22.2.08

ஊழியரின் மரணத்திற்கு சோமி மிட்டல் பொறுப்பா?

“BPO பெண் மரணத்திற்கு நிறுவன நிர்வாகியே பொறுப்பு: உச்சநீதிமன்றம்” நேற்று இப்படி ஒரு தலைப்பு, அவசர உலகில், செய்திகளுக்கு நான் சார்ந்திருக்கும் ‘சற்றுமுன்’னில்!

சற்றுமுன் என்பது, தன்னார்வமிக்க இளைஞர்களின் முயற்சியில் விளைந்த இணைய செய்திச் சேவை. இணையத்தில் உலாவும் வழக்கமுடைய பல தமிழர்களுக்கு பல்வேறு செய்திகளை உடனடியாக சென்று சேர்க்கும் அதன் பணி பாராட்டுக்குறியது. அதன் வாசகன் என்ற உரிமையில், அவர்களது இந்த தலைப்பில் உள்ள தவறினை சுட்டிக்காட்டுவது எனது கடமையாகிறது!

நான் முன்பே கூறியபடி ‘கால் செண்டர்; உட்பட அனைத்து ஐடி நிறுவனங்களும் அந்தந்த மாநில ‘Shops and Establishment Act’ன் ஷரத்துகளுக்கு கட்டுப்பட்டவை. ஆனால், பல நிறுவனங்கள் இரவிலும் இயங்க வேண்டியிருப்பதால், அவைகளுக்கு பெண்களை இரவில் வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற ஷரத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அவ்வாறு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், ‘பணியாளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வர இலவசமாக வாகன உதவியும் பாதுகாப்பும் செய்து தரப்பட வேண்டும்’ என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சோமி மிட்டல் அவர்கள் நிர்வாக மேலாளராக பணிபுரியும் ஹெவ்லெட் பேக்கர்ட் குளோபல்ஸாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஒருவர், இரவு நேர பணிக்காக அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற கார் ஓட்டுநரால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

எனவே, ஹெவ்லெட் நிறுவனம் தனது ஊழியருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்காமல் ‘Karnataka Shops and Establishment Act’ன் பிரிவினை மீறியதாக அதன் நிர்வாக மேலாளரான சோமி மிட்டல் மீது ஒரு கிரிமினல் வழக்கு கர்நாடக காவலர்களால் தொடரப்பட்டுள்ளது.

இது ஒரு பெரிய குற்றமாகாது. என்ன அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படும் அவ்வளவுதான். தமிழக சட்டத்தில் 25 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரைதான் அபராதம்!

***

தற்பொழுது முதல் தகவல் அறிக்கைதான் (FIR) எழுதப்பட்டுள்ளது. இனிதான் விசாரனை (investigation), குற்றப்பத்திரிக்கை (charge sheet), நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு எல்லாம்.

அதற்குள், நடந்த தவறுக்கு நிர்வாக மேலாளர் பொறுப்பு ஏற்க முடியுமா? அவர் மீது கிரிமினல் குற்றம் சாட்ட முடியுமா? போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டதா? என்பதெல்லாம் காவலர்கள் விசாரித்து சோமி மிட்டல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதா அல்லது வழக்கினை திரும்ப பெற வேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள்.

***

ஆனால், அதற்கு சோமி மிட்டல் தன் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையினை தள்ளுபடி (quash - நசுக்குதல் என்று கூறுவார்கள்) செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பின்னர் உச்ச நீதிமன்றத்தினையும் அணுகினார்.

பொதுவாக, முதல் தகவல் அறிக்கையினை உயர், உச்ச நீதிமன்றங்களில் தள்ளூபடி செய்ய மாட்டார்கள் (only in rarest of rare cases என்று உச்ச நீதிமன்றம் சோமி மிட்டல் வழக்கில் கூறியுள்ளது). எனவே, உச்ச நீதிமன்றம் வழக்கின் தன்மை, மற்றும் சோமி மிட்டல் பொறுப்பா இல்லையா என்ற பிறழ்சினைகளுக்கு உள்ளே செல்லாமல், வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கில் சோமி மிட்டலுக்கு எதிராக எவ்வித கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தனியே தீர்ப்பு எழுதிய மார்கண்டேய கட்ஜு மிட்டலுக்கு சாதகமாகத்தான் இரு சட்டப் பிரிவுகளை எடுத்துக் காட்டியுள்ளார். இதனை வைத்தே, மிட்டல் பின்னர் தன் மீது குற்றப்பத்திரிக்கை தொடுக்கப்பட்டால் அதனை தள்ளுபடி (discharge) செய்ய கோரலாம்.


***


எனவே காவலர்கள் கையில்தான் எல்லாம் இருக்கிறது. காவலர்கள் குற்றம் சாட்டினாலும், நீதிமன்றம் அதனை ஒத்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் வழக்கில் எந்தக் கருத்தும் கூறவில்லை. மிட்டல் பொறுப்பு என்றோ அல்லது அவர் மீது குற்றப்பத்திரிக்கை தொடுக்கப்பட வேண்டும் என்றோ கூறவில்லை!

ஆனால், இணைய செய்தி நிறுவனங்கள், ஏதோ உச்ச நீதிமன்றம் மிட்டலை பிடி, விடாதே என்ற அளவில் கூறியதைப் போல ஒரு தோற்றத்தினை ஏற்ப்படுத்தியுள்ளனர்.

பாவம், ‘சற்றுமுன்’ தனது வழக்கமான உற்சாகத்துடன் “BPO பெண் மரணத்திற்கு நிறுவன நிர்வாகியே பொறுப்பு: உச்சநீதிமன்றம்” என்ற தலைப்பு வைத்து விட்டது!

மதுரை
22.02.08

3 comments:

பிரேம்ஜி said...

உங்கள் கருத்து சரியாகத்தான் உள்ளது

சிறில் அலெக்ஸ் said...

சற்றுமுன் மீதான அபிமானத்துக்கும், திருத்தத்திற்கும் நன்றி. மணியன் சற்றுமுன் பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதைப் போல வேறு ஊடகங்களின் செய்திகளைப் படித்து பகிர்கையில் இவை நடக்கின்றன.

உங்கள் பதிவு தெளிவாக விளக்கிவிட்டது .. ஆனா அபராதம் ரூ25 முதல் 250 தானா?

பொட்டிக்கடைக்கும் மென்பொருள்கடைக்கும் ஒரே லெவெலா?

மணியன் said...

அந்தச் செய்தியை 'சற்றுமுன்'னில் தொகுத்தவன் என்ற முறையில் எனது கவனக் குறைவிற்கு வருந்துகிறேன். நல்ல விளக்கம்.

செய்தியை உடனடியாக சேர்க்கவேண்டிய ஆர்வத்தினாலும் குறிப்பிட்ட செய்திமூலங்களின் தவறான வாசகங்களினாலும் இத்தவறு ஏற்பட்டது என்ற புரிதலுக்கு நன்றி.