நான் கனவில் கூட நினைத்ததில்லை, சாயிபாபா தனது கடைசி அதிசயத்தை எனக்காக நிகழ்த்துவார் என்று!
எனக்கு ஒரு வயதான கட்சிக்காரர் உண்டு. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவரது வழக்குகளை நடத்தித்தர வேண்டும் என்று, வேறு ஒரு வழக்குரைஞரால் என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார். ‘ஐயா, நான் மாவட்ட நீதிமன்றத்திற்கு முக்கியமான வழக்குகளை நடத்துவதற்கு மட்டுமே செல்கிறேன், எனவே நீங்கள் வேறு வக்கீல் வைத்துக் கொள்ளுங்கள்.’ என்றாலும் விடவில்லை என்பதால், ‘மற்ற வாய்தாக்களுக்கெல்லாம் என்னுடைய ஜூனியர்தான் வருவார், வழக்கு விசாரணையின் பொழுது மட்டுமே நான் வர இயலும்’ என்று கண்டிப்புடன் கூறி வழக்கினை எடுத்துக் கொண்டேன்.
ஆயினும் ஒவ்வொரு முறை வழக்கு வாய்தா போடப்படும் பொழுதும், அடுத்தமுறை நான் எப்படியும் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று மன்றாடுவார். அவரை ஒவ்வொரு முறையும் சமாளிப்பது கடினம் என்றாலும், கெஞ்சல் மிஞ்சினால் கண்டிப்பு என்று அவரை தவிர்த்து வந்தேன். இறுதியாக கடந்த வாரம் வந்த வாய்தாவுக்கு நான் வருவேன் என்று சொல்லி வைத்திருந்தேன்
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரிடமிருந்து தொலைபேசி! ‘நான் புட்டபர்த்திக்கு செல்கிறேன். பாபாவின் மறைவைக் கேட்ட பின்னர் இங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை.’ என்றார். ‘அப்பாடா’ என்றிருந்தது எனக்கு.
இரண்டு நாட்கள் கழித்து, அவர் மதுரையில் இல்லை என்பதால், தைரியமாக ஜூனியரை அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் அவரிடம் இருந்து தொலைபேசி, ‘சாயி சரணம். நல்ல தரிசனம் பார்த்தேன்...அப்புறம் நேற்று நீங்களே வாய்தாவுக்கு போனதாக கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் சார்!’
‘நாம் எப்போ கோர்ட்டுக்கு போனோம்...’ என்று ஒரு கணம் வியந்தாலும் அடுத்த கணமே, சமாளித்துக் கொண்டு ‘ஆமா, ஆமா’ என்று வேகமாக ஆமோதித்து வைத்தேன்.
உடனடியாக எனது ஜூனியரைக் கூப்பிட்டு, ‘நீதான் அவரிடம் நானே கோர்ட்டுக்கு போனதாக கூறினாயா?’ என்றதற்கு ‘இல்லையே சார், நான் அவரிடம் இது வரை பேசவேயில்லையே’ என்றார். ‘பின்ன யார் அப்படி சொல்லியிருப்பார்கள்?’
ஒருவேளை சாயிபாபாவாக இருக்குமோ?.
இருந்தாலும் இருக்கலாம். ஏனெனில் நானறிந்த வரையில் வாழ்க்கையில் அவருக்குள்ள ஒரே கவலை, அவரது வக்கீல் கோர்ட்டுக்கு வர வேண்டும் என்பதுதான். அதைத்தான் அவர் புட்டபர்த்தியில் வேண்டியிருப்பார். அதனை கொடுப்பதற்காக சாயிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும்!
எப்படியோ, சாய்பாபாவுக்கு நன்றி!
மதுரை
29/04/11