6.10.06

முகமது அப்சல், மரணத்தின் விளிம்பில்...



தமிழ் இணைய உலகின் பிரபலங்களுள் ஒருவர் என்று நான் கருதும் ரோசா வசந்த், இவ்வாறு ‘அப்சல் மரண தண்டனை பற்றி’ நான் என்ன நினைக்கிறேன் என்பதனை எழுத வேண்டுவார் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை, அதுவும் நான் அதிகம் கவனம் செலுத்தாத, தெரிந்து கொள்ளாத முகமது அப்சலுக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து!

மரண தண்டனை பற்றி சில சமயங்களில் நான் இணையத்தில் எழுதியிருந்தாலும், அது தேவையான ஒன்றா இல்லையா என்ற ஆய்வினை மேற்கொண்டதேயில்லை. ஏனெனில், ஏற்கனவே இதற்காகவே ஏற்ப்படுத்தப்பட்டுள்ள இயக்கங்கள் பல உண்டு. போதுமான அளவிற்கு வாத பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன. நான் அறிந்தவரை மரண தண்டனையினால் குற்றங்கள் குறையப்போவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவித்தாலும், பழி வாங்கும் ஆதிமனித பண்பு எனது ஆழ்மனதிலும் குடி கொண்டிருக்கலாம் என்பதால், ஒரு தெளிந்த முடிவிற்கு என்னால் வர முடிந்ததில்லை. எனவே இது குறித்து நான் படிப்பதுமில்லை. சிந்திப்பதுமில்லை!

பொதுவாக ஏதாவது இணையத்தில் சற்று ஆய்ந்து, சிந்தித்து பொறுப்புணர்வுடன் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் எனது நேரமின்மை காரணமாக எவ்வித ஆய்வினையும் மேற்கொள்ளாமல் எனக்குத் தெரிந்த வரை சிலவற்றை இங்கு கூற முயல்கிறேன்.

தண்டனைகள் மூன்று காரணங்களுக்காக வழங்கப்படுகின்றன. பழிவாங்குவதற்காகவும், தண்டிப்பதற்காகவும் (retributive and punitive), தடுப்பதற்காகவும், எச்சரிப்பதற்காகவும் (preventive and deterrent) மற்றும் திருத்துவதற்காக (reformative). முதலாவது நோக்கம் ஒழிந்து போய் இரண்டாவது பின்னர் மூன்றாவது நோக்கம் வலுப்பட வேண்டும் என்பதே நாகரீகத்தின் வளர்ச்சியாக இருக்க இயலும். ஏனெனில் மூன்றாவது நிலையின் முதிர்ச்சியடைந்த நிலையில் குற்றமானது, கொடுஞ்செயலாக பார்க்கப்படாமல் மன நோயின் வெளிப்பாடாக கருதப்படும் நிலை வரலாம். தற்போதய மனநிலையில் நம்மால் இதனை ஆதரிக்க இயலாது. ஆனால் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், ‘அது என்ன உடனடியாக கொன்று விடுவது...கொலையாளி தனது தண்டனையினை அணுஅணுவாக அனுபவிப்பதை பார்த்தால்தான் நிம்மதி’ என்று கழுவேற்றிக் கொண்டிருந்தார்கள். இன்று ஒருவன் எவ்வளவு பெரிய கொலையாளியாக இருப்பினும், அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என்று யாரும் வேண்டுகோள் வைப்பதில்லை. மனதில் அவ்வாறு சில சில சமயம் எண்ணங்கள் தோன்றினாலும், நாகரீகமடைந்த சட்டங்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை.

முதலாவது நோக்கமான பழிவாங்குதல் மற்றும் தண்டனைக்குமிடையில் சிறு வேற்றுமை உண்டு. நமது முறைகள் பழி வாங்குதலை விட்டு தண்டனையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவே நான் எண்ணி வந்தேன். ஆனால், அப்சலுக்கான தண்டனை குறித்து இணையம் முதலான ஊடகங்களில் கருத்தாக எடுத்தாளப்பட்ட ‘தாக்குதலில் இறந்த பதினொரு நபர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்ற கேள்வியில் ஆதி நோக்கமான பழிவாங்குதலே மிகுந்திருப்பதை உணர்ந்தேன். இன்று திரு.ரவி ஸ்ரீனிவாஸ் தயவில் என்னை ஆச்சரியப்பட வைத்தது, உச்சநீதிமன்ற நீதிபதிளும் தண்டனைக்கான தங்களது தீர்ப்பில் பழிவாங்கும் நோக்கத்தினையும் முன்னிலைப்படுத்தியிருந்த வரிகள்!

குற்றவியல் வழக்கில் இரு தீர்ப்புகள் உண்டு. முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்பதாகும். அவ்வாறு குற்றவாளி என்று தீர்ப்பான பின்னர் அவருக்கான தண்டனை என்ன? என்று கூறுவது அடுத்த கட்ட தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஏதும் குறை காண இயலாது. ஏனெனில் அப்சல் மீதான வழக்கு மதில் மேல் பூனை வழக்கு (border line case). அப்சல் தாக்குதலில் நேரிடையாக பங்கு கொள்ளவில்லையெனினும், சதி திட்டத்தில் ஈடுபட்டு வேண்டிய உதவிகள் செய்தார் என்பதே குற்றச்சாடு. வழக்கினை நிரூபிக்க அவருக்கு எதிராக சந்தர்ப்ப சாட்சிகளே (circumstantial evidence) உள்ளன! முக்கியமாக கைது செய்யப்பட்டதும், குற்றத்தினை ஒத்துக் கொண்டு அவர் அளித்த வாக்குமூலம் (confession). பொதுவாக காவலர்களிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது எனினும் ‘பொடா’ சட்டத்தின்படி செல்லும். மேலும் நீதிமன்றம் இந்த வாக்குமூலத்தினை அவர் திரும்பப்பெற ஏழு மாத காலம் எடுத்துக் கொண்டார் என்பதை கவனத்தில் கொண்டது. இரண்டாவது அவர் தாக்குதலில் நேரிடையாக ஈடுபட்டு இறந்து போன ஐவரின் உடலினை அடையாளம் காட்டியது மற்றும் அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மூலமாக அந்த ஐவர் தாக்குதலுக்கு முன்னர் பதுங்கியிருந்த இடங்களை கண்டுபிடித்தது. இந்த ஆதாரங்களை ஜோடிக்க காவலர்களுக்கு இயலும் எனினும், அவருக்கும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் இருந்த தொடர்பானது இருவருக்கும் இடையே அடிக்கடி நடந்த செல்பேசி உரையாடல்கள் மூலமும், அவரது செல்பேசியை கொலையாளிகளில் ஒருவர் உபயோகப்படுத்தி வந்ததும் அப்சலுக்கு எதிரான வலுவான கூறுகள். இந்திய நாட்டின் மீதான் போர் தொடுத்தது உட்பட அனைத்து குற்றங்களுக்காகவும் முகமது அப்சல் குற்றவாளி என்று தீர்க்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் சட்டரீதியில் தவறான செயல் அல்ல!

ஆனால் தண்டனைக்கான் காரணங்களை முன் வைக்கும் உச்சநீதிமன்றம் முதலாவதாக கூறுவதான, ‘குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதின் மூலமே சமுதாயத்தின் பொதுவான மனநிலையினை திருப்திப்படுத்த இயலும் (the collective conscience of the society will only be satisfied if the capital punishment is awarded to the offender)’ என்பது அபாயகரமான ஒரு போக்கு என்பது எனது பணிவான கருத்து. இரண்டாவதாக கூறும் ‘சதியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதே, நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் (The challenge to the unity, integrity and sovereignty of India by these acts of terrorists and conspirators, can only be compensated by giving the maximum punishment)’ என்பதும் தகுந்த காரணமில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் இறுதியில் அளித்துள்ள ‘ஏற்கனவே சரணடைந்துள்ள ஒரு போராளி மீண்டும் நாட்டுக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபடுவதினால், சமுதாயத்தினை சீர்குலைக்கும் ஒரு சக்தியாக கருதி அவர் வாழ்வு முடிக்கப்படவேண்டும்’ என்ற காரணமே சரியானதாக இருக்க இயலும் என எண்ணுகிறேன். எனெனில் முதலிரண்டு காரணங்களிலும் பழிவாங்குதலே வெளிப்படுகிறது. மூன்றாவது காரணமே தடுத்தல் மற்றும் எச்சரித்தல் வகையில் வருகிறது. திருத்துதலுக்கு மரண தண்டனையில் வாய்ப்பில்லை!

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில்? என்று கேட்பவர்கள் நமது நாட்டின் சட்டமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு எந்த தனிமனிதனுக்கு எதிரான குற்ற செயலானது சமுதாயத்திற்கு எதிரானது என்று கருதப்படுகிறது. எனவே குற்றவாளியின் மீது வழக்கு தொடர்ந்து தகுந்த தண்டனையினை பெற்றுத் தருவது அரசின் வேலை. அரசு அவ்வாறு வழக்கு தொடர்கையில் பாதிக்கப்பட்டவர்களின் பங்கு அதில் மிக மிக குறைவு. நீதிமன்றம் தண்டனை அளித்த பின்னர் அதனை குறைக்க, ரத்து செய்யக் கூட அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதுவே நாகரீகமான முறையாக இருக்கக் கூடும் என்பது எனது கருத்து. ஏனெனில், ஆயிரக்கணக்கானோர் துரதிஷ்டமான முறையில் தினமும் இறக்கிறார்கள். இறந்தவருக்கு உயிர் கொடுக்க யாரிடமும் சக்தியில்லை. ஆனால், பிறர் அல்லது அரசின் மெத்தன போக்கினால் உயிரிழக்க நேரிடுகையில் போதுமான பண உதவியே தகுந்த நஷ்ட ஈடாக இருக்க இயலுமே தவிர குற்றவாளியின் உயிரினை எடுப்பதினால் வரும் மனநிம்மதிக்கு வழிவகுப்பது தகுந்த நாகரீகமாகாது. இல்லையெனில், ‘என் மகனை கொன்றவனை நானே கழுத்தை நெறித்து கொன்றால்தான் எனக்கு மன நிம்மதி’ என்றால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். மோட்டர் வாகன விபத்துகளில் இறந்த பிள்ளைகளின் பெற்றோர்களை கேட்டுப்பாருங்கள்...’அவனை கிழே போட்டு நான் மோட்டாரை அவன் மீது ஏற்றினால்தான் நிம்மதி’ என்பார்கள். எனவே இறந்தவர்களின் உயிரினை தண்டனைக்காக கணக்கிலெடுப்பது தகுந்த நாகரீகமாகாது என்ற எனது கருத்தானது இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளப்படவில்லையெனினும், வருங்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றே நினைக்கிறேன்!

பொதுவாக குற்றம் ஐயமின்றி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளி என்று தீர்க்க முடியும். ஆயினும், சில சமயங்களில் மனதிற்குள் சின்னதாக ஒரு ஐயப்பாடு இருக்க வாய்ப்புண்டு. அவ்விதமான நிலைகளில் மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பழிவாங்குதல் மற்றும் தண்டனை அல்லாமல் தடுத்தல் அல்லது எச்சரித்தல் போன்ற காரணங்களுக்காவே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். இல்லை, அனைவரையும் போட்டுத் தள்ள வேண்டுமென்றால், வருமான வரி ஏய்ப்பு, பத்திர பதிவில் சொத்து மதிப்பினை குறைத்துக் காட்டி முத்திரைக் கட்டண ஏய்ப்பு போன்ற வெள்ளை காலர் குற்றங்களுக்கும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். வரி கட்டுபவர்கள் ஒழுங்காக அதை கட்டி அரசிடம் போதுமான பணமிருந்திருந்தால், எல்லையில் பாதுகாப்பினை பலப்படுத்தியிருக்கலாம். அப்சல் அந்தப்பக்கம் உள்ள காஷ்மீரத்துக்கு ஓடிச்சென்று பயிற்சி எடுத்து பின்னர் திரும்புவதை தடுத்திருக்கலாம் அல்லது தில்லியில் கொசு மருந்தாவது கூட கொஞ்சம் அடித்திருக்கலாம்...ஆக வெள்ளை காலர் குற்றங்களாலும் மரணங்கள் நிகழ்கின்றன, ஏன் பின்னர் பாகுபாடு?

மதுரை
06.10.06



பி.கு: அப்சல் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தது. பாராளுமன்ற தாக்குதல் நாட்டிற்கு எதிரான போரா? என்றும் ஒரு வாதம் நடைபெற்றது. அது போர்தான் எனவும் அதற்காக தனியே அவருக்கு யுள்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வாதாடிய ராம் ஜேத்மலானி ஒரு போடு போட்டார்...’அப்படியென்றால் அப்சலும் மற்றவர்களும் போர் கைதிகளாக கருதப்பட்டு, சாதாரண நீதிமன்றங்களில் அவர்களின் வழக்கு நடைபெற்றிருக்கக்கூடாது’ என்று. இது எப்படி இருக்கு?

இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளில் குற்றவாளிகள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் எங்கு கிடைக்கும். அதில் ஒரு வேதனையான உண்மையிருக்கலாம் என்பது எனது அனுமானம்.

17 comments:

Sivabalan said...

மிக அருமையாக அலசியுள்ளீர்கள்..

மிக எளிமையாகவும் அழுகாகவும் எழுதியுள்ளீர்கள்.

மிக்க நன்றி.

Boston Bala said...

தாங்கள் வழக்கறிஞர் என்பதால் சில சந்தேக விளக்க கேள்விகள்:

1. இரட்டை ஆயுள் தண்டனை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினாலும், 14 * 2 ==> 28 வருடங்கள் என்று கணக்கிடாமல், ஒரே சமயத்தில் இரண்டு தண்டைனையையும் அனுபவிப்பார். நன்னடத்தை வாங்கி, காந்தி ஜெயந்தி இன்ன பிற கணக்கிடல்களைக் கருத்தில் கொண்டால் எவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்து விடலாம்?

2. அவ்வாறு வெளியில் அனுப்பப்படுபவர், 'தப்பை உணர்ந்து திருந்தியிருக்கிறாரா?', 'செய்த குற்றத்தை உணர்ந்திருக்கிறாரா?', 'இன்னும் கொலைவெறி/ஆத்திரம் கொண்டிருக்கிறாரா?' என்பதெல்லாம் மெய்ப்பிக்கப்பட்டுதான் விடுதலை ஆகிறாரா?

3. விடுதலையான பிறகு முன்னாள் கைதியின் வாழ்க்கை கண்காணிக்கப்படுகிறதா? அவருக்கு அரசு எவ்விதம் உதவுகிறது? வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள, வேலை தேடிக் கொள்ள என்று ஆலோசகரின் அருகாமை கிடைக்கிறதா?

4. குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்போது சிறையில் கழித்த காலம், தீர்ப்பு வழங்கியபின் கொடுக்கப்படும் தண்டனைக் காலத்தில் இருந்து கழிக்கப் படுமா? அதாவது, சஞ்சய் தத்திற்கு சிறைவாசம் விதிக்கப்பட்டால், ஏற்கனவே ஜெயிலில் இருந்த மாதங்கள் கணக்கில் கொள்ளப்படுமா?

தொடர்புள்ள இன்னொரு பதிவிலும் (உலகின் புதிய கடவுள்: 184.மரணதண்டனையும் பொதுபுத்தியும்) கிட்டத்தட்ட இதே எண்ணங்களைப் பகிர்ந்துள்ளேன்.

சிறில் அலெக்ஸ் said...

அருமையான பதிவு. நேர்மையான விமர்சனங்கள்.
நிறைய தெரிந்து கொண்டேன்.

வாழ்த்துக்கள்.

Jafar ali said...

அருமையான பதிவு!

Anonymous said...

sociopath என்ற ஒருவகை மனநிலை பிறழ்ந்தவர்கள் உண்டு. எது தவறு , எது சரி என்பதை தாண்டிய நிலை. அப்சல் போன்றோரும் அந்நிலைவாதிகள்.

இவர்கள் மதம் இவர்களை இது போன்ற செயல்களை செய்ய சொன்னதாக அவர்களுக்குள் ஒரு பிம்பம் உண்டு. அவர்கள் சொந்த மதத்தின் பெயரை கெடுப்பதோடு சமூக அமைதியையும் கெடுக்கிறார்கள்.

நீங்கள் இந்த மனநிலையில் உள்ளவரை விளக்கம் கொடுத்தோ, விவாதித்தோ திருத்த முடியாது.அவர்கள் அந்நிலையை கடந்துவிட்டார்கள்.
உலகில் நடக்கும் எல்லா வித செயல்களுக்கும் குண்டு வைப்பதன் மூலம் நியாயம் தேடுவதான மனநிலை அது.

அப்சல் போன்றோரின் இயக்கு தன்மை
retributive and punitive என்ற நிலையில் உள்ளது. reformative நிலையில் தண்டனை வழங்கும் போது
அது தண்டனை வழங்குவதன் நோக்கத்தை பூர்த்தி செய்யாது.

நோய் கிருமியை தெரிந்தே சமூகத்தில் உலவ விடுவதை போன்ற நிலையை வருவாக்கும். ஒரு அப்சல் பத்து அப்சல்களின் உருவாக்கத்திற்கு காரணமாய் இருப்பார். அதிகபட்ச
தண்டனைகளால்தான் இவர்களை நிறுத்த முடியும்.

கூத்தாடி said...

அருமையானா அழுகானப் பதிவு ..

கோபத்தில் கொப்பளித்து குதித்துக் கொண்டு எழுதியிருப்பவர்களினிடையே உங்களின் பதிவு அருமை .

கண்ணுக்குக் கண் என முட்டாள் தனமாகத் தண்டனையை கொடுக்கும் அரபு நாடுகளை காட்டுமிராண்டி எனத் திட்டும் அறிவு ஜீவிகள் தான் நாட்டுப் பற்று போன்றக் கற்பிதங்களில் மரணத்தண்டனையை ஆதரிக்கின்றனர் ..

பழிவாங்கும் தண்டனை என்ற உச்ச நீதிமன்ற்க் குறிப்பு முட்டாள் தனமாகத் தான் இருக்கிறது ..என்ன செய்ய மக்களுக்கு கோபத்தில் கண் மண் தெரிவதில்லை ..

கோபம் நியாயமாய் இருந்தாலும் கோபத்தை தாண்டி தர்மப்படி நடந்து கொண்டால் தான் நமக்கும் அவர்களுக்கும் வித்த்யாசம் ..தீவிர வாதிக்கும் ஏதோ கோபம் அவனைப் போல் தான் இருக்கின்றனர் பலர்

Nakkiran said...

//வருமான வரி ஏய்ப்பு, பத்திர பதிவில் சொத்து மதிப்பினை குறைத்துக் காட்டி முத்திரைக் கட்டண ஏய்ப்பு போன்ற வெள்ளை காலர் குற்றங்களுக்கும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். வரி கட்டுபவர்கள் ஒழுங்காக அதை கட்டி அரசிடம் போதுமான பணமிருந்திருந்தால், எல்லையில் பாதுகாப்பினை பலப்படுத்தியிருக்கலாம்.//

உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை... ஆனாலும் சொல்கிறேன்.. மேலே சொன்ன குற்றங்களும், அப்சல் செய்ததையும் உதாரணத்திற்கு கூட ஒப்பிட முடியாது..

அப்சல் உதவி செய்த்து, ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் குண்டு வைக்க.. இறந்தது என்னவோ 11பேர் என்றாலும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்திருக்க வாய்ப்புண்டு.. நூற்றுக்கணக்கான மக்களை கொல்ல திட்டம் தீட்டியவனை எம் வரிப்பணத்தி சோறு போட்டு காப்பாற்ற வேண்டும் என்கிறீர்கள்..


//நான் அறிந்தவரை மரண தண்டனையினால் குற்றங்கள் குறையப்போவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவித்தாலும்,//

என்ன ஆராய்ச்சியோ எனக்கு புரியல..
கொலை பண்ணி மாட்டினாலும், ஒன்னும் பெரிசா ஆக போகிறதில்லை... கேசை 7/8 வருஷம் இழுத்திடலாம், இல்லன ஒரு 10 வருஷ்ம் உள்ள இருந்திட்டு வ்ந்திடலாம்னு என்ற எண்ணத்தில் தான் நிறை திட்டமிட்ட கொலைகள் நடக்கின்றன..(மன நோய் , கோபத்தில் கொலை பற்றி சொல்லவில்லை)...திட்டமிட்டு கொலை செய்தால் நிச்ச்யம் தூக்குனு சொல்லுங்க கொலைக்குற்ற்ங்கள் பாதியா குறையும்...

தண்டனை பற்றிய பயமே குற்றங்களை குறைக்கும்... ட்ராபிக் பைன் டபுள் ஆன உடனே எல்லாம் ரோடுல ஒழுங்கா வண்டி ஒட்டுரான்... ஒரு வாரம் கழிச்சி எவனும் கண்டுக்கிறதில்ல.. மாட்டுனாலும் 50 ரூபா கொடுத்தா உட்டுவாங்கோன்னு பயம் போன உடனே மறுபடியும் தப்பு பண்ணுவான்..

மன்னிக்கவும், எனக்கு மிகுந்த மனவ்ருத்தத்தை தந்த பதிவு.

Nakkiran said...

//மேலும் பழிவாங்குதல் மற்றும் தண்டனை அல்லாமல் தடுத்தல் அல்லது எச்சரித்தல் போன்ற காரணங்களுக்காவே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன்//

ஆமாம்.. அதற்குதான் அப்சலுக்கு இப்போது தண்டனை அளிக்கப்படுகிறது.. இந்தியாவில் இனி யாராவது, தீவிரவாத செயல்களுக்கு துணை போனால் இது தான் கதி என்பதை இது தெளிவாக உணர்த்தும்...

பாலா said...

உணர்ச்சிவசப்பட்டு நாட்டுப்பற்று என்ற கள் அருந்தி கண்ணுக்கு-கண் காதிற்கு-காது என்று டமாரமடிக்கும் இரைச்சல்களுக்கு நடுவில் சிந்தித்து ஆய்ந்து அமைத்த பதிவிற்கு என் வணக்கங்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு குற்றவாளியின் மரணம் ஒரு நிறைவைத் தருகி்றதோ இல்லையோ அவர்கள் வாழ்க்கயில் துயராமான ஒரு அத்தியாயத்திற்கு முடிவினைத்தரும் என்பதும் மரண தண்டனையைப் போற்றுவோர் வைக்கும் நியாயமான ஒரு வாதம்.

கொடுமையான ஒரு குற்றவாளியினால் அம்மாதிரி்யான குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க பரோலற்ற நூறாண்டுகால கடுங்காவல் தண்டனை போதுமானதுபோல் தோன்றினாலும், இந்தியா போன்ற ஊழல் மிகுத்த நாட்டில் இந்த ஆயுள் கைதி சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வர வாய்ப்புகள் அதிகம். (ஒரு மந்திரியின் மகன் பல கற்பழிப்பு குற்றங்கட்காக சிறையில் இருந்த்தானென்றால், அவனது சிறைவாசம் நிச்சயமாக தனிச்சலுகையுடன் சுகபோகமுள்ள ஒரு காலமாகத்தானிருக்கும்.) தண்டனை நடைமுறையில் எப்படி செலாக்கப்படுகின்றது என்பதையும் கருத்தில்கொண்டு, இங்கு மரண தண்டனையா ஆயுள் தண்டனையா என யோசிக்கவேண்டும்.

அதே குற்றத்தை மற்றவர்கள் செய்யாமல் எச்சரிக்கை செய்யும் வகையில் தண்டனை அமைய வேண்டுமெனில் மரண தண்டனையைவிட பயமுறுத்தும் தண்டனை ஏதுமிருக்க முடியாது.

Anonymous said...

ஒரு சந்தேகம் பிரபு

நிகழ்வுகளின் விளைவுகளை ஆராய்ந்து , திட்டமிடுதலில் கொலை புரிவாருக்கு துணை போய், அவர்கள் அந்த கொலையை நிகழ்த்த தேவையான சாதனங்களை அமைத்து கொடுத்து அக்தகைய கொலையின் இயங்கு தன்மையில் முழுதும் தன் சுய நினைவோடு விருப்பபட்டு பங்கு பெற்றார் என்றால் அவரை இந்திய சட்ட அமைப்பு எவ்வாறு அணுகுகிறது?

தருமி said...

பொதுவாகவே இந்த legal language எனக்குப் புரிபடுவதில்லை. தேவையற்ற வார்த்தைகளுடன், நீண்ட வாக்கியங்களுடன் எழுதப்படும் அந்த நடை எனக்குப் புரிவதில்லை. உங்கள் இந்தப் பதிவும் அந்தக் கட்டத்துக்குள் வருகிறது. தப்பித்துக் கொள்வதற்கென்றே 'ஓட்டைகள்' பல வைத்து எழுதப்பட்டது போலவே தோன்றுகின்றது. உங்கள் முடிவு என்ன என்பதற்கு ஒரு தனி விளக்கம் தேவையாக் இருக்கிறது. why not you people call a spade a spade?

Anonymous said...

பொதுவாகவே இந்த legal language எனக்குப் புரிபடுவதில்லை. தேவையற்ற வார்த்தைகளுடன், நீண்ட வாக்கியங்களுடன் எழுதப்படும் அந்த நடை எனக்குப் புரிவதில்லை. உங்கள் இந்தப் பதிவும் அந்தக் கட்டத்துக்குள் வருகிறது. தப்பித்துக் கொள்வதற்கென்றே 'ஓட்டைகள்' பல வைத்து எழுதப்பட்டது போலவே தோன்றுகின்றது. உங்கள் முடிவு என்ன என்பதற்கு ஒரு தனி விளக்கம் தேவையாக் இருக்கிறது. why not you people call a spade a spade?

if my views on this is to be known, no other case could be more appropriate than this to have the culprit hanged.

Jayaprakash Sampath said...

தெளிவான கருத்துக்களுக்கு நன்றி

PRABHU RAJADURAI said...

கேள்விகள் கேட்கிறேன் என்று கேட்டவருக்காக,

சதி திட்டத்தில் ஏதேனும் பங்கு பெற்றிருந்தாலும், குற்றச் செயலினை நிறைவேற்றியவருக்கும் அவருக்கும் வித்தியாசமில்லை...

கேள்விகள் கேட்ட பாலா காத்திருக்க வேண்டும்...

ROSAVASANTH said...

எனது வேண்டுகோளை ஏற்று எழுதியதற்கு தாமதமாக எனது நன்றியை தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். நான் எதிர்பார்த்த வகையில், மிக தெளிவாக உங்கள் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். இன்றய சூழலில் திறந்த மனம் கொண்டவர்களுக்கு, தங்கள் கருத்துக்களை உரசி பார்த்துகொள்ள பயனுள்ள வகையில் இந்த பதிவு இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கு உங்களை தூண்டுவதே எனது நோக்கமாக இருந்தது. மிகவும் நன்றி.

ச.சங்கர் said...

நன்றாக அலசியுள்ளீர்கள்...வக்கீல் இல்லையா ?
///குற்றவாளியின் உயிரினை எடுப்பதினால் வரும் மனநிம்மதிக்கு வழிவகுப்பது தகுந்த நாகரீகமாகாது. இல்லையெனில், ‘என் மகனை கொன்றவனை நானே கழுத்தை நெறித்து கொன்றால்தான் எனக்கு மன நிம்மதி’ என்றால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். மோட்டர் வாகன விபத்துகளில் இறந்த பிள்ளைகளின் பெற்றோர்களை கேட்டுப்பாருங்கள்...’அவனை கிழே போட்டு நான் மோட்டாரை அவன் மீது ஏற்றினால்தான் நிம்மதி’ என்பார்கள்.எனவே இறந்தவர்களின் உயிரினை தண்டனைக்காக கணக்கிலெடுப்பது தகுந்த நாகரீகமாகாது என்ற எனது கருத்தானது இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளப்படவில்லையெனினும், வருங்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றே நினைக்கிறேன்!/////

திட்டமிட்ட படுகொலைக்கும், விபத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா ?

வஜ்ரா said...

சுற்றி வழைத்து நவோம் சாம்ஸ்கீ மாதிரி பல விஷயங்கள் சொல்லி கடைசியில் அதில் உங்கள் Take என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களே தனிப்பதிவு போடவேண்டும் போல் உள்ளது...

நான் கேட்ட கேள்வி simple and direct... அப்சலுக்கு கொடுக்கப் பட்ட தூக்கு தண்டனை ஞாயமானதா இல்லையா ? பதில் இரண்டு விதம். ஆம் அல்லது இல்லை.

இல்லை என்பதற்கு நீங்கள் கொடுத்த காரணிகள் ஏற்புடையதாக இல்லை. நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் தான் அந்த பயங்கரவாதச் செயல். அதில் ஈடுபட்ட அப்சலை தூக்கில் போடுவது தான் சரி.

என் புரிதல் படி,

அவன் தன் விருப்பத்திற்கு மாராக இந்த conspiracy க்கு தன்னை அறியாமலேயே துணை புரிந்ததால் மரண தண்டனை அதிகம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது அப்சலுக்கு வாதாடிய ராம் ஜேத் மலானி யே சொல்லவில்லை.

அந்த தியரிக்கு தந்தையும் தாயுமான அம்மணி ராயிக்கு எப்படி தெரிந்தது ?
..
(circumstantial evidence)
..

தீர்ப்பில் தொலைபேசி சம்பாஷனைகளை தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். தெரியாமல், அறியாமல், தன் விருப்பமின்றி வேறு எவரோ செய்த சூள்ச்சியினாலோ அப்சல் இந்த பிரச்சனையில் சிக்கவில்லை. தன் விருப்பபடி, ஆற அமர யோசித்து, தன் சுயபுத்தியுடனேயே இந்த திட்டத்தை தீட்ட உதவியுள்ளான். இதை எப்படி சர்கம்ஸ்டேன்ஷியன் எவிடன்ஸ் என்று ஏற்க முடியும்?

கீலானியை அதே "சர்கம்ஸ்டேண்சியல் எவிடன்ஸ்" இல்லாதனால் கோர்ட் அவனை விடுவித்துவிட்டது. அந்த தீர்ப்பை ஏற்றவர்கள், அதே தீர்ப்பில் தமக்கு ஒத்துவராத போர்ஷனை ஏற்க மறுப்பதேனோ. ?

இந்த கீலானி தில்லி சாலைகளில் அப்சலுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று மரியல் செய்தவன். அவனுடம் சேர்ந்து அருந்ததியும் மேதா பட்கரும் உட்கார்ந்தனர்.

கடைசியில் தருமி அவர்கள் குறிப்பிட்டது தான் என் நிலையும். Why don't you just call a Spade a SPADE !?

..
And if you are in the group of people who oppose hangiing of criminals...here is something to ponder for you.

நாம் ஒன்றும் முன்னேறிய நாடு அல்ல. "இந்தியா ஒளிர"வில்லை என்று வாதாடியவர்கள் ஐரோப்பா போல் தூக்கு போடக்கூடாது என்று சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. அதுவும் ஒரு முஸ்லீம் என்ற போது தான் இந்த பச்சாதாபமும் பறந்த மனப்பான்மையும். சந்தோஷ் சிங்கிற்கு தூக்கு வழங்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி இதே மனித உரிமைகள் சங்கங்கள் இன்னும் மூச்சு விடவில்லை.

ஆக, வண்புணர்ச்சி செய்து கொலை போன்ற கொடூரமான விஷயத்திற்கு தூக்கு சரி. தீவிரவாதத்திற்கு தூக்கு தவறு..என்று எண்ணிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த மாதிரியான ஒரு தலைப் பட்ச மனித உரிமை சங்கங்களுக்கு தூக்கு தண்டனையே கூடாது என்று சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.