி சேஷாத்ரி கூறுவது மிகவும் கவனிக்கத் தக்கது. ஏனெனில் ஒருவர் தனது மனதில் கொள்ளும் கருத்தினை வெளிப்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.
உதாரணமாக, பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் பொடா சட்டத்தில் பட்டியலிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஹமாஸ் இயக்கம் பாலஸ்தீன விடுதலைக்கு மட்டுமல்லாது, சமுதாய பணியிலும் தன்னை அதிகமாக ஈடுபடுத்துகிறது. உண்மையில் பாலஸ்தீன மக்களின் ஆதரவை ஹமாஸ் பெறுவதே அதன் சமூக பணிகளின் காரணமாகத்தான். ஹமாஸை பற்றி நான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில் அதன் சிறப்பான சமூக பணிகளை எடுத்துக் காட்டினாலே போதும் அதைக் கூட குற்றமென கூறலாம்.
தமிழீழத்தைப் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுதுகையில் 'விடுதலைப்புலிகள் அங்கு சிறப்பான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்' என்று எழுதினால் அதையும் 'சப்போர்ட்' என்ற ஆங்கில வார்த்தைக்குள் அடக்கிவிடலாம்தான். ஏனெனில் பொடா சட்டத்தின்படி ஒரு இயக்கத்தின் பயங்கரவாத செயல்களை அல்ல, ஒரு இயக்கத்தை ஆதரித்தாலே அது குற்றம் என அரசு நம்மை நம்ப வைக்கிறது.
அடுத்து, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரையாளரான தாமஸ் ஃப்ரீட்மேன் இந்திய இஸ்லாமியர்களை மற்ற நாட்டு முக்கியமாக சவூதி அரேபிய இஸ்லாமியர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறார். ஏன் இந்திய முஸ்லீம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அல்கொய்தா போன்ற அமைப்புகளில் இல்லை என்பதற்கு அவர் கூறும் காரணம் நம் நாட்டில் நிலவும் மக்களாட்சி மற்றும் சுதந்திரமான பத்திரிக்கை அமைப்புகள்.
குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனாலும் இந்தியா முழுமைக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் நடுநிலமை வகிக்கும் இந்துக்கள் ஆகியோர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய முடிகிறது. சிறந்த நாடகாசிரியரான விஜய் டெண்டூல்கர் உணர்ச்சி வெள்ளத்தில் ஒருகணம் தடுமாறி 'என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தால் முதலில் போய் நரேந்திர மோடியை போய் சுடுவேன்' என்று கூறுவது கூட முடிகிறது.
இவ்விதமாக மனதின் எண்ணங்களை சுதந்திரமான வகையில் வெளிப்படுத்த இயலுகையில் பயங்கரவாத எண்ணங்கள் உண்மையில் குறைந்துதான் போகும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், டெண்டூல்கரே தனது வார்த்தைகளுக்கு பின்னர் வருந்தியிருப்பார். அவரது ஆதங்கத்தை கண்ணுற்ற பாதிக்கப்பட்டவர்களில் சிலர், 'இந்த வார்த்தையே போதும்' என்றும் நினைக்கலாம்.
ஆனால் ஆட்சியாளர்கள், எதிலுமே உடனடி பலனை எதிர்பார்க்கும் காவல்துறையினரின் ஆலோசனையின் பெயரில், தீவிரவாத எண்ணங்களை ஒரேடியாக மறுப்பதன் மூலம் இல்லாமல் போகச் செய்யலாம் என்று நம்புகிறார்கள். கவலையை போதையில் மறைக்க முயற்சிப்பது போன்ற செயல்தான் இது.
அல்-கொய்தாவையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயங்கரவாதிகள், யாரையும் வெடி வைத்து பிளப்பார்கள் என்ற கருத்துதான் ஊடகங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அல்கொய்தா யார்? எதற்குத் தோன்றியது? அவர்களது இறுதியான நோக்கம் என்ன? அதில் நியாயம் ஏதும் இருக்கிறதா? நடைமுறை சாத்தியமா? என்பதைப் பற்றிய எந்த ஒரு செய்தியையும், விவாதத்தையும் நான் காணவில்லை.
ஒருவரின் உடல் உபாதைகளை வைத்தே அவருக்கு இருப்பது குணப்படுத்த முடியாத புற்றுநோய்தான் என்று ஒரு மருத்துவர் முடிவுக்கு வருவது எவ்வளவு தவறான செயலோ அந்த அளவுக்கு தவறான ஒரு செயல் இது.
ஒரு பக்கத்து உண்மைகள் முழுவதுமாக மக்களுக்கு மறுக்கப்படுகையில், அந்த நியாயங்களைப் பொறுத்து ஒரு பொதுகருத்து ஏற்படப் போவதில்லை. அவ்விதமான பொதுக்கருத்துகள் ஏற்படாத நிலையில், அந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் எந்த அரசுக்கும் வரப் போவதில்லை. பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.
இறுதியாக, இவ்விதமான மாற்றுக் கருத்துகள், எண்ணங்கள் அனுமதிக்கப்படாமல் போகையில் நிலமை மேலும் மோசமாக போவதற்கு நமது நாட்டில் நடந்த ஒரு உதாரணத்தையும் கூற முடியும்.
அவசர காலத்தின் பொழுது ஊடகங்கள் அரசின் குரலை மட்டுமே பிரதிபலித்தன. ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு ஊடகங்களின் பெயரில் நம்பிக்கையே இல்லாமல் வெறும் வதந்திகளையே உண்மையென நம்ப ஆரம்பித்தனர். அரசு அட்டூழியங்கள் புரிந்தாலும், அந்த அட்டூழியங்கள் ஒன்றுக்கு பத்தாக மக்கள் நம்பத் தொடங்கினர். இறுதியில் மக்களுக்கு அரசின் மீது இருந்த ஒட்டு மொத்த நம்பிக்கையும் போய்...அரசினையே தூக்கி எறிந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது. ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ் காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது. மக்கள் எவ்விதமான எண்ணப்பாட்டை கொள்ள வேண்டும் என்று தீர்மானித்த கம்யூனிச நாடுகளின் நிலை நாம் அறிந்ததுதானே!
சட்டத்தினை பற்றி எழுந்துள்ள பயத்தினால், பட்டியலில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு இயக்கத்தையும் பற்றிய நேர்மையான ஒரு விவாதம் நடத்தப்பட போவதில்லை.
இந்தியாவில் மட்டுமல்ல. இணையப் பதிவுகளையே பார்த்தால், ஈழப் பிரச்னையைப் பற்றிய எந்த ஒரு விவாதத்திலும் பங்கு கொள்பவர்கள் 'நான் விடுதலைப் புலி ஆதரவாளன் இல்லை' என்ற ஒரு மறுப்பினை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். யாருமே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இல்லை என்றால் எப்படி அந்த இயக்கத்தால் தமிழீழப்பகுதியில் ஆட்சி செய்ய முடிகிறது. பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இல்லாமல் அதனால் இன்று இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் ஒட்டு மொத்த மக்கள் கூட்டத்தை நாம் எப்படி அப்படியே பெருக்கித் தள்ள முடியும்?
இவ்வாறாக ஒரேடியாக மாற்றுக் கருத்தினை மறுக்க முயன்றால் படிப்படியாக மக்களுக்கும் அரசு வலியுறுத்தும் கருத்தின் மீது உள்ள நம்பிக்கை எவ்வித விவாதத்திற்கும் உட்படாமலேயே, அது நியாயமாக இருப்பினும் மறைந்து போகுமென்பதுதான் வரலாறு நமக்கு கற்பித்த பாடம்.
ஒருவேளை இதை கருத்தில் கொண்டே பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவளிப்பதை குற்றமாக கருதாமல் பொடா சட்டத்தினை எழுதியிருக்கலாம்.
ஆனால், அரசு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குடிமக்களுக்கு இதனை தெளிவுபடுத்தியதாக தெரியவில்லை. ஊடகங்களிலும் செய்தி இல்லை. எனவேதான் ஆதரிப்பதே குற்றம் என்று அரசு கருதி அதனை செயல்படுத்த நினைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இது சரியான வழியல்ல...
மும்பை
21/04/04