Showing posts with label Marriage. Show all posts
Showing posts with label Marriage. Show all posts

30.8.11

அன்னா வழியும் அண்ணா வழியும்




இந்த நடவடிக்கை, ஒரு பாராட்டத்தக்க நோக்கம்தான். ஆனால், பல்வேறு வகுப்பைச் சார்ந்த மக்களின் ஒரு அமைப்பு ............விதிமுறைகளை வகுக்கும் வண்ணம் தாங்களே இவ்வாறு சட்டமியற்றிக் கொள்ள முடியுமா என்பதுதான் இங்கு ஆழமாக பரிசீலிக்க வேண்டிய ஒரு விடயம்

மேற்கண்ட வாக்கியம் தாங்கள் கூறுவது போல ஜன்லோக்பால் சட்டம் ஒன்றை இயற்றினால்தான் ஆயிற்று, என்று வலியுறுத்தும் அன்னா ஹசாரே குழுவின் நடவடிக்கையை பற்றி யாரோ கூறியது என்று நினைத்தால்...அது தவறு!


நீதிமன்றம் இவ்வாறு மக்கள் குழு ஒன்று சட்டமியற்றிக் கொள்ள முடியுமா என்று வினவிய நடவடிக்கை, ஒரு திருமண முறை!

ஆம், திருமண முறைதான். 1934ம் ஆண்டில் அப்பொழுதான் முளைவிடத் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தினர் நடத்தி வைத்த முதல் திருமணம் செல்லத்தகுந்ததா என்ற கேள்விதான் தெய்வானை ஆச்சி வழக்கில் எழுப்பப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில்தான், உயர்நீதிமன்றம் இவ்வாறு ‘சுயமரியாதை இயக்கம்’ என்று கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பு தானே ஒரு திருமணமுறையை ஏற்ப்படுத்தும் வண்ணம் தனக்குத்தானே சட்டமியற்றிக்கொள்ள முடியுமா என்று கேட்டது.

இறுதியில் சுயமரியாதை திருமண முறை சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளித்தது.


‘பாராட்டத்தக்க நோக்கம் கொண்டவை’ என்று உயர்நீதிமன்றத்தால் புகழப்பட்டாலும், இவ்வாறு அமைப்பு ஒன்று, தானே சட்டமியற்ற இயலாது என்று நிராகரிக்கப்பட்டதால், சுயமரியாதை இயக்கத்தில் பெரிய ஆதங்கமேற்ப்பட்டது. மேலும் முதலாவது தீர்ப்பு கூறப்பட்ட 1953ம் ஆண்டு போல அல்லாமல் 1966ல் சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்தது. அதன் அரசியல் தலைவராக முன்னிறுத்தப்பட்ட அண்ணாதுரை  ஏறக்குறைய பெரும்பான்மை தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.



ஆனால், அண்ணாதுரை ஒரு வருடம் காத்திருந்தார்.

அடுத்த ஆண்டே அவரது திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக ஆட்சியை கைப்பற்றியது. தமிழக முதல்வராக பதவியேற்ற அண்ணாவின் அரசினால் முதலில் இயற்றப்பட்ட சட்டத்திருத்தம், சுயமரியாதை திருமணத்தையும் ஒரு திருமணமுறையாக அறிமுகம் செய்து பிரிவு 7A ஐ இந்து திருமணச் சட்டத்தில் ஏற்ப்படுத்தியதுதான் (Act 21 of 1967)

அது அண்ணா வழி!

அன்னா வழி?

மக்களாட்சியில் மாற்றத்திற்கு வழியில்லையோ?



மதுரை
30/08/11