Showing posts with label Kani. Show all posts
Showing posts with label Kani. Show all posts

4.11.11

கனிமொழி வழக்கில், ஜெயலலிதாவின் தலைவிதி!

கனிமொழிக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்ட செய்தியில், விநோதமாக ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு இணையாக கவலை கொள்ள சாத்தியக் கூறுகள் உண்டு. 2ஜி வழக்கினை கவனித்து வரும் ஊடகங்கள் ஜெயலலிதா வழக்கின் மீதும் ஒரு கண் வைக்கலாம். ஜெயலலிதாவும் நாட்டின் தற்போதய சூழ்நிலை புரியாமல் ஒன்றிற்கு இரண்டு தடவை உச்ச நீதிமன்றத்தை அணுகி பலரின் பார்வையை தனது வழக்கின் பக்கம் ஈர்த்துள்ளார்.

கனிமொழிக்கு பிணை மறுக்கப்பட்டதை விட அத்ற்கான காரணங்களாக நீதிபதி எடுத்து வைக்கும் கருத்துகள் ஜெயலலிதா வழக்கோடும் பொருத்திப் பார்க்கப்படலாம். அவ்வாறான் ஒரு சூழ்நிலையில் கர்நாடக நீதிபதிக்கு ஜெயலலிதாவை விடுதலை செய்வது என்பது குற்றவாளி என தீர்ப்பதை விட கடினமான செயலாக இருக்கும்.

‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்’ என்ற வகையில் இனி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையில் அவர்களேயறியாமல் ஒரு போர்நிறுத்தச் சூழல் (truce) உருவாகலாம்.

-oOo-

அரசியல்வாதிகளை சுத்தம் செய்கிறேன் என்று உச்சநீதிமன்றம் கிளம்பியுள்ள சூழலில், நீதிமன்றங்களே புதிதாய் கிளம்பியுள்ள பிரச்னையில் கலகலத்துப் போய்விடும் போல உள்ளது. சென்னை நீதிமன்றத்தில் வெடித்துள்ள பிரச்னை, இறுதியில் தில்லி உச்சநீதிமன்றம் வரை பின்விளைவுகளை ஏற்ப்படுத்தலாம். தற்போதைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள்.

அடுத்த ஒரு மாதம், உயர்நீதிமன்றத்திற்கு சோதனைக்காலம்!

-oOo-

சென்னை நீதிமன்ற களோபரங்களுக்கு இடையிலும், அண்ணா நூலகத்தை மாற்றுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது மகிழ்ச்சி தரும் செய்தி. தலைமை செயலகம் திறப்புவிழாவில் அதற்கு கிடைத்த எதிர்மறை விளம்பரம் (negative publicity) தலைமைச் செயலகம் மாற்றப்பட்ட பொழுது பெரிய எதிர்ப்பினை மக்களிடையே தோற்றுவிக்கவில்லை. ஹிந்து கூட அம்மாவின் நோக்கம் அறிந்து சும்மா கிடக்கும் தலைமைச் செயலகத்தை என்ன செய்யலாம் என்று, கொஞ்சம் உள்நோக்கத்துடன் போட்டி நடத்தியது.

ஆனால், நூலகம் விடயம் பரவலான எதிர்ப்பினை ஏற்ப்படுத்தி விட்டது. ஊடகங்கள் ஏதோ தங்களது சுதந்திரத்தில் கைவைக்கப்பட்டுள்ளது போல துடித்தன. போதாதற்கு நீதிபதி விட சில மாதங்களுக்கு முன்னர் நூலகத்திற்கு சென்று பார்த்து வியந்துள்ளது, வழக்குரைஞர்களின் பணியினை எளிதாக்கியுள்ளது.

வழக்கு மேலும் விசாரணைக்கு முன்னரே, ஜெயலலிதா இந்த முயற்சியை கைவிட்டு விடுவார் எனறே நினைக்கிறேன்.

மதுரை
03/11/11