25.12.11

முப்பது வெள்ளிக்காசுக்காய்…



நேற்று (24/12/11) தினகரன் நாளிதழைப் பிரித்த எனக்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது. கடந்த சில நாட்களாக, அதன் இரண்டு பக்கங்களில் வெளியிடப்பட்டு வந்த முல்லைப் பெரியாறு போராட்டம் சம்பந்தமான் புகைப்படங்களைக் காணவில்லை. இரண்டு பக்கம் என்ன, ஒரு பக்கம் இல்லை ஒரு புகைப்படம் கூட காணவில்லை!

ஆனால், தெளிவாக கண்ணில் பட்டது, கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் புகைப்படங்கள், செய்திகளில் அல்ல. கேரள அரசு விளம்பரங்களில். இரண்டு பக்கங்களில் அரை, அரைப்பக்க அளவில் ‘எதுவும் முக்கியத்துவம்இல்லாத, குறிப்பாக தமிழகத்துக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத கேரள அரசு விழாக்களைப் பற்றிய விளம்பரங்கள்.

Splendid Coincidence?

தற்செயலானதா, என்று நான் கூற வருவது, புகைப்படங்கள் இல்லாமல் போனதற்கும், கேரள விளம்பரங்கள் இடம் பிடித்தற்கும் இல்லை. இந்த பதிவினை தட்டச்சிக் கொண்டிருக்கையில், பின்புலத்தில் பதிவர் ரோசாவசந்த கூறிய சுட்டியினை பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கேளுங்கள் தரப்படும்பாடலில் ‘யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காய் காட்டிக் கொடுத்தானேஎன்ற டேப் ராஜமாணிக்கத்தின் கணீர் வரிகள்!

-oOo-


அதாவது, ‘என்ன இந்தப் பிரச்னை இப்படி போய்க்கொண்டேயிருக்கிறது. அரசு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்என்ற வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து பலரின் கவனத்திலிருந்து தப்பி விட்டது என்றே நினைக்கிறேன். அந்த கருத்து எழுதப்பட்ட தொனியிலிருந்தே, மூர்க்கத்தனமான ஒரு நடவடிக்கைக்கு காவல்துறையை தூண்டி விடுவது போல இருந்தது. மேலும், கம்பம் பகுதியில் நடப்பதை, எதோ அரசியல் கட்சிகளும், மொழி வெறியர்களும் தூண்டி விட்டு நடப்பது போலத்தான் சித்தரித்துள்ளது. உண்மையிலேயே, அரசியல் கட்சிகளோ அல்லது பிற இயக்க தூண்டுதலோ இல்லாமல் மக்கள் சுயமாகவே போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள் என்றால் அது முல்லைப் பெரியாறு போராட்டமும், கூடங்குளம் போராட்டமும் ஆகும். போராட்டத்தின் தீவிரம் உணர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் பிற இயக்கங்கள் தங்களை அதனோடு இணைக்க முயலுகின்றன. அவ்வளவுதான்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் வைக்கோவிற்கே பெரிய அளவில் ஏதும் ஆதாயம் இந்தப் போராட்டத்தில் இருப்பது போலத் தோன்றவில்லை!

ஆனால், இதே டைம்ஸ் குழுமம் தில்லியில் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை ஏறக்குறைய ஸ்பான்ஸர் செய்தது. அன்னா ஹசாரேவின் போராட்டம் தில்லியை ஸ்தம்பிக்க வைத்தது என்று பெருமையடித்த டைம்ஸ், அப்போதும் இதைப் போலவே, காவல்துறை வேகமாக செயல்பட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தால், இரண்டு நாட்கள் முன்பு அதன் முதல் பக்கத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கு உள்நோக்கம் உண்டு என்று கூறியிருக்க மாட்டேன்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கும்பல் (mob) குறிப்பிடுவது எனது அனுமானத்தை வலுப்படுத்துகிறது.

டைம்ஸ் சரி, ஹிந்து கூட இன்னமும் முல்லபெரியார் என்றுதானே கூறுகிறது?

மதுரை
24/12/11



Times View 
For a government which listed law and order as its primary responsibility, the continued unrest and violence along the Tamil Nadu-Kerala border over the Mullaperiyar dam, is a poor reflection of the AIADMK regime’s administrative abilities. Day after day, for more than two weeks, the police force here has been grappling with protesters driven by regional jingoism whipped up through political statements and rallies. The stir has crippled interstate trade and travel, besides affecting the livelihood of thousands in both states. It is time the governments in both states joined hands to restore normalcy and sobriety

15.12.11

டைம்ஸ் ஆப் கேரளா = 100 கோடி = முன்னாள் நீதிபதி!


தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும், என்பது எத்தனை அருமையான பழமொழி!

சமீபத்தில்தான் கபில் சிபல், மற்றவர்களது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சோனியா, மன்மோகன்சிங் ஆகியோர் பற்றி அவதூறாகவும் இணையம் எங்கும் பரவிக்கிடக்கும் விடயங்களை கட்டுபடுத்த முயற்சிக்கையில் அனைத்து இணைய பயன்பாட்டார்களாலும், பத்திரிக்கைகளாலும் விளாசித் தள்ளப்பட்டார்.

அவ்வாறு பேச்சு சுதந்திரத்திற்கு (freedom of expression) கொடி பிடித்து வந்ததில் டைம்ஸ் ஆப் இந்தியாவும் முன்னணியில் இருந்தது.

ஆனால், அந்த சூடு ஆறுவதற்கு முன்னதாகவே, டைம்ஸ் ஆப் இந்தியா தான் அவதூறு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையின் சிறப்பு நிருபராகிய ராதிகா கிரி என்பவருக்கும் சம்பந்தப்பட்ட அவரது கட்டுரை வெளியான ‘வீக் எண்ட லீடர்’ என்றவலைத்தளத்திற்கும் அறிவிப்பு அனுப்பியுள்ளது.


ராதிகா கிரி தனது கட்டுரையில், சென்னையில் செயல்படும் ஆங்கிலப்பத்திரிக்கைகளில் முக்கியமாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் எப்படி மலையாளிகளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது என்றும், அதனால் அவை முல்லைப் பெரியார் பிரச்னையில் கேரள அரசு சார்பாக செயல்படுகின்றன என்றும் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாரை ‘முல்லபெரியார்’ என்ற மலையாளஉச்சரிப்பில் ஆங்கில் ஊடகங்கள் எழுதுவதை ஒரு எளிய உதாரணமாக குறிப்பிடும் ராதிகா,டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலம் ‘ஓண’த்திற்காக அலங்கரிக்கப்பட்டாலும், தமிழ் புதுவருடம்கொண்டாட அனுமதிக்கப்படவில்லை என்பதிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களை தனது கட்டுரைக்குஅடிப்படையாக குறிப்பிடுகிறார்.

ஒரு அலுவலகத்தில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒரு பத்திரிக்கையாளரின் மனதில் எழும் எண்ணப்பாட்டினை (perception) கட்டுரையாக வடித்துள்ளார், ராதிகா கிரி.

இதுதான், தம்மை அவதூறு செய்துள்ளதாகவும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலை வைத்துள்ளதாகவும், இரு மாநில மக்களிடையே விரோதத்தை தூண்டியதாகவும் கூறி முதலில் ஒரு கோடி கேட்டு அறிவிப்பு அனுப்பிய டைம்ஸ்தனது இரண்டாவது அறிவிப்பில் 100 கோடி கேட்டுள்ளது.

பேச்சு சுதந்திரத்தை தூக்கிப் பிடித்துள்ளதாக கூறும் பத்திரிக்கையாலேயே, இந்த ஒரு சாதாரண அவதூறை தாங்க முடியவில்லை என்றால், தனது கட்சியின் தலைவியை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வலையெழுத்து மீது, ஒரு அரசியல்வாதி கபில் சிபல் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவதை எப்படி நாம் விமர்சிக்க முடியும்!

-oOo-

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஒரே ஒரு விளக்கம்தான் (justification) கொடுக்க முடியும். அதற்கு உடனடியாக ரூ.100 கோடி தேவைப்படுகிறது. தான் அவதூறு (?) செய்த வேறு ஒரு நபருக்கு நஷ்ட ஈடாக டைம்ஸ் 100 கோடி கொடுக்க வேண்டியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் முதற்கொண்டு பல்வேறு நீதிபதிகளுக்கு பங்கிருப்பதாக சொல்லப்பட்ட புராவிடண்ட் பண்டு ஊழல் பற்றிய செய்தியொன்றில், டைம்ஸ் குழும தொலைக்காட்சியான டைம்ஸ்நவ், முன்னாஸ் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவராக பணியாற்றியவருமான பி.பி.சாவந்த் படத்தினை சில விநாடிகள், தவறுதலாகத்தான் ஓட விட்டது.


அதனால் தான் அவதூறு செய்யப்பட்டதாக கூறி சாவந்த் வெகுண்டெழுந்தார். டைம்ஸ் நவ் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதனை தனது தொலைக்காட்சியிலும் தெரிவித்தது. சாவந்த பெருந்தன்மையாக விட்டிருக்கலாம். டைம்ஸ் குழுமம் மீது புனே நீதிமன்றத்தில் 100 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

புனே நீதிமன்றம், வழக்கின் இறுதியில் டைம்ஸ் குழுமத்தை சாவந்திற்கு 100 கோடி நஷ்ட ஈடாக கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை, சட்டமுறை அறிந்த அனைத்து நியாய் உணர்வுகளுக்கும் எதிரானது என்பதுதான் சட்ட வல்லுஞர்களின் கருத்தாக இருக்க முடியும். புனே நீதிமன்றம்தான் இப்படியென்றால் அதற்குப் பின்னர் ந்டந்ததுதான் வேடிக்கை!


டைம்ஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீடு முடியும் வரை புனே நீதிமன்ற தீர்ப்பினை இடைக்கால தடை செய்ய வேண்டிய மனுவில், உய்ர்நீதிமன்றம் 20கோடியை தொகையாக வைப்பீடு செய்ய வேண்டுமென்றும் மீதி 80 கோடிக்கு வங்கி உத்தரவாதம் (Bank Gurantee) கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. வங்கி உத்தரவாதம் என்பது, அந்த தொகையை வைப்பீடு செய்வது போலத்தான். வேறு வழியில்லாமல் டைம்ஸ் உச்ச நீதிமன்றம் சென்றால், மும்பைஉயர்நீதிமன்றம் கூறியது சரிதான் என்று மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மூன்று நீதிமன்றங்களுமே, இதுவரை பழக்கத்தில் உள்ள சட்ட நடைமுறைகளின்படி நடந்து கொள்ளவில்லை என்பது உரிமையியல் வழக்குகளில் பரிச்சயமுள்ள யாரும் கூறுவர். அவதூறுக்கு இத்தனை பெரிய இழப்பீடு என்பது, நீதிமன்ற தீர்ப்புகளை கேலிக்கூத்தாக்கி விடும். ராஜீவ் கொலை வழக்கில் 26 குற்றவாளிகளுக்கும் தூக்குத்தண்டனை கொடுத்தது போலத்தான்.

தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நடந்து கொண்டுள்ள முறைகள், மக்கள் ‘முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்றால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நஷ்ட ஈடா என்று கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், டைம்ஸ் குழுமத்திற்கு வேறு வழியில்லை. 100 கோடி ரூபாய் பணத்தை கட்டித்தான் ஆக வேண்டும். அதற்குத்தான் சாதாரண ஒரு வலைத்தளம் மீது பாய்ந்துள்ளார்கள் போல!

மதுரை
15/12/11

13.12.11

அரசற்ற நிலை நோக்கி வழிநடத்துகிறதா, இணையம்?


டேம் 999 படம் தடை செய்யப்பட்ட பொழுது, அதனை எதிர்த்து எழுந்த லிபரல் குரல்கள், சுப்பிரமணியன் சுவாமிக்கு ஹாவர்டு பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ள விடயத்தில் அதே வேகத்தில் எழவில்லை. உண்மையில், சுப்பிரமணியன் சுவாமியை சரியாக புரிந்து கொள்ள உதவிய அவரது டிஎன்ஏ கட்டுரையை வரவேற்று, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதுதான் சரியான செயலாக இருக்கும். மாறாக அதனை தடை செய்ய முயல்வதுதான் தவறு!

ஹாவர்டு பல்கலைக்கழகம், தனது அதீதமான எதிர்வினை மூலம் சுப்பிரமணியன் சுவாமிக்கு தேவையற்ற அனுதாபத்தை பெற்றுத் தந்துள்ளது.

இழப்பு சுவாமிக்கு அல்ல!

-oOo-

ஆனால், நமது நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை போற்றுபவர்கள் எங்கிருந்தெல்லாம் எழுகிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது, தலை சுற்றுகிறது. கபில் சிபல், ‘இணையத்தில் கட்டுப்பாடு வேண்டும் என்று ஆரம்பித்த பொழுது, அதனை எதிர்த்து அவரது வீட்டிற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னால் நிற்பது, ‘காஷ்மீர் கருத்துக்காக பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்றத்திற்குள்ளாகவே சென்று தாக்கிய நபர்!


அடுத்து ‘Babasaheb Ambedkar enshrined Freedom of Expression in the Constitution & on his nirvan diwas, UPA seeks to snatch it! என்று துவிட்டியிருப்பது, நரேந்திர மோடி!!

-oOo-

கபில் சிபல் என்றதும் போட்டி போட்டிக் கொண்டு வந்து அனைவரும் அவரை மொத்தினார்கள். நேற்று மார்கண்டேய கட்ஜுவும் இணையத்தில் நிலவும் கட்டுக்கடங்காத சுதந்திரம் பற்றி பேசியுள்ளார். பெரிய எதிர்வினை, இதுவரை இல்லை. ஆனால் வரும் காலத்தில் பாதிக்கப்படுபவர்கள் ஒவ்வொருவராக, எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது இணைய கட்டுப்பாடு வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெறலாம்.

இணையத்தில் கட்டுப்பாடு உள்ளதோ இல்லையோ, நமது நாட்டில் நிலவும் சட்டப்படி இணையத்தில் எழுதப்படும் விடயங்களுக்காக, குற்றவியல் நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படலாம் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். நமது குற்றவியல் சட்டப்பிரிவுகளை பரந்த அளவில் அர்த்தம் கொண்டால் (on a broader definition) அவ்விதமான விடயங்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் முகநூல், துவிட்டர் போன்ற இணையதளங்களை நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களையும், குற்றத்திற்கு உடந்தையானவர்கள் என்று பொருள் கொள்ளலாம். எதற்கு இந்த வேண்டாத வேலை என்பதால், யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், எதிர்காலத்தில் இணைய பயன்பாடு மக்களிடையே மேலும் மேலும் பெருகும் பொழுது, பல பிரச்னைகளை இணையம் எதிர் கொள்ள நேரிடலாம்.

-oOo-


எது எப்படியிருப்பினும், இணையம் தரும் கட்டற்ற சுதந்திரமே, அரேபிய எழுச்சி முதல் முல்லைபெரியாறு கிளர்ச்சி வரை அடிநாதமாக இருப்பது போல எனக்கு ஏனோ தோன்றுகிறது. அன்னா ஹசாரே, கூடங்குளம் மற்றும் கடந்த மூன்று நாட்களாக கம்பத்தில் ஏற்ப்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் பொதுவான ஒரு வடிவம் (Pattern) இருக்கிறது. மூன்றுமே, அரசியல்கட்சிகளின் கட்டுப்பாட்டினை மீறி கிளர்ந்தவை. அவர்களது கோரிக்கை நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று பரவலாக கருதப்பட்டாலும், அதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல், இதுதான் வேண்டும் என்று பெருத்த நம்பிக்கையுடன், போராட்டம் தொடர்ந்து தன்னை நடத்திக் கொண்டிருத்தல்.


முக்கியமாக, மிக முக்கியமாக, நாம் அடிக்கடி பார்த்து பழகிய மற்ற் போராட்டங்களைப் போல இல்லாமல், இம்மூன்று போராட்டங்களிலும் பங்கு பெருபவர்கள் மிகுந்த உற்சாகத்துடன், ‘இந்தப் போராட்டமில்லையென்றால் என் நிலை அதோ கதிதான் என்ற கலக்கம் ஏதுமின்றி இருப்பது. திடீரென வேலை பறிக்கப்பட்ட ஊழியர்களின் போராட்டங்களில் அவரவர்களின் தனிப்பட்ட எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கும். ஆனால் இம்மூன்று போராட்டங்களும் பங்கு பெறுபவர்களின் பொதுவான எதிர்காலம் பற்றியது. எனவேதான் சோர்வில்லாமல் இப்போராட்டங்கள் சுயமாகவே, தங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.


இப்போராட்டங்களுக்கான அடித்தளம், இணையமே என்றால், முல்லை பெரியாறுமா என்று தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை என அனுமானிக்கிறேன். உலகளாவிய வகையில், அரசற்ற (Anarchy) ஒரு நிலை நோக்கி இணையம் மக்களை வழிநடத்துகிறது.

அறுபதுகளில் தொடங்கி பின்னர் எழுபதுகளில் தேய்ந்து போன ஹிப்பி இயக்கம் போல, இவ்விதமான தன்னெழுச்சி போராட்டங்களும் ஒரு நாள் சலித்துப் போகலாம்...

மதுரை
13/12/11

11.12.11

சில்லறை வணிகமும், பொருளாதார ஆரூடங்களும்!


டைம்ஸ் ஆப் இந்தியா, மதுரைப் பதிப்பு (உண்மையில் திருச்சிப் பதிப்பு) வெளிவருகிறது என்றவுடன் நான் மிகுந்த ஆர்வம் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலில் ‘தி இந்துவிற்கு ஒரு மாற்று. இரண்டாவது, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய சுவாமிநாத ஆ.அய்யர் மற்றும் குருசரண் தாஸ் ஆகியோரின் வாராந்திர பத்திகள். முக்கியமாக அய்யரின் தர்க்க ரீதியில் அமைந்த தீர்வுகள் எப்பொழுதுமே சுவராசியமானவை!

கடந்த ஞாயிறு அன்று இருவருமே, சில்லறை வணிகத்தில் (ஐந்து முதல் ஐம்பது வரையிலான நோட்டுக்ளே புழக்கத்தை விட்டுப் போன பின்னர் இன்னமும் சில்லறை வணிகம் என்பது சரியா? என்பது ஒரு புறம் இருக்கட்டும்) அந்நிய முதலீடு பற்றி  தங்களது பத்திகளை எழுதியுள்ளனர்.


அய்யரைப் பொருத்தவரை இணையவழி வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக வால்மார்ட் போன்ற பெருங்கடை வணிகத்தை முழுங்கிக் கொண்டிருக்க கவலைப்பட வேண்டியது பெருங்கடைகளே தவிர இந்தியாவில் தற்பொழுது செயல்படும் சிறுவர்த்தகர்கள் அல்ல என்கிறார்.

முக்கியமாக அவர் கூறவருவது, அநியாயத்திற்கு இங்கு  அதிகரித்துள்ள நிலமதிப்பால், பெருங்கடைகள் நகர எல்லைக்கு வெளியேதான் நிறுவப்பட முடியும் என்பதாலும், சிறுகடைகள் போல அல்லாமல் பெருங்கடைகள் ஒழுங்காக தனது கணக்குகளை பராமரித்து அதற்கான வரிகளை தவறாமல் கட்ட வேண்டிய தேவை இருப்பதால், சிறுகடைகளுக்கு அவை போட்டியாக இருக்க முடியாது என்பதும்தான்.

பெருங்கடைகள் வரிகளை கட்டுவதோடு, தனது வேலையாட்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், புராவிடண்ட் பண்ட், கிராஜுவிடி போன்ற பணிப்பலன்களை சிறுகடைகள் போல அல்லாமல் வழங்க வேண்டிய தேவை இருப்பதை அய்யர் குறிப்பிடவில்லையெனினும், அவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இறுதியில், சிறுகடைகளால் பெருங்கடைகளை தடுக்க முடிந்தது போல இணையவழி வர்த்தகத்தை தடுக்க முடியாது என்று முடிக்கிறார்.

அய்யரின் பத்தி மூலம் நான் புரிந்து கொண்டது, சிறுகடைகளை விட் விலையினை குறைப்பது பெருங்கடைகளுக்கு இந்திய சூழ்நிலையில் சாத்தியமல்ல என்றால் குருசரண் தாஸ் தனது முக்கிய வாதமாக, அந்நிய முதலீட்டால் சில்லறை வணிகத்தில் இடைத்தரகர்களின் தலையீடு தடுக்கப்பட்டு விலைகள் பெருமளவில் குறையும் என்று கூறுவது குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறது.

எது உண்மை?

விலைகள் குறையாது என்று அய்யர் மறைமுகமாக கூறுவதா அல்லது விலைகள் குறையும் என்று தாஸ் உறுதியாக வலியுறுத்துவதா?

இன்று டைம்ஸ் நடுப்பக்கத்தில் சில்லறை வ்ணிகத்தில் அந்நிய முதலீட்டின் தேவையை வலியுறுத்தும் மற்றுமொரு கட்டுரை. அந்நிய முதலீட்டால் விவசாய உற்பத்தி பெருகும், அதனால் கிராமப்புற செல்வம் அதிகரிக்கும் என்ற ரீதியில். பொதுவாக இந்தக் கருத்தினை அனைவருமே எடுத்து வைக்கின்றனர்.

இதைப் போலவே, அந்நிய முதலீடு சிறுகடைகளை பாதிக்காது என்பதை, அரசியல்ரீதியில் அமைந்த கோஷ்ம் போல அந்நிய முதலீட்டிற்கான அனைத்து ஆதரவாளர்களும் சற்று உரக்கவே சொல்கின்றனர். அப்படியாயின் பெருங்கடைகளுக்கான வாடிக்கையாளர்கள் இனி புதிதாக தோன்றப் போகிறார்களா? ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள்தானே பெருங்கடைகளுக்கு செல்ல வேண்டும்? அப்படியாயின் அது சிறுக்டைகளுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்தும் என்பதுதானே உண்மையாக இருக்க முடியும். ஆனால், பாதிப்பு என்பது அவரக்ளால் உணரக்கூடிய வகையில் இல்லாமல் மெல்ல மெல்ல நிகழும் என்றே நினைக்கிறேன்.

உதாரணமாக, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்போதிருப்பது போல பெரிய நகைக்கடைகள் இல்லை. நகைத்தொழிலாளர்களிடம் நேரிடையாக நகை செய்யச் சொல்லி வாங்குவார்கள். பின்னர் சிறுநகைக்கடைகள், தற்பொழுது பெருங்கடைகள் தோன்றியுள்ளன. நகைத்தொழிலாளர்கள் இன்னமும் உள்ளனர். கடை வாடகையின்றி, விற்பனையாளர், குளிர் சாதனம், விளம்பரம், கணக்கு, வரி ஏதுமின்றி அவர்களும் நகை செய்து கொடுக்கின்றனர். ஏதோ ஒருவகை கணக்கும், குறைந்த சம்பளத்தில் விற்பனையாளரைக் கொண்ட, விளம்பரமே செய்யாமல் சிறுகடைகளும் உள்ளது.

ஆனால் பெருவாரியான நகைத்தொழிலாளர்கள் பெருங்கடைகளுக்காக சம்பளத்திற்கு உழைக்கின்றனர். பெருவாரியான வாடிக்கையாளர்கள் சிறுகடைகளை நாடுவதில்லை!


இந்தச் சந்தடியில் ‘இடைத்தரகர்களை ஒழிப்போம்என்ற வாதத்திலிலுள்ள குரூரத்தையும் யாரும் உணரவில்லை. ஏன், அவர்களும் இந்தியாவின் குடிமகன்கள்தானே, தரகுத்தொழிலும் சட்டபூர்வமானதுதானே என்ற கேள்வி கேட்க யாருமில்லை. குருசரண் தாஸ் கணக்குப்படி விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையில் இரு இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு?

வேலையிழக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு வேலையிலிருக்கும் பிற குடிமகன்களின் தலையில் வரிச்சுமையாக விழுகிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


பெருங்கடைகள் உருவாக்கும் வேலைவாய்ப்பு இடைத்தரகர்களின் வேலையிழப்பினை சரிகட்ட உதவலாம். அப்படியாயின், மீண்டும் வட்டத்தின் முதலிலேயே வந்து நிற்கிறோம். ஆக, தாஸ் கூறுவது போல தற்பொழுது ஐந்து ரூபாய்க்கு விவசாயி விற்பது இருபது ரூபாய்க்கு நுகர்வோருக்கு கிடைப்பது ஒழிந்து விவசாயிக்கு பத்து ரூபாயும் நுகர்வோருக்கு பதினேழு ரூபாயும் கிடைக்கும் என்பது, அனைத்து பொருளாதார கோட்பாடுகளைப் போலவே வெற்று ஆரூடமாகத்தான் இருக்கப் போகிறது.

The chances of a prediction to become reality are sadly more in astrology than in economics!

மதுரை
12/12/11