27.9.06

இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா?


ராஜாத்தியும் செல்லையாவும் சென்னையில் படிக்கும் போது காதலர்கள். ஆனால் அவர்களது காதல் அவர்களது பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது இருவருக்கும் தெரியும். ஏனெனில் அவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் காதலித்த ஆண்டு 1960. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் என்று சொல்லப்பட்ட திராவிட இயக்கமானது கல்லூரி மாணவர்களை தன்னகத்தே இழுத்து வேகமாக வளர்ந்து வந்த காலம். அதன் தலைவர் பெரியார் ஈ.வி.ராமசாமி இந்து மத சடங்குகளை தூக்கி எறிவதாக கங்கணம் கட்டிக் கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். செல்லையா சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். சுயமரியாதை இயக்கம் எதிர்த்து நின்றவற்றில் முக்கியமானது இந்து திருமண சடங்குகள். செல்லையா தனது இயக்கத் தோழர்களின் ஆலோசனை வேண்ட விரைவிலேயே ராஜாத்தியும் செல்லையாவும் பெரியார் தலைமையில் வெறுமே மோதிரங்களையும், மாலைகளையும் மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள்....இல்லை அவ்வாறு நினைத்துக் கொண்டார்கள்!

விடுமுறையில் வீட்டுக்கு போன ராஜாத்தி வரவில்லை. செல்லையா தானும் ராஜாத்தியும் திருமணம் செய்து கொண்டதாக கூறி ராஜாத்தி தன்னுடன் வந்து சேர்ந்து வாழ வேண்டும் (Restitution of Conjugal Rights) என்று வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றம் இந்து திருமண சடங்குகள் ஏதும் பின்பற்றாமல் நடைபெற்றதாக கூறப்படும் திருமணத்தை எவ்வாறு திருமணமாக அங்கீகரிப்பது என்ற கேள்வியை எழுப்பியது. செல்லையாவின் வழக்கறிஞர்களிடம் இருந்ததோ ஒரே பதில்! எந்த இந்து ஆகமங்கள் வகுத்த சடங்கு முறைகளை தூக்கி எறிய வேண்டும் என்று அந்த திருமணம் நடைபெற்றதோ அதே இந்து மத ஆகமங்கள் கூறும் 'காந்தர்வ முறையிலான' திருமணமே செல்லையாவின் திருமணம், என்று வாதிடப்பட்டது.

ஆனால் இதே முறையிலான ஒரு வாதம் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடை பெற்ற மற்றொரு சுயமரியாதை திருமணம் சம்பந்தப்பட்ட (தெய்வயானை ஆச்சி v/s சிதம்ப்ரம் செட்டியார் AIR1954 Mad 557) என்ற வழக்கிலும் எடுத்து வைக்கப்பட்டு சென்னை உயர்நீதி மன்றத்தினால் நிராகரிப்பட்டு இருந்தது. நீதிமன்றம் 'காந்தர்வ முறை என்பது சரிதான். ஆனால் அவ்வகையான திருமணத்திலும் முக்கியமான சடங்குகள் பின்பற்றப்பட் வேண்டியது அவசியம். அந்த சடங்குகள் எதுவும் பின்பற்றப்படாத வகையில் இந்த் திருமணம் செல்லாது' என்று தீர்ப்பு கூறியது (1966 (2) MLJ 40).

1954-ல் கூறப்பட்ட தெய்வயானை ஆச்சி வழக்கு தீர்ப்பும் 1966-ன் ராஜாத்தி வழக்கின் தீர்ப்பும் சுயமாரியாதை இயக்கத்தில் பெரிய ஆதங்கத்தை எழுப்பியது. அதன் பலனாக சுயமரியாதை இயக்கத்தின் கிளையான திராவிட முன்னேற்ற கழகம் 1967-ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் கொணர்ந்த முதல் சட்டத்திருத்தம், ‘சுயமரியாதை திருமணங்கள்' என்ற புதிய வகை திருமணங்களும் இந்து திருமணம்தான் என்று இந்து திருமண சட்டம்'1955 ல் ஏற்ப்படுத்தியதுதான். இந்த சட்டத்திருத்தம் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும்.

காதலர்களை இப்படி பிரித்துப் போட்டு சட்டத்திருத்தத்திற்கு வழிவகுத்த இந்து திருமண சட்டம்'1955 என்ன சொல்கிறது? இந்து திருமணம் என்பது இரண்டு இந்துக்களிடையே சாஸ்திரப்படியோ, அல்லது நெடுங்காலம் நிலவி வரும் பழக்க வழக்கத்தின்படியோ அல்லது சட்ட ஷரத்துகளின்படியோ நடைபெற்றாலே அது செல்லுபடியாகும். நமது கிராமங்களில் கோவில் பூசாரியை வைத்து வேறு சடங்குகள் இல்லாமல் தாலி கட்டிக் கொள்வது நெடுங்காலம் நிலவி வரும் பழக்க வழக்கத்தில் வருவதால் செல்லும். மேலே சொன்ன வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாதியில் சடங்குகளை கடைபிடித்து திருமணம் செய்வது வழக்கம். பல்வேறு சடங்குகள் இருப்பினும் 'சப்தபதி' 'பானிகிரஹானம்' என்ற இரு சடங்குகள் கடைபிடிக்காத பட்சத்தில் அந்த திருமணம் அறவே செல்லாது. இந்த இரண்டு வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில்தான் செல்லையா தனது திருமணம் 'காந்தர்வ' என்ற இந்து சாஸ்திரங்களில் கூறப்பட்ட முறையில் நடைபெற்றதாக வாதிட்டார். அதனை ஒத்துக் கொண்ட் நீதிமன்றம் காந்தர்வ முறையிலும் பின்னர் திருமண சடங்குகள் அவசியம் என்றது.


இந்து சாஸ்திரீய திருமண முறைகள்

சட்டத்தின் அங்கீகாரம் பெற்று விட்ட இந்து சாஸ்திரங்கள் திருமணங்களைப் பற்றி என்ன சொல்கிறது? காந்தர்வ திருமணம் என்பது ஒரு முறையென்றால் பிற வகையான முறைகள் இருக்கின்றனவா? இந்து சட்டத்திற்காக ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள் என்று பல மூலங்கள் இருக்கின்றன. ஆதிகாலத்தில் இருந்தே அறியப்பட்டதும் இதற்கெல்லாம் தலையானதுமான மனுவின் சட்டங்கள் இவற்றில் முக்கியமானது. இந்து சாஸ்திரங்கள் எட்டு வகையான திருமண முறைகள் பற்றி கூறுகின்றன. அந்த எட்டு வகை திருமணங்களைப் பற்றி அர்த்த சாஸ்திரம் எழுதிய கெளடில்யர் வரை பல்வேறு ரிஷிகள் குறிப்பிட்டு இருந்தாலும் மனுவின் விளக்கம் பயனுள்ளது.

1. பிரம்ம முறை
வேத ஆகமங்களை கற்றுத்தேர்ந்து, நல்லொழுக்கமுள்ள ஒரு ஆணை, பெண்ணின் தந்தை அழைத்து, தனது மகளுக்கு விலையுயர்ந்த ஆடை அணிகலன்களைப் பூட்டி மணமுடித்து வைப்பது.

2. தெய்வா முறை
பூசை புனஸ்காரங்களை நிறைவேற்றும் அர்ச்சகருக்கு, பெண்ணின் தந்தை தனது மகளை ஆபரணங்களைப் பூட்டி தானமாக அளிப்பது.

3. அர்ஷா முறை
புனித கடமையை நிறைவேற்றும் பொருட்டு மணமகனிடம் இருந்து பெண்ணின் தந்தை தானமாக இவ்விரண்டு ஜோடி பசுக்களையும் காளைகளையும் பெற்று தனது மகளை மணமகனுக்கு அளிப்பது.

4. பிராஜாபத்ய முறை
பெண்ணின் தந்தை மணமகனுக்கு மரியாதை செலுத்தி, 'நீங்கள் இருவரும் இனி உங்கள் கடமைகளை இணைந்தே நிறைவேற்றுவீர்களாக' என்று சொல்லி தனது மகளை தானமாக அளிப்பது.

5. அசுர முறை
மணமகன் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனங்களை ஒரு கன்னிப் பெண்ணின் உறவினர்களுக்கு பரிசாக அளித்து மணமகளை அடைவது

6. காந்தர்வ முறை
மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவரான பாலுணர்வால் உந்தப்பட்டு தாமாகவே இணைந்து வாழ்வது.

7. ராக்ஷஷ முறை
ஒரு பெண்ணின் உறவினர்களை கொன்று அல்லது காயப்படுத்தி, அவள் அழுதாலும் அரற்றினாலும் கவலைப்படாமல் அவள் விருப்பத்துக்கு மாறாக அவளை கவர்ந்து செய்து மணமுடிப்பது.

8. பைசாச முறை
ஒரு பெண் மயக்கமுற்று அல்லது உறக்கத்தில் இருக்கையிலோ அல்லது போதையிலிருக்கையிலோ அவளை நயவஞ்சகமாக அடையும் பாவகரமான முறை.

அனைத்து ரிஷிகளும் சிறிதளவே ஒருவருக்கொருவர் இந்த விளக்கங்களில் இருந்து வேறுபடுகிறார்கள். உதாரணமாக கெளதமர், யக்ஞவல்கியர் போன்றவர்கள் ராக்ஷஷ முறையினை, 'போரில் பலப்பிரயோகம் செய்து மணப்பெண்னை கவர்ந்து வருதல் காந்தர்வ முறை' என்று எளிமையாக குறிப்பிட்டுகின்றனர். பெயரிலும் வித்தியாசம் இல்லை என்றாலும் பெளதன்ய ராக்ஷஷ முறையை ஷாத்ர முறையென்றும் அசுர முறையினை மனுஷ முறையென்றும் கூறுகின்றார். பொதுவாக அனைவரும் ராக்ஷஷ முறை சத்திரியர்களுக்கு சட்டப்பிரகாரமான ஒன்று என்று ஒத்துக் கொள்கின்றனர். பைசாச முறையை எல்லோருமே தவறான முறை என்று ஒதுக்கினாலும் பெளதன்யர் மட்டும் காந்தர்வ, பைசாச முறைகள் சூத்திரர்களுக்கு தவறில்லை என்கிறார்.

இந்த எட்டுவகை திருமணங்களில் பிராஜாபத்ய மற்றும் பைசாச முறைகள் வெகுகாலம் முன்பே வழக்கொழிந்து விட்டன. பிரஜாபத்ய முறைக்கும் பிரம்ம முறைக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை எனினும் மிக எளிமையான எவ்வித பிக்கல் பிடுங்கல் இல்லாத முற்போக்கான ஒரு முறை இந்து சமுதாயத்திலிருந்து அழிந்து போனது வருந்தத்தக்க ஒரு விஷயம். ராஜபுத்திரர்களிடையே நிலவி வந்த ராக்ஷஷ முறையும் ஒழிந்து போனாலும் சில மலைவாழ் பழங்குடிகளிடம் இன்றும் திருமணச் சடங்குகளில் ஒன்றாக நிலவி வருகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் மேற்சொன்ன எட்டு முறைகளும் ஒரு பெண்ணை திருமணத்திற்காக அடையும் முறையே தவிர திருமண முறைகள் அல்ல. ஏனெனில் திருமண சடங்குகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த எட்டு முறைகளை மணமகளை தானமாக தருதல், விற்றல் மற்றும் மணமக்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம். கடைசி மூன்று வகைகளில் மணமக்களுக்கிடையேயான ஒப்பந்தம் திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ ஏற்படுவதாக கருதப்படுகிறது.

பைசாசம் என்று ஒரு முறை இருப்பதாலேயே அனுமதியில்லா உடலுறவு என்பது வேதகாலங்களில் ஒத்துக் கொள்ளப்பட்டது என்பது அர்த்தம் அல்ல. யக்ஞவல்கியர் குற்றவாளியின் கைகளை வெட்ட வேண்டும் என்கிறார். என்ன! அந்தப் பெண் உயர்குடியில் பிறந்திருந்தால் மரணதண்டனை என்கிறார். பாதிக்கப்பட்டவர் பிறந்த குடியைப் பொருத்து தண்டனைகள் மாறுவது ஏற்றுக் கொள்ளப்ப்ட்ட ஒரு விஷயமாக இருந்தது. ஆந்திர நாட்டை சார்ந்தவர் என்று கருதப்படும் அபஸ்தம்ப பாலியல் குற்றங்களுக்கு தரும் தண்டனை இன்று கூட பலரால் அடிக்கடி பரிந்துரைக்கப்படுவது. அதாவது ஒரு பெண்ணைப் பார்த்து, ஆபாசமாக பாடினால் பாடிய நாக்கு இழுத்து வைத்து அறுக்கப்படும். புரிந்து கொண்டிருப்பீர்கள். 'எந்த உறுப்பு தவறு செய்ய பயன்படுத்தப்படுகிறதோ அந்த உறுப்பினை வெட்டி எறிய வேண்டும்' என்கிறார்.

எப்படியோ பிரம்ம, காந்தர்வ மற்றும் அசுர வகை திருமணங்களைத் தவிர மற்ற வகை திருமணங்கள் ஏறக்குறைய முற்றிலும் தற்போது வழக்கொழிந்து விட்டது. இந்த மூன்று வகைகளிலும் கெள்டில்யரால் அர்த்த சாஸ்திரத்தில் 'தர்ம விவாகம்' என்று பரிந்துரைக்கப்பட முதல் ஐந்து வகை திருமணங்களில் இடம் பிடிக்காத, காந்தர்வ முறை மட்டுமே எதிர்காலத்தில் நிலைத்திருக்கப் போகிறது.


காந்தர்வ முறை திருமண முறையும் இந்தியாவின் அதன் எதிர்காலமும்
மிகவும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு பல்வேறு காலங்களில் வேத வல்லுஞர்களாலும், நீதி மன்றங்களாலும் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு திருமண முறை உண்டென்றால் அது காந்தர்வ முறையாகத்தான் இருக்க முடியும். மனுவின் விளக்கத்தை அப்படியே எடுத்துக் கொண்டு 'சடங்குகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் காந்தர்வ முறை என்பது 'கள்ளக்காதல்' (concubinage) என்ற பதத்தின் இடக்கரடக்கலான வார்த்தை' என்று நிராகரிக்கப்பட்டது. ஆனால் மனு பிற திருமணங்களுக்கும் சடங்குகளை எடுத்துரைக்கவில்லை. சடங்குகள் என்பது எல்லா வகை திருமணங்களும் முழுமை பெறுவதற்கு அவசியம் என்பது மறைபொருளான உண்மை. ஆகவே, ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தகுந்த சடங்குகளுடன் அவர்கள் மணமுடிக்குங்கால் அதனை சட்டபூர்வமில்லாதது என்று ஒதுக்கி விட முடியாது. என்ன! சில சமயங்களில் காந்தர்வ திருமணங்களில் சடங்குகள் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்ட பின் நிறைவேற்றப் படுகிறது. ஒரு மணமகள் தன் சுய விருப்பத்தில் மணமகனை தானே தேர்ந்தெடுக்கும் சுயம்வரமே ஒரு வகையான காந்தர்வ திருமணம்தான்.

காந்தர்வ வகை திருமணங்கள் ஆதிகாலம் தொட்டே நிலவி வருவது மட்டுமல்லாமல் பல்வேறு ரிஷிக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. தர்ம சாஸ்திரங்கள் என்று அழைக்கப்படும் ஸ்மிருதிகள், ‘பருவமடைந்து மூன்று ஆண்டுகள் மணமுடிக்கப்படாமல் இருக்கும் ஒரு பெண் தன்னுடய பிரிவுக்குள் தானே ஒரு மணமகனைத் தேர்ந்தெடுத்து மணமுடிக்க' அனுமதி தருகிறது. ஆதிகாலத்தில் காந்தர்வ முறை ஷத்திரியர்களுக்கு மட்டுமே உரியது என்று கருதப்பட்டாலும் மனு, பெளதன்யர், நாரதர், யக்ஞவல்கியர் போன்றவர்கள் அனைத்து பிரிவுகளுக்கும் ஏற்றது என்று கூறிய படியால் அனைத்து பிரிவுகளிலும் சட்டர்பூர்வமாக கருதப்பட்டது. ஜாதிக்கு ஜாதி காதல் உணர்வுகள் வித்தியாசப்பட போகிறதா என்ன?

ஆனாலும், காந்தர்வ முறைகளை பற்றி எழுந்த குழப்பங்கள் நீதிமன்ற தீர்ப்புகளையும் பாதித்தது. காந்தர்வ முறை வழக்கொழிந்து விட்டதா இல்லையா? என்ற பல சந்தேகங்கள் எழுந்து சில முன்னுக்குப் பின் முரணான தீர்ப்புகள் கூறப்பட்டன. ஆனாலும் காலப்போக்கில் திருமண சடங்குகள் கடைபிடிக்கப்படுகையில் காந்தர்வ திருமணங்கள் செல்லும் என்பது பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட சட்டக்கருத்தாக உருப்பெற்றது.

தற்போது சட்டரீதியாக, இப்படிப்பட்ட திருமண முறைகள் அவசியமில்லாத ஒன்று. 1954ம் ண்டு நிறைவேற்றப்பட்ட சிறப்புத் திருமண சட்டம் (Special Marriage Act'1954) மனம் ஒத்த இரு இந்துக்கள் பெற்றோர் சம்மதம் இல்லாமல் சடங்குகளை பின்பற்றாமல் திருமண பதிவாளர் முன்னிலையில் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ள வழி வகுத்தது. ஆனால் அத்தகைய மணமக்களுக்கு சொத்துரிமை வழங்குவதில் சில குழப்பங்கள் ஏற்பட்டு 1976ம் ஆண்டு ஏற்பட்ட சட்ட மாறுதல்கள் மூலம் பிரச்னைகள் முற்றிலும் நீக்கப்பட்டன.

காந்தர்வ முறை மணம் புரிபவர்கள் தற்போது சிறப்புத் திருமண சட்டம்1954 அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவராயிருப்பின் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் வரும் சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணங்களைப் குறித்த சிறப்பு ஷரத்துகளின் அடிப்படையில் திருமணம் புரிந்து கொள்ள வகையிருக்கிறது.

திருமணமே பொருளாதார பாதுகாப்பை முன்னிறுத்தி ஏற்பட்டுள்ள ஒரு வழக்கம். பொருளாதார பாதுகாப்பை தவிர வேறு உபயோகங்கள் திருமணங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 'திருமணப் பந்தத்தினை மீட்டெடுப்பதற்கான' சட்டங்கள் (Restitution of Conjugal Rights) இருந்தாலும் விரும்பாத ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ நடைமுறையில் சேர்ந்து வாழ வைப்பது நீதிமன்றங்களால் முடியாத காரியம். எனவேதான் தனது குடிமக்களுக்கு சமுதாய, பொருளாதார பாதுகாப்பை அளிக்கவல்ல வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது திருமண பந்தமில்லாமல் 'long term relationship' என்று அழைக்கப்படும் மனமொத்த இருவர் சேர்ந்து வாழும் முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் வாழ்வதால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. இந்தியாவும் அவ்வாறு பொருளாதார வளர்ச்சி பெறும் எதிர்காலத்தில் இங்கும் மெல்ல மெல்ல அத்தகைய முறை பின்பற்றப்பட போகிறது. மும்பை போன்ற நகரங்களில் மேல்தட்டு மக்கள் சிலர் ஏற்கனவே அப்படி வாழ்கின்றனர். தகுந்த பொருளாதார பாதுகாப்பு இருக்கையில் இப்படி வாழ எண்ணம் கொள்ளும் யாரும் இம்முறையை தாராளமாக கடைபிடிக்க முடியும். 'இது அந்நிய கலாச்சாரம் இல்லை. காந்தர்வ முறை என்று தி நூல்களில் சொல்லப்பட்ட இந்திய கலாச்சாரத்தின் நவீன வடிவம்தான்’ என்ற வாதமும் வைக்கப்பட இயலும். எது எவ்வாறாயினும், கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பும், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் தன்மையைத் தவிர வேறு எந்த தாலியும் திருமண பந்தத்திற்கு வேலி இல்லை...

மும்பை
2002

4 comments:

PRABHU RAJADURAI said...

கேள்விக்கு நன்றி!

நான் ஏற்கனவே எழுதிய பதிவில் இதற்கு பதில் உண்டு.

"திருமணத்திற்கு. அதற்கும் ‘சிறப்பு திருமண சட்டம்’ (Special Marriage Act) என்ற பொது சட்டம் உள்ளது. எந்த மதத்தினை சேர்ந்தவரும் இதன்படி எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல் பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொள்ளலாம்"
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_09.html

PRABHU RAJADURAI said...

கேள்விக்கு நன்றி!

நான் ஏற்கனவே எழுதிய பதிவில் இதற்கு பதில் உண்டு.

"திருமணத்திற்கு. அதற்கும் ‘சிறப்பு திருமண சட்டம்’ (Special Marriage Act) என்ற பொது சட்டம் உள்ளது. எந்த மதத்தினை சேர்ந்தவரும் இதன்படி எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல் பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொள்ளலாம்"
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_09.html

PRABHU RAJADURAI said...

சட்டப்படி) கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா...?

மக்கள் சட்டம் வலைப்பதிவில் மேலும் உபயோகமான சில தகவல்கள்

http://www.makkal-sattam.org/2008/10/blog-post.html

புருனோ Bruno said...

ஏற்கனவே திருமணமானவர்கள் தங்களின் திருமணத்தை பதிய வேண்டுமென்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன

1. இந்துக்களுக்கு என்ன விதிமுறைகள்
2. இஸ்லாமியர்களுக்கு என்ன விதிமுறைகள்
3. கிருத்தவர்களுக்கு என்ன விதிமுறைகள்

விளக்க வேண்டுகிறேன்