13.12.11

அரசற்ற நிலை நோக்கி வழிநடத்துகிறதா, இணையம்?


டேம் 999 படம் தடை செய்யப்பட்ட பொழுது, அதனை எதிர்த்து எழுந்த லிபரல் குரல்கள், சுப்பிரமணியன் சுவாமிக்கு ஹாவர்டு பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ள விடயத்தில் அதே வேகத்தில் எழவில்லை. உண்மையில், சுப்பிரமணியன் சுவாமியை சரியாக புரிந்து கொள்ள உதவிய அவரது டிஎன்ஏ கட்டுரையை வரவேற்று, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதுதான் சரியான செயலாக இருக்கும். மாறாக அதனை தடை செய்ய முயல்வதுதான் தவறு!

ஹாவர்டு பல்கலைக்கழகம், தனது அதீதமான எதிர்வினை மூலம் சுப்பிரமணியன் சுவாமிக்கு தேவையற்ற அனுதாபத்தை பெற்றுத் தந்துள்ளது.

இழப்பு சுவாமிக்கு அல்ல!

-oOo-

ஆனால், நமது நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை போற்றுபவர்கள் எங்கிருந்தெல்லாம் எழுகிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது, தலை சுற்றுகிறது. கபில் சிபல், ‘இணையத்தில் கட்டுப்பாடு வேண்டும் என்று ஆரம்பித்த பொழுது, அதனை எதிர்த்து அவரது வீட்டிற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னால் நிற்பது, ‘காஷ்மீர் கருத்துக்காக பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்றத்திற்குள்ளாகவே சென்று தாக்கிய நபர்!


அடுத்து ‘Babasaheb Ambedkar enshrined Freedom of Expression in the Constitution & on his nirvan diwas, UPA seeks to snatch it! என்று துவிட்டியிருப்பது, நரேந்திர மோடி!!

-oOo-

கபில் சிபல் என்றதும் போட்டி போட்டிக் கொண்டு வந்து அனைவரும் அவரை மொத்தினார்கள். நேற்று மார்கண்டேய கட்ஜுவும் இணையத்தில் நிலவும் கட்டுக்கடங்காத சுதந்திரம் பற்றி பேசியுள்ளார். பெரிய எதிர்வினை, இதுவரை இல்லை. ஆனால் வரும் காலத்தில் பாதிக்கப்படுபவர்கள் ஒவ்வொருவராக, எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது இணைய கட்டுப்பாடு வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெறலாம்.

இணையத்தில் கட்டுப்பாடு உள்ளதோ இல்லையோ, நமது நாட்டில் நிலவும் சட்டப்படி இணையத்தில் எழுதப்படும் விடயங்களுக்காக, குற்றவியல் நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படலாம் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். நமது குற்றவியல் சட்டப்பிரிவுகளை பரந்த அளவில் அர்த்தம் கொண்டால் (on a broader definition) அவ்விதமான விடயங்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் முகநூல், துவிட்டர் போன்ற இணையதளங்களை நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களையும், குற்றத்திற்கு உடந்தையானவர்கள் என்று பொருள் கொள்ளலாம். எதற்கு இந்த வேண்டாத வேலை என்பதால், யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், எதிர்காலத்தில் இணைய பயன்பாடு மக்களிடையே மேலும் மேலும் பெருகும் பொழுது, பல பிரச்னைகளை இணையம் எதிர் கொள்ள நேரிடலாம்.

-oOo-


எது எப்படியிருப்பினும், இணையம் தரும் கட்டற்ற சுதந்திரமே, அரேபிய எழுச்சி முதல் முல்லைபெரியாறு கிளர்ச்சி வரை அடிநாதமாக இருப்பது போல எனக்கு ஏனோ தோன்றுகிறது. அன்னா ஹசாரே, கூடங்குளம் மற்றும் கடந்த மூன்று நாட்களாக கம்பத்தில் ஏற்ப்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் பொதுவான ஒரு வடிவம் (Pattern) இருக்கிறது. மூன்றுமே, அரசியல்கட்சிகளின் கட்டுப்பாட்டினை மீறி கிளர்ந்தவை. அவர்களது கோரிக்கை நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று பரவலாக கருதப்பட்டாலும், அதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல், இதுதான் வேண்டும் என்று பெருத்த நம்பிக்கையுடன், போராட்டம் தொடர்ந்து தன்னை நடத்திக் கொண்டிருத்தல்.


முக்கியமாக, மிக முக்கியமாக, நாம் அடிக்கடி பார்த்து பழகிய மற்ற் போராட்டங்களைப் போல இல்லாமல், இம்மூன்று போராட்டங்களிலும் பங்கு பெருபவர்கள் மிகுந்த உற்சாகத்துடன், ‘இந்தப் போராட்டமில்லையென்றால் என் நிலை அதோ கதிதான் என்ற கலக்கம் ஏதுமின்றி இருப்பது. திடீரென வேலை பறிக்கப்பட்ட ஊழியர்களின் போராட்டங்களில் அவரவர்களின் தனிப்பட்ட எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கும். ஆனால் இம்மூன்று போராட்டங்களும் பங்கு பெறுபவர்களின் பொதுவான எதிர்காலம் பற்றியது. எனவேதான் சோர்வில்லாமல் இப்போராட்டங்கள் சுயமாகவே, தங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.


இப்போராட்டங்களுக்கான அடித்தளம், இணையமே என்றால், முல்லை பெரியாறுமா என்று தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை என அனுமானிக்கிறேன். உலகளாவிய வகையில், அரசற்ற (Anarchy) ஒரு நிலை நோக்கி இணையம் மக்களை வழிநடத்துகிறது.

அறுபதுகளில் தொடங்கி பின்னர் எழுபதுகளில் தேய்ந்து போன ஹிப்பி இயக்கம் போல, இவ்விதமான தன்னெழுச்சி போராட்டங்களும் ஒரு நாள் சலித்துப் போகலாம்...

மதுரை
13/12/11

2 comments:

Prabhu Rajadurai said...

Now Modi Govt Says Jaswant Book Against 'National Interest'
The Gujarat government which banned Jaswant Singh's controversial book on Jinnah alleging it was an attempt to tarnish the image of Sardar Vallabhbhai Patel, has in its notification described it as "highly objectionable and against national interest."
http://news.outlookindia.com/printitem.aspx?664712

Prabhu Rajadurai said...

Violence continued in the streets of Kerala wherever the play was performed, officially sponsored by the Church and its publications. Using clauses of the ‘Dramatic Performance Act’ the play was first banned in the Trichur District. Later, wherever the theatre group announced the performance of the play, it was immediately banned by the government.

A joint action committee went in appeal against the Dramatic Performance Act, but the High Court of Kerala and Supreme Court of India upheld the ban.
http://www.iheu.org/node/422