நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம். வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தேர்தல் அறிக்கையில் இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பிரிட்ஜ் போன்றவற்றை கொடுப்பதாக கூறுவதை தடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தான் தாக்கல் செய்ய இருக்கும் நீதிப்பேராணை மனுவில் அவருக்காக நான் வாதிட வேண்டும்’ என்று கேட்டார்.
’சில வருடங்களுக்கு முன்னர், தமிழக அரசு இலவச தொலைக்காட்சி வழங்கிய திட்டத்தினை எதிர்த்து தற்பொழுது பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் கண்ணன் அவர்கள் வாதிட்ட நீதிப்பேராணை மனு தள்ளுபடியான’ விபரத்தை அவருக்கு நினைவு படுத்தினேன்.
அந்த வழக்கை தாக்கல் செய்ததாலேயே கண்ணன் அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவது காலதாமதமானது என்பதும் பின்னர் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் ஏற்ப்பட்ட சமசர ஏற்பாட்டின்படி அவர் பதவி ஏற்றதும் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்படுவார் என்ற அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டார் என்பதும் நீதிமன்ற வளாகங்களில் கிசுகிசுக்கப்பட்ட இரகசியம்!
வந்தவரோ விடவில்லை. ‘அந்த வழக்கு அரசு திட்டச் செலவுகளைப் பற்றியது. இந்த வழக்கு, இவ்வாறு அறிவிப்பது வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் லஞ்சம் என்ற ரீதியில் தாக்கல் செய்யப்படுகிறது’ என்றார்.
‘இது பொதுநல வழக்கு. ஓரளவிற்காவது, இதன் நோக்கங்களோடு தனிப்பட்ட வகையில் நான் ஒத்துப் போனாலொழிய எப்படி இந்த வழக்கில் வாதிடுவது?’ என்று கேட்டேன்.
‘இப்படி ஒரு அறிக்கையோடு நீங்கள் எபப்டி ஒத்துப் போக இயலும். இது மக்களை ஏமாற்றி சோம்பேறிகளாக்கும் மோசடி இல்லையா?’ என்றார்.
’நீங்கள் என்ன பள்ளியில் படித்தீர்கள்?’
‘அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில்’
‘அப்படியாயின் நீங்கள் பெற்ற கல்வி இலவசம்தானே! சட்டக் கல்லூரியில் கூட நீங்கள் செலுத்திய சொற்ப கட்டணத்தை வைத்து, பேராசிரியர்களின் சம்பளத்தை கொடுத்திருக்க முடியுமா?’
’அது கல்வி. அந்தச் செலவோடு இந்த தண்டச் செலவான தொலைக்காட்சியை ஒப்பிட முடியுமா?’
’ஏன் உங்கள் வீட்டில் நீங்கள் தொலைக்காட்சி வைத்திருக்கிறீர்கள்தானே? அதனை வாங்குவது உங்களுக்கு தண்டச்செலவாகப் படவில்லையே’ என்றேன்.
‘அது எப்படி சார், எனது பிள்ளைகளின் கல்விக்கு செலவிட்டது போக எஞ்சியிருக்கும் பணத்தில்தான் நான் தொலைக்காட்சி வாங்கியுள்ளேன். தொலைகாட்சியா, கல்வியா என்றால் நான்கல்விக்குத்தான் முதலிடம் கொடுப்பேன்’
‘அப்படியா, உங்கள் மகள் படிக்கும் பள்ளியில் கட்டணம் எவ்வளவு?’
‘காலாண்டிற்கு பதினைந்தாயிரம்’
‘நம்ம ஊரில் காலாண்டிற்கு இருபத்தைந்தாயிரம் கட்டணம் வசூலிக்கும் பள்ளி உள்ளது. ஏன் அங்கு சேர்த்திருக்கலாமே!’
‘எது அந்த ஏ.சி.கிளாஸ்ரூம் உள்ள பள்ளியா? நம்ம வசதிக்கு இது போதும்’
‘ஏன், நீங்கள் உங்களது வீட்டிலுள்ள தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்றவற்றை வாங்காமலிருந்தால் அந்தப் பள்ளிக்கு உங்கள் மகளை அனுப்பலாமே’ என்றேன்.
‘சார், இது என்ன விதண்டாவாதம்? எனக்கு கிடைக்கும் வ்ருமானத்தை இன்னின்ன வகைக்கு இவ்வளவு என்று பிரித்து செலவளிக்க எனக்கு புத்தியில்லையா?’
‘அதுவேதான், அதே வகையான புத்தி இந்த இலவச தொலைக்காட்சி பெறும் பயனாளிக்கு இல்லை என்று நீங்கள் எப்படி கருத முடியும்?’
’என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் என்ன அவரது வருமானத்திலிருந்தா தொலைக்காட்சியை வாங்குகிறார்?. அரசாங்கம் ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி’
‘சரி, உங்கள் மகள் படிக்கும் தனியார் பள்ளியில் உள்ள வாட்ச்மேனுக்கு என்ன சம்பளம் இருக்கும்?’
‘இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் இருக்கலாம்’
‘ஆசிரியருக்கு?’
‘ஐயாயிரம் என்று நினைக்கிறேன்’
‘இதே வாட்சுமேனும், ஆசிரியரும் அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் வேலை பார்த்தால் அவர்களுக்குறிய சம்பளம் பத்தாயிரம் மற்றும் இருபதாயிரத்தை தாண்டும் இல்லையா?’
‘ஆம்’
‘அரசு ஊழியர்களின் சம்பளத்தை எப்படி நிர்ணயிக்கிறார்கள்?’
‘அவர்களது கல்வித் தகுதி, செய்யும் வேலை, மற்றும் விலைவாசி ஆகியவற்றை கணக்கில் எடுத்து நிர்ணயிக்கிறார்கள்’
‘ஆக, நியாயமாக இருபதாயிரம் ரூபாய் பெற வேண்டிய ஒரு ஆசிரியர் ஐந்தாயிரம் மட்டும் பெற்றுக் கொண்டு உங்கள் மகளுக்கு பாடம் எடுக்கிறார். பத்தாயிரம் பெற வேண்டிய காவலாளி...’
‘நீங்கள் கூற வருவது புரிகிறது. எனது மகளின் கல்வியும் இலவசம் என்றுதானே. சந்தையில் ஏகப்பட்ட காவலாளிகள் கிடைக்கிறார்கள். சந்தையே அவர்களது சம்பளத்தையும் நிர்ணயிக்கிறது. மேலும் இந்த இலவசம் அரசு தரும் இலவசமல்லவே!’
‘அதுவேதான் நான் கூற வருவது. சந்தையில் நிர்ணயிக்கப்படுவதால், அந்த காவலாளிக்கு நியாயமாக போக வேண்டிய எழாயிரம் ரூபாய் தடுக்கப்படுகிறது இல்லையா?’
‘சரி, அப்படியே எடுத்துக் கொள்வோம். அதனாலென்ன?’
‘அதனாலாயே அந்த காவலாளி தனது மகளுக்கு கல்வியையாவது தர வேண்டி தான் வாங்க ஆசைப்படும் தொலைக்காட்சியை வாங்கமலிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோமா?’
‘ம்...’
‘எனவே, நீங்கள் தர மறுக்கும் பதினைந்தாயிரத்தை அரசு வரியாக எடுத்து ஆசிரியர் வாங்க நினைக்கும் தொலைக்காட்சியாக அவருக்குத் தருகிறது. அவ்வளவுதான்’
’அப்படியாயின், அது சந்தையின் செயல்பாட்டில் அரசு தலையிடும் செயலல்லவா?’
’இல்லை, இதுவும் சந்தையின் செயல்பாடுதான். எப்படி பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து காவலாளிக்கு மூவாயிரம் என்று தீர்மானிக்கிறீர்கள். காவலாளிகள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஏழைகளுக்கு இலவசமாக தொலைக்காட்சி தர வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்’.
‘ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் அனைவரும் சென்று ஓட்டு போடுவதால் மட்டும் அரசு அவர்கள் சார்பாக நடந்து கொள்ள வேண்டும் எனபதற்காக, இது தார்மீக அடிப்படையில் சரியில்லையே!’
’அந்தக் காவலாளியும் சரி, நீங்களும் சரி ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் உழைக்கிறீர்கள். அவர் மாதம் ஐயாயிரம் தாண்ட முடியாது. நீங்கள் ஐம்பதாயிரம் பெறுகிறீர்கள். இது என்ன தார்மீக அடிப்படையில் என்றால் சந்தையை காரணம் காட்டுகிறீர்கள். நம்மைப் போல வழக்குரைஞர்கள் எல்லாம் சேர்ந்து இதுதான் கட்டணம் என்று நிர்ணயிக்கிறோம். காவலாளிகளும் தேர்தலில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அதுவும் சந்தைதானேயொழிய சந்தைக்கு இடையூறு செய்வதல்ல.’
‘அதற்காக என்னுடைய வரிப்பணம் பாழாக்கப்பட்டால், கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?’
‘இது சரியான செயல். மக்களாட்சியில் அனைத்து மக்கள் கூட்டங்களுக்கும் அவரவர்கள் நலனை பாதிக்கும் எந்த அம்சத்தையும் கேள்வி கேட்க உரிமை உண்டு. கேளுங்கள். சட்டத்திற்குட்பட்ட வகையில் தடுக்கவும் பாருங்கள். ஆனால், தங்களுக்கு நலன் என்பதை கேட்டுப் பெறுவதற்கு மற்ற மக்கள் கூட்டத்திற்கும் உரிமை உண்டு என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். மக்களாட்சி சந்தை எவருடைய குரல் வலிமையானது என்பதை தீர்மானிக்கட்டும்’.
‘சரி, ஓரளவுக்கு கல்வியை உயர்நிலைப் பள்ளி வரையாவது அனைவருக்கும் அரசு கொடுக்கிறது. ஆனால், இந்த வீண் செலவை தவிர்த்தால் ஏழைகளுக்கு தேவையான் குடிநீர், கழிப்பிட வச்திகளை அரசு செய்ய முடியுமே. அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’
‘முதலில் ஏழை மக்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி என்று சும்மா சொல்லாதீர்கள். உங்கள் மனதில் நிசமாகவே ஓடுவது, நாற்கர சாலை போல நவீன சாலைகளை போடலாமே, இன்னும் இரண்டு மின்சார உற்பத்திச்சாலைகள உருவாக்கலாமே என்றுதானே......இந்தச் சாலை, மின்வெட்டு இதனால் காவலாளிகளை விட வசதிகளுக்கு பழகிவிட்ட நமக்குத்தான் பாதிப்பு அதிகம். காவலாளிகள் நாற்கர சாலையில் பறப்பதில்லை. மின்சாரம் பெருகி தொழில்வளம் பெருகினால் காவலாளிகளின் வாழ்க்கைத் தரம் தன்னாலேயே கூடும் என்பதெல்லாம், இந்தியாவில் நடக்காது. தாராளமயாக்கல் கொள்கையை புகுத்தி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னமும் நாம் குறைந்தபட்ச கூலிச்சட்டம் வைத்திருக்கிறோம்.’
’குடிநீர், கழிப்பிட வசதி?’
‘அவை அடிப்படை உரிமை. அதைக் கேளுங்கள். எந்த அரசாவது இலவச தொலைக்காட்சி கொடுப்பதால், கழிப்பிடம் கட்ட பணம் இல்லை என்று கூற முடியுமா?’
‘வாதத்திற்கு சரி, நடைமுறையில்?’
‘முதலில் ஏழைகள் தங்களுடையதை கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள். அதற்கான வழிமுறைகளும் உள்ளது. வட்டம், குட்டம் என்று அடிமட்ட அரசியல்வாதிகளை நீங்கள் கேலி செய்யலாம். எம் எல் ஏ என்றாலே ரவுடி என்று தெலுங்குப் பட ரேஞ்சில் குற்றம் சாட்டலாம். ஆனால் அவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரியாது. ரொம்பவும் ஏழைகளுக்காக ஆதங்கப்பட்டால், இன்னும் அதிகமாக வரி கட்ட தயாராக இருக்கிறீர்களா?’
‘நான் ஏற்கனவே வரியாக அழும் தண்டம் போதாதா?’
‘தண்டம் என்று யார் சொன்னது? இந்த இலவசங்களின் பலன் கடைசியில் உங்களுக்குத்தான் தெரியுமா?’
‘அது எப்படி?’
‘இலவசமாக தொலைக்காட்சியை பெறும் காவலாளி சம்பள உயர்வு கேட்கும் வாய்ப்பு குறைவு. சம்பள உயர்வுக்கான பொறி வீட்டில் மனைவியின் நச்சரிப்பில், குழந்தைகளின் கெஞ்சலில் தொடங்குகிறது. சம்பள உயர்வு கேட்கவில்லையெனில், பள்ளியினை நடத்தும் பொருட்செலவு குறைகிறது. உங்கள் மகளின் கட்டணமும் கூடாது’
‘இது ரொம்ப ஓவர்...’
‘இதுவே ஓவரென்றால்...உங்கள் பாதுகாப்பு செலவு மிச்சப்படுவதை எதில் சேர்ப்பது?’
’நீங்கள் மட்டும் தொலைக்காட்சி் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், தொலைக்காட்சி வாங்க முடியாத ஒரு ஏழை இளைஞன் அதை உங்கள் வீட்டிலிருந்து எடுக்க எண்ணம் கொண்டால்...’
‘என்ன மிரட்டுறீங்க.....அப்ப நகை திருடுராங்கன்னு இலவச நகை கொடுக்க சொல்வீங்க போல’
‘ஒரு யூகம்தான். இந்த மாதிரி சமூக நல ஏற்ப்பாடுகள் மற்றும் திட்டங்கள் எல்லாமே, நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களும், இந்த நாட்டில் நானும் ஒரு அங்கம். இதன் வளத்தில் எனக்கும் பங்கு உண்டு என்ற எண்ணப்பாட்டினை தோற்றுவிக்கவே செயல்படுத்தப்படுகின்றன. பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று ஒரு பக்கம் விளம்பரபடுத்திக் கொண்டே அதன் பலனை பெருந்திரளான ஒரு மக்கள் கூட்டத்துக்கு மறுத்துக் கொண்டே இருந்தால், அவர்களின் எதிர்பார்ப்பு நம்மைப் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பாக மாறி விடாமல் தடுக்கவும்தான் இது போன்ற ஏற்ப்பாடுகள்’
’கம்யூனிச புரட்சியா?’
‘ஏழைகளின் வெறுப்பு ஒட்டுமொத்த புரட்சியாகத்தான் வெடிக்க வேண்டும் என்பதில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இங்கில்லை. ஆனால், வன்முறை, கிளர்ச்சி, சூறையாடுதல் என்று எத்தனையோ வடிவங்களில் இருக்கலாம். நாம் இதை பலமுறை பார்த்ததுதான். எனவே, இந்த செலவினங்கள் எல்லாம், நம்மை பாதுகாத்துக் கொள்ளும் இன்சூரன்ஸ் போலவும் எடுத்துக் கொள்ளலாம்.’
’இந்தக் கருத்து அதீதமான யூகமாக இருக்கிறது’
’ஏன் சந்தைப் பொருளாதாரத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க நாட்டிலேயே சமூகப் பாதுகாப்பு ஏற்ப்பாடுகளுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. வேலையற்றோருக்கு கிடைக்கும் பாதுகாப்புத் தொகை முதல் உணவு கூப்பன் வரையில். இவ்வாறான பாதுகாப்புகளே பல்வேறு பொருளாதார வீழ்ச்சிகளில் பாதிக்கப்படும் அமெரிக்கர்களை சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கையிழக்காமல் இருக்கச் செய்கிறது. உதாரணமாக, ரொனால்டு ரீகன் எவ்வளவுதான் சமூக பாதுகாப்பு ஏற்ப்பாடுகளுக்கு ஏதிராக பேசி வந்தாலும், அவரது பிரபல்யத்துக்கு பங்கம் வராமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவரது ஆட்சிக் காலத்தில் சமூக பாதுகாப்பு செலவினங்கள் குறைக்கப்படவில்லை மாறாக அதிகரிக்கப்பட்டது, என்று சொல்வார்கள்’
‘சார், என்னைப் பேச விடாமல் இந்த உரையாடலை உங்கள் இஷ்டத்திற்கு ஏற்றது போல எங்கோ கொண்டு சென்று விட்டீர்கள். மனதை தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் ஆட்சி செய்தால், இருக்கும் பணத்தைக் கொண்டு கழிப்பிடம் கட்டுவீர்களா? இல்லை தொலைக்காட்சி கொடுப்பீர்களா?
’உங்களுக்காகத்தான் ஏகப்பட்ட நபர்கள் ஏற்கனவே பேசி விட்டனரே...நான் இப்படித்தான் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது இல்லையா? அது போலவே கழிப்பிடம் கட்ட வேண்டுமா அல்லது மிக்ஸி கொடுக்க வேண்டுமா என்பதை பதவி ஏற்கப்போகும் தமிழக் முதல்வரும், அவருக்கு ஓட்டுப் போட்ட பெருவாரியான மக்கள் கூட்டமும் தீர்மானிக்கட்டும்’
’போங்க சார், இது சப்பைக்கட்டு....நீங்கள் இயலாததை நிறுவப் பார்க்கிறீர்கள்’
’Advocacy is an art of managing impossible இல்லையா?’
மதுரை
05/05/11