20.5.07

திரைப்படங்களில் நம்பகத்தன்மை

சில நாட்களுக்கு முன்னர் 'டைனோ' என்பவர் ராகாகி குழுமத்தில் நடந்த ஒரு விவாதத்தில் ஹாலிவுட் திரைப்பட இயக்குஞர்கள் காட்சியமைப்பின் நம்பகத்தன்மைக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று எழுதியிருந்தார். எனக்கு உடனே அதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரையில் கூறப்பட்டிருந்த ஒரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது.

பாலிவுட் போர் திரைப்படங்களைப் பற்றிய அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட ஒரு செய்தி ஹாலிவுட்டின் 'சேவிங் த பிரைவேட் ரியான்' படத்தைப் பற்றியது. படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ஜெர்மனிய டாங்குகளில் முதலாவது வரும் டாங்கில், நின்றபடி படைகளுக்கு தலைமை தாங்கி வரும் நபர் தனது தொப்பிக்கு மேலாக குளிர்க்கண்ணாடியை அணிந்தபடி வருவாராம். படைகளை எப்போதும் முன்னிருந்து நடத்துபவரும் தொப்பிக்கு மேலாக கண்ணாடியை அணிபவருமாகிய பீல்ட் மார்ஷல் ரோமலைத்தான் அவ்வாறு தனது இறுதிக்காட்சியில் இயக்குஞர் நுழைக்கிறார். வரலாற்றுப் பூர்வமாக தவறான செய்தி...ஆனால், அவ்வளவு தூரம் அது ரோமல் என்று புரிந்து கொள்பவர்களுக்கு அது தவறு என்று நன்றாகவே தெரிந்திருக்கும். அதே சமயம் அது அவர்களுக்கு மெத்த திருப்தியளிக்கும் காட்சியாகவும் இருக்கும். சில விநாடிகளில் தோன்றி மறையக்கூடிய ஒரு பாத்திரத்திற்கே இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்.


எனக்கு காந்தி படத்தின் முதல் காட்சியில் முதல் முதலாக அவரைக் காட்டுவதும் மிகவும் பிடிக்கும். நமது எம்ஜிஆர், ரஜினியைக் கால், பின்னர் கை அப்புறம் கடைசியில்தான் முகம் (தெய்வப்பிறவிகளின் கால் தொட்டு வணங்கிய பின்னர்தான் முகம் பார்க்க முடியும்) காட்டுவது போலத்தான். ஆனால், அவ்வளவு இயல்பாக இருக்கும். அதாவது, நாமும் கூட்டத்தோடு கூட்டமாக தலைகளுக்கு நடுவே எட்டி எட்டி பார்க்கையில் எப்படிப் பார்க்க முடியுமோ அது போல பிரார்த்தனைக்கு நடந்து செல்லும் காந்தியின் முகம் தோன்றி மறையும்.

காந்தி படம் எடுத்துக் கொண்டிருக்கையில் அதைப் பற்றி செய்திகள் வரும். கூட்டமாக கூட்டிய மக்களை ஒழுங்குபடுத்துவதற்கும் போதும் போதும் என்று ஆகிவிட்டதாம். சிலரின் சட்டைப்பையில் இருந்த பால்பாயிண்ட் பேனா போன்றவற்றை நீக்க சொன்னார்களாம். சிரித்தபடி நின்ற பலரையும் அதட்டி முகத்தை இறுக்கமாக வைக்கச் சொல்ல வேண்டியிருந்ததாம். அப்படியும் ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டது என நினைக்கிறேன்.

நம்ம தமிழ்படங்களில், சண்டைக்காட்சிகளிலும் மற்ற காட்சிகளிலும் மக்கள் கூட்டமாக நிற்பதைப் பார்க்கையில் சிரிப்பு சிரிப்பாக வரும். அதற்கு பதிலாக சில பொம்மைகளை செய்து நிற்க வைத்தால் கூட இயற்கையாக இருக்கும்.

நம்மவர்களுக்கு இந்த சின்ன விஷயங்களிலெல்லாம் அக்கறை இல்லை. ஆனால் இந்தச் சின்ன விஷயங்களில் காட்டும் அக்கறைதான் ஒரு படத்தை முழுமையானதாக மாற்றுகிறது.

முழுமையான ஒரு படமாகத் தர வேண்டும் என்ற அக்கறை இல்லாத பொழுது பிற நுட்பமான விசயங்களில் எப்படி அக்கறை இருக்கும்?

சமீபத்தில் 'கம்பீரம்' என்ற படத்தின் காட்சியை டிவியில் காட்டினார்கள். சரத்குமார் காவல்துறை துணை ஆணையாளர் (அக்னி நட்சத்திரத்தில் ஆரம்பித்து சத்திரியனில் சூடு பிடித்தது இந்த ஏஸி மோகம். அதற்கு முன்னர் கதாநாயகன் சப்-இன்ஸ்பெக்டராகத்தான் இருப்பார்)

வில்லன் அவரிடம், 'சாதாரண இன்ஸ்பெக்டரா இருந்தே...அப்படியே படிப்படியா முன்னேறி அஸிஸ்டெண்ட் கமிஷனராயிருக்கே' என்பார். ஆய்வாளருக்கு அடுத்த பதவி உயர்வு டிஎஸ்பி அல்லது ஏஸி. இதில் படிப்படியாக முன்னேற என்ன இருக்கிறது?

மேலும் ஆய்வாளர் பதவிக்கு யாரும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. உதவி ஆய்வாளர்தான். உதவி ஆய்வாளராக சேரும் ஒருவர் ஏஸியாவதற்குள் குறைந்தபட்சம் ஐம்பது வயதாவது ஆகிவிடும். அதுவும் சரத்குமார் போல நேர்மையானவர்கள் இன்ஸ்பெக்டராக நீடிப்பதே கஷ்டம். இதில் ஏஸி எப்படி ஆவது?

இன்னொரு படத்தில் இன்னும் வேடிக்கை! சத்யராஜ் கான்ஸ்டபிளாக சேர்ந்து கடைசியில் டிஜிபி ஆகி விடுவார்!!

திரைப்படங்களில் சட்டம், நீதிமன்றம் போன்றவை எவ்வித ஆய்வும் இன்றி கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். இத்தகைய காட்சிகளால் பல தவறான செய்திகள் மக்களை சென்று சேர்கின்றன. இதற்காகவே முன்பு மரத்தடி யாஹு குழுமத்தில் 'பயாஸ்கோப்பு போட்டி' என்று ஒன்று நடத்தினோம். போர்ட் கார் வரை பரிசாக வைத்திருந்தாலும், அமைதியாக நடந்தது. பின்னர் டிவி பார்ப்பது குறைந்து போனதால் தொடரவில்லை.

அதாவது ஒரு திரைப்படக்காட்சியினைப் பற்றி எழுதுவேன். உறுப்பினர்கள் அதில் சட்டபூர்வமாக என்ன தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டும்.

சுவராசியமாகத்தான் இருந்தது என்று பலர் கூறினர். உண்மையில் இந்த ஐடியா என்னுடையது அல்ல. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் மாதமொருமுறை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் செல்வேன். ஒரு முறை என்னுடன் பயணம் செய்தவர் மும்பையில் ஏதோ நிறுவனத்தின் பெரிய அதிகாரி. அவர்தான் நான் என்ன படிக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டு எவ்வாறு நான் இந்தத் தொழிலில் முன்னுக்கு வர வேண்டும் என பல ஆலோசனைகளைச் சொன்னார்.

எல்லாவற்றையும் மறந்துவிட்ட நான், அவர் லண்டனில் பார்த்த பிபிசி நிகழ்ச்சியை பற்றி சொன்னதை மட்டும் நினைவில் வைத்திருகிறேன். அந்த நிகழ்ச்சியில் இப்படித்தான் ஒரு நிகழ்ச்சி விவரிக்கப்பட்டு பங்கு கொள்பவர்களிடம் கேள்வி கேட்பார்களாம். பின்னர் அந்தக் கேள்வியோடு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர் பதில் கூறுவாராம்......

பயாஸ்கோப் போட்டி போன்ற ஒரு நிகழ்ச்சியை நமது தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் நடத்தலாம். வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் சினிமாக் காட்சிகள் இருக்கிறதே!

தமிழ் திரைப்படங்களில் சட்டம், நீதிமன்றம் போன்றவை நன்றாக ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படம், என்னைப் பொறுத்தவரை 'கெளரவம்' மட்டுமே. ரேவதி, சிவகுமார், அம்பிகா நடித்த மற்றொரு படமும் இதில் சேர்க்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு சேனலில் இரவில் பாதி தூங்கியபடியே அவ்வப்போது 'கைது' என்ற படம் பார்த்தேன். தற்போது அனைத்தும் மறந்துவிட்டது. அண்ணாமலை டிவி சீரியலில் கோமதி நாயகமாக வருகிறாரே அவர் கதாநாயகர்...இயக்குஞரும் அவரே என நினைக்கிறேன். கைது செய்வதின் சட்ட நுணுக்கங்களையும், பிரச்னைகளையும் ஆராயும் படம். ஆனால் ரொம்பவே மெனக்கெட்டதால் டாகுமெண்டரி மாதிரி ஆகியிருக்கும் என நினைக்கிறேன். உங்களில் யாருக்காவது இப்படத்தைப் பற்றி தெரியுமா?

'மை கசின் வின்னி' என்ற ஆங்கில நகைச்சுவைப் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம்தான். ஆனால், காட்சியமைப்புகளிலும், திரைக்கதையிலும், பாத்திரத் தேர்விலும், நீதிமன்ற விசாரணையிலும் அவ்வளவு நம்பகத்தன்மை! தவற விடக்கூடாத படம்!

அதுவும் நீதிமன்றங்களில் பணிபுரிபவர்கள் மிகவும் ரசிப்பார்கள்....காதலையே கட்டிக் கொண்டு அழாமல், நம்மவர்கள் இப்படி ஒரு படம் தயாரிக்கக்கூடாதா? ஹூம்....

நன்றி : வலைப்பூ (02.04.2004)சமீபத்தில் ‘சிகாகோ’ என்ற மியூசிகல் படம் பார்த்தேன். பாராட்ட நிறைய விடயங்கள் இருந்தாலும் குறிப்பிட விரும்பு ஒரு விஷயம், படமென்னவோ மியூசிக்கல்தான். பாத்திரங்கள் நினைத்த நேரத்தில் பாட்டுப்பாடி ஆட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஒரு குற்றவியல் வழக்கு மற்றும் நீதி விசாரணையை பொருந்து அவ்வளவு நம்பகத்தன்மை.


ஒரு நாள் பிரபலங்கள்?

சென்ற பதிவில் தங்கள் கருத்துகளை எதிர்வினையாக பதிந்தவர்களுக்கு நன்றி. மேலும் விவாதிக்கப்பட வேண்டிய விடயம். இவ்வாறு முதலாவது வந்தவர்களை குறைத்து மதிப்பிடுவதற்காக இல்லை அந்த பதிவு. ஆனால், முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று எல்லையே இன்றி தங்களை வருத்திக் கொள்ள முயலும் மாணவர்கள்...இறுதியில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் படிப்பு என்ற நிலையில் சென்று நிற்கப்போகிறார்களோ என்ற பயம் எனக்கு உண்டு!

5 comments:

பெத்த ராயுடு said...

எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று 'My Cousin Vinny' திரைப்படம். ஒரு காட்சியில் வின்னியின் கசினோட நண்பனுக்காக ஒரு வக்கீல் வாதாட வருவாரே? கூச்சத்தாலோ, திக்குவாய் பிரச்சினையினாலோ சாட்சிகளை விசாரிப்பதில் தடுமாறிப்போவார். பிறகு இருக்கைக்கு திரும்பும்போது நீதிபதியைப் பார்த்து கேஷுவலா கையாட்டிவிட்டு செல்வார். மிகவும் பிடித்த காட்சி அது.

ஹாலிவுட்டில் நடிப்புப் பயிற்ச்சி எடுத்தவர்கள்தான் நடிகராக முடியும். சிறு பாத்திரத்தில் நடிப்பவர்களும் ஈடுபாட்டுடன் நடிப்பார்.

இங்குதான், எக்ஸ்ட்ராக்கள் இடிச்சபுளி போல நிற்கிறார்கள். ஸ்டார்கள் நடிக்கும் காட்சியில் ரசிகர்களின் கவனம் அவர் மீது மட்டுமே இருக்க வேண்டுமென இயக்குநர்கள் நினைக்கலாம்.

மேலும், ஹீரோயின் தோன்றும் பாடல் காட்சிகளில், பிண்ணனியில் ஆடும் பெண்கள் சுமாரான தோற்றத்துடனே இருப்பர். ஆனால் ஹீரோ மட்டுமே ஆடும் பாடல்களில், பளிச்சென இருப்பர்.

சுரேஷ் கண்ணன் said...

Have you seen BLACK FRIDAY, hindi movie?

பிரபு ராஜதுரை said...

Suresh Kannan,

போன வாரம்தான் பார்த்தேன். சத்யாவிற்கு பிறகு மனதை பாதித்த ஹிந்தி படம்....எழுத வேண்டும் என்றிருந்தேன்.

vasikar said...

"My Cousin Vinny" is one of my favorites and my friends. Almost every week end we used to watch the movie after midnight when we are bored of chatting. So cheerful movie.

Anonymous said...

This is about a Vijayakanth film. I dont know the name. He acts as Election Commsioner in that film. It was misleading in that film that, any body whatever age can become EC.