28.12.06

அரசியல் சேட்டைகள்...

(அதுக்கு யாராவது முதல்ல அந்தத் தப்பை செய்யணும்னு நினைக்கிறேன். யார் அந்த சேட்டையைச் செய்யப் போறாங்களோ. ஆனாலும் செம ஜாலி இது)

சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் நடந்த ஒரு விவாதத்தில், நான் கூறிய கருத்தினை ஒட்டி கூறப்பட்டதுதான் மேற்கூறிய வாசகம். தொடர்ந்து நான் எழுதியதை இங்கு பதிவது, பயனுள்ளது என நினைக்கிறேன்!


நேற்று எழுதும் பொழுதே நினைத்தேன். முதலாவது அந்த சேட்டையை செய்தவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று. ஆனால், உங்களுக்கு நமது அரசியல்வாதிகள் மீது அதீத நம்பிக்கை. அப்படிப்பட்ட சேட்டையெல்லாம் செய்யாமல் அவர்கள் விடுவதில்லை.

"அரசியலமைப்புச் சட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான தகுதி கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வருக்கான தகுதி கூறப்படவில்லை. இதன் அர்த்தம் ஆளுஞர் மக்களுடைய விருப்பத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதல்வரால் நிலையான அரசினை அமைக்கமுடியுமா என்பதை மட்டுமே அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் தங்களுடைய விருப்பத்தினை சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தெரியப்படுத்துகையில், அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபர் முதல்வராக நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஏனெனின் மக்களே சகலவல்லமை பொறுந்தியவர்கள்"

"அவ்வாறெனில், இந்திய குடிமகனாக இல்லாத அல்லது 18 வயது கூட நிரம்பாத ஒருவரை பெரும்பான்மை கட்சியினர் தேர்ந்தெடுக்கையில் ஆளுஞர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டுமா?"

"ஆம். ஏனெனில் ஆளுஞருக்கோ அவர்கள் அவ்விதம் தகுதிக் குறைவானவர்களா என்று தீர்மானிக்கும் தகுதியில்லை. சட்டமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியே அப்படிப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய இயலும்"

என்னவொரு ஜாலியான அல்லது முட்டாள்தனமான விவாதம் என நினைக்க வேண்டாம். சில வருடங்களுக்கு முன்னர் நமது உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதமும் அதையொட்டிய நீதிபதியின் கேள்வியும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலும்தான் நான் மேலே எழுதியவை. இந்த வாதத்தினை வைத்தவர் அந்நியர் பிரதமர் ஆகலாமா? என்று தமிழகம் முழுவதும் கேள்வியெழுப்பிய ஜெயலலிதாவின் வழக்குரைஞர்! நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்தது அவர் தலைமையிலான தமிழக அரசின் வழக்குரைஞர்!!

தற்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு கிரிமினல் நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது (பின்னர் மேல்முறையீட்டில் விடுதலையடைந்தார்) இவ்வாறு சிறைத்தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக முடியாது. இருந்தும் அவரது மேல்முறையீடு நிலுவையிலிருந்த நிலையில் 2001ல் நடந்த தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவையனைத்தும் தகுதிக் குறைவுக்காக நிராகரிக்கப்பட்டன. ஆனால் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அதிமுக 14/15/2001ல் அவரையே தனது தலைவராக தேர்ந்தெடுக்க அதே தினம் ஆளுஞரால் தமிழக முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ஆக நான் முன்பு குறிப்பிட்ட ஓட்டையை பயன்படுத்தி, சட்டமன்ற உறுப்பினராக தகுதியில்லாத ஒருவர் முதல்வராக பதவியேற்ற முதலாவது சேட்டை ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டது.

ஆனால் உச்சநீதிமன்றம் இந்த சேட்டையை ஜாலியாக பார்த்துக் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட சேட்டைகளின் விபரீதத்தை உணர்ந்த நீதிமன்றம் 'மந்திரியாக நியமிக்கப்படுபவர் அவர் நியமிக்கப்படும் வேளையிலிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்' என்று கூறி ஜெயலலிதா முதல்வராக நீடிக்க தகுதியில்லாதவர் என்று கூறியது. ஜெயலலிதாவும் பதவி விலகி பின்னர் வழக்கில் விடுதலையடைந்து தேர்தலை சந்தித்து முறைப்படி முதல்வராக பின்னர் பதவியேற்றது நாம் அறிந்தது.

சரி, உச்ச நீதிமன்றம் தலையிடாமல் ஜெயலலிதாவின் மேல்முறையீடும் கேட்கப்படாமல் ஆறு மாதங்கள் முடிந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அப்போது ஜெயலலிதாவிடம் ஒரு யோசனை வைக்கப்பட்டது. அதாவது ஆறு மாதம் முடிவதற்கு முன்னர் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை தேர்ந்தெடுக்க மேலும் ஆறு மாதங்கள் ஓட்ட வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் அந்த சேட்டையை ஏற்கனவே பஞ்சாபில் ஒருவர் அதே வருடம் செய்து நீதிமன்றம் அவரது நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டது. டி.பி.சிங் என்ற அந்த மந்திரியின் வழக்கு அவ்வளவு மோசமில்லை. அவருக்கு தகுதிக் குறைவு ஏதுமில்லை. ஆனால் அவரது ஆறுமாத கால அவகாசம் முடிவதற்குள் முதல் மந்திரி மாற்றப்பட்டார். புதிய முதல் மந்திரியும் அவரை மந்திரியாக மீண்டும் நியமித்தார். ஆக அவருக்கு மேலும் ஆறு மாதகாலம் அவகாசம் கிடைத்தது...ஆனால் நீதிமன்றம் அதை அனுமதிக்கவில்லை.

(ஆனா பொதுவா சட்டம் இயற்றும் போது, எந்த ஓட்டையும் வராத மாதிரி தேவைக்கு அதிகமாவே எல்லா கண்டிஷனும் போட்டு, வார்த்தைகளால ரொப்பிதான் எழுதுவாங்கன்னு நினைச்சேன்)

வார்த்தைகளால் ரொப்புவது மட்டுமே முக்கியமல்ல. கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது அவசியம். 'பொடா' சட்டத்தினை பற்றி முன்பு எழுதிய ஒரு கட்டுரையின் கடைசியில் அது எவ்வளவு மோசமாக வரையப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகையில் 'இந்திய தண்டனைச் சட்டம்' ஒரு கவிதையைப் போல எவ்வளவு அழகாக எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டேன்.

நேற்று படித்த புத்தகத்தில் இருந்த ஒரு வாசகத்தை தர விரும்புகிறேன். "இந்திய தண்டனைச் சட்டம் 1834 முதல் 1838ம் ஆண்டு வரை இந்தியாவின் சட்ட அமைச்சராக பணியாற்றிய லார்ட் மெக்காலேவால் அவரது பணிக்காலத்தில் வரையப்பட்டதாகும். இந்தியாவில் இருக்கும் சட்டங்களிலிலேயே மிகக் குறைவாக திருத்தப்பட்ட சட்டம் என்ற பெருமையே அவரது மிகச்சிறந்த சட்டவரைவுப்பணிக்கு நற்சான்றிதழாகும்" என்று கூறுபவர் இந்தியாவின் மிகச்சிறந்த சட்டமேதை நானி பல்கிவாலா.

அதற்காக நமது அரசியலமைப்புச் சட்டத்தினை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுவும் மிகச்சிறந்த முறையில் வரையப்பட்ட ஒரு ஆவணம். ஆனால், உலகில் பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து சிறந்த அம்சங்களும் இடம்பெற வேண்டும் என்று எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்தாண்டு, உலகிலேயே மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டமாக இயற்றப்பட்டது. சமீபத்தில் யூகஸ்லோவியா நாட்டு அரசியலமைப்புச் சட்டம் நமது ரிக்கார்டை முறியடித்து விட்டது.

ஆனால், ஒரு அரசியலமைப்புச் சட்டத்தில் இப்படி அனைத்தையும் இழுத்துப் போட்டு எழுத வேண்டும் என்பதில்லை. அமெரிக்க சட்டம் மிகச் சிறியது. இங்கிலாந்திற்கு எழுதப்பட்ட சட்டமே இல்லை. ஏனெனில், பல வழக்குகளை ஆராய்ந்து இதுதான் சட்டம் என்று நீதிமன்றம் பல சமயங்களில் வரையறுக்கிறது......ஜெயலலிதா வழக்கில் நடந்தது போல.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவினையும் ஏற்பதற்கு அரசியலமைப்பு சட்டவரைவுக் குழு உறுப்பினர்களுக்கிடையே சிறந்த விவாதம் நடைபெற்று அந்த விவாதங்கள் ஆவணங்களாக நம்மிடம் இருக்கின்றன. ஏதாவது ஒரு சட்டப்பிரிவினைப் பற்றி சந்தேகம் வருகையில் நீதிமன்றங்கள் இந்த விவாதங்களை ஆராய்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தினை இயற்றியவர்கள் என்ன காரணத்திற்காக இவ்வாறு பிரிவினை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிய முயலும். ஜெயலலிதா வழக்கில் கூட விவாதங்கள் ஆராயப்பட்டன. அதில் அரசியலமைப்புச் சட்டவரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் பேசியது குறிப்பிடத்தக்கது.

"இந்தப் பிரிவில் முதலாவது திருத்தம் திரு. முகமது தாகிருடையது. அவருடைய யோசனை சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர் மந்திரியாக நியமிக்கப்படக்கூடாது என்பதாகும். இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளபடி சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், மந்திரியாக நியமிக்கப்பட்டு ஆறு மாத காலத்துக்குள் தேர்தல் மூலம் தன்னை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதின் விளைவுகளை அவர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார். பேராசிரியர் கேடி ஷா மேலும் இரு தகுதிகளை முன் வைக்கிறார். அதாவது மந்திரி பெரும்பான்மை பொருந்திய கட்சியினை சார்ந்தவராக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பது. மந்திரியாக நியமிக்கப்பட முழுத்தகுதி வாய்ந்த ஒரு நபர் தேர்தலில் தோற்றுப் போக நேரிடலாம். ஏதோ ஒரு காரணத்துக்காக, அது நல்ல செயலாகவே இருந்தால் கூட தனது தொகுதியினை பகைத்துக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர் மந்திரியாக நியமிக்கப்பட்டு அதே தொகுதியில் அல்லது வேறு ஒரு தொகுதியில் தன்னை தேர்ந்தெடுத்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு ஏன் ஏற்படுத்தக்கூடாது. மேலும் நிரந்தரமாகவா உறுப்பினர் அல்லாது இருக்கப் போகிறார்கள். ஆறுமாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே!"

ஆக தகுதி வாய்ந்த ஒருவர் தேர்தலை சந்திக்க முடியாத அல்லது தோற்றுப் போகும் வேளையில் அவரது நிர்வாகத் திறனை அரசு இழக்கக் கூடாது என்பதுதான் சட்ட வரைவாளர்கள் எதிர்பார்த்த நோக்கம். இதன் அடிப்படையிலேயே அரசியலமைப்பு சட்ட பிரச்னைகளுக்கான கேள்விகளுக்கு நீதிமன்றங்கள் பதிலளிக்கின்றன...

1 comment:

Doctor Bruno said...

14/15/2001ல்

????

14/5/2001 என்று நி்னைக்கிறேன்