24.7.06

மும்தாஜும் பத்ரிநாத் ஐஏஎஸ்ஸும்!



'தமிழ் திரைப்பட நடிகை மும்தாஜ் சற்று குஜாலான பெயர்களைக் கொண்ட மூன்று பத்திரிக்கைகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 11 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டதாக' நாளிதழ்களில் வெளியான ஒரு செய்தியை எண்ணங்கள் பத்ரி நாராயணன் தனது வலைப்பதிவில் வெளியிட்டு, 'இத்தனை விரைவாக நமது நீதிமன்றங்களில் அவதூறு வழக்குக்கு நீதி கிடைத்ததை சற்று சந்தேகத்தோடு பாராட்டியுள்ளார்.

அவரது சந்தேகம் நியாயமானதே! பொதுவாக இவ்வாறான வழக்குகளில் வழக்கு நடைபெற்று இறுதி தீர்ப்பு கிடைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் சாதாரணமாக இருபது வருடங்கள் காத்திருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் பத்து ஆண்டுகளாவது கலாம் என்பது எனது யூகம். ஆனால் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கின் இறுதித் தீர்ப்பை பெற்றுவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வழக்குத் தொகை பத்து லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அப்படி இருக்கையில் மும்தாஜுக்கு இது எங்ஙனம் சாத்தியமாயிற்று? ஒன்றும் பெரிதாக இருக்காது. பல சமயங்களில் பிரதிவாதியானவர்கள், அதுவும் இது போன்ற 'மஞ்சள் பத்திரிக்கை' மனிதர்கள் நீதிமன்ற அழைப்பினை ஏற்காமல் ஏமாற்ற முனைவர். 'நாம் போகாவிட்டால் என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற அலட்சியமும் காரணமாக இருக்கும். எனவே நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் 'வராதவர்கள்' என உத்தரவிடப்பட்டு மும்தாஜுக்கு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு கிடைத்திருக்கலாம். இத்தனை விரைவில் இவ்வாறு தீர்ப்பு கிடைக்க வேறு சாத்தியக்கூறுகள் இல்லை. பிரதிவாதிகள் இனி நீதிமன்றத்தை அணுகி எக்ஸ்பார்ட்டி தீர்ப்பை ரத்து செய்ய மனுப்போடலாம் அல்லது 'நீதிமன்ற தீர்ப்பு என்ன வெறும் தாள்தானே' என்றும் பேசாமல் இருக்கலாம்.

பத்ரியின் வலைப்பதிவை மேய்ந்தவுடனேயே அவருக்கு 'எக்ஸ்பார்ட்டி தீர்ப்பாக' இருக்கப் போகிறது என மடல் எழுதினேன். மனிதர் உடனே, 'இந்தியாவில் இப்படி லட்சக்கணக்கான ரூபாய்கள் அவதூறு வழக்குக்கு நஷ்ட ஈடாக வழங்கியதாக' தீர்ப்புகள் இருக்கிறதா? என்று கேட்க, முன்பு எப்போதோ இல்ல்ஸ்டிரேட்டட் வீக்லி (ஞாபகம் இருக்கிறதா?) பத்திரிக்கை மீதான நஷ்ட ஈடு தீர்ப்பு ஞாபகம் வர...'ஏகப்பட்டது இருக்கே' என்று சொல்லி விட்டாலும்...பின்னர் வலையில் தேடினால், ஏறக்குறைய எல்லோரும் எல்லோர் மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்த விபரம்தான் கிடைத்தது. தீர்ப்பான விபரம் எதுவும் இல்லை. ஆமாம், இதே மும்தாஜ் இருபது வருடம் கழித்து நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்லி....அவதூறு என வாதிட்டு அதை நீதிபதி தீர்க்கவா?

ஆனாலும் மனம் தளராத விக்ரமாதித்யனாக புத்தகங்களை மேய்ந்ததில்....கண்ணில் பட்டது எல்லாம் குற்றவியல் வழக்குகள். அது என்ன குற்றவியல் வழக்கு? ஆம், இந்திய தண்டனைச் சட்டப்படி அவதூறு செய்தல் இரண்டு வருட தண்டனைக்கேதுவான குற்றம். குற்றவியல் நீதிமன்றங்களில் தவறு செய்தவருக்கு தண்டனை மட்டுமே அளிக்க இயலும். அவர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையும் பொதுவாக அரசுக்கே சென்றுவிடும். பாதிக்கப்பட்டவருக்கு அவருக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு? அதற்காக பாதிக்கப்பட்டவர் பணமதிப்பினை நஷ்ட ஈடாக கேட்டு சிவில் வழக்கும் தொடரலாம். இதற்கு ஏதேனும் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டம் சட்டம் உள்ளதா என்றால் இல்லை. ஆங்கிலத்தில் 'law of torts' என்றும் தமிழில் 'தீங்கியல் சட்டம்' என்றும் அழைக்கப்படும் சட்ட நியதிகள் இங்கிலாந்து அரசியலமைப்புச் சட்டம் போல எழுதப்படாதவை. ஒருவருக்கு மற்றவரது கவனக்குறைவான அல்லது தவறான செய்கையால் ஏற்படும் இழப்பிற்கு (damage) பணமதிப்பால் தகுந்த இழப்பீடு (damages) வழங்கப்பட வேண்டும் என்ற சட்டக் கோட்பாடு சமீப காலங்களில் மிகவும் விரைவாக வளர்ந்து, முன்னரே தீர்க்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே புதிய வழக்குகளும் தீர்க்கப்படுகின்றன. இந்த வகையான சட்டத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்காவுக்கு நாம் நன்றி கூற வேண்டும். அங்கு சில சமயங்களில் நம்புதற்கரிய வகையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. சரி, தீங்கியல் சட்டம் மிகவும் சுவராசியமான சட்டம். பின்னர் பார்க்கலாம். தற்போது என் கண்ணில் பட்ட நஷ்டஈட்டிற்கான அவதூறு வழக்கைப் பார்க்கலாம்.

திரு.சதுர்வேதி பத்ரிநாத் வரலாற்று அறிஞர். ஆனால் துரதிஷ்சவசமாக மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர். அவரது வரலாற்றுப் பிரியமோ அல்லது அரசுக்கு அவர் மீதான கோபமோ, சென்னையிலுள்ள ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கான துறையின் ஆணையராக இருந்தார். 1973, செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியிலுள்ள வரலாற்றுக் குழுமத்தில் பேச அழைக்கப்பட்டவர், சிறிது காலத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட காலப்பெட்டகத்தில் இருந்ததெல்லாம் வெறும் வரலாற்றுப் புரட்டு, அவை 'வரலாறுமல்ல புனைகதையுமல்ல' என்று ஒரே போடாக போட்டார்.

அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியே இப்படிப் பேசியது அரசுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி...விவகாரம் பாராளூமன்றத்திலும் வெடித்தது. புதைக்கப்பட்ட காலப்பெட்டகத்தைப் பற்றிய இந்த சந்தேகம், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு அவமானம் எனக்கருதிய அரசு, பத்ரிநாத் மீது அரசு அலுவலர்கள் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடர்ந்தது.

காலச் சுழற்சியில் ஆட்சிகள் மாறின. ஆகஸ்ட்'1977ல் தமிழக அரசு பத்ரிநாத் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தது. ஆனால் அதற்கு முதல்நாள் இந்தியன் எக்ஸ்பிரள் நிருபர் சாஸ்திரி ராமச்சந்திரன் காலப்பெட்டக பிரச்னை பற்றி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் 'பத்ரிநாத் அரசுப்பணியில் இருந்து கொண்டே அதனை சீர்குலைக்க முயன்றார்' என்று அரசு செய்தித் தொடர்பாளர் (spokesperson) கூறியதாக எழுதப்பட்டிருந்தது.

இதனால் மிகவும் மனவேதனையடைந்த பத்ரிநாத், 'அதனால் தான் மிகவும் மன வேதனையடைவதாகவும்...செய்தித் தொடர்பாளர் கூறிய அந்தக் கருத்து அரசின் கருத்தா' என வினவி அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் 'யார் அந்த அரசு செய்தித் தொடர்பாளர்' எனவும் வினவியிருந்தார். மறுநாள் அரசின் தலைமைச் செயலாளர் தனது பதில் கடிதத்தில், 'பத்ரிநாத் குறிப்பிட்ட விஷயத்தில் அவரிடம் சொல்வதற்கு அவரிடம் விபரங்கள் ஏதுமில்லை' என்று தெரிவித்தார்.

பத்ரிநாத் எக்ஸ்பிரஸ் செய்தியாளருக்கு கடிதம் எழுத, அவரோ தனது டிசம்பர்'14ம் தேதியிட்ட கடிதத்தில், தான் குறிப்பிட்ட செய்தித் தொடர்பாளர் தலைமைச் செயலாளரான கார்த்திகேயன்தான் என்று போட்டுடைத்ததோடு நில்லாமல், அவர் வேறு பல தகவல்களையும் தனது தொலைபேசி உரையாடலில் கூறியதாக' தெரிவிக்க பத்ரிநாத் வெகுண்டெழுந்தார். அடுத்த நாளே முதல்வரை நேரில் சந்தித்து தனது பிரச்னைகளை முறையிட வேண்டுமென்று கோரியும் எவ்வித பதிலும் இல்லை. எனவே 28ம் தேதி தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டுமென்றும் அதற்கு அரசு அனுமதி வேண்டுமென்றும் கூறி வேண்டுகோள் விடுத்தார். எதிர்பார்த்தபடியே அரசு 1978' பிப்ரவரியில் 'பொதுநலத்தை' சுட்டிக்காட்டி பத்ரிநாத்தின் வேண்டுகோளை நிராகரித்தது. அரசின் முடிவை எதிர்த்து பத்ரிநாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய, 1979' ஜனவரியில் அது தனி நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது. பத்ரிநாத் இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தார். 1984' டிசம்பரில் டிவிஷன் பெஞ்ச் பத்ரிநாத்தின் மேல் முறையீடை அனுமதித்து, 'அரசினை அவருக்கு கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு வேண்டியது. அரசு விடவில்லை. உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அக்டோபர்' 1987ல் வழக்கை விசாரித்து, 'அடடா! கார்த்திகேயன் எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசியதும் தனது கருத்தைக் கூறியதும் அவரது பணியின் நிமித்தமான காரியமல்ல. அவரது தனிப்பட்ட செயல். இதற்கு எதற்கு அனுமதி?' என்று கூறி வழக்கை ஏற்றுக் கொண்டது.

ஆக, பிரிலிமினரி ரவுண்ட் முடியவே பத்ரிநாத் வழக்கில் பத்து ஆண்டுகள் ஓடிக் கடந்திருந்தது. எம்ஜியாரும் உலகை விட்டு பிரிந்து கொண்டிருந்தார்...கார்த்திகேயன், பத்ரிநாத் ஆகியோரெல்லாம் தத்தமது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பர். பத்ரிநாத் தொடர்ந்து தனது வழக்கை (ஆரம்பித்து) நடத்தினாரா என்பது எனக்குத் தெரியவில்லை. வேறு யாருக்காவது தெரியுமா? 'காலப்பெட்டகத்தை தோண்டியெடுத்து மறுபரிசீலனை செய்யப் போகிறோம்' என்று ஜனதா ஆட்சியில் முழங்கினார்கள். அப்படியே அதுவும் என்னவாயிற்று என்று கூறினால் நலம்.

அமாவாசையையும் அப்துல்காதரையும் ஒரு பழமொழி இணைக்கும் பொழுது மும்தாஜையும் சதுர்வேதி பத்ரிநாத்தையும் ஒரு அவதூறு வழக்கு இணைக்கக் கூடாதா?

No comments: