19.3.10

நாம் கொடுத்த கோடியும்...கிடைக்கப் போகும் லட்சமும்!

டாக்டர் சுரேஷ் மஹாஜன் இந்தியர். ஆனால், இந்தியாவில் ஆரம்பித்த தனது மருத்துவ தொழிலை அமெரிக்காவில் தொடர்ந்து, பின்னர் அமெரிக்க குடிமகனாக மாறியவர். அமெரிக்க பெண்ணான பட்ரீசியாவை மணந்து, மூன்று குழந்தைகளுக்கு தந்தையான மஹாஜன் தனது நாற்பத்தி ஏழாவது வயதில், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.

1995ம் வருடம் தனது பெற்றோர்களை காண இந்தியா வந்திருந்த மஹாஜன் பயணம் செய்த கார் மீது லாரி மோதிய விபத்தில் மஹாஜன் உயிரிழக்க நேரிட்டது.

பட்ரீசியா, மஹாஜனின் மரணத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தார். விபத்தினை ஏற்ப்படுத்திய லாரியை காப்பீடு செய்திருந்த நிறுவனம், யுனைட்டட் இந்தியா இன்ஸுரன்ஸ் கம்பெனி (United India Insurance Co.Ltd.,)

விபத்து நடப்பதற்கு முந்தைய வருடமான 1994ம் வருடத்தில் மஹாஜனின் வருட வருமானம் 9லட்சம் அமெரிக்க லாடர்கள் என்று கூறப்பட்டாலும் அவரது நிகர வருமானம் (take home salary) 3,39,445 டாலர்கள் என்று கண்டறியப்பட்டது.

பலபடிகளைக் கடந்து, வழக்கு இறுதியில் சென்ற இடம் உச்ச நீதிமன்றம். அங்கு மஹாஜனனின் மரணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு ரூ.6,78,89,100/- இந்த தொகையானது வ்ழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து 9% வருட வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டியது.

மஹாஜன் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் 2,50,000 அமெரிக்க லாடர்கள் இந்த இழப்பீடு தொகையில் கழிக்கப்பட வேண்டும் என்ற யுனைட்டட் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் வாதம் நிராகரிக்கப்பட்டது. (United India Insurance Co.Ltd., Vs Patricia Jean Mahajan 2002 (6) SCC 281)

1995ம் ஆண்டு நிகழ்ந்த மரணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை சுமார் 7 கோடி இந்திய ரூபாய்கள். இன்றைய பண மதிப்பில் சுமார் சுமார் 20 கோடி இருக்கலாம். மேலும் பத்து ஆண்டுகள் கழித்து சுமார் 30 கோடியை தொடலாம்.

***

அமெரிக்கரான பட்ரீசியாவிற்கு கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகைக்காக யுனைட்டட் இந்திய இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட கிளையில் அதன் அனைத்து வாடிக்கையாளர்களும் செலுத்திய பிரீமிய தொகை பயன்படுத்தப்பட்டதாம்.

ஒரு வேளை மஹாஜனைப் போல பத்து அமெரிக்க மருத்துவர்கள் இறந்திருந்தால், வேறு வழியில்லை. பத்து கிளைகளின் பிரீமியத் தொகையை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில், மோட்டார் வாகன விபத்துகளில் உயர்ந்த பட்ச இழப்பீடு என்பது கிடையாது. காப்பீடு நிறுவனங்களும் தாங்கள் கொடுக்க வேண்டிய அதிக பட்ச இழப்பீடு இவ்வளவுதான் என்று வரையறுக்க இயலாது.

எனவே, அமெரிக்கரான மஹாஜன் இந்தியாவில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் இறந்ததால், வளரும் நாடான இந்தியாவின் நிறுவனம் ஒன்று அளித்த இழப்பீட்டு தொகை...1995ல் சுமார் 7 கோடி!

வருடம் 2020 என்றால் 30 கோடி இருக்கலாம்.

***

அதே 2020ம் ஆண்டு, அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியாவில் நிர்மாணித்து, இயக்கும் அணு உலையில் ஏற்ப்பட்ட விபத்து ஒன்றினால், மஹாஜன் அளவிற்கு சம்பாதிக்கும் இந்திய மருத்துவர் ஒருவர் இறந்து போனால்...அமெரிக்க நிறுவனம் அவரது மனைவிக்கு அளிக்கும் இழப்பீடு 30 லட்சம் கூட இல்லாமல் போகலாம். அணுக்கரு இழப்பிற்கான சிவில் கடப்பாடு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) என்ற சட்டம் நமது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால்...

இந்தச் சட்டம் அணு உலை விபத்தால் ஏற்ப்படும் இழப்புகளுக்கு தர வேண்டிய அதிக பட்ச இழப்பீட்டினை நிர்ணயிக்கும். அதாவது மொத்த இழப்பீடு சுமார் 2000 கோடி. அதுவும் அணு உலையை நிர்மாணிக்கும்/ இயக்கும் நிறுவனம் தர வேண்டிய அதிக பட்ச தொகை சுமார் 500 கோடி மட்டுமே. மீதி, இந்தியர்களின் வரிப்பணத்திலிருந்து தரப்பட வேண்டும்.

உதாரணமாக, போபால் விசவாயு விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டும் சுமார் 2500 நபர்கள். செர்னோபில்லில் அதிகம் இருக்கலாம். அப்படி ஒரு விபத்து இந்தியாவில் நடந்தால், அமெரிக்க நிறுவனம் இந்திய மஹாஜன்களுக்கு கொடுக்கும் இழப்பீடு சுமார் 20 லட்சத்தை தாண்டாது.

மேலிருந்து கீழ் நோக்கி எதுவும் பாயலாம்...பணம் மட்டும் பாயாது!

மதுரை
19/03/10

18 comments:

நடராஜன் said...

சம்பந்தமில்லாத இரு விஷயங்களை ஒப்பிடுகிறீர்கள்.

அணு உலை விபத்து நடந்தால் தலைக்கு ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என கூட சட்டம் போட்டுகொள்ளலாம். போட்டால் இன்சூரன்சு பிரீமியம் தொகை அதற்கேற்ப அதிகரிக்கும். இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படும் அணு உலைகளின் விலையும் அதற்கேற்ப அதிகரிக்கும். என்ன சட்டம் போட்டாலும் அது பயனாளிகள் அதிக மின்சார கட்டணம் செலுத்துவதில் வந்து முடியும்.அதிக நஷ்ட ஈட்டு தொகை தரவேண்டும் என சட்டம் போட்டால் இன்சூரன்சு கம்பனிகளுக்கு தான் கொண்டாட்டம். இந்தியர்களின் மின்சார பில்லில் கணிசமான பகுதி இன்சூரன்சு நிறுவனங்களுக்கு செல்லும். அதிக மின்சார கட்டணம் செலுத்த இருக்கும் மக்களுக்கு தான் திண்டாட்டம்.

PRABHU RAJADURAI said...

நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளுக்கும் அதனை தயாரிப்பதற்கான காப்பீட்டினை உள்ளடக்கியே விலை நிர்ணயிக்கப்படுகிறது. அணு உலைக்கும் காப்பீட்டினை உள்ள்டக்கி விலை நிர்ணயித்தால், அதற்காக அதிகமாக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றால்....அணு உலை மின்சாரம் மலிவானது என்று இது வரை கூறப்பட்டது மோசடியா?

ஏன் மோட்டர் வாகன விபத்துக்கு இழப்பீடு இல்லை என்றால்...இன்றுள்ள கட்டணத்தை விட பாதி கட்டணத்தில் பேருந்துகளை இயக்க முடியும். மக்களுக்கு கொண்டாட்டம்தானே!

எப்படியோ எனது கருத்து மேலோட்டமானதுதான். வரைவு சட்டம் வெளியிடப்பட்டால் மேலும் தெளிவு கிடைக்கலாம்.

உங்கள் கருத்துக்கு நன்றி!

Natarajan said...

அணுமின்சாரம் மலிவானதா இல்லையா என்பது அதற்கு நாம் நிர்ணயிக்கும் காப்பீட்டு தொகையை பொறுத்தே அமையும்.

டேம் உடைந்து வெள்ளம் வந்து சுற்றுவட்டாரம் முழுவதும் அழியும் என்பதால் அதற்கு அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தலைக்கு ஒரு கோடி அளவுக்கு இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும் என சட்டம் போட்டால் மேட்டுர் மின்சாரம் அணு மின்சாரத்தை விட விலை அதிகமாகிவிடும்.அப்படி சட்டம் இல்லாததால் புனல் மின்சாரம் விலை குறைவானதாக உள்ளது.

பேருந்தில் போவது ஒன்றும் கொண்டாட்டமான விஷயம் இல்லை.அதை விட பைக்கில், காரில் போவதுதான் மக்களுக்கு உவப்பானது.அதற்கு வழி இல்லாதவர்கள் தான் பேருந்தில் போகிறார்கள்.பெரும்பாலான மக்களை காரில் போக வைக்கும் அளவுக்கு வாழ்க்கைதரம் உயர்ந்தால் தான் நாட்டுக்கு நல்லது.

Natarajan said...

////ஏன் மோட்டர் வாகன விபத்துக்கு இழப்பீடு இல்லை என்றால்...இன்றுள்ள கட்டணத்தை விட பாதி கட்டணத்தில் பேருந்துகளை இயக்க முடியும். மக்களுக்கு கொண்டாட்டம்தானே!////

முந்தைய பின்னூட்டத்தில் இந்த உதாரணத்தை தவறாக புரிந்து கொண்டு பதில் அளித்துவிட்டேன்.

இந்திய கோர்ட்டுகளில் மோட்டார் வாகனவிபத்துக்கு தலைக்கு 30 லட்சம் நஷ்ட ஈடு தர ஆரம்பித்தால் மோட்டார் இன்சூரன்சு ப்ரீமியம் சும்மா ஜிவ்வென ஏறிவிடும்.நீங்கள் 30 லட்சமே போதாது என்கிறீர்கள். சாலை விபத்துகளுக்கு தலா 1 கோடி நஷ்ட ஈடு என கோர்ட்டு தீர்ப்புகள் வர ஆரம்பித்தால் மோட்டார் இன்சூரன்சு ப்ரீமியம் எங்கேயோ போய்விடும்.யாராலும் பைக் வாங்கி ஓட்ட முடியாது.

PRABHU RAJADURAI said...

ஒவ்வொன்றாக நான் விளக்கமளித்துக் கொண்டிருந்தால், மற்றொரு பதிவு எழுத வேண்டியிருக்கும்.

மேட்டூர் அணை உடைந்து மக்கள் இறந்து போனால், அதற்காக அரசு மக்களுக்கு தீங்கியல் சட்டத்தின் கீழ் இழப்பீடு தர வேண்டும். அதற்கு அதிகபட்ச வரம்பு கிடையாது.

அணை உடைந்தது கவனக்குறைவினால் அல்ல என்றும் கூற முடியாது. இதனை strict liability என்பார்கள். Rylands Vs Fletcher என்ற ஆங்கிலேய தீர்ப்புதான் இதற்கு முன்னோடி!

அரசு நினைத்தால் அதற்கான காப்பீடு செய்து கொள்ளலாம். அணையில் அணு உலையை விட ரிஸ்க் குறைவு என்பதால் பிரீமியம் குறைவாகவே இருக்கும்.

பேருந்து என்று நான் கூறியது. பைக் கார் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

PRABHU RAJADURAI said...

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி வாகன விபத்துகளுக்கு 30லட்சம் என்ன, 30 கோடி கூட தர வேண்டியிருக்கும் என்பதை நான் சுட்டிக்காட்டிய வழக்கிலிருந்தே தெரியும். மோட்டார் வாகன விபத்து இழப்பீடுகளுக்கு அதிகபட்ச வரம்பு கிடையாது!

இழப்பீடு அவரவர் வருமான இழப்பினை வைத்து கணக்கிடப்படும்.

இதனை Unlimited Liability என்கிறார்கள்.1989க்கு முன்பு காப்பீடு நிறுவனங்கள் நாங்கள் அதிக பட்சம் இவ்வளவுதான் தர முடியும் என்று கூறமுடியும். தற்பொழுது முடியாது.

மோட்டார் வாகன விபத்து காப்பீடு பற்றி ‘பின் தொடரும் ஆபத்து’ என்று தொடர்ச்சியாக சில பதிவுகள் எழுதியுள்ளேன்.

Anonymous said...

Regarding atomic power, a nuclear accident can affect persons who are living hundreds of miles away from the plant.Why should the liability be restricted and why should the govt. bear the burden.
Risk assessment and the probability of the accident happening will also be taken into account in deciding the insurance premium. The court will strike down the proposed bill because it
favors one industry and limits its liability.

மரா said...

நல்ல உருப்படியான பதிவுதான்.அறிமுகப்படுத்திய கிருஷ்ணமூர்த்தி சார் க்கு நன்றி.

அமர பாரதி said...

//இழப்பீடு அவரவர் வருமான இழப்பினை வைத்து கணக்கிடப்படும்// அப்போ நீங்க பதிவில் சொன்ன விஷயம் (அதிக இழப்பீடு) அடிபட்டு விடுகிறதே. மஹாஜனுக்கு எவ்வளவு வருமானம் என்பதை வைத்துத் தானே அவர் மனைவி இழப்பீடு கோரினார்

PRABHU RAJADURAI said...

"அப்போ நீங்க பதிவில் சொன்ன விஷயம் (அதிக இழப்பீடு) அடிபட்டு விடுகிறதே"

நீங்கள் கூறுவது சரிதான். விபத்தில் ஒரு மஹாஜன் மட்டுமே இறந்தால் 30 கோடி இழப்பீடு பெறுவது சாத்தியமே. ஆனால் 2500 மஹாஜன்கள் இறந்தால் சாத்தியமில்லை.

தனிப்பட்ட நபர்களுக்காகவும் அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்க முடியும்.

உதாரணமாக 1989க்கு முன்பு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு இவ்வாறு தனிப்பட்ட உச்ச வரம்பு காப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 56 பயணிகளுக்கு மிகாமல் அதிகபட்சம் ஒவ்வொரு பயணிக்கும் 50,000 என்று நிர்ணயிக்க முடியும்.

எனவே பாதிக்கப்படும் ஒரு பயணிக்கு காப்பீடு நிறுவனம் 50,000 அதிக பட்சம் தரும். அதற்கு மேலான இழப்பீட்டினை வண்டி உரிமையாளர் தர வேண்டும்.

சட்டத்தின் முழு வடிவம் என்ன என்பது எனக்குத் தெரியாது. இந்தப் பதிவு ஒரு எச்சரிக்கையாகவே!

Subu said...

திரு பிரபு ரஜதுரை அவர்களுக்கு

வணக்கம். என்னிடம் இருந்த உங்களது மினஞ்சல் முகவரி தொலைந்ததால் இங்கே பின்னூட்டாய் இடுகிறேன். இந்த இடுகைக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டு. ஆயினும் கிரிமினல் சட்டம் சம்பந்தமானது. தாங்கள் பதிலளிக்க இயலுமாயின் மிக்க நன்றி

1. ஒரு பெண் கொடுத்த டவுரி புகாரில், கணவனின் தந்தையும், கணவனின் தாயும், சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்

2. மார்ச் 30 சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

3. செய்திப்படி,
- திருமணம் நடந்தது முத்துக்காட்டில்.
- பெண்ணின் பிறந்த இடம் புதுச்சேரி.
- பெண் புகுந்தவீடு / வாழ்ந்த இடம் செக்கந்திராபாத்.

ஆனால் டவுரி புகாரின் பெயரில் கீழ்பாக்கம் போலீசார் விரைந்து சென்று !! தாய் தந்தை சகோதரி என்று எல்லோரையும் சிறைப்பிடித்ததாய் செய்தி :-(

4. ஏன் சார்..இதுக்கெல்லாம் ஜூரிஸ்டிக்ஷன் கிடையாதா ?

5. இல்லை கீழ்பாக்கம் தான் தமிழகத்தில் மேல் நிலை போலீஸ் ஸ்டேஷனா ?

6. இல்லை அய்யோ பாவம் 2 கோடி சொத்துக்காரரின் பெண் என்பதாலும், பொண்களுக்கே உள்ள தனிச்சலுகையாலும் யார் வேணுமினாலும் அம்மா அப்பாவை சகோதரியை வெரும் புகாரின் பேடில் கைது செய்யலாமா ?


செய்தி :
http://manakkan.blogspot.com/2010/03/chennai-news-three-arrested-for-dowry.html

PRABHU RAJADURAI said...

அன்பார்ந்த சுபு,

தங்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்க 498A என்ற ஒரு கூட்டு வலைப்பதிவு உள்ளதே!

Deepak Kumar Vasudevan said...

>>மேலிருந்து கீழ் நோக்கி எதுவும் பாயலாம்...பணம் மட்டும் பாயாது!

"பணம் பாதாளம் மட்டும் பாயும்" என்பது ஒரு மிகப் பிரபலமான பழமொழி.

Jawahar said...

அரசியலில் பெரும்பாலும் கேடிகள்தான் இருக்கிறார்களோ என்று நினைக்க வைக்கிற அளவுக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மகாஜனின் மதிப்பு கோடிகள்ன்னு பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு.


http://kgjawarlal.wordpress.com

sriram said...

வக்கீல் சார், இதுக்கு அப்புறம் ஒரு பதிவு போட்டீங்க, நானும் ஒரு பின்னூட்டம் போட்டேன், அப்புறம் பாத்தா பதிவையே காணோம், என்னாச்சு? controversy வேணாம்னு தூக்கிட்டீங்களா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

PRABHU RAJADURAI said...

நன்றி ஸ்ரீராம்,

தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழி வகுத்துவிடும் என்ற பயத்தால் எடுத்து விட்டேன். பின்னூட்டமிட்ட பலருக்கும் நன்றி!

Subu said...

என்ன வக்கீல் சார்

நான் எழுதின பின்னூட்டுக்கு பதிலா 498A பத்தி அலசி ஆராய்ஞ்சு ஒரு பதில் பதிவு போடுவீங்கன்னு பாத்தா, நீங்க ரொம்பவே ஏமாத்திடீங்க

ஒரு வேளை 498A போடுவது தான் சரி ன்னு உங்க எண்ணமோ என்னவோ ?!

அன்புட
சுப்பு

PRABHU RAJADURAI said...

அணுஉலை விபத்து இழப்பீட்டு சட்டம் – சொந்த செலவில் சூனியம்

http://www.makkal-sattam.org/2010/06/blog-post.html