29.8.11

பேரறிவாளன், தண்டனையும், நம்பிக்கைகளும்...
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள பொழுதிலும், அவர்கள் மீதான மரண தண்டனை நீக்கம் செய்யப்படுவதற்கான சட்டரீதியிலான வாய்ப்புகள் அதிகமாக உள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் பரவலாக, முக்கியமாக மதுரைப் பகுதி வழக்குரைஞர்களால் வலியுறுத்தப்பட்டுள்ள போராட்ட முறைகள், வழக்கில் எதிர்மறையான ஒரு சூழலை உருவாக்கலாம் என்ற அச்சத்தை ஏற்ப்படுத்துகிறது.

நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நீதிப்பேராணை மனுவில் இறுதி உத்தரவு எப்படியிருப்பினும், சட்டரீதியில் அணுகப்பட்டாலே தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு எளிதில் கிடைக்கும். பின்னர் வழக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு சில காலம் பிடிக்கலாம். ஆனால், நாளை நீதிமன்றத்தில் கூடப் போகும் உணர்வாளர்களும், தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடியின் மரணமும் ஒரு அசாதாரண அச்ச உணர்வை ஏற்ப்படுத்தி, ‘வழக்கு இங்கு நடைபெறுவதே சுதந்திரமான நீதிபரிபாலனத்திற்கு இடையூறாக இருக்கும்’ என்று மத்திய அரசு வழக்குரைஞரோ அல்லது சுப்பிரமணியசுவாமி போன்ற யாராவதோ மனுச் செய்து, அதன் மூலம் வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டால், தண்டனைக் கைதிகளுக்கு பாதகமான சூழ்நிலை உருவாகலாம்.

ஏனெனில், நாளை வழக்குரைஞர்கள், உணர்வாளர்கள் என்று நூற்றுக்கணக்கில் நீதிமன்றத்தில் கூடப்போவதாக அறிகிறேன். அப்படியான சூழல் நீதிமன்றம் பார்த்திராத ஒன்று!

***


இவ்வாறு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்ப்பட்டால், அதன் காரணமாக தண்டனையை ரத்து செய்யலாமா என்ற பிரச்னையில் மாறுபட்ட கருத்துகள் உச்ச நீதிமன்றத்தில் எழுந்ததைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னை திருமதி.திருவெணிபென் என்ற வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய மன்றத்தினால் விசாரிக்கப்பட்டது.

அந்த வழக்கில், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான காலதாமதத்தை உச்சநீதிமன்றம் மரண தண்டனை அளித்து இறுதி தீர்ப்பு கூறும் நாளிலிருந்து கணக்கிட வேண்டுமென்றும், இத்தனை நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரையறை வகுக்க முடியாது என்றும் கூறியது. ஆயினும், கருணை மனுவை பரிசீலிப்பதில் ஏற்ப்படும் காலதாமதம், பின்னர் தண்டனையை ரத்து செய்வதற்கான முக்கியமான காரணி என்று உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் ஏற்றுக் கொண்டது.

இந்தக் கருத்தினை அடிப்படையாக வைத்து, இதற்குப் பின்னர் பல்வேறு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் கருணை மனுவை பரிசீலிப்பதில் ஏற்ப்படும் காலதாமதத்தினால், குற்றவாளிகளின் அடிப்படை உரிமை பாதிப்படைவதாக கூறி தண்டனையை ரத்து செய்துள்ளது.

நமது உயர்நீதிமன்றமும், கருணை மனுவை பரிசீலிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2 வருடம் 8 மாத கால அளவிற்க்கான காரணத்தை நிர்வாகம் விளக்கவில்லை என்று கூறி ஹாஜா முகைதீன் என்ற வழக்கில் தூக்குதண்டனையை ரத்து செய்துள்ளது.

ஆனால், கோவிந்தசாமி என்ற வழக்கில் கருணை மனுவை பரிசீலிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட 1 வருடம் 5 மாதத்திற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி தண்டனையை ரத்து செய்ய நமது உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இங்கு நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம், காலதாமதத்திற்காக தயாசிங் வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்கையில் உச்சநீதிமன்றம் கூறிய ‘yawning gap, embarrassing gap’ என்பதையெல்லாம் மீறி பேரறிவாளன் வழக்கில் கருணை மனுவை பரிசீலிக்க எடுத்துக் கொண்ட 11 வருட காலமானது என்னுடைய பார்வையில் ‘unconscionable gap’ ஆகும். மேலும் காலதாமதத்தில் குற்றவாளிகளின் பங்கு இல்லை. மாறாக பேரறிவாளன் பல நினைவூட்டு கடிதங்களை எழுதியுள்ளார்.

எனவே நாளை உயர்நீதிமன்றம் நிச்சயமாக மத்திய மாநில அரசுகளை காலதாமதத்திற்கான விளக்கத்தை அளித்து எதிருரை தாக்கல் செய்ய கோரும். காலதாமதத்தை அரசு விளக்க வேண்டியுள்ளதால், அதனை நீதிமன்றம் பரிசீலிக்கும் வரை தண்டனை நிறுத்தப்பட வேண்டும். எனவே, சட்டரீதியில் அவசியம் இடைக்கால தடை உத்தரவு பெற குற்றவாளிகளுக்கு உரிமை உள்ளது.

சட்டரீதியிலேயே வழக்கினை சந்திக்க தகுந்த வாய்ப்புகள் இருக்கையில், தீக்குளிப்பு, நீதிமன்றத்திற்குள் போராட்டம் போன்றவை, நான் ஏற்கனவே கூறிய எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தலாம்.

இறுதியாக, ஜெகதீஷ் என்ற வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பின் இறுதியில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது அப்படியே,

Those of us who have had the occasion to inspect a Jail where executions are carried out have first hand knowledge of the agony and horror that a condemned prisoner undergoes every day. The very terminology used to identify such prisoners - death row in-mates, or condemned prisoners, with their even more explicit translations in the vernacular - tend to remind them of their plight every moment of the day. In addition to the solitary confinement and lack of privacy iwith respect to even the daily ablutions, the rattle on the cell door heralding the arrival of the Jailor with the prospect as the harbinger of bad news, a condemned prisoner lives a life of uncertainty and defeat. In one particular prison, the horror was exacerbated as the gallows could be seen over the wall from the condemned cells. The effect on the prisoners on seeing this menacing structure each morning during their daily exercise in the courtyard, can well be imagined

2009ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்ட இந்த வழக்கில் தண்டனையை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்து விட்டாலும், தெளிவாகவே ‘காலதாமதமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது பேரறிவாளன் வழக்கினை வலுப்படுத்தும்.

எனவே, சட்டத்தின் கருணை மீது நம்பிக்கை வைப்பதே தற்போதய சூழ்நிலையில் சரியான செயலாக இருக்க முடியும்.

மதுரை
29/08/11

8 comments:

Prabhu Rajadurai said...

மேற்கண்ட பதிவில் கூறப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் Smt.Triveniben & Ors. Vs State of Gujarat (AIR 1989 SC 1335)
Haja Moideen & Ors Vs Government of India & Ors (1991 CriLJ 1325)
Govindasamy Vs President of India (2000 (1) CTC 432)
Daya singh Vs Union of India (AIR 1991 SC 1548)
Jagdish Vs State of MP (2009 (9) SCC 495)

Prabhu Rajadurai said...

சில நாட்களுக்கு முன்னர் முத்துகுமரன் என்ற நண்பர் 'நான் தொடர்ந்து பதிவுகள் எழுத வேண்டும்' என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இது போன்று யாரும் என்னைக் கேட்டதில்லை. அட நம்மையும் நினைவில் வைத்திருந்து, இப்படி கேட்கிறார்களே என்றிருந்தது. அவருக்கு என் நன்றி!

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

நினைவில் வைத்துக் கொள்ளாமல் என்ன?உங்களுடைய பதிவுகளைப் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

பேரறிவாளன் மற்றும் இருவர் விஷயமாக நீங்கள் எழுதிய இந்தப்பதிவு ஒன்று தான் சமீபகாலமாக நான் படித்த செய்திகளிலேயே கொஞ்சம் நிதானமாக எழுதப்பட்ட ஒன்றாக இருக்கிறது. உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அதன் பின்னணியில் காசுபார்க்கும் போக்கு, வெறுப்பு அரசியலாக்குவது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் வேரூன்றி வெகுநாட்களாகிவிட்டது.

நேற்று மதுரை உயர்நீதிமன்ற வாசல் கதவைப் பூட்டி வைத்து வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டமும், நீதிபதிகள் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்தபிறகு வழக்கறிஞர் சங்க நிர்வாகி ஒருவர் வருத்தம் தெரிவித்ததும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தியாக வெளிவந்திருக்கிறது.

cheena (சீனா) said...

நல்லதொரு இடுகை - உண்மை நிலையினை உணரும் படியாக - அலசி ஆய்ந்து எழுதிய விதம் நன்று. இன்று நீதி மன்றம் என்ன கூறுகிறதெனப் பார்ப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Ravindran said...

இறுதியில் சட்டத்தின் கருணை என்ற பதத்தை பயன்படுத்தியதன் அவசியம் என்ன ?

சட்டரீதியான உரிமை என்று சொல்ல முடியாதா ?

Prabhu Rajadurai said...

"பொதுவாக குற்றம் ஐயமின்றி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளி என்று தீர்க்க முடியும். ஆயினும், சில சமயங்களில் மனதிற்குள் சின்னதாக ஒரு ஐயப்பாடு இருக்க வாய்ப்புண்டு. அவ்விதமான நிலைகளில் மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும்"

அப்சல்குரு மரணத்தின் விளிம்பில் என்ற எனது பழைய பதிவில்

http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_07.html

Prabhu Rajadurai said...

“குற்றத்திற்கு தண்டனை வழங்குவது என்பது, சமூகத்தின் ஒழுங்கினை குற்றச்செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கே!. அதற்காக குற்றவாளியை எவ்வளவு தூரம் தண்டிக்கலாம் என்பது மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ள நிர்வாகம் மற்றும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களின் மனக்கவலை”

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? என்ற எனது பழைய பதிவில்
http://marchoflaw.blogspot.com/2008/10/3.html

பேரறிவாளன் மரணத்திலிருந்து நாளை தப்பினாலும், சிறையிலிருந்து விடுதலையடைவதில் உள்ள சிக்கல் குறித்த அலசல்

Prabhu Rajadurai said...

"இறுதியில் சட்டத்தின் கருணை என்ற பதத்தை பயன்படுத்தியதன் அவசியம் என்ன ?
சட்டரீதியான உரிமை என்று சொல்ல முடியாதா ?" நமது சட்டங்களும் கருணையின் அடிப்படையில் அமைந்தது என்பதை வலியுறுத்த விரும்பினேன். மேலும் பேரறிவாளன் வழக்கு உரிமையின் அடிப்படை என்பதை விட கருணையின் அடிப்படையில் அமைந்தது என்றுதான் கூற முடியும்.