29.9.06

பரிசுகள் பலவிதம்!

டயோசிசன் (diocese) என்ற வார்த்தையினை அறிந்திருக்கலாம். தென் மாவட்டத்துக்காரர்கள், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்கள் அறிந்திருப்பர். டயோசிசன் என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கிறிஸ்தவ திருச்சபையினை குறிப்பது. கிறிஸ்தவ சபையில் பெரும்பாலும் கத்தோலிக்கர் மற்றும் புரட்டஸ்டாண்ட் (அதாவது ஆதி கத்தோலிக்க திருச்சபையிலிருந்து 'protest' செய்து தனிச்சபை அமைத்தவர்கள்) என்ற இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. கத்தோலிக்கர்கள் வாடிகனில் உள்ள போப்பினை தலைவராக கொண்டு, அதற்கு கட்டுப் பட்டவர்கள். புரட்ட்ஸ்டாண்ட் பிரிவினர் அப்படி எந்த ஒரு பெரிய அமைப்பிற்கும் கட்டுப்படாமல் தனித்து இயங்குபவர்கள்.

புரட்டஸ்டாண்ட் திருச்சபை, இங்கு தென்னிந்திய திருச்சபை (Church of South India or CSI) என்ற பெரிய அமைப்பாக விளங்கினாலும், அதன் சிறுசிறு அமைப்புகளாக விளங்கும் இந்த டயோசிசன்கள் தனித்து இயங்கும் அதிகாரம் படைத்தவை. குறிப்பாக திருநெல்வேலி டயோசிசன் ஆசியாவிலேயே மிகப் பழமையானது மற்றும் இந்தியாவிலேயே பெரிய புரட்டஸ்டாண்ட் திருச்சபை. இதே போல கத்தோலிக்க டயோசிசனும் உண்டு. கத்தோலிக்க-புரட்டஸ்டாண்ட் திருச்சபைகளுக்கான போட்டி பெப்ஸி-கோக் போட்டி போல அவ்வளவு பிரபலம்.

திருநெல்வேலி டயோசிசன் தொன்மையானது மட்டுமல்ல, திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அமைப்புமாகும். கலெக்டர் கார்களில் காணப்படும் அவர்கள் பெயர்கள் தாங்கிய போர்டினைப் போல, 'பிஷப் ஆப் தின்னவேலி' என்ற பெயரைத் தாங்கிய போர்டுடன் ஒரு கான்டாசா கார், கடந்த முறை திருநெல்வேலி சென்றிருந்த போது எங்கள் அம்பாசடர் காரினை சர்ர்ர்ர் என்று தாண்டிச் சென்றதைப் பார்த்தேன். இத்தகைய சக்தி, திருநெல்வேலி டயோசிசனுக்கு இறையருளால் மட்டுமன்றி அதற்குச் சொந்தமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல கோவில்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் இதர விடுதிகளின் நிர்வாகத்தாலும் கிடைக்கிறது.

ஆர் எஸ் எஸ்காரர்கள் மேடைக்கு மேடை முழங்குவது போல மத மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினருக்கு நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு முக்கியமான உரிமையினை வழங்கியுள்ளது. அதாவது அவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்விக்கூடங்களை ஆரம்பித்து நடத்தலாம். மற்றபடி பெரிதாக உரிமை எதனையும் சிறுபான்மையினர் பெற்று விடவில்லை. பல நீதிமன்றத் தீர்ப்புகளால் தற்போது சிறுபான்மையினரின் கல்விக்கூட நிர்வாக உரிமை மட்டுப் படுத்தப் பட்டிருந்தாலும், இத்தகைய கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிக்கும் ஒரு பெரிய உரிமை இத்தகைய சிறுபான்மை அமைப்புகளுக்கு உண்டு. இதனோடு அபரிதமாக உள்ள சொத்துக்கள் மற்றும் கணிசமான எண்ணிக்கையில் உள்ள திருச்சபை அங்கத்தினர்கள், டயோசிசனை ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றியுள்ளனர்.

இவ்விதமான லௌகீகமான விஷயங்களை உள்ளடக்கிய இறைவனது திருச்சபையில், அதனை வழிநடத்தும் நபர்களின் எண்ணங்கள் ஆன்மப்பிரகாரமாக மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணுவது தவறு. சக்தி வாய்ந்த டயோசிசனின் பல்வேறு நிர்வாக அலுவல்களுக்கான பதவிகளுக்கு கடும் போட்டி நிலவும். கத்தோலிக்க திருச்சபை போலன்றி புரட்டஸ்டாண்ட் திருச்சபையில் அதன் தலைவரான 'பிஷப்' (ஆயர் என்றழைக்கிறார்கள், தமிழில்) பதவி உள்பட தேர்தல்தான். தேர்தல் என்றாலே அதன் வழித்தோன்றல்களான போட்டி, பொறாமை, வஞ்சகம் ஏன் சிலமுறை வன்முறையும் டயோசிசன் விவகாரங்களில் அரசு தேர்தல்களைப் போல எழுவதுண்டு. ஆனால் ஒருமுறை நாங்கள் சந்தித்த அனுபவம் வித்தியாசமானது...

டயோசிசன் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட ரீதியான பிரச்னைகளுக்காக எங்களை அணுகுவதுண்டு. அப்படித்தான் அன்று நானும் எனது சீனியரும் முக்கியமான ஒரு வேலையிலிருந்த போது ஒருவர் வேகமாக அலுவலகத்தினுள் நுழைந்தார். வந்தார் என்று சொல்வதை விட ஜல்லிக் கட்டுக்காக உசுப்பேற்றி விட்ட ஒரு காளையினைப் போல சடாரென புகுந்து, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நின்றார். நான் என் சீனியரிடம் கண் காட்ட, தலையினைத் தூக்கிப் பார்த்தவர் எதுவும் சொல்லாமல், வந்தவரே ஏதாவது சொல்லட்டும் என்ற தொனியில், முகத்தில் எந்த சலனமுமின்றிப் பேசாமல் இருந்தார்.

வேறு யாரவதென்றால் கோபப் பார்வை அல்லது குறைந்த பட்சம் ஒரு எரிச்சல் பார்வையாவது பார்த்திருப்பார். ஆனால் வந்தது டயோசிசனில் முக்கியமான பொறுப்பு வகிக்கும் கொளரவமான நபர். அது தவிர ஒரு வேலையில் அதீத கவனத்துடன் மூழ்கியிருக்கையில் என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும், செய்து கொண்டிருக்கும் வேலையின் தீவிரத்திலுருந்து விடுபட சிறிது நேரம் பிடிப்பதுண்டு.

வந்தவர் நாற்காலியிருந்தாலும் அமரவில்லை. அதன் மீது கைகளை ஊன்றிக் கொண்டே, 'சார், இந்த ராஸ்கல்கள் பண்ண காரியத்தைப் பாத்தீயளா?' என்றார்.

'ராஸ்கல்கள்' என்று அவர் குறிப்பிட்டது, டயோசிசனில் அவருக்கு எதிரணியினை சேர்ந்தவர்கள் என்று அனுமானித்துக் கொண்டேன்.

'என்னாச்சு?', எனது சீனியர். தற்போது அவர் குரலில் லேசான எரிச்சல் இருந்தது. இதற்கு மேலும் எதுவும் அவர் பேச விரும்பவில்லை என்பதும் எனக்குப் புரிந்தது.

'என்னா அசிங்கம். அவனுங்க பாருங்க, அங்ன ஆபீஸ் சுவர் பூரா என்னப் பத்தி கெட்ட கெட்ட வார்த்தையா எழுதீருக்கானுவ...'

எங்கள் பக்கத்து கெட்ட வார்த்தைகள், உலகின் எந்த வகைக்கும் சளைத்ததில்லை. திட்டப்படுபவரை விட திட்டப்படுபவரின் முன்னோர்கள்தான் வம்புக்கு இழுக்கப் படுவதுண்டு. "அட! ஏதோ சுவராசியமான விஷயம் போல என்று நான் நினைத்தது போல எனது சீனியரும் நினைத்திருக்க வேண்டும். மெல்ல நாற்காலியில் சாய்ந்து, ஒரு சிகரெட்டினையும் வாயில் வைத்துக் கொண்டார். மண்டையினை உடைத்துக் கொண்டிருந்த வேலையிலிருந்து ஒரு சின்ன ரிலாக்சேஷன் என்று நினைத்திருக்கலாம். மெல்லிதான ஒரு சிரிப்பினைக் கூட அவர் முகத்தில் என்னால் உணர முடிந்தது.

'என்ன செய்யணும்', சிகரெட்டினைக் கொளுத்திக் கொண்டார்.

'நா, அவனுங்கள விடப் போறதில்லை. மான நஷ்ட நோட்டீஸ் ஒன்னு அனுப்புங்க சார்', நாலைந்து பெயர்களைச் சொன்னார், சடசடவென்று. அவர்கள்தான் அதற்குக் காரணம் என்று.

'அனுப்பிரலாம்.....' என்று சீனியர் என்னைப் பார்த்தார்.

குறிப்பறிந்த நான், எனது பேடை இழுத்து வைத்து, 'அதுல என்ன எழுதியிருந்ததுன்னு கரெக்டா சொல்லுங்க...'

'எல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைங்க...' இன்னமும் அவருக்கு உட்காரத் தோன்றவில்லை.

'அதான் என்ன கெட்ட வார்த்தை?'

'அத்த எப்படி தம்பி என் வாயால சொல்லுவேன். அந்த அசிங்கத்த நான் சரியா பாக்கக்கூட இல்ல'.

நான் என் சீனியர் முகத்தைப் பார்த்தேன், பரிதாபமாக.

சீனியர், 'அப்ப ஒண்ணு செய்யுங்க. திரும்பி ஆபீஸ¤க்குப் போயி, அங்க என்ன எழுதியிருக்குன்னு ஒரு பேப்பரில எழுதிட்டு வாங்க. பையன் நோட்டீஸ் அனுப்பிருவான்' பையன் என்றது என்னை.

வந்தவருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. அப்படியே எழுதிக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனார்.


ஒரு மணி நேரம் கழிந்தது. நாங்கள் எங்கள் வேலையினை முடித்து விட்டு, டீ குடித்துக் கொண்டிருந்தோம். எழுதிக் கொண்டு வரப் போனவரைக் கூட மறந்து விட்ட தருணத்தில் மீண்டும் உள்ளே நுழைந்தார்.

நேரே எங்கள் அறைக்கு வந்தவர், மறுபடியும் உட்காராமல் நின்றபடியே ஒரு சின்ன 'பிரவுன் கவரை’ எனது சீனியர் முன் மேஜையில் போட்டார்.

'பாருங்க, நீங்களே படிச்சுக்கங்க...'

சீனியர் அதைத் தொடவில்லை. நான்தான் அதை எடுத்துப் பிரித்தேன். பிரித்தால் உள்ளே காகிதம் எதுவும் இல்லை. ஒரு ஐம்பது ரூபாய்த் தாள் மட்டும் இருந்தது. எதுவும் புரியாமல் அதை சீனியரிடம் காட்டினேன். இருவரும் வந்தவர் முகத்தைப் பார்த்தோம். அவரோ அந்தக் கவரையும் பணத்தையும் வெறித்துப் பார்த்தவாறு இருந்தார். திடீரென, அவருக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. வியர்த்து வேறு கொட்டத் தொடங்கி விட்டது. நாங்கள் என்ன? என்ன? என்று கேட்பதற்குள், சடாரென என் கையில் இருந்த கவரையும், பணத்தையும் பிடுங்கி எதுவும் சொல்லாமல் எங்கள் அலுவலகத்தை விட்டு வெளியே ஒடி விட்டார். நாங்கள் இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தோம். என்ன பேசுவது என்று கூட எங்கள் இருவருக்கும் புரியவில்லை.


மேலும் ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். அந்த நபர் மறுபடி வந்தார். முதல் முறையாக அவர் முகத்தில் பெரிய சிரிப்பு. சத்தம் எதுவுமில்லை...ஆனால் வாயில் பொங்கிய சிரிப்பினை அவரால் அடக்க முடியவில்லை. அந்தச் சிரிப்பு மாறாமலேயே, அவராக நாற்காலியினை இழுத்துப் போட்டு அமர்ந்தார். முதல் முறையாக ரிலாக்ஸ்டாக அவரைப் பார்த்தேன். அந்த்ச் சிரிப்பும் முகத்தில் ஒட்டிவிட்டாற்ப் போல மறையவில்லை. 'என்ன ஆச்சு?' கண்களிலேயே சீனியர் கேட்டார்.

'நீங்க நம்ப மாட்டீங்க இந்தக் கூத்தை. பெரிய ஆபத்திலருந்துல்லா இன்னைக்கு தப்பிச்சேன். அப்போ இங்க வந்தன்லா, வர்ற வழில அங்ன சென்னரி ஹால்ல, நம்ம பிரண்டோட மகளுக்கு சடங்கு. அதுக்கு போனவன், மொய் கவருக்கு பதிலா, நீங்க எழுதிட்டு வரச் சொன்னீங்கல்லா, அந்த காயிதம் வச்சிருந்த கவரை குடுத்துட்டு வந்துட்டேன். இங்க பாத்தன்லா. அப்படியே ஆடிப் போயிட்டேன். மறுபடி அங்ன போயி அவன்ட என்னத்தையோ சொல்லி, அந்த கவரைத் தேடி வாங்கிட்டு வந்திட்டன். நல்ல வேளை அவம் பிரிக்கல்ல...'

ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். நாங்கள் சிரிக்கக் கூட இயலாமல், நம்ப முடியாமல் உட்கார்ந்திருந்தோம். வேறு பல விஷயங்களைப் பற்றி பேசிச் சென்றார். நாங்கள் அந்த கவரை வாங்கிப் பார்க்கவும் இல்லை. அவரும் நோட்டீஸ் அனுப்புவதைப் பற்றி பேசவில்லை.

'விடுங்க. கெடக்குறானுங்க. செத்த பயலுக' என்றார்.

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

:)

நல்ல காமெடியான நிகழ்வு. சிந்திக்கவும் சிரிக்கவும் எழுதியிருக்கீங்க.

ramachandranusha(உஷா) said...

:-)))))))))

ramachandranusha(உஷா) said...

பிரபு, கமெண்ட் மாடரேஷன் போடவில்லையா? அதனால்தான் தமிழ்மணத்தில் விரைவில் காணாமல் போகிறது. பழசை எல்லாம் இப்பத்தான் படிக்கிறேன்.