15.1.12

ஏமாற்றமளித்த கொலை வழக்கு!


ஒரு திரைப்படத்தைப் பார்த்த பின்னர், அதனைப்பற்றிய விபரங்களை ‘விக்கிபீடியா’ போன்ற இணைத்தளங்களில் படித்து முழுமையான அனுபவமாக இருக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த திரைப்படங்களை பார்ப்பதில் பெரும் விருப்பம் உள்ள எனக்கு, எவ்வளவு தூரம் திரைப்படம் உண்மையிலிருந்து விலகியிருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகுதான் தூங்கச் செல்ல முடிகிறது.

படத்தினை சுவராசியமாக அமைப்பதற்காக, திரைக்கதையில் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் (Cinematic Liberty) தேவையான ஒன்றுதான். பியூட்டிஃபுல் மைண்ட், தி கிரேட் டிபேட்டர்ஸ் போன்ற படங்களைப் பார்த்த பிறகு அவற்றின் உண்மைத்தன்மையை படித்த பிறகும் அந்தப் படங்களின் மீதான மரியாதை குறையவில்லை.

ஆனால், இருநாட்களுக்கு முன்னர் பார்த்த ‘மர்டர் இன் த பர்ஸ்ட்’ என்ற திரைப்படம் அவ்விதமான ஒரு அனுபவத்தை தராமல், ஏதோ நான் ஏமாற்றப்பட்டதைப் போல உணர்ந்தேன்.கலிபோர்னியாவின் ‘அல்காட்ராஸ்’ சிறையில் தனிமைச் சிறையில் (Solitary Confinement) அடைக்கப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு அதனால், சக கைதி ஒருவரை ஸ்பூனால் குத்திக் கொன்ற ஹென்றி யங் என்பவரின் மீது நடைபெற்ற வழக்கு பற்றிய படம் என்பதால் ஆர்வத்துடன் பார்த்தேன். உண்மைச் சம்பவமாக இல்லாதிருந்தால், இதனை ஒரு திரைக்கதையாகவே ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எனினும், படத்தைப் பார்க்கையில் ‘என்னடா, மூன்று வருடங்களாகவா ஒருவனை தனிமைச்சிறையில் அடைத்து வைத்திருக்க இயலும்’ என்றிருந்தது.

நீதிமன்ற காட்சியில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது, மிகைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.

ஆனாலும், தனிமைச் சிறையால் உடல்சிதைந்து, மனவளர்ச்சி குன்றிப் போன ஹென்றியாக நடித்திருக்கும் கெவின் பேக்கனின் ஒப்பனையும், உழைப்பும் அசாத்தியமாயிருந்தது.

இறுதியில் படத்தினைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் அனைத்தும், உண்மைச் சம்பவங்களை படித்த பின்னர் வடிந்து போனது. ஹென்றி தனிமைச் சிறையில் இருந்தது, மூன்று வருடங்கள் இல்லை, மாறாக சில மாதங்கள்தான் என்பது கூட உறுத்தலாக இல்லை. ஏனெனில், சில நாட்கள் தனிமைச் சிறை என்பதே கொடுமையானதும், மனித உரிமை மீறலுமான செயலாகும். மூன்று வருடங்கள் தனிமைச்சிறையில் ஒருவரால் உயிர் பிழைத்திருக்கவே முடியாது.


உறுத்தலான உண்மை, ஹென்றியின் கடந்தகாலம் பற்றியது. ஹென்றி சிறைக்கு வந்தது, வங்கிக் கொள்ளை சம்பவங்கள் மற்றும் கொலைக் குற்றத்திற்காக. ஆனால் படத்தில், தனது தங்கையுடன் சிறு வயதிலேயே அனாதையாக்கப்படும் ஹென்றி தங்கையின் பசியைப் போக்க, ஐந்து டாலர் திருடிய ஒரே குற்றத்திற்காக, சிறைக்கு அனுப்பப்படுகிறான்.

சாதாரணமாக நாம் தமிழ்ப்படங்களில் பார்க்கும் அரைமணி நேர பிளாஷ்பேக் சில நிமிடங்களில், அனால் அதே கழிவிரக்கத்துடன் ஓடி மறைகிறது.

தனிமைச் சிறையின் கொடுமை குறித்து பேச முயலும் படத்தில், மரண தண்டனை பற்றி பேச முயன்ற ‘விருமாண்டி’ என்ற தமிழ்ப்படத்தில் செய்யப்பட்ட அதே தவறு.

தனிமைச் சிறையோ, பிற சிறைக் கொடுமைகளோ மனித உரிமை மீறல் என்றால், பாதிக்கப்படும் நபர் அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கொடுஞ்செயல்கள் செய்தவர்களுக்கும் சேர்த்துதான் இக்கொடுமைகளுக்கு எதிரான வாதங்கள் உள்ள சூழ்நிலையில் ‘ஹென்றி அப்பாவி, அவனை எப்படி தனிமைச் சிறையில் அடைப்பீர்கள்?’ என்ற கேள்வி படத்தின் அடிநாதத்தை சிதைத்துப் போடுவதாக உணர்கிறேன்.

ஏமாற்றமளித்த திரைப்படம் ‘Murder in the first’

மதுரை
16/01/12

2 comments:

ஸ்ரீதர் நாராயணன் said...

இந்தப் படத்தை பார்த்துவிட்டு பிறகு இதைப் பற்றி செய்திகளை தேடிப் பிடித்து படிக்கும்போது நானும் இதே ஏமாற்றத்தை உணர்ந்தேன். அதுவும் நீங்கள் சொன்ன " பாதிக்கப்படும் நபர் அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும்" என்ற விஷயத்தை முன்வைத்தே நீதிமன்ற காட்சிகளில் வாதங்கள் அமைந்திருந்தன. முழுமையான அனுபவமாக இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நிற்க! கூகுளுக்கும் இந்திய அரசிற்குமான தணிக்கை குறித்த வழக்கு பற்றி
சித்தார்த் வெங்கடேசனின் கேள்விக்கு உங்கள் பதிலை அறிய ஆவலாக இருக்கிறேன். :)

Prabhu Rajadurai said...

Thank you Sridhar so many issues are there to be written but I have to steal the time from my professional and family commitments wii try this weekend