சர்வாதிகாரமோ அல்லது மக்களாட்சியோ, எந்த ஒரு அரசும் அதன் குடிமகனுக்கு ஆற்ற வேண்டிய முதல் கடமை, அவனது உயிருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதே!
அந்தப் பாதுகாப்பை வேண்டியே ஒவ்வொரு குடிமகனும், ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்கிறான். உயிருக்கான பாதுகாப்புக்கு பின் வருவதுதான் பொருளாதார, சமூக பாதுகாப்பு போன்றவை எல்லாம்.
இந்தப் பாதுகாப்பை வலியுறுத்துவதற்கு தனியே ஒரு சட்டம் தேவையில்லை எனினும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21, இந்த உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறது. முக்கியமான அம்சம், இந்திய நாட்டிலுள்ள பிற நாட்டு குடிமக்களுக்கும் இந்த உரிமை உண்டு.
இந்தியாவில் உள்ள பிற நாட்டு குடிமக்களுக்கு கூட இருக்கும் இந்த உரிமையை கோரித்தான், தமிழக மீனவர்களின் உயிர்களை காப்பாற்றுங்கள், போதிய பாதுகாப்பு கொடுங்கள் என்று அரசை யாராலும் வற்புறுத்த முடியும்.
இவ்வளவு மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர் இந்திய எல்லைக்குள் இருந்தாரா அல்லது இலங்கை எல்லைக்குள் இருந்தாரா என்பது விசாரணைக்கு பின்னர்தான் தெரியவரும். ஆனால், மீனவர்களின் உயிர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு, இதுவரை யாரையாவது கைது செய்திருக்கிறதா? இல்லை என்றால், இதுவரை தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகளின் முடிவு என்ன? குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால், தனது கடமையிலிருந்து தவறியதற்காக அவர்களுக்கு அரசு நட்ட ஈடு தர வேண்டாமா? இனி இது போல நடக்காமல் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
யாருக்கும் எழும் இவ்விதமான, கேள்விகளுக்கு அரசிடமிருந்து தகுந்த பதில் இல்லை என்றால், அணுக வேண்டிய ஒரே இடம், நீதிமன்றம்தான்.
அப்படிப்பட்ட ஒரு நீதிப்பேராணை மனுவை, சமீபத்தில் நமது உயர்நீதிமன்றம் ‘ஏதோ இது இந்திய-இலங்கை பிரச்னை’ போல நினைத்துக் கொண்டு தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றத்தை விட, அந்தக் கருத்தை எவ்விதமான விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொண்ட நமது ஊடகங்கள் மீதுதான் வெறுப்பும், விரக்தியும் தோன்றுகிறது.
இரண்டு நாட்களாக, யாராவது ஒரு தலையங்கமாவது எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து, ஏமாந்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.
தமிழக மீனவர்கள் அகால மரணமடைவதற்கும், இந்திய இலங்கைப் பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் மீதும் கோபம் வருகிறது. மீனவர்களின் உயிரினை, இந்திய எல்லைக்குள் கூட பாதுகாக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிய நீதிமன்றத்திற்கு அவர் கூறியிருக்க வேண்டிய பதில், ‘ எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியர்கள் மீதான தாக்குதலை தடுக்க உயர்மட்ட அளவில் நடவடிக்கை எடுத்து, அப்படி எடுத்த விபரத்தை ஒரு பிரமாண வாக்குமூலமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2009ம் உத்தரவிட்டது. எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியா எல்லைக்குள் நடந்த தாக்குதலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன கேட்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கையில், இங்கிருக்கும் நாகப்பட்டினத்தில் தாக்குதல் அல்ல கொல்லப்பட்டால் கூட கேட்க அதிகாரம் இல்லையா?’ என்பதுதான்.
மதுரையில் வழக்கு வியாழக்கிழமை வருகிறது…….என்ன நடக்கிறது பார்க்கலாம்.
மீனவர்கள் பீடிக்கு பற்ற வைக்கும் தீக்குச்சியிலிருந்து, படகுகளுக்கு போடும் டீஸல் வரை அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கும் மத்திய அரசிற்கு அதற்கான தார்மீக உரிமை கொஞ்சம் கூட கிடையாது.
மதுரை
01/03/11
4 comments:
வேதனை என்னவென்றால், நமது உயர்நீதிமன்றம் ரிட் மனுக்களை தள்ளுபடி செய்த விபரத்தை இலங்கை ஊடகங்கள் அனைத்தும் மிகுந்த உற்சாகத்தோடு செய்தி வெளியிட்டுள்ளன!
சென்னையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நட்ட ஈடு கேட்கப்பட்டதால், மதுரையில் தாக்கல் செய்த வழக்கில் அதை தவிர்த்தனர். சென்னை தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளதால், இங்குள்ள நீதிபதி அதை பின்பற்ற தேவையில்லை என்று வாதிடலாம்!
வியாழக்கிழமை நடப்பதையும் பதிவிடுங்கள் பிரபு. நன்றி.
இந்த மாதிரி அலட்சிய போக்கிற்கெல்லாம் என்னதான் முடிவு/தீர்வு?
Post a Comment