10.2.11

சட்டப்புலி சுப்பிரமணியன் சுவாமி!

சுப்பிரமணியன் சுவாமி, மீண்டும் தான் ஒரு சட்டப்பு(ளி) என்பதை நிரூபித்திருக்கிறார்.’ஸ்பெக்ட்ரம்’ சம்பந்தமான நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் பங்கிருக்கிறது என்று சுவாமி முழங்க, முதல்வர் சார்பாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர், ‘சுவாமியின் குற்றச்சாட்டு, முதல்வரை அவதூறு (Defame) செய்துள்ளதாக கூறி’ அறிவிப்பு அனுப்பியுள்ளார். சுவாமி பதிலுக்கு, ‘இந்த அறிவிப்பு கருணாநிதியின் சட்ட அறிவீனத்தைக் காட்டுகிறது. நீதிமன்றத்தில் எந்தவிதத்திலும் பேச எனக்கு முழு உரிமையுள்ளது (Absolute Privilege). அதற்காக என் மீது யாரும் வழக்கு தொடர முடியாது’ என்று ஒரே போடாக போட்டுள்ளார்.


சரி, தமிழக அரசு வழக்குரைஞராவது அதனை முதல்வரிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டாமா? அடுத்த நாள் அமைச்சர் துரைமுருகன், ‘வெளியே சுவாமி பேசியது குறித்துதான் அறிவிப்பு’ என்று எடுத்து விட……’நீதிமன்றத்திற்குள் எந்த அவதூறையும் பேசுவதற்கு யாருக்கும் உரிமை உள்ளது’ என்று சுவாமி கூறிய சட்டம், அது சரிதானா? என்று ஆராயப்படாமலேயே அனைத்து ஊடகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.


சுவாமியே சொல்லி விட்டார். இனி புகுந்து விளையாண்டு விடலாம், என்று அனைத்து வழக்காடிகளும் நினைத்து விட்டால்?


அப்படியெல்லாம் இல்லை என்று எச்சரிக்கவே இந்தப் பதிவு.


-oOo-


ஒருவரைப் பற்றி அவதூறாக பேசுவது, இரு விளைவுகளை ஏற்ப்படுத்தலாம். அவதூறாக பேசுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 படி குற்றமாகும். அந்தக் குற்றச் செயலுக்காக அவதூறு செய்தவர் குற்றவியல் முறைப்படி தண்டிக்கப்படலாம். குற்றமோ, இல்லையோ பாதிக்கப்பட்டவர் தனியே உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அதற்காக அவதூறு செய்தவர் நட்ட ஈடும் கொடுக்க நேரிடலாம்.


அது என்ன, முழு உரிமை? (Absolute Privilege)


அப்படி ஒரு உரிமை சட்ட ரீதியில் இந்தியாவில் ஒரு பிரிவினருக்குத்தான் உள்ளது. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்!


அரசியலமைப்பு சட்டம் பிரிவு 105 படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரிவு 194 படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவரவர் மன்றங்களிலோ அல்லது அவையால் அமைக்கப்படும் குழுக்களிலோ (Committee) எந்த அவதூறு வழக்கையும் பற்றியும் கவலைப்படாமல் எதையும் பேச உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பணியில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி விவாதிக்க முடியாது.


சரி, நீதிமன்றத்திற்குள்?


சுவாமி கூறுவது சரிதான்….அந்த நீதிமன்றம் இங்கிலாந்தில் இருக்கும் பட்சத்தில்.


இங்கிலாந்தில் இருக்கும் அப்படிப்பட்ட உரிமை இந்தியாவில் கிடையாது என்று நமது நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் தெளிவுபடக் கூறியும், சுவாமி சும்மா அடித்து விளையாடி உள்ளார்.


-oOo-


1926ம் ஆண்டிலேயே, பம்பாய் உயர்நீதிமன்றத்தின் புல் பெஞ்ச் பாய் சாந்தா எதிர் உமரு அமீர்மாலிக் (1926) 13 AIR Bom 141 என்ற வழக்கில் ஒரு சாட்சி நீதிமன்றத்தில் கூறுவதைப் பொறுத்து கூட அவர் மீது அவதூறு வழக்கு தொடரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. பம்பாய் தீர்ப்பினைப் பின்பற்றி அலகாபாத் உயர் நீதிமன்றமும் 1940ம் ஆண்டில் முகமது ஈஸா எதிர் நசீம் கான் AIR 1940 All 246 என்ற வழக்கில் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக, குற்றவியல் நடுவர் (Judicial Magistrate) முன்பு கொடுத்த வாக்குமூலம், அவதூறானது என்று பாதிக்கப்பட்டவர் குற்றவியல் வழக்கு தொடரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.


இந்த தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் வலியுறுத்திய முக்கிய விடயம், ’அவதூறா இல்லையா என்பதை இந்திய தண்டனை சட்டம் கூறுவதை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்க முடியுமே தவிர, இங்கிலாந்தில் உள்ள நடைமுறையை வைத்தோ அல்லது பொது நன்மை, நீதி பரிபாலனம் என்பதை அடிப்படையாக வைத்து தீர்மானிக்க முடியாது’ என்பதே!


மேலும் தேடினால், 1912ம் ஆண்டிலேயே இங்கிலாந்து நிலைக்கும் நமக்குமுள்ள வேறுபாட்டை வலியுறுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் கூறப்பட்ட வாசகங்கள் அவதூறாக இருந்தன என்று மனு தாக்கல் செய்தவர் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்று சி.ஹெச்.கிரெளடி 18 Indian Cases 737 என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள், ‘இந்திய தண்டனை சட்டத்தில் நல்லெண்ணம் (Good Faith) என்பது இல்லாமலிருக்க வேண்டும் என்று கூறப்படுவதிலிருந்து, எங்கு பேசினால் என்ன, நல்லெண்ணம் இல்லை என்றால் குற்றம்தான்’ என்று வலியுறுத்துகின்றனர்.


-oOo-


இங்கிலாந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கையிலேயே இதுதான் நிலை என்றால், தற்பொழுது நிலை என்ன வேறாகவா இருக்கப் போகிறது.


நமது மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தைப் பொறுத்து சிறிது குழப்பம் நிலவினாலும், 1951ம் ஆண்டில் நாராயண ஐயர் எதிர் வீரப்ப பிள்ளை AIR 1951 Mad 34 என்ற ஒரு வழக்கில் புல் பெஞ்ச அமைக்கப்பட்டு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.


சமீபத்தில், தர்மராஜா எதிர் சின்னத்தம்பியா பிள்ளை 1998 (2) MLJ 73 என்ற வழக்கில் கூட நமது நீதிமன்றம் இந்தக் கூற்றை உறுதி செய்துள்ளது.


-oOo-


இறுதியாக, சாட்சிக் கூண்டில் இருக்கும் ஒருவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அவர் அளிக்கும் பதிலால் அவர் மீது ஒரு குற்றவியல் வழக்கு தொடரப்படலாம் என்ற நிலையிலும், அவர் பதிலளிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார் என்றால்…


அப்படி ஒரு நிலையில் இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) பிரிவு 132 படி அவருக்கு முழு பாதுகாப்பு உண்டு. அவ்வாறாக நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு பதிலளிக்கும் ஒருவர் மீது, அந்த பதிலை வைத்து, வழக்கு தொடர முடியாது.


ஆனால், சுப்பிரமணியன் சுவாமி, நடைபெற்று வரும் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை, அவர் அவ்வாறு கூற கட்டாயப்படுத்தப்படவும் இல்லை. ‘இது கண்டென்ப்ட் ஆப் கோர்ட்’ என்று சுவாமி மிரட்டுவதெல்லாம் சும்மா பூச்சாண்டி!


சட்ட அமைச்சர், ‘அதனாலென்ன….அப்போதும் நீங்கள் தப்பிக்க முடியாது’ என்று துணிந்து சொல்லியிருக்கலாம்!


மதுரை
10/02/11


இஸ்லாமிய வங்கி குறித்து சுவாமி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு போன வாரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேவையின்றி ஒரு வங்கி முயற்சி தள்ளிப் போடப்பட்டதுதான் மிச்சம்!

6 comments:

Prabhu Rajadurai said...

இஸ்லாமிய வங்கி அமைவதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த வழக்கு குறித்த எனது பதிவு இங்கே
http://marchoflaw.blogspot.com/2010/01/blog-post.html

ராஜ நடராஜன் said...

பிரபு துறை!உங்கள் இடுகைகளை அவ்வப்போது நோக்குகிறேன்.ஆனால் சட்ட நுணுக்கங்கள் பற்றி தெரியாததால் நீங்கள் சொல்வதை உள்வாங்கிக்கொள்வதோடு சரி.மறுமொழிகள் சொல்வதில்லை.ஆனால் இங்கே விதிவிலக்காக பின்னூட்டமிட வேண்டிய அவசியம் சுப்பிரமணியன் சுவாமியின் தனிமனிதக் குரல்.இதில் அவருக்கு சுயதேவைகள் இருக்கிறதா என்பதெல்லாம் தெரியவில்லை.ஆனால் நிகழும் ஸ்பெக்ட்ரம் விவாதங்களையும் அதில் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணர தன்னால் இயன்ற வழிகளை ஆராய்வது மட்டும் தெரிகிறது.

துரைமுருகனின் அறிக்கையை விட சுப்ரமணியன் சுவாமியின் செயல்பாடுகள் இந்த ஒற்றை விசயத்தில் நாகரீகமாகவே உள்ளது.

மற்றபடி மனிதாபிமானமற்ற ஈழநிலைப்பாட்டிற்கு மீண்டுமொரு முறை இவர் மீது முட்டை வீசுவதையும் ஆதரிக்கிறேன்.

Prabhu Rajadurai said...

அன்பார்ந்த ராஜநடராஜன்,

இந்தப் பதிவின் இரு நோக்கங்கள்...ஏறக்குறைய ஒரு வினாடி-வினா நிகழ்ச்சி போல ஒரு சட்டம் சம்பந்தமான கேள்வி ஒன்றிற்கு முடிந்தவரை சுவராசியமாக விடை காண முயல்வது.

இதே போல பல கேள்விகள் இருந்தாலும், அவற்றைப் பற்றி எழுதுவது, சுவராசியமாக இருக்காது என்பதால் சுப்பிரமணியசுவாமி, ஞாநி, சாருநிவேதிதா போன்ற பிரபலங்கள் கூறுவதை அல்லது ஒரு திரைப்படக் காட்சியை மையமாக வைத்தால், படிக்க சுவராசியமாக இருக்கும்.

அதே சமயம் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல், சும்மா வாய்க்கு வந்தபடி பேசியோ அல்லது எழுதியோ மக்களிடம் ஒரு தவறான தகவலை கொண்டு சேர்க்கும் முயற்சியை தடுப்பது. சுப்பிரமணிய சுவாமி போகிற போக்கில் கூறிய இந்த சட்டக்கருத்து, எனக்கு நெருடலாக இருந்ததால், குறைந்ததது 6 மணி நேர படிப்பிற்கு பின்னரே இதனை எழுத துணிந்தேன்.

மற்றபடி இதற்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. அதைப் பற்றி கூற வேண்டுமென்றால், அந்தப் பெருமை பெருமளவிற்கு பிரசாந்த் பூசனுக்குத்தான் போக வேண்டும்,

பூசனுக்கு அது இயக்கம். சுவாமிக்கு அது அரசியல். நாளையே அவர் சோனியாவுடன் சமரசமாக போனால், ஸ்பெக்டரம் வழக்கில் அவரது குரல் இருக்காது. சுவாமியின் வரலாற்றை நான் ஆராய்ந்த வகையில் இது என் அனுமானம்

Anonymous said...

I will not go by what the media reports in such cases.In any case in 2G issue Swamy has played an important role.Outside the court he wrote to PM to give sanction for prosecution of A.Raja.He ensured that the Islamic Bank could not be established.He had killed the Sethusamudram Projectby approaching the court.That is a remarkable feat.

So i have every reason not to think that he is ignorant of law.

Simulation said...

//பூசனுக்கு அது இயக்கம். சுவாமிக்கு அது அரசியல். நாளையே அவர் சோனியாவுடன் சமரசமாக போனால், ஸ்பெக்டரம் வழக்கில் அவரது குரல் இருக்காது. சுவாமியின் வரலாற்றை நான் ஆராய்ந்த வகையில் இது என் அனுமானம்//

Has S.Swamy withdran any cases so far because of political compulsions? Even while looking for an alliance with ADMK, he never withdrew any case against JJ, I beleive.

- Simulation

Prabhu Rajadurai said...

An advocate’s privilege
http://www.thehindu.com/opinion/op-ed/an-advocates-privilege/article4415537.ece