10.7.10

கே.எம்.விஜயனின் பிழைப்புவாதம்!

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரி வழக்குரைஞர்களில் ஒரு ‘சிறு பிரிவினர்’ சமீபத்தில் நடத்திய போராட்டத்தினைப் பற்றி மூத்த வழக்குரைஞர் திரு.கே.எம்.விஜயன் அவர்கள் ’தினமணி’ பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் அனுமதிக்கப்படலாமா? என்பது பற்றி தனது கருத்துகளை பதிவு செய்வதற்கு திரு.விஜயனுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், தமிழ் அனுமதிக்கப்பட வேண்டும் என்பவர்களை ‘சிறு பிரிவினர்’ என்றும் ‘அரசியலாக்கினர்’ என்றும் ‘உண்மை பேசத்துணிவில்லாத பொய்யர்கள்’ எனவும் ‘சட்டம் தெரியாதவர்கள்’ என்றும் அநாகரீகமான வார்த்தைகளில் கிண்டல் செய்வதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை.

அதே போன்ற சாக்கடை மொழியில் அவரையும் திருப்பி மற்றவர்களால் கிண்டலடிக்க முடியும் என்பதை அவர் உணர வேண்டும்.

எந்த ஒரு உரிமைக்காகவும், வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருப்பதிலும், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதிலும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஆயினும் உண்ணாவிரதம் இருந்தவர்களில் சிலரை எனக்கு தெரியும் என்ற அளவில், தங்களை உயிரை பணயம் வைக்கும் அளவில் அவர்கள் சென்றனர் என்பதை நான் அறிவேன். தமிழுக்காக இல்லையென்றாலும், அவர்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ’விரைவில் யாராவது தலையிட்டு இவர்கள் உடல் நலன்’ காக்கப்படவேண்டும் என்பதற்காக நானும் இந்தப் போராட்டத்தில் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்தேன்.

எனவே இந்தப் போராட்டத்தில் அரசியல் காரணங்கள் ஏதுமில்லை என்று என்னால் கூற முடியும். ஏனெனில், அமைச்சர் மு.க.அழகிரி அவர்களை அவமானப்படுத்தியதால் விளையும் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற அச்ச உணர்வையும் மீறி போராட்டத்தில் சிலர் பங்கெடுத்ததையும் நான் அறிவேன்.

-oOo-

தமிழுக்காக வழக்குரைஞர்களில் ஒரு ’சிறுபிரிவினர்’ போராடினர் என்று விஜயன் கிண்டலடிப்பதில்தான் இந்தப் போராட்டத்தின் முழு அவசியம் புரிகிறது. சட்டத்தை படிக்க முடிந்தாலும், ஆங்கிலத்தை படிக்க முடியாது என்ற மனப்பான்மையால், இளம் வழக்குரைஞர்களில் ஒரு பெருங்கூட்டம் உயர்நீதிமன்றத்திலிருந்தே ஒதுங்கியிருக்கையில், உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் ‘பெரும்பிரிவினருக்கு’ இந்தப் போராட்டத்தில் என்ன அவசியம் இருக்கப் போகிறது.

உலக மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில், இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஒரு சிறு பிரிவினர்தான். ஏன இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிடுகையிலும் போராடியவர்கள் ஒரு சிறுபிரிவினர்தான் என்பதை திரு.விஜயன் மறந்துவிட்டார் போலும்.

-oOo-

அடுத்தது, விஜயனின் கட்டுரை எங்கும் பரவிக்கிடக்கும், ‘நான் சட்டம் அறிந்தவன்’ என்ற ஆணவமும் ‘மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள்’ என்ற ஏளனமும்தான்.

இந்தச் சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்குப் போடவில்லை. அப்படி ஒன்று இருப்பதே தெரியாதவர்கள்தான் உயர் நீதிமன்றத்தில் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள்

என்று கீழமை நீதிமன்ற நீதிபதில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு கூறலாம் என்ற உயர்நீதிமன்ற சுற்றறிக்கையினைப் பற்றி கூறுவதிலிருந்தே இவரது இந்த மனப்பான்மையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழுக்காக போராடி வரும் திரு.சோலை சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இதற்கான பொது நல வழக்கு ஒன்றை கடந்த பெப்ருவரி மாதமே தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத் தரப்பு பதிலுக்காக நிலுவையில் உள்ளது என்பதை தனது கட்டுரைக்கு முன்பாக சற்று ஆய்வினை மேற்கொண்டிருந்தால், விஜயன் தெரிந்து கொண்டிருப்பார் (W.P.(MD)No.2394 of 2010)

’தினமணி’ பத்திரிக்கையினை வழக்குரைஞர்கள் யார் படிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் எழுதியிருக்கலாம். ஆனால் கட்டுரை இணையத்திலும் வெளியாகியுள்ளது.

அடுத்து ‘தமிழர்கள், சட்டத்தின் முன்பாக உண்மையறியாத அப்பாவிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமே இக்கட்டுரைஎன்று ஒரு ஆதங்கத்தை அதே மேட்டிமைத்தனத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்படி ஒன்றும் தெரியாத அப்பாவிகளான தமிழர்களை இவர் கருதுவதால்தான், கீழமை நீதிமன்றங்களில் 80 விழுக்காடு மனுக்கள் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்படுவதாக துணிந்து ஒரு பொய்யை இவர் கூற முயன்றுள்ளார். விஜயன் எந்த ஒரு கீழமை நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தியதில்லை. கீழமை நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பெருவாரியாக தாக்கல் செய்யப்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் மேல்முறையீடுகள், சீராய்வு மனுக்கள் போன்ற எந்த ஒரு வழக்கினையும் எனக்குத் தெரிந்தவரை விஜயன் அவர்கள் நடத்தியதில்லை. நடத்தியிருந்தால் கீழமை நீதிமன்றங்களில் பெருவாரியான தீர்ப்புகள் தமிழில் கூறப்படுவதை அறிந்திருக்கலாம்.

நான் வழக்குரைஞர் தொழிலில், எனது முதல் வாதத்தினை தமிழில்தான் எடுத்து வைத்தேன். இன்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் வாதிட்டாலும் எனது எழுத்துபூர்வமான வாதத்தினை தமிழில்தான் தாக்கல் செய்கிறேன்.

எப்படியாயினும், 20 வருடங்களுக்கு முன்பு தமிழுக்கு இடமே இல்லாதிருந்த கீழமை நீதிமன்றங்களில் இன்று தமிழ் பெருவாரியாக இடம் பெற்றிருப்பதே, தமிழால் உயர்நீதிமன்றத்திலும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதற்கு சாட்சி!

ஏன், இன்று அரசு ஆணைகள், உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படுகின்றன. விஜயன் என்ன அரசு ஆணைகள் ஆங்கிலத்தில் இருந்தால்தான் என்னால் வழக்கு நடத்த முடியும் என்று கூறுகிறாரா என்ன? அல்லது அவர் நடத்திய எத்தனை வழக்குகளில் அரசு ஆணைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பின் நடத்தினார்?

விஜயன் பங்கு கொள்ளும் நீதிப்பேராணை மனுக்களை (Writ Petition) விட கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் சட்டங்கள் நுணுக்கமாக அலசி ஆராயப்படுகின்றன. ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களையும், முன் தீர்ப்புகளையும் (Judicial Precedents) வாசித்து தமிழில் மனுதாக்கல் செய்வதிலோ, வாதிடுவதிலோ அல்லது தீர்ப்பு கூறுவதிலோ யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாது இருக்கையில், விஜயனின் ஆதங்கம் தமிழர்களுக்கானது அல்ல. மாறாக தனது பிழைப்பு சார்ந்தது என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

-oOo-

உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்று கேட்கும் வாதத்தில் உள்ள நடைமுறை ஓட்டைகளைப் பார்ப்போம். என்று கூறும் விஜயன் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும்என்ற ஓட்டை வாதத்தை வைக்கிறார்.

முதலில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரிதான் போராட்டமே தவிர தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல. ஆங்கிலத்தில் தடையின்றி பேச அல்லது தவறில்லாமல் எழுதத் தெரியாத ஒரே காரணத்திற்காக வழக்குரைஞராக தொழில் புரியும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவும், வாதங்கள் தமிழில் வைக்கப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கைகள் எளிதாக இருக்கும் என்பதாலும், வந்திருக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கு நீதிமன்றத்தில் நடப்பது புரிய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் கோரிக்கை. எனவே உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்படுவதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு அது சாத்தியமுமில்லை.

ஆயினும், தீர்ப்புகள் வேறு வேறு மொழியில் இருந்தால் முரண்படும் என்பதுதான் நகைச்சுவை. ஒரே மாதிரியான தீர்ப்புகளை ஒரே உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் இரு நீதிபதிகள் தருவதில்லை. வேறு வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் கூற முடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். எனினும், தமிழுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

-oOo-
அடுத்த வேடிக்கை, “ இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் "இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு?என்று புலம்பியிருப்பது.
இன்று கீழமை நீதிமன்றங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தில் வாதாடி தமிழில் தீர்ப்புகள் எழுதுவதிலும், தமிழில் வாதாடி ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுதுவதிலும் எவ்வித சிரமமுமில்லை என்பதை விஜயன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இன்றும் வழக்காடிகள் நேரிடையாக ஆஜராகி நடத்தும் வழக்குகளில், தமிழில்தான் வாதிடுகிறார்கள். நீதிபதிகள் யாரும் புரிதல் இல்லை என்று சொல்வதில்லையே!
சாட்சிகள், தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதனை புரிந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருவரை தூக்குமேடைக்கே அனுப்புகின்றனர். அங்கு இடைவெளிமாற்றம், புரிதல் எல்லாம் இல்லையா? உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தவறா? எதற்கெடுத்தாலும் பொதுநல வழக்கு போடும் விஜயன், உச்சநீதிமன்றத்தில் நீதி இல்லை என்று ஒரு பொதுநல வழக்கு போடட்டுமே!
விஜயன் இத்தோடு நிற்காமல் வழக்கமான உச்சநீதிமன்றத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டுமே என்ற வழக்கமான பல்லவியையும் பாடியுள்ளார். “உயர் நீதிமன்றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?”
இதனை எத்தனை முறை விளக்கினாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சுருக்கமாக கூறினால் தற்பொழுதும் ஒரு உரிமையியல் அல்லது குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றம் செல்கையில் அனைத்து ஆவணங்களும் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. ஏன், நீதிப்பேராணை மனுக்களிலும் வழக்குரை தவிர வழக்கு ஆவணங்கள் தமிழில் இருப்பதால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.
-oOo-
சட்டம் சம்பந்தமான எவ்வித வாதங்களும் இல்லாத நிலையில், ‘ இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லைஎன்ற வாதம் வேறு. தமிழர்கள் வெளிநாட்டில் பிழைப்பதற்கும் இங்கு நீதிமன்றங்கள் நடத்தப்படுவதற்கும் என்ன சம்பந்தம். ஒரு மருத்துவரோ அல்லது பொறியாளரோ வெளிநாடுகளில் சென்று தொழில் புரிய முடியும். ஆனால் இங்குள்ள வழக்குரைஞர்கள் அங்கு தொழில் புரிய முடியாது. உலகமயமாக்கலில் அது சாத்தியமானாலும், 99 விழுக்காடு வழக்குரைஞர்களுக்கு இங்குதான் தொழில். உச்ச நீதிமன்றம் செல்ல முடியாது என்று கூறியிருந்தால் பொருத்தமாயிருக்கும்.
நீதிமன்றங்களில் தமிழ் என்பது வழக்குரைஞர்களின் தொழில் சார்ந்த விடயம் மட்டுமல்ல. வழக்காடிகளின் உரிமை சார்ந்த விடயமும் கூட. எனவே ஆங்கிலம் தெரிந்தால் அமெரிக்கா செல்லலாம் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
தமிழ் முழுமையான அளவில் இங்கு ஆட்சி மொழியானால், தமிழகத்தில் வசிக்கும் வேறு மாநிலத்தை சார்ந்தவர்களின் அடிப்படை உரிமைகளை அது பாதிக்கும் என்பதும் சொத்தை வாதம். தமிழ்தான் உயர்நீதிமன்ற மொழி என்று கேட்கவில்லை. தமிழிலும் வாதிட அனுமதி கொடுங்கள் என்பதுதான் கோரிக்கை என்ற பின்னரும் ஏன் இந்த சந்தேகம் என்பது புரியவில்லை.
இறுதியாக, வழக்கமான உள்கட்டமைப்பு முட்டுக்கட்டைகள். "எல்லா சட்டங்களின் தமிழாக்கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லாமல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது
தமிழ் வழக்காடு மொழியாவதற்கு இவை ஏன் தேவை என்பது புரியவில்லை. இன்று எந்த சட்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வைத்து கீழமை நீதிமன்றங்களில் வாதிடுகிறார்கள். ஏன் விஜயனே சட்ட நுணுக்கம் சம்பந்தமான இந்தக் கட்டுரையினை தமிழில்தானே எழுதியுள்ளார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு இவ்வாறு கூறுகிறது என்று கூறவில்லையா? சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு என்று இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டவில்லையா?
மற்றவர்களை பொய்யர்கள் என்றும் பேதமை என்றும் குருட்டு நம்பிக்கை என்றும் ’செம்மொழி’யில் சட்டம் சம்பந்தமான ஒரு கட்டுரையில் இவரால் சாட முடிகிறதே!
விஜயனின் அனைத்து வாதங்களையும் விட ‘நீதிமன்றத்தில் தமிழ் அனுமதிக்கப்படுவதால், பாதிப்படையப் போவது பொதுமக்கள்தான்’ என்று இறுதியில் அவர் அச்சுறுத்துவது அவரது பிழைப்புவாதம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
ஊடக பலம் அவர் வசம் உள்ளது. யாரையும் பொய்யர் என்று அவர் குற்றம் சாட்டலாம். சட்டம் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடலாம். ஏன், தனது நலத்தை பொதுமக்கள் நலம் என்று அச்சுறுத்தலாம்...

மதுரை
101710

5 comments:

PRABHU RAJADURAI said...

http://paraneetharan-myweb.blogspot.com/2010/07/blog-post_06.html

திரு.கே.எம்.விஜயனின் கட்டுரை இந்த வலைப்பக்கத்தில் உள்ளது

gulf-tamilan said...

நல்ல பதில் இந்த இடுகையை ஏன் நீங்கள் தினமணிக்கு அனுப்பக்கூடாது? அனுப்பினால் வெளியிட வாய்ப்பு உள்ளது.

Anonymous said...

சரியான நேரத்தில் சரியான பதிவு. நன்றி.

Gopalan Ramasubbu said...

நல்ல பதிவு. இந்த விசயத்தில் எனக்குள்ள ஒரு சந்தேகம்..தமிழ் வழக்காடுமொழியாகும்போது..மற்ற மாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் நீதிபதிகள் எவ்வாறு அதைப் புரிந்துகொண்டு நீதிவழங்குவார்கள்? டெக்னாலஜி வளர்ந்துவிட்டது...நேரடி மொழிமாற்று சேவைகள் உபயோகப்படுத்தாலாம் என்பது தெரியும்..ஆனாலும் இந்த விசயத்தில் உங்களின் பதிலை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

விஜயனின் கட்டுரையின் தொனியுடன் சில இடங்களில் நான் ஒத்துப்போகவில்லை.அவர் எழுப்பியுள்ள விவாதப்புள்ளிகள் முக்கியமானவை.

போன ஆண்டே திண்ணையில் இது பற்றி எழுதியுள்ளேன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20703292&format=print


ஆங்கிலம்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு/தீர்ப்பு எழுதும் மொழியாக இருக்க வேண்டும்.
தமிழ் அந்த அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை.இது தவிர நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன. அன்றும்,இன்றும் இதுதான் என் கருத்து.