28.10.06

அப்சலும், க்ரீமி லேயரும்...1

உச்ச நீதிமன்றத்திற்கு இது போறாத காலம் போல... பின்னர் இப்படியா, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து அதன் மூன்று தீர்ப்புகள் நாடு தழுவிய அளவில் விவாதத்தினை ஏற்ப்படுத்தும்? சமீப காலங்களில் நீதிமன்ற தீர்ப்பானது இவ்விதம் மக்களிடையே விவாதத்திற்குள்ளாவது பெருகி வருகிறது. மக்களுக்கு நீதி மன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையினை குலைக்கும் வண்ணம் மோசமான விளைவுகளுக்கு இவ்விதமான விவாதங்கள் இட்டுச் செல்லலாம் என்று கூறப்பட்டாலும், இது ஒரு நல்ல சமிக்கையே என நான் கருதுகிறேன்.

‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற மிரட்டல் ஒரு காகிதப்புலியே என்பதை புரிந்து கொண்ட நீதிபதிகளும் கண்டிப்பினை தளர்த்தி தங்களது ‘அகன்ற தோள்களுக்குள் எவ்வித விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கும் இடம் உண்டு’ என்று இறங்கி வந்துள்ளனர். இதுவும் நீதித்துறைக்கு ஒரு நல்ல வளர்ச்சியே!

எனவே நீதிமன்ற தீர்ப்பினை குறித்து அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், விமர்சனங்களை வைப்பது நீதி பரிபாலன முறையின் முன்னேற்றத்திற்குதான் வழிகோலுமே தவிர வீழ்ச்சிக்கல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் பல குறைபாடுகளை மீறியும், மக்களுக்கு நமது நாட்டில் நம்பிக்கையளிக்கும் வெகு சில அரசு துறைகளில் நீதித்துறையும் ஒன்று. மோசடித்தனமான பழிகூறுதல்கள் (malafide or frivolous allegations) கேட்பவர்களாலேயே நிராகரிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.

உதாரணமாக அப்சல் வழக்கினை எடுத்துக் கொண்டால், அப்சலை குற்றவாளி என்றது தவறு என்ற விமர்சனம் ஏதும் வைக்கப்படவில்லை. அவ்வாறான விமர்சனங்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்களுக்கே இயலும். அவற்றின் பலன் ஒரு சட்ட மாணவருக்காகத்தானேயொழிய (academic interest) வேறில்லை. விவாதங்கள் அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்தே!

இங்கு நாம் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நீதிபதி தனிப்பட்ட வகையில் மரண தண்டனையினை எதிர்ப்பவராக இருக்கலாம். ஆனால், சட்டம் மரண தண்டனை அளிக்கக் கூறும் ஒரு வழக்கில் அவர் மரண தண்டனையினை அளித்தலே சரியான தீர்ப்பாக இருக்க முடியும். மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது பாராளுமன்றத்தின் பணி. அவற்றில் நீதிபதி தனது சொந்தக் கருத்தினை நுழைத்தல், நீதித்துறையின் சமநிலையினை (consistency) பாதிக்கும் என்பது எனது தாழ்மையான எண்ணப்பாடு.

சொந்தக் கருத்து என்பது பொதுக்கருத்தினை உள்வாங்கி உருவாக்கப்படும் உணர்வு! பொதுக்கருத்து (Public Opinion) என்பதனை மக்களாட்சியின் ஒரு தூணாகவே அரசியல் வல்லுஞர்கள் கருதுகிறார்கள். பொதுவாக பொதுக்கருத்து என்பது பத்திரிக்கைகளில் ‘ஆசிரியருக்கு கடிதம்’ கூறப்படும் கருத்துகளின் தொகுப்பு என்பதாகவே ஒரு தோற்றம் எடுத்து வைக்கப்படுகிறது. அதாவது படித்த நடுத்தர வர்க்க மக்களின் பொதுவான எண்ணப்பாடு. ஆனால் இதையும் கடந்து மக்கள் சமுத்திரத்தின் ஆழத்தில் யாரும் அறியாமலேயே பொதுவான கருத்து பல சமயங்களில் உருப்பெறுகிறது. இது வெளித்தெரிவதில்லை. ஆனால் பல அரசாங்கள் வீழ்ந்ததற்கும், எழுந்ததற்கும் இவ்வகையான பொதுக்கருத்துகளே காரணமாக இருந்துள்ளன. அவசரநிலைக்குப் பிறகு இந்திரா காந்தி தோற்றதற்கும், எண்பதில் எம்ஜிஆர் ஜெயித்ததற்கும், இந்தியா ஒளிர்ந்ததற்கு பிறகும் வாஜ்பாய் வீட்டுக்கு போனதற்கும் வெளித்தெரியா பொதுக்கருத்தே காரணம்.

ஆக, ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் கருத்துகளையும் மீறி யாரும் உணராமலேயே சமுதாயத்தின் ஆழத்தில் உருப்பெரும் கருத்தும் இருக்கலாம். நீதிபதிகள் ‘படித்த நடுத்தர வர்க்கத்தை’ (educated middle class) சேர்ந்தவர்கள். எனவே ‘நடுத்தர வர்க்கத்து கருத்தோடு’ இசைவான அவர்களும் கொண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இவ்வாறான நிலையில் தங்களது சொந்தக் கருத்தினை பொதுக்கருத்து என்று அவர்கள் நம்புவதே தவறான ஒரு முடிவு. அதனை அடிப்படையாக வைத்து வழக்கினை தீர்க்க நினைத்தால், அது சரியான நீதிபரிபாலன முறையாக இருக்காது.

அப்சல் வழக்கில், ‘அப்சலுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குவது மூலமே சமுதாயத்தின் ஒருங்கிணைந்த மனவோட்டத்தினை திருப்திப்படுத்த இயலும்’ என்று நீதிபதிகள் கூறியது தீர்ப்பினை விமர்சிக்க விரும்பும் எவரும் அடிக்கக்கூடிய ‘weak link’. தீர்ப்பானது சட்ட வினாக்களுக்கு உட்பட்டு அமைந்திர்ந்தால், அதில் தவறிருந்தாலும் சட்ட புத்தகங்களில் மட்டுமே விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்திருக்கும். அப்சலுக்கு மரணதண்டனை கூடாது என்ற ஆர்ப்பாட்டங்களும் அரசினை நோக்கிய குரலாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் மரண தண்டனையின தளர்த்துவது அரசுக்கு இயலக்கூடிய காரியம். ஆனால், நீதிபதிகள் பொதுக்கருத்தினை தங்களது தீர்ப்புக்கு துணையாக அழைத்துள்ளதால், சட்ட வல்லுஞர்களையும் தாண்டி பொது மக்களும் தங்களது விமர்சனத்தினை எடுத்து வைக்க முன் வருவது இயற்கையே!

அறிக்கை, ஆர்ப்பாட்டம், கண்டனம், பொதுக்கூட்டம் போன்றவை பொதுக்கருத்தினை உருவாக்கும் கருவிகள். பல்வேறு வகையான பொதுக்கருத்தினை உருவாக்க இயலும் பல்வேறு மக்கள் குழுக்களைப் போலவே, மரண தண்டனை எதிர்ப்பு என்ற பொதுக்கருத்தும் உருவாக்கப்பட இவ்வகையான சாதனங்கள் கூடாது என்று கூறுதல் இயலாது.

இந்திய மக்கள் தொகை 100 கோடி! இதில் எத்தனை நபர்களுடைய எண்ணப்பாட்டினை நீதிபதிகள் தங்களது ‘collective conscience’ கருத்திற்கு கணக்கில் எடுத்துக் கொண்டனர்? அல்லது மக்களுடைய ஒருங்கிணைந்த கருத்து அப்சலுக்கு மரணதண்டனை அளிக்க விரும்புகிறது என்பதற்கு நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியம் என்ன? நீதிமன்றத்திற்கு வெளியில் நடப்பதை தங்கள் கருத்தில் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள முயலுகையில், வெவ்வேறு எண்ணம் கொண்ட மக்கள் குழுக்கள் தங்களது கருத்தினை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று ஆர்ப்பாட்டம். அவ்வளவே!

***

to be continued...

9 comments:

ஓகை said...

சிறந்த பதிவு. எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. முழுவதும் முடிந்ததும் கேட்கிறேன்.

முத்துகுமரன் said...

சிறப்பான பதிவு, விளக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. குறிப்பாக பொதுக்கருத்தை பற்றி அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறேன்.

ஒன்றுமில்லை said...

நல்ல பதிவு.

தொடருங்கள்

பெத்தராயுடு said...

அருமையான கட்டுரை.

பெத்தராயுடு said...

அருமையான கட்டுரை.

வஜ்ரா said...

அப்சலுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதினால் Collective conscience திருப்தி அடைகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லியது தான் பிரச்சனை என்றால் அதை பொது மேடையில் விவாதிக்காமல் ஏன், அதை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டு தூக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கத்தவேண்டும் ?

பூக்கர் பரிசு வாங்கிவிட்டால் பொது மக்களுக்கு லெக்சர் செய்யும் தகுதி வந்து விடாது.

சீரியசாக நீங்களே சொல்லுங்கள், நீங்களும் நீதிமன்ற வக்கீல் தான். அப்சல் தீர்ப்பைப் படித்திருப்பீர்கள். அந்த ஒரு பாயிண்டைத் தவிர மற்ற விஷயங்களை கணக்கில் கொண்டால் அப்சலுக்கு தூக்கு வழங்கியதில் ஞாயம் உள்ளதா இல்லையா ?

தூக்கு தண்டனை " நாகரீக" சமூகத்தில் இருக்கக் கூடாது என்பது பொருட்டல்ல.

மேலும், நீதிபதிகள் இந்த ஒரு வரியை சொல்லவில்லை என்றால் அப்சலுக்கு வழங்கிய தூக்குக்கு இவ்வளவு எதிர்ப்பு இருந்திருக்காது என்று கூற வருகிறீர்களா ?


//
நீதி பரிபாலன முறையின் முன்னேற்றத்திற்குதான் வழிகோலுமே தவிர வீழ்ச்சிக்கல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
//

Just because the Judges made a point on their judgement that the collective conscience will only be satisfied by giving capital punishment does not warrant a response that the So called "human rights" activists are making.

There are reasons to give capital punishment which they conviniently "hide" with deliberate malafide intentions so that public opinion can be generated to suit their ideological leaning.

Is it not equalent to cooking up a conspiracy theory against Judiciary ? Or Would you still call it a intention of debating over the judgement that can help improve judiciary ?

aathirai said...

பிரபு,
இப்பொழுது அடிக்கடி நீதிபதிகள் சர்ச்சைக்குள்ளாவதால்
இந்தியாவில் trial by jury கொண்டு வந்தால் என்ன?
ப்ரிடிஷ் காலத்தில் முயற்சி செய்து விட்டுவிட்டார்களென்று கேள்வி.
சுதந்திர இந்தியாவில் இதை கொண்டு வர பின்னர் முயற்சிக்கவில்லை.
இது பற்றி எழுதுங்களேன்.

க்ரீமி லேயர் வழக்கில் இட ஒதுக்கீடு அளவுக்கு மீறினால்
சாதியம் நிலைத்துவிடும் என்பதெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதுதானா?
இதுவும் இவர்களுடைய(ஒரு பிரிவினுடைய) சொந்த opinion தானே. அதே
நீதிபதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை
எத்ர்த்து போட்ட வழக்கில் 'மத சுதந்திரம் பற்றிய முக்கிய கேள்வி
எழுப்புகிறது' என்று தடை வழங்கியிருப்பது முரண்பாடுதானே?
இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மா.கலை அரசன் said...

நல்ல பயனுள்ள பதிவு.

Sivabalan said...

மிக அருமையான பதிவு.

பதிவுக்கு நன்றி