நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனையை, ‘தூக்கம் வருகிறது’ என்று இந்த வருடம் தவிர்த்து விட்டாலும், காலை எட்டு மணிக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆயினும் கோவிலுக்கு வெளியேதான் இடம்!
பாதிரியார் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் ‘வெளிநாட்டு பழக்கமான கிறிஸ்துமஸ் குடில் வைத்தல், மரம் வைத்தல்’ என்பவற்றின் காரணங்களைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார். சுவராசியமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
இறுதியில், ’அதனால்தான் இந்த வருடம் நமது கோவிலின் குடிலானது ஈழ மக்களின் துயரினை எடுத்துக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியது உடனடியாக கவனத்தை ஈர்த்தது.
அந்த குடிலினை நோக்கி நகர்ந்தேன்.......பின்னணியில் சிவப்பு நிறத்தில் ஈழ வரைபடத்துடன் ‘தூங்காதே தூங்காதே எங்கள் துயர் தீரும் வரை தூங்காதே’ என்று தொடங்கும் பாடல் வரிகளுடன் ‘பாலகன் இயேசுவை’ வாழ்த்தும் வாசகங்களால் அமைந்த குடில்.
இயேசு பிறந்த குடிசையின் கூரை கெரில்லாப் படைக்கான துணியில் வேயப்பட்டிருந்தது!
-oOo-
வருடா வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட ஆராதனையில் கண்டிப்பாக ஈழ மக்களின் துயர் ஏதேனும் ஒரு வகையில் பங்கு பெறும் மக்களிடம் நினைவூட்டப்படுகிறது என்று அப்பொழுதுதான் தோன்றியது.
கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளில் உள்ள போதகர்கள், பொது விடயங்களில் தங்களது கருத்தினை எப்பொழுதேனும் வெளிப்படுத்துவதை பார்த்ததில்லையெனினும், கத்தோலிக்க பிரிவிலுள்ள பாதிரிகளில் சிலர் வெளிப்படையான மனித உரிமை ஆர்வலர்களாகவும், இடது சாரி சிந்தனையுள்ளவர்களாயும் இருப்பதை பார்க்கிறேன்.
நான் அவ்வாறு சந்தித்த பலர், தங்களது ஆழ்மனதில் இறைமறுப்பாளர்களாகவும் இருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு!
-oOo-
கிறிஸ்தவ அமைப்புகள், தங்களது ஆராதனையில் இவ்வாறு ஈழ மக்களின் துயரினை நினைவு கூறுகையில், இந்து மத அமைப்புகளுக்கு ஏன் அவ்வாறு தோன்றுவதில்லை.
சிதம்பரம், ஸ்ரீரங்கம் கோவிலை விடுங்கள்......முருகனின் அறுபடைவீடுகளில் முக்கியமான பழனி, திருச்செந்தூர் ஆலயங்களில் கூட ஈழ மக்களை முன்னிருத்தி வழிபாடு ஏதும் செய்யப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லையே!
மனிதர்கள் கைவிடலாம்...கடவுளர்களும் கூடவா?
-oOo-
நான்காம் ஈழம் போர் உக்கிரமடைந்திருந்த பொழுது ’இந்த நாடு சிங்களர்களுக்கானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றும் ‘சிறுபான்மையினர் எங்களுடன் இங்கு வாழலாம். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகுதியில்லாத உரிமைகளை கோர இயலாது’ என்றும் கூறினார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை ‘கோமாளிக்கூட்டம்’ என்று வர்ணித்ததன் மூலம் தான் பணியாற்றும் அரசாங்கத்திற்கு ராஜரீக தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தினார். சமீபத்தில் ‘தற்போதய சூழலில் மாநிலங்களுக்கு அதிகாரம் தரும் 13ம் சட்டத்திருத்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்’ என்று கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.
இவ்வாறு, சிரீலங்கா முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவின் ‘இனவாத’த்தை குறிப்பிட்டு தலையங்கம் எழுதும் நாளிதழ்...
‘தி இந்து’!
ஆனால் எழுதிய தேதிதான் முக்கியம். பொன்சேகா தனது இனவாதத்தினை, வார்த்தைகளில் விஷமாக கொட்டிக் கொண்டிருந்த காலத்தில், ‘தி இந்து’ அதைக் கண்டித்து மூச்சு விடவில்லை. ஏனெனில் ‘all’s fair in love and war’!
தற்பொழுது பொன்சேகாவால் ராஜபக்சேவிற்கு பிரச்னை என்றவுடன், ‘தி இந்து’ இறந்த காலத்திற்குச் சென்று தலையங்கம் எழுதுகிறது.
சரிதான், லங்க ரத்னாவின் ஆதங்கம் நியாயமானதுதான்!
-oOo-
இந்த தலையங்கம் வெளிவந்த அதே நாளில் ‘தி இந்து’வின் முதல் பக்கம் முழுவதும் வெளிவந்த செய்தி என்னவென்று தெரிந்தால் இன்னமும் வே(தனை)டிக்கையாக இருக்கும்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானைப் பற்றி மராத்தி பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளைப் போன்ற விளம்பரங்களைப் பற்றிய இந்துவின் புலனய்வு அறிக்கை!
Hindu The has gathered 47 full newspaper pages, many of them in colour, focused exclusively on Mr. Chavan, his leadership, his party and government. These appeared in large newspapers, including one ranking amongst India ’s highest circulation dailies. However, they were not marked as advertisements.
விளம்பரத்தை செய்திகளைப் போல வெளியிடுவது தவறு என்று இது வரை தெரியாது. தெரியாமல், நான் ‘தி இந்து’வில் வெளியாகும் இலங்கைச் செய்திகளை விளம்ப்ரம் என்று இதுவரை நினைத்து வந்தேன்...
மதுரை
25/12/09