11.7.06

யாரோ?

(மும்பையில் இன்று நடந்த பயங்கரம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கதையை நினைவுபடுத்தியது. மீண்டும் படிக்கையில் இன்றைய சம்பவம் கதைக்கு அருகில் வருகிறது. எனது அலுவலக நண்பர்களை தொடர்பு கொள்ள இதுவரை இயலவில்லை)

'தூம்...'

அலுவலகத்தின் கண்ணாடிக் கதவினை திறந்து கொண்டு வெளியேறியவனை அப்படியே உறைய வைத்தது, எங்கோ தொலைவில் இருந்து வந்த அந்தச் சத்தம். அலுவலகம் இருந்த முதல் மாடியில் இருந்து நேராக சாலைக்குள் இறங்கும் படிக்கட்டில் வைத்த கால் படியோடு ஒட்டிக் கொண்டது போல. சாலையிலும் அனைவரும் அங்கங்கே முகத்தில் சின்ன திகைப்பு காட்டி நின்றிருந்தார்கள். சில விநாடிகள்தான்....ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை என்ற நிம்மதி தந்த தைரியத்தில் முகமறியா நபர்கள் கூட சின்ன வெட்கத்தை புன்னகையாக பறிமாறிக் கொள்ள, சத்தம் வந்த திசையினை அனிச்சையாக பார்த்தபடியே படியிறங்கினேன்.

வழக்கமாகவே அலுவலக நேரம் முடிந்து தாமதமாகத்தான் வீட்டுக்கு கிளம்புவேன். வீடு அலுவலகத்துக்கு அருகிலேயே இருப்பது ஒரு காரணம். இன்று அருகில் நடக்கும் கைத்தறிக் கண்காட்சிக்கு போக வேண்டும் என்று மாதவி சீக்கிரமாக வீட்டுக்கு வரச் சொல்லியிருந்ததால் அலுவலகம் முடிந்து பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் கிளம்பி விட்டேன்.

சாலையில் இரண்டு மூன்று பேராக பலர் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 'ஏதாவது பெரிய வெடியாக இருக்கும். எதுவானாலும் நாம் இங்கு இருந்து பயன் ஒன்றும் இல்லை' வலிய ஒரு இயல்புத்தன்மையை வரவழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை உதைத்தேன். ஆனாலும், 'பம்பாயில் எப்போதும் எங்காவது கேட்கும் வெடிச்சத்தம் போல இல்லை...இது வித்தியாசமாக இருக்கிறது' என்று உள்மனது கூறியது. இத்தனைக்கும் செவிப்பறை கிழியும்படியான பெரிய சத்தம் இல்லை. ஆனால், உடல் தசைகளைக் கடந்து இதயம் வரை ஒரு படபடப்பை இரு விநாடிகள் ஏற்படுத்தியது. இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த நில அதிர்வு கூட இப்படித்தான். குமிழ்த்து வைக்கப்பட்ட ஜெல்லியை லேசாக விரலால் குத்தினால் டுமே, அது மாதிரி சின்னதாக இரண்டு ஆட்டு.... ஆனால் அழுத்தமாக, 'இது வேறடா!' என்பது போல. தறிகெட்டுச் சுற்றும் மோசமான ராட்டினத்தின் ஆட்டம் கூட அப்படி என்னை பயமுறுத்தியிருக்காது, சில விநாடிகளில் மீண்டும் அது போல சின்ன அதிர்வுதான். என்னவென்று புரிந்து கொள்ளாத உணர்வில் முதலில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்ட மாதவியும் நானும் இந்த இரண்டாவது அதிர்வில், அப்படியே போட்டது போட்டபடி தூங்கிக் கொண்டிருந்த மித்திரனை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினோம். இப்போது கூட அதே மாதிரி ஒரு உணர்வு. இல்லையெனில் இரண்டு வருடத்துக்கு முன்பு நடந்த நில அதிர்வை ஞாபகப்படுத்தியிருக்காதே!

'அட! சொன்னமாதிரி வந்திட்டீங்களே' மாதவிக்கு ஆச்சரியம் நினைத்தது நடக்கப் போகிறதே என்று. அவள் கவலை அவளுக்கு. இந்தக் கைத்தறி, கிராமியக் கலைப் பொருட்கள் என்றால் போதும். பொறுக்க முடியாது, உடனே போய் விட வேண்டும். அதற்காக கண்காட்சியில் வாங்கிக் குமித்து விடுவாள் என்று அர்த்தமல்ல. சும்மா! வலம் வர வேண்டும், புதிதாக வந்திருக்கும் பொருள்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் அவள் ஆசை. நானாக அவள் விருப்பத்தை புரிந்து கொண்டு, 'இதை வாங்கலாமா?' என்றால்தான் வாங்குவாள்.

மாதவியும் மித்திரனும் ஏற்கனவே தயாராக இருந்தனர். நான் முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு இருக்கையில் சாலையில் சில சைரன் சத்தங்கள். எனது வீட்டை ஒட்டிய சாலையில் சைரன் சத்தம் ஒன்றும் புதிதல்ல. அருகே பல மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆனாலும் அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு எதாவது விழாவை சாக்கு காட்டி வரும் வி.ஐ.பிகளின் சைரன் ஒலிதான் அடிக்கடி நிகழும்.. மாதவி யாரிடமோ கதவைத் திறந்து பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

'உங்களுக்குத் தெரியுமா? பாந்த்ரா ஸ்டேஷன்ல பாம் வெடிச்சுருச்சாம். நிறைய பேர் செத்துப் போயிட்டாங்களாம்' என்றவாறு உள்ளே ஓடி வந்தாள்.

"என்ன....பாமா, நான் வரும் போதே சத்தம் கேட்டுது. அப்பவே நினைச்சேன், பாம்தான்னு....யார் சொன்னா" சட்டையை கால்சாராய்க்குள் வலதுகையால் அமுக்கியவாறே முன்னறைக்கு வந்தேன்.

"அனிதா அம்மா சொன்னாங்க. அவங்க வெளியில ஆட்டோல ஏறிக்கிட்டு இருக்கும் போது உள்ளே வெடிச்சதாம். கையி காலுன்னு எல்லாம் வெளியேவே வந்து விழுந்துச்சாம். அலறியடிச்சுக்கிட்டு வந்திருக்காங்க"

அப்படியே சோபாவில் சரிந்தேன். 'கடைசியில இங்கேயே வச்சுட்டானுங்களா'. இப்படி ஒருநாள் நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். போன மாதம்தான் முலுண்ட்ல வெடிச்சது. அதுக்கு முன்னால சென்ட்ரலில். அலுவலக வேலையாக 'சர்ச் கேட்' போகும் போது கூட நினைப்பேன், 'இவ்வளவு கூட்டமா இருக்கே. இங்க ஒரு நாள் வைக்கப் போறானுங்கன்னு'. பாந்த்ராவில வெடிக்கும் என்று நினைக்கவில்லை. ஒரிரண்டு முறை ஏதோ தாதாக்கள் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

அதற்குள் சாலையில் சைரன் ஓலி அதிகமாக கேட்கத் தொடங்கி விட்டது. மாதவி டி.வியில் ஒரு நாளும் பார்க்காத இன்கேபிள் சானலை தேடிக் கொண்டு இருந்தாள். சாலையில் ஆட்டோக்கள் கார்கள் என எல்லாமே விரைவாக போய்க்கொண்டிருப்பது போல தோன்றியது. 'அடிபட்டவர்களை எல்லாம் இங்கே பாபா ஹாஸ்பிட்டலுக்குத்தானே கொண்டு வருவார்கள். எங்க வெடிச்சுருக்கும். ஸ்டேஷன்லயா இல்லை ட்ரெயின்லயா?'

சடாரென மூளைக்குள் பொறி தட்டியது. 'வெடிச்சத்தம் கேட்ட போது ஆறு மணி அல்லது ஐந்து ஐம்பது இருக்குமே...... நம்ம மக்கள்ல்லாம் அப்பதானே ஸ்டேஷன்ல இருந்திருக்கணும்' எனது அலுவலகத்திலிருந்து ஒரு பத்து பதினைந்து நிமிட நடையில் ஸ்டேஷன் போய் விடலாம். ஐந்தரைக்கு அனைவரும் பெட்டியை மூடிவிடுவார்கள். அதுவும் நாயர் இன்னும் மோசம். அலுவலக நேரம் முடிய பதினைந்து நிமிடத்துக்கு முன்னரே கம்பியூட்டரை மூடி விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து விடுவார். அலுவலக நேரத்துக்கு மேலாக ஒரு நிமிடம் கூட அலுவலகத்துக்குள் தங்கக் கூடாது என்பது அவரது கொள்கை. மத்தியானம் கூட சாப்பிட்டு முடித்ததும், மழையானாலும் சரி வெயிலானாலும் சரி வெளியே எங்காவது சுற்றி விட்டு சரியாக இரண்டு மணிக்குதான் மீண்டும் உள்ளே நுழைவார். 'நாயர் தப்பித்து இருப்பார். ஆனால் மற்றவர்கள்.....கடவுளே'

"மாதவி, அந்த மொபைலை எடு" என்று கத்தியவாறே நானே எழுந்து அவளுக்கு முன்னால் சென்று எனது ஃபோனை எடுத்தேன்.

"எங்க ஸ்டாஃப் எல்லாரும் அப்ப ஸ்டேஷன்ல இருந்துப்பாங்கம்மா" என்றவாறே நடுங்கும் கைகளால் பொத்தான்களை அமுக்கினேன்.

விட்டலிடம் மொபைல் கிடையாது. சோல்கரிடம் இருக்கு. இரண்டு பேரும் எனது டிபார்ட்மெண்ட். விட்டல் இந்தப் பக்கம் கோரேகான் போகணும். சோல்கர் தாணா போகணும். ஆனால், இரண்டு பேரும் சேர்ந்துதான் போனார்கள். சோல்கரின் பெயரைத் தேடி அழுத்தினேன். அடுத்த பக்கம் மணியடிக்கும் சத்தம் கேட்டதில் சின்ன நிம்மதி.

"ஹலோ"

"சோல்கர். சூர்யா....எங்கே இருக்கிறாய்" சோல்கருக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஹிந்தி அல்லது மராத்திதான். எனக்கு இரண்டும் தடுமாற்றம். எனினும் நாங்கள் இருவரும் சமாளித்து விடுவோம்.

தாணா வண்டியில். ஏன்? என்ன விஷயம்?"

"பாந்த்ரா ஸ்டேஷனில் பாம் வெடிச்சது தெரியுமா?"

"தெரியாதே. எப்போது?"

"ஆறு மணி இருக்கும். சரி விட்டல் போனது தெரியுமா?"

"நாங்கள் ஸ்டேஷனுக்குள் போகும் போதே விட்டலுக்கு ரயில் வந்து விட்டது. அவர் ஏறி இருப்பார்"

"ஓ.கே. நான் விட்டல் வீட்டுக்கு ஃபோன் செய்கிறேன்" என்றவாறு தொடர்பை துண்டித்தேன். அதிகமாக பேச சோல்கரிடம் எதுவும் இல்லை.

"சோல்கர், விட்டல் எல்லாம் போய்ட்டாங்களாம்" என்று எதுவும் பேசாமல் எனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த மாதவியிடம் சொல்லியபடியே விட்டலில் வீட்டை தொடர்பு கொண்டேன்.

"ஹலோ! சூர்யா பேசுகிறேன். விட்டல் இருக்கிறாரா"

"இருங்க இப்பதான் வந்தார். கூப்பிடுகிறேன்" அவரது மனைவியாக இருக்க வேண்டும். நிம்மதியானது எனக்கு.

"விட்டலும் வீட்டுக்கு போய்விட்டார்" என்று மாதவிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே விட்டல் வந்து விட்டார்.

"விட்டல் தெரியுமா? இங்க பாந்த்ரா ஸ்டேஷன்ல ஒரு பாம் ப்ளாஸ்ட். நிறைய பேர் செத்துட்டதா சொல்றாங்க"

"அப்படியா, ரேஷ்மா டிவியை போடு" என்றவாறு விட்டல் தொடர்ந்தார், "எப்போ இப்பவா?"

"இல்லை. நீங்க அப்பதான் போயிருக்கணும். அதான் பயமாகி விட்டது. எங்கே நீங்க யாரும் மாட்டிக் கொண்டீர்களோ என்று" சிரித்தேன், கலவரத்தின் தீவீரத்தை தணிப்பதாக எண்ணி.

"சோல்கரும் ஓ.கே. இப்பதான் ஃபோன் செய்தேன்"

"தப்பிச்சுட்டானா! இவனுங்க எல்லாம் மாட்ட மாட்டேன் என்கிறார்களே" விட்டல் பெரிதாகச் சிரித்தார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சோல்கரைப் பற்றி ஏதாவது சொல்லாமல் இருக்க மாட்டார். நானும் தயக்கத்துடன் சிரித்தேன்.

"நான், சோல்கர்...ராகவன் மூன்று பேரும்தான் வந்து கொண்டிருந்தோம். ராகவன், 'டி' வார்ட் பவாருடன் பேசிக் கொண்டு இருந்தான். நான் உடனே டிரெயின் ஏறி விட்டேன்"

"சரி, விட்டல் நாளை பார்க்கலாம்" போனை வைத்து விட்டு மாதவியைப் பார்த்தேன். அவள் முகத்தில் உற்சாகம் இல்லை. இன்று வெளியே செல்வது அவ்வளவுதான் என்று நினைத்திருக்கலாம். வெளியே சைரன்களின் சத்தம் இப்போது அதிகமாக கேட்டது.

"ராகவனுக்கும் போன் பண்ணுங்க" மாதவி சொன்னதும்தான் 'ராகவனை மறந்து விட்டேனே' என்று தோன்றியது. சொல்லப் போனால் ராகவன்தான் அலுவலகத்தில் எனது நண்பன். இன்றும் அவன் என்னை 'சார்' என்று கூப்பிட்டாலும் தமிழ் தெரிந்தவன் என்ற முறையில் ஏற்பட்ட அறிமுகம் பின்னாளில் என்னுடன் மிகவும் நெருக்கமாகி விட்டான். என் பிரச்னைகளைப் பற்றி அதிகம் அவனிடன் பேசுவதில்லையென்றாலும், அவனுடைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் நான்தான் வடிகால். என்னை விட வயதில் குறைந்தவன் மற்றும் அலுவலகத்தில் எனது மேலான தகுதி போன்றவை முழுமையான வகையில் நான் அவனிடம் பழகாகதற்கு காரணமாக இருக்கலாம்.

ராகவன் இருப்பது பம்பாய்க்கு வெளியே மீரா ரோட்டில். காத்தலீனை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு இருவரது வீட்டின் ஆதரவும் இல்லாமல், பம்பாய்க்குள் வீடு வாடகைக்கு பிடித்து குடியிருப்பது சாத்தியமல்ல. ராகவன் வீட்டில் ஃபோன் இல்லை. ஆனாலும் அலுவலகத்தில் கொடுத்த மொபைல் இருக்கிறது. ராகவன் பெயரைக் கண்டுபிடித்து அழுத்தினேன்.

"இந்த வாடிக்கையாளர் தனது மொபைலை 'சுவிட்ச் ஆஃப்' செய்துள்ளார் அல்லது அவர் தொடர்பு கொள்ளும் தூரத்தில் இல்லை" என்ற கொஞ்சும் ஆனாலும் எரிச்சலூட்டும் பெண் குரல் ஒலித்தது. நான் மொபைலை வைத்து விட்டு யோசனையில் ஆழ்ந்தேன்.

"என்ன கிடைக்கவில்லையா?" மாதவி கையில் காப்பி டம்ளருடன் வந்தாள்.

"ஃபோனை சுவிட்ச் ஃப் செய்திருக்கிறான்"

மாதவி காப்பிக் கோப்பையை கையில் கொடுத்தபடியே, "காத்தலீன் போன மாதம் அவங்க பக்கத்து வீட்டு நம்பரைக் கொடுத்தாள். இருங்க பார்க்கிறேன்" என்றபடியே தனது டைரியை தேடி எடுத்துப் புரட்டினாள். ராகவனுக்கு இரண்டு மாதம் முன்புதான் குழந்தை பிறந்தது. அப்போது மாதவிதான் கூட இருந்து எல்லா உதவியும் செய்து வந்தாள்.

"இங்க இருக்கு" என்றபடியே ஒரு கையில் டைரியை பிடித்துக்கொண்டு மறுகையால் நம்பரை டயல் செய்தாள். தோள்மீது தொலைபேசி ரிசீவர்.

"ஹலோ நான் காத்தலீனின் தோழி பேசுகிறேன். காத்தலீனைக் கூப்பிட முடியுமா?"

என் பக்கம் திரும்பி, "இங்கேதான் இருக்கிறாளாம்" என்று கிசுகிசுத்தாள்.

"இரு இரு நான் பேசுகிறேன்" பாய்ந்து ரிசீவரை வாங்கிக் கொண்டேன். மாதவி ஏதாவது சொல்லி அவளைக் கலவரப்படுத்திவாளோ என்று பயந்தேன். காத்தலீனின் 'ஹலோ' கேட்டது.

"காத்தி, நான் சூர்யா. ராகவன் இருக்கிறானா?"

"இன்னும் வரவில்லையே. என்ன விஷயம்?"

"ஒன்றும் இல்லை. அவன் மொபைல் ஆஃபாக இருக்கிறது. அதனால் வீட்டுக்கு வந்திருப்பானோ என்று நினைத்தேன்"

"ராகவன் வருகிற நேரம்தான். நான் கூட கொஞ்ச நேரம் முன்பு மொபைலில் கூப்பிட்டேன். ஹலோ என்று அவர் குரல் கேட்டது. உடனே ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. பின்னர் கட் கிவிட்டது. அதற்குப்பிறகு தொடர்பு கொள்ளவே முடியவில்லை" எனக்கு ஒரு நிமிடம் இதயம் நின்றது போல இருந்தது.

"எத்தனை மணிக்கு பேசினாய் என்று தெரியுமா?"

"ஆறு மணிக்கு பத்து நிமிடம் இருக்கும். அப்போ ஆபீஸ்ல இருந்தாரா?" எனக்கு என்ன பதில் சொல்வது என்று தோன்றவில்லை.

"தெரியவில்லை. ஓ.கே. அவன் வந்தவுடன் எனக்கு ஃபோன் செய். நான் வீட்டில்தான் இருக்கிறேன்" என்றபடி ஃபோனை வைத்தேன்.

மீண்டும் காபி கோப்பையை கையிலெடுத்துக் கொண்டு எதுவும் பேசாமல் நான் சோபாவில் அமரும் வரை எதுவும் பேசாமல் மாதவி என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"என்னவாம்?"

"அவ சொல்றதைப் பாத்தா பயமா இருக்கு. பாம் வெடிச்ச அதே சமயம் அவனை மொபைல்ல கூப்பிட்டுருக்கா! ஆனா எதோ சத்தம் கேட்டு ஃபோன் கட்டாயிடுச்சாம்"

"ஹா! உடனே நீங்க கற்பனை பண்ண ஆரம்பிச்சுருவீங்களே. எங்கேயாவது டிரெயினை நிப்பாட்டியிருப்பாங்க. கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் பண்ணுங்க" மாதவி எப்போது நம்பிக்கையாகத்தான் பேசுவாள்.

மாதவி சொன்னது சரிதான். சில நிமிட நேரத்திலேயே 'ராகவன் உடல் சிதறி கிடப்பது போலவும், காதலீனின் அம்மா அவளை தன்னுடன் சேர்த்துக் கொள்வது போலவும், மீண்டும் காதலீன் வேலைக்கு வருவதைப் போலவும், ராகவன் கைகளை இழ்ந்து செயற்கை கை மாட்டித் திரிவதைப் போலவும் நூற்றுக் கணக்கான 'பிளாஷ்' அடித்து மறைந்தன. 'எதாவது நடக்கப் போகும் ஒரு விஷயத்தை இப்படி படமாக கற்பனை செய்து விட்டால் அது நடக்காது' என்பது அறுத்து தூர எறிய வேண்டும் என்று பலமுறை நினைத்தாலும் சிறுவயது முதலே என்னைத் தொடர்ந்து வரும் ஒரு மூடநம்பிக்கை. வேறு யாருக்கும் இப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆசைதான் என்றாலும் கேட்க வெட்கப்பட்டு எனக்குள்ளேயே விருட்சமாக வளர்த்து வைத்த பழக்கம். ராகவனுக்கு ஏதாவது மோசமாக நடந்ததற்க்கான கஷ்டத்தை இப்போதே அனுபவத்து விட்டால் அப்படி நிஜத்தில் நிகழாது. நம்புகிறேன்.

'ராகவனுக்கு ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது. ராகவனுக்காக இல்லாவிட்டாலும், இப்போதுதான் பிறந்த அவனது குழந்தைக்காக...முக்கியமாக அவனை நம்பி வீட்டை விட்டு வந்த காதலீனுக்காக, குழந்தைக்காக வேலையை விட்ட அவளது துணிச்சலுக்காக. பெரிய அடிகிடி பட்டிருந்தால் என்ன ஆகும். மெடிக்கல் இன்ஸ¤ரன்ஸ் எதுவும் எடுத்திருக்கிறானா? அரசாங்கம் ஏதாவது உதவி தருமா? இல்லை ஒன்றும் கிடைக்காதா? அலுவலகத்தில் எவ்வளவு தருவார்கள் என்பது தெரியாது. பெரிய பாதுகாப்பு எல்லாம் கிடையாது. கம்பெனி நிர்வாகத்தின் தயவில்தான் எல்லாம் இருக்கிறது. செத்துகித்து போனால் காதலீனை வேலையில் சேர்த்துக் கொள்வார்கள்...இல்லாவிட்டாலும் சேர்த்துக் கொள்வார்கள். காதலீன் அம்மா என்ன சொல்வார்கள். என்னைத்தான் குறை சொல்வார்கள். ராகவனுக்கு நான்தான் எல்லாம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்'

***


"என்ன தூங்கிட்டீங்களா? நியூஸ்ல போடுறாங்க பாருங்க....ராகவனுக்கு ஃபோன் பண்ணுங்க" மாதவி தோளைப் போட்டு குலுக்கினாள். ஆச்சர்யமாக இருந்தது, அரைமணி நேரம் கடந்திருந்தது. தூங்கிவிட்டேனா!

மொபைலில் மீண்டும் அதே தகவல். 'ராகவன் வீட்டு பக்கத்து வீட்டுக்கு ஃபோன் செய்யலாமா?' ஆனால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. 'அடிக்கடி ஃபோன் செய்தால் எதுவும் தவறாக எடுத்துக் கொள்வார்களா?' இப்படியான தர்மசங்கட நேரங்களில் பொறுப்பினை மாதவியிடம் தள்ளி விடுவேன். கையில் மொபைலுடன் மாதவியை திரும்பிப் பார்க்க...டெலிபோன் மணி அடித்தது.

"சூர்யா...காதலீன் பேசுகிறேன். ராகவன் எங்கே? இன்னும் வீட்டுக்கு வரவில்லையே"

"இல்லையே எங்காவது போயிருக்கலாம்" எந்தவித கலவரத்தையும் குரலில் காண்பிக்கவில்லை.

"உங்களுக்குத் தெரியுமா? பாந்த்ரா ஸ்டேஷன்ல பாம் வெடிச்சுருக்காம். இவர் வருகிற நேரம். அதுவும் அவரது மொபைல் கூட அப்போதுதான் ஆஃப் னது. எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது" படபட என்று பேசிக் கொண்டே இருந்தாள். அழவில்லை. கோவா கிறிஸ்டியன். தைரியமானவள். நம்ம பக்கத்து பெண்கள் போல எளிதில் அவர்கள் அழுவதுமில்லை.

"காதலீன், நீ குழந்தையை எடுத்துக் கொண்டு இங்கே வரமுடியுமா?" அவள் பேசிக் கொண்டே போனதில் மனதில் தோன்றியது வார்த்தைகளாக வெளிவந்தாலும், சில விநாடி அமைதிக்குப் பிறகு "ஏன்?" என்று ஒற்றை வார்த்தையில் காதலீன் கேட்டு நிறுத்திய கேள்வியில் ஆடிப்போய் விட்டேன்.

"இல்லை. இன்று இரவு இங்கு தங்கி நாளை போகலாமே? நாளைக்கு ஆபீஸ் விடுமுறை வேறு. ராகவன் வந்தவுடன் இங்கு வரச்சொல்லிவிட்டு வா. நானும் ராகவன் மொபைலுக்கு ஒரு எஸ்எம்எஸ் கொடுத்து வைக்கிறேன்"

"எனக்கும் இனிமேல் இங்கு இருக்க முடியாது. அவர் அதற்குள் தொடர்பு கொண்டால், அங்கே வரச்சொல்லுங்கள். மாதவிக்குதான் அதிக சிரமம்"

"அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவள்தான் உங்களை வரச்சொல்லிக் கொண்டு இருந்தாள். மித்திரனுக்கும் பாப்பாவுடன் விளையாட வேண்டுமாம். டாக்ஸியில் வந்து விடு. ரிக்க்ஷா வேண்டாம். எதுவும் பெரிதாக எடுக்க வேண்டும். உடனே வா"

'சரி' என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள். நான் மீண்டும் சோபாவில் சரிந்தேன்.

'காதலீனை ஏன் வரச் சொன்னேன்? அவள் எதுவும் பெரிதாக பயந்து விடக்கூடாது' மனதில் தோன்றியது. அதன் விபரீதம் புரியும் முன்னர் வார்த்தைகளாக வெளிவந்து விட்டது. 'சரி அவள் வருவதும் நல்லதுதான். எதையும் இப்போது எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. முன்பு இப்படித்தான் எனது நண்பன் ஒருவன் ஒரு விபத்தில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் தான் யார் என்று கூட சொல்ல இயலாத நிலையில் தகுந்த சிகிச்சையின்றி மரித்துப் போனான். அரசாங்க மருத்துவமனைகளில் நாம் சென்று பணத்தை வெட்டாத வகையில் எதுவும் நடக்காது. மாதவி எதுவும் பேசாமல் என்னையும் டி.வியையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

"காதலீன் இங்கு வருகிறாள். நான் வேண்டுமானால் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்" ஸ்டேஷன் வரை என்று வாயில் வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டேன்.

மாதவி வீட்டில் இருந்து நான் புலம்பிக் கொண்டிருப்பதை விட வெளியில் சென்றால் நல்லது என்று நினைத்திருக்கலாம். ஒன்றும் சொல்லவில்லை.

***

வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு நடந்தும் போகலாம். சாலையில் அதிகமான போக்குவரத்து இல்லை. ஆம்புலன்ஸ்களும், போலீஸ் ஜீப்புகளும் சைரன் அலற விரைந்து கொண்டிருந்தது. என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் பாபா ஹாஸ்பிட்டலுக்குதான் அடிபட்டவர்களை கொண்டு வருவார்கள் என நினைத்தது சரிதான். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தது சின்ன ஆச்சர்யம். அதனால் சாலை வெளிச்சம் மங்கிப் போய் ஒர் பயத்தன்மையை வெளிப்படுத்தியது. போகும் வழியில் வழக்கமாக் இரவு பத்து மணிக்குதான் மூடப்படும் எனது அலுவலகம் கூட வெளிக்கதவும் பூட்டப்பட்டு, நடந்திருப்பது பெரிய விபரீதம்தான் என்பதை உணர்த்த, வாசலில் நின்றிருந்த காவலாள், "சூர்யா சாப். எங்கே வந்தீர்கள்?" என்றான்

"என்ன ஆபீஸ் முடியாச்சு...இவ்வளவு சீக்கிரமாக. சாப் போயாச்சா" என்றேன்.

"என்ன தெரியாத மாதிரி கேட்கிறீங்க. பாம் வெடிச்சுருச்சு தெரியுமில்ல. கலவரம் வரப் போகுதுன்னு எல்லோரும் பேசிக்கிறாங்க. வீட்டுக்கு போங்க சீக்கிரமா" என்றான்.

'சரி சரி' என்று தொடர்ந்து நடந்தாலும் மனதில் ஒரு சின்ன பயம் படர்ந்து கொண்டது. கடை எல்லாம் அடைத்தது கலவர பயத்தாலா? பம்பாய் கலவரத்தில் பாந்த்ராவின் பங்கும் முக்கியமானது. கிறிஸ்தவர்கள் முதல் சகல மதத்தவரும் இங்கு சரி விகிதத்தில் அருகருகே நெருக்கமாக வசிப்பதால் கலவரம் வெடிக்கும் அபாயம் இங்கு அதிகம். அதி நவீன பிளாட்கள் ஒரு புறம் இருந்தாலும் மிகவும் மோசமான சேரிகளும் பாந்திராவை சுற்றி இருக்கிறது. அதுவும் ஸ்டேஷனை சுற்றியிருக்கும் 'பிஹரம்பாடா'. போன கலவரத்தில் அதிகமாக அடிபட்ட பெயர். இன்றும் மற்றவர்கள் செல்ல அஞ்சும் பகுதி. சாலையில் வெறுமே வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கூட முகத்தில் கலவரச்சுமையை சுமந்து செல்வதாக மனதில் தோன்றியது. அடைக்கப்பட்ட கடைகளும், விடாமல் அலறும் சைரன்களும், சாலையில் இல்லாமல் போன தனியார் வாகனங்களும் மேலும் பயமுறுத்தியது.

எஸ்வி ரோட்டைத் தாண்டி ஸ்டேஷன் சாலையில் கால் வைத்த உடனே வெடிக் களோபரத்தை முழுமையாக உணர முடிந்தது. ஸ்டேஷனுக்கு முன்னர் பெரிய திடல் போல இருக்கும் இருவழி சாலைக்கும் முன்புறம் இருக்கும் மசூதிக்கு இந்தப் பக்கம் பெரிய கூட்டம். கூட்டத்தைப் பிளந்து அவ்வப்போது வெளிவரும் ஆம்புலன்ஸ்கள், ஆட்டோகள் மற்றும் டாக்ஸிகள். இரண்டு பெண்கள் பெரிதாக அலறியபடி என்னைக் கடந்து ஓடினர்.

மசூதி அருகிலேயே போலீஸ் அனைவரையும் தடுத்து நிறுத்தியிருந்தனர். பாந்திராவாசிகள் பேசும் சுமார் அரை டஜன் மொழிகளிலும் எதேதோ அலறல்களும், வசவுகளும் கேட்டது. என்ன் ஏது என்று எதுவும் விளங்கவில்லை. கிடைத்த இடைவெளியில் மற்றவர்கள் தோள்களையும் கரங்களையும் விலக்கிக் கொண்டு முன்னால் சென்றால், ஏதேதோ பெயர் சொல்லி அழும் மக்களை ஒரு கட்டுக்குள் வைக்க போலீஸ் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.

போலீஸார் எல்லோரையும் தடுத்து நிறுத்தியிருந்தாலும் ஸ்டேஷன் முன்னர் ஆங்காங்கே சிலர் நுழைந்து கூட்டம் இருந்தது. சில வாகனங்கள். காவித்துணியை தலையில் கட்டியபடி கோஷமிட்டுக்கொண்டு பல இளைஞர்கள் அங்குமிங்கும் ஓடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் அடிபட்டவர்களை வாகனங்களில் ஏற்றியபடியும் உதவி செய்தபடி இருந்தனர். நானும் மற்றவர்களை உதாசீனப்படுத்தி கொஞ்சம் முன்னால் சென்றால்....காலில் ஏதோ 'ப்ளக்' என்று விநோதமான உணர்ச்சி! குனிந்து பார்த்தால்...கீழே திட்டாக ரத்தம்...மனித ரத்தம், அதைத்தான் மிதித்திருகிறேன். நெருப்பில் பட்டது போல காலைத் தூக்கினால், அந்த இடம் மட்டுமல்ல ஸ்டேஷன் முன் உள்ள சாலை முழுவதுமே ரத்தத்தில் கால் தடங்கள் விளக்கொளியில் பளபளத்தன. பல இடங்களில் மிதித்து நசுக்கப்பட்ட தசைப்பகுதிகள்....கொஞ்ச நேரம் முன்பு குடித்த காப்பி தொண்டை வரை ஏறி...குமட்டிக் கொண்டு வர, பின்னால் இரண்டடி வைத்த எனது தோள்களை பின்புறம் இருந்து யாரோ அழுத்திப் பிடித்தனர். பரிச்சயமான குரல்.

"என்ன, சூர்யா சாப். இங்கே வந்து இருக்கிறீர்கள்?" திரும்பிப்பார்த்தால் எனக்கு மிகவும் தெரிந்த எங்கள் பகுதி கவுன்ஸிலர் நாயக். ஏதாவது உதவி வேண்டி அடிக்கடி எங்கள் அலுவலகம் வருவார். எப்போதும் அருகிலுள்ள சிவ்சேனா கட்சி அலுவலகம் தாண்டி போகும் போது யாருடனாவது பேசிக் கொண்டு இருப்பார். ஆனாலும் என்னைப் பார்த்து கையசைப்பார்.

"இல்லை நம்ம ஆபீஸல வேலை செய்யறாரே ராகவன், அவர் இன்னும் வீட்டுக்கு போய்ச் சேரவில்லை. அதுதான் ஒரு சின்ன சந்தேகம். வந்து பார்க்கலாமென்று...." என்று இழுத்தேன்.

"இங்கே நீங்க ஒன்றும் பார்க்க முடியாது. வேண்டுமானால் பாபா ஸ்பத்திரிக்கு போய்ப் பாருங்கள். இங்கு இருக்க வேண்டாம். நிலமை பதட்டமாக இருக்கிறது. எதுவும் நடக்கலாம். வதந்திதான். ஆனால், எதற்கும் நீங்கள் வீட்டுக்கு போவது நல்லது" என்று சொன்னபடியே அங்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காவிப்பட்டி தொண்டர்களை இயக்கியபடியே ஸ்டேஷனுக்குள் மறைந்தார்.

'ராகவன் இங்கு எங்காவது இருக்கிறானா?' என்ற சந்தேகம் உள்ளத்தைக் குடைய அங்கிருந்த ஒரு ரிக்ஷாவை நிறுத்தினேன்.

"ஹில் ரோடா....இருபத்தைந்து ரூபாய் வேண்டும்" எனது பத்து வருட பம்பாய் வாழ்க்கையில் ரிக்க்ஷாவில் ஏறுவதற்கு முன்னரே குறிப்பிட்ட தொகை முதன்முறையாக கேட்கப்பட்ட அதிர்ச்சியில் ஓட்டுநரின் முகத்தைப் பார்க்க, "சாப். பாருங்கள். ரொம்ப சிலரே இருக்கிறோம். எவ்வளவு ரிஸ்க் எங்களுக்கு" என்றார்.

எவ்வளவோ முறை பதினோரு ரூபாய்க்கு பத்து ரூபாய் கொடுத்து மீதி ஒரு ரூபாயை தேடிக்கொண்டிருக்கையில், 'பரவாயில்லை' என்று சொல்லிச் சென்ற ரிக்க்ஷாக்காரர்களை நினைத்து, 'சரி போ' என்றவாறு ஏறிக்கொண்டேன். அவருக்கு என்ன தோன்றியதோ, 'தவறாக நினைக்காதீர்கள்' என்ற வகையில் ஏதேதோ சொல்லிக் கொண்டே வந்தாலும் என் மனதில் ராகவனும் காதலீனும் தோன்றித் தோன்றி மறைந்தார்கள். 'நடந்தது நடந்து விட்டது. என்ன நடந்தது என்பது தெரியுமானால் அடுத்த விஷயத்தைப் பார்க்கலாம். இந்தக் காத்திருத்தல் வேதனை! நெஞ்சு நிறைய பயத்தை நிறைத்து...இறக்கி வைக்க முடியாமல், இது மஹாக் கொடுமை' என்று நினைத்துக் கொண்டே மாதவியிடம் பேசுவதற்காக மொபைலை எடுத்தால், 'வலைத்தொடர்பினை தேடி' என்ற எழுத்துக்கள் எரிச்சலை மூட்டின! என்னை ஒரு முறை பார்த்துக் கொண்ட ஓட்டுநர், 'மொபைலெல்லாம் ஆஃப் செய்துவிட்டார்கள் சாப்' என்றார்.

***

வீட்டிற்கு நான் போய்ச் சேரவும் காதலீன் வரவும் சரியாக இருந்தது. இரண்டு மாதத்துக்கு முன்பு பார்த்ததற்கு கொஞ்சம் குண்டாக இருந்தாள். அவள் போட்டிருந்த ஜீன்ஸையும் சட்டையையும் முழுக்க உடல் மறைத்திருந்தது. குழந்தையை கையில் வைத்த படியே எனது கைகளை இறுக பற்றிக் கொண்டாள். கண்களில் கண்னீர். அவள் கைகளை விலக்கியபடி, 'என்ன பெயர்?' என்றபடி குழந்தையை வாங்கினேன், வேறு எதுவும் பேசத் தோன்றவில்லை.

"என்ன ஏதாவது விபரம் தெரிந்ததா?" எனது கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை என்பது புரிந்தது. அழவில்லை என்றாலும், வரும் வழி முழுவதும் கலங்கிப் போய் வந்ததை முகம் காட்டியது. பாவம், அவளுக்கு யார் இருக்கிறார்கள் இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில். அவள் அம்மாவுக்கு ஃபோன் செய்திருக்கலாம். 'என்னவாகப் போகிறாய் பெண்ணே' என்று கேட்டுக் கொண்டேன். குழந்தை சிரித்தபடி எனது கண்ணாடியை பிடுங்கியது.

"ஸ்டேஷன் வரை போய் வந்தேன். அங்கு எதுவும் பயனில்லை. எதற்கும் ஆஸ்பத்திரி வரை போய் பார்த்து விட்டு வருகிறேன். நீ மாதவியுடன் பேசிக் கொண்டிரு"

"இல்லை. இல்லை. நானும் வருகிறேன்" என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கிளம்பினாள். மாதவியும் 'கூட்டிக் கொண்டு போங்க' என்ற வகையில் கண்ணசைக்க எனக்கு வேறு வழியில்லை.

***

பாபா ஸ்பத்திரியில் நிலமை ஸ்டேஷனை விட மோசம். ஆம்புலன்ஸ்கள் வருவதும் ஸ்டெரச்சர் என்று சொல்வதற்கு லாயக்கில்லாத முழுவதும் ரத்தம் படர்ந்த துயில் அள்ளி அடிபட்டவர்களை உள்ளே கொண்டு செல்வதுமாக ஒரே களோபரம். ஒவ்வொரு ஆம்புலனஸ் வரவும் அடித்துப் பிடித்து எட்டிப் பார்த்தபடி மக்கள் கூட்டம். காதலீன் தனது இரு கைகளாலும் எனது புஜத்தை இறுகப் பிடித்தபடி ஏறக்குறைய மயங்கிச் சாயும் நிலையில் என் மீது சாய்ந்து இருந்தாள். அங்கு பரபரப்பாக நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லியபடி இருந்தனர். 'திங்கட்கிழமை அவளுக்கு கல்யாணம். அதற்கு தோழிகளுக்கு கார்டு கொடுத்துட்டு வரேன்ன்னு சொல்லிட்டுப் போன பொண்ணுங்க. இப்ப ஒரு கை இல்லாம உள்ள் இருக்கா' என்று அழுதபடி இருந்த ஒரு வயதான பெரியவரைச் சுற்றி பத்திரிக்கையாளர்கள் குறிப்பெடுத்தபடி இருந்தனர்.

'சின்னதா அடிபட்டவங்க எல்லோரும் ஓபிடி வராண்டால இருக்காங்க' யாரோ சொல்ல காதலீனை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து ஒவ்வொரு முகமாக தேடியதில் பலனில்லை. அங்கு இருந்த ஒவ்வொருவரிடமும் மனித மனதின் அத்தனை உணர்வுகளின் வெளிப்பாடுகள். அழுகை, சிரிப்பு, புன்னகை, சோகம், கோபம் என்று ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு உணர்ச்சிகள்.

ஒரு வார்டு பாயை பிடித்து, 'கொஞ்சம் உள்ளே போய் பார்க்க முடியுமா?' என்று கெஞ்சியதில் பலனில்லை.

"பலர் மயக்கமாகவும் அதிர்ச்சியிலும் இருக்கிறார்கள். முடிந்தவரையில் ஒவ்வொருவரின் டிரெயின் பாஸை வைத்து பெயரை லிஸ்ட் எடுத்து போடுவார்கள். காலை வரை கூட கலாம். நீங்கள் எதற்கும் அதற்குள் கூப்பர் ஹாஸ்பிட்டல் வரை போய் பார்த்து விட்டு வந்து விடுங்கள். இறந்தவர்களை இங்கு எடுத்து வர மாட்டார்கள்" முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் அவர் சொல்லிப்போக என்னைப் பிடித்த காதலீனின் பிடி லேசாக இறுகியது.

"காதலீன் எதற்கும் நாம் அங்கே போய் பார்த்து விட்டு வந்து விடுவோம். ஒன்றும் இருக்காது. ஆனால் அங்கே பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்கும்"

அவளிடம் இருந்து லேசாக 'ம்ம்...' என்ற பதில்தான் வந்தது. ரிக்ஷாவில் போகும் போதும் அவள் என் கைகளைப் பிடித்தவாறு இருந்தாள். சில வருடங்களுக்கு முன்னர் 'இந்தக் கரங்களைப் பிடித்துவிட மாட்டோமா?' என்று எங்கள் அலுவலக கடை நிலை ஊழியர்களிடையே பெரிய போட்டி இருந்தது ஞாபகத்துக்கு வந்து வேதனையான அந்த நேரத்திலும் அசிங்கமாக ஒரு புன்னகையாக, என்னை அறியாமல் முகத்தில் மலர்ந்தது. ஒரு நாள் தனியாக இருக்கும் போது ராகவன், 'சார், உங்களிடம் தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும்' என்று வீட்டுக்கே வந்து விட்டான். என்னடா விஷயம் என்றால் ஐயா, காதலீனை காதலித்து வந்திருக்கிறார். எப்படி சொல்வது என்று தெரியவில்லையாம்.

'உனக்கு ஏண்டா இந்த வம்பு? இதெல்லாம் ஒத்து வருமா?' என்று ஆயிரம் சொன்னாலும் மசியவில்லை. 'இல்லை சார், என் மனதில் நினைத்து விட்டேன். அவளிடம் கேட்க வேண்டும். அவள் இல்லை என்று சொன்னால், நீங்கள் சொல்கிற மாதிரி கேட்கிறேன்' என்று நிலையாக நின்று விட்டான். 'எப்படியோ போ! உனக்கு பன்னியும் மாடும் திங்கணும்னு இருக்கு. உங்க அத்தை கேட்டா துடிச்சுப் போயிடப் போறா' என்று முடித்து வைத்தால் 'அதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன். ஆனா, நீங்கதான் அவகிட்ட சொல்லணும். எனக்காக இந்த உதவியை நீங்க பண்ணனும்னு' கையைப் பிடித்து கெஞ்சினான். ஏறக்குறைய அழுதுவிட்டான். என்னால் மறுக்க முடியவில்லை. பாவம் அவனுக்கு யார் இருந்தார்கள். அம்மா, அப்பா, அண்ணன் தம்பியென்று யாரும் கிடையாது.

"சரி நீ நினைப்பதை எழுதிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்" ஏன் என்று கேட்கும் மனலையில் கூட அவன் இல்லை. அடுத்த இரண்டு நாட்களில் ராகவனின் காதல் கடிதம் பல முறை திருத்தப்பட்டு இறுதி வடிவம் பெற்றது. அடுத்த நாள் காதலீன் வருவதற்கு முன்னதாக அவளது கம்பியூட்டர் அருகில் டைப் செய்ய வேண்டிய காகிதங்களோடு ராகவனின் கடிதத்தையும் வைத்து விட்டேன். முதலில் காதலீன் எனது அறையில் வைத்து ஏறக்குறைய ராகவனின் சட்டையைப் பிடித்து விட்டாள். பின்னாள் எப்படியோ காதல் உருவாகி, காதலீன் அம்மா ராகவன் மதம் மாறத வரை கலியாணம் கிடையாது என்று உறுதியாக நிற்க...கடைசியின் நானும் மாதவியும் கையெழுத்துப் போட அவர்கள் கலியாணம் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. காதலீன் அம்மா இன்று வரை அவர்களை சேர்த்துக் கொள்ளவேயில்லை.

"ராகவனுக்கு எஸ்எம்எஸ் கொடுத்தீங்களா?" காதலீன் எனது சிந்தனையை கலைத்தாள்.

"கொடுத்தேன். ஆனால் இப்போ மொபைல் எல்லாம் ஆஃப் செய்து விட்டார்கள்" துணிந்து பொய் சொன்னேன். அட மறந்து விட்டேனே!

***

கூப்பர் ஸ்பத்திரியில் நாங்கள் பார்த்த காட்சி, 'இந்த உலகத்தில் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று நினைக்க வைத்தது. இறந்தவர்களை வரிசையாக தரையில் கிடத்தியிருந்தார்கள். முகங்கள் பிய்ந்து, கை, கால்கள் இல்லாமல் ரத்த்தினை அள்ளிப் பூசியபடி பிணங்கள். வெட்கத்தினை மறந்து ஆண்களும் பெண்களும் அழுதபடி ஒவ்வொரு பிணமாக தலை கைகளை திருப்பி ஆராய்ந்தபடி இருந்தனர். நாங்களும் ராகவனின் முகத்தை தேடினோம். கோரம்! ஒன்றிரண்டு பிய்ந்தகைகள் கால்கள் கூட இருந்தன!

ஒரு கரும்பலகை வைக்கப்பட்டு அதில் ஒரு காவலர் அவ்வப்போது பெயர்களை எழுதிச் சென்றார். எழுத்துக் கூட்டி படிப்பதற்குள் போதும் போதும் என்று கிவிட்டது. ராகவனின் பெயர் இல்லை. ஆனாலும் அவ்வப்போது பட்டியலில் புதிய பெயர்கள் எழுதப்பட்டன. 'ரெண்டு பெட்டி அப்படியே பிய்ந்து ஒட்டிப் போய்விட்டது. நிறைய பயணிகள் இன்னும் சிக்கியிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டார்கள். 'இப்போதே பட்டியல் இருபத்தி ஐந்தை தாண்டுகிறதே'.

"காதலீன் மனம் தளர வேண்டாம். மீண்டும் பாபா ஆஸ்பத்திரி போய் அப்படியே வீட்டுக்கும் போய்ட்டு வந்துவிடுவோம்" என்றேன்.

"சரி" அந்தப் பலகையையே வெறித்துப் பார்த்தவாறு பின்னாலேயே வந்தவள் எதன் மீதோ தட்டி 'வீல்' என்று அலறி என்னை வந்து பிடித்துக் கொண்டாள். கீழே....ஒரு துணி கூட போர்த்தப்படாமல் அநாதரவாக நெஞ்சுக்கு கீழே எதுவுமில்லாத.....'இது ஸ்டேஷன் படிக்கட்டில் உட்கார்ந்து 'யா அல்லா! யா அல்லா!!' என்று மட்டுமே கூவிக் கொண்டிருக்கும் பிச்சைக் காரன் அல்லவா! இப்போது நிஜமாகவே எனக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. காதலீன் கைகளைப் பிடித்தவாறு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

மீண்டும் பாபா ஆஸ்பத்திரி வந்து இறங்கும் வரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நான் முதலில் இறங்கி ரிக்ஷா ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கையில், "சூர்யா சார்...சூர்யா சார்"

ராகவன் குரல்!!!

கூட்டத்தில் இரண்டு பெண்களைத் தள்ளிக் கொண்டு ராகவன் வேகமாக எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். காதலீன் கால் தடுமாற ரிக்ஷாவில் இருந்து குதித்து ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள். ஆங்கிலத்தில் நான் கேள்விப்பட்ட அனைத்து வசவுகளும் அவள் வாயில் இருந்து வர அவன் நெஞ்சில் ஓங்கி குத்தியவாறு இருந்தாள். உடல் முழுக்க ஏற்றி வைத்த பாரம் திடீரென ஒரு விநாடியில் இல்லாமல் போக அலுவலகம், வீடு, கடன்கள் என எந்த வித பிரக்ஞையும் இன்றி உள்ளமும் உடலும் லேசாக மிதப்பது போல உணர்ந்தேன்.

"ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை" என்று அவளிடம் கூறியவாறே பரிதாபமாக என்னைப் பார்த்தான்.

"நான் ஸ்டேஷனுக்குள்ளேயே போகவில்லை. அப்படியே டாக்ஸி எடுத்து பவாருடன் தாதர் போய் விட்டேன். திரும்பி வரும் போது டிரெயினை எல்லாம் நிப்பாட்டிட்டாங்க. என் மொபைலையும் எங்கேயோ தொலைச்சுட்டேன். அப்புறம் டிராக் வழியா நடந்து பஸ் புடிச்சு வீட்டுக்கு போனா...காதலீன் இங்க வந்துட்டா. மாதவி அக்காதான் நீங்க இங்க இருக்கிறதா சொன்னாங்க..." ஒரு கையால் காதலீனை அணைத்தவாறே பேசினான்.

"சரி சரி வா, வீட்டுக்கு போகலாம்" வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் முன்னால் நடந்தேன்.

"நான் உங்களை மொபைல்ல கூப்பிட்டனே! அப்போ யாரு ஹலோ சொன்னது?" காதலீன் ராகவனிடம் கேட்டதில் நானும் பின்னால் திரும்பினேன்.

"நான்தான் அதைத் தொலைத்து விட்டேனே! அது யாரோ?" என்று சிரித்தான்.

'யாரோவா?'

"சார் என்ன நின்னுட்டீங்க. வாங்க போகலாம்" இப்போது என்னை அழைத்தது ராகவன்!

*******************

1 comment:

murali said...

திரு பிரபு ராஜதுரை,
ஜம்மு நகரத்தில் அலுவலக விஷயமாக தங்கி இருந்த போது இதைப் போல் ஒரு அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிரது.தலை வலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.தீவிரவாதத்தின் சாயல் தெரிந்தாலே ஒழித்துகட்டி விடவேண்டும்.
நமது கேடு கெட்ட அரசியல்வாதிகள் என்றுதான் திருந்துவார்களோ.
என்றென்றும் அன்புடன் ( இது தேவையா இப்போ),
பா. முரளி தரன்.