19.10.09

ஞாநி, கருணாநிதி மற்றும் உச்சநீதிமன்றம்

கட்டாய உடலுறவு கொள்ள (கற்பழிக்க) முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்கா, பண்டாரி ஆகியோர் தீர்ப்பளித்திருப்பது இ.வா.அதிர்ச்சி. இந்தியன் பீனல் கோட் 511-ம் பிரிவின் கீழ் கொலை முயற்சிதான் குற்றம். ஆனால், வன்புணர்ச்சி முயற்சி குற்றமாகாது. கற்பழிப்புக்கான செக்ஷன் 376-ன் கீழும் முயற்சியைக் குற்றம் சாட்ட முடியாது என்றனர் நீதிபதிகள். ஜார்கண்ட் மாநிலத்தில் தாரகேஸ்வர் சாஹே என்பவர் 12 வயது சிறுமியுடன் கட்டாய உறவுகொள்ள முயன்றார். செக்ஷன் 354-ன் கீழ் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் (மாடஸ்டி) குலைத்ததாக மட்டுமே தாரகேஸ்வரரைக் குற்றம் சாட்டலாம் என்று தீர்ப்பு தரப்பட்டது!


பத்தி எழுத்தாளர் ஞாநி தனது சட்ட அறிவினை வெளிச்சம் போட்டுக் காட்டும் மற்றொரு பதில்!

முதலாவது வன்புணர்வுக்கு முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாரகேஸ்வர் சாஹே வழக்கில் கூறவில்லை. இரண்டாவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511ன் கீழ் கொலை முயற்சி குற்றம் என்று குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் எங்கும் குறிப்பிடவில்லை. மூன்றாவது 376ம் பிரிவின் கீழ் முயற்சியை குற்றம் சாட்ட முடியாது என்றும் நீதிபதிகள் கூறவில்லை. நான்காவது, சாஹே கட்டாய உறவு கொள்ள முயன்றார் என்று நிரூபிக்க தகுந்த சாட்சிகள் இல்லை என்பதை ஞாநி அறியார். ஆயினும் நேரில் பார்த்தது போல முயன்றார் என்று எழுத துணிகிறார்.

உண்மையில், ஞாநி அந்த தீர்ப்பை படிக்கவில்லை. ஆனால் தீர்ப்பைப் பற்றி இந்தியன் எக்சுபிரசு இதழில் வந்த செய்தியினை படித்திருக்கிறார். அந்த செய்தியில் குறிப்பிடப்படும் 511, 376 மற்றும் 354 ஆகிய பிரிவுகளை ஞாநி, அது என்ன என்று புரியாமலேயே தனது வாசகர்களுக்கு எடுத்து ஊட்டியுள்ளார்.

தமிழ் பத்தி எழுத்தாளர்களின் தரம் இந்த அளவுக்கு, திண்ணையில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் அளவிற்கு தாழ்ந்து இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!

-oOo-


சாஹே என்பவர் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டப்படுகிறார். வன்புணர்வு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375ல் விளக்கப்படுகிறது. சாஹே மீதான குற்றம் அப்படி முயற்சித்தார். பிரிவு 511 என்பது எந்த ஒரு குற்றத்தையும் செய்ய முயற்சித்தால், அந்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி வழங்கப்படலாம் என்று கூறும் பிரிவு. எனவே சாஹே குற்றம் சாட்டப்பட்டது 375 மற்றும் 511ன் கீழ்.

ஆனால் கொலை முயற்சிக்கு மட்டும் தனியே பிரிவு உள்ளது. பிரிவு 307ன் படி கொலை முயற்சிக்கு 10 வருடம் தண்டனை வழங்கலாம் என்று உள்ளதால், கொலை முயற்சிக்கும் 511க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

சாஹே வழக்கின் சாட்சிகளை பரிசீலித்த நீதிபதிகள், வன்புணர்வு கொள்ள முயற்சித்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், சாட்சிகள் சாஹே சிறுமியை மானபங்கப்படுத்தியுள்ளார் (outraging the modesty of a woman) என்பதை நிரூபிக்க போதுமான சாட்சிகள் உள்ளன என்று கூறி அதற்கான பிரிவு 354ன் கீழ் சாஹேயை தண்டித்துள்ளனர்.

-oOo-

வ்ன்புணர்வின் முக்கிய கூறு பிறப்புறுப்பில், ஆணுறுப்பை நுழைப்பது. எனவே அவ்வாறான் எண்ணமும், அதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு வகையான செயல்களை செய்வது வன்புணர்வாகாது. மாறாக பிரிவு 354ன் கீழ் வரும்.

இப்பொழுது மீண்டும் ஞாஞியின் பதிலினை படித்தால் எவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்பது புரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது. கொஞ்சம் நேரம் செலவழித்து படித்திருந்தால், இப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அபாண்டமாக பழி சுமத்தியிருக்க மாட்டார்...

-oOo-

ஆயினும் நீதிமன்ற அவமதிப்பு புரிந்துள்ளார் என்று போட்டு கொடுக்க மாட்டேன்.  ஆனால் ஞாஞி ஒன்றுமே இல்லாத விடயத்தில் சட்ட வல்லுஞர் போல நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்....அவமதித்தவர் கருணாநிதி அல்லவா?




நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் நீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு!

முதலாவது அரசு (காவல்துறை) மீதான விமர்சனம். இரண்டாவது நீதிமன்றம் மீதான விமர்சனம். ஆனால் இரு விமர்சனம் ஒருவர் வைப்பதற்கு நமது நாட்டில் உரிமை உண்டு. அதனை அவமதிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது.

கருணாநிதி கூறியது முதலாவது வகை. ஆயினும் அவரது பதிலினை படிக்கும் யாருமே, கேள்விக்கு பொருத்தமில்லாத பதிலினை கூறியிருக்கிறார் என்று கூறுவார்களே தவிர நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று கூற மாட்டார்கள்.

ஆனால், ஞாஞிக்கு கருணாநிதி என்றாலே நிதானம் தவறி விடுகிறது.


-oOo-


நீதிமன்ற அவமதிப்பு என்பதே ‘பேச்சுரிமையை பாதிக்கும் ஒரு சட்டம் என்று முற்போக்குவாதிகளால் விமர்சனம் வைக்கப்படும் காலத்தில், ஞாஞி நீதிம்னற அவமதிப்பு பூச்சாண்டி காட்டுவது அபத்தமாக உள்ளது.

அது சரி, வன்புணர்வை சரி கட்டாய உடலுறவை ‘கற்பழிப்பு என்று குறிப்பிட்டு விளக்குபவர்கள் முற்போக்குவாதிகளாக இருக்க முடியாதுதான்.

மதுரை
19/10/09

21 comments:

ரவி said...

வழக்கம்போல எக்ஸலண்ட் பதிவு.

உங்கள் பதிவு மின்னஞசலுக்கு வருமாறு செய்ய முடியுமா ?

ரவி said...

இந்த பதிவுக்கு ஓட்டு போட்டாச்சு...

ரவி said...

பின்னூட்டங்கள் உடனே ரிலீஸ் ஆவதுபோல செய்ய முடியுமா ?

இலவசக்கொத்தனார் said...

ஏன் பாவம் ஞாநியை ஞாஞி என ஆம்புலன்ஸ் சத்தம் மாதிரி ஆக்கிட்டீங்க!! :)

Balaji-Paari said...

:-)

PRABHU RAJADURAI said...

Ravi,

It is only computer professionals like you, who can tell why my fonts look small and how to make these posts available on email....

முகமூடி said...

// அவரது பதிலினை படிக்கும் யாருமே, கேள்விக்கு பொருத்தமில்லாத பதிலினை கூறியிருக்கிறார் என்று கூறுவார்களே தவிர நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று கூற மாட்டார்கள். //

ஞாநி குறிப்பிட்டிருப்பது கருணாநிதியின் பதிலை பற்றி அல்ல. அது கேள்வியை ஒட்டியே என்பது என் எண்ணம். அதற்கு கேள்வி கேட்டவரைத்தானே குற்றம் சுமத்த வேண்டும் எதற்கு கருணாநிதியை என்கிறீர்களா? கருணாநிதியின் கேள்வி பதில்கள் எல்லாம் நமக்கு நாமே திட்டத்தில் தயாராவது என்பதால் இருக்கலாம்.

மற்றபடி ஞாநியின் சட்ட அறிவு குறித்து - ஹிஹி.

enRenRum-anbudan.BALA said...

பிரபு,

Informative Post. நன்றி.

அனுபவமுள்ளவர்களே இப்டி தப்பா தப்பா கருத்து சொன்னா என்ன செய்யறது !

//It is only computer professionals like you, who can tell why my fonts look small and how to make these posts available on email....
//
Under blog "Settings", you need to click "Email&Mobile" option. There you can enter up to 10 email IDs to which your post will be sent automatically once you publish a new post.

Pl. add my email ID along with Ravi's. Thanks !

தங்கமணி said...

Thanks for your posts sir!

ரவி said...

மின்னஞ்சல் அனுப்புகிறேன் அல்லது தனி பதிவாக போட்டு சுட்டி தருகிறேன்...!!

ரவி said...

http://iseoblogger.blogspot.com/2009/10/how-to-add-email-feed-subscription-form.html

I think this should help. for this you need to create a feedburner account first.

Font, Please type your blog posts from Edit Window. you can see a font button in the top also. i think you had mistakenly touched that for the previous post. now you can do one simple thing, edit the same blog post from your blog dashboard, click inside the blog post, and then select all (press control key and A) and then now change the Font to Medium in your Font Button.

I will write a detailed post about this.

gnani said...

அன்புள்ள பிரபு ராஜதுரை அவர்களுக்கு

வணக்கம். நான் மதிக்கும் ஒரு சில பதிவர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ச்சியாக இடைவிடாமல் உங்கள் பதிவுகளைப் படிக்க என்னால் இயலாவிட்டாலும் அவ்வப்போது படிக்கிறேன். பல பயனுள்ள தகவல்களை அவற்றில் பெறுகிறேன்.

என் பத்தியில் தெர்வித்த சில கருத்துகள் பற்றிய உங்கள் விமர்சனங்களைப் படித்தேன். அவை தொடர்பாக சில விளக்கங்கள்.

1.தகவலறியும் உரிமை சட்டம் வந்தற்குப் பொறுப்பான காங்கிரசார் யார் என்பது பற்றி கேள்வி இருந்ததால், சோனியாவைக் குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வளவுதான். கலைஞர் ஆட்சியில் சட்டத்தின் ஆரம்ப வடிவம் வந்ததை நிச்சயம் பாராட்டுவேன். அதற்குப் பொருத்தமான கேள்வி வரும்போதே அது சாத்தியம். கடந்த நான்காண்டுகளில் பல முறை என் பத்தியில் கலைஞருக்குக் கொடுத்த பூச்செண்டுகள் கவனம் பெறவில்லை என்பதற்கு நான் என்ன செய்ய முடியும் ?

2.வன்புணர்ச்சி பற்றிய உச்ச நீதி மன்ற தீர்ப்பு குறித்த என் கருத்து பிழையானது என்று விளக்கியிருக்கிறீர்கள். கரண்ட் அஃபேர்ஸ் எனப்படும் உடனடி நடப்பியல் செய்திகள் பற்றி வாராவரம் விமர்சனம் எழுதும்போது, உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு இணையத்தில் வந்திராது. சிறிது காலம் கழித்தே அது வரும். நான் குறைந்தது நான்கைந்து தினசரி ஆங்கிலப் பத்திரிகைகளில் நீதி மன்ற தீர்ப்பு பற்றி வந்துள்ள செய்திகளை ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே எழுதுவது வழக்கம். சுமார் 5 வருட காலம் நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் சட்ட நிருபராக சென்னை உயர் நீதி மன்றச் செய்திகளை அளித்து வந்த அனுபவம் உடையவன். தீர்ப்பு அறிவிக்கப்படும் அன்ரே செய்தியை சேகரித்து எழுதுவது தினசரி ஏடுகளின் வழக்கம். அப்படி சேகரிக்கும்போது நீதிபதியின் செயலர்/உதவியாளர்/சுருக்கெழுத்தாளரிடமிருந்து தீர்ப்பைப் படிக்கச் சொல்லி எல்லா நிருபர்களும் குறிப்பு எடுத்துக் கொள்வது வழக்கம்.அவையே மறு நாள் காலைச் செய்தியாக இதழில் வெளியிடப்படுகின்றன. எனவே அவற்றின் அடிப்படையில்தான் நான் கருத்துகளை எழுதுகிறேன்.

3. பொதுவாக என் இதழியல் அனுபவமான கடந்த 34 வருடங்களில் அடிப்படை பாலபாடமான, when in doubt cut it out என்பதன்படி, எனக்கு ஒரு விஷயம் சந்தேகமாக இருந்தால் அதைப் பற்றி எழுதுவதில்லை. இதை மீறி தவறுகள் வரலாம். சுட்டிக் காட்டப்படும்போது என் பத்தியிலேயே திருத்தம் வெளியிட்டிருக்கிறேன். ஒரு முறை எனக்கு நானே குட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

4. கட்டாய உடலுறவு என்பதற்கு கற்பழிப்பு என்று அடைப்புகளில் எழுதுவதற்குக் காரணம் வெகுஜன ஊடகங்களில் பெரிதும் கற்பழிப்பு என்பதே பயன்படுத்தப்படுவதால், மாற்று சொற்றொடர்களை அறிமுகம் செய்யும்போது பழைய பிரயோகத்தை அடைப்பில் குறிப்பிடும் முறையைப் பின்பற்றும் இதழியல் நெறிமுறையே ஆகும்.

தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன். வார இதழில் எழுதும்போது அவை உடனடியாக எனக்குக் கிடைக்குமானால், திருத்தத்தை மறு வாரமே தெரிவிக்க எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.

அன்புடன்

ஞாநி

PRABHU RAJADURAI said...

"தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன். வார இதழில் எழுதும்போது அவை உடனடியாக எனக்குக் கிடைக்குமானால், திருத்தத்தை மறு வாரமே தெரிவிக்க எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.

அன்புடன்
ஞாநி

அன்பார்ந்த ஞாநி அவர்களுக்கு,

தாங்களைப் போன்றவர்கள் வலைப்பதிவுகளை படிக்கும் சந்தர்ப்பம் , இணையத்தில் உண்டு என்று நான் உணரவில்லை. அப்படியாயின் எனது சில வார்த்தைகளை மட்டுப்படுத்தியிருப்பேன். புரிந்து கொண்டதற்கு என் மீது எரிச்சல் படாமல் இருப்பதும் என்னை வெட்கப்பட செய்து விட்டது.

ஆயினும், விமர்சனம் தொடரும்...நல்லெண்ண அடிப்படையில்.

நன்றி!

PRABHU RAJADURAI said...

Ravi & Bala,

I will give a try what you have suggested, this week end. Thanks

Prabhu Rajadurai

Anonymous said...

good post

Anonymous said...

ஞானி வலைப்பதிவுகளை படிக்கிறார் என்பதற்காக "அவர் கருணாநிதி என்றால் நிலை தடுமாறிவிடுகிறார்" என்ற உங்கள் கருத்தையோ விமர்சனத்தையோ மாற்றிக்கொள்ள வேண்டாம் :)

அவர் அப்படித்தான்..ஞானி கருணாநிதிக்கு பூச்செண்டு ஏன் கொடுக்கிறார்? கண்டனம் எப்போது தெரிவி்க்கிறார் என்று பார்த்தால் ( கணக்கெடுத்தால் ) தெரியும் சேதி

Anonymous said...

m... appreciate his honesty to accept that he writes his opinion based on english media reports.

There is a famous proverb in IT circle. Garbage In / Garbage out.
Indian media is a massive garbage. No wonder.

No one can be expert in all 50000 fields. If you need accuracy, only experts in each field should write opinions. But accuracy is not required for kumudam readers.

- aathirai

புருனோ Bruno said...

//ஏன் பாவம் ஞாநியை ஞாஞி என ஆம்புலன்ஸ் சத்தம் மாதிரி ஆக்கிட்டீங்க!! :)

1//

:) :) :)

ஞா - ஞி - ஞா - ஞி சொல்லிப்பார்த்தேன்.

பிணியாளர் ஊர்தி சத்தமே தான்

புருனோ Bruno said...

//வன்புணர்ச்சி பற்றிய உச்ச நீதி மன்ற தீர்ப்பு குறித்த என் கருத்து பிழையானது என்று விளக்கியிருக்கிறீர்கள். கரண்ட் அஃபேர்ஸ் எனப்படும் உடனடி நடப்பியல் செய்திகள் பற்றி வாராவரம் விமர்சனம் எழுதும்போது, உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு இணையத்தில் வந்திராது. //

அப்படியா

சென்னை உயர் நீதிமன்றம் என்றால் சரி

உச்ச நீதிமன்றத்தில் அன்றே இணையத்தில் தீர்ப்புகள் வருகிறது என்றே நினைக்கிறேன்

யாராவது விளக்க முடியுமா

PRABHU RAJADURAI said...

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சில அன்றே வருகின்றன..மற்றவை ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படுகின்றன!

Anonymous said...

Some judgments catch the attention of media, many do not.Journalists like Jnani should read the judgments rather than relying on the media which breaks the news.Often the rationale behind the judgments is available only in the judgment and not in the news.
Further a case like this and a jugment like this cannot be discussed in 20/30 sentences as the reader needs to be made aware of the facts of the case and the provisions of the law and the judgment besides the journalist's
views.There is a real limitation there.Columnists are not expected to write like news reporters.They should go further and analyze the
judgment. One can do that in a blog with links so that reader can get the facts and the blog post can just be an analysis.A column in
Kumudam where he covers 3 topics has its own limitations.In law there are precedents and case laws.
Judgments discuss this.That is why reading them is all the more important. So Jnani should read the
judgments rather than relying on news reports.I know that reporters have their own limitations and constraints.They may err hence I have to be cautious in taking their words as true.Reporters often simplify matters without understanding nuances.For an informed analysis nuances are
important.Jnani should realise this.