கடந்த ஞாயிறு (இதுவும் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான்) சன் தொலைக்காட்சியில் 'தோஸ்த்' என்ற சரத்குமார் படம். இடையில் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது. ரகுவரன் லாட்டரிப் பிரியராக ஒரு காட்சியில் நன்றாக நடித்திருந்தார். அவரது நண்பரான சரத்குமார் இரவில் அவரை ஒரு படகில் அழைத்துச் செல்ல காலையில் எழுந்து பார்த்தால் ரகுவரனைக் காணவில்லை. ஆனால் படகில் இரத்தம்! படகில் கிடக்கும் ரத்தம் தோய்ந்த கத்தியில் சரத்குமாரின் கைரேகை!!
ரகுவரனின் மனைவியுடன் உள்ள தொடர்பால் அவரைக் கொலை செய்து விட்டார் என்று கூண்டில் ஏற்றப்படுகிறார் சரத்குமார். அவருக்கும் அவரது நண்பரான ரகுவரனின் மனைவிக்கும் தொடர்பு என்று கூறும் அரசு வழக்குரைஞரை குற்றவாளிக்கூண்டின் கட்டையை உருவியெடுத்து தாக்க முயலுகிறார். பின்னர் நீதிபதி சரத்குமாருக்கு ரகுவரனை கொன்றதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் ஏழு ஆண்டு தண்டனை விதிக்கிறார்.
அதன் பின்னர் படத்தினைப் பார்க்கவில்லையெனினும் 'ரகுவரன் கடைசிக் காட்சியில் உயிருடன் வந்து விடுவார்' என்று பல தமிழ்ப்படங்களை பார்த்தவன் என்ற முறையில் எளிதில் யூகிக்க முடியும். இல்லையெனில் சோகத்தை பிழியும் ஒரு பாடலைப் பாடியபடியே ரகுவரனின் சவத்தை சரத்குமார் எரியூட்டும் காட்சி இருந்திருக்கும்.
முன்பு கூட ஒருமுறை இறந்தவரின் உடல் என்னவாயிற்று என்பது தெரியாமலே கொலைக்குற்றத்திற்கு பிரபுதேவா தண்டிக்கப்படும் படம் பார்த்திருக்கிறேன். இது சாத்தியமா?
திரைக்கதைகளில் நிகழும் அதே நிகழ்ச்சி நிஜத்திலும் நடைபெறும் அதாவது இறந்தவர் உயிருடன் வரும் வாய்ப்பு இருப்பதால் ஒரு கொலை நடைபெற்றுள்ளது என்பதற்கு முதல் முக்கிய ஆதாரம் உயிரற்ற ஒரு உடல். உடல் முழுவதும் கிடைக்காமலே மற்ற சாட்சிகள் இறுக்கமாக இருக்கையில் ஒருவரை தண்டிக்கலாம் என மிக மிக அரிதான வழக்குகளில் நீதிமன்றம் கூறியிருந்தாலும், அவ்வழக்குகளில் கொலையில் ஈடுபட்ட யாராவது ஒருவர் அப்ரூவராக இருந்திருப்பார்.
இந்த உடலை மறைக்கும் விஷயங்களில் கொலையாளிகள் கிரியேட்டிவிட்டி சொல்லி மாளாது. பாக்கிஸ்தானில் ஒரு டாக்டர் தனது மனைவியின் உடலை அமிலத் தொட்டியில் வைத்து ஊற வைத்து கரைத்து 'பிளஷ்' செய்ய அதையும் பின்னர் காவல்துறையினர் நோண்டி எலும்புத் துணுக்குகளை சேகரித்துவிட்டனர். சென்னையில் எழுபதுகளில் பாய்லரில் வைத்து இறந்தவர்களின் உடலை சாம்பலாக்கிய வழக்கில் அப்ரூவரின் சாட்சியத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
நான் படித்த ஒரு கற்பனைக் கதையில் இதே போல தோஸ்த் ஒருவனைக் கொன்று உடலை முதுகில் சுமந்து கொண்டு, விடிகாலை ஓதத்தில் (Tide) நீர் வடிந்து போயிருக்கும் கடலுக்குள் வெகுதூரம் தூக்கிச் செல்வான் ஒருவன். நடந்து சென்றே நடுக்கடலில் வீசிவிடலாம் என்பது அவனது எண்ணம். போதிய தூரம் சென்றபின் பிணத்தை இறக்கப் பார்த்தால் முடியாது. பிணத்தின் கை, கால்கள் 'Rigor Mortis' என்று அழைக்கப்படும் தன்மையால் இறுகி அவனால் விலக்கவே முடியாது. திரும்பி வருவதற்குள் கடல் நீர் மெல்ல மெல்ல எழும்பி பிணத்தோடு சேர்த்து அவனையும் விழுங்கிவிடும்!
இதனால் நாம் அறியும் நீதி. உயிரை மேலே அனுப்புவது எளிது. உடலை அனுப்புவது கடினம். எனவேதான் அரசியல்வாதிகள் முதல் சினிமா நடிகர்கள் வரை 'உயிரை தனக்கும் உடலை மண்ணுக்கும்' கேட்கிறார்களோ?
***
ஒரு தகவல்: தோஸ்த் பட நீதிபதியின் தீர்ப்பில் ஒரு தவறு இருக்கிறது. கொலை வழக்கு நடப்பது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில். அவரால் ஒரு கொலையாளியை தூக்குமேடைக்கு கூட அனுப்ப முடியும். ஆனால் 'நீதிமன்ற அவதூறுக்காக' யாரையும் தண்டிக்க இயலாது. ஏனெனில் அந்த அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
அடுத்த தகவல்: கோபல்ல கிராமம் நாவலில் இருந்து உருவி முதல்மரியாதை படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் வருவது 'rigor mortis' அல்ல. அது 'cadaverous spasm'.
4 comments:
பிரபு,
தமிழ் சினிமாவில் இது போன்ற அபத்தங்கள் வெகு சகஜம். சில அபத்தங்களை துறை சார்ந்தவர்கள் தெளிவுபடுத்த முயற்சிப்பது தெளிவு பெற மற்றவர்களுக்கு உதவும்.
ரொம்ப நாளாக நான் சட்டவல்லுநர்களிடம் consultancy fees எதுவும் கொடுக்காமல் கேட்க விரும்பிய விஷயம்:
சிட்டிசன் படத்தில் ஒரு காட்சியில், ஒருவன் தான் இந்த நாட்டில் வழியில்லை என்று சொல்லி தன்னுடைய citizenshipஐயும், Ration Cardஐயும் திருப்பி கொடுத்தால் 24 மணி நேரத்திற்குள்ளாக அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தீர்வளிக்கவேண்டும். இல்லையென்றால் அந்த மாநில ஆட்சியை கலைக்க மத்திய அரசுக்கு அனுமதியிருக்கிறது என்பது போன்று வரும்.
இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது.
பின்னூட்டத்திலோ தனிப்பதிவாகவோ ...
தோஸ்த் படக்காட்சியை அபத்தம் என்று கூறவில்லை. ஆனால், நீங்கள் கூறும் சிட்டிசன் படக்காட்சி அந்த வகைதான்...just laugh it off.
இந்தப் படம் 'தோஸ்த்' Double Jeaperdy எனும் ஆங்கிலப் படத்திலிருந்து உருவப்பட்டுள்ளது.
இறந்தவர் மீண்டும் வருவதை அப்படித்தான் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள் என நினைக்கிறேன்.
Double Jeapordy கேஸ் நம்ம ஊர்ல நடந்திருக்குமே?
சிறில்,
டபுள் ஜியோபார்டி என்பது ஒரே குற்றத்திற்காக, ஒருவரை இருமுறை விசாரணைக்குட்படுத்துவது. இவ்வாறான செயல் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.
விதிவிலக்கு, 'விஷம் கக்கிய பாம்பு' என்று நான் எழுதிய பதிவினை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
மரித்தவர் மீண்ட கதையும் இந்தியாவில் நடந்தது. அடுத்த பதிவு அதுதான்...
Post a Comment