21.8.06

அர்ச்சகர் பிரச்னையின் பயணம்...

கடந்த சில நாட்களாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் தமிழக அரசு கொணர்ந்த அவரச சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால தடையுத்தரவு’ குறித்த பல வலைப்பதிவுகளை கண்ணுற நேர்ந்தது. முக்கியமாக திரு.பத்ரியின் வலைப்பதிவில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் இரு வழக்குகள் குறித்து எழுதியுள்ளார். பலரும் இவ்விரு வழக்குகள் பற்றியே குறிப்பிடுகின்றனர். இவ்விரு வழக்குகளுக்கிடையில் ஆந்திர மாநிலம் சம்பந்தப்பட்ட 1996ம் ஆண்டு வழக்கு ஒன்றும் உள்ளது. தமிழகம் (1972) ஆந்திரம் (1996) கேரளா (2002) வழக்குகளை ஆராய்ந்தால் எவ்வாறு உச்ச நீதிமன்றமும் கால வெள்ளத்தில் படிப்படியாக தன்னை இந்த பிரச்னையில் தளர்த்திக் கொள்கிறது என்பது புரியும். திரு.ரவி ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவது போலவே 2002 வழக்கிலும் உச்ச நீதிமன்றம் முழுமையான உரிமையினை அளிக்கவில்லை. எனவே தற்போதய தமிழக சட்டம் எவ்வித பிரச்னையுமின்றி உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு (judicial review) தப்பிவிடும் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனெனில் 1972 தமிழக வழக்கின் தீர்ப்பு இன்று வரை 2002 கேரள வழக்கின் தீர்ப்பு உட்பட எந்த தீர்ப்பினாலும் மேலாத்திக்கம் (overrule) செய்யப்படவில்லை. எனவே, 1972ம் வருட தமிழக வழக்கின் தீர்ப்பு உண்மையில் தற்போதைய சட்ட திருத்ததிற்கு எதிரானது என்றே நான் கருதுகிறேன். எனவே, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததில் ஏதும் வியப்பில்லை!

அர்ச்சகர் நியமனம் குறித்த எந்த வழக்கிலும், குறிப்பிடப்படும் உரிமை அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26ம் பிரிவுகள் (Article 25 and 26). 25வது பிரிவு எந்த ஒரு மதத்தினையும் பின்பற்றும் உரிமையினை அளிக்கிறது. 26ம் பிரிவு மத நிறுவனங்களை நிறுவி அவற்றை நிர்வகிக்கும் உரிமையினை அளிக்கிறது. இவை அடிப்படை உரிமைகள். இந்த உரிமைகள் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டவை. முக்கியமாக 25 வது பிரிவின் 2(b) உட்பிரிவு சமுக நலன் மற்றும் சீர்திருத்தம் அல்லது இந்து சமய நிறுவனங்களுக்குள் அனைத்து இன, பிரிவு இந்துக்களுக்கு உட்பிரவேசிக்கும் வண்ணம் சட்டமியற்ற அரசுக்கு முழு உரிமையளிக்கிறது (social welfare and reform or throwing open Hindu religious institutions of public character to all classes and sections of Hindus) இந்தப் பிரிவு கூற விரும்புவது வெறும் ஆலய பிரவேசமா அல்லது ஆலய பணிகளையும் மேற்கொள்வதா என்பதை அறிய இந்தப்பிரிவு குறித்து அரசியலமைப்புக்குழு (constituent assembly) என்ன விவாதித்தது என்பதை ஆராய வேண்டும். சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்பதை தனியே படிக்கையில் அரசின் சட்டதிருத்தம் சமூக சீர்திருத்தம் என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடும் என்றே நான் நினைக்கிறேன். ஆயினும், மேற்கூறிய மூன்று வழக்குகளிலும் இந்தப் பிரிவானது பெருமளவில் அரசினால் கையிலெடுக்கப்படவில்லை.

***

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய சட்டமானது 1959ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் 55வது பிரிவின்படி கோவில் தர்மகர்த்தா (trustee) அர்ச்சகரை நியமிக்கும் உரிமை படைத்தவர். ஆனால் அர்ச்சகர் பரம்பரை அர்ச்சகராயிருக்கும் பட்சத்தில் தர்மகர்த்தாவிற்கு அந்த உரிமை கிடையாது. இந்தச் சட்டத்தினை செயலாக்குவதற்க்கான விதிகள் 1964ம் ஆண்டு (Madras Hindus Religious Institutions (Officers and Servants) Service Rules 1964) இயற்றப்பட்டது. இந்த விதிகளிலேயே சில சீர்த்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. முக்கியமாக, 12ம் விதியின் கீழ் எந்த ஒரு நபரும் அர்ச்சகராக வேண்டுமென்றால், மத நிறுவன தலைவரிடம் இருந்து ‘தகுதி சான்றிதழினை’ பெற வேண்டும். இதன் மூலம் தகுதியற்ற ஒருவர் பரம்பரை உரிமையில் அர்ச்சகராவது தடுக்கப்பட்டது. ஆக இன்றைய நிலைக்கு முதல் செங்கல் வைக்கப்பட்டது 1964ம் ஆண்டில்.

1969ம் ஆண்டு அரசினால் நியமிக்கப்பட்ட ‘அட்டவணை வகுப்பினரின் கல்வி பொருளாதார மேம்பாடு மற்றும் தீண்டாமைக்கான குழு’ அரசிடம் தனது அறிக்கையினை அளித்தது. அவ்வறிக்கை ‘இந்துக் கோவில்களில் உள்ள பரம்பரை அர்ச்சகர் முறையினை ஒழித்து அர்ச்சகர் மற்றும் இதர கோவில் பணிகளை அனைத்து ஜாதியினருக்கும் அளிக்க’ பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையினை ஏற்ற அரசு 1970ம் ஆண்டு மேற்கூறிய சட்டத்தின் 55ம் பிரிவினை மாற்றியது. இதன்படி பரம்பரை அர்ச்சகர் முறை முற்றிலும் அகற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குதான் சேஷம்மா வழக்கு என்று அழைக்கப்படும் 1972ம் வருட வழக்கு!

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளை கொண்ட மன்றம் தமிழக அரசின் இந்த சட்ட திருத்தமானது அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26ம் பிரிவுகளை மீறியதாகாது என்று கூறியது என்னவோ உண்மைதான். ஆனால் அவ்வாறு கூறியதற்கான காரணம் இன்றைய சட்ட திருத்தத்தின் முன் பிரச்னையாக உருவெடுக்கக்கூடும். தமிழக அரசு அப்போது உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்த வாதம் அப்படிப்பட்டது!

1972ல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் முன் வைத்த வாதம், ‘இந்து கோவில்கள் ஆகம நெறிப்படி நிர்வகிக்கப்படுகின்றன. ஆகம முறைப்படி குறிப்பிட்ட வகுப்பினர்தான் விக்ரகத்தை தொட்டு பூசை செய்ய இயலும். வேறு யாரும் அவர் எவ்வளவு பெரிய மதத்தலைவராயினும் சரி, மடாதிபதியாயினும் சரி ஏன் மற்ற பிராமணர்களே விக்ரகத்தை தொடுவது மட்டுமல்ல கர்பகிரகத்தில் பிரவேசித்தாலே விக்ரகம் தீட்டுப்பட்டதாகும்’ என்பதாகும். இந்த வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள தமிழக அரசின் அட்வோகேட் ஜெனரல் சட்ட திருத்தத்தின் நோக்கத்திலிருந்து விலகி ‘இந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தின் 28ம் பிரிவின்படி தர்மகர்த்தா கோவிலை அதனது வழக்கப்படிதான் (usage) நிர்வகிக்க முடியும், எனவே வழக்கம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராயிருக்க வேண்டுமென்றிருந்தால் அவர் அதற்கு கட்டுப்பட்டவர். திருத்திய 55ம் பிரிவிலும் அவர் வழக்கத்தினை மீற வேண்டும் என்று கூறப்படவில்லையே’ என்று பின் வாங்க ‘அப்படியாயின் பரம்பரையாக அர்ச்சகரை நியமிப்பதும் பழக்கம்தானே’ என்று வழக்கு தொடர்ந்தவர்கள் முன்னேறினர். தமிழக அரசு மேலும் இறங்கி வந்து ‘பரம்பரை அர்ச்சகர் முறைதான் ஒழிக்கப்படுகிறதே தவிர அர்ச்சகரின் மகன் அவருக்கு பின்னர் அர்ச்சகராவதற்கு தடையேதும் இல்லையே...நடைமுறையில் அவரையே தர்மகர்த்தா நியமிக்க போகிறார்’ என்று வாதிட்டு மேலும் ‘அர்ச்சகர் நியமனம் மதம் சாராத (secular) பணி, இறைப்பணியல்ல (religious)’ என்று கூற உச்ச நீதிமன்றமும் ‘ஆமாம், அர்ச்சகர் என்பவர் ஒரு மடாதிபதியினைப் போல நிறுவனத்தின் மதத்தலைவராக மாட்டார்’ என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தது. ஆனால் தனது தீர்ப்பில் தெளிவாக ‘பரம்பரை வழக்கப்படி அர்ச்சகரை நியமிக்கும் கடப்பாட்டிலிருந்து மட்டும், மட்டுமே (to that extent and to that extent alone) தர்மகர்த்தா கோவிலின் பழக்கத்திலிருந்து விலகமுடியும்’ என்று கூறியது. இறுதியில் ‘ஜாதி பேதமின்றி அனைவரும் அர்ச்சகராகும் வண்ணம் அரசு அர்ச்சகருக்கான தகுதி குறித்த விதிகளை எதிர்காலத்தில் மாற்றி விடும்’ என்ற அச்சம் வழக்கு தொடுத்தவர்களால் முன் வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றாமோ அவ்வாறு கோவில் பழக்கத்திற்கும் வழிப்பாட்டு முறைகளுக்கும் மாறாக விதிகள் மாற்றப்பட்டால், கோவில் வழிபாட்டில் உரிமையுள்ளவர்கள் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கொள்ளலாம்’ என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது.

***

அடுத்த வழக்கு ஆந்திர அரசு 1987ம் வருடம் கொணர்ந்த இந்து சமய அறநிலைய சட்டத்தின் பிரிவுகளை எதிர்த்து. இங்கும் பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டதே வழக்கிற்கான மூலம். வழக்கினை தொடுத்தது திருமலை திருப்பதியின் தலைமை அர்ச்சகர்களில் ஒருவர். வழக்குரைஞர் திரு.பராசரன். சேஷம்மா வழக்கில் திரு.நானி பல்கிவாலா!

நாராயண தீக்ஷிதுலு என்று அழைக்கப்படும் 1996ம் வருட ஆந்திர தீர்ப்பு சுவராசியமானது. நான் படித்த புத்தகத்தில் சுமார் 69 பக்கங்களுக்கு உள்ள இந்த தீர்ப்பின் 50 பக்கங்கள் சுவாமி விவேகானந்தர், அரவிந்தரிலிருந்து பல்வேறு மேல் நாட்டு அறிஞர்கள், இந்திய அறிஞர்கள் ஆகியோரின் எழுத்து, பேச்சிலிருந்து மேற்கோள்கள். தத்துவத்தை படிப்பதில் ஆர்வமிருப்பவர்களால் மட்டுமே முழுவதும் படிக்க இயலக்கூடிய தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மட்டுமே அடங்கிய இந்த மன்றமானது சேஷம்மா வழக்கிற்கு எதிராக ஏதும் கூற இயலாது. ஆனால் குறிப்பிடத்தகுந்த ஒரு வித்தியாசம் உண்டு. சேஷம்மா வழக்கில் ‘மற்றவர்கள் தொடுவதால் விக்ரகம் தீட்டுப்படும்’ என்று கூறக்கூடிய ஒரு ஆகமத்திலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டது. தீஷிதுலு வழக்கிலோ மேற்கோள்களாக சமுதாய புரட்சியாளர்களான விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரின் கருத்துகள்! நீதிமன்றம் பயணிக்கும் பாதையினை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆந்திர வழக்கின் இறுதியில் பரம்பரை அர்ச்சகர் முறையினை ஒழிக்கும் ஆந்திர சட்டத்தினை ஏற்றுக் கொண்டதோடு, சேஷம்மா வழக்கினைப் போல அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை வழக்கம் மட்டுமே ஒழிக்கப்படுகிறது என்று வலுவாக கூறப்படவில்லை. மேலும், நியமனம் பழக்கத்திற்கு மட்டுமே உட்பட்டது என்றும் தெளிவாக கூறவில்லை என்றாலும் எவ்வாறும் இருக்கலாம் என்று கோடிட்டு காட்டப்படுகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வகுப்பார்தான் (denomination) அர்ச்சகர்களாக இருக்கலாம் என்று வாதிடும் திரு.பராசரனைப் பார்த்து நீதிபதிகள், ‘அந்த குறிப்பிட்ட வகுப்பார்கள் அனைவரும் நன்கு கல்வி பயின்று மேல் நாடுகளுக்கு வேலைக்கு போய் வேறு யாருமே இல்லையென்றால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்க திரு.பராசரன் வேறு வழியில்லாமல் ‘அப்படியென்றால் வெளியே தேட வேண்டியதுதான்’ என்று கூற வேண்டியதாயிற்று!

ஆக, தெளிவாக கூறவில்லை என்றாலும் இந்த வழக்கானது சேஷம்மா வழக்கிலிருந்து சமூகம் அதிக தூரம் பயணித்து விட்டதை குறிப்பால் உணர்த்தியது என்றே கூற வேண்டும்.

***
அர்ச்சகர்கள் தகுதி குறித்து அடுத்த அதே சமயம் ஓரளவுக்கு தெளிவான அடியினை எடுத்து வைத்தது ‘ஆதித்யன் வழக்கு’ என்று அழைக்கப்படும் கேரள வழக்கு!

திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் பணியாற்றிய சாந்திக்காரன் என்று அழைக்கப்படும் அர்ச்சகர் நிலையிலுள்ள ஒருவரின் நடத்தை குறித்து அதிக குற்றச்சாட்டுகள் எழ, பிராமணரல்லாத ஒருவர் சாந்திக்காரனாக நியமிக்கப்பட கோவிலின் தந்த்ரி அவரை பணியேற்க அனுமதிக்கவில்லை. ஆனால், தேவஸ்வம் ஆணையர் அவ்வாறு பிராமணர்கள் மட்டுமே சாந்திக்காரனாக பணியாற்ற இயலும் என்ற விதி ஏதும் இல்லை என்று சுட்டிக்காட்டவே, ‘அவ்வாறு மலையாள பிராமணரல்லாத ஒருவரை சாந்திக்காரனாக நியமிப்பது தன்னுடைய வழிபாட்டு உரிமையினை பாதிப்பதாக’ பக்தர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்ய இறுதியில் பிரச்னை உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.

இந்த வழக்கில் இவ்வாறு மலையாள பிராமணர்கள் மட்டுமே சாந்திக்காரனாக நியமிக்கப்பட முடியும் என்பதற்கான பழக்கமோ அல்லது கோவிலை உருவாக்கியவரின் விருப்பம் குறித்தோ தெளிவான வாதம் வைக்கப்படவில்லை என்று கூரி வழக்கினை தள்ளுபடி செய்தாலும் இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறிய பல கருத்துகள் குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக, ‘காலங்காலமாக பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாயிருப்பதால் மற்றவர்களுக்கு அர்ச்சகர்களாவதற்கு தடையிருக்கிறது என்று பொருளில்லை மாறாக அவர்கள் வேதங்களை கற்பதிலிருந்தும், புனித நூலினை அணிவதிலிருந்தும் தடுக்கப்பட்டார்கள் என்றுமே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறியது கவனிக்கத்தகுந்தது. ஆயினும் இந்த வழக்கிலும் எந்தக் கோவிலிலும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கப்பட முடியும் என்று இந்த தீர்ப்பிலும் கூறப்படவில்லை. ஐந்து நீதிபதிகளால் தீர்க்கப்பட்ட சேஷம்மா வழக்கு குறுக்கே நிற்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனினும் நேரடியாக ஜாதி குறித்த பிரச்னையை அணுகியதிலிருந்து, இந்த தீர்ப்பினை அர்ச்சகர் பிரச்னையில் ஒரு திருப்புமுனை என்றே கருத வேண்டும்.

***

சேஷம்மா வழக்கின் தீர்ப்பு, இன்றளவும் நிலுவையில் உள்ளது. எனவே தமிழக சட்ட திருத்தம் குறித்த வழக்கு, ஐந்து நீதிபதிகளுக்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய மன்றத்திற்கு அனுப்பப்படும் என்று நினைக்கிறேன். அதுவரை இப்போதுள்ள நிலமை நீடிக்கும் வண்ணம், இடைக்கால தடை சட்ட முறைகளின்படி நியாயமானதுதான்.

மதுரை
21.08.06



முழு தீர்ப்பு வேண்டுவோர்:
Seshammal Vs State of Tamilnadu 1972 (2) SCC 11
A.S.Narayana Deekshitulu Vs State of AP 1996 (9) SCC 548
N.Adithayan Vs Travancore Devsswom Board 2002 (8) SCC 106

3 comments:

Anonymous said...

good article.thanks.

Badri Seshadri said...

மதுரைக்கு 9-10 செப்டெம்பர் 2006 தேதிகளில் (சனி, ஞாயிறு) வருகிறேன். முன்னதாகவே உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Interesting. What is secular and what is religious is not well defined.The TN govt. did not appeal against the judgment in
Seshammal case.In Kerala the
SNDP impleaded itself as one
of the trained persons was an
Ezhava and his rights were
questioned.DK did not implead
itself and thus gave up an opportunity to defend its principles in the courts.

The Kerala model
of training persons from
all castes including Dalits
was desinged with assistance
from Ramakrishna Mutt.In
Tamil Nadu the issue was
projected by Periyar and
his followers as a measure
to end the hegemony of brahmins
than as a measure to further the social reforms.But there are
many non-brahmin priests who
enjoy hereditary rights.This
was not highlighted by Periyar
but the Act affected them also.
Had Periyar and others went beyond anti-brahmin attitude the issue could have been handled differently.