24.12.06

வெடி!

வெளியே எங்காவது உணவருந்தலாம் என்று குழந்தைகளுடன் அமெரிக்கன் கல்லூரி வழியாக நேற்றிரவு செல்கையில் உள்ளிருந்து சிதறிய உற்சாகம், ‘அடடா, ஏதோ கேரல்ஸ் போல இருக்கே’ என்று மனதில் உரசியது. வலிய இவ்வாறு நினைவுக்கு கொண்டு வந்தால்தான் இன்னும் பத்து நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உணர முடிகிறது. குழந்தைகளுக்கோ, வருடத்திற்கு ஒரு முறை வரும் பர்த்டே பார்ட்டி அளவிலேயே கிறிஸ்மஸ் பற்றிய எதிர்பார்ப்புகள். அவர்களுக்கு எல்லாமே எப்பொழுதுமே கிடைக்கிறது என்பதில் கிடைக்காமல் போனது கிறிஸ்துமஸ் எதிர்பார்ப்புகள் போல...

எங்கள் வீட்டிலெல்லாம் கிறிஸ்மஸ் ஏற்பாடுகள் தீபாவளிக்கு முன்னரே ஆரம்பித்து விடும். அம்மா அலுவலகத்தில் தீபாவளிக்கு முன்னரே கொடுக்கப்படும் போனஸ் மட்டும் காரணமில்லை. தீபாவளிக்கு கோ-ஆப்டெக்சில் துணி வாங்குவதற்காக அலுவலகத்தில் கிடைக்கும் வட்டியில்லாக் கடனும் ஒரு காரணம். ஆனால் இதையெல்லாம் மிஞ்சி, என் அம்மாவின் அலுவலகத்தில் தீபாவளிக்கு அவர்களது சொசைட்டியில் மொத்தமாம் வெடி வாங்கி 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 25 ரூபாய்க்கான பண்டல்களாக கட்டி விற்பார்களே அதுதான் முக்கிய காரணம்.

எப்பொழுதும் 10 ரூபாய் பண்டல் வாங்கியதாகத்தான் ஞாபகம். 25 ரூபாய் பண்டல் ஒரு முறை வாங்கினோம் என்று நினைக்கிறேன். அந்த பண்டல்கள் தீபாவளியின் போதுதான் கிடைக்கும் என்பதால் அப்போதே வாங்கி ஒரு மஞ்சள் பையில் போட்டு அடுப்புக்கு மேலே மாட்டி வைத்து விடுவார்கள். அப்போது விறகு அடுப்பு அல்லது ஸ்டவ்தான். அடுத்த ஒரு மாதமும் தினமும் காலை எழுந்ததும் ஒரு முறை அந்த மஞ்சள் பையினை தரிசிக்க தவறுவதில்லை. யாரும் இல்லாத சமயத்தில் லேசாக அதை தடவி, கொஞ்சம் குத்திப் பார்ப்பதும் உண்டு.

பள்ளிக்கூடத்திலோ, நண்பர்களிடத்தில், 'பார், எங்கள் கிறிஸ்மஸ”க்கு எவ்வளவு வெடி வெடிக்கிறோம் என்று சவால் வேறு. திருநெல்வேலி மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட கிறிஸ்தவ மக்கள் கொஞ்சம் அதிகம்.

டிசம்பர் நெருங்க நெருங்க அடுத்த மாதம் இதே நாள் என்று ஆரம்பித்து, கடைசியில் அடுத்த வாரம் இதே நாள் கிறிஸ்மஸ் என்று வருகையில் அரை வருட பரீட்சையும் முடிந்திருக்கும். பரீட்சை பயம் போனவுடன், அடுப்புக்கு மேலே தொங்கும் மஞ்சள் பையினைப் பார்க்கும் நேரமும் அதிகரித்திருக்கும். இன்னும் நாள் நெருங்க நெருங்க அதன் மீதான உரிமையும் அதிகரிப்பதாக ஒரு எண்ணம் தோன்றி விடும். அம்மாவின் அதட்டலையும் மீறி அந்த பைக்கு ஒரு செல்ல குத்து. பண்டலுக்குள் இருக்கும் சமாச்சாரங்களைப் பற்றி யூகம், அனுமானங்கள் மற்றும் விவாதங்கள் சகோதரர்களுக்குள் நடக்கும். பண்டலைத்திறக்க விட மாட்டார்கள், நமத்துப் போய் விடுமென்று...அதற்காகத்தான் அடுப்புக்கு மேலே தொங்க விடுவது.

24ம் தேதி மாலை மஞ்சள் பை அங்கிருந்து அம்மாவால் அகற்றப் பட்டு அண்ணனது கைக்கு வரும். கண் கொத்திப் பாம்பு போல நானும், சின்ன அண்ணனும் பார்த்துக் கொண்டிருப்போம். எதுவும் மிஸ் ஆகி விடக்கூடாதல்லவா? அதற்குப் பின் நடக்கப் போவதுதான் முக்கியமான கட்டம்.

தரையில் அண்ணன், அவனைச் சுற்றி நாங்கள் இரண்டு பேரும் கண்களில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு கவனித்துக் கொண்டிருப்போம். நடுவில் வெடி பண்டல். அக்கா சுவராசியமில்லாமல் நின்று கொண்டு எட்டிப் பார்ப்பாள். அவளுக்கு கவலையில்லை. அவளுக்கு வேண்டியது சரியாக வந்து விடும். பிரச்னை சகோதரர்களுக்குள்தான்.

பண்டலை பிரிக்க பிரிக்க, சத்தம் போடாத வத்திச் சமாச்சாரங்கள் பெரிய ஏமாற்றத்தைத் தரும், 'இந்த ஆபிஸ்ல வாங்கினா இப்படித்தான். மத்தாப்பாய் வச்சுருவானுங்க' என்று பண்டல் கட்டிய மகானுபாவனுக்கு சில சாபங்கள் கிடைக்கும். அக்காவுக்கு சிரிப்பு சிரிப்பாக வரும். பின்ன அந்த சமாச்சாரங்க ளெல்லாம் அவளுக்கெல்லவா. ஆனாலும் எங்கள் நிலையினை னைத்து பரிதாமகத்தான் அவள் சிரித்தாள் என்று எனக்கு படுகிறது!

அந்த பத்து ரூபாய் பணத்துக்கும் கணிசமாக வெடி இருக்கும். இப்போது பத்து ரூபாயினை வைத்துக் கொண்டு வெடிக்கடையினை வேடிக்கை பார்க்கக் கூட அனுமதிப்பார்களா என்பதே சந்தேகந்தான். சிறிது அதிஷ்டம் இருந்தால் ஒரு பாக்கட் 'ஆட்டம் பாம்' கூட இருக்கும். அடுத்து அண்ணன் சரவெடியினை எல்லாம் மெல்ல தனித் தனி வெடியாக பிரிப்பான். ரொம்ப நேரம் வெடிக்க வேண்டுமல்லவா? அதனால் சர வெடியினைத் தியாகம் செய்ய வேண்டியதிருக்கும். இப்போது வெடிகள் மூன்று பங்காக பிரிக்கப் படும். ஒவ்வொன்றும். ஒன்று கூட பிசகக் கூடாது. எண்ணி எண்ணி, அண்ணன் வைக்கும் போது கண் இமைக்க மறுத்து பார்த்துக் கொண்டிருப்போம். இங்கே அங்கே ஒன்று கூடினால், பெரிதாகக் கத்துவேன். முடிந்தது. மத்தாப்புகள் தனியாக அக்காவுக்கு. வெடிகள் மூன்று சம பங்காக எங்களுக்கு. வெடிக்கம்பெனிக்காரனுக்குத் தெரியுமா, இங்கு மூன்று பேர் இருக்கிறோம் என்று. சில சம்யம் ஒன்று, இரண்டு தனியாகி விடும். அதனை அண்ணன் உரிமையாக எடுத்துக் கொள்வான் எனினும், நாங்கள் அதற்காக சலித்துக் கொள்ளத் தவறுவதில்லை.

எனது பங்கினை தனியாக ஒரு பாக்கெட்டாக, மற்றவர்கள் கண்ணில் படாமல் கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவேன். 'கையை கழுவிக் கொண்டு வந்து தொடுடா' என்று சட்டியில் மிஞ்சியிருக்கும் கேக் மாவினை எடுக்கப் போனவனை அம்மா திட்டுவார்கள்.

விடிகாலைக் குளிரில் எழுப்பி விட்டவுடன், முதலில் போய்ப் பார்ப்பது வெடியினைத்தான். 'சரியாக இருக்கிறது' என்று திருப்தியுடன் பல் தேய்க்கப் போவோம். கோவிலில் தூக்கம் தூக்கமாக வந்தாலும், விழிப்புடம் இருக்கச் செய்வது வீட்டுக்கு போனவுடன் சாப்பிடப் போகும் கேக்கும் வெடிக்கப் போகும் வெடியும்தான். நமது புதுச் சட்டையினை பக்கத்திலுள்ளவன் சட்டையுடன் ஒப்பிடுவதும் நடக்கும் என்றாலும் அதில் அதிக நாட்டமிருக்காது. எங்கள் மூன்று பேருக்கும் ஒரே துணியில் சட்டை என்பதால், பெரிய அண்ணன் எங்களுடன் உட்கார கூச்சப் பட்டு தனியாக இருப்பான். தூத்துக்குடிக்கு போன பிறகு இந்தப் பழக்கத்தை, 'ஒரே மாதிரி என்னால் சட்டை போட முடியாது' என்று முதன் முதலில் உடைத்தது அவன்தான்.

வீட்டிற்கு வரும் போதே நாங்கள் ஒரு மாதமாக கற்பனை செய்து வைத்திருந்தது மாதிரி பெரிய வெடிச்சத்தம் இருக்காது. 'இந்த வருஷம் ரொம்ப வெடியில்லையே' என்று சொல்லிக் கொள்வோம்.

வீட்டில் இன்ன பிற சமாச்சாரங்கள் முடிந்த பிறகு அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே அண்ணன் ஆரம்பித்து விடுவான். அக்காவும் சேர்ந்து கொள்வாள் மத்தாப்புடன். ஆனால் எங்களுக்கு மத்தாப்பு பார்க்கும் ஆசையே இருக்காது. அண்ணன் அவன் வெடியெல்லாம் வெடித்து முடிக்க விடிந்து சாப்பாடு நேரம் வந்து விடும். கிரவுண்டுக்கு தாண்டி அந்தப் பக்கம் இருக்கும் வீட்டில் நிறைய வெடிச் சத்தமும், எங்களுக்கு அப்போது எட்டாக் கனியாக இருந்த ராக்கெட்டும் எங்களைக் கவரும். 'பிரேக் இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து அது' என்று சொல்லிக் கொள்வோம். பிரேக் இன்ஸ்பெக்டர் வீட்டில் ஏன் அவ்வளவு வெடி வெடித்தார்கள் என்று, ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்தான் புரிந்தது.

சாப்பிட்ட பின்னர் சின்ன அண்ணனும் நானும் வெடிகளை எடுத்துக் கொள்வோம். பெரிய அண்ணனும் கூட இருப்பான். நாங்கள் ஒவ்வொரு வெடியாக எடுத்து அவனிடம் கொடுக்க அவன் போடுவான்!! எங்களுக்கு போட பயம்!!!

இப்படி வெடி எடுத்துக் கொடுக்கத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும். ஆனாலும் அதற்கும் சில எழுதப்படாத விதிகள் உண்டு. வெடி எங்கள் கண் பார்வையில் போடப் பட வேண்டும். நாங்கள் சொல்லும் இடத்தில் வைத்து பற்ற வைக்க வேண்டும்.

கொஞ்சம் மிச்சம் வைத்து விட்டு தெருவில் நண்பர்களுக்காக பார்த்திருப்போம். அக்கா அதற்குள் தட்டில் பலகாரத்தை எடுத்துக் கொண்டு எல்லார் வீட்டுக்கும் போய் வருவாள். 'நீயும் வாடா' என்பாள். நான் அதனைக் கவனிக்காமல் குட்டி கொண்டு வந்த சில்வர் ஷாட் வெடியினையும் அவன் அதன் அருமை பெருமைகளை விவரிப்பதையும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்பேன்.

மத்தியானம் அவ்வளவுதானா என்று இருக்கும். எல்லோரும் உட்கார்ந்து பேசுகையில், வெடி அவ்வளவுதான் என்றால் அப்பா, 'என்னடா, ராத்திரி போய் எல்லா வீட்டு வெடிக் குப்பையும் அள்ளி இங்க வந்து போட்டுக்கோ. ந்ம்மதான் எல்லாம் வெடிச்சோம்னு போய்ச் சொல்லு' என்பார்.

வெளியில் சிரித்தாலும், 'தீபாவளிக்கு மாதிரி நம்மால வெடிக்க முடியலயே' என்ற ஏக்கம் இருக்கும்.

'இந்த கிறிஸ்மஸும், தீபாவளியும் ஒரே நாளில் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். எல்லோரோட சேர்ந்து நாமும் வெடிக்கலாமே' என்று எண்ணிக் கொண்டிருப்பேன்.

3 comments:

மணியன் said...

நீங்கள் விவரித்திருப்பது அப்படியே எங்கள் வீட்டு தீபாவளிக்கும் பொருந்தும் !

உண்மையிலேயே //'இந்த கிறிஸ்மஸும், தீபாவளியும் ஒரே நாளில் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். எல்லோரோட சேர்ந்து நாமும் வெடிக்கலாமே' // .. நானும் எண்ணுகிறேன்.

தருமி said...

பிள்ளைகளோடு இருக்கும்போது நம் பிள்ளைக்கால நினைவுகள் தரும் சுகமே தனிதான். எல்லாமே compare & contrast-தான்!

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சுட்டிக்கு நன்றி பிரபு. இந்த இடுகையை இதற்கு முன் பார்க்கவில்லை. நல்ல விவரணையும் நடையும் கொண்ட இனிய பதிவு. கண்முன் காட்சிகள் எழுந்து வந்து நிற்கின்றன.

பங்கு போடும் சண்டையிடும் என் சின்னப் பெண்களைத் அதட்டிக் கொண்டிருக்கிறேன். கால காலமாய் வருவது தானே என்று சற்றுத் தளர்ந்துகொள்ளலாம் எனத் தோன்றுகிறது.