28.4.08

பொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்!


உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைக் குறித்து, சட்ட நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பதிவு ஒன்றினைப் பற்றி எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டேன். சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் பொதுநல வழக்குகளைக் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குறித்து சில பதிவுகளை அங்கு கண்ணுற நேர்ந்தது.

ஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே வழக்கினை தாக்கல் செய்ய முடியும் என்பது பொது விதி.. பொதுநல வழக்கு என்பது, இந்த எல்லையினை உடைத்து வெளிக்கிளம்பியதாகும். அதாவது வழக்கில் நேரிடையாக சம்பந்தப்படாத ஒரு நபர் பொது நலனுக்குக்காக தொடரும் வழக்கே பொதுநல வழக்காகும் (Public Interest Litigation PIL).

பொதுநல வழக்குகளால் நீதிமன்றங்கள் மக்களிடையே அடைந்த புகழ் குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் அவ்வப்போது, இவற்றை Paisa Interested Litigation அல்லது Publicity Interested Litigation என்று நீதிமன்றங்கள் நிராகரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

முக்கியமாக, பல சமயங்களில் இவ்வகையான வழக்கினை நிராகரிக்கையில் பொதுநல வழக்கு என்றால் என்ன என்று நீதிபதிகள் இவற்றை எந்த எல்லையினை மீறி இவை தோன்றியதோ அதே போன்றதொரு எல்லைக்குள் இதனை அடைத்து வரைமுறைப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை!

பொதுநல வழக்கு என்பதற்கு வரைமுறையினை (definition) ஏற்ப்படுத்த முயலும் நீதிபதிகளைப் பார்த்தால் எனக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் ‘முடிவில்லாமல் இயங்கும் இயந்திரத்தை’ உருவாக்குகிறேன் என்று அலைந்த பெளதீகவியலாளர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

பொதுநல வழக்குகளை எந்த வரையறைக்குள்ளும் கொணராமல், அவற்றை அதன் போக்கில் நடை போட விடுவதுதான் சட்டத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யக்கூடியது.

-oOo-

மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கையிலும், அரசினை பல்வேறு பேராண்மை மனுக்களில் (writ petition) பாதுகாத்தார். ஆனால் அவரது உத்தரவுகள் செல்லாது என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.

‘அவருக்குதான் வயது பதினாறை தாண்டாதே...மைனர் தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்!

-oOo-

தீர்ப்பு என்றதுதான் நினைவுக்கு வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் மேல்முறையீட்டு மனு (Appeal) தயாரிப்பதற்காக சார்பு நீதிபதி (Sub Judge) ஒருவரின் தீர்ப்பினை படித்த எனக்கு தீர்ப்பில் ஒரு வரி பிடிபடவில்லை. ‘இறந்தவர் இரும்பு முதலிய உலோகத்தால் செய்யப்பட்ட சாமான்கள் சம்பந்தப்பட்ட கணணியில் பட்டயப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது’ என்ற வரிதான் அது.

Metallurgy ஆ? தென்காசியில் அதெல்லாம் படிக்கிறார்களா என்று குழம்பி பின்னர் வழக்கு கட்டினை முழுவதும் புரட்டிய பின்னர்தான் அது என்ன படிப்பு என்று புரிந்தது. Diplomo in Computer Hardware!

வாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட பல தீர்ப்புகளில் ‘இயற்பியல் சிகிச்சை’ என்ற வார்த்தை இடம் பெறும். எனக்கு தற்பொழுது பழக்கப்பட்ட அந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கம் ‘Physiotherapy’!

நீதிபதிகளுக்கான பயிற்ச்சிக் களத்தில் தமிழ் மொழியாக்கம் பற்றி, இராமகி ஐயாவை வகுப்பெடுக்க வேண்டுகோள் வைக்கலாம்.

-oOo-

‘என் வருகையை அறிவித்தவர் சுஜாதா’ என்று ஜெயமோகன் கூறியதை ‘இது போன்றவர்களின் வருகையை அறிவிக்கும் அபோஸ்தலராக எப்போது மாறினார் சுஜாதா?’ என்று சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் கிண்டலடித்திருக்கிறார்.

மற்றொருவரின் வருகையினை உலகுக்கு அறிவிக்கும் நபரைக் குறிக்க அப்போஸ்தலரை உதாரணப்படுத்துவது சரியாக வருமா? கிறிஸ்தவ விவிலியத்தை படித்தவர்கள்தான் கூற வேண்டும்.

பிரபு ராஜதுரை
28.04.08

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

தமிழாக்க கலாட்டாக்கள் சகிக்க முடியவில்லை.

PIL அதிகம் வந்தால் மற்ற முக்கிய வழக்குகளுக்கு நேரம் ஒதுக்க இயலாமல் போகாதா? ஒரு Balance தேவைப்படுதில்லையா?

அப்போஸ்தலர் - A person sent on a mission என அகராதி சொல்கிறது. வருகையை அறிவிப்பவர்களை அப்படிச் சொல்ல முடியாது என்றில்லை 100% பொருந்தும் வார்த்தையல்ல. Apostle எனும் வார்த்தை இயேசுவின் சீடர்களுக்கு மட்டுமின்றி பொதுவான வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Anonymous said...

Apostle is used in good sense,
an apostle of peace, an apostle
of mercy.does this apply to jayamohan :)

enRenRum-anbudan.BALA said...

பிரபு,
நான் PIL பற்றி சொல்ல நினைத்ததை சிறில் சொல்லி விட்டார். PIL is sometimes misused and the court's time gets wasted. "இந்துக் கடவுளர்களை இழிவுபடுத்தி விட்டார்" என்றும், "தமிழ் பண்பாட்டை கேவலப்படுத்தி விட்டார்" என்றும் குஷ்பு மேல் தொடுக்கப்பட்ட "பைசாவுக்குப் பெறாத" வழக்குகளை எடுத்துக் காட்டலாம்.

Apostle "One of the original 12 disciples chosen by Christ to preach his gospel" என்பதை சுட்டினாலும், அதற்கு "An ardent early supporter of a cause or reform" என்றும்(பொதுவாக) அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மகாத்மாவை Apostle of Non-violence என்று கூறுவதில்லையா? அனானி நண்பருக்கு ஜெயமோகன் மேல் என்ன கடுப்போ ? :)

எ.அ.பாலா