15.1.12

ஞாயிற்றுக் கிழமை படுக்கையில் காப்பி!

பார்த்து ஒரு நாள் கழிந்துவிட்டது. ஆனாலும் ‘லாசே’யும் அவர் வேலை பார்த்த டென்மார்க் தேசத்து ‘ஸ்டோன் பண்ணையும்’ சக வேலையாட்களும், அதன் முதலாளியும் இன்னமும் மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறார்கள். நேற்றுப் பார்த்த ‘Pelle the conqueror’ என்ற டேனிஷ் திரைப்படம் பற்றிதான் குறிப்பிடுகிறேன். கதாநாயகன் என்னவோ, துரதிஷ்டம் பிடித்த லாசேவின் குட்டிமகன் பெல்லேதான். ஆயினும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதாவது ஒருவகையில் அவ்வப்பொழுது நினைவில் வந்து போகிறார்கள்.

ஒருவேளை படத்தின் கதாபாத்திரங்களை, அந்த பள்ளிக்கூட வாத்தியார் உட்பட அவர்களின் மிகைப்படுத்தப்பட்ட வகையில் பல தமிழ்ப்படங்களில் நாம் பார்த்தவர்களாயிருப்பதால், எழுந்த தாக்கமாகவும் இருக்கலாம்.

வறுமையால் ஸ்வீடனில் இருந்து துரத்தப்படும் லாசேவும் அவரது மகனும், வேலை தேடி டென்மார்க் தேசம் வந்தாலும், ‘குடியிருக்க ஒரு சிறு வீடு’ ‘ஞாயிற்றுக்கிழமை காலையில் படுக்கையில் கிடைக்கும் காப்பி’ என்ற அவர்களது ஆசை எட்டாக்கனியாகவே இருந்தாலும், நம்பிக்கையுடனே படம் முடிகிறது.


1910ம் ஆண்டு எழுதப்பட்ட புகழ்பெற்ற டென்மார்க் தேசத்து நாவலை படமாக்கியிருக்கிறார்கள். எனவே நாவலின் கிளைக்கதையில் இடம்பெற்றிருக்கும் பல பாத்திரங்கள் சுருக்கமாக வந்து போனாலும், அவர்களைப் பற்றிய முழுக்கதையையும், நம் மனதில் உணர்வுகளாக எழ வைத்தது இயக்குஞரின் திறமை என்றால், கண்ணை மூடிக்கொண்டாலும் படம் பார்ப்பது போன்ற உணர்வை அளித்தது, இசையமைப்பாளரின் திறமை!

ஆனால் படத்தில் அனைத்தையும் மிஞ்சி நிற்பது, லாசேவாக நடித்த மாக்ஸ் வான் சிடோ என்ற ஸ்வீடன் நடிகரின் நடிப்பு. லாசேவின் இயலாமையும், தோல்வியும், அவநம்பிக்கையும் அவரது உடல்மொழியிலேயே தெறிக்க அவ்வளவு இயல்பான நடிப்பு.

1989ம் வருடத்திற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற பெல்லே எரொபிரென், (உச்சரிக்க சிரமப்படவேண்டாம். படத்தில் வரும் ஒரு சிறுவனின் பெயரை அவனது அம்மாவே சரியாக உச்சரிக்க முடியாதாம்) திரைப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.

மதுரை
15/01/12

1 comment:

Kalvetu Kalvetu said...

உங்களுடைய இந்தப் பதிவை நேற்றுத்தான் (பெப் 02,2013) பார்த்தேன்.பதிவு பார்த்தவுடனேயே இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவல் வந்து உடனே பார்த்தும் விட்டேன்.

****
அந்த அப்பாவின் இயலாமையும், அங்கே உள்ள ஒவ்வொருவரின் முகமும் அப்படியே இருக்கிறது மனதில்.

படத்தின் ஆரம்பத்தில் மகனை தூக்கிக்கொண்டு துறைமுகத்தில் இறங்கும் காட்சியில் இருந்து மகனுக்கு பிரியாவிடை கொடுக்கும் இறுத்திக்காட்சி வரை அவரின் முகம் சொல்லும் கதைகள் இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.

*****

பல இடங்களில் எனக்கு ஹீரோவான என் அப்பா, அவரின் மேலாளர்களிடம் வளைந்து நின்றும், பல நண்பர்களிடம் கடனுக்காக அதிகாலை பஸ் ஏறி அவர்கள் வீட்டுமுன் காத்து இருந்த நாட்கள் நினைவிற்கு வந்து கண்கலங்கச் செய்துவிட்டது என்னை.

இலவசமாகவே கிடைக்கும் இதுபோன்ற நல்ல படங்களை இதமான தமிழில் குரல் சேர்ப்புடன் வெளியிடலாம்.

ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் பல அப்பாக்களின் வாழ்க்கை இப்படித்தான் இன்னும் உள்ளது.