27.12.08

'கஜினி'யும், ஹிட்லர் சொன்னதும்...


கஜினி.....

மும்பை பயங்கரவாத தாக்குதலாலும் அதனைத் தொடர்ந்த தொலைக்காட்சி ஊடகத்தாக்குதல்களாலும் ஏற்ப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும், கஜினி தயாரிப்பாளர்கள் நம்புவது, படத்தில் செலவில் சுமார் 30 சதவீதத்தினை முழுங்கிய விளம்பரத்தினை.

சும்மாவா பின்னே...நமது தொலைக்காட்சி ஊடகங்கள் தேசபக்தியை வளர்ப்பதில் மிஞ்சிய நேரத்தை கஜினியை விற்பதில் செலவிடுகின்றன. அந்த ஊடகத்தாக்குதலில், இந்தியர்கள் மறந்து போனது ‘இந்திய திரைப்பட உலகின் மகா தயாரிப்பான (magnum opus) கஜினி’ மெமண்ட்டோ (Memento) என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்’ என்பதை.

இந்த ‘தழுவல்’ என்பது காப்பி என்பதன் நாகரீகமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் இந்திய காப்பி ரைட் சட்டப்படி ‘தழுவுதல்’ (adaptation) என்பதும் ஒரு காப்பிரைட் மீறல்தான். சட்டத்தை தள்ளுங்கள்...தார்மீக உரிமை?

ஐயா, தழுவுங்கள் அல்லது காப்பியடியுங்கள்...ஆனால் தயவு செய்து அதனை ஒத்துக் கொள்ளுங்கள். இணையத்தில் தேடினால்...அமீர் கான் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல், ‘கஜினி மெமண்டோவின் தழுவல் கூட இல்லை’ என்கிறார். இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.

***

நம்ம ஊர் இயக்குஞர் மணிரத்னம் ‘இந்தியாவின் ஸ்பீல்பெர்க்’ என்று புகழப்படுவதும், கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், மற்ற திரைப்படங்களிலுள்ள சிறப்பான காட்சிகளை தழுவுவதும், காப்பிரைட் முறைகேடுதான்

இந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த ஒரு ராமராஜன் படமும், இந்தியாவின் முக்கிய படங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்ட நாயகன் படத்தை விட சிறந்த படம் என்று என்னால் கூற முடியும்.

கரகாட்டக்காரன் தவிர, ஏனெனில் அது தில்லானா மோகனாம்பாளின் தழுவல்!

***

தமிழகத்தின் தலைசிறந்த திரைப்பட அறிவுஜீவியாக புகழப்படும் கமல்ஹாசன் கூட தனது ‘அவ்வை சண்முகி’ படம் என்பது ஆங்கிலப்பட தழுவல் என்பதை தனது ரசிகர்களுக்கு துணிச்சலாக தெரியப்படுத்தினாரா என்பது தெரியவில்லை.

பிக்காசோவின் எந்த ஒரு ஓவியத்தையும், அசலைப்போலவே உருவாக்கும் ஓவியர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் பிக்காசோவின் புகழில் ஒரு சதவீத பங்கினைக் கூட உலகம் அளிப்பதில்லை.

***

இந்தியாவின் முக்கிய திரைப்படமும், மூத்த இயக்குஞரும், முன்னணி நடிகரும் இப்படியென்றால்...என்ன சொல்வது?

நம்மவர்கள் வெள்ளையர்களை விட அறிவில் கொஞ்சம் குறைந்தவர்கள் என்றா?


மதுரை
271208

19 comments:

ramachandranusha(உஷா) said...

வக்கீலய்யா, இரண்டொரு வருடங்களுக்கு முன்பு ஏவி எம் சரவணனின் தொடர் ஒன்று கல்கி பத்திரிக்கையில் வந்துக் கொண்டிருந்தது.எனக்கு சில இதழ்கள் கிடைத்தன. தொடர்ந்து படிக்க கிடைக்காத இடத்தில் இருந்தேன் :-) அதில் சில ஆங்கில படங்களைப் பார்த்துவிட்டு, தமிழுக்கு ஏற்றாற்போல மாற்றியதை மிக சாதாரணமாய் சொல்லியிருந்தார். என் நினைவில்
இருந்தது பேரண்ட்ஸ் டிராப் குழந்தையும் தெய்வமும் ஆன கதை. குட்டிபத்மினி, குட்டியாய் இரட்டை வேடத்தில் நடித்தது. புத்தகமாய் வந்திருக்கும், தேடி முழுக்க படிக்க வேண்டும்.
அதேப் போல டஸ்டின் ஹாப்மேன் நடித்த "டூட் சீ" படத்தின் சில அப்பட்ட தழுவல் அவ்வை சண்முகியில் வரும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.//

இது சற்று அதிகப்படியான விமர்சனம். தவிர்த்து இருக்கலாம்.

மற்ற சில படங்கள் அப்படமாக படியெடுத்திருப்பதை அறிவேன். ஆனால், தமிழ் கசினி, இந்தி கசினி, memento மூன்றையும் பார்த்தவன் என்ற வகையில் முந்தைய இரண்டு படங்களை நிச்சயம் mementoவின் தழுவலாக கூற முடியாது. கதைத் தலைவனின் நோயும் பழி வாங்கலும் தான் ஒற்றுமையே தவிர, திரைக்கதை முற்றிலும் மாறுபட்டது. இந்த ஒற்றுமையைக் கூட இந்தி கசினியில் பெயர் போடும் போது அறிவித்து விட்டே தொடங்குகிறார்கள். ஒரு நோயும் பழிவாங்கலும் தழுவல் என்றால் ஒரு படம் கூட எடுக்க முடியாது. memento படம் மூன்று முறை பார்த்தும் புரியவில்லை. கசினி படத்தையோ பல முறை பார்த்து மகிழ மகிழ்ந்திருக்கிறோம்.

திரையில் கதையை விட திரைக்கதை தான் முக்கியம். அதை ரசிக்கும் வகையில் தரும் எந்த இயக்குநரும் பாராட்டுக்குரியவர் தான்.

சாலிசம்பர் said...

//நம்மவர்கள் வெள்ளையர்களை விட அறிவில் கொஞ்சம் குறைந்தவர்கள் என்றா?//

அறிவில் குறைந்த இனம், உயர்ந்த இனம் என்று ஒன்றும் இல்லை.ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனம் முன்னிலை வகிக்கிறது. இன்றைய நிலையில் மேற்கு முன்னிலை வகிக்கிறது, நாம் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். ஆனால் பின்பற்றுவது வேறு, காப்பி அடிப்பது வேறு. சீனத்திரைப்படங்களான crouching tiger hidden dragon , kung fu hustle ஆகியவை ஹாலிவுட் தரத்தில் இருந்தது,அதனால் உலகளாவிய சந்தையைப்பெற்றன.அவர்கள் எதையும் காப்பி செய்யவில்லை.ஹாலிவுட் தரத்தை பின்பற்றினார்கள்.

கமலின் வேட்டையாடு,விளையாடு பார்த்துவிட்டு உலகத்தரமான படம் என்று மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தேன் bone collector பார்க்கும்வரை.அதைப் பார்த்தவுடன் சப்பென்று ஆகிவிட்டது.

போட்ட காசு தேறுமா என்ற பயம் தான் ஏற்கெனவே வெற்றிபெற்ற படங்களை காப்பி அடிக்க தூண்டுகிறது.பெருந்தொகையை ஏன் பணயம் வைக்கவேண்டும்?, ஈரான் போன்ற நாடுகளில் சிறு தொகையிலேயே உலகத்தரம் வாய்ந்த படங்கள் எடுக்கப்படுவதை கேள்விப்படுகிறோம். கமல் போன்றவர்கள் ஏன் அம்மாதிரி முயற்சிகள் செய்வதில்லை? என்பதே நம்மைப் போன்றவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

அதே சமயத்தில் ஒரிஜினாலிட்டி என்பது பற்றி தமிழவன் அவர்களுடைய மாறுபட்ட கருத்து ஒன்றை பின்னூட்டத்தில் நாளை இடுகிறேன்.

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு,
நேரம் கிடைத்தால் இந்த வணிக வானொலி நிகழ்ச்சியைக் கேளுங்கள்.
http://marketplace.publicradio.org/display/web/2008/03/17/bollywood_copycats/

PRABHU RAJADURAI said...

திரு.ரவிசங்கர்,

எனது விமர்சனம் சற்று அதிகப்படியாகவே...அநாகரீகம் என்ற எல்லையை தொட்டதை நானும் அறிவேன். அதற்காக வருந்துகிறேன்.

ஆனால், காப்பியடிப்பவர்களும் இங்கு படைப்பாளிகளாக கொண்டாடப்படும் சூழ்நிலையில், எழுந்த அருவருப்பின் வெளிப்பாடு!

மற்றபடி நான் இரண்டு கஜினியும் பார்க்கவில்லை. அதற்காக எனது நேரத்தினை செலவிடவும் தயாராக் இல்லை. ஆனால் மெமண்டோ பார்த்திருக்கிறேன். அதான் புத்திசாலித்தனமான திரைக்கதையினையும் ரசித்திருக்கிறேன்.

imbd தளத்தில் அதன் கதைச்சுருக்கம் இவ்வாறு தொடங்குகிறது
" man, suffering from short-term memory loss, uses notes and tattoos to hunt for the man he thinks killed his wife"

இதுதானே கஜினியின் கதைச்சுருக்கமாகவும் இருக்க முடியும்?

"ஒரு நோயும் பழிவாங்கலும் தழுவல் என்றால் ஒரு படம் கூட எடுக்க முடியாது"

ஆயிரக்கணக்கான படங்கள், ஏன் இந்தியாவிலேயே எடுக்கப்பட்டுள்ளன.

short term memory loss, overcoming the same by making small notes and tatooing இந்த இரண்டும்தான் அதன் USP.

சுந்தரவடிவேல் குறிப்பிட்டுள்ள வானொலியை கேட்டுப்பாருங்கள்...வெட்கமாக இருக்கிறது!

காவ்யா விஸ்வநாதன் என்ற எழுத்தாளர், அதுவும் சிறுமி என்ன கதையையா காப்பியடித்தார்...சில வர்ணனைகளை உல்டா செய்தார். உலகம் அவரை கிழித்து எறியவில்லையா?

இன்றுவரை எனக்கு அதிகம் பிடித்த இந்திய திரைப்படங்களில், முதலிடம் ஷோலேவுக்குத்தான். ஆனால் செவன் சமுராய் பார்த்தபின்ன்ர் ஒரு remix பாடல் சமைப்பவருக்கு தரும் மரியாதைதான் அந்த படத்தை தயாரித்தவர்கள் மீது கொடுக்க மனது வருகிறது!

remix பாடல்கள் சில முன்னதை விட சிறப்பாயிருக்கலாம். ஆனால் அதற்காக அவை கொண்டாடப்படுவதில்லை!

நாளை கஜினி ஆஸ்காருக்கு சிபாரிசு செய்யப்படலாம்...பார்க்கலாம் அப்பொழுது உலகம் என்ன சொல்லுமென்று!

வஜ்ரா said...

ரவிசங்கர் சார்,

மெமெண்டோ வில் கதையின் நாயகனுக்கு இருக்கும் விபரீத நோய், அவன் அதனால் உடம்பில் பச்சை குத்திக் கொள்வதும், தன் காதலியின் மரணத்திற்கு பழிவாங்குதலும் தான் கதயே.

கதையின் 90 சதவிகித விஷயங்களைக் காப்பியடித்துவிட்டு, கதையின் நாயகன் ஒரு இண்டஸ்டிரியலிஸ்டு, அவனுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் போட்டுவிட்டால் ஒரிஜினல் கைதயா ?

தமிழ்/இந்தி சினிமாக்கள் விழங்காமல் போவதற்கு இப்படிப்பட்ட காப்பியடிக்கும் இயக்குனர்களையும் ஈரோக்களையும் தலையில் தூக்கிவைத்து ஆடுவது தான் காரணம். They just do not deserve the hype they get.

இந்த கேடுகெட்ட காப்பி அடிக்கப்பட்ட படத்திற்கு காப்பிரைட் வயலேஷன் கேஸ் போட்டு பப்ளிசிட்டி வேறு நடக்கிறது.

இதில் ஆஸ்காருக்கு ஆசைவேறு ஒரு கேடு.

இங்கிலீஷ் படத்தை உல்டா பண்ணி எடுக்கும் படத்தை இங்கிலீஷ் காரனுக்குப் போட்டு காட்டினால் அவன் ஆஸ்கார் தருவானா ?

//
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.
//

உண்மை தான். அங்கே அமேரிக்க இயக்குனர்கள் அமேரிக்கர்களின் துக்கத்தில் பங்கு கொள்கின்றனர். இங்கே தமிழக/இந்திப்பட இயக்குனர்கள் தாவூத் பிடிபட்டால் /தூக்கிலிடப்பட்டால் பட வெளியீட்டைத் தள்ளிப் போடுவார்கள்.

ஹிட்லர் இதில் என்ன சொன்னார் ?

ஆரிய மேன்மை என்று ஒரு புருடா விட்டான் அவன். அதையும் நம்பி இரண்டு தலைமுறையினர் விழங்காமல் போயினர். அதையே நம்பிக் கொண்டு இந்தியாவில் பல தலைமுறை சீரழிகிறது. இன்னும் அதை தூக்கிப் பிடித்துக் கொண்டு திராவிடம் பேசுகிறார்கள் பலர். அவர்களுக்கெல்லாம் வோட்டுப் போட்டு நாம் உட்காரவைக்கிறோம். இப்படிப்பட்ட சமூகத்திலிருந்து என்ன ஒரிஜினாலிட்டி கொண்ட திரைப்படங்களை எதிர்பார்க்க முடியும் ?

இப்படி இங்கிலீஷ் பட காப்பிகளைத்தான் பார்க்கமுடியும்.

Indians have forgot how to think.

தருமி said...

(அந்தக் காலத்தில் ஹேமா மாலினியை நம் தமிழ் ஊடகங்கள் தூக்கி வைத்தது போல..)நீங்கள் கூட மூத்த இயக்குனர் என்று குறிப்பிட்டிருக்கும் மணிரத்தினத்தை இந்த அளவு மக்களும், ஊடகங்களும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது ஏனென எனக்குப் புரிபடுவதில்லை.

இதைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.

சாலிசம்பர் said...

இலக்கியம் குறித்த தமிழவனின் இக்கருத்து திரைத்துறைக்கு பொருந்துமா எனத்தெரியவில்லை.

//தமிழவனின்'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' நாவல் , லத்தீனமெரிக்க எழுத்தின் நகலாக வந்திருக்கிறதா? என்ற பிரேம்ரமேஷின் கேள்விக்கு அவருடைய பதில்.

இலக்கியத்தில் ஒரிஜினாலிட்டி என்பது என்ன, அதற்கு இலக்கியத்தில் என்ன இடம் இருக்கிறது என்பதை நாம் விளக்கியாக வேண்டும். இது எங்கிருந்து வந்த concept. நான் சமீபகாலமாக இந்தியத்தன்மை,கிழக்கிந்தியத்தன்மை என்பதற்கு முக்கியத்துவம் தருவதாகவும், இங்கிருந்து கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று வலியுறுத்தி வருவதாகவும் நீங்கள் குறிப்பிட்டீர்கள், இது உண்மை. இந்திய இலக்கிய உலகில் ஒரிஜினாலிட்டிக்கு என்ன இடம்? எனது புரிதலில் ஒரிஜினாலிட்டி என்பதை நான் மறுக்கிறேன். நாம் ஒரிஜினாலிட்டி என்ற கோட்பாட்டை மேற்கிலிருந்து பெற்றோம்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனியத்தின் வழியாக வந்து சேர்ந்த இலக்கியத்தையே நாம் இலக்கியமாக நம்பி அது உருவாக்கிய காலனியாதிக்க கோட்பாட்டையே முதன்மைப்படுத்தி வருகிறோம். ஆனால் நமது மரபு முற்றிலும் வேறானது என்று எனக்குத் தோன்றுகிறது. இலக்கியம் ஒரு கலாச்சார வெளிப்பாடா, aesthetic வெளிப்பாடா என்ற கேள்விக்கு நான் கலாச்சார வெளிப்பாடு என்ற பதிலைத்தான் தரமுடிகிறது. இங்கு ஒரிஜினாலிட்டி என்பதை மறுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன.தொல்காப்பியத்திலும் சரி,சமஸ்கிருதத்திலும் சரி ஒரிஜினாலிட்டி-சுயத்துவம் என்பதற்கெல்லாம் இடமில்லை.கண்டுபிடித்தல் என்ற வேலைக்கு இங்கு இடமில்லை.

நவீன இலக்கியம் ஐரோப்பாவில் உருவாகிறது.மூன்றாம் உலக நாடுகளில் இதற்கு எதிர்வினை உருவாகிறது.இது ஒன்று சுயம்,மற்றொன்று நகல் என்று கூறமுடியுமா என்பது தான் என் கேள்வி. இரண்டுமே இலக்கியம் தான்.//

மேலேயுள்ள வரிகள் பிரேம்ரமேஷின் 'பின்நவீனத்துவம் நோக்கி' நூலில் உள்ளவை.

சுந்தரவடிவேல் said...

பிரபு,
அது நானில்லை. சுந்தரமூர்த்தி!

மற்றபடி - மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு தன் மகனை வைத்துப் படமெடுக்கும் ராம்கோபால் வர்மாவைக் கூட்டிக் கொண்டு போனாரே மராட்டிய முதல்வர், அதைப்போல ஹாலிவுட்டில் ஏதேனும் நடந்ததா என்ன?

// இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.//

செருப்படி கொடுப்பது விழிப்புணர்வை ஏற்படுத்துமென்றால் கொடுக்கலாம். ஆனால் அமீர்கானே நேரில் வந்து கொடுக்கிறாரென்றால் செருப்படியையும் வாங்கிக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் :))

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//மற்றபடி நான் இரண்டு கஜினியும் பார்க்கவில்லை. அதற்காக எனது நேரத்தினை செலவிடவும் தயாராக் இல்லை. //

ஒன்றைப் பற்றி விமர்சிக்கும் முன் அதைப் பற்றி நேரடியாக முழுக்க அறிந்து கொண்டு விமர்சிப்பது தானே முறை?

இவ்வளவு கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் முன் இந்தப் படங்களைப் பார்த்திருக்கும் குறைந்தபட்ச நேர்மையாவது இருந்திருக்க வேண்டும்.

ஒரு வழக்குரைஞரான உங்களிடம் இதை முற்றிலும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை :( மன்னிக்கவும்.

//imbd தளத்தில் அதன் கதைச்சுருக்கம் இவ்வாறு தொடங்குகிறது
" man, suffering from short-term memory loss, uses notes and tattoos to hunt for the man he thinks killed his wife"

இதுதானே கஜினியின் கதைச்சுருக்கமாகவும் இருக்க முடியும்?//

இரண்டு பேர் காதலித்தார்கள். கடைசியில் திருமணம் செய்தார்கள் என்ற கதைச்சுருக்கத்தை வைத்து எத்தனையோ நூறு மாறுபட்ட படங்களைப் பார்த்திருக்கிறோமே? கதைச்சுருக்கம் என்னும் ஒரு வரியை வைத்து எந்தப் படமும் ஓடாது. ஒரே கதைக்கான மாறுபட்ட திரைக்கதைக்கான உழைப்பு, திறமை எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. கதை தான் எல்லாம் என்றால் நீங்களே குறிப்பிட்ட படி தில்லானா மோகனாம்பாளின் "தழுவலான" கரகாட்டக்காரன் ஓடியபோது ஏன் சங்கமம் திரைப்படம் ஓடவில்லை?

// காப்பியடிப்பவர்களும் இங்கு படைப்பாளிகளாக கொண்டாடப்படும் சூழ்நிலையில், எழுந்த அருவருப்பின் வெளிப்பாடு!//

புரிகிறது. முருகதாசு, ஆமிர்கானை விட இந்த அருவருப்புக்குப் பாத்திரமாகக் கூடிய எத்தனையோ பேர் உள்ளனர்.

vajra,

//கதையின் 90 சதவிகித விஷயங்களைக் காப்பியடித்துவிட்டு, கதையின் நாயகன் ஒரு இண்டஸ்டிரியலிஸ்டு, அவனுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் போட்டுவிட்டால் ஒரிஜினல் கைதயா ?//

ஒரு வரிக் கதை குறித்து மேலே சொன்னது தான் இதற்கும் பதில். கசினி படத்தின் திரைக்கதை 100% mementoவில் இருந்து மாறுபட்டது. நிச்சயம் அதற்கான மரியாதையை அக்கலைஞர்களுக்குத் தர வேண்டும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//மும்பை பயங்கரவாத தாக்குதலாலும் அதனைத் தொடர்ந்த தொலைக்காட்சி ஊடகத்தாக்குதல்களாலும் ஏற்ப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம். //

பட வெளியீட்டை ஏன் ஒத்திப் போட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதத் தாக்குதல் காரணமாக நாம் யாரும் வேலைக்குச் செல்வதையும், ஊதியம் வாங்குவதையும், தொழில் செய்வதையும் விட வில்லையே? பிறகு, திரைத்துறையினர் மட்டும் ஏன் நட்டமடைய வேண்டும்? அப்படியே அவர்கள் ஒத்திப்போட்டாலும் கூட்டம் குறைவாக இருக்குமோ என்ற கணக்கு தான் காரணமாக இருக்கும்.

//அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.//

அவர்கள் ஒத்திப் போட்டதற்கு வணிகக் காரணங்கள் இருக்கலாம். அவர்கள் ஒத்திப் போட்டால் ஏன் நாமும் ஒத்திப் போட வேண்டும் என்று புரியவில்லை :(

PRABHU RAJADURAI said...

"அப்படியே அவர்கள் ஒத்திப்போட்டாலும் கூட்டம் குறைவாக இருக்குமோ என்ற கணக்கு தான் காரணமாக இருக்கும்"


நான் கூற வந்ததும் அதுவே! கஜினியின் விளம்பர வலிமையை வலியுறுத்துவதற்காக கூறப்பட்டது...அவ்வளவே!

PRABHU RAJADURAI said...

இன்று 'ஹிந்து'வில் படித்த பேட்டியில் அமீர்கான் சொன்னது, தகவலுக்காக...

What according to you is the film’s strong point?

Ghajini’s USP is its story. It’s a very moving story.
http://www.hindu.com/mp/2008/12/31/stories/2008123150230100.htm

SurveySan said...

படம் பாக்காமல் இவ்ளோ நீங்க கடுப்பானது வருத்தம்.

எனக்கு இந்தி கஜினியில் ஒரு வருத்தம், வில்லனை இஸ்லாமியனாய் காட்டியது. ஊர் இருக்கர நெலமைல, இப்படி ஊத்தி ஊத்தி வளக்கரது கொறையணும்.

SPIDEY said...

French படமான AMELIE இல் ஒரு காட்சி வரும் அதில் வயதான கண் தெரியாத முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க திணறும் போது கதாநாயகியான amelie அவர் கைப்பற்றி சாலையை கடக்க உதவுவார். சாலையை கடக்கும் போது சாலையில் நடக்கும் விஷயங்கள் பற்றி முதியவரிடம் விவரிப்பார்.2001இல் வெளிவந்த இப்படக்காட்சியின் சாரம் 2005 மற்றும் 2008இல் வெளிவந்த கஜினி படத்தைப் பார்த்து காப்பி அடிக்கப் பட்டது :).
http://www.youtube.com/watch?v=3S0LNGA2hp8&feature=related

SPIDEY said...

அவர்கள் படத்தைக் காப்பி அடித்து அவர்களுக்கே போட்டுக் காட்டி கேட்டால் எப்படி award தருவார்கள் என்று சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் அமிர்கானே கூறினார். பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது

வஜ்ரா said...

//
ஒரு வரிக் கதை குறித்து மேலே சொன்னது தான் இதற்கும் பதில். கசினி படத்தின் திரைக்கதை 100% mementoவில் இருந்து மாறுபட்டது. நிச்சயம் அதற்கான மரியாதையை அக்கலைஞர்களுக்குத் தர வேண்டும்.
//

ஒரே ஒரு நாள், ஒரு பத்திரிக்கைக்காரன் முதல்வன் ஆனால் என்ன நடக்கும் ?

ஊழல் மிக்க அரசு எந்திரத்தை ஒரு எக்ஸ் INA எப்படி எதிர்கொள்கிறார் ?

தன் வாழ்நாளில் சந்தித்த அத்தனை நண்பர்களையும் தன் திருமணத்திற்காகத் தேடிப்பிடித்து அழைத்தால் அவன் எப்படியெல்லாம் Nostalgic ஆக உணருவான் ?

இன்தக் கேள்வியெல்லாம் கேட்டவுடனேயே உங்களுக்கு விடை தெரிந்துவிடும்.

அதுபோல், கஜினி என்ற விடைக்குக் கேட்கப்படும் கேள்வியும், மெமென்டோ என்ற விடைக்குக் கேட்கப்பட்ட கேள்வியும் ஒன்று தான்.

அது தான் என் பிரச்சனை.

Sundar Padmanaban said...

ரவிசங்கர்

எந்தப் படத்தின் மொத்த கதையையும் “man, suffering from short-term memory loss, uses notes and tattoos to hunt for the man he thinks killed his wife” மாதிரியான ஒருவரி Tag Line-இல் அடக்கித்தான் கதை விவாதத்தையே தொடங்குவார்கள். தயாரிப்பாளர்கள் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்வதும் இம்மாதிரி ஒற்றைவரிக் கதைகளில்தான். கதையின் ஆதார “கரு”வே அந்த ஒற்றை வரி. அதிலிருந்து கிளைகள் பிரிக்கப்பட்டுத் திரைக்கதை எழுதப்படும்போதுதான் இந்தியத் திரைக்கதையாளர்கள் பட்டை,சோம்பு எல்லாம் சேர்த்து இந்திய மசாலா ஆக்குகிறார்கள் - ஆகவே கஜினி (தமிழ், ஹிந்தி) இரண்டும் Momento-வின் தழுவல்தான்.

ஒற்றைவரியைக் கொண்டு சொல்லமுடியாது என்ற கோணத்தில் பார்த்தால் எந்தப் படங்களும் எதைப்பார்த்தும் தழுவப்படவில்லை என்றுதான் நிறுவப்படும் - அது சரியல்ல என்று நான் கருதுகிறேன்.

அதேவேளையில் நம் கலைஞர்களுக்கு நிறைய இடர்பாடுகள் இருக்கின்றன - முக்கியமானது மொழி, செலவு. ஆங்கிலப்படங்களுக்கு இருக்கும் சந்தை மற்ற மொழிப்படங்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இருக்கும் பொருளாதார, சந்தை வசதிகள் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை. ஆகவே “ஹாலிவுட் மாதிரி ஏன் மணிரத்னம் கமல் படம் எடுப்பதில்லை” என்று கேட்பதிலும் நியாயமில்லை. டைட்டானிக்கின் செலவு என்ன என்று பார்த்துக்கொள்ளுங்கள். “உலகத் தரத்திற்கு” அவர்கள் அவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

கமல் “கமல்” என்ற பிம்பத்திலிருந்து வெளிவந்தால்தான் நல்ல படங்கள் தரமுடியும். இல்லாவிட்டால் திரைமுழுதும் வியாபித்திருக்கும் “கமல்” படங்களைத்தான் ஒவ்வொரு முறையும் பார்க்கவேண்டியிருக்கும்.

ஈரானிய மொழியில் வரும் படங்கள் மாதிரி இந்திய மொழிகளிலும் படங்கள் எடுக்கமுடியும் - அப்படி எடுக்க ஆயிரம் கதைகள் உண்டு. ”வீடு” “தண்ணீர் தண்ணீர்” என்று முன்பு வரவில்லையா? ஆனால் அப்படி படமெடுக்கும் கலைஞர்களும், தாயாரிப்பாளர்களும் தொடர்ந்தி சினிமாவில் ஜீவிக்கமுடியாது என்பதுதான் சோகம். நம்முடைய சினிமா சந்தை வித்தியாசமானது. நமக்கு மசாலாவும் வேண்டும். பத்தியமும் வேண்டும். ஒன்றை மட்டும் தொடர்ந்து சாப்பிடமுடியாது என்ற நிலைதான்.

ரஹ்மான் கோல்டன் க்ளோப் விருது பெற்ற முதல் இந்தியர். இதை ஒரு வட இந்தியர் பெற்றிருந்தால் எந்த அளவிற்குத் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பார்கள்! இங்கு என்ன நடக்கிறது? தினத்தந்தியின் நாலாம்பக்கத்தில் காளிமார்க் சோடா விளம்பரத்தைவிடச் சின்னப்பெட்டியில் அச்செய்தி வரும் - அவ்வளவுதான். இணையப் பதிவுகளில் இரண்டே இரண்டு பின்னூட்டங்கள் வரும். ஒன்று வாழ்த்து கூறி. இன்னொன்று “இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது” என்று. விருது பெறாவிட்டால் “நம்மாட்களால் முடியாது - காப்பியடிக்கத்தான் லாயக்கு”. பெற்றால் “இதில் என்ன இருக்கிறது - பெருசா சொல்ல”!

நம் சினிமாவை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்வதற்கு கலைஞர்களுக்கும் தாயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் பொறுப்பை விட ரசிகப்பெருமக்களாகிய நமக்குத்தான் அதிகம் பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்!

அப்றம் பிரபுஜி - செருப்படின்லாம் ஆரம்பிச்சுட்டீங்க! திருமங்கலத் தேர்தல் முடிவின் எதிரொலியா? பெட்டு கிட்டு கட்டித் தோத்துட்டீங்களா? :-)))

Radha said...

I was a big fan of Jayashankar untill I started watching Client Eastwood movies. The good, the bad and the ugly, A Fistful of Dollars and For a Few Dollars More are the movies everyone would like to watch. What i want to say is the 90 % of the Tamil movie fans had no chance of watching English movies in sixties or seventies. So copying did not appear wrong though legally it is. Now it is IT ERA and people must not underestimate the fans and try to fool us. Gautam Menon the director of Vettaiyaadu Vilaiyaadu is nice copy cat who could not survive in Kerala. Uthiripookal like movies have become exticnt in Tamil movie industry.