3.8.06

பிரிகேடியர் ஷெரீப்...

ஒரு நபருக்காக நூலகத்தில் காத்திருந்த வேளையில், தற்செயலாக இன்று கண்ணில் பட்ட அந்த செய்தியினை பார்த்திருக்காவிட்டால், ஐந்து நாட்களுக்கு முன்னர் தனது 92வது வயதில் மரித்துப் போன பிரிகேடியர் ஷெரீபை எனக்கு தெரியாமலே போயிருக்கும். யார் யாரைப் பற்றியெல்லாம் அநாவசியத்துக்கு தெரிந்து வைத்திருக்கும் நாம் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்து போன சில சிறந்த மனிதர்களை எப்படி உதாசனப்படுத்தி விடுகிறோம்.

1947ம் ஆண்டு. இந்தியப் பிரிவினையை அடுத்து, வட இந்தியா கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். பூனாவிலிருந்த இளம் லெஃப்டினண்ட் கானல் முகமது கலியுல்லா ஷெரீப் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப் பட்டார். டெல்லியில் ஊரடங்குச் சட்டம். அமுல் படுத்த ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு, ஷெரீப் பணியில்.

பதற்றமாக ஒரு ஜவான் ஷெரீபிடம் வந்து, "சார், ஒரு கார் சாலையில் அனுமதியின்றி வருகிறது"

அவர் முடிக்கும் முன்னே ஷெரீப், "கண்டதும் சுட உத்தரவு. காரை முதலில் சுடு"

"இல்லை சார், அதில் வைசிராயின் இலைச்சினை! லார்ட் மவுண்ட் பேட்டனின் கார்!"

"வைசிராய் இங்கு வருவதாக எனக்குத் தகவல் இல்லை. அனுமதியின்றி யாரும் காரில் வர உத்தரவில்லை. முதலில் நீ சுடு"

ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி புரிந்த அந்த இருநூறு ஆண்டுகளில் முதல் முறையாக வைசிராயின் காரை நோக்கி ஒரு துப்பாக்கி உயர்த்தப் பட்டதும் அல்லாமல்...சுடவும் பட்டது. ஆனால் குண்டு அதில் படவில்லை.

வைசிராயின் கார் சுடப்பட்டதற்காக ஒரு விசாரணை நடத்தப்பட்டு, ஜவான், ராணுவ நீதிமன்றத்தில் (court martial) நிறுத்தப் படும் நிலை எழுந்தது. இன்றைக்கு அவ்வப்போது குற்றச்சாட்டுக்குள்ளாகும் ராணுவ அதிகாரிகளைப் போல ஜவானில் பின்னே மறைந்து கொள்ளவில்லை ஷெரீப். 'ராணுவ நீதிமன்றத்தில் குற்ற விசாரணையென்றால் அது என் மீதுதான் தொடரப்படவேண்டுமேயல்லாமல், வெறுமே எனது கட்டளைக்கு கீழ்ப்படிந்த ஜவான் மீது எந்த குறையும் இல்லை' என்றார். மேலும் தான் தண்டிக்கப் படும் பட்சத்தில் தனது பிரிவில் கிளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளதையும் அரசுக்கு தெரியப்படுத்தினார்.

நடந்த விஷயங்களை கேள்விப் பட்ட வைசிராய் மவுண்ட் பேட்டன் தைரியம் மிகுந்த அந்த ராணுவ அதிகாரியை கூப்பிட்டனுப்பினார். ஷெரீபின் பதிலினால் ஈர்க்கப்பட்ட வைசிராய் "கர்னல். உங்களது ஜவானுக்கு குறி பார்த்து சுடத் தெரியவில்லை. அத்தோடு நாம் இந்த விஷயதை விட்டு விடுவோம்" என்று பேட்டியினை முடித்துக் கொண்டார். ஹூம்....மவுண்ட் பேட்டனின் பெருந்தன்மை மற்றும் நகைச்சுவை உணர்வு. இப்போதுள்ள அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் பெருமூச்சுதான் விட முடியும்.

1948ல் நடந்த போரில் ஷெரீப் அவராலாயே உருவாக்கப் பட்ட 164பிரிகேடு மூலம் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தேரா பாபா நானக் பாலத்தை மீண்டும் கைப்பற்றினார்.

இதற்கிடையில் 1947 கலவரத்தில் காயம் பட்டவர்களை காண லேடி கார்டின்கே மருத்துவமனைக்குச் சென்ற கர்னல் ஷெரீப் அங்கிருந்த இளம் மருத்துவர் சாந்தி மீது காதல் வயப்பட, எல்லோரும் 'நாடே இந்து முஸ்லீம் பிளவு பட்டுக் கிடக்க ஒரு இந்துவை காதல் புரிய உனக்கென்ன பைத்தியமா?' என்றார்கள்.

சாந்தியின் பெற்றோரோ ஷெரீபை கொலை செய்யக் கூட ஏற்பாடு செய்தனர். இறுதியில் சாந்தி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஷெரீபுடன் ஓட...இல்லை பறக்கத் தயாரானார். 1950ல் ராணுவ விமானத்தில் டெல்லியிலிருந்த சாந்தி ஷெரீப் இருந்த குர்தாஸ்பூருக்கு அழைத்துவரப்பட பொதுவான முறையில் இருவருக்கும் திருமணம்.

தனது தீரச் செயல்களுக்காகவும் தைரியத்துக்காகாவும் இரட்டை பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர் லைக்கு உயர்ந்த ஷெரீப் 1958 ல் ராணுவத்தில் அரசின் தலையீட்டைப் பொறுத்து பாதுகாப்பு மந்திரி திரு.கிருஷ்ண மேன்னுடனான கருத்து வேறுபாடு காரணமாக ராணுவத்தை விட்டு ராஜினாமா செய்தார்.

பின்னர் சவூதி அரேபியாவுக்கான தூதராகும் வாய்ப்பு ஷெரீபை தேடி வந்தது. அதற்கு இடைஞ்சலில்லாத வகையில் அவரது மனைவி இஸ்லாமியராக மதம் மாறுவது நலம் என்று இந்திய அரசு அறிவுரைத்த போது, 'எனது மனைவி மதம் மாறி இருந்தால் எனது மனைவியாகவே இருந்திருக்க மாட்டார்கள். எனது மதம் எனக்கு. அவளது மதம் அவளுக்கு. அவள் மதம் மாறமாட்டார்கள்' என்று சொல்லி வந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர் ஷெரீப்.

1931ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக சேர்க்கப்பட்ட ஷெரீப், ஆங்கிலேய ஆட்சியின் போது பிரிட்டிஷ் துருப்புகளை வழி நடத்திய மிக அரிதான இந்திய அதிகாரிகளில் ஒருவர்.

இப்படிப்பட்ட பிரிகேடியர் முகமது கலியுல்லா ஷெரீப்பின் உடல் நவம்பர் 27ம் தேதியன்று நியுதில்லியில் அவரது விருப்பப்படி இஸ்லாமிய மௌல்விகளும் இந்து பண்டிதர்களும் சேர்ந்து இறைத்துதி பாட இ.ஆ.ப. அதிகாரியான அவரது மகனால் ஈமக்கிரியை செய்யப் பட்டது.

சொல்ல மறந்து விட்டேன். பிரிகேடியர் ஷெரீப் நம்ம வேலூரைச் சேர்ந்த தமிழர்!


மும்பை
30.11.02

1 comment:

சீமாச்சு.. said...

//அவரது மனைவி இஸ்லாமியராக மதம் மாறுவது நலம் என்று இந்திய அரசு அறிவுரைத்த போது, 'எனது மனைவி மதம் மாறி இருந்தால் எனது மனைவியாகவே இருந்திருக்க மாட்டார்கள். எனது மதம் எனக்கு. அவளது மதம் அவளுக்கு. அவள் மதம் மாறமாட்டார்கள்' என்று சொல்லி வந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர் ஷெரீப்.
//
தெய்வம் சார் அவர். அவரளவுக்கு ஒரு பரந்து பட்ட மனப்பான்மை எல்லோருக்கும் வராதா?

மிக நல்ல பதிவு. இது போன்ற இன்னும் அதிகமான பதிவுகளை நமது தமிழ் வலைப்பதிவுலகில் எதிர்பார்க்கிறேன்..
நான் பேராசைக்காரனோ?

அன்புடன்,
சீமாச்சு...