24.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 4


அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு (pardon) அளிப்பதற்கு குடியரசுத்தலைவர் மற்றும் மாநில அளுனர்களுக்கு உள்ள அதிகாரம் தவிர, அரசாங்கத்திற்கு தண்டனையைக் குறைக்கும் (commute) அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தினை பயன்படுத்தி, அரசு நினைக்கையில் நளினிக்கோ அல்லது சராதானந்தாவுக்கோ தண்டனனயை குறைக்கலாம். இங்கு நாம் விவாதிக்கும் தீர்ப்பு, அரசின் இந்த அதிகாரத்தின் குறுக்கேயும் நிற்க முடியாது. ஏனெனில், நீதிபதிகள் அரசின் இந்த அதிகாரத்தினைப் பற்றி தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டாலும், அரசு இந்தப் பிரிவு அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தண்டனையை குறைக்க இயலாது என்றும் கூறவில்லை.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இதே அதிகாரம் இந்திய தண்டனன சட்டம் பிரிவு 54 மற்றும் 55ன் கீழும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் பிரிவு 433Aன் படி ஒருவரின் மரணதண்டனையானது ஆயுள் தண்டனையாக இந்தப் பிரிவின்படி குறைக்கப்பட்டால், அவர் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறையில் கழிக்காமல் விடுதலை பெற முடியாது. இந்த 14 ஆண்டு கட்டுப்பாடே ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் என்ற தவறான எண்ணம் சாதாரண மக்களில் மனதில் தோன்ற காரணம்.


-oOo-


குற்றவாளிக்கு மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு தவிர தண்டனை தள்ளுபடி (remission) என்பதும் உள்ளது. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432ன் படி குற்றவாளியானவர் தனது தண்டனையினை தள்ளுபடி செய்ய கோரலாம். இந்த தள்ளுபடியானது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மட்டுமல்லாமல், சிறை விதிகள், மற்றும் பிற விதிமுறைகளின்படியும் கோரலாம்.


இவ்விதமான தள்ளுபடிகளை கணக்கிட ஒருவரது சிறைக்காலம் அறுதியிட்டாலே இயலும். உதாரணமாக, ஒருவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனை என்றால், ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என அவருக்கு விதிகளின்படி கிடைக்கும் தள்ளுபடியினை கணக்கிட்டு விடலாம்.


ஆனால் ஆயுள்தண்டனை என்பதில் தள்ளுபடி அளித்தாலும், ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகவே இருக்கும். கணிதத்தில் ‘இன்பினிட்டி’ (infinity) போல. இதைத்தான் நீதிபதிகள் சுட்டிக்காட்டி ஆயுள் தண்டனைக்கு தள்ளுபடி என்பது கிடையாது என்று குறிப்பிடுகிறார்கள்.


பொதுவாக, அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு காலம் என்று கருதி ஒரு உத்தரவு பிறப்பித்து பின்னர் 20 ஆண்டுகளுக்கான தள்ளுபடிகளை கணக்கிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு சுமார் 6 காலம் அதிகபட்சம் தள்ளுபடி கிடைக்கும். இவ்வாறான முறையில்தான் அரசு ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை 14 ஆண்டுகளில் விடுதலை செய்கிறது. அதனால்தான் கோட்சே, நளினி போன்றவர்கள் தாங்கள் 14 ஆண்டு காலம் சிறையில் கழித்து விட்டதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.


இந்த முறையினையே உச்ச நீதிமன்றம் சராதானந்தாவின் வழக்கில் தவறு என்று கூறுகிறது. அதாவது அரசு எவ்விதம் இவ்வாறு ஆயுள் தண்டனை என்பது 20 வருடம் என கருதுகிறது என்ற கேள்வியினை எழுப்பி அதற்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்கிறது.


இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 57ல் தண்டனையை வகுக்கும் தேவை நேர்ந்தால் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் என கணக்கிடலாம் என்று உள்ளது. உதாரணமாக பிரிவு 511ன் படி ஏதாவது குற்றத்தினை செய்ய முயன்றால் அந்த குற்றத்திற்கான தண்டனையில் பாதி தரலாம் என்று உள்ளது. அதே போல ஒருவர் குற்றம் செய்ய தூண்டி (abet) பின் அந்த குற்றம் செய்யப்படாமல் போனாலும், தூண்டியவர் அந்தக் குற்றத்திற்கான தண்டனையில் கால் பகுதி தரலாம் என்று பிரிவு 116 கூறுகிறது. இம்மாதிரி காரணங்களுக்காகவே 20 வருட கணக்கே தவிர ஆயுள் தண்டனை 20 ஆண்டு என்று எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தக் கருத்து சரியானதே!


ஆயினும் நீதிமன்றம் கவனிக்கத் தவறிய ஒரு விடயம், இன்றுள்ள நிலையிலேயே, அரசு குற்றவாளியின் ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு கால தண்டனையாக கருதி (deem) அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தாலொழிய குற்றவாளி மேலும் தள்ளுபடி பெற்று வெளிவர இயலாது. எனவே அவ்வாறு இல்லாமல் அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டுகால தண்டனையாக குறைத்தால், தள்ளுபடி சாத்தியமாகலாம். இரண்டு உத்தரவிற்கும் அரசு மனது வைக்க வேண்டும்.


இதன் விளைவு, அவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஒருவர் அரசை நிர்பந்திக்க முடியாது. அரசு மனது வைத்தால்தன் இவை இயலும். எனவே ஆயுள் தண்டனை பெற்றவர் மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ பெறுவது அவரது உரிமையல்ல என்பது போலவே தோன்றுகிறது.


அவ்வாறு என்றால், அடிப்படையில் சராதனந்தாவின் தீர்ப்பு புதிதாக எதனையும் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும். சாகும் வரை வெளியில் விடக்கூடாது என்ற கட்டளையும் தேவையில்லாத ஒன்று. ஏனெனில், குற்றவாளியை விடுதலை செய்ய அரசு நினைக்கையில் தனது மன்னிக்கும் அல்லது தண்டனைக்குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து விடலாம்.


அதே போல வழக்கில் நீதிபதிகள் முக்கிய பிரச்னையாக எழுப்பிய மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையை சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த முடியுமா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகி விடுகிறது. எந்த ஒரு ஆயுள் தண்டனைக்குமே, நீதிபதிகளின் கருத்துப்படி தள்ளுபடி வழங்க இயலாது என்பதால், அனைத்து ஆயுள் தண்டனைகளும் அரசு மனது வைக்கும் வரை ஆயுள் வரைக்குமே!


-oOo-


ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டு காலம் என்பது அல்ல என்றாலும், பல முறை உச்ச நீதிமன்றம் குற்றவாளியை குறைந்தது 20 ஆண்டு காலமாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை தங்களது தீர்ப்புக்கு ஆதரவாக நீதிபதிகள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று கூறிய பிறகு, நீதிமன்றம் சாகும் வரை என்பதோ அல்லது 20 ஆண்டு காலம் என்பதோ, அரசுக்கு ஒரு அறிவுறுத்தல் என்றே எடுத்துக் கொள்ள இயலும்.


உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சாகும் வரை விடுவிக்கக் கூடாது என்று இரு வழக்குகளில் கூறியுள்ள தீர்ப்புகளும் சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் என்று நீதிபதிகள் மனதளவில் தீர்மானித்து விட்ட நிலையில், அவர் சாகும் வரை சிறையிலேயே இருக்க தயாராக இருக்கிறார் என்ற வாதம் வைக்கப்பட அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஏறக்குறைய ஒரு சமரசத்தீர்வு போல அவருக்கு எவ்வித தள்ளுபடியோ அல்லது தண்டனைக் குறைப்போ தரக்கூடாது என்று தீர்ப்புக் கூறியுள்ளது (சுபாஷ் சந்தர் எதிர் கிருஷ்ணன் லால் (2001) 4 SCC 458). தள்ளுபடி சரி தண்டனைக்குறைப்பு பற்றி நீதிமன்றம் கூறியுள்ளது எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. ஏனெனில், தண்டனைக்குறைப்பு அளிக்க அரசு குற்றவாளியின் அனுமதியை பெற வேண்டியதில்லை. எனவே அவர் தனக்கு தண்டனைக் குறைப்பு தேவையில்லை என்று கூறியுள்ள போதிலும் அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தலாம். இன்னும் ஒரு பத்தாண்டுகள் கழித்து கிருஷ்னலால் தீராத நோயினால் பெரும் அவதிப்படுகிறார். அவரை விடுதலை செய்வதே மனிதாபிமானம் என்று அரசு நினைக்கையில் நீதிமன்ற தீர்ப்பு அதற்கு எவ்வளவு தூரம் தடையாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


ஆயினும் இவ்வாறான உத்தரவு மனித உரிமைக்கு எதிரானதா என்ற கேள்வி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஜெயவந்த் தத்தராய சூர்யராவ் எதிர் மகராச்டிரிய அரசு (2001) 10 SCC 109 என்ற வழக்கிலும் இவ்வாறு ஒரு தண்டனை வழங்கப்பட, தூக்கிலிருந்து தப்பித்தாயிற்று என்று அப்பொழுது தண்டனையினை ஏற்றுக் கொண்ட சுபாஷ்சிங் தாக்கூர் தற்பொழுது அந்த தண்டனை தவறு என்று நீதிப்பேராணை (writ) மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் மறு ஆய்வு செய்யப்படும்.


-oOo-


ஆனால் இங்கு முக்கியமான வித்தியாசம், நளினிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கவில்லை. குடியரசுத் தலைவரின் மன்னிப்பு! சராதானந்தா உட்பட மற்றவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகையிலேயே இவ்வாறு தள்ளுபடி கிடையாது என்று கூறியுள்ளது. நளினிக்கு அவ்வாறான எவ்வித கட்டுப்பாடும் கிடையாது...


ஆயினும், தள்ளுபடி என்பது எந்த ஆயுள்தண்டனைக்கும் கிடையாது என்பதுதான் சராதானந்தாவின் தீர்ப்பில் இருந்து நாம் அறிவது. எது எப்படியோ, நளினி வெளியே வர வேண்டுமென்றால் அரசு மனது வைக்க வேண்டும். தள்ளுபடி என்பது மேற்கண்ட தீர்ப்பின் மூலம் பிரச்னைக்குறிய ஒன்று. அரசு அவரது தண்டனையை குறைப்பதுதான் வழி...


இல்லை, நளினிக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் கருணை, உண்மையில் ஒரு கானல் நீரே!


மதுரை
24.10.08

7 comments:

பிரபு ராஜதுரை said...

இந்த தொடர் இத்துடன் முடிகிறது. முழுவதும் படிக்க இயன்றவர்கள் ஒரு அட்டெண்ட்டன்ஸ் போட்டு விட்டு சென்றால் மகிழ்வேன்!

மேலே படத்தில் காண்பதும் சிம்லா மால் காட்சிதான்.

இந்த விடயத்தைப் பற்றி எழுத என்னை வேண்டிய திரு.ரவி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு நன்றி!

Anonymous said...

மிகவும் அருமையான தொடர்.
சட்ட நிலமையை அழகாக எளிமையாக தொகுத்து தந்ததுக்கு நன்றி

புருனோ Bruno said...

உள்ளேன் ஐயா :)

கல்வெட்டு said...

நளினி வழக்கு சம்பந்தமான உங்கலின் அனைத்து பதிவுகளையும் படித்தேன்.

உங்களின் பதிவில் இருந்தும், அரசின் நடைமுறைகளில் இருந்தும் "கருணை கோருவது" மட்டுமே உரிமை. மற்றவை எல்லாம் அரசின் கையில்தான் உள்ளது என்றே தெளிவாகிறது.

அது போல் கோட்சேவை விட்டீர்கள் என்னை ஏன் விடவில்லை என்றும் கேட்க முடியாது என்றே நினிக்கிறேன்.

எல்லாம் அரசின் கையில் உள்ளது.

**

முக்கியமான வழக்கின் (அதுவும் இந்த நேரத்தில் ) நேரம் எடுத்து விளக்கியமைக்கு நன்றி.

**

வேண்டுகோள்:

தற்போதைய நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று.

பொடா இருந்த போது வைகோ கைது செய்யப்பட்ட வழக்கில், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி பேச (ஆதரிக்க/விமர்சனம் செய்ய) தடையில்லை என்று வாதாடப்பட்டதாக நினைவு.

Q1: பேச்சு/எழுத்து/கருத்துச் சொல்லும் அடிப்படை மனித உரிமைகளில் விடுதலைப்புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களில் எப்படி ஒரு குடிமகன் நடந்து கொள்ள வேண்டும்?

Q2: தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து தனிப்பட்ட முறையிலோ/பொது மேடையிலோ பேசலாமா?

Q3: தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தடையை நீக்கக்கோரி வழக்கு தொடர முடியுமா?

Q4:விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கான தடையை நீக்கக்கோரி இதுவரை எந்த அமைப்பாவது நீதிமன்றத்தை நாடியுள்ளதா? (விடுதலிப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல என்று சொல்பவர்கள் ஏன் நீதி மன்றங்களை நாடவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. ஏதேனும் வழக்கு வந்துள்ளதா?)


முடிந்தால் தனிப்பதிவாக நேரம் கிடைக்கும்போது எழுத வேண்டுகிறேன்.

Anonymous said...

உள்ளேன்

துளசி கோபால் said...

தொடர் முழுவதும் படித்தோம்.

எளிமையான விளக்கங்கள். எனக்குமே கொஞ்சம் புரிஞ்சதுன்னா பாருங்க!


ஆமாம். சிம்லா சுற்றுலாவா?

மாலை விடலை போல இருக்கே:-))))

பிரபு ராஜதுரை said...

கல்வெட்டு,

நன்றி, மீண்டும் நேரம் கிடைக்கையில் தங்களது கேள்விகளை ஒட்டி எழுத முயல்கிறேன்.

மேடம்,

மாலை விடலை...புரியவில்லையே!