டைம்ஸ் ஆப் இந்தியா, மதுரைப் பதிப்பு (உண்மையில் திருச்சிப் பதிப்பு) வெளிவருகிறது என்றவுடன் நான் மிகுந்த ஆர்வம் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
முதலில் ‘தி இந்து’விற்கு ஒரு மாற்று. இரண்டாவது, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய சுவாமிநாத ஆ.அய்யர் மற்றும் குருசரண் தாஸ் ஆகியோரின் வாராந்திர பத்திகள். முக்கியமாக அய்யரின் தர்க்க ரீதியில் அமைந்த தீர்வுகள் எப்பொழுதுமே சுவராசியமானவை!
கடந்த ஞாயிறு அன்று இருவருமே, சில்லறை வணிகத்தில் (ஐந்து முதல் ஐம்பது வரையிலான நோட்டுக்ளே புழக்கத்தை விட்டுப் போன பின்னர் இன்னமும் சில்லறை வணிகம் என்பது சரியா? என்பது ஒரு புறம் இருக்கட்டும்) அந்நிய முதலீடு பற்றி தங்களது பத்திகளை எழுதியுள்ளனர்.
அய்யரைப் பொருத்தவரை இணையவழி வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக வால்மார்ட் போன்ற பெருங்கடை வணிகத்தை முழுங்கிக் கொண்டிருக்க கவலைப்பட வேண்டியது பெருங்கடைகளே தவிர இந்தியாவில் தற்பொழுது செயல்படும் சிறுவர்த்தகர்கள் அல்ல என்கிறார்.
முக்கியமாக அவர் கூறவருவது, அநியாயத்திற்கு இங்கு அதிகரித்துள்ள நிலமதிப்பால், பெருங்கடைகள் நகர எல்லைக்கு வெளியேதான் நிறுவப்பட முடியும் என்பதாலும், சிறுகடைகள் போல அல்லாமல் பெருங்கடைகள் ஒழுங்காக தனது கணக்குகளை பராமரித்து அதற்கான வரிகளை தவறாமல் கட்ட வேண்டிய தேவை இருப்பதால், சிறுகடைகளுக்கு அவை போட்டியாக இருக்க முடியாது என்பதும்தான்.
பெருங்கடைகள் வரிகளை கட்டுவதோடு, தனது வேலையாட்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், புராவிடண்ட் பண்ட், கிராஜுவிடி போன்ற பணிப்பலன்களை சிறுகடைகள் போல அல்லாமல் வழங்க வேண்டிய தேவை இருப்பதை அய்யர் குறிப்பிடவில்லையெனினும், அவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இறுதியில், சிறுகடைகளால் பெருங்கடைகளை தடுக்க முடிந்தது போல இணையவழி வர்த்தகத்தை தடுக்க முடியாது என்று முடிக்கிறார்.
அய்யரின் பத்தி மூலம் நான் புரிந்து கொண்டது, சிறுகடைகளை விட் விலையினை குறைப்பது பெருங்கடைகளுக்கு இந்திய சூழ்நிலையில் சாத்தியமல்ல என்றால் குருசரண் தாஸ் தனது முக்கிய வாதமாக, அந்நிய முதலீட்டால் சில்லறை வணிகத்தில் இடைத்தரகர்களின் தலையீடு தடுக்கப்பட்டு விலைகள் பெருமளவில் குறையும் என்று கூறுவது குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறது.
எது உண்மை?
விலைகள் குறையாது என்று அய்யர் மறைமுகமாக கூறுவதா அல்லது விலைகள் குறையும் என்று தாஸ் உறுதியாக வலியுறுத்துவதா?
இன்று டைம்ஸ் நடுப்பக்கத்தில் சில்லறை வ்ணிகத்தில் அந்நிய முதலீட்டின் தேவையை வலியுறுத்தும் மற்றுமொரு கட்டுரை. அந்நிய முதலீட்டால் விவசாய உற்பத்தி பெருகும், அதனால் கிராமப்புற செல்வம் அதிகரிக்கும் என்ற ரீதியில். பொதுவாக இந்தக் கருத்தினை அனைவருமே எடுத்து வைக்கின்றனர்.
இதைப் போலவே, அந்நிய முதலீடு சிறுகடைகளை பாதிக்காது என்பதை, அரசியல்ரீதியில் அமைந்த கோஷ்ம் போல அந்நிய முதலீட்டிற்கான அனைத்து ஆதரவாளர்களும் சற்று உரக்கவே சொல்கின்றனர். அப்படியாயின் பெருங்கடைகளுக்கான வாடிக்கையாளர்கள் இனி புதிதாக தோன்றப் போகிறார்களா? ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள்தானே பெருங்கடைகளுக்கு செல்ல வேண்டும்? அப்படியாயின் அது சிறுக்டைகளுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்தும் என்பதுதானே உண்மையாக இருக்க முடியும். ஆனால், பாதிப்பு என்பது அவரக்ளால் உணரக்கூடிய வகையில் இல்லாமல் மெல்ல மெல்ல நிகழும் என்றே நினைக்கிறேன்.
உதாரணமாக, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்போதிருப்பது போல பெரிய நகைக்கடைகள் இல்லை. நகைத்தொழிலாளர்களிடம் நேரிடையாக நகை செய்யச் சொல்லி வாங்குவார்கள். பின்னர் சிறுநகைக்கடைகள், தற்பொழுது பெருங்கடைகள் தோன்றியுள்ளன. நகைத்தொழிலாளர்கள் இன்னமும் உள்ளனர். கடை வாடகையின்றி, விற்பனையாளர், குளிர் சாதனம், விளம்பரம், கணக்கு, வரி ஏதுமின்றி அவர்களும் நகை செய்து கொடுக்கின்றனர். ஏதோ ஒருவகை கணக்கும், குறைந்த சம்பளத்தில் விற்பனையாளரைக் கொண்ட, விளம்பரமே செய்யாமல் சிறுகடைகளும் உள்ளது.
ஆனால் பெருவாரியான நகைத்தொழிலாளர்கள் பெருங்கடைகளுக்காக சம்பளத்திற்கு உழைக்கின்றனர். பெருவாரியான வாடிக்கையாளர்கள் சிறுகடைகளை நாடுவதில்லை!
இந்தச் சந்தடியில் ‘இடைத்தரகர்களை ஒழிப்போம்’ என்ற வாதத்திலிலுள்ள குரூரத்தையும் யாரும் உணரவில்லை. ஏன், அவர்களும் இந்தியாவின் குடிமகன்கள்தானே, தரகுத்தொழிலும் சட்டபூர்வமானதுதானே என்ற கேள்வி கேட்க யாருமில்லை. குருசரண் தாஸ் கணக்குப்படி விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையில் இரு இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு?
வேலையிழக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு வேலையிலிருக்கும் பிற குடிமகன்களின் தலையில் வரிச்சுமையாக விழுகிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெருங்கடைகள் உருவாக்கும் வேலைவாய்ப்பு இடைத்தரகர்களின் வேலையிழப்பினை சரிகட்ட உதவலாம். அப்படியாயின், மீண்டும் வட்டத்தின் முதலிலேயே வந்து நிற்கிறோம். ஆக, தாஸ் கூறுவது போல தற்பொழுது ஐந்து ரூபாய்க்கு விவசாயி விற்பது இருபது ரூபாய்க்கு நுகர்வோருக்கு கிடைப்பது ஒழிந்து விவசாயிக்கு பத்து ரூபாயும் நுகர்வோருக்கு பதினேழு ரூபாயும் கிடைக்கும் என்பது, அனைத்து பொருளாதார கோட்பாடுகளைப் போலவே வெற்று ஆரூடமாகத்தான் இருக்கப் போகிறது.
The chances of a prediction to become reality are sadly more in astrology than in economics!
மதுரை
12/12/11