‘உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்’ என்ற கேள்விக்கு ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஏனெனில் தமிழ் இங்கு பேசப்படும் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இருக்கும் பட்சத்தில், வழக்காடு மொழியாகவும் இருப்பதுதான் இயல்பானது.
ஆங்கிலம் வழக்காடு மொழியாக தமிழகத்தில் இருப்பதுதான் விதியினை மீறிய செயல். அந்த விதிவிலக்கிற்கான காரணங்களுக்குள் தற்பொழுது யாரும் செல்லவில்லை. உலக அளவில் நமது தொடர்பின் எல்லைகளை விரித்துக் கொள்ளும் வகையிலும், இந்திய அளவில் ஒரு தொடர்பு மொழி என்ற வகையிலும் ஆங்கில பயன்பாட்டிற்கான முக்கியத்துவத்தைக் கருதி, நீதிமன்றங்களில் அதன் இருப்பிடத்தை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.
ஆனால், தமிழுக்கும் ஏன் இடமில்லை என்பதுதான் கேள்வி?
‘தமிழுக்கு இங்கு இடமில்லை’ என்று வைராக்கியம் கொண்டவர்கள் கூட, அதற்கான தகுந்த காரணத்தை கூற முயலாமல், ‘தமிழ் இருக்கலாம். ஆனால்...’ என்றுதான் தங்களது வாதத்தினை வைக்க முன் வருகிறார்கள். தமிழ் இருக்கலாம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்டால், பின் ஏன் அடுத்த கட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதில் மெத்தனம் என்பது புரியவில்லை. அங்குதான் இந்த ‘ஆனால்...’ களுக்குப் பின் உள்ள நோக்கம் வெளிப்படுகிறது.
இதே ‘ஆனால்...’கள்தாம் இடப்பங்கீடு விடயத்திலும், அதனை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த முன்னிறுத்தப்பட்டன. ‘இடப்பங்கீடு தேவைதான். ஆனால் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவீதம் என்ற புள்ளியியல் விபரங்கள் இல்லாத வகையில் அதனை எப்படி செயல்படுத்துவது’ என்பது போன்ற ‘ஆனால்’கள்தாம் அவை. புள்ளியியல் விபரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட அதே குரல்கள்தாம் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியா, என்றும் புலம்புகின்றன.
இதற்கெல்லாம் காலம், நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் எப்படி செயல்படுத்தினார்களோ அப்படியே செயல்படுத்த வேண்டியதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்.
தமிழ் விடயத்திலும், ஆனால்... என்று இழுப்பவர்கள்களால்தான் பிறச்சினை. தமிழ் கூடாது என்று கூறுபவர்களை எதிர்கொள்வது எளிது. ஆனால்... என்று இழுப்பவர்களிடம்தான், எளிதில் ஏமாறிவிடுவோம். ஆனால் என்பவர்களுக்கு கூடாது என்று கூறுபவர்களை விட வேறு நோக்கம் இல்லை என்பதுதான் உண்மை. இல்லையெனில், ‘அது என்ன புடலங்காய் உள்கட்டமைப்பு’ என்று அடுத்து ஆக வேண்டியதை பார்த்திருப்பார்கள்.
ஏனெனில், தமிழுக்காக என்று உருவாக்க முடியாத உள்கட்டமைப்பு என்று பெரிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லை. நமது முன்னாள் தலைமை நீதிபதி உள்கட்டமைப்பை பற்றி கூறியது ’ஒரு கண்கட்டி வித்தை’ என்று நான் உணர்ந்திருந்தேன். தமிழில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று கூறியது முதல் முட்டுக்கட்டை. மாவட்ட நீதிமன்றங்கள் முதல் முன்சீப் நீதிமன்றங்கள் வரை எந்த புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்க்காமல், தமிழில் வழக்குகள் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.
இந்திய தண்டனைச் சட்டத்தையோ, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தையோ தமிழில் மொழிபெயர்த்தாலும், அது ஒரு படிப்பனுபவமாக மட்டுமே பயன்படுமேயன்றி, நீதிமன்றத்தில் அதனை மட்டுமே அடிப்படையாக வைத்து வழக்கு நடத்தப்பட இயலாது. சட்டப்பிரிவுகளின் ஒவ்வொரு வார்த்தையும் என்ன அர்த்தத்தில் அந்த வாக்கியத்திலும், பிரிவிலும் பயன்படுத்தப்படுகின்றது என்று பல சமயங்களில் நீதிமன்றங்களில் வாதிடப்படுகையில், மொழிபெயர்த்த சட்டத்தினை வைத்து அதனை விளக்க (interpret) முடியாது. எனவே, தமிழில் புத்தகங்கள் இல்லை என்பது ஒரு தடையே அல்ல!
புதிதாக கணணிகள் வேண்டும் என்று கூட கூறப்படுகிறதாம். எத்தனை மொழிகளையும் எளிதாக தட்டச்சு செய்யும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்பட்ள்ள சூழ்நிலையில், கணணி ஒரு பிரச்னையே இல்லை. தமிழில் வழக்குரை (pleadings) தாக்கல் செய்யப்படும் பொழுது வழக்குகளின் புள்ளியியல் விபரங்களை சேகரிப்பதில் பிரச்னை இருக்கலாம். அதனைக் கூட வழக்குரை (pleadings) தமிழில் தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்குரை தலைப்பு (cause title) மற்றும் வழக்குரை அட்டை (docket) ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூட விதி வகுப்பதால், தீர்க்கலாம். இதனை எழுதும் இந்த அரை மணி நேர சிந்திப்பில் இந்த வழிமுறை புலப்படுகையில், நீதிமன்ற நிர்வாகத்தில் கற்றுத் தேர்ந்த அனுபவம்மிக்க அலுவலர்களால் எளிதில் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.
கணணியில், ஃபோனடிக் முறை தட்டச்சு இருப்பதால், தமிழ் தட்டச்சர்கள் தேவை என்பது எல்லாம் இல்லை. ஆனாலும் கூட, நீதிபதிகள் தாங்களாகவே விரும்பி தமிழில் தீர்ப்பு பகர விரும்பினால் மட்டுமே தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் தேவை இருக்கும். தகுந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையில், நீதிபதிகள் ஆங்கிலத்திலேயே தீர்ப்புகளை கூறலாம். தமிழும் வழக்காடு மொழி என்பதால், தமிழில்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்று யாரும் நீதிபதிகளை கட்டாயப்படுத்த முடியாது. எப்படியாயினும், உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தமிழில் தீர்ப்பு பகர குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆகலாம்.
தமிழ் இருக்கலாம்தான் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட சூழ்நிலையில் தமிழ் தெரியாத நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்படுகிறார்களே என்ற வாதம் அர்த்தமற்றது என்றாலும், ஏன் தமிழ் தெரியாத நீதிபதிகள் இங்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அதற்கு பதில். நேர்மையான, துணிச்சலான நீதிபதிகளுக்கு அந்த நேர்மைக்கு தண்டனையாகவும், அல்லது நேர்மையற்ற நீதிபதிகள் ஏதாவது பிறழ்ச்சினையில் சிக்கிக் கொள்கையில் அதிலிருந்து அவரை விடுவிக்கும் (relieve) நோக்கத்துடனும்தானே நீதிபதிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார்கள். உண்மையான அந்த காரணத்திற்கு எந்த சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்க இயலும்.
தலைமை நீதிபதி வெளிமாநிலத்திலிருந்து வருவது என்பதும் உபயோகமற்ற ஒரு சடங்கு என்றாலும், அவரைப் பொறுத்தவரை வேண்டுமானால் தனக்கென ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்துக் கொள்ள வேண்டியதுதான். எட்டு கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான சம்பளம் ஒரு பொருட்டல்ல.
உச்ச நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ள மொழிபெயர்ப்பு பிரச்னையும், ஒரு தடையல்ல. ஏனெனில், தற்பொழுது கூட ஒரு உரிமையியல் வழக்கோ அல்லது குற்றவியல் வழக்கோ, உச்ச நீதிமன்றம் செல்லும் பொழுது அனைத்து கீழமை நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற தீர்ப்பு, வழக்கு ஆவணங்களில் பத்து சதவீத இடமே பிடிக்கிறது. ஏன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனுக்களிலும் () அனைத்து ஆவணங்களும் தமிழில் உள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் செல்கையில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது புதிதாக எழும் பிரச்னையல்ல.
இவை எதுவும் சாத்தியமில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப்படும் வரை தமிழில் வழக்குரைகளை ஏற்றுக் கொள்வதையாவது நிறுத்தி வைக்கலாம். ஆனால், எதுவுமே இல்லையென்பதில்தான் இந்த ஆனால்கள் மீது சந்தேகம் ஏற்ப்படுகிறது. அவர்கள் உண்மையில், தமிழ் கூடாது என்று கூற வருகிறார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தமேயன்றி வேறு அல்ல.
பலர் நேரிடையாக ‘அது என்ன தமிழ் வந்தால் நீதிமன்றத்தின் டிகோரம் என்னாவது, டீசன்ஸி என்னாவது?’ என்கிறார்கள் சமூக நீதி பிரச்னையில், ‘ரிசர்வேஷன் கூடாது, மெரிட்தான் கரெக்ட்’ என்று அதனால் பயனடைந்த அல்லது பயனடையப் போகும் ஒரு கூட்டம் சலித்துக் கொள்ளும். அதே போன்று இங்கும், தமிழில் வழக்காடுவதால், பயன்பெறப் போகும் நபர்கள்தாம் மற்ற ஆனால்களைப் போல அல்லாமல் நம்மிடம் நேரிடையாக இப்படி நக்கலடிக்க முற்ப்படுகிறார்கள்.
நேற்று கூட என்னிடம் அப்படிக் கேட்ட என்னிடம் ஒரு வழக்கினை நடத்த ஒப்படைக்க வந்த ஒரு ஜூனியர் வழக்குரைஞரிடம் ‘என் கடவுளே என்று இறைஞ்சுவது எப்படியிருக்கிறது’ என்றேன். ‘தாய்மொழியில் கேட்டால் வார்த்தையின் அர்த்தம் அதன் முழு வீரியத்தோடும் மனதை துளைக்கிறது அல்லவா? வாதங்களை தமிழில் வைப்பதன் பயன் அதுதான்’ என்றேன்
எது எப்படியோ, இந்த சட்டச்சிக்கல், கட்டமைப்புச் சிக்கல் அனைத்தையும் சற்றுத் தள்ளி வைத்து சிந்திதோமென்றால், நமது உயர்நீதிமன்றத்தினை அணுகும் 90 சதவிகித வழக்காடிகள் தங்களது பிரச்னைகளை தமிழில் சிந்திக்கிறார்கள். தமிழில் ஆவணங்களை எழுதுகிறார்கள், தமிழில் சண்டையிடுகிறார்கள். தமிழில் தங்களது வழக்குரைஞருடன் விவாதிக்கிறார்கள், தமிழில் தங்களது சாட்சிகளை விசாரிக்கிறார்கள். அப்படியிருக்கையில், முக்கியமாக அந்த 90 சதவிகிதத்தில் 80 சகவிகிதம் வழக்காடிகளுக்கு ஆங்கிலம் தெரியாத சூழ்நிலையில் ஏன் தங்களது வழக்குகளை தமிழில் நடத்தக் கூடாது? அதுதான் நியாயமென்றால், அதுதான் சிறந்தது என்றால் அதனை ஏன் ஆனால்களால் தள்ளிப்போட வேண்டும்.
ஆனால்களை தவிர்ப்போம். தமிழுக்கு ‘ஆம்’ என்போம்.
பிரபு ராஜதுரை