‘உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்’ என்ற கேள்விக்கு ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஏனெனில் தமிழ் இங்கு பேசப்படும் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இருக்கும் பட்சத்தில், வழக்காடு மொழியாகவும் இருப்பதுதான் இயல்பானது.
ஆங்கிலம் வழக்காடு மொழியாக தமிழகத்தில் இருப்பதுதான் விதியினை மீறிய செயல். அந்த விதிவிலக்கிற்கான காரணங்களுக்குள் தற்பொழுது யாரும் செல்லவில்லை. உலக அளவில் நமது தொடர்பின் எல்லைகளை விரித்துக் கொள்ளும் வகையிலும், இந்திய அளவில் ஒரு தொடர்பு மொழி என்ற வகையிலும் ஆங்கில பயன்பாட்டிற்கான முக்கியத்துவத்தைக் கருதி, நீதிமன்றங்களில் அதன் இருப்பிடத்தை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.
ஆனால், தமிழுக்கும் ஏன் இடமில்லை என்பதுதான் கேள்வி?
‘தமிழுக்கு இங்கு இடமில்லை’ என்று வைராக்கியம் கொண்டவர்கள் கூட, அதற்கான தகுந்த காரணத்தை கூற முயலாமல், ‘தமிழ் இருக்கலாம். ஆனால்...’ என்றுதான் தங்களது வாதத்தினை வைக்க முன் வருகிறார்கள். தமிழ் இருக்கலாம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்டால், பின் ஏன் அடுத்த கட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதில் மெத்தனம் என்பது புரியவில்லை. அங்குதான் இந்த ‘ஆனால்...’ களுக்குப் பின் உள்ள நோக்கம் வெளிப்படுகிறது.
இதே ‘ஆனால்...’கள்தாம் இடப்பங்கீடு விடயத்திலும், அதனை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த முன்னிறுத்தப்பட்டன. ‘இடப்பங்கீடு தேவைதான். ஆனால் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவீதம் என்ற புள்ளியியல் விபரங்கள் இல்லாத வகையில் அதனை எப்படி செயல்படுத்துவது’ என்பது போன்ற ‘ஆனால்’கள்தாம் அவை. புள்ளியியல் விபரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட அதே குரல்கள்தாம் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியா, என்றும் புலம்புகின்றன.
இதற்கெல்லாம் காலம், நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் எப்படி செயல்படுத்தினார்களோ அப்படியே செயல்படுத்த வேண்டியதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்.
தமிழ் விடயத்திலும், ஆனால்... என்று இழுப்பவர்கள்களால்தான் பிறச்சினை. தமிழ் கூடாது என்று கூறுபவர்களை எதிர்கொள்வது எளிது. ஆனால்... என்று இழுப்பவர்களிடம்தான், எளிதில் ஏமாறிவிடுவோம். ஆனால் என்பவர்களுக்கு கூடாது என்று கூறுபவர்களை விட வேறு நோக்கம் இல்லை என்பதுதான் உண்மை. இல்லையெனில், ‘அது என்ன புடலங்காய் உள்கட்டமைப்பு’ என்று அடுத்து ஆக வேண்டியதை பார்த்திருப்பார்கள்.
ஏனெனில், தமிழுக்காக என்று உருவாக்க முடியாத உள்கட்டமைப்பு என்று பெரிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லை. நமது முன்னாள் தலைமை நீதிபதி உள்கட்டமைப்பை பற்றி கூறியது ’ஒரு கண்கட்டி வித்தை’ என்று நான் உணர்ந்திருந்தேன். தமிழில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று கூறியது முதல் முட்டுக்கட்டை. மாவட்ட நீதிமன்றங்கள் முதல் முன்சீப் நீதிமன்றங்கள் வரை எந்த புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்க்காமல், தமிழில் வழக்குகள் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.
இந்திய தண்டனைச் சட்டத்தையோ, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தையோ தமிழில் மொழிபெயர்த்தாலும், அது ஒரு படிப்பனுபவமாக மட்டுமே பயன்படுமேயன்றி, நீதிமன்றத்தில் அதனை மட்டுமே அடிப்படையாக வைத்து வழக்கு நடத்தப்பட இயலாது. சட்டப்பிரிவுகளின் ஒவ்வொரு வார்த்தையும் என்ன அர்த்தத்தில் அந்த வாக்கியத்திலும், பிரிவிலும் பயன்படுத்தப்படுகின்றது என்று பல சமயங்களில் நீதிமன்றங்களில் வாதிடப்படுகையில், மொழிபெயர்த்த சட்டத்தினை வைத்து அதனை விளக்க (interpret) முடியாது. எனவே, தமிழில் புத்தகங்கள் இல்லை என்பது ஒரு தடையே அல்ல!
புதிதாக கணணிகள் வேண்டும் என்று கூட கூறப்படுகிறதாம். எத்தனை மொழிகளையும் எளிதாக தட்டச்சு செய்யும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்பட்ள்ள சூழ்நிலையில், கணணி ஒரு பிரச்னையே இல்லை. தமிழில் வழக்குரை (pleadings) தாக்கல் செய்யப்படும் பொழுது வழக்குகளின் புள்ளியியல் விபரங்களை சேகரிப்பதில் பிரச்னை இருக்கலாம். அதனைக் கூட வழக்குரை (pleadings) தமிழில் தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்குரை தலைப்பு (cause title) மற்றும் வழக்குரை அட்டை (docket) ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூட விதி வகுப்பதால், தீர்க்கலாம். இதனை எழுதும் இந்த அரை மணி நேர சிந்திப்பில் இந்த வழிமுறை புலப்படுகையில், நீதிமன்ற நிர்வாகத்தில் கற்றுத் தேர்ந்த அனுபவம்மிக்க அலுவலர்களால் எளிதில் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.
கணணியில், ஃபோனடிக் முறை தட்டச்சு இருப்பதால், தமிழ் தட்டச்சர்கள் தேவை என்பது எல்லாம் இல்லை. ஆனாலும் கூட, நீதிபதிகள் தாங்களாகவே விரும்பி தமிழில் தீர்ப்பு பகர விரும்பினால் மட்டுமே தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் தேவை இருக்கும். தகுந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையில், நீதிபதிகள் ஆங்கிலத்திலேயே தீர்ப்புகளை கூறலாம். தமிழும் வழக்காடு மொழி என்பதால், தமிழில்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்று யாரும் நீதிபதிகளை கட்டாயப்படுத்த முடியாது. எப்படியாயினும், உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தமிழில் தீர்ப்பு பகர குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆகலாம்.
தமிழ் இருக்கலாம்தான் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட சூழ்நிலையில் தமிழ் தெரியாத நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்படுகிறார்களே என்ற வாதம் அர்த்தமற்றது என்றாலும், ஏன் தமிழ் தெரியாத நீதிபதிகள் இங்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அதற்கு பதில். நேர்மையான, துணிச்சலான நீதிபதிகளுக்கு அந்த நேர்மைக்கு தண்டனையாகவும், அல்லது நேர்மையற்ற நீதிபதிகள் ஏதாவது பிறழ்ச்சினையில் சிக்கிக் கொள்கையில் அதிலிருந்து அவரை விடுவிக்கும் (relieve) நோக்கத்துடனும்தானே நீதிபதிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார்கள். உண்மையான அந்த காரணத்திற்கு எந்த சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்க இயலும்.
தலைமை நீதிபதி வெளிமாநிலத்திலிருந்து வருவது என்பதும் உபயோகமற்ற ஒரு சடங்கு என்றாலும், அவரைப் பொறுத்தவரை வேண்டுமானால் தனக்கென ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்துக் கொள்ள வேண்டியதுதான். எட்டு கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான சம்பளம் ஒரு பொருட்டல்ல.
உச்ச நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ள மொழிபெயர்ப்பு பிரச்னையும், ஒரு தடையல்ல. ஏனெனில், தற்பொழுது கூட ஒரு உரிமையியல் வழக்கோ அல்லது குற்றவியல் வழக்கோ, உச்ச நீதிமன்றம் செல்லும் பொழுது அனைத்து கீழமை நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற தீர்ப்பு, வழக்கு ஆவணங்களில் பத்து சதவீத இடமே பிடிக்கிறது. ஏன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனுக்களிலும் () அனைத்து ஆவணங்களும் தமிழில் உள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் செல்கையில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது புதிதாக எழும் பிரச்னையல்ல.
இவை எதுவும் சாத்தியமில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப்படும் வரை தமிழில் வழக்குரைகளை ஏற்றுக் கொள்வதையாவது நிறுத்தி வைக்கலாம். ஆனால், எதுவுமே இல்லையென்பதில்தான் இந்த ஆனால்கள் மீது சந்தேகம் ஏற்ப்படுகிறது. அவர்கள் உண்மையில், தமிழ் கூடாது என்று கூற வருகிறார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தமேயன்றி வேறு அல்ல.
பலர் நேரிடையாக ‘அது என்ன தமிழ் வந்தால் நீதிமன்றத்தின் டிகோரம் என்னாவது, டீசன்ஸி என்னாவது?’ என்கிறார்கள் சமூக நீதி பிரச்னையில், ‘ரிசர்வேஷன் கூடாது, மெரிட்தான் கரெக்ட்’ என்று அதனால் பயனடைந்த அல்லது பயனடையப் போகும் ஒரு கூட்டம் சலித்துக் கொள்ளும். அதே போன்று இங்கும், தமிழில் வழக்காடுவதால், பயன்பெறப் போகும் நபர்கள்தாம் மற்ற ஆனால்களைப் போல அல்லாமல் நம்மிடம் நேரிடையாக இப்படி நக்கலடிக்க முற்ப்படுகிறார்கள்.
நேற்று கூட என்னிடம் அப்படிக் கேட்ட என்னிடம் ஒரு வழக்கினை நடத்த ஒப்படைக்க வந்த ஒரு ஜூனியர் வழக்குரைஞரிடம் ‘என் கடவுளே என்று இறைஞ்சுவது எப்படியிருக்கிறது’ என்றேன். ‘தாய்மொழியில் கேட்டால் வார்த்தையின் அர்த்தம் அதன் முழு வீரியத்தோடும் மனதை துளைக்கிறது அல்லவா? வாதங்களை தமிழில் வைப்பதன் பயன் அதுதான்’ என்றேன்
எது எப்படியோ, இந்த சட்டச்சிக்கல், கட்டமைப்புச் சிக்கல் அனைத்தையும் சற்றுத் தள்ளி வைத்து சிந்திதோமென்றால், நமது உயர்நீதிமன்றத்தினை அணுகும் 90 சதவிகித வழக்காடிகள் தங்களது பிரச்னைகளை தமிழில் சிந்திக்கிறார்கள். தமிழில் ஆவணங்களை எழுதுகிறார்கள், தமிழில் சண்டையிடுகிறார்கள். தமிழில் தங்களது வழக்குரைஞருடன் விவாதிக்கிறார்கள், தமிழில் தங்களது சாட்சிகளை விசாரிக்கிறார்கள். அப்படியிருக்கையில், முக்கியமாக அந்த 90 சதவிகிதத்தில் 80 சகவிகிதம் வழக்காடிகளுக்கு ஆங்கிலம் தெரியாத சூழ்நிலையில் ஏன் தங்களது வழக்குகளை தமிழில் நடத்தக் கூடாது? அதுதான் நியாயமென்றால், அதுதான் சிறந்தது என்றால் அதனை ஏன் ஆனால்களால் தள்ளிப்போட வேண்டும்.
ஆனால்களை தவிர்ப்போம். தமிழுக்கு ‘ஆம்’ என்போம்.
பிரபு ராஜதுரை
13 comments:
உயர்நீதிமன்றத்தில் தமிழ் அனுமதிக்கப்படுவது குறித்து வழக்குரைஞர்கள் போராட்டம் நடந்த பொழுது, ஆர்வலர்கள் சிலர் தமிழ் ஏன் வேண்டும் என்பது குறித்து சிறிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டனர். எனது கட்டுரை ஒன்று அதில் இடம் பெற வேண்டும் என்று வேண்டியதால், எழுதிய கட்டுரை. எனவே, பிரச்சார நெடி அடிக்கலாம்.
நான் இப்படி ஒரு கட்டுரை எழுதியது, உயர்நீதிமன்றத்தில் பலரது புருவத்தை உயர்த்தியிருக்கும். சிலர் வெளிப்படையாகவே, உனக்கு ஏன் இந்த வேலை என்று கேட்டார்கள்...
ஆயினும் எனக்கு அதில் மகிழ்வே, வருத்தமில்லை.
வெல்டன் சார்..,
என்னை போன்ற கை நாட்டுக்கும் தெளிவாக புரியும் படி எடுத்துக்கூறி இருக்கிறீர்கள்.
நன்றி.
தோழன்
பாலா
அன்புள்ள பிரபு,
நேரமின்மையால் சில காலமாக பதிவுகளில் எங்கும் மறுமொழிவதில்லை. இருப்பினும் இது ஒரு முக்கியமான பிரச்னையென்பதாலும், உங்களைப் போன்ற வழக்கறிஞர்கள் இதை எழுதுவதைப் பாராட்டவும் இந்த மறுமொழி. எளிமையாகவும், அதே நேரத்தில் துணிவுடனும் உங்கள் கருத்தைச் சொல்லியமைக்கு நன்றி.
நீதி மன்றங்களில் தமிழில் (அல்லது வேறு எந்த மாநிலத்திலும், அம்மாநில மொழியில்) வழக்காட வழியில்லை என்பதே எனக்குப் புதிதாகவும், புதிராகவும் இருக்கிறது. நான் இந்தியாவிலிருந்தவரை நீதிமன்றங்களில் என்ன மொழியில் வழக்காடுகிறார்கள் என்று யோசித்ததில்லை.
(என் தந்தை ஒரு மருத்துவமனையின் கவனக் குறைவினால் இறக்க நேர்ந்ததால் அம்மருத்துவமனையின் மீது நாங்கள் வழக்குத் தொடர்ந்ததையொட்டி இரண்டு முழுநாட்கள் தூத்துக்குடி நீதிமன்ற அறைவாசலில் நாய் போலக் காத்து நின்ற நினைவு மட்டும் இருக்கிறது. நீதிபதி முன்பு அமர்வது அவரை அவமதிப்பது என்று சொல்லி அந்த இரண்டு நாட்களில் தரையில் கூட எங்களை உட்காரவிடவில்லை. எங்களுடைய வழக்கு அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா, படாதா என்று தவங்கிடந்த பின் நாளிறுதியில் மருத்துவமனை நிர்வாகம் வாய்தா வாங்கியுள்ளனர், வழக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது என்று கூறுவர், நானும் என் அம்மாவும் வீட்டுக்குத் திரும்புவோம். சென்னையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நான் மெனக்கிட்டு வந்து மீண்டும் சென்னை செல்வேன். அந்த இரண்டு அனுபவங்களுக்குப் பிறகு நீதியும் வேண்டாம், ஒரு மயிறும் வேண்டாம் என்று எங்கள் வழக்கறிஞரிடம் சொல்லி விட்டோம். அந்த வழக்கு என்ன ஆயிற்று என்று கூடத் தெரியாது. அப்பொழுது நீதிமன்றத்தில் அவர்கள் என்ன மொழியில் பேசினார்கள் என்று கூட நினைவில்லை).
சட்டமும், நீதியும் நாகரீக உலகில் மனிதரின் அடிப்படை உரிமை. அதை மெரும்பான்மையோர் புரிந்து கொள்ளவும், பேசவும் இயலாத மொழியில் நடத்துவது சட்டமும், நீதியும் இல்லாமைக்குச் சமம். இந்தியா இன்னும் அடிப்படை உரிமை மறுக்கப் பட்ட, ஜனநாயகமற்ற காட்டுமிராண்டி நாடு என்றுதான் சொல்ல வேண்டும். இதை மாற்றுவதற்கு முயன்று தம் உயிரையே பணயம் வைத்துப் போராடும் வழக்கறிஞர்களைக் கும்பிட்டுக் கண்ணீருடன் தலைவணங்குகிறேன்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
அன்புள்ள பிரபு இராஜதுரை,
என்ன நடந்தால் எனக்கு என்ன எனது தொழில் / பிழைப்பு நடந்தால் போதும் என்று இருக்கும் இந்தக்காலத்தில் நீங்கள் செய்துள்ளது பாராட்டத்தக்கது. மிக்க நன்றி!
எனக்கு தெரியாத மொழியில் நீதி வழங்கப்பட்டாலும் , நான் குத்தவைத்து உட்கார்ந்து இருக்கும்போது எனக்குத் தெரியாத மொழியில் எனக்காகவும் எனக்கு எதிராகவும் வழக்காடிக் கொண்டு இருக்கும்போது நான் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? என்றுதான் தோன்றும்.
நான் வாழும் நாட்டில் வேறு மொழியில் எனக்கு நீதி வழங்கிக் கொன்டு இருந்தால் அதை எப்படி எனது நாடக உணர முடியும்.
மும்பையிலோ அல்லது வேறு ஒரு ஊரிலோ ஒரு போலிஸ்காரர் குப்பை பொறுக்கிக் கொன்டு இருந்த ஒரு தமிழரை கொலக்குற்றவாளியாகச் ஜோடித்து தண்டனை பெற்றுக் கொடுத்தார் என்றும் மொழி தெரியாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்றும் செய்ய இயலாமல் தண்டனை அடைந்தார் என்றும் உங்கள் பதிவில் படித்ததாக நினைவு.
***
ஓ ஷிட் என்றும் பஃக்யூ என்றும் எல்லார் முன்னிலையிலும் சொல்வது பேசன் ஆகிவருகிறது. சொல்பன்கள் எல்லாம் தமிழன்கள்தான். எங்கே இவனுகள் பீ என்றும் *** என்றும் தமிழில் சொல்லட்டும் பார்ப்போம். ஆனால் இவனுகள் தக்காளி என்றும் திட்டும் சாதரணமானவர்களை டீசண்டு இல்லை என்று சொல்வார்கள்.
மை லார்ட் என்பதற்குப் பதில் "என் கடவுளே" என்று சொல்லாதவரை வலிகள் /அர்த்தங்கள் உணரப்படுவது இல்லை.
**
சொங்கரபாண்டி சொன்னதுதான் எனது நிலையும்.
//சட்டமும், நீதியும் நாகரீக உலகில் மனிதரின் அடிப்படை உரிமை. அதை மெரும்பான்மையோர் புரிந்து கொள்ளவும், பேசவும் இயலாத மொழியில் நடத்துவது சட்டமும், நீதியும் இல்லாமைக்குச் சமம். இந்தியா இன்னும் அடிப்படை உரிமை மறுக்கப் பட்ட, ஜனநாயகமற்ற காட்டுமிராண்டி நாடு என்றுதான் சொல்ல வேண்டும். //
கலைஞரை விருப்பத்திற்கு எதிர்த்து போராடும் வழக்குரைஞர்களின் பக்கம் நிற்பது சாதரணமான விசயம் அல்ல. அதுவும் இந்த சமயத்தில்.
இட ஒதுக்கீடு தொடங்கி எத்தனையோ நல்ல விசயங்கள் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய சின்ன சிந்தனையால்தான் செயல்வடிவம் பெற்றது.
உங்கள் மனதில் உள்ளதை கட்டுரையாக எழுதியமைக்கும் இங்கே பகிர்ந்தமைக்கும் நன்றி!
உயர்நீதிமன்றத்தில் தமிழ்! என்ன சிக்கல்? யாருக்கு சிக்கல்?
http://www.makkal-sattam.org/2010/06/blog-post_24.html
தமிழில் வழக்காட முடியாது...அல்லது, "தமிழில் வழக்காடலாம் ஆனால்.." கோஷ்டி ஒன்றும் இல்லை நான் :-) ஆனாலும், நமது வழக்காடு முறை மனுநீதி சோழன் காலத்து முறையை ஒற்றி வந்ததில்லை. ஆங்கிலேயர் காலத்து "Man-Made Law" அல்லது "Judge-made Law" அல்லது "Common Law" முறை ஒட்டியது. இங்கே, இலத்தீன் மொழியின் ஆதிக்கம், அளவற்றது. இன்னும் நிறைய இலத்தீன் வார்த்தை முறைகளுக்கு ஏற்ற ஆங்கில வார்த்தைகளே கண்டுபிடிக்க முடியாத போழ்து எப்படி அவற்றை தமிழில் கொண்டு வர இயலும்? For example, I strongly feel there is absolutely no closer word to Tamil's "அறம்" in English. "Virtue" is the closest, but you and I know that it doesn't do justice to "அறம்". Now, words like "mens rea" or "actus reus" etc. can have a direct "translation link" but then you cannot do justice to the "spirit" of "jurisprudence" or "justice". Let me give you another example from what you and see every Sunday at the Mass. When the "Liturgy of the Word" finishes and the "Liturgy of the Eucharist" starts, the Priest says, "சகோதரர்களே நாம் ஒப்பு கொடுக்கும் இந்தத் திருப்பலியானது எலாம் வல்ல இறைவனுக்கு ஏற்பு உடையதாகும் படி செபியுங்கள்." (I am quoting this from memory as being in the US, I hardly attend a Tamil mass, unless I come to Coimbatore :-), but I think this is how the priest says.) Now, take a look at its Latin equivalent, "Orate, fratres, ut meum ac vestrum sacrificium acceptabile fiat apud Deum Patrem omnipotentem." இதில் கூர்ந்து நோக்க பட வேண்டிய ஒன்று என்னவென்றால், "ut meum ac vestrum" (In English, MINE and YOURS) -- "என்னுடையது மற்றும் உங்களுடையது" என்று வழங்கப் பட வேண்டியது, "நாம்" என்று சப்பென்று வந்து விட்டது. அதாவது, "என்னுடையதும் உங்களுடயுதும் ஆன இத் திருப்பலி" என்று வரவேண்டியது, "நாம் ஒப்பு கொடுக்கும் இத் திருப்பலி" என்று simple-ஆகவும் சப்பென்றும் முடிந்து விட்டது. Now, I am not a Catholic priest, but I can understand the deep Theological meaning behind this proclamation that is simply lost in English as well as Tamil translation. Sure, "yours and mine" is "OURS", but Latin does not say that. It clearly distinguishes by saying "ut meum ac vestrum" -- i.e, "mine and yours" because Theologically, in a Mass, although it is a "sacrifice", the sacrifice offered by the Priest is different than what the people offer together with the priest. This subtle Theological and ontological meaning is conveyed very deeply in Latin, but is absolutely lost in a tepid "ours" or "நாம்".
My whole point is that, come out of Theology, Philosophy, and Ontology. Come to Penology or Law and Justice, where every single Latin word of "Common Law" just can't be translated without losing all of such subtle originality. Even here in the US, they attempted to rip out all the Latin possible, but it just did not work. If moving away from Latin to English is itself an impossible task, I just see how we can still mete out justice 100% by bringing in languages that just don't have direct equivalents!
In a court of law, justice and matters of law and facts are more important than linguistic supremacy. Am I wrong?
I also came across this Op-Ed, which I am afraid, is more in line to what I am thinking. இது ஒரு மாற்று கருத்து. அவ்வளவே. இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள், பிரபு uncle? http://bit.ly/deFp8q . I would like to hear from you and your readers about this.
But, trust me, I will be the happiest wherever Tamil is used more. But, for some reason, I am also falling into "yes, but.." camp that you chastise, I guess. Wa ha ha.
Thank you Rex for your valuable inputs. It requires some time to think over and to respond.
Hello Prabhu Uncle - Please take your time. Yeah, my point is not that it is not possible in Tamil. Tamil is a classical language, but not a dead language. Latin is a dead language and with that comes the awesome opportunity of not being able to "misinterpret" or "twist" a word's meaning, which is always possible in an ever-evolving language like Tamil. Besides, as I stated, our contemporary legal system is based on "Common Law" for which tomes and tomes of legal jurisprudence is clearly based on accepted legal precepts as enshrined in those fixed and rigid "Latin" terms. For example, say, "குற்றம்" -- Does that word mean, "Crime", "Civil Wrong", "Infraction," "Felony," "Misdemeanor," "Peccadillo", "faux pas"? How can all these modern "Common-Law" precepts be clearly conveyed in Tamil? Even assuming the modern Tamil corpus convener (Madras University) is able to come up with new words, how sure are we that we will not dilute the innate meaning behind definitive legal terms with our poor translation?
I have heard of many Westerners learning Russian purely to enjoy Tolstoy's writings in Russian. If literary flair demands such a de rigueur, how much more for issues of law, justice, and case-law?
That's where am coming from and will await your detailed response. Cheers.
வக்கீல் சார்,
மிக தெளிவாக கூறியிருக்கீர்கள்.
வாழ்த்துகள்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
அன்புள்ள பிரபு இராஜதுரை,
தமிழக அரசின் இணையத்தளைத்தில் பொதுமக்கள் பார்வைக்காக பொது மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளை எனது தளத்தில் வெளியிடுவது காப்பி ரைட் சட்டங்களுக்கோ அல்லது அரசின் மற்ற சட்டங்களுக்கோ எதிரானதா?
எனது இந்தப்பதிவையும்
தமிழ் நாட்டில் பள்ளிகளில் சாதி, சமயம் (மதம்) கட்டாயம் இல்லை : தமிழக அரசாணையை தரவிறக்கம் செய்து கொள்ள
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post.html
இதற்கு ரங்கன் கந்தசாமி என்பவர் எழுதியுள்ள பின்னூட்டங்களுக்கும் ஒரு சட்டப்பார்வை தேவை.
நேரம் கிடைத்தால் பார்த்து உங்களின் கருத்தைச் சொல்லவும்.
நன்றி
Kalvettu,
There is absolutely no bar in reproducing, whatever information or orders published in TN Government Website. It is not made illegal by any legislation.
.
பிரபு இராஜதுரை,
மிக்க நன்றி !
Post a Comment