போபால் வழக்கில், நீதிபதி முன்பு இருந்த வழக்கு ‘கவனக்குறைவான ஒரு செயலால், மரணத்தை ஏற்ப்படுத்துதல்’. அதற்கான அதிகபட்ச தண்டனை இரண்டு வருடங்கள். அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிக தண்டனை அளிக்க இயலாது. எனவே வேறு என்ன வகையான தீர்ப்பினை நீதிபதியிடம் இருந்து ஊடகங்கள் எதிர்பார்த்தன என்பது புரியவில்லை.
குற்றவாளிகள் புரிந்த குற்றத்தினை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304Aல் காணலாம்
’Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both’
மேற்கண்ட சட்ட பிரிவு இந்திய தண்டனை சட்டம் 1860ம் ஆண்டு இயற்றப்பட்ட பொழுது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்து 1870ம் ஆண்டு சட்ட திருத்தத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டது. மோட்டார் கார் மூலம், முதல் மரணம் ஏற்ப்பட்ட ஆண்டு 1869. எப்படியோ, மோட்டார் கார்களின் வரத்து இந்தப் பிரிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
-oOo-
முதலில் குற்றவாளிகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(II) கீழ் 10 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்படக்கூடிய கொலை இல்லை என்றாலும் தண்டனைக்கு ஏதுவான மரணத்தை விளைவித்தல் (culpable homicide not amounting to murder) என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். பிரிவு 304(II) கூறுவதாவது:
‘Whoever commits culpable homicide not amounting to murder shall be punished with imprisonment for a term which may extend to ten years, if the act is done with the knowledge that it is likely to cause death ,but without any intention to cause death, or to cause such bodily injury as is likely to cause death’
இங்கு மரணத்தை ஏற்ப்படுத்தும் நோக்கம் தேவையில்லை. ஆனால் ஒருவர் செய்யும் செயலானது மரணத்தை ஏற்ப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அது மட்டும் போதாது. அந்த செயல் ஒரு தண்டிக்கப்படக்கூடிய மரணம் விளைவித்தலாக இருத்தல் வேண்டும்.
அவ்வாறு குற்றம் சாட்டியது தவறு என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தினை அணுகினர். உச்ச நீதிமன்றம் அரசு தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், பிரிவு 304(II)ல் விளக்கப்படும் குற்றத்திற்கான கூறுகள் அவற்றில் இல்லை. ஆனால் பிரிவு 304Aன் கூறுகள் உள்ளன என்று கூறி மற்ற குற்றப் பிரிவுகளை நீக்க ஆணையிட்டது.
எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான் தண்டனை என்பது 1996ம் ஆண்டே உச்ச நீதிமன்றத்தாலேயே தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம்.
-oOo-
தீர்ப்பிலிருந்து, நஷ்டத்தில் இயங்கி வந்த தொழிற்சாலையினை மூடி இந்தோனேசியாவிற்கு எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டதால், தகுந்த பராமரிப்பு இல்லாமல் இறந்து கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையில் இவ்வளவு அபாயகரமான நச்சுப் பொருட்களை கையாண்டிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.
விபத்து நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் போபால் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை அதன் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நடக்கப் போகும் விபத்தினை துல்லியமாக எச்சரித்துள்ளதை படிக்கையில் நமது தண்டுவடம் சிலிர்க்கிறது...
“(a) It appears that it would be possible to contaminate the tank with material from the vent gas scrubber. Although the arrangement of lines connecting the tank and vent scrubber appears to be adequate to prevent back flow of liquid, it appears possible to back reactive quantities of water vapors and other gases from the scrubber to the feed tank when it is depressurized.
(b) Location of the tank inside a room and lack of water spray protection facilities create a situation where a toxic and flammable vapor cloud could be formed and confined without provision for knockdown or dispersal. There is mechanical ventilation in the room, but the same circumstances that could result in a leak or overfill (power failure, for instance) could result in the ventilation being inoperative. Also, it appears that a sizeable spill would not be readily dispersed by the system.
(c) There is some question about the adequacy of the tank relief valve to relive a runaway reaction or fire exposure, particularly since the tank has been enlarged.
(d) Manual control of filling of the tank, with no instrumentation backup, creates a possibility of accidental overfilling”
ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு பாதுகாப்பினை மேம்படுத்த செலவு செய்ய எந்த நிர்வாகம் முன் வரும். அதுவும் இந்தியாவில்! அதுவும் 25 வருடங்களுக்கு முன்னர்!!
உச்ச நீதிமன்றம், விபத்து நடந்த அன்று நிகழ்ந்தவைகளை மட்டுமே, குற்றச்செயல்களாக கருதி “அன்று அந்த தொழிற்சாலையினை இயக்கிய பொழுது அதனை இயக்கியவர்களுக்கு அதனை இயக்குவதால் மனிதர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்ற எண்ணம் (knowledge) இருந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறி பிரிவு 304(II)ஐ நீக்கியது.
சட்ட முறைகளை அறிந்தவர்கள் உச்ச நீதிமன்றம் கூறியது ஒரேடியாக தவறு என்று கூற மாட்டார்கள். ஆனாலும், மக்களின் மனநிலையை கருதி, உச்சநீதிமன்றம் ‘குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த கேள்விக்கான விடையினை வழக்கினை விசாரிக்கும் நடுவரே (Judicial Magistrate) தீர்மானிக்கட்டும்’ என்று கூறியிருக்கலாம். சாட்சிகளை பின்னர் விசாரிக்கையில் மேலும் பல உண்மைகள் வெளி வந்திருக்கலாம்.
ஏனெனில், மிக அரிதான வழக்குகளில் மட்டுமே இவ்வாறு குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை (charges) நீக்க உச்ச நீதிமன்றம் முன் வரும்.
பிரிவு 304(II)ஐ பொறுத்து தற்பொழுது செய்வதற்கு ஏதுமில்லை. இரண்டு வருடங்கள் அளிக்கப்பட்ட தண்டனையே இறுதியில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே!
இவ்வளவு பயங்கரமான நச்சுப் பொருட்கள் இருக்கையில், எவ்வித பராமரிப்பும் இல்லாமல் செத்துக் கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையினை, பாதுகாப்பு தொழிற்நுட்பத்தில் குறைபாடுகளுடன் இயக்குவதால் நச்சுப் பொருள் வெளியேறி மரணம் ஏற்ப்படலாம் என்ற அறிவு (knowledge) அதனை இயக்குபவர்களுக்கு இருந்திருக்குமா? என்ற கேள்வியினை எதிர்காலத்தில், இவ்விதமான பயங்கரங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தில் ஆராயப்படலாம்.
Prabhu Rajadurai
1 comment:
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்கு நடத்தலாமா என்ற விவாதம் சூடுபிடித்துள்ள நேரத்தில்...இந்த பதிவு அதற்கு உதவலாம்
Post a Comment