20.9.09

பிரபலங்களும், சங்கடங்களும்...நீதிபதி கண்ணன் தனது வலைப்பக்கத்திற்கு மூடு விழா நடத்திக் கொண்டிருக்கிறார். வலையுலகம், பிரபலமானவர்களுக்கு என்று தனி இருக்கை தருவதில்லை. அங்குதான் தர்மசங்கடமே!

பிரபலமானவர்கள், சாமான்யர்களை விட்டு விலகியிருப்பதே நல்லது. இல்லை, சசி தரூர் மாதிரி ஏடாகூடமாக மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஏதோ டிப்ளமோட் என்கிறார்கள். எதிரிலிருப்பவரின் மனநிலையினை படித்து, அவரை வசியம் செய்யும் வகையில் பேசும் திறமை வேண்டும் என்கிறார்கள். இவர்களது டிப்ளமோடிக் திறமை இவ்வளவுதானா என்று இருக்கிறது.

முன்பு ஒரு ‘டிப்ளமேட்’ தலையறுந்த கோழிகள் (headless chicken) என்று கூறி மாட்டிக் கொண்டார். இந்த ‘டிப்ளமேட்’ மாட்டுத் தொட்டில் (cattle class) என்று கூறி சிக்கலில் உள்ளார்.

மொழி அறிவு என்பது அவரவர் மனதிற்குள் பேசி மகிழ்வதற்கு அல்ல. மாறாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் சாதனம் அல்லவா? எனவே இந்த வார்த்தைகள் யாரை சென்று அடையப் போகிறது என்பதை தீர்மானித்து அதற்கு ஏற்ற மொழியினை பயன்படுத்துவதே சிறந்தது.

மாறாக என்னுடைய அகராதியில் இந்த பதத்திற்கு அர்த்தமே வேறு என்று எவ்வளவுதான் உரக்கக் கூறினாலும், யார் காதில் விழப் போகிறது?

தினகரன் போன்ற பத்திரிக்கைகளில், ‘சசி தரூர் விமான எகனாமி கிளாஸில் பயணிப்பது, மாட்டுத் தொழுவத்தில் இருப்பது போன்றது’ என்றார் என்று தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.


-oOo-

தினகரனின் மொழி பெயர்ப்பு குயுக்தியானதா என்று தெரியாது. ஆனால், நீதிபதி தினகரன் மீது சென்னை வழக்குரைஞர்கள் சிலர் அளித்த ஒரு புகாரில் குயுக்தியான (mischievous) மொழி பெயர்ப்பு ஒன்றினை கண்டேன்.

அந்த புகார் நகல் ஏதோ வலைப்பக்கத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு இடத்தில், அவரது நிலத்திற்கு செல்லும் சாலைக்கு ‘Emperor of Justice P.D.Dinakaran Road’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கண்டேன். என்னடா, இவ்வளவு அருவெறுக்கத்தகுந்த பெருமை கொண்டவரா அவர் என்று நினைத்தேன். மீண்டும் ஒரு இடத்தில் அவ்வாறாக குறிப்பிடப்பட்டு அடைப்புக்குறிக்குள் ‘Needhi Arasar’ என்று இருந்தது.

ஐஸ்டிஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘நீதி அரசர்’ என்று இங்கு குறிப்பிடுகிறார்கள். அவலட்சணாக உள்ள அந்த பட்டத்தினை நீதிபதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனரோ? ஈழத்தில் ‘நீதி நாயகம்’ என்று ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் குறிப்பிடுகிறார்கள். எனினும், நீதி அரசர் என்பதை தமிழ் நன்கு அறிந்த அந்த வழக்குரைஞர்கள் ‘Emperor of Justice’ என்று தங்களது புகாரில் மொழி பெயர்த்து இருந்தது, அவர்களது நோக்கத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏனெனில் அந்தப் புகாரினை படிக்கும் தமிழ் தெரியாத எவருமே, இப்படிப்பட்ட அகங்காரம் கொண்டவரா, இந்த தினகரன்’ என்று நினைக்க வைக்கும். படிப்பவர்களின் மனதில் தினகரனைப் பற்றிய எண்ணம் ஒன்றினை ஏற்றி விட்டால், பின்னர் மற்ற விடயங்கள் அந்த எண்ணப்பாட்டுடனே அணுகப்படும்.

புகார் எழுதியவர்கள் சற்று கவனமுடனிருந்திர்க்கலாம்!

-oOo-

ஆனாலும் நமது நீதிபதிகள் பலரின் படோடாபகம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல!

மதுரை
20/09/09

4 comments:

சுந்தரவடிவேல் said...

// வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல!//
:)

அமர பாரதி said...

எல்லோருக்கும் "அரசர்" ஆக வேண்டுமென்ற நினைப்பு இருக்கிறது. சமீபமாக "நீதியரசர்" பதம் மேடைகளிலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கமிஷனர் "காவலரசர்" என்றும் வைஸ் சான்ஸிலர் "கல்வியரசர்" என்றும் அழைக்கப்பட்டும் காலம் தொலைவில் இல்லை. மேடையில் அதை சொல்லும் போது சிறிதும் வெட்கமில்லாமல் புன்சிரிப்புடம் உட்கார்ந்திருப்பவர்கள் இருக்கும் வரை பட்டங்களும் வழங்கப்படும்.

சசி தாருர் போன்றவர்கள் பொது மக்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பது அவர் மொழியிலேயே தெரிகிறது. இவரும் ஒரு "அரசரே". இவரை ஐ.நா உறுப்பினராக்குவதற்கு இந்தியா மிகவும் முயற்சி செய்தது. பொது மக்களிடம் வாங்கிய வரிப்பணத்தில் நடக்கும் அரசாங்கம் செய்யும் செலவில் மஞ்சள் குளிக்கிறர்கள். இன்னொருவர் தன்னுடைய சிலைகளை மாநிலம் முழுவதும் நிறுவுகிறார். நாம் ஒன்றும் செய்ய முடியாது.

புருனோ Bruno said...

//புகார் எழுதியவர்கள் சற்று கவனமுடனிருந்திர்க்கலாம்!//

கவனத்துடன் எழுதியதாகவே நான் நினைத்தேன். (அவர்களின் நோக்கத்தில் கவனத்துடன்.... )

புருனோ Bruno said...

//ஆனாலும் நமது நீதிபதிகள் பலரின் படோடாபகம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல!
//

:) :) :)