20.6.10

நீதிமன்றத்தில் தமிழ்!


என்ன அர்த்தத்தில் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை.

ஏனெனில் உயர்நீதிமன்றம் தவிர்த்து மற்ற அனைத்து கீழ் நீதிமன்றங்களிலும் தமிழ் அனைத்து வகைகளிலும் பயன்பாட்டிலுள்ளது. தமிழில் வழக்குரைகள் தாக்கல் செய்வதிலிருந்து தீர்ப்பு வழங்குவதை வரை முழு அளவில் அனுமதிக்கப்படுகிறது.

1956ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அலுவல் மொழி சட்டத்தின்படி தமிழ்தான் கீழ் நீதிமன்றங்களின் அலுவல் மொழி. ஆயினும் அதனை செயலுறுத்தும் அறிவிப்புகள் (Notification) திமுக ஆட்சிக்காலத்தில்தான் வெளியிடப்பட்டு 1976ம் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982ம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றங்களிலும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதன்முதலில் தமிழ் அறிமுகப்படுத்தப்படுகையில் பலத்த கேலிக்கும், கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டது. ஆனால் 25 வருடங்கள் கடந்த சூழ்நிலையில், தமிழ் நிலையான ஒரு இடத்தினை தற்பொழுது பிடித்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் நீதிமன்ற வரலாற்றை 25 ஆண்டுகள் பின்னால் தள்ள நினைக்கிறாரா?

-oOo-

உயர்நீதிமன்றத்தில் தமிழ் கூடாது என்று தமிழக அரசின் கோரிக்கையினை நிராகரித்த முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் ஏற்றுக் கொள்ள்வியலாத ஒரு காரணத்தை கூறியுள்ளார். 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வந்து விட்டால் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்கையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும் என்றும், அதனால் ஏற்ப்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாது' என்றும் கூறியதாக ஹிந்துவில் கூறப்பட்டுள்ளது.

முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரு வழக்கின் வழக்குரைகள் 10 பக்கம் இருக்கலாம். சாட்சி விசாரணை 20 பக்கம் இருக்கும். தீர்ப்பு 20 பக்கம் இருக்கும். மேல் முறையீட்டு தீர்ப்பு 20 பக்கம் இருக்கும். உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு தீர்ப்பு, ஐந்து பக்கங்களுக்கு மிகாது. ஆக இன்று கூட உச்ச நீதிமன்றம் செல்லும் ஒரு உரிமையியல் வழக்கின் 90 சதவீத ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக ஆனாலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த நீதிபதியும் தமிழில் தீர்ப்பு சொல்லப்போவதில்லை. எனவே இன்றுள்ள நிலைதான் நீடிக்கும்.

குற்றவியல் நீதிமன்றங்களில் முதல் தகவல் அறிக்கை, குற்றச்சாட்டுரை (Charge Sheet) தொடங்கி சாட்சி விசாரணை தீர்ப்பு அனைத்தும் இன்று தமிழில்தான் உள்ளன. அவை உச்ச நீதிமன்றம் செல்கையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

தலைமை நீதிபதி, உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் ஏதோ காரணம் சொல்ல வேண்டும் என்று பொருந்தாத ஒரு காரணத்தை கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதை மத்திய அரசு விரும்பாததற்கு காரணம் வேறு. காபினட் மந்திரி பதவி பெறுவது போல இது சுலபமான காரியம் அல்ல என்பது கலைஞருக்கும் தெரியும்.
அதனால்தான், சக வழக்குஞர்களிடம் நான் குறிப்பிட்டேன். ‘தெலுங்கான போராட்டம் சாதிக்காததை நீங்கள் சாதித்துவிட முடியாது என்று...

பிரபு ராஜதுரை
மதுரை
20/06/10

3 comments:

கல்வெட்டு said...

//உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதை மத்திய அரசு விரும்பாததற்கு காரணம் வேறு. //

பிரபு,
என்னவென்று சொல்ல இயலுமா?
தெரிந்து கொள்ளும் ஆவலே.

Prabhu Rajadurai said...

எனது கணிப்பு யூகமே! எனது அனுமானம் என்னவென்று கடைசி வரியில் சொல்லியிருக்கிறேன். மேலும் சில பதிவுகள் தமிழ் பற்றி எழுத வேண்டியுள்ளது. பார்க்கலாம்.

ஹரன்பிரசன்னா said...

பாஜக தலைவர் என்று தெரிந்த பின்பும், 25 ஆண்டுகள் பின் தங்கி இருக்கிறாரா என்று சந்தேகமாக நீங்கள் கேள்வி கேட்பது சரியல்ல. :-)