27.10.12

ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 2


ஹைதராபாத் என்றாலே சிறுவயது முதல் உடனடியாக என் மனதில் தோன்றும் ஆர்வம், ‘சாலார் ஜங் மியூசியம்’!.

‘அங்கு ஒரு கடிகாரம் இருக்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு சிறு மனிதன் வெளியே வந்து அங்கிருக்கும் மணியை அடித்து விட்டு உள்ளே சென்று விடுவான்’

‘திரைச்சீலையால் முகத்தை மூடியவாறு ரெபேக்கா சிலை (Veiled Rebecca) இருக்கும்’ என்று எனது பாட்டியிடம் சிறுவயதில் கேட்ட கதைகளிலிருந்தே, தொடரும் ஆர்வம்.

‘அது எப்படி ஒரு சிறு மனிதன் கடிகாரத்துக்குள்ளே இருக்க முடியும்’ ‘எப்படி திரைச்சீலையை கல்லில் வடிக்க முடியும்’ என்று சிறுவயதில் கொண்ட வியப்பு தற்பொழுதும் இல்லையென்றாலும், சாலார் ஜங் மியூசியத்தில் அடியெடுத்து வைத்ததும், ஏதோ எனது பாட்டியின் கை பிடித்து உள்ளே செல்லும் சிறுவனைப் போல உணர்ந்தேன்.

-oOo-

மியூசியத்தை பொறுமையாக பார்க்க வேண்டுமாயின், அரை நாள் குறைந்தது பிடிக்கும். பலவிதமான ஆடை, அலங்காரப் பொருட்கள் பெண்களை மிகவும் கவரும். ஆனால், சுமார் ரூ 15,000 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ள நிஜாமின் நகைகளை பார்க்க முடியாது. அரிதாகத்தான் இதுவரை ஒன்றிரண்டு முறை நகைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆயினும், மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களே பார்க்கப் போதுமானவையாக இருக்கும்.

உள்ளே செல்வதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். காமிரா அனுமதி இல்லை. ஆனாலும், காமிரா நமது பைகளை வெளியேயே வைத்துப் போக இலவசமாக லாக்கர் வசதி உள்ளது. செல் போன்களை அனுமதிக்கிறார்கள்.

உணவு எடுத்துச் செல்ல தேவையில்லை. உள்ளேயே தரமான உணவு விடுதி உள்ளது.

-oOo-

ஹைதராபாத் என்றால் அடுத்து நினைவுக்கு வருவது சார்மினார். நான் சென்றது ஈத் காலம் என்பதாலா அல்லது எப்பொழுதுமே அப்படித்தானா என்று தெரியவில்லை, சார்மினாரை சுற்றி அவ்வளவு நெருக்கடி!

‘Absolute Chaos’ என்றால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது. சாலை முழுவதும் மனிதக் கூட்டம், மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்‌ஷாகள், கார்கள். நல்ல வேளை நான் அதற்கு தனியே ஒரு ஓட்டுநரை ஏற்ப்பாடு செய்திருந்தேன். எப்படித்தான் அந்த மனிதக் கூட்டத்தில் காரை செலுத்த முடிந்ததோ தெரியவில்லை.

சார்மினார் பகுதியில் ஓரளவிற்கு வாகனங்கள் செல்ல முடிகிறதென்றால், அதற்கு ஹைதராபாத் போக்குவரத்து காவலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

எனவே, சார்மினார், சாலார் ஜங் மியூசியம் இரண்டுக்கும் போக எளிதான முறை ஒரு ஆட்டோ எடுத்துக் கொள்வதுதான்.

சார்மினார் மேலே ஏறிப்பார்க்கலாம். பெரிய வரிசை இருந்ததால் நான் போகவில்லை. ஆனாலும் இருபுறமும் உள்ள கடைகளில் பெண் பிள்ளைகளுக்கு வேண்டிய சிறு சிறு அலங்காரப் பொருட்கள் கிடைக்கிறது

சாலை ஓரத்தில் பழம்பொருட்களை வைத்து விற்கிறார்கள். நான் சன் டையலோடு இணைந்த திசை காட்டி ஒன்றை வாங்கினேன். பாதி விலைக்கு பேரம் பேசியிருக்கலாம். நான் கூச்சத்தில் முக்கால்வாசி விலைக்கு கேட்க உடனடியாக கொடுத்து விட்டார்கள்!

-oOo-

சாலார் ஜங் மியூசியம், சார்மினார் இரண்டுக்குமே ஒரு நாள் பிடித்தது என்றாலும், ‘நன்றாகக் கழிந்த ஒரு நாள்’ என்றே தோன்றியது.

மதுரை
27/10/12

4 comments:

வெங்கடேசன் said...

You can enjoy the same type clock in Padmanaba Swamy Temple , Thiruvandapuram.

Anonymous said...

I always like to have a read about such things, my blog is related if you want to have a look round it please feel free. I have added yours to my bookmarks.

PRABHU RAJADURAI said...

test

தருமி said...

//ரெபேக்கா சிலை (Veiled Rebecca//

இது ஒரு அதிசயம் ... யாரந்த சிற்பி?