கட்டாய உடலுறவு கொள்ள (கற்பழிக்க) முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்கா, பண்டாரி ஆகியோர் தீர்ப்பளித்திருப்பது இ.வா.அதிர்ச்சி. இந்தியன் பீனல் கோட் 511-ம் பிரிவின் கீழ் கொலை முயற்சிதான் குற்றம். ஆனால், வன்புணர்ச்சி முயற்சி குற்றமாகாது. கற்பழிப்புக்கான செக்ஷன் 376-ன் கீழும் முயற்சியைக் குற்றம் சாட்ட முடியாது என்றனர் நீதிபதிகள். ஜார்கண்ட் மாநிலத்தில் தாரகேஸ்வர் சாஹே என்பவர் 12 வயது சிறுமியுடன் கட்டாய உறவுகொள்ள முயன்றார். செக்ஷன் 354-ன் கீழ் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் (மாடஸ்டி) குலைத்ததாக மட்டுமே தாரகேஸ்வரரைக் குற்றம் சாட்டலாம் என்று தீர்ப்பு தரப்பட்டது!
பத்தி எழுத்தாளர் ஞாநி தனது சட்ட அறிவினை வெளிச்சம் போட்டுக் காட்டும் மற்றொரு பதில்!
முதலாவது வன்புணர்வுக்கு முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாரகேஸ்வர் சாஹே வழக்கில் கூறவில்லை. இரண்டாவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511ன் கீழ் கொலை முயற்சி குற்றம் என்று குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் எங்கும் குறிப்பிடவில்லை. மூன்றாவது 376ம் பிரிவின் கீழ் முயற்சியை குற்றம் சாட்ட முடியாது என்றும் நீதிபதிகள் கூறவில்லை. நான்காவது, சாஹே கட்டாய உறவு கொள்ள முயன்றார் என்று நிரூபிக்க தகுந்த சாட்சிகள் இல்லை என்பதை ஞாநி அறியார். ஆயினும் நேரில் பார்த்தது போல முயன்றார் என்று எழுத துணிகிறார்.
உண்மையில், ஞாநி அந்த தீர்ப்பை படிக்கவில்லை. ஆனால் தீர்ப்பைப் பற்றி இந்தியன் எக்சுபிரசு இதழில் வந்த செய்தியினை படித்திருக்கிறார். அந்த செய்தியில் குறிப்பிடப்படும் 511, 376 மற்றும் 354 ஆகிய பிரிவுகளை ஞாநி, அது என்ன என்று புரியாமலேயே தனது வாசகர்களுக்கு எடுத்து ஊட்டியுள்ளார்.
தமிழ் பத்தி எழுத்தாளர்களின் தரம் இந்த அளவுக்கு, திண்ணையில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் அளவிற்கு தாழ்ந்து இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!
-oOo-
சாஹே என்பவர் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டப்படுகிறார். வன்புணர்வு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375ல் விளக்கப்படுகிறது. சாஹே மீதான குற்றம் அப்படி முயற்சித்தார். பிரிவு 511 என்பது எந்த ஒரு குற்றத்தையும் செய்ய முயற்சித்தால், அந்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி வழங்கப்படலாம் என்று கூறும் பிரிவு. எனவே சாஹே குற்றம் சாட்டப்பட்டது 375 மற்றும் 511ன் கீழ்.
ஆனால் கொலை முயற்சிக்கு மட்டும் தனியே பிரிவு உள்ளது. பிரிவு 307ன் படி கொலை முயற்சிக்கு 10 வருடம் தண்டனை வழங்கலாம் என்று உள்ளதால், கொலை முயற்சிக்கும் 511க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
சாஹே வழக்கின் சாட்சிகளை பரிசீலித்த நீதிபதிகள், வன்புணர்வு கொள்ள முயற்சித்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், சாட்சிகள் சாஹே சிறுமியை மானபங்கப்படுத்தியுள்ளார் (outraging the modesty of a woman) என்பதை நிரூபிக்க போதுமான சாட்சிகள் உள்ளன என்று கூறி அதற்கான பிரிவு 354ன் கீழ் சாஹேயை தண்டித்துள்ளனர்.
-oOo-
வ்ன்புணர்வின் முக்கிய கூறு பிறப்புறுப்பில், ஆணுறுப்பை நுழைப்பது. எனவே அவ்வாறான் எண்ணமும், அதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு வகையான செயல்களை செய்வது வன்புணர்வாகாது. மாறாக பிரிவு 354ன் கீழ் வரும்.
இப்பொழுது மீண்டும் ஞாஞியின் பதிலினை படித்தால் எவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்பது புரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது. கொஞ்சம் நேரம் செலவழித்து படித்திருந்தால், இப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அபாண்டமாக பழி சுமத்தியிருக்க மாட்டார்...
-oOo-
ஆயினும் நீதிமன்ற அவமதிப்பு புரிந்துள்ளார் என்று போட்டு கொடுக்க மாட்டேன். ஆனால் ஞாஞி ஒன்றுமே இல்லாத விடயத்தில் சட்ட வல்லுஞர் போல நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்....அவமதித்தவர் கருணாநிதி அல்லவா?
கருணாநிதி பதில்: அந்த நடிகர் ராமனாகப் பிறக்கவில்லை. பிறந்திருந்தால், மாரீசன் என்ற மானை அந்த ராமன் கொன்றதைவிட, இது என்ன மாபெரும் குற்றமா என்று கேட்டிருப்பார்.
ஞாஞி பதில்: நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுவதாக ஒரு முதலமைச்சர் சொல்வது, நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.
ஞாஞி பதில்: நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுவதாக ஒரு முதலமைச்சர் சொல்வது, நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.
நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் நீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு!
முதலாவது அரசு (காவல்துறை) மீதான விமர்சனம். இரண்டாவது நீதிமன்றம் மீதான விமர்சனம். ஆனால் இரு விமர்சனம் ஒருவர் வைப்பதற்கு நமது நாட்டில் உரிமை உண்டு. அதனை அவமதிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது.
கருணாநிதி கூறியது முதலாவது வகை. ஆயினும் அவரது பதிலினை படிக்கும் யாருமே, கேள்விக்கு பொருத்தமில்லாத பதிலினை கூறியிருக்கிறார் என்று கூறுவார்களே தவிர நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று கூற மாட்டார்கள்.
ஆனால், ஞாஞிக்கு கருணாநிதி என்றாலே நிதானம் தவறி விடுகிறது.
-oOo-
நீதிமன்ற அவமதிப்பு என்பதே ‘பேச்சுரிமையை பாதிக்கும் ஒரு சட்டம்’ என்று முற்போக்குவாதிகளால் விமர்சனம் வைக்கப்படும் காலத்தில், ஞாஞி நீதிம்னற அவமதிப்பு பூச்சாண்டி காட்டுவது அபத்தமாக உள்ளது.
அது சரி, வன்புணர்வை சரி கட்டாய உடலுறவை ‘கற்பழிப்பு’ என்று குறிப்பிட்டு விளக்குபவர்கள் முற்போக்குவாதிகளாக இருக்க முடியாதுதான்.
மதுரை
19/10/09