18.12.06

வருங்கால முதல்வரின் திரைப்ப(பா)டம்!

சென்ற வார இறுதியில் (அதாவது மூன்று வருடங்களுக்கு முன்னர்) தொலைக்காட்சி அலைவரிசைகளில் அகப்பட்ட இரு படங்களிலும் நீதிமன்ற காட்சிகள். முதலாவது படம் பெயர் தெரியவில்லை. ஆனால் இளமையான தோற்றத்துடன் விஜயகாந்த், வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பாக ஆஜராகி, அரசு சாட்சியான நிரோஷாவை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். அதாவது தமிழ் திரைப்படங்களில் குறுக்கு விசாரணை என்று படம் பிடிக்கப்படுபவை ஒரு வழக்குரைஞரின் பார்வையில் பட்டி மன்ற விவாதம்!

அபத்தமாக கேள்வி கேட்டபடியே வாதம் செய்யும் விஜயகாந்தைப் பார்த்து இறுதியில் அரசு வழக்குரைஞர், 'இவரை குற்றவாளியில்லை என்று கூறுகிறீர்களே. அதற்கான ஆதாரம் இருக்கிறதா?' என்று வினவ, விஜயகாந்த், 'ஆதாரம்தானே, இதோ' என்று தனது கோட்டு பையிலிருந்து ஒரு ஊசியையும், நூலையையும் எடுக்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லை! ஆனாலும், புத்திசாலித்தனமாக ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால்....அடுத்து நிகழ்ந்ததை இங்கு எழுத எனக்கு கூசுகிறது. நூலை அடுத்தவரிடம் கொடுத்து தன் கையிலுள்ள ஊசியில் கோர்க்கச் சொல்லுகிறார். அவர் நூலை கொண்டு வர கொண்டு வர இவர் ஊசியை நகர்த்துகிறார். அதாவது, 'ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியுமாம்'!

ஒன்று புரிந்தது. கல்வித்துறைக்கு ஏன் ஆட்சியாளர்கள் போதிய நிதி உதவி ஒதுக்குவதில்லை என்பதற்கு ஒரு காரணம் கூறுவார்கள். அதாவது, 'மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால், மோசடி அரசியல்வாதிகளை இனம் கண்டு கொள்வார்களாம்' அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அதே நோக்கம் அரசியல் கனவுகளுடன் வளைய வரும் நடிகர்களுக்கும் இருக்குமோ என்ற சந்தேகம் எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த், விஜயகாந்த் படங்களை பார்க்கையில் வலுப்படுகிறது.

ஆட்டுப்பால் குடிச்சால் அறிவழிஞ்சு போகுமோ இல்லையோ அடுத்த முதல்வர் நாந்தான் என்று கனவு காணும் நடிகர்களின் படங்களை பார்த்தால் நிச்சயம் அழிந்து போகும்!

மும்பை

6 comments:

Sridhar Venkat said...

நீங்கள் சொல்லும் காட்சியை நான் திரையில் பார்த்ததில்லை, ஆனால் அந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனத்தில் (பெயர் ஞாபகம் இல்லை) படித்தேன் படம் வந்த காலத்தில். படித்தப் பொழுதே தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் பொல இருந்தது. இப்பொழுதுதான் துணைக்கு நீங்கள் கிடைத்தீர்கள் :-)).

இந்தக்காட்சிக்கு கண்டிப்பாக திரையரங்குகளில் ஆரவாரம் எழுந்திருக்கும். மக்களைப் பிரதிபலிப்பதுதானே சினிமா...

இந்த மாதிரி பல அபத்தமான கருத்துக்கள் நம் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் ஏராளம்... ஏராளம். குறிப்பாக பெண்களை சித்திரிக்கும் காட்சிகள்...

என்று திருந்தப் போகிறார்களோ...

Dharumi said...

:(

வெங்கட்ராமன் said...

அன்பரே,

நீங்கள், சமீபத்தில் வெளியான ராஜ்ஜியம், ரமணா, சுதேசி. . . .
போன்ற திறைப்படத்தை பார்த்தால் என்ன சொல்வீர்கள்.

/// இளமையான தோற்றத்துடன் விஜயகாந்த்
என்று சொல்லி உள்ளீர்கள், அப்படி என்றால் அது இயக்குனரின் கற்பனையாக தான் இருக்க முடியும், விஜயகாந்தை இதில் கிண்டல் செய்வது சரியா. . . .?

சிறில் அலெக்ஸ் said...

:)

இப்பசில படங்களில் ஓரளவுக்கு யதார்த்தமான கோர்ட் சீன்கள் வருகின்றன.

அந்நியன் ஒரு உதாரணம்.

விதின்னு ஒரு படத்துல கோர்ட் சீன் காட்சிகள், வசனங்கள் தமிழகமெங்கும் சூப்பர்ஹிட் ஆனது நியாபகம் வருது.

Doctor Bruno said...

//, விஜயகாந்தை இதில் கிண்டல் செய்வது சரியா. . . .?//

.... படம் ஹிட் ஆவது ஹீரோவினால்..... ஆனால் தவறுகளுக்கு பொறுப்பு இயக்குனர் !!!!

மருதநாயகம் said...

//
ஆட்டுப்பால் குடிச்சால் அறிவழிஞ்சு போகுமோ இல்லையோ அடுத்த முதல்வர் நாந்தான் என்று கனவு காணும் நடிகர்களின் படங்களை பார்த்தால் நிச்சயம் அழிந்து போகும்!
//

சூப்பர்! நல்ல பதிவு