7.7.06

சலேம், மேலும்...சில மாதங்களுக்கு முன்னர், குவைத்தில் வேலை பார்க்கும் இந்திய டிரைவர் ஒருவர், தான் வேலை பார்க்கும் வீட்டு பெண்ணைக் கூட்டிக் கொண்டு இந்தியா வந்து விட்டார். அவர்களை திருப்பி குவைத்துக்கு அனுப்புவதா? இல்லையா? என்ற பிரச்னை முதல் மந்திரி வரை சென்று, பின்னர் மக்களின் ஏகோபித்த விருப்பத்துக்கு ஏற்ப அவர்கள் திருப்பி அனுப்பப்படவில்லை. பாராளூமன்றத்தில் கூட இந்த விஷயம் பேசப் பட்டதாக ஞாபகம். நம் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. ஆனால் இதன் பின்னால் அரசுக்கு உள்ள பிரச்னைகளைப் பற்றி யாரும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.

இப்போது லிஸ்பனில் கைது செய்யப்பட்டுள்ள அபு சலேம், முன்னர் ஒரு முறை துபாயில் கைது செய்யப் பட்டு அது பெரிய செய்தியானது. வழக்கம் போல இந்தியாவிலிருந்து அதிகாரிகள் துபாய் பறந்தனர். ஆனால் எதுவும் நடக்காமல் ஒரு வாரத்துக்குள்ளாகவே துபாய் போலீஸ் அவரை விடுதலை செய்து விட்டது. கைது செய்யப்பட்டவர், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அபுசலேம் என்று நிரூபிப்பதற்க்கான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப் படவில்லை என்று துபாய் அரசு சொன்னது. ஓரளவு அதில் உண்மை இருந்தாலும் அது ஒரு நொண்டிச் சாக்குதான் என்று இந்திய அரசு அறிந்தே இருந்தது. ஆனாலும் அதன் மீது பெரிய பிரச்னை கிளப்பாமல் நம்மை கட்டிப் போட்டது, குவைத்திலிருந்து ஓடி வந்த டிரைவர் போல இன்னும் சிலர்.

இந்தியாவில் அதிகமாக தேடப் படும் சில குற்றவாளிகள் மத்தியக் கிழக்கு நாடுகளில்தான் உள்ளனர், முக்கியமாக துபாய், சவூதி, குவைத் மற்றும் பகரைன் போன்ற நாடுகளின். இந்த நாடுகளுக்கும் நமக்கும் தூதரக உறவுகள் உள்ளன. எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தமும் இருக்கலாம். மேலும் அவை இன்டெர்போல் ஒப்பந்தத்துக்கும் கட்டுப் பட்டவை. ஆனாலும் இந்தியாவால் தேடப் படுபவர்கள் இங்கு சுதந்திரமாக நடமாடுகின்றனர். wtc தாக்குதலுக்குப் பிறகு நிலமை சற்று முன்னேற்றமடைந்துள்ளது என்றாலும், எனக்குத் தெரிந்து மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கைது செய்யப் பட்டு எவரேனும் திருப்பி அனுப்பப்படவில்லை.

எனவே உண்மையில் எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தத்தினை அந்தந்த நாடுகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே செயலுறுத்த முடியும். பாகிஸ்தானில் பிடிபடும் தீவிரவாதிகளையெல்லாம் அமெரிக்காவுக்கு குண்டுக்கட்டாக அனுப்புவதற்கு பெரியதாக ஒப்பந்தம் எதுவும் தேவையில்லை. மேன்மையான பொருளாதாரமும், வலிமையான ராணுவமும் போதும்.

நியாயத்தின் அணுகுமுறை ஒன்றுதான். எவர் பலம் படைத்தவரோ, அவருக்கேதான் நியாயம்! ஏனெனில் அரசாங்கம் பலமுள்ளவர்களால்தான் ஆக்கப் படுகிறது. அவர்களால்தான் ஏதோ ஒரு முறையில் ஆளப்படுகிறது’ என்ற பிளோட்டோவின் வரிகள் உண்மையானவை. WTC தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்காவும் அதன் மீடியாவும் போட்டி போட்டுக் கொண்டு 'அமெரிக்காவின் மீது போர்' என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியது காரணமின்றியல்ல. உண்மையில் அந்த தாக்குதல் ஒரு கிரிமினல் வேலை. அதற்கு ஓசாமா காரணமென்று தகுந்த ஆவணங்களுடன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை அணுக வேண்டும். அத்தகைய கடினமான, அதே சமயம் பிரயோஜனமில்லாத சடங்குகளுக்குள் போக அமெரிக்கா விரும்பவில்லை. நடந்த தாக்குதல் அமெரிக்காவின் மீதான போர் என்று ஒரே போடாக போட்டது. பென்டகன் மீதான தாக்குதல் வேறு அதற்கு தோதாக அமைந்து விட்டது. அமெரிக்க மீடியா அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ள, உலகம் வேறு வழியின்றி வழி மொழிந்து விட்டது. இதன் மூலம் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் நடத்த முழு உரிமை பெற்றது. இது புஷ் அரசின் ராஜதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. சர்வதேச சட்டங்கள் ஒரு நாட்டின் சட்டங்கள் போல அவ்வளவு வலிமையானதல்ல. எந்த ஒரு வலிமையான நாடும் தனது விருப்பத்துக்கேற்ப அதனை வளைத்துக் கொள்ளலாம். உதாரணமாக ஆப்கானிஸ்தானோடு நடந்தது போரென்றால், கைதிகளாகப் பிடிக்கப்பட்டு அடைக்கப் பட்டுள்ளவர்களை போர்க் கைதிகளாகவல்லவா நடத்த வேண்டும். சரி, அவர்கள் கிரிமினல்களென்றால் ஆப்கானிஸ்தானில் இருந்த சாதாரண போர் வீரர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? இதுவெல்லாம் விடை காணப் படமுடியாத பெரிய கேள்விகள். ஒன்றை மறந்து விடக்கூடாது. இவ்வாறான வலிமையான, தயவு தாட்சண்யமில்லாத நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால், உலகின் பல பாகத்திலும் வெறுப்பை சம்பாதித்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும். மாஃபியா தாதாக்கள் உருவாவதற்கு ஆல்வின் டாஃப்ளர் தனது ‘பியூச்சர் ஷாக்’ புத்தகத்தில் கூறியுள்ள காரணங்கள், அமெரிக்காவின் எதிரிகள் உருவாவதற்கும் ஒரு காரணம்.

அபுசலேம் இப்போது போர்ட்சுகலில் பிடிபட்டுள்ளார். நல்லவேளை, சில வருடங்களுக்கு முன்னர்தான் போர்ட்சுகல் பழைய பிரச்னைகளை (கோவா) மறந்து நம்முடன் முழு அளவிலான நட்பு கொள்ளத் தெடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தமும் நிலுவையில் உள்ளது. இங்கிருந்து சென்ற இந்திய அலுவலர்களும் சலேமின் அடையாளத்தினை (identity) ரூபிக்க தகுந்த ஆதாரங்களை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். எனினும் அநேக சிக்கல்கள் இதில் இருக்கின்றன. குல்ஷன் குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இசையமைப்பாளர் நதீமை இந்தியா கொண்டுவர முயன்று அதனை பிரிட்டன் நீதிமன்றங்கள் நிராகரித்ததோடு அல்லாமல், நதீமுக்கு இந்திய அரசு நீதிமன்ற செலவாக சுமார் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் இட்டது. அந்த மாதிரி நாம் மறுபடியும் அவமானப் பட்டு விடக்கூடாது என்பதுதான் நமது ஆதங்கம்.
சலேம் பிடிபடுவதற்கு காரணம் நாங்கள்தானென்று இந்திய போலீஸ் மார் தட்டிக் கொண்டாலும், தாவூது கும்பலின் தகவலன்றி, போலீஸ் அவரை லிஸ்பனில் தேடியிருக்க முடியாது என்றுதான் மும்பையில் சொல்லிக் கொள்கிறார்கள். தாவூதின் முக்கிய தளபதிகள் ஷாகீலும், ராஜனும்தான். பின்னர் மும்பை குண்டு வெடிப்பை காரணமாக காட்டி சோட்டா ராஜன் பிரிய அந்த இடத்தினை நிரப்பியது சலேம். சலேம் தாவூதின் தம்பியுடன் நெருக்கம் அதிகம். ஷாகீலை பின்னுக்குத் தள்ளி சினிமா உலகை சலேம் கைக்குள் எடுத்தது ஆச்சர்யம். ஆனால் சலேம் விரைவிலேயே நம்பத்தகாத ஆளாக கட்டம் கட்டப் பட்டார். அதற்குள் சலேம் பல கோடி தனக்கென ஒதுக்கிக் கொண்டு கூட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கலாம். எற்கனவே சொன்னபடி, சலேம் உத்தர பிரதேசத்துக்காரர். தாவூது, ஷாகீல் போன்ற மும்பை தாதாக்க்ள், சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து வந்தாலும் பதவிசாக நடந்து கொள்வதில் சமர்த்தர்கள். தாவூதின் அப்பா, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ஆனால் சலேம் அப்படியல்ல. திரைப்பட் நடிகைகள் மற்றும் நபர்களிடம் மிகவும் தரக்குறைவாக பேசுகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு. போலீஸ் ஷாகீல் மொபைல் போனை ஒட்டுக் கேட்டதில், சஞ்சய் தத் ஷாகீலிடம், சலேம் எப்படி ப்ரீத்தி ஜிண்டா மற்றும் சில நடிகைகளிடம் மோசமான வார்த்தைகளில் பேசுகிறார் என்று ஒரு பாட்டம் அழது தீர்த்து உள்ளார். அதே சலேம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது ஒரு நடிகையுடன். இருவரும் கணவன் மனைவியாம்.

சலேமின் நடவடிக்கைகள் சற்று தடாலடியானவை. அது போல வெளியிலிருந்து குறைந்த விலைக்கு அடியாட்களை (hitmen) கொண்டு வந்ததில் சில அனுகூலங்கள். பல பாதகங்கள். உண்மையில் அவர்கள் 'ஹிட்மென்' இல்லை 'ஹிட்கிட்ஸ்' என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. நான் மும்பை வந்த புதிதில் நான் சட்ட ஆலோசனை கூறும் ‘பிளாட்கள் கட்டும் நிறுவன முதலாளி’யுடன் அடிக்கடி காரில் செல்ல வேண்டி வரும். அப்போது அதிகமான மாஃபியா தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம். பலர் என்னைப் பயமுறுத்தினார்கள். நான் பின்னர் அவருடன் காரில் செல்வதை தவிர்த்து விட்டாலும், ஒரு சமாதானம் சொல்லிக் கொள்வேன், 'எல்லா நேரமும் அவர்கள், யாரைக் கொல்ல வேண்டுமோ அவரை மட்டும் சரியாக அடிக்கிறார்கள். எனக்கு ஒன்றும் ஆகாது'. இது ஒரு போலிச் சமாதானம்தான். அனால் இதனைப் பற்றி நான் அப்போது வியந்ததுண்டு. எப்படி கூட செல்லும் டிரைவருக்கு ஒரு கீறல் கூட படவில்லையென்று. ஆனால் வெகு சீக்கிரமே பிரபலமாகிக் கொண்டு வந்த தாதா தளபதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளி விட்டது மும்பை போலீஸ். இங்குள்ள 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று சொல்லப்படும் சில உதவி ஆய்வாளர் நிலையில் உள்ள சில போலீஸுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும், ஸ்டென் கன் சகிதம் விசேஷ போலீஸ் பாதுகாப்பு உண்டு. இந்த என்கவுண்டர்களால் நிலைமை சீக்கிரம் மாறிப் போனது. பல தாக்குதல்களில் தாக்கப்பட வேண்டிய நபரை விட்டு சாலையில் போய்க் கொண்டு இருந்த நபர்கள் மீது காயம் பட்டது. சிலர் மரித்தும் போனார்கள். இதற்கு போதுமான பயிற்சியின்மையும், அனுபவமின்மையும் காரணமாக கூறப்பட்டது சலேம்தான் இப்படி பல புதியவர்களை உத்தர பிரதேசத்திலிருந்து ஒரு வேலைக்கு ஐயாயிரம், பத்தாயிரமெல்லாம் பேசி கூட்டி வருகிறார் என்று கூறப்பட்டது. இதன் சாதகம், கொலையாளிகளின் அடையாளம் (identity) போலீஸை குழப்பியதுதான்.

தாவூதின் வெப்பம் தாங்காமல்தான் சலேம் மத்திய கிழக்கை விட்டு கிளம்பியிருப்பார் என நினைக்கிறேன். ஆனால் விதி விடவில்லை. தாவூதின் 'காபாரிகள்' அவரை பின் தொடர்ந்து விட்டார்கள். இன்பார்ம்ர்களை 'காபாரிகள்' என்கிறார்கள். தாவூது, அருண் காவ்லி போன்ற பெரிய கும்பல்களில் மாதச் சம்பளத்திற்கு 'காபாரிகள்' உண்டு. முன் பெல்லாம், நீங்கள் ஒரு கட்டிடம் கட்டுவதற்கு, அஸ்திவாரம் தோண்டியவுடனே இவர்கள் அந்த செய்தியினை சம்பத்தப் பட்ட தாதாவிடம் சொல்லி விடுவார்கள். சலேமையும் தாவூதின் காபாரிகள் காட்டிக் கொடுத்துவிட்டனர் என்றும் சொல்லப் படுகிறது.

சரி, நூற்றுக் கணக்கான மக்களை பலி கொண்ட மும்பை குண்டு வெடிப்பிற்கு காரணமானவருக்கு என்ன தண்டனை? உண்மையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களெல்லாம் சின்ன மீன்கள். மரண தண்டனைதான் சரி என்பது எனது இப்போதைய எண்ணம். இங்குதான் பிரச்னை. போர்ச்சுகல் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் மரண தண்டனையினை தடை செய்துள்ளன. மேலும் அதிக பட்ச தண்டனையும் 25 வருடம்தான். எனவே போர்ச்சுகலிடம், இந்தியா, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சலேமுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப் பட மாட்டாது என்று ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை வரலாம். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும் வரை சிறையில் வாடுவதுதான். அதிக பட்சம் 25 வருடம்தான், இறுதியில் சலேமுக்கும்.

சலேம் விஷயத்தில் இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாவம் நம்ம வீரப்பருக்குத் தெரியாமல் போய்விட்டது. யாரவது எடுத்துச் சொன்னால், மெல்ல சத்தியமங்கலத்திலிருந்து நழுவி லிஸ்பன் சென்று விட மாட்டரா? என் மனதில் எழும் மற்றொரு கேள்வி இதுதான். ஒசாமா போர்ச்சுகலில் இருந்திருந்தால் அமெரிக்கா என்ன செய்திருக்கும்?
***
(அபு சலேம் கைது பற்றி நான் எழுதிய முந்தைய பதிவு கில்லியில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி! எனவே அபுசலேம் குறித்து மேலும் நான் முன்பு மரத்தடியில் எழுதிய சில செய்திகள் இங்கு பதிவது பொறுத்தம் என நினைப்பதால் இந்த பதிவு)

1 comment:

azadak said...

//இந்தியாவில் அதிகமாக தேடப் படும் சில குற்றவாளிகள் மத்தியக் கிழக்கு நாடுகளில்தான் உள்ளனர், முக்கியமாக துபாய், சவூதி, குவைத் மற்றும் பகரைன் போன்ற நாடுகளின். இந்த நாடுகளுக்கும் நமக்கும் தூதரக உறவுகள் உள்ளன. எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தமும் இருக்கலாம்.//

இனிய வக்கீலய்யா,

இந்தியாவிரற்கும் அரபு எமிரேட்சுக்கும் இடையில் எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீட்டி இருக்கிறது.

இந்தச் சுட்டியில் விவரங்கள் காணலாம்.

http://cbi.nic.in/interpol/extradition.htm

ஆனால், அய்யா, தொண்ணூறுகளில் இந்த ஒப்பந்தம் இருந்ததாக நினைவில் இல்லை. போஃபோர்ஸ் வழக்கில் முக்கியமான புள்ளியாகக் கருதப்பட்ட வின் சத்ஹா துபாயில்தானே இருந்தார். அப்பொழுது அவரைக் குற்றம் சாட்டி இந்தியாவுக்கு அழைக்க முடியாத நிலையில்தானே அரசும் இருந்தது.

நட்சத்திர விடுதியில் தன்னைப் புகைப்படமெடுக்க வந்த புகைப்படக்காரரை அங்கேயே வைத்து வின் சத்ஹா அடித்ததெல்லாம் பழங்கதைதானே.

எண்பதுகளின் துவக்கத்தில் துபாய் அரசுடன் சில நிழலாளிகளை இந்தியாவுக்குத் தருவிக்கும் பணியில் அப்போதைக்கு அரபு எமிரேட்சில் இருந்த இந்தியத் தூதரகத்தின் மூலமாக நிகழ்வுகள் நடக்காமல், சவூதியில் இருந்த தூதர் டி.டி.பி.அப்துல்லாஹ் அவர்களின் மூலமாக நடந்ததாக சில ஆதாரபூர்வமற்ற செய்திகள் கேள்விப்பட்டதுண்டு.

அன்புடன்
ஆசாத்