24.8.06

மலை போல் நிற்கும் வசீம் ராஜா!

இன்று காலை செய்தித்தாள்களில் ‘வசீம் ராஜா’ என்ற பெயரைப் படித்ததும், இயல்பாக மனதில் தோன்றி என்னையறியாமல் நான் சொல்லிப்பார்த்துக் கொண்ட வாக்கியம்தான் ‘அங்கு மலை போல் நிற்கும் வசீம் ராஜா’. எந்த ஆண்டு என்று நினைவில்லை. ஆசீப் இக்பால் தலைமையில் வலுவிழந்த ஒரு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு விளையாட வந்திருந்த பொழுது, சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நமது வானொலியின் தமிழ் வர்ணனையில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட வாக்கியங்கள் இவை...உச்சரித்தவர் நமது சாத்தை அப்துல் ஜப்பார் அவர்கள்!

வாசிம் ராஜா கவரில் நிற்பார் என நினைக்கிறேன். வலப்புறம் எழும்பி வரும் பந்துகளை கவனமாக நமது வீரர்கள் கவர் டிரைவ் செய்ய பந்துகள் வாசிம் ராஜாவை கடந்து செல்லும் தருணங்கள் அரிதானவையே!

பொங்கல் விடுமுறையும், சென்னையில் டெஸ்ட் போட்டிகளும் இணைந்து வரும் நாட்கள் பலருக்கு வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள். முக்கியமாக அந்த தமிழ் வருணனை. சற்றே பெண்தன்மை வாய்ந்த குரலில் ஆற்றொழுக்கு நடையில் எப்பொழுது நிதானம் தவறாத திரு.ராமமூர்த்தியையும், உணர்ச்சி வெள்ளத்தில் வார்த்தைகள் கிடைக்காமல் திக்குமுக்காடிப் போய் ‘வல்லுநர் மணி அவர்களே’ என்று மற்றவரை துணைக்கழைக்கும் திரு.ஜப்பாரையும், திரு.கூத்தபிரானையும் கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்களை என்னைப் போன்ற சிறு ஊர்காரர்களும் ஓரளவுக்கு விளங்கக்கூடிய அளவில் இடையிடையே கூறும் வல்லுநர் மணியினையும் மறக்க முடியுமா?

தற்பொழுது எனக்கு கிரிக்கட் நடப்பதும் தெரியாது...தமிழ் வருணனைகள் இருப்பதும் தெரியாது. ஆனால், சென்னையில் முதன்முதலாக கிரிக்கெட்டினை தொலைக்காட்சியில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்த பொழுது, அங்கிருந்த பல வீடுகளில் தொலைக்காட்சியின் சப்தத்தினை குறைத்து வைத்து தமிழ் வருணனைகளை அருகே வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் கூட கிரிக்கெட் என்பது ஏதோ சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் ஒரு குடும்பத்திலுள்ள பையனை மையமாக வைத்து பீட்டர் விடும் சில பையன்கள் விளையாடும் விளையாட்டு என்பதிலிருந்து அனைவரும் ஒரு கை பார்க்க துணிந்ததற்கு 1983ல் இந்திய உலக கோப்பை வெற்றிக்கு முன்னதாகவே இந்த தமிழ் வருணனைகள் முக்கிய காரணம் என்பேன்! ஆயினும் பாளையங்கோட்டையில் இருந்து ஹாக்கி ஒழிந்து போனதில், இந்தியா உலக கோப்பையினை வெல்லாமல் இருந்திருக்கலாம் என்று பல்லைக் கடிப்பவர்களில் நானும் ஒருவன்.

அதுவரை ‘நியூபால்’ என்று மட்டுமே கூற பழக்கப்பட்டிருந்த எனக்கு, பள்ளியில், வேகமாக ஒரு பையன் ஓடி வந்து, இயல்பாக ‘புதுப்பந்து எடுத்தாச்சா?’ என்று கேட்கையில் புதுமையாக இருந்தாலும், தமிழ் வருணனைகளின் வீச்சு புரிந்தது. டெஸ்ட் போட்டி என்பதே ‘இந்தியன் எக்ஸ்பிரஸில் ஏதோ ஓரளவுக்கு தெரியும் படங்களும், எவ்வளவு ஓட்டங்கள் யார் யார் அவுட் என்பது மட்டுமே புரியும், கரகரவென்ற நிதானமான குரலில் கேட்கும் ஆங்கில வருணனைகள் மட்டுமே’ என்றிருந்த எங்களுக்கு ஏறக்குறைய நேரில் படம் போல பார்க்கும் அனுபவத்தினை அளித்தது தமிழ் வருணனைகள்தான் என்றால் மிகையல்ல...ஆசீப் இக்பால் விளையாட இறங்கி ஒரு நான்கினை அடித்ததுமே...’ஆஹா பெரிய வீரர்கள் என்றால் இப்படித்தான்...ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு அடியே போதுமே’ என்று ஜப்பார் அவர்கள் புகழ்ந்ததிலேயே நான் ஆசிப் இக்பாலின் விசிறியாகிவிட்டேன். அவர் விளையாடுவதை நான் ஒரு முறை கூட எங்கும் பார்த்ததில்லை. ஆயினும் அவர் எப்படிப்பட்ட ஸ்டைலிஸ்ட் வீரர் என்று பத்திரிக்கைகள் வருணிப்பதை படிக்கையில் ஆனந்தமாயிருக்கும்.

அது ஒரு பொற்காலம் என்றால் இளையவர்களுக்கு பிடிக்காது...எனவே எனக்கு அது ஒரு கனாக்காலம்!

மால்கம் மார்ஷல், வாசீம் ராஜா போன்றவர்கள் இல்லை என்று நினைக்கையில் எனக்கு வயதாகிறது என்ற எண்ணம் மெலெழும்புகிறது...

1 comment:

Sudhakar Kasturi said...

//மால்கம் மார்ஷல், வாசீம் ராஜா போன்றவர்கள் இல்லை என்று நினைக்கையில் எனக்கு வயதாகிறது என்ற எண்ணம் மெலெழும்புகிறது...//
How true!
Very impactful and candid expressions throughout the blog. Thanks Prabhu.
regards
K.Sudhakar