‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது சென்னை இணைய குற்ற தடுப்பு காவலர்களிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த வலைப்பதிவர்களின் பதிவுகள் மூலம் மேற்போக்காக இதனைப் பற்றி அறிய முடிகிறது.
இந்தப் புகாரின் பெயரில், மூர்த்தி காவலர்களால் விசாரிக்கப்பட்டதாகவும் பின்னர் ‘போலி டோண்டு’வால் உருவாக்கப்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. விசாரணை நிலுவையில் இருப்பதாக தெரிவித்தாலும், மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டாரா அல்லது முன் ஜாமீன் பெற்றாரா என்ற விபரம் தெரியவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னர், இணைய குழுமங்கள் மூலம் விவாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய எழுத்தாளருக்கும் முக்கிய பதிவர் ஒருவருக்கும் பிரச்னை உருவாகி எழுத்தாளர் மற்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்னிடம் ஆலோசனை கோரினார். இணையத்தில் ஏற்ப்படும் பிரச்னைகள், இணையத்தை தாண்டி வெளி உலகிலும் கசிந்து ‘ஜானி குவஸ்ட்டு’ கார்ட்டூன் சித்திரங்கள் போல உண்மையிலேயே காயத்தை ஏற்ப்படுத்தி விடுமோ என்று அஞ்சுகிறேன் என்று எழுதினேன்.
போலி டோண்டு பதிவுகளை தொடர்ந்து கவனித்து வந்தவன், இறுதியில் அதீத வெறுப்பின் உச்சத்தில் (or frustration) விடப்பட்ட சில கொலை மிரட்டல்களை கண்டு அதிர்ந்து போனேன். ‘இறுதியில் இதற்கு ஒரு முடிவுதான் இருக்கிறது. அது டோண்டுவின் கொலையாகக் கூட இருக்கலாம்’ என்ற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவரின் மனநிலையில் அந்த மிரட்டல் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல என்று நினைத்தேன். நல்லவேளை பிரச்னை விரைவில் முடிவுக்கு வந்தது.
‘போலி டோண்டு’ பிரச்னை முடிவுக்கு வந்தாலும், காவலர் விசாரணை மற்றும் அதன் பக்க விளைவுகள் தமிழ் இணையத்தில் பெரிய மாறுதலை கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. Tamil Web World has lost its innocence!
-oOo-
தமிழ் இணையத்திற்கு வெளியே எனக்கு சாருநிவேதிதாவைத் தெரியாது, பின் நவீனத்துவம் தெரியாது...இங்கு பதிவர்களால் சங்கோஜமின்றி உபயோகிக்கப்படும் வார்த்தைகள் பல தெரியாது!
இங்கு எழுதப்படும் கருத்துகளும், அவை விவாதிக்கப்படும் தொனியும், உபயோகப்படுத்தப் படும் வார்த்தைகளும், வெளி உலகம் அறியாதவை!
உதாரணத்திற்கு மதுரை உயர்நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு நெருக்கமான ஒன்றிரண்டு வழக்குரைஞர்களைத் தவிர யாருக்கும், எந்தவொரு நீதிபதிக்கும், பணியாளருக்கும் வலைப்பதிவுகளைப் பற்றி தெரியாது. நான் தமிழில் இவ்வாறு எழுதுகிறேன் என்பதே ஆச்சரியமாக இருக்கும்.
வெளி உலகால் அதிகம் அறியப்படாதலாயே இங்கு வரைமுறையின்றி பல விடயங்கள் எழுதப்படுகின்றன. ஜெயமோகன் எம்ஜிஆர், சிவாஜியை பற்றி இணயத்தில் எழுதியதை ஆனந்த விகடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்றதன் விளைவு நாம் அறிந்ததே!
எனவேதான் என்னுடைய அச்சம், தமிழ் வலைப்பதிவுகள் காவலர்களின் கண்காணிப்பில் வருகையில், எதிர்காலத்தில் மோசமான சில பின் விளைவுகள் நிகழலாம் என்பதுதான். சமயங்களில் சில நீதிபதிகள் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறித்து வகுப்பெடுக்கையில், ‘ஆமாம், இந்தக் கண்ணியத்தை எல்லாம் எவ்வித எல்லைகளுமின்றி அங்கு இணையத்தில் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று என் நண்பர்களிடம் கிசுகிசுப்பேன்.
-oOo-
சரி, காவலர்களால் என்ன பிரச்னை?
ஒரு குற்றம் நடந்துள்ளதாக, காவலர்களிடம் புகார் அளித்தால் ‘முதல் தகவல் அறிக்கை’ (FIR) தயாரிப்பார்கள். பின்னர் அதன் மீதான விசாரணையை (Investigation) தொடங்குவார்கள். விசாரணைக்கு ஏதுவாக குற்றம்சாட்டப்படுபவர்கள் கைது செய்யப்படலாம். அதனை தவிர்க்க குற்றம் சாட்டப்படுபவர்கள் முன் ஜாமீன் பெற வாய்ப்புண்டு. அதனால், சிறைவாசத்தை தவிர்க்கலாமே தவிர நீதிமன்றத்தில் சரணடைந்து பின் பிணையில் வர வேண்டும். சரணடையும் தருணத்தில் சில அவமானங்களை சகிக்க நேரிடலாம். அதற்குப் பின்னரும் தினமும் சில காலம் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ கையெழுத்திட நேரிடும். இதனால் ஏற்ப்படும் மன உளைச்சல் ஏராளம்.
முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், இன்னும் மோசம். குறைந்தது மூன்று நாட்களாவது சிறையில் கழிக்க நேரிடும். மூர்த்தியின் வழக்கில், அவர் கைது செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். கைது என்பது கண்டிப்பானது அல்ல!
விசாரணை முடிந்து காவலர்கள் தங்களது இறுதி அறிக்கையினை (Final Report or Charge Sheet) தாக்கல் செய்வார்கள். விசாரணையில் குற்றம் நடைபெறவில்லை என்றால் வழக்கினை முடிக்க நீதிமன்றத்தினை கேட்டுக் கொள்வார்கள். இல்லை குற்றப்பத்திரிக்கை. அதற்குப் பின்னரே நீதிமன்ற விசாரணை!
இது அனைத்தும் முடிவதற்கு சில மாதங்களும் பிடிக்கலாம். சில ஆண்டுகளும் பிடிக்கலாம். விசாரணையில் இறுதியில் பல வழக்குகள் விடுதலையில் முடிந்தாலும் அதற்குள் அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஒரு தொழில்முறை குற்றவாளியாக இருந்தாலொழிய படும் பாடு சொல்லி மாளாது.
பலமுறை நாம், ‘இப்படி தப்பு பண்ணிட்டு தப்பிச்சு வந்துட்டானே’ என்று நினைக்கிறோம். ஆனால் குற்றவியல் வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமான குடும்பங்கள் பல உண்டு!
-oOo-
‘இணைய குற்றம் புரிந்தால்தானே, எனக்கு என்ன பிரச்னை?’ என்று வலைப்பதிவர்கள் பலர் நினைக்கலாம்.
இதனைப் பற்றி எழுத வேண்டும் என்று பலமுறை நினைத்தாலும், தேவையில்லாமல் ஒரு பீதியினை ஏற்ப்படுத்த வேண்டுமா என்பது மட்டுமல்லாமல், இந்த விபரங்களை யாரும் கெட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தி விடக்கூடாது என்று அச்சத்தாலேயே எழுதாமல் இருந்தேன். ஆயினும் தற்போழுது அதன் தேவை அதிகரித்துள்ளதாக உணருகிறேன்.
ஆள்மாறாட்டம், தகவல்களை திருடுவது, மோசடி போன்ற பலவகையான இணைய குற்றங்கள் இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் (Information Technology Act’ 2000) பிரிவு 67ல் வரையறுக்கப்படும் குற்றம் கவனிக்கத்தகுந்தது. போர்னோகிராபி குற்றங்களை தடுக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவினை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சுருக்கமாக அந்தப் பிரிவு,
‘Whoever publishes or transmits......any material which lascivious or appeals to the prurient interest or if its effect is such as to tend to deprave and corrupt person...extend to five years and with fine... என்று உள்ளது.
இந்தப் பிரிவில் மூன்று செயல்கள் குற்றமாகிறது. முதலிரண்டை விடுங்கள் அவற்றை lascivious அல்லது prurient interest என்பதற்கு விளக்கம் கூறுபவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். மூன்றாவது செயலாக கூறப்படுவது ஆபத்தானது. ஒரு ‘மனதைக் கெடுக்கும்’ எந்த ஒரு எழுத்துமே இங்கு குற்றமாகிறது.
அமெரிக்காவில் இருந்து எழுதப்படும் ஒரு வலைப்பதிவு திருநெல்வேலியில் உள்ள ஒருவரது மனதை கெடுப்பதாக கூறி வழக்கு பதிவு செய்வது என்பது காவலர்களுக்கு இயலும் செயல். அமெரிக்க வலைப்பதிவர் இந்தியா வரும் பொழுது, ஒரு விசாரணைக்கு வாருங்கள் என்று கூட்டிச் சென்று அப்படியே ரிமாண்ட் செய்து விட முடியும். பின்னர் அந்த வலைப்பதிவரின் எதிர்காலத்தையே சீரழிக்கவும் முடியும்.
கவனிக்கவும், வலைப்பதிவரை இந்தப் பிரிவின் கீழ் குற்றம் செய்ததாக நீதிமன்றம் தண்டிக்க வேண்டியதில்லை. அதிகபட்சம் வலைப்பதிவர் செய்யக் கூடியது, தான் எழுதியது இந்தப் பிரிவின் கீழ் வராது, குற்றமல்ல என்று கூறி உயர்நீதிமன்றத்தை அணுகி முதல் தகவல் அறிக்கையினை தள்ளுபடி செய்ய கோரலாம். அந்த காலகட்டத்திற்குள்ளாகவும் போதிய வேதனைகளை அந்த பதிவர் அனுபவித்து முடித்திருப்பார்.
பதிவுதான் என்றில்லை, பதிவில் எழுதப்படும் எதிர்வினை, பதிவில் தோன்றும் பிற பதிவுகளுக்கான சுட்டிகள் என்பவற்றையும் transmit என்று கூறி குற்றச்செயலாக்கலாம். மீண்டும் வலியுறுத்துகிறேன். இது குற்றமில்லை என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறலாம். ஆனால், பொய் வழக்கு என்று காவலர்கள் மீது வழக்கு தொடர்வது கடினம். அதுவரை பட்ட கஷ்டம் வழக்கிலிருந்து தப்பித்தாலே பெரிது என்று நினைக்க வைத்திருக்கும்.
-oOo-
காவலர்கள் ஏன் வலைப்பதிவர்களை துன்புறுத்த வேண்டும்?
மூர்த்தி வழக்கில் காவலர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளனர் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால், காவலர்களில் சில கறுப்பு ஆடுகள் உள்ளது. சிவில் வழக்குகளில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இந்தியரோ அல்லது இந்தியாவில் பெரிய நிறுவனமொன்றில் அதீத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஊழியரோ என்றால் அவர்களுக்கு அது பொன் முட்டையிடும் வாத்து. இன்னும் விளக்கமாக கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
-oOo-
இணைய குற்ற தடுப்பு காவலர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ்தான் இங்கு எழுதப்படுபவை குற்றமாகும் என்பதல்ல. இந்திய தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்காகவும், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
முன்பு ஒரு முறை, டென்மார்க் இதழில் வெளியான முகமது நபி பற்றிய கேலிச் சித்திரங்களை தமிழ் பதிவர் ஒருவர் தனது வலைப்பதிவில் வெளியிட்டார். இதுவே ஆனந்த விகடனில் வெளியானால் என்ன நடந்திருக்கும்?
பதிவில் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்ட விபரம் வெளியில் தெரிந்தால், வெளி உலகில் என்ன நடந்திருக்குமோ, அதுவே இங்கும் நடந்திருக்கும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 A கூறுவது சுருக்கமாக, ‘Whoever with deliberate and malicious intention of outraging the religious feelings of any class.........................insults or attempts to insult the religion or religious beliefs of that class..........extend to three years or with fine’
இணையத்திலும் சுதந்திரமாக அனைத்து மதங்களைப் பற்றியும் எழுதப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் எந்த மூலையில் இருக்கும் எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்படலாம். இணைய குற்ற தடுப்பு பிரிவுதான் வர வேண்டும் என்பதல்ல!
மதம் மட்டுமில்லை. அரசியல் தலைவர்கள், புனித பசுக்கள், நீதிமன்றங்கள் இங்கு பதிவர்களால் சகட்டு மேனிக்கு புரட்டியெடுக்கப்படுகிறார்கள். சத்ரபதி சிவாஜியைப் பற்றி ஆர்குட்டில் எழுதினார் என்று பெங்களூர்வாசி ஒருவர் பட்ட பாட்டினை நாம் அறிவோம். அவர் தப்பித்தது, எழுதியது குற்றமில்லை என்பதால் அல்ல. எழுதியதே அவரில்லை என்பதால். நாளை சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி எழுதுகிறீர்கள். நள்ளிரவு கதவைத் தட்டி குஜராத் போலீஸ் உங்களை அள்ளிக் கொண்டு ஆமதாபாத் போனால், எப்படியிருக்கும்?
நடிகை குஷ்பு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு பற்றி கூறியது, இங்கு இணையத்தில் எழுதப்படும் சில கருத்துகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை. ஒன்றுமே இல்லாமல் போனாலும், எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன? அதனால் அவர் அடைந்த தொல்லைகள் எத்தனை?
எனவே, நேரமும், கெட்ட எண்னமும் கொஞ்சம் பணமும் இருக்கும் எவராலும், எவருக்கும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தொல்லைகள் கொடுக்க இயலும் என்பதே என் அச்சம்!
மதுரை
230909